மழைத்துளி-3

IMG-20210619-WA0109-1c990c93

மழைத்துளி-3

திவ்யபாரதி சொடக்கிட்டு அழைத்ததில் அந்தக் காதலர்கள் இருவரும்
பிரிந்தனர். அவர்கள் எழ திவ்யாவிற்கு கொஞ்சம் இருந்த
வெளிச்சத்தில் கணிக்க முடிந்தது. அந்தப் பையனிற்கு 22 வயதிருக்கும்
என்பதை கணக்கிட்டவள், பெண்ணின் பள்ளி சீருடையைக் கண்டு
கொதித்துவிட்டாள். அவள் 15, 16 வயது சிறுமி போலத் தெரிந்தாள்.
இருவரும் எழ சிறுமியின் கன்னத்தில் யோசிக்காமல், ‘பளார்’ என்று அறைந்துவிட்டாள் திவ்யபாரதி.

“ஹலோ! யாரு நீ?” என்று பேச வந்தவனையும் அறைந்தாள். இங்கு
அறை விழுந்த சத்தத்தில் அனைவரும் எழுந்து வந்தனர்.

“என்னடா ஹீரோயிசமா?” என்று எச்சரிக்கும் குரலில் வினவியவள்
பெண்ணிடம் திரும்பி, “ஸ்பெஷல் கிளாஸ்னு வீட்ல பொய் சொல்லிட்டு
வரச் சொன்னானா?” திவ்யபாரதி வினவ அந்தச் சிறுமியோ
திவ்யபாரதி விட்ட அறையில் பொறிகலங்கி நின்றிருந்தாள்.

“உன்னைத்தான் கேக்கறேன்” திவ்யபாரதி அதட்ட சிறுமியின் தலை,
‘ஆம்’ என்பதுபோல அசைந்தது.

அந்தப் பையனிடம் திரும்பியவள், “இப்ப நீ கிளம்பல இப்பவே
உன்னைப் போலீஸ்ல புடிச்சு குடுத்திடுவேன். போக்சோ சட்டத்துல
என்ன தண்டனை தெரியும்ல?” என்று திவ்யபாரதி மிரட்ட, அவனோ
ஏற்கனவே பின்னால் நின்றிருந்த வசீகரனைப் பார்த்துவிட்டான்.
அவரைத் தெரியாதவர் உண்டோ. அவள் மிரட்டிய தொணியிலும்
வசீகரனைப் பார்த்ததிலும் ஓடியேவிட்டான்.

“உன் வீடு எங்கிருக்கு?” திவ்யபாரதி வினவ, “அக்கா வேணாக்கா…”
என்று அழ ஆரம்பித்தாள் சிறுமி.

“நாங்க எதுவும் சொல்லமாட்டோம்… உன்னை வந்து கூட்டிட்டுப் போகச்
சொல்லுவோம். அவ்வளவுதான்” திவ்யபாரதி கேட்க, சிறுமியோ
அழுதுகொண்டே பெற்றோரின் எண்ணைத் தந்தாள்.

வசீகரன் இந்திராவின் அலைபேசியில் அழைத்து பக்குவமாகப் பேசி
வரவழைக்க திவ்யபாரதியோ சிறுமியிடம் பேசிக்கொண்டிருந்தாள்.
“இந்த வயசுல இதெல்லாம் வரத்தான் செய்யும். 21 வயது வரைக்கும் நீ
இதுதான் சரி தப்புன்னு பிரிச்சு பாத்து… வர்ற டிஸ்ட்ராக்ஷன் எல்லாம்
தாண்டி வந்துட்டா… நீ அதுக்கு அப்புறம் யாரு வந்தாலும் உன் கேரக்டர
மாத்திக்க மாட்ட”, என்றவள், “உன்னை இப்படி தனியா கூட்டிட்டு
வர்றவன் நல்லவனா. உன்னை அவன் உண்மையா லவ் பண்ணி
இருந்தா உன் வயசைப் பாத்து தள்ளி நின்னிருப்பான். அவன்கிட்ட
இருந்து நீ தப்பிச்சுட்ட. உன் அக்காவா நினைச்சு சொல்றேன். சரியா”
என்று திவ்யபாரதி சொல்ல சிறுமியோ தலையை ஆட்டியபடி
நின்றிருந்தாள்.

“உன்னை அவன் மறுபடியும் கான்டாக்ட் பண்ணா அம்மா, அப்பாக்கிட்ட
சொல்லு. இல்லினா என்கிட்ட சொல்லு…” என்று திவ்யபாரதி சொல்ல,
“உங்க நம்பர் க்கா?” என்று வினவ, அவளிடம் தன் எண்ணைப் பகிர்ந்து
மேலும் சிலது பேச, சிறுமியின் பெற்றோரும் வந்தனர். அந்தச்
சிறுமியின் தந்தை பெண்ணை அடிக்க வர, திவ்யபாரதியோ அவளைத்
தன் பின் மறைத்துக்கொண்டாள். வசீகரனும் சிறுமியின் தந்தையைத்
தடுத்து சமாதானம் செய்து பெற்றோருக்கும் பதினைந்து வயது பெண்
குழந்தையின் தகப்பனாய் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தார்.
அந்தச் சிறுமி போகும்போது திவ்யபாரதியைக் கண்டு புன்னகைத்தது
அவளிற்கு அத்தனை நிம்மதியாய் இருந்தது.

அதே நேரம் கார்த்தியின் காதலி காவ்யா அங்கு வந்து சேர்ந்தாள்
அவர்களைப் பார்க்க. வந்தவள் என்னவென்று விசாரிக்க,
அனைத்தையும் பல்கிஸ் சொல்ல திவ்யபாரதியை ஒரு அர்த்தப்
பார்வை மட்டுமே பார்த்தாள் காவ்யா. இருவரும் நாலரை
வருடங்களாகத் தோழிகள் அல்லவா! பார்வை பரிமாற்றங்களே
போதுமானதாக இருந்தது.

ஒரு வருடத்திற்கு முன்பு திவ்யபாரதியின் மூலமாக ஏற்பட்டதே கார்த்தி-
காவ்யாவின் காதல். திவ்யபாரதி எதையோ மறைப்பது புரிந்தாலும்
இன்றுவரை அவளிடம் கேட்டதில்லை கார்த்தியும் பல்கிஸும்.
காவ்யாவிடம் ஒருமுறை கார்த்தி கேட்க, “அதெல்லாம் திவ்யாவே
மறந்துட்டா. இனி அது யாருக்கும் தெரிஞ்சு எந்த யூஸும் இல்ல”
என்றவளிடம் அதற்கு மேலும் அவன் வற்புறுத்தவில்லை.

“இப்படி இருக்க நீ,,, ஏன் அவன்கிட்ட ஏமாந்த?” என்று எங்கிருந்தோ வந்த
குற்றம்சாட்டும் குரலில் திவ்யபாரதி சட்டென திரும்பிப் பார்த்தாள்.
யாரோ ஒருவன் யாரிடமோ அலைபேசியில் பேசியபடியே சென்று
கொண்டிருந்தான். ஏதோ அவன் தன்னிடமே அந்தக் கேள்வியைக்
கேட்டதுபோல திவ்யபாரதி உணர உள்ளுக்குள் மருகினாள்.
தங்களுக்குள் பேசியபடி இருந்தவர்கள் இவளை கவனிக்கவில்லை.
ஆனால், அவளை கவனித்துக் கொண்டிருந்த இந்திராவோ
திவ்யபாரதியின் கையை அழுத்திக்கொடுக்க நிகழ்காலத்திற்கு
வந்தவள் புன்னகையை உதிர்த்தாள்.

ஆனாலும், அவள் நிம்மதியாக இருக்கக்கூடாது என்று வானிலை மாறி
மேகங்கள் கூடியது. மழை தூர ஆரம்பிக்க அவளுடைய கண்களில்
அவள் மறக்கலாம் என்று நினைக்கும் சில கொடூரமான சம்பவங்களை,
இந்த மழை மீண்டும் கண்முன் கொண்டுவந்து காட்ட, அவளின் உடலும்
உள்ளமும் நடுங்க ஆரம்பித்தது. தன்னுடைய மொத்த பலமும் இழந்து
ஒரு பாதுகாப்பற்ற உணர்வை அவள் உணர, அவளை நன்கு அறிந்த
இந்திராவோ அவளை எழுப்பினார். அவளது நிலையைப் பார்த்த
காவ்யாவும் அவளை வந்து பிடிக்க வசீகரன் போய் தனது இன்னோவா
காரை எடுக்க அவளை அணைத்தபடியே அழைத்து வந்த இந்திரா
அவளைக் காரின் நடுவில் ஏற்றிக்கொள்ள… பல்கிஸ்
முன்னிருக்கையில் அமர்ந்தாள். கார்த்திக்கேயனும் காவ்யாவும்
பின்னிருக்கைக்கு ஏறினர்.

மழை வலுக்க ஆரம்பித்து இடியை முழக்க,,, இடியின் சத்தத்தைக் கேட்ட
திவ்யபாரதியோ காதுகளை அடைத்துக்கொண்டு இந்திராவின் மேல்
சாய்ந்தபடியே பயந்து நடுங்க ஆரம்பிக்க கார்த்திக்கும் பல்கிஸிற்கும்
ஒன்றுமே புரியவில்லை. திவ்யபாரதிக்கு பயம்கொள்ளத் தெரியுமா
என்றிருந்தது அவர்களுக்கு. காரணம் அவள் பயந்து அவர்கள்
பார்த்ததே இல்லையே. தன் பெயரில் உள்ள பாரதியைப் போல
எப்போதும் இருப்பவள், பயப்பதைக் கண்ட இருவருமே வாயடைத்துப்
போயினர். தைரியத்தைக் காட்டும் முகத்தைக் கண்டு வந்தவர்களுக்கு
இம்முகம் குழப்பத்தைத் தந்தது.

சிறிது நேரத்திற்கு முன் ஆன் செய்திருந்த இந்திராவின் அலைபேசி
அடிக்க அதை எடுத்துப் பார்த்தார். உயிர்ப்பித்துக் காதில் வைத்தவர்,
“சதீஷ்… நாங்க திவ்யாவைக் கூட்டிட்டு வந்துட்டு இருக்கோம்” என்று
அவர்கள் சொல்ல அப்போதுதான் எதிரில் இருந்தவனுக்கு உயிரே
வந்தது.

“ஓகே மேம். ஃபோன் ஸ்விட்ச்ட் ஆஃப்னு வந்தது. தாத்தா
பயந்துட்டாரு அதான் உங்களுக்கு கால் பண்ணேன்” என்றவனின்
குரலிலும் பதட்டம் இருந்ததை இந்திராவால் உணர முடிந்தது.

“இல்ல இல்ல. எங்ககூடத் தான் இருக்கா. நாங்க வீட்டுக்கு வந்து
விட்டுட்டு போறோம்” என்று இந்திரா சொல்ல அவனும் அந்தப்பக்கம்
ஃபோனை வைத்தான்.

அசோக் நகர் வந்தடைய அவர்களது அப்பார்ட்மெண்ட்டில் காரை
வசீகரன் பார்க் செய்தார். லிப்ட்டிற்குள் ஏறி நான்காவது மாடியை
அடைந்தவர்கள் திவ்யபாரதியின் ப்ளாட்டின் முன் சென்று காலிங்
பெல்லை அழுத்தினர்.

அடுத்த இருநொடியில் சதீஷ்குமார் கதவைத் திறக்க அண்ணனைப்
பார்த்தும், அவனிடம் சென்று கையைப் பிடித்துக் கொண்டாள்
திவ்யபாரதி. தன் கையைப் பற்றிக்கொண்ட தங்கையின் கையில்
இருந்த நடுக்கத்தை உணர்ந்தவன் தங்கையை ஆதரவாகப் பற்றினான்.

“உள்ள வாங்க” என்று அனைவரையும் சதீஷ் வரவேற்க சுந்தரமும்
வெளியே வந்து, “எல்லாரும் உள்ள வாங்க” என்று வரவேற்றார். சுந்தரம்
சதீஷ்குமார் திவ்யபாரதியின் தந்தை வழித் தாத்தா. தாய் தந்தையை
சிறு வயதிலேயே இழந்து அறியா குழந்தையாய் நின்ற பேரனையும்
பேத்தியையும், அவரும் அவர் மனைவியும் தான் வளர்த்து வந்தது.
பாட்டியும் திவ்யபாரதிக்கு பதிமூன்று வயது இருக்கும்போதே
இறந்துவிட்டார். அதிலிருந்து மூவருமே மூவருக்கும் சொந்தம்.

உள்ளே நுழைந்தவர்கள் அமர எல்லோருக்கும் முதலில் மிதமான
சுடுநீரை குடிக்க எடுத்து வந்து தந்தார் சுந்தரம். மழை இன்னும்
பெய்துகொண்டே இருக்க திவ்யபாரதியோ அண்ணனின் கையை
விடவில்லை. இறுக்கமாய் பற்றியிருந்தாள். அவனும் தங்கையை
அறிந்தவனாய் நகரவில்லை.

சிறிதுநேரம் எல்லோரும் இன்று வெளியான அந்த மருத்துவமனையின்
செய்தியைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர். “சரி ஸார்… டைம் ஆகுது
நாங்க கிளம்பறோம்” என்று வசீகரன் சுந்தரம் தாத்தாவிடம் விடைபெற
முயல,

“இந்த மழையில எப்படிப் போவீங்கப்பா… சாப்பிட்டு மழை நின்ன
அப்புறம் போலாம்” என்று தாத்தா அன்பாய் கட்டளையிட அதை யாரும்
தாண்டவில்லை.

தாத்தா தோசை சுட உள்ளே செல்ல, வசீகரனும் உள்ளே நுழைந்தார்.
காவ்யா, பல்கிஸ், கார்த்தி மூவருமே சமையல் அறைக்குள் புகுந்து
அட்டகாசம் செய்து கொண்டிருந்தனர்.

“டாப்ளெட்ஸ் நீ விட்டு எவ்வளவு நாள் இருக்கும்?” இந்திரா வினவ,

“இரண்டரை வருஷம் இருக்கும்” என்றாள் திவ்யபாரதி யோசனையுடன்.

“எத்தனை நேரம் உன் அண்ணன் கையைப் பிடிச்சுட்டே இருக்கப்போற?”
என்று கிண்டல் குரலில் அவர் வினவ அவளோ விழித்தாள்.

“பர்ஸ்ட் அந்த நினைப்புல இருந்து வெளியவா” என்று அவளது
தோளைத் தட்டிக் கொடுத்து புன்னகைத்தவர், “போ… போய் மூகத்தைக்
கழுவிட்டுவா” என்று சொல்ல எழுந்து உள்ளே சென்றாள்.

அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்த இந்திரா, “அவ இன்னும்
முழுசா அதை மறக்கல சதீஷ்” என்று அவனிற்கு மட்டும் கேட்கும் குரலில்
சொல்ல, “ம்ம்” என்றான் அவன் இறுகிய முகத்துடன். அவன் மனதில்
உள்ள கொந்தளிப்பு ஏராளம். தங்கையை இந்நிலைக்கு தள்ளியவன்
மட்டும் கையில் கிடைத்தான் வெட்டிக்கொன்று அளவில் இருக்கிறான்.

“இதுக்கு என்னதான் முடிவு மேம். பேசாம டாப்ளெட்ஸ் அகெயின் ஸ்டார்ட்
பண்ணலாமா?” என்று சதீஷ்குமார் கேட்க,

“வேணாம். டாப்ளெட்ஸ் வேணாம். எவ்வளவுநாள் அதையே குடுக்கிறது.
இவ அதை ஓவர்கம் பண்ணி வந்திடுவா. வேற எதாச்சுல டிஸ்ட்ராக்ட்
பண்ணப் பாக்கலாம்” என்றார்.

குளியலறைக்குள் புகுந்த திவ்யபாரதி கதவை அடைத்து, குளியல்
அறைக் கண்ணாடியில் தன் முகம் பார்த்தாள். தன்னைப் பார்க்கப்
பார்க்க அவளிற்கே கோபம் தலைக்கேறியது. இத்தனை வருடங்களில்
அவனையும் அவன் செய்துவிட்டுச் சென்றதையும் மறக்க எவ்வளவு
முயற்சி செய்திருப்பாள். ஆனால், என்ன ப்ரயோஜனம். ‘என்னால ஏன் உன்னை மறக்கவே முடியல ஆதி’ என்று மனதிற்குள் நினைத்துப்
புழுங்கினாள்.

காதல் என்ற வலையில் வீழ்த்தி, ஏமாற்றி இன்றுவரை மறக்க முடியாத
ரணத்தை ஏற்படுத்திவிட்டுச் சென்றவனை, அவளால் துளியும் மறக்க
முடியவில்லை. இப்போது துளியும் அவன் மேல் காதல் இல்லை. அதை
உயிருடன் கொன்றிருந்தான் அவன். வெறுப்பும் ஆத்திரமும் மட்டுமே
இருக்கிறது அவளிற்கு அவனிடம். ஆனால், இந்த மழை மட்டும் ஏன்
தன்னை இவ்வளவு பாதிக்கிறது என்று அவளிற்குப் புரிந்தது.

முகத்தைக் கழுவிக்கொண்டு அவள் வெளியேவர சாப்பிட அனைத்தும்
தயாராகி இருந்தது. இந்திரா உள்ளே தோசையைச் சுட எல்லோரும்
சாப்பிட அமர்ந்திருந்தனர். சமையல் அறைக்குள் நுழைந்த திவ்யபாரதி
இந்திராவிற்கு உதவி செய்ய இருவரும் ஏதேதோ கதை பேசியபடியே,
இரண்டு அடுப்பிலும் தோசைக் கல்லை வைத்து அனைவருக்கும்
தோசையைச் சுட்டு முடித்தனர். அனைவரும் உண்டு முடிக்க தாங்களும்
உண்டு முடித்தவர்கள் வந்து உட்கார மழை கருணை இல்லாமல் பெய்து
பதினொன்றரைக்கே விட்டிருந்தது.

“மழை லேசா விட்டுருச்சு”, “நாங்க கிளம்பறோம் ஸார். இவங்களை
விட்டுட்டு நாங்க போகணும்” என்ற வசீகரன் எழ அனைவரும் எழுந்தனர்.

“பாப்பா எப்படிப்பா இருக்கா?” என்று அவர்களது மகளைத் தாத்தா
விசாரிக்க,

“பொண்ணு எங்க அம்மா வீட்டுக்குப் போயிருக்காப்பா…” என்ற இந்திரா
சுந்திரத்திடம் சொல்ல அவரோ, “சரிம்மா. வீட்டுக்குப் போயிட்டு ஃபோன்
பண்ணுங்க” என்றவரிடம் அனைவரும் விடைபெற்றனர்.

அவர்கள் செல்ல கதவைப் பூட்டிவிட்டு திரும்ப மூவரும் தங்கள்
அறைக்குள் வந்தனர். ஒரு பெரிய படுக்கை அறையில் ஒருவர்
படுக்கக்கூடிய மூன்று படுக்கைகள், ஒரு ஆள் தாரளமாக நிற்கக் கூடிய
இடைவெளியில் வரிசையாக இருந்தது. திவ்யபாரதி சென்று நடுவில்
இருந்த பெட்டில் அமர சுந்தரம் தாத்தாவோ ஒரு விபூதியை எடுத்துவந்து
பேத்தியின் நெற்றியில் பட்டையாகத் தீட்டினார்.

பேத்தியின் கன்னத்தைத் திட்டியவர், “கண்ணை மூடித் தூங்குமா”
என்றார். உள்ளே வந்த சதீஷும் ஜன்னலை சாத்தி திரைச்சீலையை
இழுத்துவிட்டான். மழையின் ஒலியும் மின்னலின் ஒளியும் உள்ளே
கேட்காமல் இருக்க.

“தாத்தா, நான் உங்க இரண்டு பேரையும் ரொம்ப தொந்திரவு
பண்றனா?” என்று வினவினாள் திவ்யபாரதி.

“அய்யோ… ஆமா ஆமா. நீ பண்ற தொந்திரவுல என்னால இந்த வீட்டுல
இருக்கவே முடியல. பாரு கண்ணுல தண்ணி வருது” என்று சதீஷ் பேச்சு
போகும் திசையை மாற்றி கலகலப்பாக மாற்ற முயன்றான்.

“போடா அண்ணா” என்றாள் அவனை தலையணை எடுத்து அடித்தபடி.
எப்போதாவது வம்பிழுக்கும் போது மட்டும், ‘வாடா’, ‘போடா’ என்று
பேசுவது உண்டு.

“பின்ன இதெல்லாம் நாங்க சொல்லித்தான் தெரியணுமா” என்று
மேலும் வம்பிழுத்தவனை முறைத்தவள், “பாருங்க தாத்தா இவனை”
தாத்தாவிடம் குற்றப்பத்திரிகை வாசித்தாள் திவ்யபாரதி.

“ஏன் சதீஷு… உண்மையவே தான் பேசணுமா… கொஞ்சம் பொய் பேச
கத்துக்கப்பா” என்று அவர் பேத்தியின் காலை வாரிவிட, அது
இருநொடிகள் கழித்தே திவ்யபாரதிக்குப் புரிந்தது. தாத்தாவை
முறைத்தவள், ‘ம்கூம்’ என்று போர்வையை தலைவரை இழுத்துவிட்டு
படுத்துக்கொண்டாள்.

அவளின் சைகையில் சிரித்த இருவருமே படுக்கையில் விழ, சிறிது
நேரத்தில் கண்களை மூடினர். ‘குரங்கை நினைக்காமல் மருந்தைக் குடி’
என்று எத்தனை முறை சொன்னாலும் கேட்காதவர்களைப் போல,
திவ்யபாரதியின் மனதிலும் அழுத்திக்கொண்டிருந்த சில நினைவுகள்
கனவாய் எழுந்தது. அந்த கொடூரமான சம்பவம் மீண்டும் ஞாபகம் வர,
அவளது உடல் தன்னை அறியாமல் தூக்கத்தில் நடுங்கியது. உடல்
விரைத்து, ‘ம்ங்’, ‘ம்ங்’ என்று அவள் தேம்ப ஆரம்பிக்க ஆண்கள்
இருவரும் எழுந்தனர்.

தாத்தா அவளின் தலையை நீவிக்கொடுத்து, “ஒண்ணுமில்லடா…
ஒண்ணுமில்ல… நாங்க இருக்கோம். தூங்கு தூங்கு” என்று அவர்
ஆதரவாய் சொல்ல சதீஷோ தங்கையின் கையைத் தட்டிக் கொடுத்தான்.
முதலில் எல்லாம் தினமும் வரும் கனவு இப்போது இந்த மாதிரி
மழைநாட்களில் மட்டும் வருகிறது. ஆனாலும், அவள் பயத்திலும்
வெறுப்பிலும் அணத்துவது மட்டும் குறைவதில்லை. சிறிதுநேரம்
இருவரும் அவளின் அருகிலேயே அமர்ந்து தட்டிக்கொடுக்க அவளின்
அணத்தல் அடங்கியது. ஆண்கள் இருவரும் மனபாரத்துடனே மீண்டும்
உறக்கத்தைத் தழுவினர்.

•••

மதுரை உயர்நீதிமன்றம்.

நீதிமன்ற வளாகத்தில் வண்டியை நிறுத்தினான் வெற்றிவேந்தன்.
அவன் பின்னால் அமர்ந்திருந்த அமர்ஷா இறங்க அவனின் கட்சிக்காரர்
நின்றிருந்தார். வெற்றியின் வழக்கு அடுத்த வாரம் என்ற நிலையில்
இருந்தது. நண்பனுடன் கோர்ட்டிற்கு வந்தவன், “என்னக் கேஸ் மாப்ளே?”
என்று வினவினான் வெற்றி

“இதோ இந்தப் பெரியவரு கேஸ் தான் மாப்ளே… இவரோட இடத்தை
புடுங்க சல்லிப்பசங்க அக்கப்போர் பண்றானுக… இவரு ஒத்துவரலன்னு
இவரோட பேத்தி பதினைஞ்சு வயசுடா… அந்தப் புள்ளையை ஏதாவது
பண்ணிடுவோம்னு மிரட்ராய்ங்க… அதுக்குதான் இந்தக் கேஸ்” என்று
அமர்ஷா சொல்ல அவர்களைக் கண்ட வெற்றிக்கு பாவமாக இருந்தது.

தாத்தாவுடன் வந்திருந்த சிறிய பெண்ணைப் பார்க்கவும் அவனுக்கு
என்னவோபோல ஆனது. ‘இந்த வயதில் இப்படி கோர்ட்டிற்கு அலைய
வேண்டுமா?’ என்றிருந்தது. ஊரில் உள்ள தப்பானவர்கள் எல்லாம்
சுதந்திரமாய் சுற்ற, இப்படி நல்லவர்களை மட்டும் ஆண்டவன்
சோதிக்கறானே என்று அங்கலாய்த்தது அவனது மனம். கோபமும்
வந்தது. இந்த உலகில் எவ்வளவு கேடுகெட்ட ஜென்மங்கள்
இருக்கின்றன. வக்கீலாக இருப்பவன் அந்த மாதிரி சிலரைப்
பார்த்திருக்கிறானே. அதனால் அவன் மனம் கொந்தளித்தது. அவன்
ஆண் பெண் இருவரின் படிப்பிற்கான வளர்ச்சிக்கு ஊருக்குள்
பேசுபவன் தான். ஆனால், தப்பானவர்கள் என்று தெரிந்தால் அவனின்
போக்கே வேறு மாதிரி தான் இருக்கும்.

அவர்களது வழக்கு அடுத்திருக்க உள்ளே நுழைந்தனர். அமர்ஷா
வாதாடிய விதத்தில் எதிர்க்கட்சி வக்கீல் வாயடைத்துத் தான் போனார்.
எதிர்க்கட்சி வக்கீல் எதிர்பார்க்காத சில தகவல்களை வைத்து அவன்
வாதாட வழக்கு அவன் பக்கமே வெற்றிபெற்றது.

வழக்கு முடிந்து வெளியேவர, “ரொம்ப நன்றி தம்பி” என்ற பெரியவர்
கை கூப்ப அவரின் கையைப் பிடித்து இறக்கிய அமர்ஷா, “நீ குடுத்த
ஃபீஸுக்கு நான் என்னோட வேலையை முடிச்சேன் ஐயா.
அவ்வளவுதான்” என்றான்.

“இல்ல தம்பி. எம் பேத்தியை படிக்க வச்சு அந்த நிலத்தை வச்சுதான்
கரை சேத்தணும்னு இருந்தேன். அது மட்டும் கைமீறி போயிடுந்தா
நெசமா நான் தற்கொலை செஞ்சிருப்பேன்” என்றார் கண்களில் நீர்
திரையுடன்.

“உங்க பேத்தியை படிக்கவக்க எம்புட்டு ஆகுமோ அதை நாங்க
ஏத்துக்கறோம்… நிலம் குழந்தை மாதிரி. அதை விக்காதீக.
இப்ப சம்பாரிச்சு இந்தப் புள்ளை கல்யாணத்துக்கு சேத்திடுங்க.
கல்யாணத்துக்கும் நாங்களே நல்ல பையனா பாத்து முடிக்கறோம் உங்க
பேத்திக்கு” என்றான் வெற்றிவேந்தன். ஏனோ வயதான காலத்தில்
வயதுப்பெண்ணை வைத்துக்கொண்டு இருப்பவரைப் பார்த்து
இருவரின் மனம் உதவச் சென்றது.

“ரொம்ப நன்றிங்க, தம்பி” என்றவர் இருவரின் அலைபேசி எண்ணை
வாங்கிக்கொண்டு தன்னுடையதையும் இருவருக்கும் கொடுத்துவிட்டு
கிளம்பினார்.

இருவரும் தங்கள் அலுவலகத்திற்குச் செல்ல அமர்ஷா ஏதோ
புத்தகத்தைப் புரட்ட ஆரம்பிக்க, அவன் எதிரில் அமர்ந்த வெற்றி அடுத்து
தன் வழக்கிற்காக குறிப்புகளை எழுத ஆரம்பித்தான். சிறிது நேரம்
கழிய அமர்ஷாவின் ஃபோன் அடித்தது.

“சொல்லு மாப்ளே” என்றான் எடுத்தவுடன். சென்னை சென்றிருந்த வாசு
தான் அழைத்திருந்தது.

“நான் இப்பத்தான் கவியைப் பாத்தேன் மாப்ளே. வெற்றிக்கு ஃபோன்
போட்டா ஸ்விட்ச்ட் ஆஃப்னு வந்துச்சு” என்று வாசு சொல்ல, “நாங்க
கோர்ட்டுக்குள்ளார இருந்தோம் மாப்ளே. அதான் ஸ்விட்ச்ட் ஆஃப்
பண்ணிருப்பான். ஆன் பண்ண மறந்திருப்பான்” என்றான் அமர்ஷா.

“சரி இரு, கவிப்புள்ள பேசுதாம்” என்றவன் அந்தப் பக்கம் ஃபோனைத்
தர, “அண்ணே எப்படி இருக்கீங்க?” என்று கவிநயா விசாரித்தாள்.

“நான் நல்லா இருக்கேன்டா… நீ எப்படி இருக்க… அங்கனக்குள்ள
எல்லாம் சரியா இருக்கா?” என்று விசாரித்தான்.

“இங்க எல்லா ஓகேண்ணே. வீட்டுல எல்லாம் எப்படி இருக்காக?” என்று
விசாரிக்க, “இங்க எல்லாம் சவுக்கியம் தான்” என்று சிறிது நேரம்
பேசியவன், எதிரில் புன்னகை முகத்துடன் நண்பனும் தங்கையும்
பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த வெற்றியிடம் அலைபேசியைத்
தந்தான்.

“கவி! எப்படித்தா இருக்க?” என்று பாசமிகு அண்ணனாய் விசாரித்தான்
வெற்றி.

“நல்லா இருக்கேண்ணே” என்றவளின் குரலில் சுரத்தே இல்லை.

“ஏன்டா ஒரு மாதிரி பேசற?” வெற்றி வினவ,

“பயமா இருக்குண்ணே” என்றாள் கலக்கமானக் குரலில்.

கவி சொன்னது இந்தப் பக்கம் அமர்ஷாவிற்கே கேட்க,
“மதுரக்காரப்புள்ள… பயப்படலாமா” என்றான்.

“நான் பாத்துக்கறேன்டா” என்றான் வெற்றி தங்கையிடம்.

“சரிண்ணே” என்றாள் கவிநயா.

“எப்ப படிப்பு முடியுது” என்று வெற்றி யோசித்தபடி வினவ,

“இன்னும் நாலு மாசம்தான் ண்ணே” என்றாள்.

“டாக்ரம்மா ஆகிட்டா… நம்ம அப்பா ஊருக்கே விருந்து வச்சிடுவாருத்தா…
சீக்கரம் வா. இங்க எல்லாத்துக்கும் உன்னை அப்படிப் பாக்கணும்னு
இருக்கு” என்றான்.

“கண்டிப்பா… ஆனா, நாலே நாலு மாசம் வெயிட் பண்ணுங்க” என்றாள்.
“சரிசரி. என்னனு பாத்துட்டு கூப்பிடுத்தா… வாசுகிட்ட ஃபோனைக்
கொடு” என்று சொல்ஷ கவிநயா வாசுவிடம் அலைபேசியைத் தந்தாள்.

“சொல்லு மாப்ளே” வாசு பேச, “என்னானு பாத்துட்டு கூப்பிடு மாப்ளே”
என்றான்.

“சரி மாப்ளே” என்று வாசு சொல்ல இருவரும் ஃபோனை வைத்தனர்.

ஃபோனை வைத்தவனிடம், “ஏன் மாப்ளே, அப்பத்தா உன்
கல்யாணத்தைப் பத்தி பேசிகிட்டே இருக்கு. அதைக் கவனிச்சையா?”
என்று அமர்ஷா வினவ,

“அப்பத்தா பேசும் அதுக்கென்ன. கவிப்புள்ளைக்கு முடிக்காம நான்
எப்படி மாப்ளே கல்யாணம் கட்டிக்கிறது. பர்ஸ்ட் அதுக்கு முடியட்டும்.
அப்புறம் ஒரு வருசம் கழிச்சுப் பாப்போம்” என்றான் கோப்பைகளில்
மூழ்கியபடியே.

“நீ எப்ப பண்ணப் போற மாப்ளே?” வெற்றி வினவ,

“மும்தாஜ் வரட்டும்” என்று சீரியஸாக முகத்தை வைத்துச்
சொன்னவனைப் பார்த்து சிரித்தான் வெற்றி.

அமர்ஷாவிற்கு அப்போது தெரியவில்லை. வெற்றிவேந்தன் வாழ்வில்
ஏற்படப்போகும் திருப்பங்களையும் அது அவனிற்காக வைத்திருக்கும்
சோதனைகளையும். தானும் அந்த விளையாட்டில் இருப்பதைப் பற்றியும்.