பொன்மகள் வந்தாள்.7.🌹
பொன்மகள் வந்தாள்.7.🌹
PMV.7.
போதும் என்று நின்றுவிட்டால், குட்டை நீராய்த் தேங்க ஆரம்பித்து விடுவோம். நம் தகுதிக்கு மீறி ஆசைப்படுவது பேராசை எனில், ஆசையற்று வாழவேண்டும் என நினைப்பதே நம் தகுதிக்கு மீறிய ஒரு பேராசைதானே. இயலாத ஒன்றும். அத்தனைக்கும் ஆசைப்படு. பூமி இயங்குவது ஈர்ப்பு விசையால் மட்டுமல்ல. மனிதனின் ஆசை என்னும் சாட்டை கொண்டும் தான் சுழல்கிறது.
மனிதனுக்கு மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை இவை மூன்றும் இல்லையென்று வைத்துக் கொள்வோம். உலகம் அமைதிப் பூங்காவாகவா இருக்கும்? நிச்சயமாக இருக்காது. வெறுமையில் உழன்று, வேறுவகையில் மனம் பித்துப்பிடித்து காரணமே இன்றி ஒருவனை ஒருவன் அழித்துக் கொள்வான். தேமேன்னு உண்டு, தேமேன்னு உறங்கி, தேமேன்னு வாழ்ந்து மனிதன் மரத்து மரணிப்பதற்கு கொஞ்சம் ஆசைகளோடு தான் வாழ்ந்து பார்ப்போமே? தகுதிக்கு மீறியதாக இருக்கட்டுமே. பேராசையாகவே இருந்து விட்டுப் போகட்டுமே. பெரிதினும் பெரிது கேள். அப்படித்தானே சொல்லப்படுகிறது. அவனவனுக்கு என்று ஒரு ஆசையை வளர்த்துக் கொண்டு மனிதன் அதை நோக்கி பயணிப்பதால் தானே உலகம் இந்த அளவிற்காவது இயங்குகிறது. தனக்கென்று குறிக்கோள் இல்லாதவன் தான் தேவையில்லாமல் அடுத்தவன் விஷயத்தில் மூக்கை நுழைப்பான்.
காவேரி மளிகைக்கடை நன்கு காலூன்றி லாபம் காட்ட ஆரம்பித்த நேரம். அவனின் சுணக்கமில்லா உழைப்பும், இன்னார் வீட்டுவாரிசு என்ற மூதாதையார் சேர்த்து வைத்த பெயரும் சக்திக்கு வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்றுத் தந்தது. ஒருபோதும் வேரில்லாமல் விழுதுகள் இல்லை. நம் சந்ததிகளுக்கு எதை விட்டுச் செல்கிறோம் என்பதைப் பொருத்தது.
அடுத்த நிலைக்கு முன்னேற ஆசைப்பட்டவன், கடையில் மேல் தளம் எழுப்பி, மொத்த அரிசி வியாபாரம் தொடங்க எண்ணினான். வாடிக்கையாளர்களுக்கு மட்டுமின்றி கடைகளுக்கும் சப்ளை செய்யும் நோக்கில்.
அரிசிமண்டி துவங்கும் எண்ணத்தில்… அது சம்பந்தமாக அரிசிமில்லுகளுக்கே சென்று நேரடி கொள்முதல் பற்றி விசாரிக்க மாமனும் மச்சானும் கிளம்பினர். அப்படியே தஞ்சையைச் சுற்றி, அரிசிமில்களில் விசாரிக்க எண்ணம் கொண்டு, தஞ்சை சென்றவர்கள்… அங்கிருந்த விஷ்ணுவின் நண்பன் ஒருவனிடம் இருசக்கர வாகனம் ஒன்றை இரவல் வாங்கிக் கொண்டு கிளம்பினர்.
இருக்கும் இடத்தைப் பொறுத்து மனநிலையும் மாற்றம் கொள்ளும். கோவிலுக்குள் செல்லும் பொழுது சாமி கும்பிட எண்ணமில்லாமல் வீட்டாரின் கட்டாயத்தில் வந்திருந்தால் கூட, நம்மையும் அறியாமல் மனதில் ஒரு அமைதி பிறப்பது போல, நல்ல ஒரு குத்துப்பாட்டை ரசிக்கும் பொழுது நம்மையும் அறியாமல் கை தாளம் போடுவது போல, படித்த பள்ளியைத் கடக்கும் பொழுது மீண்டும் அந்தக் காலத்திற்கே சென்று வருவது போல இருக்கும் இடத்திற்கும் எண்ணவோட்டத்திற்கும் தொடர்பு உண்டு.
இளமைப் பருவத்தில் தனது வயதொத்த, கருத்தொருமித்த நண்பர்கள் கிடைத்துவிட்டால் அதைவிட உற்சாகம் அந்தப் பருவத்தில் வேறேது. சக்திக்கு அந்த வாய்ப்பு கிட்டாமலே போய்விட்டது. உறவுகளும் புளித்துப் போய்விட, மாமன் தான் வயது வித்யாசமின்றி அவனுக்கு உறவுக்கு உறவாகவும், நண்பனுக்கு நண்பனாகவும் மாறிப் போனான்.
“திருச்சியைச் சுற்றி இல்லாத ரைஸ்மில்லா மாமா?” என சக்தி கேட்க,
“இப்ப நாம போறது அரிசியை விசாரிக்க மட்டுமில்லடா. இப்படியே மளிகைக்கடையே கதின்னு கிடக்குறியே… ஒருநாள் இதைச்சாக்கா வச்சு கொஞ்சம் ஊர்சுத்திட்டு வரலாம்டா. இன்னைக்கி ஆடிப்பெருக்கு… நல்லநாள் வேற.” என அவனை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றான்.
“இது எனக்காக போறமாதிரித் தெரியலியே? அக்காவுக்கும் தெரியுமா… நம்ம வெளிய போறது?”
“அவளுக்குத் தெரியாமலா? அவதான் உன்னைப் பத்தி புலம்பிகிட்டே இருந்தா. தம்பிக்காரன் எங்கேயும் போறதில்ல, வர்றதில்ல… சாமியாராட்டம் இருக்கான்னு.”
“மாமா பேச்சுக்கூட சாமியார்னு சொல்லாதீங்க. எவ்வளவு கனவு இருக்கு எதிர்காலத்தைப் பத்தி. அதெல்லாம் நிறைவேறணும் மாமா.”
“எல்லாம் உன் ஆசைப்படி நடக்கும்… வாடா.” என அழைத்து வந்திருந்தான்.
திருச்சியைச் சுற்றிலும் அவன் பார்க்காத நீரோடையோ, வயல்வெளிகளோ, தோப்புகளோ இல்லை எனலாம். ஆனாலும் அங்கிருக்கும் வரை வியாபாரம் ஒன்றே சிந்தனை எனக் கொண்டவனுக்கு, இப்படி சற்று வெளியிடம் வந்ததும், அதுவும் நண்பனைப் போல் பழகும் மாமனோடு வந்ததில், அந்த வயதிற்கே உரிய உற்சாகத்தில் இருந்தான்.
எப்பொழுதும் பொறுப்புகள், முன்னேற்றம் என ஓடும் பொழுது நம்மை அறியாமலேயே மனதளவில் ஒரு முதிர்ச்சியும், முதுமையும் ஆட்கொண்டு விடுகிறது. அதைத் தொடர்ந்து வாழ்க்கையின் எதார்த்தமும் தெரிந்து விடுகிறது. எதார்த்தம் புரிய எதிலும் நிதானம் வந்து விடுகிறது. நிதானம் நிலைகொள்ள மனதின் துள்ளல் அடங்கிவிடுகிறது.
வாழ்க்கையை அனுபவிக்க வேண்டுமெனில் ஏன் என்று கேட்காத, எப்படி என்று ஆராய்ச்சி செய்யாத, கொஞ்சம் முட்டாள் தனம் தேவைப்படுகிறது. அப்பொழுதுதான் குழந்தைத் தனத்தோடு வாழ்க்கையை அனுபவிக்க முடியும். எல்லாராலும் அது முடிவதில்லை.
“மாப்ளே… கொஞ்சம் வண்டிய ஓரமா நிப்பாட்டுடா. குடிச்ச இளநீர் வேலையக் காட்டுது.” என மாமன் கூற, சக்தியும் வண்டியை ஓரங்கட்டினான். விஷ்ணு இறங்கிக் கொள்ள, வண்டியை கொஞ்சம் தூரம் நகர்த்தி வந்தவன் ஸ்டான்ட் போட்டு நிறுத்தினான்.
இருபுறமும் வயல்வெளி, நீரோடையை ஒட்டிய தார்ச்சாலை. சாலையோரம் வளர்ந்த நெடுமரங்கள். அந்த மத்தியான நேரத்திலும் ஆடிமாதக் காற்று நெல் நாற்றுக்களைத் தாலாட்டிக் கொண்டிருந்தது. வண்டியில் கைகட்டி சாய்ந்து நின்றுகொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். தூரத்தில் வயல்களில் ஆட்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.
மத்தியான நேரமாதலால் சாலை வெறிச்சோடி இருந்தது. தூரத்தில் ஒருத்தி சைக்கிளில் வருவது தெரிந்தது. பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே சைக்கிளில் வந்தவள், துப்பட்டா சக்கரத்தில் சிக்க… தடுமாறி விழுந்தாள். வேகமாக அவளிடம் செல்ல எத்தனித்தவன், நிதானித்தான். முன்னபின்ன தெரியாத இடத்தில் பெண்பிள்ளையின் அருகே செல்ல யோசித்தான்.
‘எதுக்கு வம்பு. யாராவது பாத்து தப்பா புரிஞ்சுகிட்டா தர்ம அடி நிச்சயம்.’ என்று புத்தி எச்சரித்தது.
விழுந்தவளும் சத்தம் கூடப் போடாமல் வேகமாக எழுந்தவள் சுற்றும் முற்றும், யார் கண்ணிலாவது பட்டுவிட்டோமா எனப் பார்வையைச் சுழற்றினாள். சைக்கிளை நிமிர்த்தி ஸ்டான்ட் போட்டவள், சைக்கிள் ஜெயினில் சிக்கிய துப்பட்டாவை எடுக்க குனிந்து முயற்சி செய்ய சைக்கிளும் சாய்ந்தது. முடியவில்லை. சுற்றும்முற்றும் பார்க்க, சக்தி நின்று கொண்டிருப்பது தெரிந்தது.
“அண்ணே… இங்க வாங்களேன்.” கைகாட்டி அழைத்தாள்.
‘நம்மளைத்தானா?’ என அவனும் அக்கம்பக்கம் பார்த்துவிட்டு உறுதி செய்து கொண்டே சென்றான்.
“என்ன பாப்பா?”
“துப்பட்டா மாட்டிக்கிச்சு. எடுக்க முடியல. கொஞ்சம் சைக்கிள புடிச்சுக்கறீங்களா?” முகம் சுருக்கி கெஞ்சினாள்.
“சரிம்மா.” என்றவாறு ஹேன்ட்ல்பாரைப் பிடித்துக் கொண்டான். குனிந்து ஜெயினை சுழலவிட்டு சிக்கிய துப்பட்டாவை எடுத்தாள்.
“ரொம்ப தாங்க்ஸ் ண்ணா.” என்றாள். குரல் கிண்கிணியாய் ஒலித்தது.
“போச்சு… துப்பட்டா எல்லாம் ஆயிலாப் போச்சு. எப்படியும் தாய்க்கெழவி கண்டுபிடுச்சுறும். செத்தேன்.” எனத் தன் போக்கில் புலம்ப ஆரம்பித்து விட்டாள்.
வாராத மாணிக்கம் கையில் வந்தால் அதை யார் கண்ணும் படாமல் பொத்திதானே வைப்பார்கள். அப்படித்தான் கௌரியும் தன்மகளை சிறகிற்கு உள்ளேயே வைத்து வளர்த்தார்.
அம்மாவிற்குத் தெரியாமல், தந்தையிடம் அடம்பிடித்து இன்று சைக்கிளில் பள்ளிக்குக் கிளம்பினாள். அவளது நீண்ட நாள் ஆசை. இல்லையெனில் பள்ளியில் விடுவதும், அழைத்து வருவதும் தந்தைதான். தனியாக எங்கும் சென்றதில்லை என்பதைவிட அனுப்பியதில்லை எனச் சொல்லலாம்.
“இன்று ஸ்பெஷல் க்ளாஸ். ஹாஃப் டே தாம்ப்பா. ஆசையா இருக்கு. போய்ட்டு வரவா?’ எனத் தந்தையை தாவாய்ப்பிடித்துக் கெஞ்ச, அவரால் மறுக்க முடியவில்லை. அன்னையை ஏமாற்றிவிட்டு சைக்கிளில் கிளம்பிவிட்டாள். ஸ்பெஷல் க்ளாஸ் முடிந்து திரும்புகையில் தான் விழுந்துவிட்டாள்.
அவளின் புலம்பலில் தான், சக்தி அவளைக் கவனித்தான். மடித்துக் கட்டிய இரட்டைப்பின்னலுடன், பள்ளிச் சீருடையில்… குமரி உருவத்தில்… குழந்தையாக இருப்பதாகப் பட்டது. கண்களில் இன்னும் மாறாத குழந்தைத்தனம் அப்பட்டமாகத் தெரிந்தது. கன்னம் கிள்ளி கொஞ்சத் தோன்றியது. அவனுக்கே அவனது எண்ணப்போக்கு விசித்திரமாக, முதன் முதலாக ஒரு பெண்ணைப் பார்த்து மயங்குகிறான். தனியாகப் பருவப் பெண்ணை சந்தித்ததும் இருபத்திஐந்து வயதில் பதின்பருவமாய் மனதில் ஒரு துள்ளல். பரபரப்பு. முதல் பார்வையிலேயே… பார்த்தவுடன் பச்சக்கென பதிந்துவிட்டாள். அவளும் மயக்குகிறாள் அப்பாவித்தனத்தால்.
“பாப்பா எத்தனாவது படிக்கிறே.” என்றான்.
“ப்ளஸ்டூ ண்ணா.” முகம் பார்த்து வெகுளியாய்ச் சொன்னாள். ஆனால் அவளிடம் அந்த வயதிற்குரிய முதிர்ச்சி இருப்பதாகப் படவில்லை அவனுக்கு. வெடித்த தென்னம்பாலை நிறத்தில், உண்மையிலேயே பால் வடியும் முகம் என இருந்தாள்.
“இங்கே கௌரி ரைஸ் மில் எங்கம்மா இருக்கு?” மனம் பேச ஆசைப்பட்டதோ என்னவோ… இடம் எங்கே என விசாரித்தான்.
“தாத்தா ரைஸ்மில்லையா கேக்குறீங்க?”
“கௌரி ரைஸ்மில்ல தான் கேட்டேன். அவங்க உனக்கு தாத்தாவானு எனக்கு எப்படித் தெரியும்?”
“அடக்கடவுளே… தாத்தானா சொன்னே. அங்க போய் நான் தாத்தானு சொன்னதா சொல்லிறாதீங்க… ப்ளீஸ்…” சிறுபிள்ளையாய் கொஞ்சினாள். ஆம்… அவனுக்கு அப்படித்தான் தெரிந்தது, வலது கைவிரல்களை மொட்டாகக் குவித்து… கண்களைச் சுருக்கி கொஞ்சும் பாவனையில் அவள் கெஞ்சியது. சிரிப்பு வந்தது சக்திக்கு.
“ஏன் அவரைத் தாத்தானு கூப்பிட்டா புடிக்காதா?” பேச்சை நீட்டித்தான்.
“அவரு கம்முனு தான் ண்ணே இருப்பாரு. தாய்க்கெழவிக்கு தான் கோபம் வரும். புருஷன் அப்படியே மார்க்கண்டயருனு நினப்பு ண்ணே அதுக்கு.”
யார் எவரென்ற விவரமில்லாமல் அவள் பாட்டுக்குப் பேசிக்கொண்டே இருக்க…
அவள் வாய்க்கு வாய் அண்ணன் என சொல்வது அவனுக்குப் பிடிக்கவில்லை. கொஞ்சம் அவனுக்குள் இருந்த பதின்பருவ சக்தி இருபத்தி ஐந்து வயதில் எட்டிப்பார்த்தான், குறும்பாய்.
“நீ அண்ணேனு கூப்பிடாம இருந்தா, நீ தாத்தானு சொன்னதைச் சொல்ல மாட்டேன்.” என்றான். இவளே யாரென்று அவனுக்குத் தெரியாத பொழுது, இவன் எப்படி அங்கே போய் சொல்லமுடியும் என்று யோசிக்கவில்லை அவளும்.
“ஏன் அப்படி கூப்பிடக் கூடாது… இங்க இருக்கிறவங்கள எல்லாம் அண்ணானு தானே கூப்பிடுறே.”
“இதைக் கேட்க எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா? இங்க இருக்கற எல்லா ஆம்பளைங்களையும் அண்ணானு கூப்பிடு. என்னையக் கூப்பிடாதே.” என்றவன்,
அப்பொழுதுதான் அவளது முழங்கையைக் கவனித்தான். விழுந்ததில் சிராய்ப்பு ஏற்பட்டு, இரத்தம் கசிந்தது.
“பாப்பா ரத்தம் வருது பாரு.” என சுட்டிக்காட்ட, பார்த்தவளுக்கும் பயம் தொற்றியது. அவளது முகத்தில் அச்சத்தைத் பார்த்தவன்,
“பயப்படாதேம்மா. சின்ன காயம் தான். உன் கலருக்குப் பளிச்சுன்னு தெரியுது.” என்று ஆறுதல் போலக் கூற,
“நான் இதுக்குப் பயப்படல. எங்கம்மாவுக்குத் தெரியாம இன்னைக்கி சைக்கிள்ல ஸ்கூலுக்குப் போயிட்டுவரலாம்னு நினைச்சேன். எப்படியும் மாட்டிக்குவேன்.” முதன்முறையாகத் தவறு செய்துவிட்டு மாட்டிக் கொண்டு முழிக்கும் சிறுபிள்ளையாய்த் தெரிந்தாள்.
“ஏன் உங்க அம்மாவுக்குத் தெரியாதா?”
“தெரிஞ்சா சைக்கிள்ல தனியா போக விடமாட்டாங்களே.”
தனது கர்சீஃபை எடுத்தவன் அருகிலிருந்த, ஓடையில் நனைத்துப் பிழிந்து வந்தான்.
“கையைக்காமி.” எனக்கேட்க, விகல்பமில்லாமல் அவளும் நீட்டினாள்.
“இப்ப தெரியுது… ஏன் உன்னைய உங்க அம்மா தனியா அனுப்பப் பயப்படுறாங்கனு.” முன்னப்பின்ன தெரியாத ஒருத்தன் கையைநீட்டு என்று சொன்னதும், சற்றும் யோசிக்காமல் கையை நீட்டும் வெகுளித்தனம், கண்டு அவனுக்கே சற்று கோபம் வந்தது.
‘காலம் கெடக்குற கிடையில நல்லது கெட்டது சொல்லி வளக்கல போலியே?’ என நினைத்துக் கொண்டான்.
“எதுக்குன்ணே அனுப்ப மாட்டேங்குறாங்க?” என அவனிடமே விளக்கம் கேட்க,
“காக்கா உன்னையத் தூக்கிட்டுப் போயிறும்னு தான் அனுப்ப மாட்டாங்க போல.”
“நானென்ன வடையா? காக்கா தூக்க.” எனக்கேட்டு சிரித்தாள் பேதை என இருந்த மடந்தை.
சந்தித்த சிறிது நேரத்திற்கெல்லாம், கெஞ்சல், கொஞ்சல், பயம், மகிழ்ச்சி என அத்தனை பாவங்களையும் கண்கள் காட்டியது.
“வடை இல்ல… லட்டு. அப்படியே லட்டு மாதிரி இருக்கே. இப்ப பாத்த எனக்கே உன்னைய விட்டுப் போக மனசில்ல. ஒரு அஞ்சு வருஷம் எனக்காக காத்துட்டிருப்பியா? சின்னப் பிள்ளையா வேற இருக்க.” மடந்தையைப் பார்த்தவனும் மதி மயங்கிக் கேட்டான்.
அவனுக்கு அவளை விட்டுச் செல்ல மனமில்லை. விடலைப்பையனாய் ஒரு ஆர்வம். ஆசை வெட்கமறியாது என்பது மட்டுமல்ல. சுற்றமும் உணராது. ஏதோ இன்றே இவளை அச்சாரம் போட்டுவிட மனது அவசரப்பட்டது போல… காயத்தின் மீது கட்டுப்போட்டுக் கொண்டே கேட்க,
“டேய் சக்தி! யாருடா இது?” எனக்கேட்டவாரு மாமனும்வர,
“சைக்கிள்ல இருந்து விழுந்திருச்சு மாமா. அதான் சின்ன ஹெல்ப்” என்றான்.
“நான் வர்றேண்ணே. என்னைப் பாத்ததை சொல்லிறாதீங்க.” என்றவளை, சைக்கிளைப் பிடித்து நிறுத்தி…
“துப்பட்டாவை முடி போட்டுட்டுப் போம்மா.” என்றான் சக்தி.
“இதை முதல்லயே பண்ணியிருக்கணும்.” என தனக்குத்தானே தலையில் கொட்டியவள், அவன் கூறியது போல் துப்பட்டாவின் இரு முனைகளையும் முடிந்து விட்டுக்கிளம்பினாள்.
“என்னடா நடக்குது? என்னமோ சொல்லிறாதீங்கனுட்டுப் போகுது.”
“வாங்க மாமா. போகும்போது சொல்றே.” என்றவாரு வண்டியைக் கிளப்பினான்.
*************************
பொன்னி, சீரகச்சம்பா, மாப்பிள்ளை சம்பா, கிச்சிலி சம்பா, பச்சை அரிசி, அரைவேக்காட்டு அரிசி, ஐ.ஆர்.இருபது என, கிண்ணங்களில் அரிசிகளைப் போட்டு வைத்து அரிசி ரகப்பெயர்கள் எழுதி ஒட்டியிருந்தது. மேஜை மீது அவை வரிசையாக வைக்கப்பட்டு இருக்க… நாற்காலியில் சிதம்பரமும், அவரின் எதிர் இருக்கைகளில் சக்தியும் விஷ்ணுவும் அமர்ந்திருந்தனர். அந்த இடம் முழுதும் அரிசி மூட்டைகள் ரகவாரியாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது.
“எங்கே இருந்துப்பா வர்றீங்க?”
“திருச்சியிலிருந்து வர்றோம்ங்க.”
“எந்தரக அரிசி தேவைப்படுது உங்களுக்கு?”
“எல்லா ரகமும் தான் வேணும். ஹோல்சேல் வியாபாரம் பண்றதுக்கு. விலை விவரம் சொன்னீங்கனா அதுக்குத் தகுந்த மாதிரி பேசலாம்.” என விஷ்ணு கேட்க,
“எல்லா நேரமும் ஒரே விலையா இருக்காது தம்பி. மத்த இடங்கள்ல எல்லாம் அப்பப்ப முன்ன பின்ன மாறும். அதுக்குனே நான் பிராண்ட் போடுறதில்ல. பேரு போட்டா வரி கட்டணும். அதனால் நம்மகிட்ட எப்பவும் ஒரே விலைதான்.”
“மில்ல சுத்திப்பாக்கலாமா?” என சக்தி கேட்டான்.
“இதுல என்னப்பா இருக்கு… வாங்க போலாம்.” என எழுந்து கொண்டார். அரவை இயந்திரங்கள் இருக்கும் பகுதிக்கு அழைத்துச் சென்றார்.
“ஏன்டா மாப்ளே… மில்லப் பாக்கணுமா? இல்ல… பொண்ணப்பாக்கணுமா?” என்க
“கம்முனு வாங்க மாமா.” என்றான்.
நெல் அவிக்கும் வாசம் ஒருபுறமும், தவிட்டு வாசம் ஒருபுறமும் என அந்த இடம் முழுதும் நெல்வாசனை வியாபித்திருந்து. மில்லைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள ஆசைப்பட்டான்.
சிதம்பரத்திடம் அது பற்றி விசாரிக்க, அவரும் அனைத்து விவரங்களையும் கூறினார்.
“நம்மகிட்ட பாதிவேல ஆளுகதாம்ப்பா பாக்குறாங்க. ஆனா இப்ப எல்லாம் மாடர்ன் ரைஸ் மில் வந்திருச்சு. முக்கால்வாசி ஆட்டோமேட்டிக் தான். பழைய ஆளுகளுக்கு, பொழப்புக் கொடுக்கணுமேன்னு இன்னும் இதைவச்சு ஓட்டிக்கிட்டு இருக்கேன்.” என்றார்.
களத்தில் நெல் காய்ந்து கொண்டிருக்க, அதை ஒட்டிய வீட்டில் பிள்ளைகள் விளையாடும் சத்தம் ஆட்களின் நடமாட்டம் என கலகலப்பாக இருந்தது.
“வீடும் மில்லும் ஒன்னாவே இருக்கா?” என்றான் விஷ்ணு.
“ஊருக்குள்ள பூர்வீகவீடு இருக்குப்பா. அது கொஞ்சம் சின்னது. சொந்தம் எல்லாம் வந்தா இங்க வந்திருவோம்.”
“இன்னைக்கி ஏதும் வீட்ல விசேஷங்களா?” சக்தி கேட்டான். அவனுக்கு சிதம்பரம் பேச்சில் கவனம் இருந்தாலும், கண்கள் வீட்டையும் நோட்டமிட்டது.
“இன்னைக்கி ஆடிப்பெருக்கு இல்லையா. அதா சொந்தக்காரங்க எல்லாம் குலதெய்வ கோயிலுக்குப் போக வந்திருக்காங்க.” என்றார்.
ஆற்றோர ஊர்களில் ஆடிப்பெருக்கு பிரசித்தம். அன்று எல்லா ஊர்களிலும் குலதெய்வ பூஜை நிச்சயம் நடக்கும். எந்த ஒரு காரியமாக இருந்தாலும் குலதெய்வ பூஜை என்பது முக்கியம். சாமிகளாகிப் போன நம் முன்னோர்கள் ஒருபோதும் அவர்கள் சந்ததிகளை கைவிடுவதில்லை.
“ஆமா சக்தி. இன்னைக்கி உங்க அக்காவும் நானும் கூட காவிரி ஆத்துக்குப் போயி கயிறுபெருக்கிட்டு தான்டா வந்தோம்.” என விஷ்ணுவும் கூறினான்.
“இன்னைக்கி நல்லநாள். நீங்க என்கிட்ட வியாபாரம் வச்சுக்கறீங்களோ இல்லையோ, ஒரு அஞ்சு கிலோவாவது வாங்கிட்டுப் போங்கப்பா. வெறுங்கையா போகாதீங்க.” எனப் பேசிக்கொண்டிருக்க,
“தாத்தா உங்களைய அப்பத்தா வரச்சொன்னாங்க.” என பட்டுப் பாவாடை சிட்டு ஒருத்தி வந்து அழைத்தாள்.
“வர்றேன்னு சொல்லு பூரணி. அப்படியே அக்காவை வரச்சொல்லு.” என்க,
“பொம்மிக்கா உன்னைய தாத்தா கூப்பிடுறாரு…” என இங்கிருந்தே கத்திக் கொண்டே சென்றது அந்தச் சிட்டு.
சிதம்பரத்தைப் பார்த்தவனுக்கு, அவரது வயது பொம்மியின் தந்தையாக எண்ணத் தோன்றவில்லை. தாத்தாவாக இருக்கும் என்றுதான் நினைத்துக் கொண்டான்.
சொன்னதைச்சொல்லும் கிளிப்பிள்ளை என்பது போல், சிறு பிள்ளைகள், தன்னைச் சுற்றி உள்ளவர்கள் பேசுவதையும், செய்வதையுமே திருப்பிச் செய்யும், சொல்லும். அதே போல் தான் பொம்மியும். சிதம்பரத்தின், உடன் பிறந்தோரின் பேரன் பேத்திகள் எல்லாம் சிதம்பரத்தை தாத்தா என அழைக்க, அவர்கள் வயதொத்து இருந்த பொம்மியும் குழந்தையில் இருந்தே அவ்வாறே அழைத்தாள். அதுவே பழகிப்போயிற்று. சிறுபிள்ளை தானே… வளந்தா தன்னால தெரிஞ்சுக்கும்… அப்படியே கூப்பிடட்டும் என விட்டுவிட, வளர்ந்தும் மாறவில்லை. கௌரி தான் அவ்வப்பொழுது கண்டிப்பது. விபரம் புரிந்தும் அம்மாவை வம்பிழுக்க… வீம்புக்கென அப்பாவைத் தாத்தா என்றே அழைத்தாள்.
கோவிலுக்கு செல்ல இருப்பதால், பள்ளியிலிருந்து வந்த உடன், குளித்து தாவணிக்கு மாறியிருந்தாள். மாம்பழக்கலர் பாவாடையும் அரக்குக் கலர் தாவணியும் என தலைநிறைய மல்லிகைப் பூவுடன், வீட்டின் உள்ளிருந்த அவள் வருவது தெரிய,
“லட்டுவே தான்.” வாய் தன்னால் முனுமுனுத்தது சக்திக்கு.
இவர்களைப் பார்த்ததும், ”வாங்கண்ணே… இடம் கண்டு புடுச்சுட்டீங்களா?” எனக் கேட்டுக் கொண்டே வந்தாள்.
“எங்கம்மா பாத்த இவங்கள?”
“ஸ்கூல்விட்டு வர்ற வழில பாத்தேன்.”
“பொம்மி உன் கையால இவங்களுக்கு ஒரு அஞ்சு கிலோ பச்சரிசிப் பைய எடுத்துக் கொடுடாம்மா.” என்க,
“வாங்க ண்ணே.” என மீண்டும் அரிசிமூட்டைகள் இருக்கும் இடம் அழைத்துச் சென்றாள்.
“எடுத்துக் கொடு பொம்மு. அம்மா கூப்பிட்டாளாம்… என்னனு கேட்டுட்டு வர்றே.” என்றவாறு செல்ல,
“எல்லாம் மண்டகப்படி கொடுக்கத்தான்.” என்றாள்.
“எதுக்கு?” என்றார் சிதம்பரம்.
“போங்க தெரியும்.” என கூறிவிட்டு அவர்கள் முன்னே சென்றுவிட்டாள்.
“நீ விழுந்ததால தான அவருக்கு மண்டகப்படி?” என சக்தி கேட்க,
“ஆமாங்கண்ணா… என்னைய வையாது தாய்க்கெழவி. அதையும் சேத்துவச்சு புருஷனைத் திட்டும்.” என்றாள்.
“ஏன்?” என்றான்.
“அது என்னமோ? என்ன மாயமோ தெரியல? இதுவரைக்கும் என்னைய யாரும் வஞ்சது இல்ல.” என்றாள்.
“ரொம்ப செல்லமோ?”
“ஆமாங்கண்ணா.” என்றவள், சட்டென,
“சாரி… சாரி… அண்ணானு கூப்பிடாதேனு சொன்னீங்கள்ல, மறந்துட்டே.” என மாமன் முன் அவன் மானத்தை வாங்க,
‘என்னடா சக்தி இதெல்லாம்?’ என்றவாறு மாமன் பார்க்க, முதன்முறையாக மாமன் முன் அசடுவழிய நின்றான்.
நிமிடத்திற்கு ஒரு பாவனை என நவரசம் காட்டிய அவளது கண்கள், நான்கு வருடங்கள் கழித்து திருச்சியில் அவளை, அவன் சந்தித்த பொழுது பேசாமடந்தையாக இருந்தது.