மது பிரியன் 17

மது பிரியன் 17

மது, பிரேமாவிடம் சரியென்றுவிட்டு, மிகுந்த யோசனையோடு மேலும் நாள்களைக் கடத்தினாள். 

‘அத்தை வீட்டுக்குப் போறதுனா, இவருகிட்டப் போயி கேக்கணும். அப்ப நடந்ததை மறந்துட்டு போயி பேசினாத்தான் அங்க போக முடியும்.  நம்பாத மனுசங்கிட்ட, மானங்கெட்டுப் போயி என்னத்தைப் பேச.  அப்டி அங்க போயித்தான் ஆகணுமா!’ என ஆரம்பத்தில் யோசித்து, அமைதியாகியிருந்தாள் மது.

ஆனால், கணவனின் முன்பு செல்லும்போது, அவனது குறுகுறு பார்வையும், மது தன்னிடம் வந்து எதாவது பேசுவாளா என்கிற அவனது எதிர்பார்ப்பும் மதுவிற்கு புரிந்தது.

‘வந்ததுல இருந்தே, சின்னச் சின்ன மனஸ்தாபம் எதுவும் வந்தா, எந்தத் தப்புமே நான் பண்ணாட்டாலும், நாந்தான் போயி, அவருகிட்ட முதல்ல பேசறேன்.  சரி சரினு எல்லாத்தையும் அணுசரிச்சு இதுவரை போனதால, இந்த தடவையும் அய்யா, நான் வந்து பேசுவேன்னு எதிர்பாக்கறாருபோல’ என்பதாக மதுவின் எண்ணம் இருந்தது.

இயன்றவரை, கணவனை நேருக்குநேர் பார்ப்பதை தவிர்த்தாள் மது.  மதுவிற்கு, கணவனது எதிர்பார்ப்புடனான பார்வையை நேரில் சந்தித்தாலே, அதற்குமேல் தானாகவே வலியச் சென்று பேசிவிடுவோம் என்பது புரிந்ததால்தான் இந்தத் தவிர்த்தல்.

மதுவிற்கே தன்மீது கோபமாக வந்தது.  தான் எந்தளவிற்கு கணவனிடம் சட்டெனத் தகைந்து போகிறோம் என்று யோசித்தபோது உண்டான வெறுப்பு அது.  விஜய்யைக் காணாதவரை இருக்கும் வீம்பும், பிடிவாதமும், ‘மது’ என்னும் கணவனின் அழைப்பில் பஸ்பமாகிப் போய்விடுவதேன் என்று அவளால் அவளையே புரிந்துகொள்ள முடியவில்லை.

ஆனால் இந்த சம்பவத்திற்குப்பின், தன் பெயரைச் சொல்லி அழைப்பதையே தவிர்த்திருந்தான் விஜய்.  அதனால், கணவன்மீது முன்பைக் காட்டிலும் வருத்தம் மதுவிற்கு.

நியாயத்தினை எதிர்பார்த்துப் பேசியதால் கிடைத்த அநியாயம் அது.

அதனைக்காட்டிலும், அன்று நடந்த விசயங்களைத் தான் எடுத்துக் கூறியும் கணவன் நம்பவில்லையே எனும் ஆதங்கம், அவளை மேலும் சோர்வடையச் செய்தது.

ஆதரவற்ற தனது நிலையை எண்ணிய கழிவிரக்கமும் மதுவைச் செயலிழக்கச் செய்திருந்தது. 

‘பெத்தவங்க இருந்திருந்தா, இந்நேரம் அவங்கட்டப் போயி இதுக்கொரு நியாயம் கிடைக்க எதாவது உதவி கேட்டிருந்திருக்கலாம்.  யாருமில்லாம தனியொருத்தியாக் கிடந்து அல்லல் படணும்னு விதியிருக்கும்போது, வேற என்ன செய்ய?’ தனது மனக்குமுறலை தனக்குள் வைத்து ஓய்ந்து போனாள் மது.

எந்த படுக்கையறை இருவருக்கும் இனிமையான தருணங்களையும், நினைவுகளையும் பரிசாகத் தந்ததோ, அந்த அறையில் இருப்பது மூச்சு முட்டுவதுபோல உணர்ந்தாள் மது.

பழைய நினைவுகள் வந்து பரிகாசம் செய்திட, இயன்றவரை அங்கு செல்வதையே தவிர்த்தாள் மது. அந்த நிலையில்தான்,  தன்னால் தன்னையே சமாளிக்க முடியாமல் உண்டான புகைச்சலில்தான், பிரேமா அத்தை வீட்டிற்கு செல்லும் முடிவை எடுத்திருந்தாள் மது.

பிரேமாவும் ஒப்புதல் தந்ததோடு, உடன் விஜய்யின் வருகையை எதிர்பார்ப்பது போன்ற பேச்சைக் கேட்டதும், மதுவிற்கு மூச்சை அடைக்கும் உணர்வு.

நடந்ததை அவரிடம் பகிரும் எண்ணம் எதுவும் இதுவரை இல்லை மதுவிற்கு.  ஆனால், இங்கிருந்தால் இன்னும் மனஅழுத்தம் கூடும் என்பதை உணர்ந்தவள், முடிவெடுத்துவிட்டாள், பிரேமா அத்தையின் வீட்டிற்கு சென்று வரலாம் என்று.

பிரேமா அத்தையின் வீட்டிற்குச் செல்ல, தனித்துச் செல்லும் தைரியமுமில்லை. விஜய்யிடம் கூறாமலும் செல்ல முடியாது.  எப்படியானாலும் அவனிடம் பேசியாக வேண்டிய கட்டாயம். 

‘சரி, இந்த ஒரு தடவை நாமளே போயிப் பேசுவோம்.  வேற வழியில்லை இப்போ’ என முடிவெடுத்தவள், தனியாக காளையார்கோவிலில்  இருக்கும் பிரேமா அத்தையிடம் செல்ல தீர்மானித்து விட்டாள்.

‘தனியா போறேன்னு சொன்னா சரினு விடுவாரா,  இல்லை அதுக்கும் எதாவது முட்டுக்கட்டை போடுவாரானு தெரியலையே’ என யோசித்தவள், ‘அவுங்களா கொண்டு வந்து விடறேன்னா, சரினு போயிட்டு வரவேண்டியதுதான்’ என தன்னைச் சமாதானம் செய்திருந்தாள் மது.

பிரேமாவிடம் மீண்டும் பேசிவிட்டு, அன்று இரவு அறைக்குள் வந்த கணவனிடம், “நா…ன்.. பிரேமா அத்தை வீட்டுக்கு போயிட்டு வரேன்” தீர்க்கமாகவே கணவனிடம் பேசினாள்.

மௌனமாக மனைவியைத் திரும்பிப் பார்த்தவன், “என்ன விசயம்?” விஜய் யோசனையாக மனைவியை நோக்கினான்.

“விசயம் ஒன்னுமில்லை.  சும்மாதான்” என்றாள் மது. கணவனை பார்க்காமலேயே பதில் கூறினாள்.

“சும்மாவா?” விஜய்.

எதற்கு மறைத்துப் பேசிக்கொண்டு என எண்ணியவள், “எனக்கு ஒரு மாறுதல் வேணும்.  அதுக்காக” குனிந்தவாறும், வேறு திசையில் பார்வையை செலுத்தியவாறும் பேசினாள் மது.

நடந்து சென்று படுக்கையில் அமர்ந்தவன், மனைவியின் உடல்மொழியைக் கவனித்தபடியேதான் சென்றான்.  மது தன்னைத் தவிர்ப்பது நன்றாகவே புரிந்தது.

மதுவின் செயலைக் கண்டு வருத்தம் தோன்றினாலும் அதைக் காட்டாமல், “மாறுதல் தேவையான அளவுக்கு, இங்க அப்டி என்ன கஷ்டம் உனக்கு” விஜய் துருவினான்.

‘எதுவுமே தெரியாத மாதிரிக் கேட்டா, என்ன பதிலைச் சொல்ல’ தனக்குள் முணுமுணுத்தவள், “இங்கேயே இருந்தா எனக்குப் பைத்தியம் பிடிச்சுரும்போல இருக்கு.  அதான், ஒரு சேன்ஞ்சுக்கு…” என இழுத்தாள்.

“இப்பவே எல்லாத்தையும் பழகிட்டாத்தானே, எனக்கும் நல்லது” என துணிந்து கணவனிடம் பேசிவிட்டாள் மது.

மனைவியின் வார்த்தையில் சட்டென கோபம் மூள, மது எதைப்பற்றிக் கூற வருகிறாள் என்று புரிந்ததுமே, அருகில் கிடந்த தலையணை கண்ணில்பட, கையில் எடுத்து மதுவை நோக்கி வீசியிருந்தான் விஜய்.

அவள் பேசி முடிக்கவும், நின்றிருந்தவளின்மீது விழுந்த தலையணையின் திடீரென்று மோதிய ஸ்பரிசத்தில் சட்டென பயந்து போனவள், சுற்றிலும் பார்வையைவிட, அப்போதுதான் விஜய் தன்மீது கோபத்தில் தலையணையை எடுத்து வீசியது புரிந்தது மதுவிற்கு.

கீழே விழுந்த தலையணையை குனிந்து எடுத்தபடியே, “இப்ப எதுக்கு, எம்மேல இதைத் தூக்கி வீசுறீங்க.  ஏற்கனவேதான் பாறாங்கல்லையே போட்டாச்சு. இன்னும் உங்களுக்கு எம்மேல ஆத்திரம் அடங்கலைல” என மது பேச்சை வளர்க்க

“நீ பேசுற பேச்சுக்கு, எங்கிட்ட அறை வாங்கப் போற பாரு” என்றவன், “தேவையில்லாம எதையோ யோசிச்சு, நீயும் கஷ்டப்பட்டுட்டு, என்னையும் கஷ்டப்படுத்தற மது” மனைவிக்குப் புரிய வைக்கும் முயற்சியில் இறங்கினான் விஜய்.

“யாரு நானா?” என்றாள் மது.

“இங்க நாம ரெண்டு பேருதான இருக்கோம்” விஜய்.

“கணக்கெல்லாம் சரியாத்தான் இருக்கு.  ஆனா உங்க கணிப்புதான் தப்பா இருக்கே” இக்கு வைத்து கணவனிடம் பேசினாள் மது.

“என்ன இப்ப எங்கணிப்பு தப்பா போயிருச்சுங்கற?” எதுவும் தனக்குத் தெரியாததுபோல கேட்டவனைப் பார்த்து முறைத்தவள், “அது காலம் பதில் சொல்லும்.  இனிமே எக்காரணம் கொண்டும் பழையதைப் பேச நான் விரும்பல.  இப்படி நமக்குள்ள எதாவது முட்டிக்கக் கூடாதுங்கறதுக்காகவே, நான் கொஞ்ச நாள் பிரேமா அத்தை வீட்டுக்குப் போகலாம்னு நினைக்கிறேன்” என தனது எண்ணத்தை இதுதான் தக்க தருணம் என எண்ணி கணவனிடம் பகிர்ந்துவிட்டாள்.

“என்னை விட்டுட்டுப் போயிட்டா, அப்ப நான் என்ன செய்யறது?” சரசமாகவே வினவினான் விஜய்.  விஜய்யிக்கு தனித்து மதுவை அங்கு விடப் பிரியமில்லை.  ஆகையால் இப்படியான பேச்சைத் துவங்கியிருந்தான்.

‘இத்தனை நாளு நான் இருக்கேனா, தொலைஞ்சேனானுகூடப் பாக்காம ஒரு வீட்டுக்குள்ளயே எதிரெதிர் துருவமா இருந்துட்டு, நான் அங்க போகணும்னு கேட்டதும், இப்ப வந்து பேசற பேச்சைப் பாரு’ எனப் பல்லைக் கடித்து, தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டவள், “உங்களைப் பாத்துக்கதான் பஞ்சக்கா இருக்காங்க, அப்புறம் வசீ இருக்கான்.  அப்புறமென்ன?” என வெளியில் தனது மனதை மறைத்துப் பேசினாள்.

“ஆனாலும், நீ என்னைப் பாத்துக்கற மாதிரி அவங்களாம் பாத்துக்க மாட்டாங்களே மது” விஜய் இன்னும் தனது பாணியை விடாமல், தொடர்ந்தான்.

“தப்பாச் சொல்றீங்க.  நான் வந்து கொஞ்ச நாளாத்தானே உங்களைப் பாத்துக்கறேன்.  இதுவரை அவங்கதான உங்களை நல்லாப் பாத்துக்கிட்டாங்க.  அதனால, இனியும் நல்லாப் பாத்துப்பாங்க” பற்றற்று தனது மனம்போன போக்கில் பேசினாள் மது.

“முடிவா என்னதான் மது சொல்ற?” விஜய்.

“சரினு சொன்னா இன்னைக்கே நான் கிளம்பிருவேன்.  இல்லை என்னைக்கொண்டு போயி பிரேமா அத்தை வீட்டுல நீங்களே விடறதா இருந்தாலும் சரிதான்” மது பிடிவாதமாக இருந்தாள்.

“நான் வேணானு சொன்னா, என்ன செய்வ?” விஜய்

“விதியேனு இருக்க வேண்டியதுதான்” என சுவற்றைப் பார்த்தபடியே, தனது தலையில் கைவைத்துக் கூறிவிட்டு, அகன்றாள் மது.  

மனைவியின் செயலைப் பார்த்தவனுக்கு ஏனோ இனம்புரியாத கலக்கம் உண்டானது. இதுவரை எதற்காகவும் அவளுக்காக அவனிடம் வந்து கேட்காதவள், இன்று கேட்கிறாள் என்றெண்ணியவன்,

“இதுதான் உன் முடிவா?” விஜய்.

“என்னோட விருப்பத்தைச் சொல்லிட்டேன்.  இதுக்குமேல நீங்க எடுக்கற முடிவு என்னவோ, அப்படி” மது தனது நிலையை, கண்ணில்  நீர்மல்க உரைத்தவள், அங்கிருந்து நகர எத்தனிக்க, அதற்குமேல் அவனால் அதை மறுக்க இயலாமல், “எத்தனை நாளைக்கு?”.

“தெரியலை” எனும் மதுவின் பதிலில், நிச்சயம் விஜய்யிக்கு தாளமுடியாத வருத்தம்.  ஆனால் அதற்குமேல் மதுவிடம் பேசி, மேலும் சிக்கலை உண்டு செய்ய விரும்பாமல் ஒரு முடிவிற்கு வந்திருந்தான்.

“என்னைக்குப் போகணும்னு சொல்லு.  நானே கொண்டு வந்து விடறேன்” என்றவன், மதுவிடம் எதுவும் பேசாமல், முதுகைத் திருப்பிக் கொண்டு படுத்துவிட்டான் விஜய்.

மதுவிற்கு புரிந்தே இருந்தது.  தன்னை பிரேமா அத்தையின் வீட்டில் விடுவது கணவனுக்குப் பிடிக்கவில்லை என்று.  ஆனால், அவளால் இங்கு இருந்தால் கணவனைக் காயப்படுத்தாமல் இருக்க முடியாது எனத் தோன்றியது மதுவிற்கு.

அதனைத் தவிர்க்கவும், தனது மன அழுத்தத்திலிருந்து மீளவும் இந்தப் பயணம் உதவியாக இருக்கும் என நூறு சதவீதம் மது நம்பினாள். 

ஆகையினால் தனது எண்ணம்போல அடுத்து வந்த ஒரு நாளைக் குறிப்பிட்டு, அதனை விஜய்யிடம் கூற, அவனே அவளை அங்கு அழைத்துச் சென்று விட்டிருந்தான்.

செல்லும் வழியெங்கும் அமைதியாக வந்தவன், மதுவை விட்டுவிட்டுக் கிளம்பும்போது, “டிலே பண்ணிறாம, சீக்கிரமா வந்திரு” என்றதும், மதுவிற்குமே வருத்தமாக இருந்தது.

கணவனோடு கிளம்பிவிடுவோமா என்று ஒரு கனம் யோசித்தவள், அதன்பின் சற்று சுதாரித்து, “ம்.  எப்போ அங்க வரணும்னு தோணுதோ, அப்ப நானே கால் பண்றேன்” என தனது மனதை வெளிக்காட்டாமல் சமாளித்து பேசினாள்.

விஜய்யின் நிலை மிகவும் தர்மசங்கடமானதாக இருந்தது.  மதுவைத் திருமணம் செய்தது முதலே அவளை விட்டுப் பிரிந்து வெளியில் எங்கும் சென்று வராத நிலையில், மதுவை பிரேமா அத்தையின் வீட்டில் விட்டுச் செல்வது, எதையோ இழப்பது போன்ற உணர்வை விஜய்யிக்குத் தந்தது.

அதற்குமேல் கட்டுப்படுத்த இயலாதவன், அவள் எதிர்பாரா தருணத்தில் இறுக அணைத்து விடுவித்தவன், “சீக்கிரமா வந்திரப் பாரு மது” என்றுவிட்டு, தாமதிக்காமல் சட்டென கிளம்பி காரைக்குடி வந்திருந்தான்.

கணவனது செயலில் மதுவுமே உள்ளுக்குள் உறைந்து, உடைந்து போனாள்.  ஆனால் வெளியில் காட்டிக் கொள்ளாது விடைகொடுத்திருந்தாள்.

***

வீட்டிற்கு வந்தவனை பாரி வரவேற்க, “என்ன தம்பி.  எங்க மது?” என்று கேட்க, பிரேமா வீட்டில் மதுவை விட்டு வந்த விசயத்தை விஜய் கூற,

“அப்டினா அங்க எங்க வீட்டுல கொண்டு வந்து பத்து, பதினைஞ்சு நாளைக்கு விட்ருக்கலாம்ல.  அடுத்த வீட்ல கொண்டு போயி விட்டுட்டு வந்திருக்க” என விஜய்யிடம் சண்டைக்கு வந்திருந்தார் பாரி.

“அடுத்த தடவை கேட்டான்னா, அப்ப உங்க வீட்ல கொண்டு வந்து விடறேன்கா” என்றவன், பொதுவான விசயங்கள் பேசிவிட்டு அங்கிருந்து அகன்றிருந்தான் விஜய்.

பாரி உடனே மதுவிற்கு அழைத்துவிட்டார். பிரேமாவின் வீட்டில் இருப்பவளிடம் மனம் திறந்து பாரியால் மதுவிடம் எதுவும் அப்போது கேட்க முடியவில்லை.

“உன்னைப் பாக்க நான் இங்க வந்தா, நீ வேற ஊருக்கு கிளம்பிப் போயிட்ட” என பாரி பரிகாசமாகப் பேச

“மனசே சரியில்லை.  அதான் இங்க வந்தேன்” என மதுவும் குற்ற உணர்வோடு பதில் கூறினாள்.

“எதுனாலும் நீ வீட்ல இருந்துல்ல சமாளிச்சிருக்கணும் மது.  அதவிட்டுட்டு, இப்டிக் கிளம்பிப் போனா, போட்டுப்பாக்க நினைச்சவங்களுக்கு இது தொக்காப்(வசதியாக) போயிரும்ல” என்ற பாரி, “சரி. ரெண்டு மூனு நாள்ல கிளம்பி வரப் பாரு.  நீ வரவரை நான் ஊருக்குப் போக மாட்டேன்” என அழைப்பைத் துண்டித்திருந்தார் பாரி.

***

மது வீட்டில் இல்லாததால் பெரும்பாலும் அலுவலகத்தில் பொழுதைக் கழித்தான்.  அலுவலக நேரம் தவிர இதர நேரங்களிலும், விடுமுறை நாளிலும் அலுவலகத்தில் இருந்தவனைப் பார்த்த செல்லம், “என்ன சார்.  வீட்டுல மேடம் அவங்க அம்மா வீட்டுக்குப் போயிட்டாங்களோ.  லீவு அன்னிக்கு எல்லாம் இந்தப் பக்கமா வந்திருக்கீங்க”

தன்னை பிறர் இந்தளவு கவனிப்பதை உணர்ந்ததும், “இல்லை.  இந்தப் பக்கம் ஒரு வேலையா வந்தேன்.  அதான் அப்டியே இங்க வந்தேன்” என்றுகூறி சமாளித்தான் விஜய்.

அதிக நேரம் அங்கிருக்க முடியாமல், ஆனால் வீட்டிற்கும் போகவும் பிரியமில்லாமல், மனம்போன போக்கில் சுற்றித் திரிந்தான். இரண்டு நாள்கள் வருடம்போலத் தோன்றியது விஜய்யிக்கு.

‘இவ இங்க வந்து இன்னும் ஒரு வருசமாகலை.  ஆனா, இவளை விட்டுட்டு ரெண்டு நாளைப் போக்கறது பெரும்பாடா இருக்கே’ என்பதாக இருந்தது விஜய்யின் மனம்.

மதுவை அதிகமாக மனம் தேட, தன்னைப்போல அவள் ஏன் தன்னைத் தேடாமல் இருக்கிறாள் என்னும் கேள்வி எழ, மனைவிக்கு அப்போதே அழைத்தான்.

மதுவோ அடுத்த நாள் கிளம்ப எண்ணியிருந்தாள்.  அதற்காக கணவனிடம் பேச எண்ணிக் கொண்டிருந்தவளுக்கு, கணவனே அழைத்திருந்தான்.

அழைப்பை ஏற்றவள், நல விசாரிப்பிற்குப்பின், “அண்ணி வந்திருக்காங்களாமே.  அவங்க வரது உங்களுக்குத் தெரியுந்தானே.  எங்கிட்டச் சொல்லியிருந்தா, நான் அங்கேயே இருந்திருப்பேன்” என கணவனிடம் கூற

“எல்லாத்துக்காகவும் யோசி.  ஆனா என்னைப்பத்தி மட்டும் யோசிக்காத” விஜய் சலிப்பாக கூறினான்.

“இப்ப என்ன உங்களுக்காக நான் யோசிக்கலைங்கறீங்க” மதுவும் அவனது சலிப்பான தன்மையை உணர்ந்து, சற்று இதமாகவே கேட்டாள்.

“எங்க, அதான் என்னை அம்போனு விட்டுட்டுப் போயிட்டியே!” ஆதங்கத்தோடு பேசினான் விஜய்.

“இப்டியெல்லாம் பேசக் கூடாது சொல்லிட்டேன்.   அங்க உங்க அக்கா இருக்காங்க.  வசீ இருக்கான்.  அப்புறமென்ன?” மதுவும் மனமும், உடலும் கணவனது அண்மையை எதிர்பார்க்க, ஆனால் அதைக் காட்டாமல் பேசினாள்.

“எப்ப வருவ?” விஜய்யின் நெஞ்சை உருக்கும் கேள்வியில், மது அங்கு பனியாக உருகிக் கரைந்து போனாள்.  ஆனாலும், திடமான தனது உருகலை அவனிடம் காட்டாமல் பேசினாள்.

“அண்ணி வந்திருக்கறதால சீக்கிரமாவே அங்க வரணும்னுதான் நினைச்சிட்டு இருந்தேன்” மது

தனக்காக வருவதாகக் கூறாமல், பாரிஜாதம் வந்ததை அறிந்தமையால், வீட்டிற்கு வருகிறேன் என்று சொன்ன மனைவிமீது அத்தனை கோபம் விஜய்யிக்கு.

“நான் இங்க பைத்தியகாரனா உன்னைத் தேடிட்டு இருக்கேன்.  அது புரியலை உனக்கு.  நீயென்னனா, அண்ணி, மன்னின்னு. போடீ” கோபமாக வைத்துவிட்டான் விஜய்.

***

          பாரியிடம், பஞ்சவர்ணம் தனது மனதில் தோன்றிய விசயங்களை மறவாமல் பகிர்ந்து கொண்டிருந்தார்.  அதன் மூலமாகவே தம்பிக்கும், அவள் மனைவிக்கும் இடையே ஏதோ சரியில்லை என்று கணித்தே, பாரி காரைக்குடிக்கு வந்திருந்தார்.

          மேலும், வந்து சென்றது அஞ்சனா என்பதையும் பஞ்சவர்ணம் பேச்சின் வழியே யூகித்தவருக்கு, அதற்குமேல் ஊரில் இருப்பு கொள்ளவில்லை.

          தம்பியிடம் எதையும் நேரில் கேட்கத் தயக்கம் பாரிக்கு.  பஞ்சவர்ணம் பேச்சைக் கேட்ட பாரி, “முன்னாடி என்னென்னத்தையோ எல்லாம் எங்கிட்டச் சொன்னவ, இப்ப அந்தச் சிறுக்கி வந்ததைச் சொல்லலையே.  அவளுக்கு இங்க என்ன வேலை?  அவளை நிக்க வச்சி நீயும் பேசியிருக்க.  என்ன தைரியம் அந்த ஓடு கா..க்கு” பாரி விடாமல் அஞ்சனாவை வசைபாடியதோடு, மதுவிற்கும் அடுத்து அழைத்துப் பேசினார்.

மதுவும், பிரேமாவிற்கு தெரியாத வகையில், அஞ்சனா வந்தது, தன்னிடம் பேசியது அனைத்தையும் பாரியோடு பகிர்ந்து கொண்டாள்.

          “இதையெல்லாம் உங்க தம்பிக்கிட்டச் சொன்னா, நம்ப மாட்டிங்கறாரு. நானா ஏதோ பயத்தில கற்பனையாப் பேசுறேங்கறார்.  அவ அப்டிலாம் பேசியிருக்க மாட்டானு சாதிக்கிறாரு அண்ணி.  அதுக்குமேல நான் இதைப்பத்தி பேசப் பிரியப்படலை.  அதான் இங்க வந்தேன்” என தான் பிரேமா வீட்டிற்குச் சென்றதற்கான உண்மையான காரணத்தை பாரியிடம் கூறினாள் மது.

          “அதுக்கு நீ அங்க எதுக்குடீ போகணும்.  உன் வீடு இது.  எதுனாலும் இங்க இருந்துதான் நீ சமாளிச்சிருக்கணும்.  இல்லையா, அங்க அம்மாகிட்டயோ, இல்லை என்னைத் தேடியோ வந்திருந்தா, அவனையும், உன்னையும் வச்சிப் பேசியிருக்கலாம்” பாரி.

          “நான் சீக்கிரமா அங்க கிளம்பி வரேன்ணி” என்றவள், மறுநாள் கிளம்ப எண்ணியிருந்தாள்.

          “இப்பத்தான அங்க போயிருக்க.  இன்னும் ரெண்டு நாளுனாகூட இருந்துட்டு வா.  நான் அதுவரை இருக்கேன்” என பாரி, மதுவிற்காகக் கூற,

“இல்ல அண்ணி.  நீங்க என்னைப் பாத்துப் பேசத்தான வந்திருக்கீங்க.  அப்டி இருக்கும்போது இன்னும் இரண்டு நாள் இங்க இருந்து என்ன செய்யப் போறேன். நாளைக்கு முடிஞ்சா கண்டிப்பா வந்திரேன்” என முடிவாகக் கூறிவிட்டு வைத்திருந்தாள் மது.

கணவனாகவே அழைத்து, கோபப்பட்டு வைத்திருந்தமையால், மதுவிற்கு கணவனைத் தொந்திரவு செய்ய மனமின்றி என்பதைவிட, அவனுக்கு இன்ப அதிர்ச்சி தரும் எண்ணத்தில், பிரேமா எவ்வளவோ கூறியும் கேட்காமல், காரைக்குடி நோக்கி மறுநாள் கிளம்ப எண்ணியிருந்தாள் மது.

தானொன்று நினைக்க, இறைவன் ஒன்று நினைத்திருப்பதை யாரும் அறியவில்லை.

***


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!