யாழ்-11

IMG-20210214-WA0021-625d61c9

யாழ்-11

“முடிவா நீ என்ன தான் சொல்ற?” என்று கல்யாணி மகளிடம் முறையிட்டுக்
கொண்டு இருந்தார்.

“முடியாது” என்று ராஷ்மிகா பிடிவாதம் செய்தாள்.

“இது யாரோ கல்யாணம் இல்ல ராஷ்மி.. உன் தம்பியோட கல்யாணம்.. உப்பு சர்க்கரை
மாத்திட்டு துணி எடுத்திட்டு வரது தானே.. இதுக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம் பண்ற”
என்று கல்யாணி குரலை உயர்த்தி மகளைத் திட்ட..

“பாட்டி அம்மாவத் திட்டாதிங்க” என்றபடி உள்ளே வந்தாள் யாழ்மொழி.

கல்யாணி பேத்தியைப் பார்க்க “அம்மா பாவம் பாட்டி.. திட்டாதிங்க” என்று  ராஷ்மிகாவின் மடியில் ஏறி
உட்கார்ந்தவள் அன்னையின் கன்னத்தில் முத்தமிட்டாள்.

மகளின் செய்கையில் கரைந்து யாழிற்கு கன்னத்தில் முத்தமிட்ட ராஷ்மிகா “யாழ்.. டெட்டி பாட்டி உனக்கு ரசகுல்லா
வச்சிருக்காங்க.. போய் வாங்கிக்க” என்று சொல்ல.. சிறியவளோ இனிப்பிற்கு
ஆசைப்பட்டு வெளியே  ஓடினாள்.

“அம்மா.. என்னால வர முடியாது.. நீங்க போங்க.. கல்யாண ஜவுளி எல்லாம்
எனக்கு யாழ்க்கு நீங்களே வாங்கிடுங்க” என்று தீர்மானமாகச் சொல்ல
கல்யாணியோ மகளின் பதிலைக் கேட்டு அவளை முறைத்தார்.

“யாழ் அப்பா வருவாங்க.. அதான வர மாட்டிற நீ” என்று மகளை துளையிடும்
பார்வையோடு கேட்டார் அவர்.

“ஆமா.. ” என்றாள் ராஷ்மிகா முகத்தை இறுக வைத்தபடி.

“எத்தனை நாள் மறச்சு வக்க போற யாழ?” என்று கேட்டார் கல்யாணி நிதானமாக.

“தெரியாது.. கல்யாணத்து அன்னிக்கு வரைக்கும் கூட வைப்பேன்.. அவ என்
பொண்ணு” என்றாள் ராஷ்மிகா அழுத்தமாக.

“ஏன் ராஷ்மி இப்படி பண்ற..?” என்று அவர் ஆதங்கத்தில் கேட்க.. ராஷ்மிகாவோ வெடித்தாள்.

“என் முடிவு இதான் அம்மா.. நானும் வர மாட்டேன்.. யாழையும் அனுப்ப மாட்டேன்”
என்று ராஷ்மிகா வெடிக்க..

“எல்லாம் என் நேரம் ராஷ்மி.. உன்னைய என் பேச்சு கேக்காத மாதிரி வளத்து
வச்சிட்டு உன் அப்பா போயிட்டாரு.. இப்ப நான் எதுக்கும் உதவாம இருக்கேன்.
உன்னை என்னால எதுவும் பண்ண முடியல.. பேசாம உன் அப்பாக் கூடவே  போயிருக்கலாம் நான்” என்று முழு மூச்சில் கத்திப் பேசியவர்.. ராஷ்மிகாவின் முகத்தைப் பாராமல் வெளியே சென்று
விட்டார். கஷ்டமாக இருந்தாலும் அவளின் வீம்பு கொஞ்சமும் இறங்கவில்லை. 

ஹர்ஷா உள்ளே வந்து “அக்கா நீ வரலையா?” என்று வினவ..

தம்பியிடம் மன்னிப்பை கண்களாலேயே யாசித்தவள் “ப்ளீஸ் டா தம்பி.. என்னால
முடியாது..” என்று ராஷ்மிகா சொல்ல..

“அட அக்கா.. எல்லாமே உன் விஷ் தான்.. சரி என்ன கலர் சாரி வேணும்.. யாழுக்கு என்ன எடுக்கணும்” என்று ஹர்ஷா
கேசுவலாகக் கேட்க..

“எதாவது உங்களுக்குப் பிடிச்சதை எடுங்க ஹர்ஷா.. வேணா கீர்த்திய செலக்ட்
பண்ண சொல்லு” – என்று ராஷ்மிகா சொல்ல..

“நான் தான் அவளுக்கே இன்னிக்கு செலக்ஷன்” என்று காலரைத் தூக்கி விட்டான் ஹர்ஷா.

“பார்ராரா… ஏதோ மூஞ்சிய உர்ர்ர்னு வச்சிருந்த போன வாரம்” என்று கண்களை சுருக்கி நக்கலாக வினவ..

“அது அப்பவே சரி ஆகிடுச்சு அக்கா” என்று கண்களைச் சிமிட்ட.. ராஷ்மிகாவிற்கு
நிம்மதியாக இருந்தது. பின் அனைவரும் கிளம்பிச் செல்ல ராஷ்மிகா மற்றும் யாழ்மொழி தனியே இருந்தனர்.

“இந்த சாரி வேணாம்” என்று ஐம்பதாவது பட்டு புடவையை நிராகரித்தான் ஹர்ஷவர்தன்.

“ஓய்.. என்ன இது.. எது எடுத்தாலும் வேணாம்னு.. நானே இந்நேரம் எடுத்திருப்பேன்.. செலக்ட் பண்றனு சொல்லிட்டு எல்லாத்தையும் ரிஜக்ட் பண்ற ஹர்ஷா.. எனக்கே போர்
அடிக்குது” என்று அலுத்தாள் கீர்த்தி.

“ம்ஹூம்.. எனக்கு இது எதுவுமே சாட்டிஸ்பைட்-அ இல்ல கீர்த்தி..” என்று அவன் புடவைகளைப் பார்த்தபடியே
சொல்ல..

“டேய்.. எப்பா.. என்னாலயே முடியலடா” என்று சொன்ன கீர்த்தி.. “அங்க பாரு உங்க அம்மா.. என் அம்மா எல்லாம்..
ரிசப்ஷன் செலக்ஷன் அவங்களுக்கே முடிக்கப் போறாங்க.. நாம இன்னும்
முகூர்த்த புடவையே எடுக்கலை” என்று பின்னால் திரும்பிப் பார்த்தபடிக்  கூறினாள் கீர்த்தி. கூடவே முக்கிய சொந்தங்களும் சிலது வந்திருந்தது.

“அவங்க எல்லாம் எப்படி கட்டுனா என்ன.. எல்லாம் ஓல்ட் லேடிஸ்.. பட் நீ என்  பொண்டாட்டியா பக்கத்துல உக்காரப் போற.. ஸோ அவ்வளவு ஈசியா உனக்கு
எடுக்க மாட்டேன்” என்று சொல்ல அவனைப் பார்த்து பொய்யாய் முறைத்தவள் ஒரு சேரில் உட்கார்ந்து  கொண்டாள்.

பின் ஒரு சேலையை எடுத்து ஹர்ஷா அவளிடம் நீட்ட அந்த சேலையைப் பார்த்தவள் அசந்து தான் போனாள். தங்க
நிறத்தில் முழுதாக இருந்த காஞ்சிவரம் பட்டில் ஆங்காங்கே ஒரிஜினல் தங்க
ஜரிகை வேலைப்பாடு இருக்க.. அவன் இத்தனை நேரம் தேடியதில் தப்பில்லை என்று யோசித்தவள் யாரும் அறிய
வண்ணம் உதட்டைக் குவித்து
காற்றிலேயே ஒரு முத்தத்தை பதித்தாள் கீர்த்தி. அவள் உதடு குவிந்த அழகில் தொலைந்தவன் அவள் அருகில் குனிந்து அவளிற்கு மட்டும் கேட்கும் வண்ணம் “சரி
பர்ஸ்ட் நைட் புடவையும் எடுத்திடலாமா?” என்று வினவ.. கண்களைச் சுருக்கி அவனை முறைத்த கீர்த்தி..

“அங்க பாரு உன் அப்பா.. அதாவது என் மாமனார் சிவக்குமார் நிற்கிறார்..  அவர் கிட்ட சொல்லட்டா” என்று கீர்த்தி ஹர்ஷாவை மிரட்ட..

“ஆமா.. அவ்வளவு தான் அந்த ஸ்டிரிக்ட் ஆபிஸர்.. ஏற்கனவே நீ சொன்னத வச்சு என்னக் கொஞ்சம் வில்லத் தனமா
பாக்கறாரு.. இதை மட்டும் சொன்ன.. என்ன சொந்த மகன்னு கூட பாக்காம உள்ள தள்ளிடுவாரு” என்று சொல்ல கீர்த்திக்கு சிரிப்பு வந்துவிட்டது.

“கீர்த்தி.. அக்காக்கும் யாழ்க்கும் நீயே செலக்ட் பண்ணிடு” என்று சொல்ல அப்போது தான் நியாபகம் வந்தவளாய் “ஏன் அவங்க வரலையா?” என்று வினவ..

“இல்ல வரல” என்று ஹர்ஷா முடித்துக் கொள்ள.. கீர்த்தியும் மேலே எதுவும் கேட்கவில்லை. தன் அண்ணன் ஹர்ஷா
சொன்ன மாதிரி நடந்திருக்க மாட்டான் என்று இன்னும் நம்பிக்கை உள்ளே இருந்தது கீர்த்தனா ஆதர்ஷினிக்கு.

அக்கா மற்றும் அக்கா மகளுக்கு துணிகளை தனியாக யாருக்கும் தெரியாமல் வாங்க “இதெல்லாம் தேவையா.. எப்படியும் தெரியத்தானே போது ஹர்ஷா” என்றாள் கீர்த்தி.

“தெரியத்தான் போது.. ஆனா அக்கா அதுவரைக்கும் ஜாலியா இருக்கட்டும் உன் அண்ணன் கண்ல படாம” என்று ஹர்ஷா இறுகிய குரலில் சொல்ல..

“இவனுக்கு இப்போ என் அண்ணனை இழுக்கலைனா தூக்கம் வராது” என்று
முணுமுணுக்க.. அது கேட்டாலும் கேட்காதது போல இருந்து விட்டான் ஹர்ஷவர்தன். ஹர்ஷா வருவான்.. வந்தாலும் முகத்தைக் காட்டுவான்..
தங்கைக்கு சங்கடமாக இருக்கும் என்றே அஸ்வின் குமார் அன்று வரவில்லை.

கீர்த்தியின் ஃபோன் ஒலிக்க அதை எடுத்தவள் திரையில் தன் அண்ணன் அழைப்பதைக் கண்டாள். ஃபோனை அட்டென்ட் செய்து “ஹலோ” என்று கீர்த்தி பேச.. கீர்த்தியோ துணிக்கடையில் இருந்ததால் அஸ்வினிற்கு அவள் பேசுவது கரகரத்தது.

“ஹலோ தர்ஷு.. எங்கடா இருக்கிங்க.. புடவை எல்லாம் எடுத்தாச்சா?” என்று அஸ்வின் கேட்க..

“எடுத்தாச்சு அண்ணா..” என்றவள் “நீங்க எங்க இருக்கிங்க?” என்று வினவினாள்.

“நான் வொர்க் முடிச்சிட்டேன் டா.. நீ எங்க வரணும்னு சொல்லு வரேன்” என்று  அஸ்வின் பேச.. அண்ணனிடம்
சீரியஸாகப் பேசிக் கொண்டிருந்த கீர்த்தியை ஹர்ஷா பழிக்க…

“ஹர்ஷா..” என்று சிறிது செல்லமாக அதட்டியவள் “வீட்டுக்கு வந்துடு அண்ணா” என்றாள் கீர்த்தி.. அங்கே தான்
விதி சிரித்தது.

எதிர்பக்கம் என்ன நடந்தது என்று தெரியாத அஸ்வினுக்கு “ஹர்ஷா வீட்டுக்கு வந்துடு அண்ணா” என்று கேட்டது. ஒரு நிமிடம் அங்கு எதற்கு என்று
யோசித்தவன் சரி ஏதாவது இருக்கும் என்று “சரி டா” என்று வைத்துவிட்டான்.

“யாழ் காலைலயும் சரியா சாப்பிடல.. பேசாம வந்து இந்த ஆப்பிள சாப்பிடு” என்று டி.வி யில் மூழ்கி இருந்த மகளை
அதட்டிக் கொண்டு இருந்தாள் சமையல் அறையில் இருந்தபடி.

“முடியாது..” என்று மகளிடம் இருந்து குரல் வர.. “இவளை” என்று சமையல் இருந்து
வெளியே வந்த ராஷ்மிகா.. டி.வி ஸ்விட்சை அணைத்தாள்.

“ம்மா…” என்று யாழ் சிணுங்க..

“வந்து சாப்பிட சொன்ன.. என்ன பழக்கம் இது யாழ்.. நீ எவ்வளவு குட் கேர்ள் டெல்லி
ல.. இப்ப தாத்தா பாட்டி மாமா கிட்ட வந்தோன மாறிட்ட” என்று மகளின் வழியிலேயே ராஷ்மிகா செல்ல..

“நோ.. நான் குட் கேர்ள்” என்றாள் பிடிவாதமானக் குரலில் யாழ்.

“அப்ப… ஆப்பிள் சாப்பிடு” என்று ராஷ்மிகா சொல்ல.. வேறு வழியின்றி சாப்பிட அமர்ந்தாள் யாழ்மொழி.

சாப்பிட்டு முடித்த யாழ்.. “அம்மா.. இட்ஸ் போரிங்.. விளையாடலாம்” என்று
யாழ் அழைக்க..

“என்ன விளையாடலாம்” – என்று ராஷ்மிகா கேட்டாள்..

“ஒழிஞ்சி விளையாடலாம் ம்மா” என்று தன்னை சுற்றி நடக்கும் கண்ணா மூச்சி
ஆட்டம் தெரியாமல் சொன்னாள் யாழ்மொழி.

“சரி நீ போய் கண்டுபிடி” என்று ராஷ்மிகா சொல்ல..

“லேசி கூஸ்” என்று போனாள் யாழ்மொழி. “குட்டிக் குரங்கு” என்று முணுமுணத்தாலும் மகளை அலைய விட
எண்ணாமல் கதவின் பின்னேயே ஒளிந்தாள் ராஷ்மிகா.

“அம்மா ஔட் அம்மா ஔட்..” என்றவள் “நீங்க போய் பிப்டி கௌன்ட் பண்ணுங்க ம்மா” என்று போய் ஒளிந்து கொண்டாள் வாண்டு.

ராஷ்மிகா இருபதை மட்டும் எண்ணி விட்டு வர அவளின் மகளோ அதை கண்டு
கொண்டு சண்டைக்கு வந்தாள். “நீங்க சீட் பண்றிங்க.. மறுபடியும் ஔட் போங்க” என்று சிறியவள் விரட்ட.. பெரியவள் சண்டைக்கு வந்தாள்.

“அதெல்லாம் இல்லை.. போய் நீயே கௌன்ட் பண்ணு” – என்று ராஷ்மிகா சொல்ல..

“யூ ஆர் சீட்டிங்.. பேட் அம்மா..” என்று தலையை ஆட்டி ஆட்டி சொன்னவள் “தாய்க்கிழவி” என்று கடைசியாக யாழ்
கோபத்தோடு சொல்ல..

“அடிங்க….” என்று ராஷ்மிகா துரத்த யாழ்மொழி அன்னையின் கையில்  சிக்காமல் ஓடினாள்.

“ஏய் கைல சிக்குனேனு வையேன்.. நில்லு டி” என்று ராஷ்மிகா துரத்த..

“நீ வேணா வந்து புடிச்சுக்கோ ம்மா” என்று பின்னால் திரும்பிய படி ஓடிய யாழ்மொழி
வாயிலின் உள்ளே நுழைந்த அந்த நீள கால்கள் மீது இடித்தாள்.

இடித்து தடுமாறி விழப்போன 
சிறியவளை தாங்கிப் பிடித்த வலிய கரங்களை நிமிர்ந்து பார்த்த யாழ்மொழியின் கண்கள் ஆச்சரியத்தில்
விரிந்தது. “ஐ.. அப்பா.. வந்துட்டிங்களா” என்று அந்தக் கால்களை யாழ் கட்டிக் கொள்ள அஸ்வினின் சர்வமும்
ஆடிவிட்டது.

தங்கை சொன்ன பின் நேரே ஹர்ஷா வீட்டிற்குள் வந்தவன் மேல் தான் யாழ் வந்து மோதியது. குழந்தையைக் கையில் பிடித்தவன் எதேச்சையாக நேரே பார்க்க
அவனை பார்த்த அதிர்ச்சியில் வேறோடி நின்றிருந்தாள் ராஷ்மிகா. முழுதாக நான்கு  வருடங்களுக்குப் பிறகு நேருக்கு நேர் அஸ்வினை சந்திக்கிறாள் அவள். மனம் கடந்ந கால அழகையும் கசப்பையும் ஒரே நேரத்தில் நினைவூட்ட ராஷ்மியோ தன் உள் உணர்வால் அதிர்ந்தாள்.

ராஷ்மிகாவைப் பார்த்தவனிற்கு அவளின் எண்ணங்களே.. அடுத்த
அதிர்ச்சியாக மகளின் “ஐ அப்பா வந்துட்டிங்களா” என்ற வாக்கியம் அவனின் இரும்பு இதயத்தையும் ஆட்டம் காண வைத்து விட்டது. தந்தையைப் பற்றிக் கேட்டுக் கொண்டே இருந்த யாழ்மொழியிடம்..

ஏதோ புரிய ராஷ்மிகாவைக் குற்றம் சாட்டும் பார்வையோடு அஸ்வின் நிமிர்ந்து பார்க்க.. ராஷ்மிகாவோ பார்வையை மகளிடம் பதித்தாள். “யாழ்
இங்க வா” என்று அதட்ட..
சிறியவளுக்கோ அன்னையின் கோபம் மூலைக்கு ஏறவில்லை.

மாறாக “ம்மா.. அப்பா வந்துட்டாங்க ம்மா” என்று தன் லட்டு வாயைத் திறந்து
வாண்டு மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்க.. அஸ்வினின் கரங்கள் மகளை அள்ளி
எடுத்தது.

தந்தை தன்னைத் தூக்க அவனுடைய ஆறடி உயரத்திற்கு தானும் இருந்ததில் குதுகாலித்தவள் “அப்பா நீங்க ரொம்ப ஹைட்டா இருக்கிங்க” என்று அவனின்
உயரத்தில் வாய் பிளந்தவள்..

“அப்பா நான் உங்களுக்கு கிஸ் தரட்டா?” என்று ஏதோ மகள் அன்னியரிடம் கேட்பது
போலக் கேட்க.. மகளின் இந்த அன்னியத் தன்மை அவனை வாள் கொண்டு அறுப்பது போல இருந்தது. பார்வையை
ராஷ்மிகாவிடம் திருப்பி.. அவளை முறைத்தான்.. ஏனெனில் அவள் தானே
இந்த நிலைக்குக் காரணம்.. மகள் என்று தன் வாரிசு என்று இருப்பதே இத்தனை நாள் மறைத்தவளை என்ன செய்தால் தகும் என்ற அளவிற்கு ஆத்திரம் வந்தது
அஸ்வின் குமாருக்கு.

“அப்பா.. இனிமேல் என்கூடயே இருங்க அப்பா” என்று யாழ்மொழி அஸ்வினிடம்
பேச ஆரம்பிக்க…

“யாழ்ழ்ழ்ழ…..” என்று முழங்கினாள் ராஷ்மிகா.

“இங்க இறங்கி வா…” – என்று மகளிற்கு ஆணையிட.. சிறுமியோ தற்செயலாக
தந்தையைத் திரும்பிப் புரியாமல் பார்த்தாள்.. அவளின் செயல் ராஷ்மிகாவின் கோபத்தை இன்னும் கிளறியது.

“யாழ்.. உனக்கு நான் தான் அம்மா.. அப்பா எல்லாம்.. அப்புறம் தாத்தா பாட்டி.. மாமா.. வேற யாரும் இல்ல” என்று
மகளிடம் கோபத்தில் அதட்டியவள்.. அவளை சென்று அஸ்வினின் கையில் இருந்து பிடுங்கப் போக.. அஸ்வினோ
ஒரு கையில் மகளை வைத்திருந்தபடியே இன்னொரு கையால் ராஷ்மிகாவை அடக்கி விட்டான்.

“இப்ப எதுக்கு இப்படி ஆடிட்டு இருக்க?” என்று அஸ்வின் அழுத்தமானக் குரலில்
கேட்க..

“என் பொண்ண என்கிட்ட குடு” – என்று வாங்க மறுபடியும் வாங்க வந்தவளைத்
எளிதாகத் தடுத்தவன்..

“உங்க பேர் என்ன?” என்று பிள்ளையிடம் அஸ்வின் கேட்க..

“யாழ்மொழி” – என்று குழந்தை சொல்ல.. ஒரு அர்த்தப் பார்வையோடு பார்க்க
ராஷ்மிகா தலை குனிந்தாள்.

“இங்க பாரு.. யாழ் எனக்கும் தான் பொண்ணு.. இத்தனை நாள் நீ மறச்சதே தப்பு.. மேலும் மேல எதையாவது பண்ணாத” என்று அதட்டலும்
கோபமுமாகச் சொல்ல ராஷ்மிகாவின் பீப்பி எகிறியது.

“இவ உன் பொண்ணுனு உனக்குத் தெரியுமா?” என்று ராஷ்மிகா அவனைக்
காயப்படுத்தும் நோக்கத்தோடு பேச..

“ராஷ்மிகா” என்று கர்ஜித்ததில் ராஷ்மிகா மட்டும் இல்லை.. தன் கையில் இருந்த
யாழ்மொழியும் நடுங்கியதை அஸ்வின் குமார் உணர்ந்தான்.

மகளிற்காக தன் கோபத்தை
அடக்கியவன் “குட்டிம்மா.. நீங்க போய் டி.வி பாருங்க.. அப்பாவும் அம்மாவும் ஒரு
வொர்க் பேசிட்டு வரோம்” என்று சொல்ல.. மணியாய் தந்தையின் சொல்லைக்
கேட்டு கொண்டு இறங்கிச் சென்றாள் யாழ்மொழி.

மகள் சென்ற பின் “குழந்தை முன்னாடி யோசிச்சு பேசணும் அப்படிங்ற அறிவு இல்லையா உனக்கு?” என்று
அடிக்குரலில் சீறினான்.

“நான் எப்படி பேசணும்னு சொல்லித் தர நீங்க யாரு?” என்று வெடுக்கென்று ராஷ்மிகா கேட்க.. அஸ்வினின் பார்வை அவள் கழுத்தில் இருந்த கனமான சங்கிலி மீது அவனை அறியாமல் பதிந்தது.

அவன் பார்த்த இடத்தில் அவன் போட்ட தாலி இன்னும் இருப்பதை உணர்ந்தவள்
எதுவும் பேசமுடியாமல் மௌனமாய் நின்றாள். இனிமேலும் தான் சும்மா
இருந்தால் நியாயம் இல்லை என்பதை உணர்ந்த அஸ்வின் குமார். “கிளம்புங்க” என்றான் ராஷ்மிகாவிடம்.

“என்ன??” என்றவள் “எங்கே?” என்றாள்.

“எங்க வீட்டுக்கு.. இனி என் பொண்ணு அங்க தான் இருக்கணும்..” என்று கட்டளை போலச் சொல்ல.. ராஷ்மிகா
அதிர்ந்தாள்.

“அவளுக்கு நீதான் அப்பான்னு நான் தான் சொல்லனும் அவகிட்ட.. நீ சொல்லக் கூடாது” என்று பேசியவள் அஸ்வினிடம்
கோபத்தை எதிர்பார்க்க அவனிடம் ஏளனப் புன்னகையே வந்தது.

“யாழ் என் பொண்ணு தான்னு சொல்ல.. டீஎன்ஏ டெஸ்ட் கூடத் தேவையில்ல.. என் மூஞ்சிய பாத்துட்டு என் பொண்ணு
முகத்த பாத்தா சொல்லிடுவாங்க யாழ்
யாரோட பொண்ணுன்னு” என்று கர்வமாக அவன் சொல்ல.. ராஷ்மிகாவிற்குத் தான் தீயில் நிற்பது போல இருந்தது. யாழ் அவனின் அச்சாக இருக்க.. அதை வைத்து அவன் பேசியது
அவளை மேலும் குன்றலுக்கு
உண்டாக்கியது.

“இப்ப உனக்கு என்ன வேணும்” – என்று ராஷ்மிகா அடிக்குரலில் அடக்கப்பட்ட
கோபத்தோடு கேட்டாள். ஆனால் அதெல்லாம் அஸ்வினிடம் எடுபடுமா?

“என் பொண்ணு இனி என் கூட தான் இருப்பா?” என்றவன் “நீயும்” என்றான்.

“நானும் வரமாட்டேன்.. என்
பொண்ணையும் அனுப்ப மாட்டேன்” என்று ராஷ்மிகா பேச.. அவ்வளவு தான்..
அத்தனை நேரம் உள்ளே உறங்கிக் கொண்டிருந்த பழைய அஸ்வின் குமார்
வெளியே வந்தான்.

“நீ வரலன்னா என்னடி.. என் பொண்ணை கூட்டிட்டுப் போக எனக்குத் தெரியும்.. லீகலா கூட என் பொண்ண என் பக்கம்
நிரந்தரமா கூட்டிட்டு போகவும் முடியும் என்னால்” என்றான் தன் முழு உயரத்திற்கும் நின்று. அவனைப் பற்றி நன்கு அறிந்திருந்தாலோ என்னவோ
ராஷ்மிகாவால் எதுவும் பேச
முடியவில்லை. அவளின் அமைதியைக் கண்டவன் “நான் இன்னிக்கே யாழ
கூட்டிட்டு போறேன்” என்றவன் டி.வி பார்த்துக் கொண்டிருந்த யாழிடம் சென்றான். தன்னால் அவனைத் தடுத்து எதுவும் செய்ய முடியவில்லையே என்ற
இயலாமையில் ராஷ்மிகா ஏதோ தோற்ற உணர்வு எழுந்தது. துக்கம் தொண்டையை அடைத்து நெஞ்சில் இறங்க எதுவும் பேசாமல் மகளையும் அஸ்வினையும் பார்த்தபடி நின்றிருந்தாள்.

மகளின் அருகில் அமர.. அவனைக் கண்ட சிறுமியோ தன் பிஞ்சுக் கையால்
அஸ்வினின் தோளைப் பிடித்து அவன் மேல் சாய்ந்தது. யாழிற்கு ஏதோ தந்தைக்கும் அன்னைக்கும் சண்டை
என்பதைப் புரிந்தது.

“அம்மாக்கு உங்களுக்கு சண்டையா ப்பா” என்று யாழ் கேட்க..

முகத்தை சிரித்த மாதிரி வைத்தவன் “இல்லடா.. அம்மா கிட்ட இனிமேல் யாழ் பாப்பாக்கு என்ன சாக்லேட் வாங்கித் தரணும்னு பேசிட்டு இருந்தேன்” என்று சொல்லத் தந்தையின் மடியில் தானாய்
ஏறி அமர்ந்தாள் யாழ்மொழி.

“நீங்க அப்பா கூட வரீங்களா.. இன்னிக்கு நம்ம வீட்டுக்குப் போலாம்” என்று அஸ்வின் மகளிடம் கேட்க..  “உண்மையாவா ப்பா.. நம்ம வீட்டுக்கா?” என்று கேட்டாள் யாழ்மொழி.

“ஆமா நம்ம வீட்டுக்குத் தான்.. அங்கேயும் ஒரு பாட்டி தாத்தா.. ஒரு அத்தை எல்லோரும் இருக்காங்க” என்று மகளிடம்
அவன் சொல்ல.

“ஓகே ப்பா.. போலாம் போலாம்” என்று குதித்தாள் சிறுமி.

“அப்பா.. என் ட்ரெஸ் எல்லாம் என் பேக்ல எடுத்திட்டு வரேன்..” என்று யாழ்மொழி
சொல்ல “நம்ம போற வழியில
வாங்கிக்கலாம்” என்றான் அஸ்வின் குமார் மகளைத் தூக்கியபடி.

ராஷ்மிகாவிடம் கையில்
யாழ்மொழியோடு வந்தவன் “இனி நீதான் முடிவு பண்ணனும்.. வரதா என்னனு”
என்று சொல்ல அவளோ அசையாமல் கற் சிலையாய் நின்றாள்.

“அம்மா வரலையா?” – என்று குறுக்கே புகுந்தாள் சிறுமி.

“அம்மா.. நாளைக்கு காலைல
வந்திடுவாங்க டா” – என்று சொல்ல.. அன்னையிடம் திரும்பிய யாழ்.. “அம்மா..
நாளைக்கு வாங்க.. நம்ம நிமிஷா வீட்டுல அவங்க மூணு பேர் இருக்க ஃபோட்டோ
மாதிரி நம்ம மூணு பேரும் எடுக்கலாம்” என்று குழந்தை தன் ஏக்கத்தை வெளிப்படுத்த ராஷ்மிகாவிற்கு சங்கடமாக இருக்க.. அஸ்வினிற்கோ
தான் இத்தனை நாள் இருந்து என்ன பயன் என்று ரணமாய்த்  தோன்றியது.

“நாளைக்கு காலைல வரைக்கும் தான் உனக்கு டைம்.. வீட்டுக்கு வந்து சேரு.”
என்றவன் அவள் பதிலைக் கூட
எதிர்பாராமல் வெளியே யாழைத் தூக்கிக் கொண்டு நடந்தான். இத்தனை நாட்கள்
கண்ணீர் என்ற ஒன்றை வெளியே காட்டாமல் இருந்த ராஷ்மிகாவிற்கு மகளைத் தூக்கிக் கொண்டு அஸ்வின்
போக கண்கள் கலங்கியது.

அஸ்வின் யாழைத் தூக்கிக் கொண்டு வெளியே வரவும் சிவக்குமார், விஜயலட்சுமி, கல்யாணி, ஹர்ஷா வரவும்
சரியாக இருந்தது. அஸ்வினை யாழோடு பார்த்த அனைவருக்குமே அதிர்ச்சி தான். எல்லோரையும் ஆழ்ந்து பார்த்தவன் “இந்த விஷயத்தை உங்களால எப்படி மறைக்க முடிஞ்சுது” என்று இரைய
யாரும் எதுவும் பேசவில்லை.

சிவக்குமார் அருகில் வந்தவன் “நான் என் பொண்ணை கூட்டிட்டு போறேன் அங்கிள்.. இனியாவது உங்க மகளை
நல்ல முடிவா எடுக்கச் சொல்லுங்க” என்று யாழைத் தூக்கிக் கொண்டு செல்ல
யாரும் எதுவும் பேசவில்லை.

ஏதோ பேச விழைந்த ஹர்ஷாவை சிவக்குமார் தடுக்க “அப்பா.. அக்கா உள்ள
அழறா” என்றான் அக்காவின் கண்ணீரை பார்க்க முடியாமல்.

“அவங்க பொண்ண அவங்க கூட்டிட்டு போறாங்க.. நம்ம எதுவும் பண்ண முடியாது ஹர்ஷா.. நம்ம ராஷ்மி கைல
தான் இனி எல்லா முடிவும் இருக்கு” என்று சொல்ல ராஷ்மிகாவிற்கும்
பெரியப்பாவின் வார்த்தைகள் விழுந்தது. ஏதோ தனித்து நிற்பதைப் போல உணர்ந்த ராஷ்மிகா கண்ணீரை அடக்க
முடியாமல் தன்னுடைய தனி அறைக்குச் சென்று தன் விதியின் மேல் வந்த  கோபத்தை கதவிடம் காட்டினாள். பெட்டில்
உட்கார்ந்தவளுக்கு கண்களில் கண்ணீர் வழிந்தது. அஸ்வினுடனான அழகிய நினைவுகளை அவளும் மறக்கவில்லை தான்.. ஆனால்? 

மனம் கடந்த காலத்திற்குச் சென்றது..