SY9

சரி © 9

தாயார் அனுசியா வெளியேறியதும், ரிதுவும், யாஷிகாவும் ஒரு முடிவுக்கு வந்தவர்களாக தரையில் இருந்து எழுந்து, சம்யுவையும் எழுப்பி, கட்டிலில் அமரவைத்து தேநீரை பருகிக்கொண்டே பேச ஆரம்பித்தார்கள்.

 

எங்க, எப்ப பார்ட்டி அரேஞ்ச் பண்ற?, என்றாள் ரிது.

 

நீயே சொல்லுடீ, என்றாள் சம்யு.

 

அவுங்க ரெண்டு பேரும் பீச்சுக்குப் போறதப் பாத்ததும் எனக்கு ஒரு ஐடியா வந்துச்சு! சொல்லவா?, ரிது.

 

அடிப்பாவிகளா, ஐடியாவெல்லாம் பண்ணி முடிச்சுட்டு, என்னக் கவுத்தத்தான் வந்தீங்களா?, சம்யு அலறினாள்.

 

நாயில்ல, நாயில்ல, என்றாள் யாஷிகா வேகமாக குறுக்கிட்டு.

 

நீ நாய் இல்லதான்டி! கொஞ்சம் பொறு, என்று யாஷிகாவை அதட்டிவிட்டு, சம்யுவிடம் திரும்பிய ரிது, நாந்தான்டீ ஒன்னக் கவுத்த வந்தேன். ஆனா, எனக்காக இல்ல. ஒனக்காகத்தான்டீ, என்று கத்தினாள்.

 

மூவரும் சற்று நேரம் ஒருவருக்கொருவர் எதுவும் பேசாமல் இருந்தனர்.

 

சரி, ஒன்னோட ஐடியாவச் சொல்லு, சம்யு.

 

திருவான்மியூர் பீச் போலாமா, ரிது.

 

திருவான்மியூர் பீச்சா!, யாஷிகா.

 

ஏன்டீ, என்ன பதட்டம்?, ரிது.

 

ஒன்னுமில்ல, நா போனதில்ல. அதான் கேட்டேன், யாஷிகா.

 

சரி, என்னக்கி?, சம்யு.

 

வெயிட்ப் பண்ணு. எதிர்த்தரப்பு என்ன சொல்லுதுன்னு கேக்கனும்ல?, கூறிய ரிது, அலைபேசியை எடுத்தாள்.

 

யாருக்கு? சித்துவுக்கா?, என்றாள் சம்யு.

 

சித்துவுக்கு கால் பண்ணலடீ. இனிமே ஒன்னத் தவிர நாங்க ரெண்டு பேரும் பேசமாட்டோம். ஓக்கேவா?, என்றாள் ரிது யாஷிகாவையும் சேர்த்துக்கொண்டு சண்டை பிடிப்பதுபோல்.

 

நா சும்மாதான கேட்டேன், சம்யு பின்வாங்கினாள்.

 

அப்ப யோகிக்கா?, யாஷிகா.

 

ஆமா, இப்ப என்னன்ற?, ரிது.

 

சரி, சரி சண்ட வேண்டாம். நீ கால் பண்ணு ரிது. சரி என்ன கேக்கப்போற? எப்பன்னாவது சொல்லேன்டீ!, சம்யு.

 

ஆமாடீ, மொதல்ல நமக்குள்ள என்னன்னு பேசிக்கிட்டு, அப்பறம் கால் பண்ணலாமே ரிது, யாஷிகாவும் சம்யுவுடன் சேர்ந்துகொண்டாள்.

 

இடம், திருவான்மியூர் பீச்சு, நாள் அடுத்த ஞாயிறு, நேரம் மதியத்திற்கு மேல. ஓக்கேயா? யோசிச்சுச் சொல்லுங்க, என்றாள் ரிது சற்று விளக்கமாக.

 

ஓக்கே! செலவு என்னோடது, என்று ஒத்துக்கொண்டாள் சம்யு.

 

செலவுக்குத்தான் அந்தப் பக்கமும் ஒரு ஆள் இருக்குல்ல?, என்று எடுத்துக் கொடுத்தாள் யாஷிகா.

 

ஆமால்ல! நாம ஏன்டீ அந்த ட்ராக்கப் பத்தி யோசிக்கவே இல்ல?, என்று ஆச்சர்ய வினா எழுப்பினாள் ரிது.

 

அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நீங்க இந்த ட்ராக்குலயே நில்லுங்க, என்றாள் சம்யு முகத்தை வாடிய மலர்போல் வைத்துக்கொண்டு.

 

ம்! அடடே! அதுக்குள்ள ஆம்படையானோட காச வேஸ்ட் பண்ணக் கூடாதுன்னு நெனக்கிறாடீ, என்றாள் யாஷிகா.

 

அப்பா, ஆள விடுங்கடா சாமி. நா ஒன்னுமே சொல்லல, என்றாள் சம்யு.

 

ம், அது…”, யாஷிகா.

 

சரி, இப்ப நா யோகிக்குக் கால் பண்றேன். என்ன ரிசல்ட்டுன்னு பாப்போம், என்று கூறிக்கொண்டே யோகியை அலைபேசியில் அழைத்தாள் ரிது.

 

மறுமுனையில் ஹலோ ரிது, என்றான் உற்சாகமாக யோகி.

 

என்ன பீச்செல்லாம் பாத்தாச்சா? ஜோடியா எத்தன பேர், சிங்கிளா எத்தன பேர், ஒங்கள மாதிரி எத்தன பேர்னு கணக்கெடுத்தாச்சா?, ரிது.

 

ஒங்களுக்கு என்ன சென்சஸ் வேணும்னு சொன்னா அதுலருந்து ஆரம்பிக்கிறோம் மேடம், என்றான் யோகி சற்றும் யோசிக்காமல்.

 

ஒரு சென்ஸசும் வேண்டாம். எப்ப பார்ட்டி வக்கிறீங்க?, என்றாள் மொட்டையாக.

 

சற்று குழம்பிய யோகி பின் சுதாரித்து, எதுக்கு, யாருக்கு, எங்க?, என்று கேட்டான்.

 

ஒங்க ஃப்ரண்ட், எங்க ஃப்ரண்டோட இதயத்தில் குடி வந்ததற்கு, எங்களுக்கு!, என்றாள் சட்டென.

 

அது சரி, சம்மந்தப்பட்ட ரெண்டு உள்ளங்கள விட்டுட்டு, என்னப்போய் ஏன் மேடம் கலாய்க்கிறீங்க?

 

அப்ப நீங்க சித்துவ குடுக்கச் சொல்லுங்க

 

அத நீங்களே சொல்ல வேண்டியதுதான! ஃபோனக் குடுக்கவா?

 

நீங்களே கேட்டுச் சொல்லுங்க

 

அவனே இன்னக்கித்தான் ஏதாவது ரெஸ்ட்டாரண்ட் போகலாம், ஒனக்கு பார்ட்டி தரேன்னான்! அதயும் கெடுத்துறாதீங்க மேடம்

 

என்ன! மேடம்னு கூப்பிட ஆரம்பிச்சுட்டீங்க?

 

நீங்தான ஆஃபீசர் மாதிரி ஆரம்பிச்சீங்க, அது அப்டியே ஃப்ளோல வருதுங்க மேடம்!

 

என்ன ஃப்ளோவோ?, மொதல்ல மேடத்த கட் பண்ணுங்க. அப்பறம் நா சொல்றத அப்படியே, ஒங்க பக்கத்துல இருக்குற சத்தியவான்ட சொல்லுங்க

 

சரிங்க மேடம்!

 

ச்சூ! என்று அதட்டிவிட்டு, இப்ப மெரினா பீச்சுலதான இருக்கீங்க?, என்று கேட்டாள் ரிது.

 

அதெப்படி நீங்க எங்க லொக்கேஷன மாத்தலாம்? நாங்க இருக்கறது பெசன்ட் நகர்ல, யோகி.

 

எல்லாரும் பொதுவாப் போறது மெரீனா. அதான் கேட்டேன். பெசன்ட் நகர்ல என்ன ஸ்பெஷல்?

 

அலையும், அமைதியும் இங்க கொஞ்சம் அதிகமா இருக்கும்

 

சாருக்கு எல்லாமே அதிகமாவே இருக்கணுமோ?

 

என்னச் சொல்லிட்டு, நீங்க சாருன்றீங்க?

 

சரி சொல்லல. வேறென்ன ஸ்பெஷல்?

 

சொன்னா சிரிக்கக் கூடாது!

 

சொல்லுங்க முயற்சி பண்றேன்

 

ஈவினிங் ஃபிஷ் போட்டு(Fish Boat) வரும்! அப்படியே ஃப்ரெஷ் பீசா கொஞ்சம் வாங்கி, சமைச்சு சாப்பிட வச்சுக்குவோம்!, தங்கள் வாழ்க்கை ரகசியத்தில் ஒன்றை கூறுவதுபோல் சொன்னான் யோகி.

 

அருகில் நின்ற சித்தார்த், ஏன்டா இவற்றையெல்லாம் உளறிக்கொண்டிருக்கிறாய் என்பதுபோல் அவனையே உற்றுப் பார்த்தான்.

 

கட்டிக்கப் போறவ கொடுத்து வச்சவ!என்று மனதில் எண்ணிக்கொண்டுவெரி நைஸ்!, என்றாள்.

 

சரி, நீங்க சொல்ல வந்தத சொல்லுங்க, யோகி.

 

 கம்மிங் சண்டே திருவான்மியூர் பீச்சுக்கு ரெண்டு பேரும் வரீங்க! நாங்க மூனு பேரும் வரோம்! ஓக்கே?, என்றாள் ரிது.

 

திருவான்மியூர் பீச்சா?, என்றான் யோகி.

 

ஆமா, எத்தன நாள்தான் மெரினா பீச்சயும், பெசன்ட்நகர் பீச்சயும் பாத்துகிட்டு இருப்பீங்க? அதான் அங்க போயிட்டு, அப்டியே பக்கத்துல ஏதாவது ரெஸ்ட்டாரென்ட்ல சாப்ட்டுட்டு வரலாமேன்னு கேட்டேன், ரிது.

 

பீச்செல்லாம் ஓக்கே! ஆனா, எனக்கு சண்டே லீவெல்லாம் கெடையாதே!, யோகி.

 

அதான் தெரியுமே,

 

எப்படித் தெரியும்?

 

பொதுவா மால்ல வேல பாக்குறவங்களுக்கு எல்லாம் லீவு இருக்காதுல்ல! இதெல்லாம் ஜென்ரல் நாலேஜ் யோகி!,

 

ஓ!

 

ஆஃப்டர் நூன் பர்மிஷன் மாதிரி கேளுங்க! ஒங்க பாஸ் ஒங்க மேல வச்சிருக்கிற மரியாதைக்கு இதுகூட தரமாட்டாரா என்ன?

 

என்னோட பாஸ் எம்மேல எவ்ளோ மரியாதை வச்சிருக்காருன்னு ஒங்களுக்கு எப்படித் தெரியும்?

 

இதுவும் ஜென்ரல் நாலேஜ்தான்! சரி, முடிவா என்ன சொல்றீங்க?

 

முயற்சி பண்றேன்

 

முயற்சி திருவினையாக்கும்

 

சித்துகிட்ட ஒரு வார்த்தை சொல்றீங்களா?, என்று கேட்டுக்கொண்டே சித்துவைப் பார்த்தான் யோகி.

 

அதுக்கெல்லாம் வேற ஆளு இருக்கு!, என்று கூறிக்கொண்டே அவள் அருகில் பார்த்தாள், அங்கு மற்ற இருவருமே இல்லை.

 

ஓக்கே! அப்பறம் பேசலாம். இப்ப கட் பண்றேன், பை, என்று அலைபேசியை வைத்துவிட்டு ரெண்டும் எங்கிட்டு போச்சுக!, என நினைத்தவாறே, அறையை விட்டு வெளியே வந்தாள் ரிது.

©©|©©

 

பெசன்ட் நகர் பீச்சில், அலை வந்து தொடும் தூரத்தில் நின்று கால்களை நனைத்தவாறு நின்றுகொண்டிருந்த சித்து, என்னவாம் மச்சி?, என்று கேட்டான்.

 

எல்லாம் ஒங்கிட்ட சொல்ல வேண்டியத எங்ககிட்ட சொல்லிட்டு வச்சிருச்சு!, யோகி.

 

ஏன், எங்கிட்ட சொல்ல மாட்டங்களாமா?, சித்து.

 

கேட்டேனே! அதுக்கெல்லாம் வேற ஆள் இருக்காங்களாம்!

 

ஊரு ஒன்னு கூடிட்டாங்க மச்சி!, சித்து.

 

இருக்கட்டுமே, ஒருநாள் தெரியப்போறதுதான!, யோகி.

 

ஒருநாள் தெரியறதுதான், ஆனா ஒரே நாள்ல தெரிஞ்சிருச்சே! அதுதான் மச்சி அதிர்ச்சியா இருக்கு

 

அவ்வளவு ஸ்பீடு மச்சி நம்மாளுக

 

நம்மாளுன்னா?

 

நம்மாளுன்னா, நம்மாளு, ஒன்னோட ஆளு…”

 

ம், ம், அப்பறம்? இழுக்கற மாதிரித் தெரியுதே!சித்து விடாமல் கேட்டான் யோகியை.

 

இழுக்கல மச்சி. இருக்குறமாதிரி இருக்கு. ஆனா இல்ல! இல்லாத மாதிரி இருக்கு ஆனா இருக்கு!

 

இதத்தான்டா சொன்னேன், இழுக்கற மாதிரி இருக்குன்னு!, என்று அடிப்பதுபோல் கையை ஓங்கிக் கொண்டு வந்தான் சித்து. யோகி ஓடுவதுபோல் ஓடினான்.

 

இருவரும் கடற்கரையில் அலையின் நடுவே ஓடி விளையாடுவதுபோல் பார்ப்பவர்களுக்குத் தெரிந்தது.

©©|©©

 

விடுதி அறையில் சித்து தனக்குத் தெரிந்த பக்குவத்தில், வாங்கி வந்த மீனை வறுத்து தனியாக ஒரு பாத்திரத்தில் அடுக்கிக்கொண்டிருந்தான்.

 

யோகிக்கு வாட்ஸ்அப்பில், அவன் தாய்மாமன் சுந்தரத்தின் மகள் வைஜெயத்தி அனுப்பியிருந்த பத்திரங்கள் எல்லாம் நிறைய படங்களாக வந்திருந்தன. அதில் அவன் மூழ்கியிருந்தான்.

 

நிறைய இருக்கா மச்சி? தெளிவாத் தெரியுதா?, சித்து.

 

தெளிவாத் தெரியல. ஆனா மேட்டர் என்னன்னு புரிஞ்சுக்கலாம். பழைய பத்திரம்ல! அதான் கொஞ்சம் டேமேஜா இருக்கு, யோகி.

 

புரியுதா?

 

ம், கிட்டத்தட்ட எல்லாத்தையுமே பாத்திட்டேன்

 

என்ன செய்யலாம்னு இருக்க?, ஊருக்கு எப்பப் போற

 

ஊருக்குப் போக வேண்டியிருக்காதுன்னு நெனக்கிறேன். ஏன்னா, அம்மா பேர்லதான எழுதப் போறாங்க! நா போனா ஒரு சாட்சியா கையெழுத்துப் போடலாம். அதுக்கு எதுக்கு கிளம்பிப் போகனும்னு பாக்குறேன், யோகி உண்மை நிலவரத்தை விளக்கினான்.

 

அப்பறம் எதுக்கு மச்சி தேவையில்லாம பத்திரத்தையெல்லாம் கேட்ட?

 

காரணமாத்தான்டா, இன்னிக்கி நிலவரப்படி எவ்வளவு போகும்னு நெட்ல கொஞ்சம் பாத்துச் சொல்லு மச்சி. இன்னொரு விசயம்டா, நான் என்ன நெனக்கிறேன்னா…, என்று இழுத்தான் யோகி.

 

நீ நெனக்கிறது இருக்கட்டும். மொதல்ல மீனக் காலி பண்ணுவோம், வா! அப்படியே நைட் சாப்பாட்டையும் முடிச்சுருவோம்!, என்று சித்து கூறிவிட்டு சாப்பிடத் தேவையானவற்றை செய்யத் துவங்கினான்.

 

நைட்டுக்குள்ள பாத்துருவோம் மச்சி, யோகி விடவில்லை.

 

எஸ் யுவர் ஆனர்!, தலையைக் குனிந்து பணியை ஏற்பதுபோல் செய்துவிட்டு, கை கழுவி வருமாறு செய்கையில் பணித்தான் சித்து.

 

இரவு உணவை முடித்துவிட்டு, வெகுநேரம் இருவரும் யோகியின் தாய்மாமன் அனுப்பிய பத்திரங்களை எல்லாம் ஒவ்வொன்றாக எடுத்து இணையதளங்களில் ஆராய்ந்து கொண்டிருந்தார்கள்.

 

பின்பு, சித்தார்த்திடம் பத்திரம் சம்பந்தமாக கலந்தாலோசிக்க வேண்டும் என்று நினைத்த முக்கியமான விபரங்களையும் ஆலோசித்துவிட்டு உறங்கச் சென்றான் யோகி.

 

அதன்பின், சித்து மட்டும் மதுரையில் இருந்த தாய் பாமாவிடம் சற்று நேரம் பேசிக்கொண்டிருந்தான். தாயின் அருகில் தந்தையும் இருந்ததால் அவருடனும் ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு, சிறிது நேரம் டைரியில் எதையோ எழுதி, பின் உறங்கிப்போனான்.

 

காலையில் எழுந்ததும், இருவரும் கிளம்பிச் சென்று அவரவர் வேலைகளில் மூழ்கினர்.

 

சித்து காலையில் வேலைக்கு கிளம்பும் முன்பே, முன்தினம்  சம்யுக்தாவின் வீட்டில் நடந்த நிகழ்வுகளை எல்லாம் அலைபேசியில் கேட்டுத் தெரிந்து கொண்டான். வரும் ஞாயிறு அன்று வெளியில் செல்லலாம் என்ற முடிவுடன் சம்யுக்தாவும், சித்துவும் இருந்தனர்.

 

சித்துவிற்கு புதிய வேலை ஒன்றை ஒப்படைத்து அவன் நிறுவனம் விரைந்து முடித்துக்கொடுக்க வேண்டும் என்று கட்டளையிட்டிருந்தது.

 

யோகியின் மாலில், அவன் ஆலோசனையின்படி புதிய உள்கட்டமைப்பு வேலைகள் வேகமாக நடந்தேறின. அவற்றை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தான் யோகி. அப்பொழுதுதான் தாய்மாமனின் பத்திரம் பற்றிய நினைவு வந்தது. உடனே ஒரு தனிமையான இடத்திற்கு வந்து அலைபேசியில் அவரை அழைத்தான்.

 

ஹலோ மாமா. நேத்து வைஜீ அனுப்பியிருந்த பத்திரத்தையெல்லாம் பாத்துட்டேன், யோகி ஆரம்பித்தான்.

 

சரி, சொல்லுங்க மாப்ள, சுந்தரம்.

 

ஒன்னு சொன்னாக் கோவிச்சுக்க மாட்டீங்களே!, என்றான் யோகி பீடிகையாக.

 

ரெண்டு, மூனுகூடச் சொல்லுங்க மாப்ள! ஒங்களுக்கில்லாத உரிமையா எங்கிட்ட!, என்றார் சுந்தரம் சந்தோசமாக.

 

சரி மொதல்ல அம்மாட்ட பேசிடறேன். அம்மா பக்கத்துல இருக்காங்களா?, யோகி.

 

இந்தா போனக் குடுக்கறேன். அம்மாவும் புள்ளையுமா நல்லாப் பேசுங்க!, என்று கூறிவிட்டு அங்கே அருகில் மீனாட்சியுடன் பேசிக்கொண்டிருந்த சரண்யாவை கையால் அழைத்தார்.

 

இந்தா ஒம்புள்ள என்னமோ பேசனுமாம், சுந்தரம்.

 

என்ன ராசா சொல்லுப்பா, எனறார் சரண்யா.

 

அம்மா, ஒங்களுக்கு கிராமத்துல இருக்குற அந்த வீட்டுல பங்கு வேணுமாமா?, நேரடியாக விஷயத்திற்கு வந்தான் யோகி.

 

நான் அப்படியெல்லாம் ஒன்னுஞ் சொல்லலயேப்பா. அண்ணந்தே இப்பவே பிரிச்சுட்டா, பின்னாடி பிரச்சனை எதுவும் இருக்காதுன்னு ரொம்ப நாளாச் சொல்லிகிட்டே இருந்துச்சு. அதுக்கும் அடிக்கடி ஒடம்புக்கு சரியில்லாம போகுதாம், சரண்யா.

 

இப்பவா, பெறகான்னு கேக்கல. அந்த வீட்டுல பங்கு வேணுமான்னு கேட்டேன், யோகி.

 

நீ என்னவோ சொல்ல வற, அதச் சொல்லிருப்பா. அதுப்படியே இருந்துட்டுப் போகட்டும், சரண்யா.

 

அம்மா, நமக்குத்தான் மதுரைலயே சொந்தமா வீடு இருக்கு. மேலவேற ரெண்டு வாடகைக்கு விட்ருக்கோம்

 

ஆமா

 

அப்பறம் அங்கயும் போய் இருக்கவா முடியும்? அதுனால நா என்ன சொல்றேன்னா, வீட்டப் பிரிச்சு பங்குபோட வேண்டாம்மா. அத மாமாவே வச்சுக்கிரட்டும். நஞ்ச, புஞ்சகள மட்டும் நமக்கு எழுதிக் கொடுக்கச் சொல்லுங்க போதும்

 

அப்டிங்கிறியா? சரி, நீ சொன்னா சரிதான்யா. ஆனா நா இங்க வந்து நஞ்ச, புஞ்சயெல்லாம் பாத்து வெள்ளாம பண்ண முடியாதே!

 

அதெல்லாம் ஒன்னும் வேணாம்மா. நமக்கு ஒரு கொறையும் இருக்காது. நா பாத்துக்கறேன். சரியா?

 

சரிப்பா, நீயே மாமாட்டச் சொல்லீறியா?, சரண்யா சம்மதித்தது யோகிக்கு சற்று நிம்மதியைக் கொடுத்தது.

 

நானே சொல்லிருப்பேன், ஆனா நீங்க கோச்சுக்குவிங்களோன்னுதான் ஒங்கட்ட மொதல்ல கேட்டேன். சரி, மாமாட்ட ஃபோனக் கொடுங்க, யோகி.

 

இந்தாங்கண்ணே, ஒங்கட்ட பேசனுமாம், தன் அண்ணனிடம் அலைபேசியைக் கொடுத்துவிட்டு விலகிக்கொண்டார் சரண்யா.

 

சொல்லுங்க மாப்ள என்றார் சுந்தரம்.

 

மாமா, வீட்டப் பிரிக்க வேண்டாம். ஒங்க பேர்லயே இருக்கட்டும், நீங்களே வச்சிக்கோங்க. நா அம்மாட்ட சொல்லிட்டேன், யோகி.

 

அதெல்லாம் வேணாம் மாப்ள, நாளைக்கு ஒங்கப்பா சைடுலருந்து ஒரு சொல்லு வந்துட்டா நல்லாருக்காதுல்ல

 

எங்கப்பா சைடுல நாந்தான மாமா இருக்கேன். வேற யாரு வரப்போறா?

 

நீங்க இப்ப ஏதோ நெனப்புல சொல்றீங்க

 

இல்ல மாமா, நா இன்னும் முடிக்கல, கேளுங்க. அந்த நஞ்ச, புஞ்சையெல்லாம் அம்மா பேருக்கு பத்திரம் போட்ருங்க. மதிப்பு எல்லாம் சரியாத்தான இருக்கும்?, யோகி.

 

அப்ப, வெள்ளாமையில்லாம நா என்ன பண்றது மாப்ள? இதுநா வரைக்கும் அதுலயே பொழப்ப ஓட்டிட்டோம்

 

மாமா, பத்திரம் மட்டும்தான அம்மா பேருக்கு போடச் சொன்னேன். வெள்ளாமய நீங்களே பண்ணுங்க மாமா, என்ன வந்தாலும் நாங்க கேக்கமாட்டோம். அம்மாட்டயும் சொல்லிட்டேன்

 

என்ன மாப்ள இது புதுசா இருக்குது!, சுந்தரம் அதிசயித்தார்.

 

ஆமா, மாமா. ஒங்க காலத்துக்கும் நீங்களே பாத்துக்கோங்க. நா அம்மாவ நல்லா பாத்துக்குவேன்ற நம்பிக்கை, எனக்கு இருக்கு மாமா. சென்னைக்கே கூட்டிட்டு வந்திரலாம்னு பாக்குறேன். ஆனா அம்மாதான் என்ன சொல்லுவாங்கன்னு தெரியல?, யோகி தாயைப் பற்றி மட்டும் கவலை கொண்டான்.

 

சரி மாப்ள, நானும் அம்மாட்டச் சொல்லிப் பாக்குறேன். ஆனா, நீங்களும் பத்திரம் பத்தி, எதுக்கும் ஒன்னுக்கு ரெண்டு தடவ யோசிச்சுக்கோங்க. தாசில்தார் ஆபீஸ்ல கொஞ்சம் வேல அதிகமா இருக்கும்போல. அதுனால, லேட்டாகுது. நா முடிச்சுட்டு சொல்றேன். போன வைக்கவா

 

சரி மாமா. பாத்துக்கலாம், அலைபேசியை வைத்துவிட்டு, மீண்டும் வேலையில் மூழ்கினான் யோகி.

©©|©©

 

என்னடீ, ரூமுக்குள்ள ஒரே கூச்சலாம்ல நேத்து!, என்று ஆரம்பித்தார் ரிதுவின் தாயார் திலோத்தமை.

 

அதுக்குள்ள ஸ்பை சொல்லியாச்சா?, ரிது.

 

ஸ்பையுமில்ல, கையுமில்ல. சம்யுவோட அம்மாதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னால, கால் பண்ணாங்க. கவலைப்பட்ட மாதிரி தெரிஞ்சது

 

அதெல்லாம் ஒன்னுமில்லயே திலோ, குறும்பாக பதில் வந்தது ரிதுவிடமிருந்து.

 

பேரச்சொன்ன கொன்னுபுடுவேன்

 

அப்ப, அப்பா மட்டும் சொல்றாரு, திலோ, திலோன்னு! ஒன்னுமே சொல்ல மாட்டேங்குற, வேண்டுமென்றே சிறுமிபோல் முகத்தை வைத்துக்கொண்டு அம்மாவை சீண்டிப் பார்த்தாள் ரிது.

 

நீ, பேச்ச மாத்தறதுக்குத்தான இப்டியெல்லாம் பண்ற! அப்பா வரட்டும், அவர்கிட்ட சொன்னா, எங்க யாரப்பாத்து எப்படி விசாரிக்கணும்னு விசாரிச்சு கரெக்டா மெஸேஜ் குடுத்துருவாரு

 

அம்மா, என் செல்லம்மா! தயவுசெய்து வுட்றேம்மா

 

விட்டாச்சு போ, என்று திலோத்தமை வேற வேலையாக உள்ளே சென்றார். ரிது வழக்கம் போல் அலைபேசியை எடுத்தாள்.

 

விட்டது தொடருமா!

©©|©©