பொன்மகள் வந்தாள்.11🌹

பொன்மகள் வந்தாள்.11🌹

PMV.11.

“பண்டு… சக்தி தம்பியப் பத்தி என்ன நினைக்கிற?” அத்தையின் கேள்வியில், இதோ அதோ என அவள் எதிர்பார்த்த பூதம் மெதுவாகத் தலை நீட்டி எட்டிப் பார்த்தது.

“ஆசப்படுறதுக்கும் அருகதை வேணும்னு நினைக்கிறேத்தை… முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படக் கூடாது.” பதில் ஒளிவு மறைவில்லாமல் நேரடியாகவே வந்தது அவளிடமிருந்து.

“உனக்கென்ன டி பத்தரைமாத்துத் தங்கம்.” மெச்சினார் மருமகளை. கை மடியில் படுத்திருந்தவளது தலையை வாஞ்சையாய் வருடிக் கொடுத்தது.

“அதைத்தான் ஏற்கனவே உரசிப்பாத்தாச்சே. தங்கம் இல்ல தகரம்னு சொல்லியாச்சே?” நீதான் என்னை மெச்சிக்கணும் என்பது போல் சொல்லி வைக்க,

“தங்கத்தை வைரத்தோட சேக்காம, தகரத்தோட சேர்த்தது எங்க தப்பு பண்டு. பச்சைத் தங்கத்தை பக்குவமா உருக்கி அவனுக்கு அழகுபாக்கத் தெரியல.”

“காக்கைக்கும் தன்குஞ்சு பொன் குஞ்சுங்கற மாதிரி இருக்கு நீ பேசுறது.” 

“தங்கத்துல குறை இருந்தாலும், தரம் கொறஞ்சுறாதுடி.” 

“இப்ப இங்க என்ன தங்கத்துக்கு மார்க்கெட்டிங்கா பண்றோம்? ஏற்கனவே அது உச்சாணிக் கொம்புல ஏறித்தான் நிக்குது.”

அத்தையின் மடியில் தலை வைத்து கால்கள் இரண்டையும் அன்னையின் மடியில் வைத்து இருந்தவள் முகம் நிமிர்த்தி அத்தையிடம் கேட்டாள். வெகு நாட்கள் கழித்து இவ்வாறு நால்வரும் மொட்டை மாடியில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அதுவும் பவர்கட் ஆன புண்ணியத்தில்.

கோவிலுக்கு சென்றுவிட்டு வர, அத்தையும் மருமகளும் சேர்ந்து இரவு சமையலை வாயாடிக் கொண்டே  கவனித்தனர். பொம்மியும் கோவிலில் நடந்ததை வைத்து அத்தை எப்பொழுது பேச்சை ஆரம்பிப்பார் என எதிர்பார்த்தாள். இன்று  எப்படியும் மூவர் கூட்டணி அமைவது நிச்சயம் என்றது உள்மனது.

“பண்டு… இன்னைக்கு எல்லாமே உனக்குப் புடிச்ச ஐட்டம் தான்டி சமைச்சிருக்கு.”

“எதே… இந்த வெங்காய சாம்பாரும், சேனைக்கிழங்கு கறி, பருப்பு ரசமுமா? எல்லாமே உங்களுக்குப் புடிச்சதுன்னு சொல்லு. இன்னைக்கு வெள்ளிக் கிழமைனுட்டு என் நாக்க ரொம்ப சோதிக்கறீங்க… நல்லதுக்கில்ல… சொல்லிட்டேன்.”

“இவளுக்கு வெள்ளி, செவ்வாய்னா போதும் அண்ணி. அன்னைக்கு தான் உடம்பு வெயிட் போடுதும்பா… சாப்பாட்டை அளந்து சாப்பிடுவா… ட்ரெஸ்ஸெல்லாம் டைட் ஆகுதும்பா… டயட்டும்பா… ஏன் அதையே மத்த நாள்ல பண்ணச் சொல்லுங்க அண்ணி பாக்கலாம்.” என கௌரியும் நாத்தனாருடன் சேர்ந்து கொள்ள,

“என்னமோ வெள்ளி செவ்வாய் மட்டும் கணக்குல சேக்குறம்மா… வாரத்துல இருக்கறதே ஏழு நாள் தான். ஆனா நீ ஏழாயிரம் விரதம் இருக்க…‌ ஒரு நாளையாவது விட்டு வைக்கிறியா… இல்ல ஒரு சாமியயாவது நிம்மதியா இருக்க விடுறியா?”

“எல்லாம் உனக்காகத் தான்டி.”

“புள்ள வரம் கேட்டு வச்ச நேத்திக் கடன்களே இன்னும் தீரல…‌ இதுல மேலமேல சாமிய டார்ச்சர் பண்றம்மா நீ. உன் டார்ச்சர் தாங்காம சாமிக எல்லாம் வான்ட்டடா வி.ஆர்.எஸ். வாங்கிட்டு வேற கிரகத்துக்குப் போகப்போறாங்க பாரு.” தாயின் வேண்டுதல்களை, மகள் கேலி செய்ய,

“அப்ப என் பொண்ணு எப்ப… எப்ப… எவ்வளளவு சாப்பிடுதுன்னு பாத்து கண்ணு வக்கிறீயா நீ?” என தந்தை மகளுக்கு சப்போர்ட்டுக்கு வர,

“பாருங்கப்பா… நாத்தியும் நாத்தியும் சேந்துக்கிட்டாங்க. என்னமோ இவங்க அப்பா வீட்டு சொத்தே நான் சாப்பிட்டுத்தான் அழியுதுங்கற மாதிரி பேசுறத…” தந்தையிடம் புகார் வாசித்தாள்.

“அவங்க ரெண்டு பேரும் சேந்தா என்னம்மா… அப்பா எப்பவும் உன் பக்கம்தான்.” 

பேசிக்கொண்டே சமையல் வேலையை முடிக்க… மின்சாரவாரியம் தனது சேவையைத் தற்காலிகமாகத் தடை செய்ய…

இன்னைக்கு நிலாச்சோறு சாப்பிடலாம் என… அனைத்தையும் எடுத்துக் கொண்டு மொட்டை மாடிக்கு ஏறி வந்தனர். 

“உங்கம்மாவால முடியாது பண்டு.” என சிதம்பரம் கவலையாய் மறுக்க, 

“இன்னைக்கு ஒரு நாள் தானே… நான் ஏறி வர்றே… அவ ஆசப்படுறாள்ல.” தனது முழங்கால் வலியைப் பொறுத்துக் கொண்டு கௌரியும் மெதுவாக கைப்பிடிச்சுவற்றைப் பிடித்துக் கொண்டே மாடி ஏறினார் மகளின் ஆசைக்காக. மேலே ஏறி வந்தவுடன், “யாரோ எப்பவும் நான் உன் பக்கம் தான்னு சொன்னாங்க… பொண்டாட்டிக்குக் கால்வலின்னதும், மகளுக்கு சொன்னத மறந்தாச்சு.” எனத் தந்தையையும் விட்டு வைக்கவில்லை.

“என்னம்மா பண்றது வயசான காலத்துல அவ உடம்பையும் பாக்கணும்ல.” என்றவாறு அருகில் இருந்த பில்லரில் சாய்ந்து அமர்ந்து கொண்டார்.

 பாய் ஒன்றையும் சேர்த்து எடுத்துக் கொண்டு வர… பாய்விரித்து அதில் கௌரியும், சொர்ணமும் சுவற்றில் சாய்ந்து அமர… மூவருக்கும் தட்டை வைத்து உணவைப் பரிமாறினாள். 

“உனக்குத் தட்டு எடுத்துட்டு வரலியா பொம்மு.” என கௌரி கேட்க,

“நீங்க மூனு பேரும் ஆளுக்கொரு வாயா ஊட்டி விட்டுருங்க. இந்த சாம்பார் சோத்துக்கு நான் தர்ற மரியாதை இம்புட்டுதான்.” எனக்கூற…

“நான் சொல்லல அண்ணி…” என நாத்தானாரைப் பார்க்க மூவரும் சிரித்து விட்டனர். இருந்தும் மூவரும்‌ மாற்றி மாற்றி ஊட்டியதில் வழக்கத்துக்கு மாறாக அதிகமாகவே சாப்பிட்டு முடித்தாள்.

“இது போதும். வாயத்தொறந்தா காக்கா வந்து கொத்தும் போல. என்னால அசையக்கூட முடியாது.” எனப் பாத்திரங்களை ஒதுக்கி வைத்துவிட்டு அப்படியே அத்தை மடியில் தலை வைத்துப் படுத்துவிட, கௌரி மகளின் கால்களை எடுத்து தன்‌மடியில் வைத்துக் கொண்டார்.

“வேண்டா ம்மா.” எனக் கால்களை இழுக்கப்பார்க்க, “இருக்கட்டும் பொம்மு. எம்புள்ள காலு தானே… பகலெல்லாம் நின்னுக்கிட்டே இருக்க.” என்றார் வாஞ்சையுடன்.

“இப்ப எல்லாம் உக்காந்து பாக்குற வேலை தாம்மா… பில் போடுறது மட்டும் தான்.” எனக்கூறினாள் தாயின் வருத்தம் அறிந்தவளாக. மகாராணியாட்டம் வலம் வரவேண்டியவள்… இவ வேலைக்குப் போய்த்தான் ஆக வேண்டியது என்ன என்ற ஆதங்கம் அந்தத் தாய்க்கு. நாலு பேத்துக்கு சம்பளம் கொடுத்து நாட்டாமை பண்ண வேண்டியவள் வேலைக்குச் செல்வது கௌரிக்குப் பிடிக்கவில்லை. அத்தை மற்றும் தந்தையின் ஆதரவில் தான் வேலைக்குச் சென்று வருகிறாள். வளர்பிறையாதலால் நிலா தன் சேவையைத் தடை செய்யாமல் தாராளமாக வழங்க, வாயு பகவானும் இதமாகக் கைகோர்த்துக் கொள்ள… இரவு நேரம் இனிமையாக இருந்தது. வானத்து நட்சத்திரங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டே ஆங்காங்கே தெரிந்த வெண்மேகக் கூட்டங்களில் உருவங்களைக் கற்பனை செய்து பார்த்தவாறு தனது மடியில் படுத்திருந்தவளிடம் தான் அத்தை மெதுவாக பேச்சை ஆரம்பித்தார். 

“என்ன அண்ணி ரெண்டு பேரும் பேசிக்கறது எனக்கு ஒன்னும் புரியல…” என்றார் இவர்களது வார்த்தை விளையாட்டுப் புரியாதவராக.

“இன்னைக்கி கோயிலுக்குப் போனோம்ல… அங்க இவ வேலபாக்குற கடை ஓனரோட அக்கா வந்திருந்தா அண்ணி.” என்க,

“அதுக்கு…” எனக் கேட்ட நாத்தனாரிடம், “அந்தப் பிள்ள பேசினதை வச்சுப் பாத்தா… பொம்மிய அவுங்க தம்பிக்கு கேக்க அபிப்ராயப்படுற மாதிரி இருக்கு அண்ணி.”

நாத்தனார் கூறியதைக் கேட்டு கௌரி அமைதியாகி விட, “என்ன அண்ணி… ஒன்னும் பேசமாட்டேங்குற.” என்க,

“காலையில நகை எடுக்கணும்னு சொன்னதுக்கே எவ்ளோ பெரிய வார்த்தையைக் கேட்டா. அதிக விலை கொடுத்துத் தள்ளப் பாக்குறீங்களான்னு கேட்டா. இதுக்கு நான் என்ன பதில் சொல்றது. எல்லாம் என் வயித்துல அவ பொறந்த நேரம். எந்த சந்தோஷமும் அவளுக்குக் கிடைக்கக் கூடாதுன்னு இருக்கு.” வறண்ட குரலில் கூற,

“இந்தா… தாய்க்கெழவி புலம்ப ஆரம்பிச்சுருச்சுல்ல? இதுக்கு தான் இதைப்பத்தியே பேசக்கூடாதுன்னு சொல்றது.”

“எங்க பேச்செல்லாம் உனக்கு புலம்பலாத்தான் இருக்கும். அதுக்காக இப்படியே எத்தனை நாளைக்கி பொம்மு. இன்னைக்கி இதுக்கு ஒரு முடிவு தெரிஞ்சாகணும். உன் இஷ்டத்துக்கெல்லாம் விடமுடியாது.”

தாய்க்கெழவி என அழைத்ததிலிருந்தே மகள் மனம் இலகுவாக இருக்கிறாள். இதை விட்டால் வேறு சந்தர்ப்பம் அமையாது என விடாப்பிடியாகக் கேட்க,

“என்னமோ நான்‌ என் இஷ்டத்துக்கு நடந்துகிட்ட மாதிரி பேசறீங்க. நீங்க என்ன சொன்னீங்களோ அதுக்கு தானே தலை ஆட்டினேன். முடிவுரை எழுதினதுக்கு மறுபடியும் முன்னுரை எழுதப்போறீங்களா?” மகளும் கொஞ்சம் குரல் உயர்த்தினாள். ‘நான் செய்த தவறு என்ன? ஆரம்பத்துல இவர்களா எல்லா முடிவையும் எடுத்திட்டு இப்ப என்னைய குறை சொன்னா என்ன அர்த்தம்… ஏற்கனவே தாங்கள் எடுத்த முடிவால் தான் மகள் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது என்ற குற்றவுணர்வில் நாளும் தவிப்பவர்களிடம், எதுவும் பேசி மேலும் மேலும் அவர்கள் மனதை புண்படுத்த வேண்டாம் என எண்ணினால் இவர்கள் என்னையே குற்றம் கூறினால் எப்படி?’ என உள்ளுக்குள் குமைந்தாள்.

“ஏன் மறுபடியும் எழுதினா என்ன தப்பு. நீ ஒன்னும் அலுத்த கெழவியும் இல்ல. வாழ்ந்து சலிச்சவளும் இல்ல. இப்படியே இருந்திறலாம்னு முடிவு பண்றதுக்கு. இப்ப தான்டி வாழ வேண்டிய வயசு.” கௌரி ஆற்றாமையில் பொங்க,

“எனக்கு வாழத்தெரியாதுன்னு ஏற்கனவே முடிவாகிருச்சு ம்மா.”

“யாரோ ஏதோ சொன்னாங்கனு அதையே புடிச்சுத் தொங்காத பொம்மு.”

“யாரோ சொன்னது இல்லம்மா அது. கட்டினவன் சொன்னது. இவ குடும்பம் நடத்த லாயக்கில்லாதவன்னும், ராசி கெட்டவன்னும் அந்த குடும்பமே சொல்லுச்சு ம்மா.”

“ஆயிரம் பேரு ஆயிரம் சொல்லுவாங்க… அதுக்காக உன் வாழ்க்கைய இப்படியே வாழ முடியாதுடி. இதோ இப்ப உங்கப்பா என்மேல காட்டுன அக்கறையப் பாத்தேல்ல. அந்த மாதிரி வயசான காலத்துல நமக்குன்னு ஒருத்தர் வேணும்… இப்ப எதுவும் எனக்கு வேண்டாம்னு வீம்பு பேசலாம். இளரத்தம்… சூடாத்தான் இருக்கும். தனியா இருந்திறலாம்… எனக்கு யாரும் தேவையில்லைனு வீராப்பு காட்டலாம். ஆனா மனசு வெறுமையாகும் போது தான் பொம்மு தெரியும், நமக்குன்னு ஒருத்தரும் இல்லையேன்னு…” என கௌரி மகளிடம்‌ கடுமை காட்டினாலும், தொண்டைகமரக் கூற…

“இப்படியே வேதாந்தம் பேசாதே பண்டு. முன்னுரை முடிவுரைனுட்டு…” அத்தையும் நாத்தியுடன் சேர்ந்து கொண்டார். 

அவரும் கவனித்து கொண்டு தானே இருக்கிறார். காலையில் நகைக்கடைக்கு அழைத்ததற்கே, அவ்வளவு கோபம் காட்டியவள் இப்பொழுது சக்தியின் பேரைச் சொல்லி, நேரடியாகக் கல்யாணப்‌பேச்சை ஆரம்பித்தும் அமைதியாக இருக்கிறாள். கோபம் காட்டவில்லை. எரிந்து விழுந்து பேச்சைத் துண்டிக்கவில்லை. பேச்சு பிடிக்கவில்லை எனினும் வெறுப்பைக் காட்டவில்லை.

அவளது மனம் சிட்டுக்குருவியாய் சிறகடிக்க ஆசைப்பட்டாலும், சட்டென‌த் தொட்டாச்சிணுங்கியாய் சுருங்கியது. ஆசைக்கு கடிவாளம் போட்டது கடந்த காலம். கானல் நீரெனத் தெரிந்தும் தாகம் கொள்வானேன். இடித்துரைத்தது மனசாட்சி. 

இருட்டில் அவர்களது கண்களுக்கு முகமாற்றம் தெரியவில்லை எனினும், பேச்சில் இருந்த மாற்றம் நன்கு தெரிந்தது அத்தைக்கு. 

மதியம் கடையிலிருந்தே கவனிக்கிறார். 

 கடையில் சாப்பிட எழுந்தவள், அத்தையை அழைத்துக் கொண்டு சாப்பிடும் இடத்திற்கு செல்ல, அவளை அழைத்து சக்தி ரூம் சாவியைக் கொடுத்து அங்கே அத்தையைத் தங்க வைக்குமாறு கூறினான். அவளும் மறுக்காமல் வாங்கிக் கொண்டாள். 

அறைக்கு அழைத்து வந்தவள், அத்தையை சேரில் அமரச் சொல்லி விட்டு அத்தையிடம் பேசிக் கொண்டே சாப்பிட்டு முடித்து இருவரும் வெளி வந்தனர்.

“சார் அரை நாள் லீவு கொடுத்துருங்க. கடைக்கும் கோயிலுக்கும்  போய்ட்டு, திரும்ப வரமுடியாது.”

“கருப்பட்டி… இங்க வா!” என சக்தி அழைக்க, 

“என்னங்கண்ணா?” என வந்தான்.

“இவங்க கூடப் போய்ட்டு வா.” என்க.

“அதெல்லாம் வேண்டாம். இன்னும் கொஞ்ச நேரத்துல பீக்அவர் ஆரம்பிச்சுரும். வேல நேரத்துல எதுக்கு தேவையில்லாம கருப்பட்டிய அனுப்பறீங்க?”

“அது எங்களுக்குத் தெரியாதா? ரெண்டு பொம்பளைங்க மட்டும் நகைய கையில வச்சுக்கிட்டு கோயில்ல சுத்துவீங்களா? கூட்டத்துக்குள்ள நீங்களும் நிம்மதியா சாமி கும்பிட முடியாது. நகை எடுத்து இவன்கிட்டக் கொடுத்து விட்டுட்டு, நீங்க கோயிலுக்குப் போய்ட்டு வாங்க. போகும்போது எடுத்துட்டுப் போவீங்களாம்.”

“அதெல்லாம் பத்திரமாப் பாத்துப்போம்.” என மறுத்துப் பேச,

“எதொன்னுக்கும் சரின்னு சொல்ற பழக்கமில்லையா? வெள்ளிக்கிழமை, கோயில்ல கூட்டமா இருக்கும். இல்லைனா கருப்பட்டியையும் கூடக் கூப்புட்டுப் போங்க…” எனக்கூற,

“இல்ல… அதெல்லாம் வேண்டாம்… இங்க வேல இருக்கும்.”

“தம்பி தான் இவ்ளோ தூரம் சொல்றாப்ல இல்ல. தம்பி சொல்ற மாதிரியே செய்யலாம்.” என்றவர்,

“நகைய கொடுத்து விட்டுர்றோம் ப்பா.” என்‌றார் அவனிடம்.

அவளுக்கு அத்தை முன்‌ அவன் அக்கறை காட்டுவது பிடிக்கவில்லை. அதுவும் அவன் உரிமையாக அவர்முன் ஒருமையில் அழைத்தது வேறு, அத்தை ஏதாவது எண்ணிக் கொள்வாரோ என பதறச் செய்தது. 

“சரிங்க ம்மா…” என்றவன் கருப்பட்டி யை அழைத்து, பத்திரமாக வாங்கி வரச் சொன்னான். 

எதிர்ப்புறம் தான் நகைக்கடை. எனவே கருப்பட்டி உடன் சென்று, நகையை எடுத்துக் கொடுத்துவிட, வாங்கி வந்தான். 

நடை தூரம்தான் என்பதால், தாயுமானவர் சன்னதிக்கு நடந்தே இருவரும் வந்தனர். சற்று கூட்டமாகக் தான் இருந்தது. அதென்னமோ இப்பொழுதெல்லாம் மக்களுக்கு பக்தி அதிகமாகி விட்டதா, அல்லது கஷ்டம் அதிகமாகி விட்டதா எனத் தோன்றாமல் இல்லை. ஏனெனில் கஷ்டம் வரும்பொழுது தானே கடவுள் கண்ணுக்குத் தெரிகிறார்… என எண்ணிக் கொண்டாள். அவள் அதிகமாகக் கோவிலுக்கு சென்றதில்லை. பிறந்த நாள் என்றால் தாயின் கட்டாயத்திற்காக சென்றால் தான் உண்டு. அன்று அப்படி வந்தவள் தான் இரண்டாம் முறையாக சக்தியும், அவளும் சந்தித்துக் கொண்டனர். 

இன்று அத்தைக்காக வந்திருக்கிறாள். தாயுமானவரிடம் வேண்டுதல் இல்லாமல் நின்று கொண்டிருக்க, அத்தை மருமகளுக்காக மனம் உருக வேண்டிக் கொண்டிருந்தார். 

ஆரத்திவர, கண்களில் ஒற்றிக் கொண்டு, தட்சணை‌ போட்டுவிட்டு திருநீரு வாங்கியவர், மருமகளுக்குப் பூசிவிட்டு, கண்களின் மேல் கைகுவித்து ஊதிவிட்டார். 

கோவிலுக்கே உரிய சந்தனம் ஊதுபத்தி, திருநீற்று வாசனை எங்கும் வியாபித்திருந்தது.

பிரகாரம் சுற்றிவிட்டு வந்தவர்கள், சிறிது நேரம் அமர்ந்துவிட்டுச் செல்ல வேண்டும் என்ற சம்பிரதாயப் பிரகாரம் அமர்ந்தனர். அவர்கள் அருகில் நிழலாட  தலையை உயர்த்தினர். நிமிர்ந்து பார்த்தவள்,

“வாங்கக்கா..” என்றாள் புன்னகையுடன். 

“என்ன பொம்மி கோயிலுக்கு வந்தீங்களா?” வழக்கமாகக் கேட்கப்படும்  கேள்வி தான்… பவானியும் கேட்டாள். கோவிலுக்கு வந்தவர்களைப் பார்த்து வேறு என்ன கேட்க முடியும்?

“ஆமாக்கா… அம்மா நல்லா இருக்காங்களா?” வழக்கமான விசாரிப்பு இவளிடமிருந்தும்.

“சௌக்கியமா இருக்காங்க… இவங்க…” என இழுக்க,

“என்னோட அத்தை.” என்று பவானிக்கு அறிமுகப் படுத்தியவள்,

“அத்தை… இன்னைக்குப் பாத்தேயில்ல… எங்க கடை ஓனரோட அக்கா இவங்க.” என அத்தைக்கும் அறிமுகம் செய்து வைக்க,

“உக்காரும்மா…” என அத்தை கூறினார். அவர்கள் அருகில் அமர்ந்து கொள்ள, 

ப்ரித்வியும் தூரத்திலிருந்து ஓடிவந்து அமர்ந்து கொண்டான். 

“டேய்… சாக்லேட் பாய்… இவ்ளோ நேரம் எங்கே இருந்த…” 

“இங்க தான் ஆன்ட்டி இருந்தேன்.” என்றான் பொம்மியிடம்.

“எத்தனை புள்ளைக ம்மா.?” என அத்தை விசாரிக்க,

“இவன் ஒருத்தன் தான் ம்மா. நாலாவது படிக்கிறான்.”

சின்ன சின்ன குடும்ப விஷயங்களைப் பேசிக் கொண்டு இருந்தனர். நேரம் ஆக…

“பொம்மி கிளம்பலாமா? கடைக்கு வேற மறுபடியும் போய்ட்டுப் போகணும்ல?”

“ம்ம்ம்..” என்றவள், 

“நீங்க எப்படிக்கா போவீங்க… வண்டில வந்தீங்களா?” என்க,

“இல்ல பொம்மி… ஆட்டோல வந்தேன். நம்ம கடைக்கு தான் போகணும். ப்ரித்வி அப்பா கடைக்கு வந்து கூப்புட்டுப்பாரு.” 

“அப்படினா வாங்க… எல்லாரும் ஆட்டோலயே போயிறலாம்.”

“மறுபடியும் கடைக்கா?” எனக் கேட்டவளிடம், பொம்மி நகை விபரம் சொல்ல,

“தம்பி சரியாத்தான் செஞ்சுருக்கான்.” என்றவள், கேட்டு விடலாமா என சற்று யோசித்தவள்,

“நகை எல்லாம் எடுத்து வைக்கறீங்க… பொம்மிக்கு கல்யாணம் ஏதும் பாக்கறீங்களா?” எனத் தனக்குத் தோன்றியதைக் கேட்க, அத்தைக்கு தான் இவள் முன்னாடி கேட்டு விட்டாளே என இருந்தது. ஏதாவது சொல்லப்போக இவ பாட்டுக்கு கத்த ஆரம்பிச்சுருவாளே. 

“பாக்கணும் தாம்மா… ஆனா இப்போதைக்கு இல்ல… இன்னும் என்னமோ படிக்கணும்ங்கறா… சாதகத்துலயும் கொஞ்ச நாள் போகட்டும்னு இருக்கு.” என சாதகத்தின் மீது பழியைப் போட,

“இப்ப இருந்தே பாத்தா தானம்மா நம்ம நினச்ச மாதிரி தேடிப் பார்க்க முடியும். இப்ப எது ஒன்னும் எங்க சட்டுனு அமையுது சொல்லுங்க…”

“நீ சொல்றதும் சரித்தாம்மா. இந்தக் காலத்துப் பிள்ளைங்க நம்ம சொல்றத எங்க கேக்குதுங்க? எல்லாம் அதுக இஷ்டமாப் போச்சு.” என்ற அத்தையை முறைத்துப் பார்த்தாள். கோவிலாக இல்லாமல் இருந்திருந்தால் அத்தை இன்று அதோ கதிதான். எதைச் சொல்லி நான் கேட்கவில்லை என தாண்டவம் ஆடியிருப்பாள். எல்லாம் உங்க இஷ்டத்துக்கு தானே நடந்தது என்றிருப்பாள்.

“ஏம்மா வயசாகுதுல்ல.” என்றாள் பவானியும். என்னவோ திருமணம் முடித்துக் குழந்தை பிறந்துவிட்டாலே நானும் பெரிய‌மனுஷிதான் என்ற லெவலுக்குப் பேச ஆரம்பித்து விடுகிறார்கள் இந்தப் பெண்கள்.

“ஆமாம்மா… இருபத்தி ரெண்டு ஆகுது… பாக்கலாம்.” பட்டும் படாமல் வந்தது பதில் அத்தையிடமிருந்து.

“தம்பிக்கும் பாக்குறோம்… அவனும் இன்னும் சரிக்கொடுக்க மாட்டேங்கிறான்.” 

“ஏம்மா இன்னும் நேரங்காலம் கூடி வரலியோ என்னவோ… நல்லா சாதகத்தைப் பாக்க வேண்டியது தானே?” வந்த இடம் மறந்து இருவரும் பேச்சில் ஆழ்ந்து விட்டனர். சொர்ணத்துக்கு சொல்லவே வேண்டாம்… பேச ஆள் கிடைத்தால் போதும்… என்ன ஏது எனப் பார்க்காமல் பழமையடிக்க ஆரம்பித்து விடுவார். பவானிக்கு எப்படியாவது பேசி தம்பிக்கு சாதகம் கேட்கலாமா என்ற உந்துதுல்.

“வேணும்னா பொம்மி சாதகமும் கொடுங்க… எனக்குத் தெரிஞ்சவங்க கிட்ட சொல்லி வைக்கிறேன்.” எனக் கேட்க,

“கோயில்ல வச்சு கேக்குற… எங்க அண்ண அண்ணிகிட்டக் கேக்கணுமே. அவங்க என்ன சொல்றாங்களோ?” என பொம்மியை ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டே கூற, அவளோ எனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என ப்ரித்வியுடன் பேசிக்கொண்டே… அவன் கைபிடித்து நகர்ந்து விட்டாள்.

“உங்களுக்குத் தெரிஞ்ச பொண்ணு இருந்தா சொல்லுங்க… நம்ம குடும்பம் மாதிரி நல்ல குடும்பமா இருந்தா போதும். ஏற்கனவே ப்ரித்வி அப்பாவும், தம்பியும் உங்க ஊருக்கு வந்திருக்காங்க.”

அவள் சுற்றி வளைத்து எங்கு வருகிறாள் என்பது புரியாதவரா என்ன? ஆனால் அவருக்குத்தான் ஆற்றாமையாய் இருந்தது. எப்படியாப்பட்ட சம்பந்தமெல்லாம் வருகிறது. ஆனால் இவளுக்குத்தான் கொடுத்து வைக்கவில்லையே எனத் தோன்றியது. ஏன் கொடுப்பினை இல்லை என‌ நினைக்க வேண்டும். அவளுக்கு நல்ல நேரம் அமைந்தால் இப்படி ஒரு மாப்பிள்ளை அவளுக்கு அமையாதா எனவும் மனம் ஆசைப்பட்டது. மருமகளின் வாழ்க்கையை நினைத்து மருகியவர், பவானியின் பேச்சைக் கவனத்தில் கொள்ளவில்லை. கோவிலில் அமர்ந்திருந்தவர் மீண்டும் ஒருமுறை தன் அண்ணன் மகளின் வாழ்க்கைக்காக தெய்வத்திடம் தனது கோரிக்கையை வைத்தார்.

நேரம் செல்ல, கிளம்பலாம் என எழுந்து கொண்டார். மருமகளின் யோசனையாக இருந்தவர், பவானியின் கேள்விக்குப் பதில் சொல்லாமலே எழுந்து கொள்ள… அது பவானிக்கு சற்று சங்கடத்தை ஏற்படுத்தியது. தான் ஏதோ தேவையில்லாமல் இவர்களிடம் வலியவந்து வாய்‌விட்டோமோ என்றிருந்தது. அவர்களும் கிளம்ப… பவானியும் எழுந்து கொண்டாள்.

கடைக்கு வந்தவர்களை தனக்குத் தெரிந்தவர்கள் ஆட்டோவில் அனுப்பி வைத்தான் சக்தி.

 அவள், “வேண்டாம் வண்டி இருக்குல்ல…” எனக்கூற வர… அவன் பார்த்த பார்வையில் கப்பென வாய் மூடிக் கொண்டாள்.

“நாளைக்கு பஸ்ல வந்துட்டு, வண்டிய எடுத்துட்டுப் போ.” எனக்கூற… வீட்டுக்குத் தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டிருந்த பவானியின் கண்களிலும் தவறாமல் விழுந்தது இக்காட்சி.

அவனது அக்கறையைப் பார்த்து விட்டுத்தான், மாடிக்கு வந்த அத்தை பேச்சை ஆரம்பித்தார்.

“சரி பண்டு… சக்தி தம்பிய விடு. உனக்குனு ஒரு வாழ்க்கை வேணும். அதுக்குப் பதில் சொல்லு. உனக்குனு ஒருத்தன் வேணும்ல…”

“ஏன் அத்தை நீங்க எல்லாம் எனக்குனு இல்லியா…”

“நல்லா கேட்டுக்கோங்க அண்ணி… நாளைக்கிக் காடு சேரப்போற நாம எல்லாம் இவளுக்குன்னு இருக்கோம்மா… இவ எதுக்கும் ஒத்துக்க மாட்டா… இவள நினச்சே நாம பாதி உசுராப் போக வேண்டியது தான்.” மகள் எதற்கும் பிடிகொடுக்க மறுக்கிறாளே என்ற ஆதங்கத்தில் தாய் வார்த்தைகளை விட, அது இன்னும் அவளைக் காயப்படுத்தியது. அத்தையின் மடியிலிருந்து, வேகமாக எழுந்தவள், அம்மாவின் மடியிலிருந்தும் விருட்டென கால்களை உருவிக் கொண்டாள். 

“என்னமோ நாளைக்கே செத்துப் போகப் போற மாதிரி பேசுற. அப்படியே சாகறதா இருந்தாலும் யாரும் யாரோட உசிரையும் புடிச்சு வைக்க முடியாது. எல்லாம் அவங்கவங்க எழுத்துப்படிதான் நடக்கும். என் வாழ்க்கை இப்படி ஆகும்னு நினச்சா எனக்கு கல்யாணம் பண்ணி வச்சீங்க? இல்லையில்ல… அது மாதிரி நீ நாளைக்கே சாகறதா இருந்தா யாராலையும் மாத்த முடியாது.” என ஆதங்கத்தில் வார்த்தையை விட்டவளை, 

“பொம்மு…” எனத் தந்தை அதட்ட… அத்தை வேகமாக வாயில் சுளீரெனத் தட்டினார்.

“என்னடீ பேசுற… ஒரு வார்த்தை வெல்லும். ஒரு வார்த்தைக் கொல்லும்னு தெரியாதா?”எனக் கோபமாகக் கேட்க,

“அப்புறம் என்ன அத்தை… எப்பப் பாத்தாலும் நான் இன்னும் எத்தனை நாளைக்குன்னு இதையே சொல்லி என்னைக் கார்னர் பண்ணினா நான் என்ன பண்றது. நானும் இவங்களுக்காகத் தானே இருக்கே.” என்றவள் எழுந்து கீழே சென்று விட்டாள். 

          ************************

கடையில் இவர்கள் சென்றவுடன் கூட்டம் சற்றுக் குறைய… தம்பியைப் பிடித்துக் கொண்டாள் பவானி.

“என்னடா இது… பழக்கமெல்லாம் புதுசா இருக்கு… ஆட்டோ எல்லாம் புடிச்சுக் கொடுத்து அனுப்புற?”

“நம்ம கிட்ட வேல பாக்குறவங்க மேல அக்கறை காட்டுறது உனக்குப் புதுசாத் தெரியுதா? அவங்க இருக்கற ஏரியா அவுட்டர்ல இருக்கு… வயசானவங்க வேற… நகையக் கையில வச்சுக்கிட்டு தனியா போக வேண்டாம்னு நினச்சே. இதுல என்ன தப்பு? எந்த எடத்துல எதைக் கேக்கணும்னு தெரியாம கேள்வி கேக்குற?” மெல்லிய குரலில் அக்காவைக் கண்டித்தான்.

ஒன்பது  மணியை நெருங்குவதால் பீக்அவர் முடிந்து சற்று கூட்டம் குறைந்திருந்தது. சுற்றும் முற்றும் பார்த்தவள், அம்மா சொல்ற மாதிரி நமக்கு கொஞ்சம் அவசர புத்தி தான் போல என எண்ணிக் கொண்டாலும், அதை வெளிக்காட்டவில்லை. 

“என்னமோ பெரிய குடும்பம்னு மாமா சொன்னாங்களேன்னு சாதகம் கேட்டா அந்த அம்மா என்னடான்னா பிடி கொடுக்காம பேசிட்டுப் போறாங்க. அவங்க பெரிய ஆளுகளா இருந்தா இருந்துட்டுப் போகட்டும். நீ மட்டும் என்ன கொறஞ்சவனா?” தான் வலியக் கேட்டும் மதிக்கவில்லை எனும் கோபத்தில் இவளும் தம்பியிடம் அடிக்குரலில் கேட்க… 

‘அக்கா என்ன கேட்டுச்சோ… அவங்க எப்படி புரிஞ்சுக்கிட்டாங்களோ தெரியலியே?’ என நினைத்தவன், கோவிலில் பேசிய விபரம் கேட்டறிந்தான். 

“பொண்ணு நல்லா இருக்கே… உனக்குப் பாக்கலாமேனு சாதகம் கேட்டேன்டா… அவங்க பதிலே சொல்லல.” என்றாள். இது கடை மூடும் நேரம் என்பதால், வாசலில் இருந்த பொருட்களைத் தூக்கி உள்ளே வைத்துக் கொண்டிருந்த பெண்கள் காதில் இவளது பேச்சுத் தெளிவாக விழுந்தது. 

கேட்கவா வேண்டும். 

“சக்தி அண்ணாவுக்குப் பொம்மி அக்காவ கேக்குறாங்கலாம்.” கடைக்காரன் சங்கதி கடைபரப்பப் பட்டது, அலுங்காமல் குலுங்காமல் அக்காவின் புண்ணியத்தில்.

error: Content is protected !!