731feaf438df0cd4d8ee8237c9babc0e

மனதோடு மனதாக – 5

5                

ஜீவிதாவிற்கு அழைப்பதற்காக சுபத்ரா தனது மொபைலை எடுக்கவும், அதில் ஜீவிதாவிடம் இருந்து வந்திருந்த செய்தியைப் பார்த்த சுபத்ரா, கைகள் நடுங்க, அதை ஓபன் செய்து படிக்கத் துவங்கினார்..

அதை படித்து முடித்தவர், “என்னங்க ஜீவிதா நம்மளை எல்லாம் ஏமாத்திட்டு போயிட்டாங்க..” சுபத்ராவின் அலறலில், பார்த்திபன், பூரணி, திலீபன், வெண்ணிலா என அனைவரும் அவரிடம் ஓடினர்..

“சுபத்ரா.. என்ன உளறிக்கிட்டு இருக்க? கொஞ்சம் கத்தி ஊரைக் கூட்டாம இரு..” அவரது கூச்சலைக் கேட்டு பார்த்திபன் அவரிடம் எகிற,

“நான் என்ன பொய்யா சொல்றேன்? இங்கப் பாருங்க..” சுபத்ரா தனது மொபைலை அவரிடம் காட்டவும், அதில் இருந்த செய்தியைப் படித்தவர், அதிர்ந்து, தொய்ந்து அமர்ந்தார்..

உறக்கம் வராமல் புரண்டுக் கொண்டிருந்த சேகருக்கு வெளியில் சலசலப்பு சத்தம் கேட்க, மெல்ல வெளியில் வந்து எட்டிப் பார்த்தார்.. தனது கடிகாரத்தைப் பார்த்தவர், மணி இரண்டரையைத் தொட்டுக் கொண்டு நிற்கவும், அங்கு இடிந்துப் போய் அமர்ந்திருக்கவர்களைப் பார்க்க மனதில் வலி எழுந்தது.. தான் வந்த சுவடை அவர்களுக்கு உணர்த்தாமல் அமைதியாக அவர் நிற்க, அப்பொழுது சுபத்ராவின் கையில் இருந்த போனை திலீபன் பிடுங்கினான்..

‘அம்மா.. நான் காலேஜ்ல இருந்தே ஒருத்தரை லவ் பண்றேன்.. அவர் பேரு ராம்.. அவர் இப்போ வெளிநாட்டுல வேலை செய்துக்கிட்டு இருக்கார். ஜாதியைக் காரணம் காட்டி அவங்க வீட்டுல எங்க லவ்வை ஒத்துக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க. அப்பாவுக்கும் ஜாதி மாத்தி கல்யாணம் செய்யறது பிடிக்காதுன்னு எனக்குத் தெரியும்.. இப்போ இந்தக் கல்யாணம் வேண்டாம்ன்னு நான் அவ்வளவு சொல்லியும்.. மாப்பிள்ளை நல்ல இடம்ன்னு நீங்க மேல வேலையை ஆரம்பிச்சிட்டீங்க.. எனக்கு உங்ககிட்ட சொல்லவும் தைரியம் இல்ல.. அதுக்காக ராமை மறந்துட்டு வாழவும் எனக்கு முடியலைம்மா.. ராம் இல்லாத வாழ்க்கையை என்னால நினைச்சுக் கூட பார்க்க முடியல.. நான் உங்களுக்காக ஆர்யனை கல்யாணம் பண்ணிக்கிட்டா அதுக்கு அப்பறம் எங்க எல்லாரோட வாழ்க்கையும் வீணா போயிடும்.. அதனால இப்போவாவது தைரியமா முடிவு எடுக்கறேன்.. இது உங்களுக்கு அவமானம் தான்.. ஆனா.. அது கொஞ்ச நாள்ல மறைஞ்சிடும்.. எனக்கு இது வாழ்க்கை. அதுல எல்லாம் ரிஸ்க் எடுக்க முடியாது.. அது தான் நான் ராம் கூடவே போறேன்.. என்னை மன்னிருச்சிருங்கம்மா.. உங்களை எல்லாம் விட்டுட்டு போறது எனக்கு கஷ்டமா தான் இருக்கு.. ஆனா.. எனக்கு வேற வழி தெரியல.. நீங்க என்னை மன்னிச்சிட்டீங்கன்னா இந்த நம்பர்க்கு ஒரு மெசேஜ் போடுங்க.. நான் உடனே ஓடி வருவேன்.. எனக்கு நீங்களும் வேணும்.. ராமும் வேணும்மா.. சாரிம்மா.. சாரிப்பா..’ என்ற அவளது மெசேஜில் இருந்த செய்தியைப் படித்த திலீபன், கோபமாக அந்த செல்லை அவரது கையில் கொடுக்க, பார்த்தீபன் இடிந்து தலையில் கை வைத்து அமர்ந்திருக்க, அப்பொழுது சேகர் மெல்ல அங்கு வந்தான்..  

“அப்படின்னா அக்கா அதுக்குத் தான் அழுதுட்டு இருந்தாளா?” வெண்ணிலா கேட்டுக் கொண்டிருந்த நேரம்,

“என்ன ஆச்சு? ஏன் எல்லாரும் இப்படி உட்கார்ந்து இருக்கீங்க?” என்ற சேகரின் குரல் கேட்க, அனைவருமே தூக்கிவாரிப் போட்டு குரல் வந்த திசையைத் திரும்பிப் பார்த்தனர்..

அங்கு நின்றுக் கொண்டிருந்த சேகரைப் பார்த்த பார்த்திபன் அவசரமாக எழுந்து நிற்க, “பெரியம்மா அழாதீங்க பெரியம்மா.. அக்கா திரும்ப வந்திருவா..” என்று அந்த வார்த்தையையே வெண்ணிலா சொல்லிக் கொண்டிருக்க, மீண்டும் அனைவரையும் பார்த்து சேகர் அதையேக் கேட்கவும், பார்த்திபன் செயலற்று போய் சுபத்ராவைத் திரும்பிப் பார்த்தார்..

“சொல்லிடுங்க.. அவங்ககிட்ட உண்மையைச் சொல்லிடுங்க.. நாம வேற என்ன செய்யறது? அவளை அருமை பெருமையா பெத்து வளர்த்ததுக்கு நம்மளை எல்லாம் இப்படி தலை குனிய செஞ்சிட்டாளே. அவங்க கிட்ட சொல்லித் தானே ஆகணும்…” சுபத்ரா கண்ணீருடன் சொல்லவும், சேகர் பார்த்தீபனைப் பார்க்க, ஒரு பெருமூச்சுடன், பார்த்தீபன் ஜீவிதா காணாமல் போன விஷயத்தைச் சொல்லி முடித்தார்..  

“என்னங்க? என்ன சொல்றீங்க? இன்னும் ரெண்டு மணி நேரத்துல முஹுர்த்தத்தை வச்சிக்கிட்டு இப்படி சொல்லிட்டு இருக்கீங்க? எங்க போனாங்க?” சேகர் அதிர்ச்சியுடன் கேட்பது போலக் கேட்க, பார்த்திபன் தலைக்குனிந்து நின்றார்..

“எங்களுக்கு இந்த விஷயமே இப்போ தாங்க தெரியும்.. நாங்களும் இப்போ என்ன செய்யறதுன்னே தெரியாம தான் உட்கார்ந்து இருக்கோம்.. எங்களை மன்னிச்சிருங்க..” கண்ணீருடன் பூரணி கையெடுத்துக் கும்பிட்டுச் சொல்லவும், 

“இப்போ என்ன செய்யறது? எங்க போனாங்க என்ன ஆனாங்கன்னு ஏதாவது தெரியுமா? இப்போ இந்தக் கல்யாணம் நடக்காதா? எங்க அக்கா இதை எல்லாம் எப்படி தாங்கப் போறாங்க? இந்தக் கல்யாணத்தைப் பார்க்க அவ எவ்வளவு ஏங்கி காத்து இருந்தா தெரியுமா?” என்று கேட்ட சேகரின் கையைப் பிடித்துக் கொண்ட பார்த்தீபன்,

“எங்களுக்கும் என்ன செய்யறதுன்னே தெரியல தம்பி.. எங்களை எல்லாம் இப்படி ஒரு இக்கட்டான நிலைமையில நிக்க வச்சிட்டுப் போயிட்டாளே இந்தப் பொண்ணு.. எங்க கிட்ட ஒரு வார்த்தை சொல்லக் கூட அவளுக்குத் தோணலையே..” கண்ணீருடன் மனம் நொந்துக் கொண்டவர்,

“வாங்க.. நானே சம்பந்தியம்மா கிட்ட பேசறேன்.. அவங்ககிட்ட மன்னிப்பு கேட்கறேன்.. எனக்கு இதைத் தவிர வேற வழியே தெரியல.. சந்தோஷமா கல்யாணம் பண்ணித் தரலாம்ன்னு நினைச்சு நாங்க கண்ட கனவுல மொத்தமா மண்ணள்ளிப் போட்டுட்டாளே..” அவமானத்துடன் கூறிய பார்த்திபன்,

“வா.. நாம அவங்கக்கிட்ட பேசி மன்னிப்பு கேட்டுட்டு வரலாம்.. உறவுக்காரங்க எல்லாம் முழிக்கிறதுக்குள்ள அதை செஞ்சிட்டு மண்டபத்தை காலி செய்யலாம் வா..” என்றவர், சுபத்ராவின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு, வேகமாக பிருந்தா இருந்த அறைக்குச் சென்றார்..

“குட்டி. நீ ரூம்ல போய் இரு.. அங்க வர வேண்டாம்..” தங்களுடன் வந்த வெண்ணிலாவை தடுத்த பூரணி சொல்லிவிட்டு, அழுது கரைந்துக் கொண்டிருந்த தனது தமக்கையுடன் ஓடினார்.

பிருந்தா இருந்த அறைக்கதவைத் தட்டிவிட்டு பார்த்திபன் காத்திருக்க, “ஏங்க என்னங்க பண்றீங்க? இப்போ அக்காவை எழுப்பி என்ன சொல்லப் போறீங்க?” சேகர் பதட்டமாகக் கேட்க,

“வேற என்னங்க சொல்லப் போறோம்? நேரம் கடத்தாம அவங்கக்கிட்ட உண்மையைச் சொல்றது தானே நல்லது. உறவுக்காரங்க எல்லாம் முழிச்சா இன்னும் பிரச்சனை பெருசா போயிடும்.. ஆளுக்கு ஒண்ணா பேசி எதாவது பெருசு பண்ணிடுவாங்க.. எங்களுக்கு என்ன செய்யறதுன்னே புரியலையே.. அவங்க கிட்ட சொல்லித் தானே ஆகணும்?” பார்த்திபனின் கண்ணீரில், சேகர் அவரது தோளைத் தட்டிக் கொடுத்தான்..

“அவங்க செஞ்சத் தப்புக்கு நீங்க என்ன செய்வீங்க? அழாதீங்கண்ணா. நாம கண்டிப்பா ஏதாவது செய்யலாம்.. சேர்ந்தே சமாளிப்போம்..” சேகர் ஆறுதலாகச் சொல்வது போல இருந்தாலும், அவரது கண்களிலும் கண்ணீர் வழிந்தது.. பெற்றவர்களின் கண்ணீர் அவரையும் அசைத்துப் பார்த்தது..

தனது அக்கா இதை எப்படி எதிர்கொள்ளப் போகிறாள் என்ற கவலையுடன், அடுத்து என்ன என்று குழப்பமும் சேர்ந்து அவன் பதட்டத்துடன் நிற்க, “யாரு இந்த நேரத்துல கதவைத் தட்டறது?” நேரத்திலேயே கண் விழித்து, திருமணத்திற்கு தயாராகிக் கொண்டிருந்த பிருந்தா, கேட்டுக் கொண்டே கதவைத் திறக்க, அங்கு, அந்த நேரத்தில், கண்ணீருடன் நின்றிருந்த அனைவரையும் பார்த்து அவருக்கு பதட்டம் தொற்றிக் கொண்டது..

“என்ன? என்ன ஆச்சு? ஏன் எல்லாரும் இப்படி இருக்கீங்க? மணியாகுது.. இன்னும் யாரும் ரெடி ஆகலையா? ரெடி ஆகாம ஏன் நீங்க அழுதுட்டு இருக்கீங்க?” பிருந்தா கேட்கக் கேட்க, அவரது குரலில் நடுக்கம் பிறந்தது..

அவரது குரலை இனம் கண்ட சேகர், “அக்கா.. ஒண்ணும் இல்லக்கா.. நீ கொஞ்சம் பதறாம இரு. கொஞ்சம் பொறுமையா அவங்க சொல்றதைக் கேளு..” மெல்ல அவரை ஒரு சேரில் அமர வைத்து அமைதிப்படுத்திய சேகர், பார்த்திபனைப் பார்த்துவிட்டு,

“அக்கா.. ஜீவிதாவைக் காணல.. மண்டபத்துல எங்கத் தேடியும் கிடைக்கல..” என்று விஷயத்தை உடைக்க, பிருந்தா அதிர்ந்து போனார்..

“என்னடா? என்ன சொல்ற? காணலைன்னா? யாரவது கடத்திட்டாங்களா?” அதிர்ச்சியுடன் பிருந்தா கேட்க,

“இல்ல.. இல்ல.. அவளை யாரும் கடத்தல.. எங்களை மன்னிச்சிடுங்க சம்மந்தியம்மா.. எங்களை மன்னிச்சிடுங்க.. இதைத் தவிர நாங்க இப்போ என்ன சொல்றதுன்னே தெரியல..” சுபத்ரா கையெடுத்துக் கும்பிட, பிருந்தா புரியாத குழப்பத்துடன் சேகரைப் பார்க்க,

“என்னங்க? என்ன சொல்றீங்க? இப்போ எதுக்கு மன்னிப்பு கேட்கறீங்க? என்ன விஷயம்ன்னு சொல்லுங்க.. எனக்கு நெஞ்சு படபடக்குது..” படபடப்பாக விஷ்ணுப்ரியா கேட்க,

“இல்லங்க.. ஜீவிதா எங்களை எல்லாம் ஏமாத்திட்டு அவளுக்கு  பிடிச்சவனோட போயிட்டா.. அவங்க அம்மாவோட செல்லுக்கு மெசேஜ் அனுப்பி இருக்கா.. யாரையோ லவ் பண்றாளாம்.. அவன் கூட போறேன்னு போயிட்டா..” பார்த்திபன் தலைகுனிந்து சொல்ல, விஷ்ணுப்ரியா அதிர்ந்து தனது கணவரைப் பார்க்க, பிருந்தா தலையில் அடித்துக் கொண்டு அழத் துவங்கினார்..

“அப்போ. அப்போ.. நம்ம ஆரியோட கல்யாணம் நடக்காதா சேகர்?” முதலில் தனது தம்பியிடம் கேட்டவர், சேகர் இல்லை என்று மறுப்பாக தலையசைக்கவும்,

“ஹையோ.. என் பையனோட கல்யாணம் இப்படியா பாதியில நின்னு போகணும்? இப்போ நான் என்ன செய்யப் போறேன்? என் பையனோட கல்யாணத்தை பார்க்க நான் ஆசை ஆசையா காத்துக்கிட்டு இருந்தேனே.. இப்போ இப்படி ஆகிப் போச்சே..” என்று கதற,

“அக்கா.. அழாதேக்கா.. கொஞ்சம் அமைதியா இரு..” சேகர் அமைதிப்படுத்தி, அவரைக் தோளோடு அணைத்துக் கொண்டான்.  

“என்னடா இப்போ வந்து இப்படிச் சொல்றாங்க? அவனை கல்யாணக் கோலத்துல பார்க்கணும்ன்னு நான் எவ்வளவு நாள் ஆசைப்பட்டு, எதிர்ப்பார்த்து, கனவோட காத்துக்கிட்டு இருந்தேன்னு உனக்கே தெரியுமே.. இப்படி அந்தப் பொண்ணு என்னோட ஆசையில எல்லாம் மண்ணை அள்ளி கொட்டிட்டு போயிட்டாளே.. நான் என்ன செய்வேன்?” பிருந்தாவின் புலம்பலில், சேகர் அவரது தலையை வருடிக் கொடுக்க,

“ஏன் சேகர்? ஒருத்தனை விரும்பினா அதை முன்னாலேயே தெரிஞ்சிக்க மாட்டாங்களா? இல்ல அவ சொல்ல மாட்டாளாடா? இப்படித் தான் கடைசி நிமிஷத்துல கல்யாண மண்டபம் வர வச்சு நம்ம ஆரி மூஞ்சியில கரிய பூசுவாங்களா? அவன் மனசு என்ன பாடுபடும்? அவன் ஆபிஸ் ஆளுங்களுக்கு அவன் என்ன பதில் சொல்லுவான்? அவன் ரொம்ப நல்ல பையன்டா. யாருக்கும் எந்த கெடுதலும் செஞ்சது இல்லையே.. அவனுக்கா இப்படி எல்லாம் நடக்கணும்? நான் என்னடா செய்வேன்? அவனுக்கு இந்த விஷயம் தெரியுமா? சொன்னா தாங்குவானா?” சேகரிடம் அரற்றியவர்,

“இல்ல நாம நம்ம சொந்தக்காரங்களுக்கு என்னடா பதில் சொல்லறது? நம்ம கிராமத்துல பொண்ணு ஓடிப் போயிட்டான்னு சொன்னா, நம்ம ஆரி மேல தானே ஏதோ குறை இருக்குன்னு சொல்லுவாங்க.. அவனுக்கு வேற யாரு பொண்ணு கொடுப்பா சேகர்? அப்போ என் பையனுக்கு கல்யாணமே நடக்காதா? அவன் இப்படித் தான் காலம் முழுசும் இருக்கனுமா? என்னோட கனவு எல்லாம் கனவாவே போயிடுமாடா? கடைசி நிமிஷத்துல இப்படி ஆகிடுச்சேடா.” பிருந்தா கண்ணீரில் கரைய, சேகர் அவரது தோளைத் தட்டிக் கொடுத்து,

“என்னக்கா செய்யறது? தனியா இருக்கணும்ன்னு தான் ஆரியோட விதி போல.. அவன் அப்படியே அவமானத்துல கூனிக் குறுகி போகாம இருக்கணுமே.. அவன் ஆபிஸ்ல நாலு பேர் நாலு விதமா பேசறதைக் கேட்டு அவன் வீட்டுக்குள்ள முடங்கிடுவானோன்னு எனக்கு பயமா இருக்குக்கா.. நம்ம ஆரி இதை எல்லாம் எப்படித் தாங்கப் போறான்? எனக்கு அவனை நினைச்சா தான் ரொம்ப பயமா இருக்கு. கல்யாணமே வேண்டாம்.. வேண்டாம்ன்னு சொல்லிட்டு இருந்தவன், ஏதோ மனசு வந்து இந்தக் கல்யாணத்துக்கு சம்மதிச்சான்.. இப்போ இது நின்னுப் போச்சுன்னா அவன் பிடி கொடுக்கவே மாட்டான்.. மறுபடியும் கல்யாணமே வேண்டாம்ன்னு சொல்லிடுவான் போல இருக்கே..” சேகர் மனதினில் எடுத்த முடிவுடன் புலம்புவது போல புலம்ப, பார்த்திபனும், சுபத்ராவும் பதில் பேச முடியாமல் நின்றனர்..

“இன்னும் கொஞ்ச நேரத்துல உறவுக்காரங்க எல்லாம் கிளம்பி வந்திடுவாங்க.. இப்போ நாம என்ன செய்யறது? அவங்கக்கிட்ட நாம என்ன சொல்றது? கல்யாணத்துக்குன்னு வந்த பையன இப்படி தனிமரமா கூட்டிட்டு போகப் போறோமேன்னு மனசு வலிக்குது.. வீட்டை எல்லாம் அந்தப் பொண்ணோட வரவுக்கு எவ்வளவு ரெடி பண்ணி வச்சிருக்கு? இப்போ எல்லாமே போச்சே..” என்று கதறிய பிருந்தா..

“அவன் இப்படியே தனிமரமா நிக்கணும்ன்னு தான் அவனுக்கு விதி இருக்கு போல… எல்லாம் நான் செய்த பாவம்.. எல்லாம் நான் வாங்கிட்டு வந்த வரம்.. நம்ம ஆரிக்கா இந்த நிலைமை?” அவர் புலம்பிக் கொண்டிருக்க, தங்கள் மீதே பழியைப் போட்டுக்கொண்டு, தங்களிடம் சண்டை கூடப் போடாமல், தாங்களே கூனிக் குறுகி கதறிக் கொண்டிருந்தவர்களைப் பார்த்த பார்த்திபனுக்கு அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமாய் மனதிற்குத் தோன்றியது..  

என்ன செய்வது என்று யோசித்தவருக்கு, அங்கு நின்று சுபத்ராவை சமாதானப்படுத்திக் கொண்டிருந்த பூரணி கண்ணில்பட, அவருக்கு ஒரு யோசனைத் தோன்றியது.. தங்கள் மகள் செய்ததற்கு பரிகாரமாயும் இருக்கும் என்று நினைத்தவர், “இல்லைங்க.. இந்தக் கல்யாணம் நிக்காது.. நான் சொல்றேன்.. குறிச்ச அதே முஹுர்த்தத்துல, இன்னைக்கே இந்த கல்யாணம் நடக்கும்..” உறுதியாக குரலை உயர்த்திச் சொல்லவும், அங்கு ஊசி விழுந்தால் கூட கேட்கும் அளவிற்கு அமைதி..

அனைவருமே அதிர்ச்சியில் இருக்க, “அப்பா என்ன சொல்றீங்க? இப்போ போய் ஜீவியை தேடிப் பிடிச்சு கூட்டிட்டு வரப் போறீங்களா? அவ தான் நம்மளை எல்லாம் வேண்டாம்ன்னு யாரோடவோ போயிட்டாளே..” திலீபன் அதிர்ச்சியாகக் கேட்க, அவனைப் பார்த்து மறுப்பாகத் தலையசைத்தவர், சுபத்ராவைப் பார்த்துவிட்டு, பூரணியையும் ஒரு பார்வைப் பார்த்தவர்,

“என்னோட சின்ன மக வெண்ணிலாவை, இதே முஹுர்த்தத்துல நான் உங்க பையனுக்கு கல்யாணம் செஞ்சுத் தரேன்.. இதே மண்டபத்துல இந்தக் கல்யாணம் நடக்கும்.. அதே சீரோடும் சிறப்போடும் செஞ்சுத் தருவேன்..” உறுதியாக பார்த்தீபன் கூறவும், மீண்டும் அனைவருக்குமே அதிர்ச்சி..

“என்னங்க அவ சின்னப் பொண்ணுங்க.. இப்போ தான் இருபது வயசு ஆகுது..” பதட்டத்துடன் சுபத்ரா சொல்ல, பூரணி,

“மாமா.. என்ன மாமா சொல்றீங்க? அவ இன்னும் படிப்பைக் கூட முடிக்கலையே.. அவளுக்கு ஒரு வேலையும் செய்யத் தெரியாது மாமா. அவ குழந்தை..” படபடத்துப் போனார்..

சுபத்ராவைப் பார்த்துவிட்டு, பூரணியைப் பார்த்து கையெடுத்து கும்பிட்ட பார்த்திபன், “பூரணி.. எங்களை இந்தத் தலைகுனிவுல இருந்து நீ தான்மா காப்பாத்தணும்.. வெண்ணிலாவை நான் என் பொண்ணா தான் பார்க்கறேன்.. சுபத்ராவும் அப்படி தான் பார்க்கறா.. ஜீவிதா வேற வெண்ணிலா வேறன்னு நாங்க பார்க்கல.. இப்போ எனக்கு வேற வழி தெரியல பூரணி.. எங்களை இந்த இக்கட்டுல இருந்து காப்பாத்தும்மா.. உன்னை கையெடுத்து கும்பிட்டுக் கேட்டுக்கறேன்..” எனவும், என்றுமே தலை நிமிர்ந்து, கம்பீரமாக பார்த்த தனது அக்காவின் கணவர், இப்பொழுது கூனிக்குறுகி தன்னிடம் உதவி கேட்பதை பார்த்த பூரணி தவித்துப் போனார்..

தான் நிராதவராக நின்ற நாட்களில், தனக்கு தோள் கொடுத்து, தனக்குத் துணையாய், தான் ஒரு வேலைக்குச் சேர்ந்து கால் ஊனும் வரை அவர் செய்த உதவி அளப்பரியது.. பணத்தினால் அல்லாமல், மனதளவில் பூரணியை வாழ்வை எதிர்கொள்ளத் தயார் செய்த அந்த மாமனிதர் இன்று இப்படி நிற்பதை பார்க்க பூரணி தவித்துப் போனார்..

தந்தை இல்லாத குறையே தெரியாத அளவு, வெண்ணிலாவிற்கு, அன்னையாய் தந்தையாய் இருவருமே பார்த்துப் பார்த்து இன்றளவும் செய்துக் கொண்டிருக்கின்றனர்..

ஜீவிதாவின் திருமணத்திற்குக் கூட, வெண்ணிலாவிற்கு விலையுயர்ந்த பட்டுப்புடவையும், ரிசப்ஷனுக்கு ஜீவிதாவிற்கு சமமாக அழகான காக்ரா சோலியையும் பார்த்துப் பார்த்து ஆசையாக எடுத்திருந்தனர்.. அப்படி அவள் மீது அன்பையே வைத்திருந்தவர்கள், இப்படி கேட்கவும், பூரணி கண்ணீருடன் அவரது கையைப் பிடித்துக் கொண்டார்..

“என்ன மாமா இப்படி எல்லாம் கேட்கறீங்க? அவ உங்க பொண்ணு மாமா.. நீங்க அவளுக்கு நல்லதைத் தான் செய்வீங்க.. அவ விஷயத்துல எந்த முடிவு எடுக்கவும் உங்களுக்கு உரிமை இருக்கு மாமா.. இப்படி இனிமே கேட்காதீங்க..” கண்ணீருடன் பூரணி சொல்லிவிடவும்,   

“சித்தி.. என்ன சொல்றீங்க.. அவ சின்னப் பொண்ணு..” திலீபன் பூரணியை இடையிட,

“தம்பி.. எனக்கு கல்யாணம் ஆகும்போதும் அதே வயசு தான்.. நான் கல்யாணம் பண்ணிக்கிட்டு குடும்பம் நடத்தலையா? எல்லாம் கல்யாணம்ன்னு ஆனா பழகிப்பா.. அவளைப் பார்த்தாலும் நல்லப் பொண்ணு போல தான் இருக்கா.. என் தம்பியும் அவளைப் புரிஞ்சு நல்லா பார்த்துப்பான்.. கவலைப்படாதீங்க..” விஷ்ணுப்ரியாவின் பதிலில், பிருந்தா கண்ணீருடன் அவளைப் பார்த்து,

“பொண்ணு மாறினாலும் அவனுக்கு அவமானம் தானே.. அவன் என்ன ஏதுன்னு எல்லாருக்கும் சொல்லுவான்?” அவர் கேட்ட கேள்வியில்,

‘ஹையோ இந்த அக்கா காரியத்தையே கெடுத்திருவாங்க போல இருக்கே.. அவன் என்னடான்னா ஜீவிதா எனக்கு செட் ஆக மாட்டான்னு அவ முகத்துக்கு நேராவே சொல்றான்.. வெண்ணிலாவுக்கு எச்சில் கையாள ஸ்வீட் பிடிக்குமான்னு கேட்டுத் தரான்.. நம்ம மாப்பிள்ளையை விட்டா இதுக்கும் மேல பிடிக்க முடியாது.. அவனை அமுக்கிருவோம்.. அவனுக்கு வெண்ணிலாவை ஏதோ லைட்டா பிடிச்சிருக்குன்னு நினைக்கிறேன்.. அது கண்டிப்பா காதலா மாறி அவங்க சந்தோஷமா இருப்பாங்கன்னு எனக்குத் தோணுது.. அதை செஞ்சிடுவோம்.. என் மாப்பிள்ளை மேல எனக்கு நம்பிக்கை இருக்கு..’ மனதினில் பேசிக் கொண்டிருந்தவன்,

“என்னங்க அம்மா கேட்கறாங்க இல்ல.. பதில் பேசாம நின்னுட்டு இருகீங்க?” விஷ்ணுப்ரியா அவனைப் பிடித்து உலுக்க,

“நம்ம சொந்தக்காரங்கள்ள பாதி பேருக்கு மேல இன்னும் கல்யாண பொண்ணைப் பார்த்தது இல்லக்கா.. அதனால அது எல்லாம் பிரச்சனை இல்ல.. ஆரி ஆபீஸ் ஆளுங்களுக்கும் பொண்ணு யாருன்னு தெரியாது இல்ல.. அதுலயும் பிரச்சனை இல்ல.. இப்போ ஆரி இதுக்கு சம்மதிக்கணுமே..” சேகர் யோசனையுடன் சொல்ல,  

“அதை நான் பார்த்துக்கறேன்டா.. நான் சொல்றேன்.. அவன் கேட்டுப்பான்..” என்ற பிருந்தா எழுந்துக் கொண்டு,

“நீங்க பொண்ணை ரெடி பண்ணுங்க.. நான் என் பையனைப் பார்க்கறேன்.. சேகர்.. நீ கல்யாணத்துக்கு தயாராகு.. விஷ்ணு.. நீயும் கவினும் ரெடி ஆகுங்க.. இன்னும் கொஞ்ச நேரத்துல சொந்தக்காரங்க எல்லாம் வந்திருவாங்க.. அவங்களுக்கு இது எதுவும் தெரிய வேண்டாம்.. மண்டபத்துல ஒருவேளை சலசலப்பு எழுந்தாலும், யாரும் எதுவும் கண்டுக்காம வேலையைப் பாருங்க..” படபடவென்று சொன்னவர், எழுந்து நின்றார்..  

“இந்த விஷயத்தை பெருசு பண்ணாம சண்டைப் போடாம இருந்ததுக்கு ரொம்ப நன்றிங்கம்மா.. இதோ நாங்க எங்க பொண்ணை ரெடி செய்யறோம்.. நீங்க மாப்பிள்ளைக்கிட்ட பதமா பேசிடுங்க.. முஹுர்த்தத்துக்கு நேரமாச்சு..” என்ற பார்த்திபன், அவரைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட, அவரது கையைப் பிடித்துக் கொண்ட பிருந்தா,

“இந்தக் கல்யாணத்துல நம்ம ரெண்டு வீட்டோட மானம் மரியாதை எல்லாம் அடங்கி இருக்கு.. அதனால கையெடுத்து எல்லாம் கும்பிட வேண்டாம்.. மேல ஆகவேண்டிய காரியத்தைப் பாருங்க.. நேரமாகுது..” என்று சொல்லிவிடவும், மீண்டும் அவருக்கு நன்றி தெரிவித்த பார்த்திபன்,

“என்ன அப்படியே நின்னுட்டு இருக்க சுபத்ரா.. போ.. போய் வெண்ணிலாவ ரெடி பண்ணு.. பூரணி.. நீயும் போ..” என்று கூறிவிட்டு,

“நீ போய் ரெடி ஆகுடா திலீபா..” அவனையும் விரட்டி விட்டு,

“ரொம்ப நன்றிங்க சம்மந்திம்மா..” என்று விட்டு அங்கிருந்து வேகமாக விலகிச் செல்ல, தொப்பென்று கட்டிலில் பிருந்தா அமர்ந்தார்..  


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!