மிரட்டும் அமானுஷ்யம் 7

மிரட்டல் 6

 

ஜானுவும் சாக்ஷியும் பேருந்து நிலையத்திற்கு செல்லவும், ஆதர்ஷும் விஷ்வாவும் அங்கு வருவதற்கும் சரியாக இருந்தது. வழக்கம் போல விஷ்வாவும் சாக்ஷியும் சண்டை போட, மற்ற இருவரும் இம்முறை சமாதானப் படுத்த முயலாமல் வேடிக்கை பார்த்தபடி இருந்தனர்.

 

அதில் கடுப்பான விஷ்வா, “அடேய், இங்க ஒரு அப்பாவி ஜீவன திட்டிட்டு இருக்கா… நீ கொஞ்சம் கூட கண்டுக்காம வேடிக்க பார்த்துட்டு இருக்க…” என்றான்.

 

“யாரு நீ அப்பாவி ஜீவனா… ‘அடப்பாவி’ ஜீவன்னு வேணா சொல்லு…” என்று அவன் காலை வாரினான் ஆதர்ஷ்.

 

இப்படி ஒருவரை ஒருவர் கலாய்த்து, சிரித்து, விளையாடியவாறே அந்த பேருந்தில் பயணிக்க, பயணிகள் அனைவரும் இவர்களை ஒரு மாதிரி பார்த்தனர். அதைக் கவனித்தாலும், இவர்களின் சேட்டை தொடர்ந்து கொண்டே தான் இருந்தது.

 

கல்லூரியை அடைந்தவர்கள், வகுப்பு ஆரம்பிக்க நேரம் இருப்பதால், நேராக கேன்டீன் சென்றனர். அங்கு தேனீர் பருகியவாறு மீண்டும் தங்கள் அரட்டையைத் தொடர்ந்தனர்.

 

விஷ்வா, “நான் இந்த கோர்ஸ்ல டிஸ்டிங்க்ஷன்ல பாஸ் பண்ணிடுவேன்…” என்றான் பெருமையாய்.

 

மற்ற மூவரும் அவனை ஒரு மாதிரி பார்க்க, ஜானு “எப்படி?” என்று கேட்டாள்.

 

“எத்தன பேய் படம் பார்த்திருக்கேன்… இந்த கோர்ஸ் சேர்ந்ததுக்கு அப்பறம் எங்க அப்பா திட்டுல இருந்து தப்பிக்கணும்னே வரிசையா எல்லா பேய் படமும் பார்த்து என் நாலேஜ்ஜ டெவலப் பண்ணிருக்கேன்… கோலிவுட் டு ஹாலிவுட் எல்லாமே என் ஃபிங்கர் டிப்ஸ்ல… நீங்க வேணா பாருங்க இன்னிக்கு என்னோட பெர்ஃபார்மன்ஸ் பார்த்து அந்த ஃப்ரொஃபெசரே மிரண்டு போகப் போறாரு…” 

 

இதைக் கேட்ட மூவரும் தலையில் அடித்துக் கொண்டனர். சாக்ஷியோ அவனைக் கேவலமாகப் பார்க்க, “ஹே உங்களுக்கு எல்லாம் என் மேல பொறாமை…” என்றான் சமாளிப்பாக…

 

“ஏன்டா ப்ரொஃபெஸனல் கோர்ஸ்ல அரியர் வச்சவன் செர்ட்டிஃபிகேட் கோர்ஸ்ல டிஸ்டிங்க்ஷன்ல பாஸ் பண்ணா என்ன பண்ணலைனா என்ன…” என்றான் ஆதர்ஷ்.

 

“என்னாது அரியரா…” என்றாள் சாக்ஷி. அவளிற்கு ‘எம்.பி.ஏ… பிசினஸ்…’ என்று அவன் அன்று அடுக்கிய பொய்கள் நினைவிற்கு வந்தது.

 

சாக்ஷி அவனை முறைக்க, அவனோ “சரி சரி… கிளாஸுக்கு லேட்டாச்சு… வாங்க போலாம்…” என்று முதல் ஆளாய் கிளம்பினான்.

 

வகுப்பறையில் அங்கங்கு அமர்ந்திருந்தவர்கள் அவர்களுக்குள் பேசிக் கொண்டிருக்க, இவர்கள் மூன்றாவது வரிசையில் சென்று அமர்ந்தனர்.

 

அங்கும் விஷ்வாவின் பேச்சு ஓயவில்லை. “ஹே ஆது… ப்ரொஜெக்டர்லா வச்சுருக்காங்க… பேய் படம் போடுவாங்களோ…” என்று கேட்க…

 

“அடேய்… ஏன்டா பேய் படத்துலயே இருக்க…” என்று ஆதர்ஷ் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அங்கு சலசலப்பு கேட்க நால்வரும் வாசலைப் பார்த்தனர்.

 

அங்கு 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் நுழைந்தார். கண்கள் கூர்மையாக அனைவரையும் அளவெடுத்தது. ஒருமுறை அனைவரையும் பார்த்தவர், “ஹாய் ஃபோக்ஸ்…” என்று கூறினார். குரலில் கம்பீரம் இருந்தாலும், வார்த்தைகள் சிநேகமாக ஒலிக்க, அங்கிருந்த அனைவருக்கும் உற்சாகம் தொற்றிக் கொண்டது.

 

பின், அவரைப் பற்றி சுருக்கமாகக் கூறினார். அவரின் பெயர் கங்காதர். படித்து வளர்ந்தது புனேயில் தான். பாராசயின்ஸில் முனைவர் பட்டம் பெற்றவர். அவ்வப்போது அந்த பிரிவில் ஆராய்ச்சி மேற்கொண்டும் வருகிறார். 

 

அங்கு நிகழும் ஆங்கில உரையாடல் தமிழில்…

 

“என்ன பத்தி சொல்றதுக்கு இவ்ளோ தான் பிரெண்ட்ஸ்… இப்போ உங்கள பத்தி சொல்லுங்க…” என்றார்.

 

இவர்களும் ஒவ்வொருவராக தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர். அனைவரின் அறிமுகமும் முடிந்ததும், “குட்… சவுத் சைட்லயிருந்து கூட இந்த கோர்ஸ் படிக்க வந்துருக்கீங்க…” என்றார் நம்மவர்களைக் கண்டு…

 

“பாரானார்மல் சயின்ஸ் – இதப் பத்தி பார்க்குறதுக்கு முன்னாடி, உங்க எல்லாருக்கிட்டேயும் ஒரு கேள்வி… எதுக்கு இந்த கோர்ஸ் படிக்க வந்தீங்க..? இதப் பத்தி தெரிஞ்சுக்க வந்தீங்களா… இல்ல சும்மா பொழுதுபோக்குக்காக வந்தீங்களா…? உண்மையான பதில்கள உங்ககிட்ட இருந்து எதிர்பார்க்கிறேன்…” என்றார்.

 

முதலிலேயே சற்று இலகுவாக பேசியதால், மாணவர்களும் இலகுவாகவே பதில் கூறினர். சிலர் தங்களுக்கு இந்த துறை பிடித்திருப்பதாகவும், சிலர் பொழுதுபோக்கிற்காக வந்ததாகவும் கூறினர்.

 

சாக்ஷியும் ஆதர்ஷும் கூட அவர்களுக்கு அமானுஷ்யம் பற்றி கற்றுக்கொள்ள ஆர்வம் இருப்பதாகக் கூறினர்.

 

அடுத்து விஷ்வாவின் முறை… எழுந்தவன் ஒரு முறை தன் நண்பர்களைப் பார்த்தவன், “சார்… உண்மையான காரணம் மட்டும் தான் சொல்லணுமா…” என்று கேட்டான்.

 

கங்காதரும், “எஸ் எஸ்… கம் ஆன் மை பாய்… ரீசன் சொல்லு…” என்றார்.

 

“அது வந்து… எங்க அப்பா கிட்டயிருந்து தப்பிக்க தான் இங்க வந்தேன்…” என்றான்.

 

அவனின் பதிலில் வகுப்பே கொல்லென்று சிரிக்க கங்காதரும் சிரித்தார்.

 

“இதுவரைக்கும் நாலு பேட்ச் ஹாண்டில் பண்ணிருக்கேன்… இப்படி ஒரு ரீசன் யாருமே சொல்லல…” என்று சிரித்தவர் அடுத்து அமர்ந்திருந்த ஜானுவிடம் திரும்பினார்.

 

இவ்வளவு நேரம் என்ன சொல்லலாம் என்று மனதிற்குள் யோசித்துக் கொண்டிருந்தவள், அவரின் தீட்சண்யமான பார்வையில், “எனக்கு இருட்டு, பேய், அமானுஷ்யம்னா பயம்… அந்த பயத்த போக்குறதுக்காக தான் இந்த கோர்ஸ் சேர்ந்தேன்…” என்றாள்.

 

அவளின் பதிலில் வகுப்பு முழுக்க அமைதியாக இருக்க, ஒரு நொடி புருவம் சுருக்கிப் பார்த்தவர், “குட்… உன்னோட பயம் குறைய வாழ்த்துக்கள்…” என்றார்.

 

பின் அங்கிருந்த வெண்பலகையில், ‘பாரனார்மல் சயின்ஸ்’ என்று குறியீட்டு பேனாவினால்  எழுதினார்.

 

“அமானுஷ்யத்தை பற்றிய படிப்பு இதுன்னு உங்க எல்லாருக்கும் தெரியும். ஆனா அந்த அமானுஷ்யம்ங்கிற கட்டுக்குள்ள எதெல்லாம் வருதுன்னு உங்களுக்கு தெரியுமா…” 

 

அவர் இப்படி கேட்கவும், மாணவர்கள் ஒவ்வொருவரும், தங்களின் அறிவைக் காட்ட, தங்களுக்கு தெரிந்ததைக் கூறினர்.

 

“பேய்…”

 

“பிசாசு…” 

 

“இரத்தக் காட்டேரி…”

 

“ம்ம்ம் நீங்க சொல்றதெல்லாம் பேய்களோட வெவ்வேறு வகைகள்ன்னு சொல்லலாம்… இதைப் பத்தி விரிவா தெரிஞ்சுக்கணும்னா ‘அரக்கவியல்’னு தனி பிரிவு இருக்கு… அதப் படிக்கணும்…” 

 

“என்னடா இவரு இன்னொரு கோர்ஸுக்கு விளம்பரம் பண்ணிட்டு இருக்காரு…” என்று ஆதர்ஷின் காதைக் கடித்தான் விஷ்வா. ஆதர்ஷ் அவனின் தொடையைக் கிள்ளி அமைதியாக இருக்குமாறு கண்களாலேயே மிரட்டினான்.

 

“அமானுஷ்யம்ங்கிறது பேய்ய மட்டும் குறிக்கிறது இல்ல… மனிதனோட அறிவுக்கு அப்பாற்பட்டு இந்த அண்டசராசரத்துல இருக்க எல்லாமே அமானுஷ்யம் தான்… மனிதனை பொறுத்தவரைக்கும்… அந்த வகைல ஏலியன்ஸ் கூட இந்த பாரானார்மல் சயின்ஸ் குள்ள வரும்…”

 

“அய்யயோ ஏலியன்ஸ் படம் நான் பார்க்கலையே …” என்று விஷ்வா கூறியதும் சாக்ஷி அவனை முறைத்து, ‘லூசு’ என்று வாயசைத்தாள்.

 

அதன்பின் சில விளக்கப்படங்ளைப் போட்டுக் காட்ட, அனைவரும் அதை ஆர்வமாகப் பார்த்தனர்.

 

இரண்டு மணி நேரம் போனதே தெரியாமல் அழகாக அந்த வகுப்பை கையாண்டார் கங்காதர்.

 

“ஓகே பிரெண்ட்ஸ்… இன்னிக்கு இந்தளவுக்கு போதும்… இது வெறும் இண்ட்ரோ செஷன் தான்… இன்னும் விரிவா நாளைக்கு பார்க்கலாம்… ஏதாவது சந்தேகம் இருந்தா எப்போவும் எங்கிட்ட கேட்கலாம்… பை… டேக் கேர்…” என்றவாறு விடைபெற்றார்.

 

“கிளாஸ் நல்லா இருந்துச்சுல…” என்றாள் சாக்ஷி…

 

“ஆமா இதப் பத்தி இன்னும் தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்கு…” – ஆதர்ஷ்.

 

“டேய் ஆது… சார் போட்ட போட்டோ எல்லாம் எந்த படத்துல இருந்து எடுத்துருப்பாரு…” என்று அப்போதும் படத்திலேயே குறியாயிருந்த விஷ்வாவின் தலையில் தட்டினான் ஆதர்ஷ்.

 

இவை எதிலும் கலந்து கொள்ளாமல் எதையோ யோசித்துக் கொண்டிருந்தாள் ஜானு.

 

அதை கவனித்த ஆதர்ஷ், “ஹே ஜானு என்ன யோசனை…” என்றான்.

 

“ஹான் ஒண்ணும் இல்ல…” என்றாள்.

 

ஆதர்ஷ் அப்போதைக்கு எதுவும் கேட்காவிட்டாலும், அவளின் மனதை ஏதோ ஒன்று குழப்பிக் கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்தான். அது என்னவென்று கண்டறிந்து அதை களையும் எண்ணம் தோன்றினாலும், அதற்கு இது சரியான நேரம் அன்று என்பதை உணர்ந்தவனாய் அவளை அதிலிருந்து தற்காலிகமாக வெளியே கொண்டு வந்தான்.

 

இன்றும் வெளியே சுற்றிவிட்டு தங்கள் இடம் திரும்பினர். ஜானுவும், சாக்ஷியும் அவர்கள் விடுதி இருந்த தெருவிற்குள் நுழையும் போது, “ஜானு டேக் கேர்…” என்றான் ஆதர்ஷ்.

 

சாக்ஷியோ சிரிப்புடன், “அது என்ன ஜானுக்கு மட்டும் டேக் கேர்…” என்றாள்.

 

ஆதர்ஷோ அசடு வழிவதை மறைக்க தலையைக் கோதி கொண்டான்.

 

ஆனால் இதையும் ஜானு கவனிக்க வில்லை. இன்று இதை கவனித்திருந்தால், பிற்காலத்தில் ஏற்படப்போவதை தடுத்திருக்கலாமோ… 

 

அவர்கள் இருவரும் சென்றதும், “ஹே ஆது… என்ன லவ்ஸா… சொல்லவே இல்ல…” என்றான் விஷ்வா.

 

“டேய் மெதுவா டா…” என்றான் ஆதர்ஷ்.

 

“உன் ஆளு தான் போய்ட்டாள… அப்படியே இங்க இருந்திருந்தாலும் அவ கண்டுக்க மாட்டா… சரி உன் காதல் கதைய கொஞ்சம் சொல்லு…”

 

“காதலான்னு தெரியல மச்சி… அவள ட்ரைன்ல பார்த்ததும் பிடிச்சது… தனியா ட்ராவல் பண்றதுனால உண்டான பரபரப்பு, பயம், தவிப்புன்னு அந்த செகண்ட் அவ பார்க்குறது அவ்ளோ அழகா இருந்தா… சுத்தி என்ன நடக்குதுன்னு கூட தெரியாம போன்ல அவ பிரென்ட் கூட பேசிட்டு இருந்தா… என்னமோ இவளுக்கு வர ஆபத்து அவ பிரென்ட் கூட போன்ல பேசுனா விலகிடுற மாதிரி…” என்று கூறி மெலிதாக சிரித்தான்.

 

இதைக் கேட்டு இடவலமாய் தலையாட்டிய விஷ்வா, “ஹ்ம்ம் முத்திடுச்சு…” என்று முனகினான்.

 

********

 

நள்ளிரவு நேரம்… கோட்டான்கள் அலறும் நேரம்… 

 

கும்மிருட்டில் கையில் டார்ச்சுடன் அந்த ஒற்றையடிப் பாதையில் நடந்துக் கொண்டிருந்தான் ஒருவன்.

 

“ச்சே என்ன தான் வீட்டுல டாய்லெட் கட்டினாலும், இப்படி வெளில வந்து போறதே தனிசுகம்….” என்று முணுமுணுத்தான்.

 

“ஹாவ்…” என்று கொட்டாவி விட்டவாறே நடந்து சென்றவனின் காதில் யாரோ மெல்லிய குரலில் பேசும் சத்தம் கேட்டது.

 

அவன் கையிலிருந்த டார்ச்சை சத்தம் வந்த திசை நோக்கி காட்டினான். தூரத்தில் ஒரு பெண் நின்றிருப்பது தெரிந்தது. அவள் திரும்பியிருந்ததால் அவளின் முகம் தெரியவில்லை.

 

‘இந்நேரத்துல இந்த பொண்ணு எதுக்கு இங்க நிக்குது…’ என்று யோசித்தவனின் மனதில் சபலம் எட்டிப்பார்த்ததோ… மெதுவாக அப்பெண்ணை நோக்கி நடந்தான். அவன் கண்கள் அந்த பெண்ணின் மேல் மட்டும் இருந்ததால், அவள் நின்றிருந்த இடத்தை பார்க்கவில்லையோ…

 

அவள் யாரிடமோ பேசுவது போல இருந்தது. ஆனால் இவன் கண்களுக்கு யாரும் தென்படவில்லை. 

 

‘ஒருவேள லூசா இருக்குமோ… எதுவா இருந்தா என்ன… வந்த வேலைய முடிச்சுட்டு சட்டுன்னு கிளம்ப வேண்டியது தான்…’ என்று நினைத்தவன் மெல்ல சத்தம் எழுப்பாமல் அவள் அருகே சென்றான்.

 

என்ன தான் சத்தம் எழுப்பாமல் கவனமாக சென்றாலும், அமைதியாக இருந்த அந்த நள்ளிரவில், அவனின் நடையின் சத்தம் கேட்கவே செய்தது. அதில் சுதாரித்தவள் பேசுவதை நிறுத்தியிருந்தாள்.

 

அவனும் அதை உணர்ந்தாலும், ‘பொம்பள தான… ரெண்டு அடி அடிச்சா அடங்கிடும்…’ என்று நினைத்தான். மோகம் அவனின் கண்ணை மறைத்திருந்தது.

 

இரண்டடி தொலைவில் இருந்தவளின் தோளில் கைவைத்தான்.  தலையை சுற்றி அவள்  போட்டிருந்த துப்பட்டா காற்றில் பறந்தது. அப்போது அவன் பார்த்த காட்சி, அவனின் உடலை நடுங்க வைத்தது. கண்களை கசக்கி மீண்டும் பார்த்தான். என்ன தான் கண்களை தேய்த்தாலும், அங்கிருப்பது தானே இருக்கும்… இல்லாதது இல்லாமல் தான் இருக்கும் என்று சொல்ல வேண்டுமோ…

 

அங்கு அவனின் முன் நின்றது, அந்த தலையில்லா முண்டம்….

 

கத்துவதற்கு வார்த்தை கூட வராமல் திக்கியவன், அப்போது தான், அவனிருக்கும் இடத்தைப் பார்த்தான். அப்பேய் வீட்டின் எல்லைக்குள் நின்றிருந்தான். இதயம் பயத்தில் துடிக்க, மெல்ல ஒவ்வொரு எட்டுக்களாய் பின்னோக்கி வைத்தான்.

 

இவன் வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் அதுவும் முன்னோக்கி வந்தது. அதைக் கண்டவன் வேகமெடுத்து ஓடத் துவங்கினான். தனக்கு பின்னால் அது வருகிறதா என்று கூட பாராமல் தலை தெறிக்க ஓடியவன், மூச்சு வாங்க சற்று நின்றான்.

 

பின்னால் திரும்பிப் பார்க்க, அது அங்கு இல்லை. கண்களை மூடி பெருமூச்சு விட்டவனின் செவிகளில், “யாருக்கு பயந்து இப்படி ஓடி வர…” என்ற குரல் ஒலிக்க, குரல் வந்த திசையைக் கண்டான்.

 

அங்கு தலை மட்டும் தனியாக காற்றில் மிதந்து  கொண்டிருப்பது போல இருந்தது. அந்த முகத்தை எங்கோ பார்த்த நியாபகம். புருவம் சுருக்கி யோசித்தவனிற்கு, அவள் யாரென்று தெரிந்ததும், ‘திக்’கென்று இருந்தது.

 

“நீ…. நீ…நீயா…” என்று திக்கினான்.

 

“ஆமா நானே தான்…” என்றது அது ராகமாய்…. “ஏன் என்ன எதிர்பார்க்கலையோ…” 

 

பயத்தில் முன்போலவே, பின்னே நகர, கல் தடுக்கி கீழே விழுந்தான். உருண்டு பிரண்டு எழுந்தவன், மீண்டும் எதிர்பக்கம் ஓடத் துவங்க, அவனின் ஓட்டத்தை தடை செய்வது போல் அங்கு நின்றது அந்த முண்டம்….

 

ஒரு பக்கம் தலை, மறுபக்கம் முண்டம்… எந்த பக்கம் செல்வது என்று புரியாமல் தவித்தான் அவன். அவை இரண்டும் இரு திசைகளிலிருந்தும் நெருங்க, யோசிக்கும் திறனற்றவனாய் நின்றிருந்தான்.

 

“ராத்திரி நேரம், ஒரு பொண்ணு தனியா நின்னுட்டு இருந்தா, உனக்கு வேற மாதிரி எண்ணம் வருமோ… இனி உனக்கு அந்த மாதிரி எண்ணமே வரக்கூடாது… அதுக்கு நீ உயிரோடவே இருக்கக் கூடாது…” என்று நாலாப்பக்கமிருந்தும் அந்த குரல் கர்ஜனையாக அவன் காதுகளில் கேட்டது.

 

பயத்தில் கண்களை மூடியவனின் மனமோ, இப்போது அவனிற்கு கிடைக்கப் போகும் தண்டனை, இன்றைய தவறுக்கு மட்டும் இல்லை என்று எடுத்துரைத்த நேரம், அவன் முகத்தை எதுவோ கூர்மையான ஒன்று கீறுவதை உணர்ந்து கத்தினான். ஆனால் சத்தம் தான் வெளியே கேட்கவில்லை.

 

*********

 

காலை 7 மணி… வெளியே செல்வதற்கே யோசித்தப்படி இருந்தார் பிபுல். ‘இன்று என்ன நடந்திருக்குமோ…’ என்ற பயத்துடனே வெளியே சென்றவர், நினைத்த மாதிரியே கரண் ஒரு ஓரத்தில் சோர்ந்த முகத்துடன் இருப்பதைக் கண்டார்.

 

‘பெரிதாக எதுவோ நடந்துள்ளது’ என்பதை கணித்தவர், “ஹ்ம்ம் கரண் என்னாச்சு…” என்றார்.

 

எச்சிலை விழுங்கியப்படியே, “ஐயா… அம்ரத் சிங்… அவரு… இறந்துட்டாரு…” என்றான்.

 

பிபுலிற்கு அதிர்ச்சி… “அ… அவன் எப்போ ஊருக்கு வந்தான்…” என்றார்.

 

“நேத்து தான் வந்துருக்காரு ஐயா…” என்றான்.

 

முகம் முழுக்க வியர்க்க, “அவன் எதுக்கு அந்த வீட்டுக்கு போனான்…” என்று தன்னை தானே கேள்வி கேட்டுக்கொண்டார்.

 

“ஐயா…” என்று தயங்கியபடி அழைத்தான் கரண்.

 

பிபுல் அவனைப் பார்க்க, “அவரு…. பாடி…. அவங்க மாந்தோப்புக்கு போற வழில இருக்குதுங்க ஐயா…” என்றான்.

 

‘தோப்புக்கு போற வழியா… அது இருக்கும் திசைக்கும் அந்த வீட்டுக்கு போற திசைக்கும் சம்மந்தமே இல்லையே…’ என்று யோசித்தவாறே கரணுடன் மாந்த்தோப்பிற்கு  சென்றார்.

 

அங்கு அம்ரத்தின் உடலை சுற்றி கூடியிருந்த கூட்டத்தை விலக்கியபடி உள்ளே சென்றான் கரண்.

 

அம்ரத்தின் முகத்திலும் உடலிலும் கூர்மையான ஆயுதத்தைக் கொண்டு கீறியதைப் போன்று இருந்தது. முகம் முழுக்க கீறல்களும், அதிலிருந்து வடிந்த இரத்தமும், அதனால் வீங்கிய முகமும்… என பார்ப்பதற்கே அருவருப்பாக இருந்தது.

 

அப்போது அங்கிருந்த ஒருவன், “ஐயா ரொம்ப நேரம் தாங்காதுங்க… சீக்கிரமா எரிச்சுடலாம்…”என்று கூறினான்.

 

பிபுல் அங்கிருந்த ரத்தன் சிங்கின் உறவினர்களைப் பார்க்க, அவர்களும் சோகத்துடன் தலையசைத்தனர். அதற்கடுத்த வேலைகள் வேகமாக நடக்க, அங்கு ரத்தன் சிங்கின் தம்பியான அம்ரத் சிங்கின் இறுதி யாத்திரை நிகழ்ந்தது.

 

அந்நிகழ்வுகளில் பங்கு கொண்டாலும், பிபுலின் மனதிலோ, ‘அந்த வீட்டுக்கும் தோப்புக்கும் என்ன சம்மந்தம்… இவ்ளோ தூரம் தள்ளி எதுக்கு கொல்லணும்… அது அந்த வீட்ட விட்டு வெளிய வர முடியாதுன்னு நெனச்சேனே… ஒருவேள வெளிய வந்திருக்குமோ… அப்படினா இது மாதிரி கொலைகள் தொடர்ந்துகிட்டே தான் இருக்குமா… என் கிராமத்தை என்னால காப்பாத்தவே முடியாதா…’ என்ற சிந்தனைகளே நிறைந்திருந்தது.

 

அமானுஷ்யம் தொடரும்…

 

இன்றைய அமானுஷ்ய இடம்…

 

வாஸ் வில்லா, பெங்களூரு (Vaz villa, Bangalore)

பெங்களூரு என்றால் நம் நினைவிற்கு வருபவை ஓங்கி உயர்ந்த கட்டிடங்களும், பல பன்னாட்டு நிறுவனங்களும், எந்நேரமும் பரபரப்பாக இருக்கும் சாலைகளும், அதில் ஓடும் மக்கள்கூட்டமும், ரம்மியமான சீதோஷ்ண நிலையும் தான்.

 

ஆனால் அங்கும் மக்கள் எவரும் செல்ல பயப்படும் அமானுஷ்ய இடங்களும் இருக்கின்றன.  அத்தகைய இடங்களில் ஒன்று தான் இந்த வாஸ் வில்லா எனப்படும் டெர்ரா வேரா.

 

இந்த வீடு, 1943ஆம் ஆண்டு வாஸ் என்பவரால் கட்டப்பட்டது. அவருக்கு இரு மகள்கள் இருந்தனர். 

 

வாஸின் மூத்த பெண் பியானோ ஆசிரியையாக பணியாற்றி வந்தார். 2002ஆம் ஆண்டு, அவர் அடையாளம் தெரியாத மர்ம நபரால், சரமாரியாக வெட்டி கொல்லப்பட்டு, அவ்வீட்டிலேயே புதைக்கப்பட்டார். இதன் பிறகு, சில நாட்களிலேயே வாஸின் இரண்டாவது மகள், அவ்வீட்டை விட்டு வெளியேறியிருந்தார். அவர் அங்கிருந்து செல்லும்போது அவர்களின் கார், பியானோ முதலிய விலைமிக்க பொருட்களை அங்கேயே விட்டுச் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அதன்பின்பு அவ்வீட்டில் அடிக்கடி பியானோ சத்தமும், பெண்ணின் கதறல் சத்தமும் கேட்டுக் கொண்டு இருந்ததாக சொல்கின்றனர் அதனை ஆராய செல்பவர்கள், உள்ளே தலைகீழாக இருக்கும் சிலுவையும் (inverted cross), தலை துண்டிக்கப்பட்ட சிலைகளும்  இருந்ததாகக் கூறுகின்றனர். மேலும் உள்ளே சென்று புகைப்படம் எடுப்பவர்கள், வெளியே வந்து பார்க்கும்போது ஒன்று புகைப்பட கருவி செயலிழந்து இருக்குமாம், இல்லையென்றால் புகைப்படம் சிதைந்து இருக்குமாம்.

 

அந்த வீட்டை இடித்துவிட்டாலும், இன்றும் அங்கு அமானுஷ்ய நிகழ்வுகள் நடப்பதாகக் கூறுகின்றனர்.