யாழ்-26

யாழ்-26

“அண்ணி, இந்த சிலைக்கு எல்லாம் என்ன ரேட் பிக்ஸ் பண்ணியிருக்கீங்க?” வேதா கம்ப்யூட்டரின் முன் அமர்ந்தபடி கேட்க, அவளருகே வந்த யாழ், அங்கிருக்கும் சிற்பிகள் அழகாய் அம்சமாய் செதுக்கியிருந்த தந்தச் சிலையைப் பார்த்தாள்.

ராதை கிருஷ்ணா!

சொல்லும்போதே அத்தனை அழகான வார்த்தை. ராதை கிருஷ்ணர் எனும்போதே காதல் என்ற சொல் ஞாபகம் வராது இருப்பவர் உண்டோ. இரண்டு ராதைகளுக்கும் சிலை இருந்த அழகைப் பார்த்து தங்களது கிருஷ்ணனின் ஞாபகம் வந்துவிட்டது போல.

காதல் என்ற ஒன்றைத் தவிர வேறு எதையும் எதிர்பார்க்கவில்லை இந்த இரு ராதைகளும்.

வேதாவின் மனம் கணவனை நினைத்தது. கணவனின் வதனம், விழி முன் வர, விழிகளை மூடிக்கொண்டாள். ஆனால், விழியை மூடியபின்புதான் அவனின் சிரிப்பு, பேச்சு, செயல்கள் அனைத்தும் ஞாபகம் வர, இம்சையாய் உணர்ந்தாள்.

யாழோ தன் மேடிட்ட வயிற்றை தடவிக் கொடுத்தாள். இப்போது ஏழு மாதங்கள் ஆகியிருந்தது அவளுக்கு. வழக்கம் போல தன் வேலைகளை செய்து கொண்டிருப்பவள் கணவனிடம் முகம் கொடுத்து பேசுவதில்லை. அவன் தானாக வந்து பேசினாலும், பதில் அளிக்கமாட்டாள். நகர்ந்து விடுவாள். ஆனால், இரவு அவளின் வயிற்றில் அவன் கை வைத்துப் பார்ப்பது, அணைத்துக் கொண்டு படுப்பதும் மட்டும் ஓய்வதில்லை. விடாக்கண்டனாக இருந்தான் அந்த விஷயத்தில்.

வேதா வீட்டிலேயே முடங்க விரும்பாமல், யாழுடன் ஸ்கல்ப்சர் வொர்க்ஸை அவளுடன் கவனிக்க வந்துவிட்டாள். வீட்டில் இருந்தால் அதையே நினைத்து மனதை அலட்டிக் கொள்வோம் என்று நினைத்தவள், காலை யாழுடனே கிளம்பிவிடுவாள்.

யாழ் எவ்வளவோ மறுத்தும் அவளை திவ்யபாரதி தன் காரில் அனுப்பி வைத்தாள். “ப்ரெக்னன்டா இருந்துட்டு பஸ் கொஞ்சம் கூட சேப் இல்ல யாழ்” என்று அதட்டியே அவளிடம் காரை கொடுத்திருந்தாள் அவள்.

அனைவரும் கிளம்பியபின் தன் எழுத்து உலகில் திவ்யபாரதி மூழ்கிவிடுவாள். பெண்களுக்கான அவளின் எழுத்துகளும் நிஜம் நாளிதழில் இன்றும் தவறாமல் வந்துகொண்டுதான் இருக்கிறது.

மொத்தத்தில் தன் வீட்டுப் பெண்களை வீட்டில் வைத்திருக்க நினைக்காதவள் திவ்யபாரதி. அதனால்தான் அவள் வேதாவை வெளியே படிக்கச் செல்ல, பலமுறை சொல்லியது. வெளியூர் சென்றால் தினமும் மித்ரனை பார்க்கமுடியாது என்று எண்ணியவள், அழுது ஆர்ப்பாட்டம் செய்ய, ஆயிரம் முறை மகளுக்கு எடுத்துச் சொன்னவள், “யூஜி முடிச்சிட்டு ஒழுங்கா பிஜி வெளிய பண்ற வழியை பாரு” என்றே மிரட்டியிருந்தாள் திவ்யபாரதி.

இப்போது அன்னை கூறியதை நினைத்தவளுக்கு சலிப்பாக இருந்தது. ‘பேசாம வெளிய போயே படிச்சிருக்கலாம்’ நினைத்தவள், ‘ம்கூம் இப்ப நினைச்சு என்ன பயன்’ என்று பெருமூச்சைவிட அவளின் கையில் தட்டிய யாழ்,

“எந்த உலகத்துல இருக்க?” கேட்க,

“ஒண்ணுமில்ல அண்ணி” என்றவள், “இதோட ரேட் என்ன?” கேட்க அவளை ஒருமாதிரி பார்த்த யாழ், “ஃபார்டி தௌசன்ட்” என்றாள்.

வேதா அதை ஆன்லைனில் ஏற்றிய பிறகு, “உங்க லைப் எப்படி போகுது?” கேட்க, வேதா அவளை ஆச்சரியமாக நிமிர்ந்து பார்த்தாள்.

இத்தனை நாள் வரையில் தங்களது வாழ்க்கையில் யாருமே, அதாவது அவளது பெற்றோரே மூக்கை நுழைக்தாது இருக்க, அண்ணனின் மனைவி கேட்டத்தில் அவளுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. இடைப்பட்ட இரண்டு மாதங்களில் இருவரும் நெருக்கம் ஆகியிருந்தார்கள் தான். ஆனால், தனிப்பட்ட வாழ்க்கையை இருவருமே இன்றுவரை பேசியதில்லை.

“அ.. அண்ணி” அவழ் இழுக்க,

“இட்ஸ் ஓகே. நீ சொல்லனும்னா சொல்லலாம். இல்லனா வேணாம்” யாழ் மென்மையாய் கூற, “அப்படி இல்ல அண்ணி தயக்கமா இருக்கு” என்றவளின் அருகே சேரை இழுத்துப் போட்டு அமர்ந்தவள், “என்னை உன் பிரண்ட் மாதிரி நினைச்சு ஷேர் பண்ணு வேதா” என்றாள் அவளின் கரத்தை தன் கரத்திற்குள் வைத்து.

“எங்க லைஃப் அப்படியேதான் அண்ணி இருக்கு. அவர் பேச நினைக்கறாரு. ஆனா, நான்தான் பேசறதுக்கு பிடி கொடுக்கிறது இல்ல. பேச புடிக்காம இல்ல. பேச முடியல. சராசரி பொண்ணுக்கு உண்டான எதையும் நீ அனுபவிக்கப் போறதில்ல அப்படின்னு என்கிட்ட கல்யாணத்துக்கு முன்னாடி சொன்னாரு அண்ணி”

“நான் என்ன அதுக்கா ஆசைப்பட்டேன். கல்யாணம் ஆன நிமிஷத்துல இருந்து என்கிட்ட பேசவே இல்ல தெரியுமா. நான் அவரை லவ் பண்ணதை தவிர என்ன அண்ணி பண்ணேன். பேசமாட்டாரு. வருவாரு. நான் சமைக்கிறதை சாப்பிடுவாரு. சில சமயம் அவரே காலைல சமைச்சு வச்சிட்டு போயிடுவாரு. செலவுக்கு பணம் கேக்காமையே என்னோட அக்கவுன்ட்ல போட்ருவாரு”

“என்கிட்ட ஒருநாள் மனசுவிட்டு சொல்லியிருக்கலாம்ல அண்ணி. நான் என்ன வில்லியா. தெரிஞ்சு தாம்தூம்னு குதிச்சு ஆர்ப்பாட்டம் பண்ண. சம்யுக்கா இதை என்கிட்ட முன்னாடியே சொல்லியிருந்தா. அவருபக்கம் திரும்பியிருக்கக் கூட மாட்டேன். சம்யு அக்கா இல்லாம போனதுக்கு அப்புறம் கொஞ்ச நாளா அவரு என்னை கவனிச்சாரு. நான் பாக்கறப்போ திரும்பிப்பாரு”

“அப்ப எனக்கு என்ன தோணும் அண்ணி. நீங்களே சொல்லுங்க. கேட்டா நான் சம்யு அக்கா மாதிரி இருக்கேனாம். நான் பொய் சொல்ல விரும்பல அண்ணி. அவரு சம்யு அக்காவை லவ் பண்ணது, ஃபோன்ல பேசுனது எல்லாம் நினைச்சு எனக்கு பொறாமையா தான் இருக்கு. ஆனா, அதுக்குனு சம்யு அக்கா இல்லாம போனது நல்லதுனு நினைக்கறவ நானில்ல”

“கேட்டா நீ சம்யு மாதிரி இருந்த, பறந்தனு பேசுவாரு. நானும் பொண்ணு தானே அண்ணி. என்னை பிடிக்கலனாலும் பேசியிருக்காலம் இல்லையா. இதை எல்லாம் என்கிட்ட முன்னாடியே சொல்லி இருக்கலாம்ங்கிற ஆதங்கம்தான். சம்யுக்காவை எனக்கு எவ்வளவு பிடிக்கும் தெரியுமா?”

“அக்கா என்கிட்ட உண்மையை சொல்லியிருந்தா உள்ளுக்குள்ள அழுதிருந்தாலும் கண்டிப்பா அவங்க கல்யாணம் பண்ணும் போது சந்தோஷமா நின்னிருப்பேன். எல்லாத்தையும் மறைச்சிட்டாங்க. கல்யாணம் ஆனப்பவாது இவரு சொல்லியிருக்கலாம். நம்ம ஊரு காரணுக இப்படித்தான் அண்ணி. எதையும் சொல்லாம நாமலா புரிஞ்சிக்கணும்னு நினைப்பானுக. அரைவேக்காடுக எல்லாம். பெரிய சினிமா ஹீரோஸ்னு நினைப்பு மனசுல. இந்த தாத்தாவுல தொடங்கி, அப்பா, அண்ணனுக, இவரு எல்லாம் அப்படித்தான் இருக்காங்க. சைஐஐக். என்னதான் அறிவோ?” அவள் மூச்சுவிடாமல் அனைத்தையும் கொட்டி, தன் குடும்ப ஆண்களை மொத்தமாய் வறுத்தெடுத்து முடிக்க,

“போதுமாண்ணா. எல்லாம் கேட்டாச்சா. என்ன இவ மனசுல இருக்குன்னு புரிஞ்சுதா?” தங்களுக்கு பின் நிலவில் சாய்ந்து கைகளைக் கட்டிக்கொண்டு நின்றிருத்த மித்ரனைப் பார்த்து யாழ் கேட்க, யோசனையாய் திரும்பியவள் கணவனைப் பார்த்து தூக்கிவாரிப்போட எழுந்ததில், அவள் மடியிலிருந்த அட்டையும், அதில் வைத்திருந்த பேனாவும் விழுந்து உருண்டோடியது.

மனைவியின் பேச்சு அனைத்தையும் கேட்டிருந்தவன், அவளை மேலிருந்து கீழே அளக்க, அவனின் பார்வையில் குறுகுறுத்ததுப் போனவள், அண்ணியை, ‘அடிப்பாவி’ என்பது போல திரும்பிப் பார்க்க, உதட்டைப் பிதுக்கிவிட்டு அவள் ஜூஸ் குடிக்க சென்றுவிட்டாள்.

‘அய்யயோ விட்டுட்டு போறாங்ளே’ நினைத்தவள் கணவனைப் பார்க்க, மித்ரன், ‘ஆள் சைசுக்கும் பேச்சுக்கும் சம்மந்தமே இல்ல. என்னமா கேள்வி கேக்கறா? நல்ல வேளை நம்மள பாத்து கேக்கல. பதில் சொல்லியிருக்க முடியாது’ நினைத்தவன் வெளியே கெத்தாகவே காட்டிக்கொண்டு நின்றிருந்தான்.

அவள் கைகளைப் பிசைந்துகொண்டு நிற்க, உள்ளே வந்தவன், அங்கிருந்த சிலைகளை எல்லாம் வேடிக்கை பார்த்தபடி சிறிது நேரம் நின்றுவிட்டு, “இத்தனை பேசுனா மட்டும் பாத்தாது. என்கிட்ட இருந்த வீட்டு சாவியையும் எடுத்திட்டு வராம இருந்திருக்கணும்” என்றான் கிண்டலாக.

வேதா தன் ஹேண்ட் பாக்கில் ஆராய, அவளிடம் எப்போதும் இருக்கும் சாவியும், அவனின் சாவியும் அவளிடம்தான் இருந்தது. சோம்பேரிகள், அதற்கு ஒரு கீச்செயினைக் கூட வாங்கமால் இருக்க, டேபிளில் வைத்திருந்த அவனின் சாவியையும் எடுத்து வந்துவிட்டாள்.

அவனிடம் சாவியை நீட்டியவள், “தெரியாம எடுத்திட்டு வந்துட்டேன்” என்று சொல்ல, அவளைப் பார்த்தபடியே சாவியை வாங்கியவன், “உனக்கு இந்த சேரி நல்லா இருக்கு. இதையே கட்டு. வேற ட்ரெஸ்ல ரொம்ப சின்ன பொண்ணா தெரியற” என்றுவிட்டு செல்ல,

“நான் சம்யுக்கா இல்ல” வெடுக்கென்று சொன்னவளின் பதிலில் உடல் விறைக்க, நின்றவன் திரும்பியும் பாராது, “சம்யு புடவை கட்டி நான் பாத்ததில்ல” அடுத்த நொடியே பதிலளித்துவிட்டு செல்ல, வேதாவிற்குத் தான் குழப்பமாய் இருந்தது.

கடந்த பத்து பதினைந்து நாட்களாக அவனின் பார்வையில் உள்ள வேறுபாட்டை உணர்ந்தவள், ‘கனவு கானாதடி வேதா. அப்புறம் சம்யு தெரிஞ்சா ஆட்டுக்குட்டி தெரிஞ்சானு சொல்லுவாரு’ என்று அமர்ந்து வேலையைப் பார்க்கத் துவங்கினாள்.

அங்கு வந்த யாழோ ஜூஸைக் குடித்தபடியே இரு புருவத்தையும் தூக்கி குறும்புடன் வினவ, “அண்ணி! வேணாம். உள்ள என் மருமகனோ / மருமகளோ இருக்கானு பாக்கிறேன்” மிரட்ட,

“மருமகன் இல்ல. மருமக தான்” யாழ் சொல்ல,

“அதெப்டி கரெக்டா சொல்ல முடியும்?”

“என் நம்பிக்கை வீணாகாது வேதா. உன் அண்ணனுக்கும் அப்படிதான். நீ வேணா பாரேன் பொண்ணுதான்” என்றவள் சென்றுவிட, ‘இரண்டு பேரும் ஜோசியம் எல்லாம் தெரிஞ்சு வச்சிருக்காய்ங்க போல’ உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவள் வேலையில் மூழ்கினாள்.

காலையிலேயே மித்ரனின் வழக்கு முடிந்துவிட, வீட்டிற்கு வந்து குளியலை போட்டவன் படுக்கையில் சாய, படுக்கைக்கு எதிரே இருந்த இருவரின் திருமணப் புகைப்படம் அவன் கண்களில் பட்டது.

அவன் இறுதிய முகத்துடன் மாங்கல்யத்தை மூன்று முடிச்சிட்டுக் கொண்டிருக்க, வேதாவின் முகம் பயத்திலும், அதை மீறி பெண்ணவளின் விழிகள் காதலித்தவனையே கரம்பிடித்த நிம்மதியையும், மகிழச்சியையும் பிரதிபலித்தது. அவள் இதழ்கள் அருகிலிருக்கும் கணவனை நினைத்து தயங்கி, இதழோரத்தில் சிறு புன்னகையை மட்டும் உதிர்த்திருந்தாள்.

அன்று விஷயம் தெரிந்ததில் இருந்து, அவனிடம் அவள் ஒரு வார்த்தைக் கேட்கவில்லை. அன்று இரவு கலங்கிய விழிகளுடன் பேசியவள் அதன்பிறகு அதை நினைத்து அழவும் இல்லை. ஆனால், அவளின் கடமைகளை செய்கிறாள். செய்துவிட்டு யாழுடன் ஸ்கல்ப்சர் வொர்க்ஸைப் பார்க்கவும் கிளம்பிவிடுகிறாள்.

கத்தி சண்டையிடுவாள், அல்லது அழுது கரைவாள் என்று நினைத்தவனுக்கு, அவளது போக்கு ஆச்சரியமாகவே இருந்தது. அவன் அவளின் தோற்றத்தைக் கண்டு, ‘நீ சின்னப் பெண்’ என்று சொல்லியிருக்க, அவள் தன் செயலால் தன் முதிர்ச்சியைக் கணவனிடம் காட்டியிருந்தாள்.

அவனுக்கு அது பிடித்திருந்தது. அன்று இதழோதரத்தில் இதழ் பிரியாமல் வெறுமையுடன் ஒரு புன்னகையை உதிர்த்தவன், இப்போது தங்கள் திருமணப்படத்தை பார்த்து தாரளமாய் இதழ் பிரித்து புன்னகைத்துக் கொண்டான்.

சம்யுக்தாவுடனான அவன் காதல் உண்மைதான். காமம் உண்மைதான். பாசம், நேசம் உண்மைதான். அவளின் இழப்பில் அவன் மன அழுத்தத்தில் கிடந்தது உண்மைதான். அப்படியிருக்கும் நிலையில் வேதாவைப் பார்த்தவனுக்கு கண்களில் சம்யுக்தாவே தெரிந்தாள்.

பேச்சும், செயலும் அவளைப் போலவே இருக்க, திரும்பத் திரும்ப அவளைத் திரும்பிப் பார்த்தவனுக்குத் தெரிந்து போனது வேதாவின் காதல். அவளை தவிர்க்க நினைத்தாலும் அவனால் முடியவில்லை. காலப்போக்கில் அவளது காதல் தன்னை அவள் பக்கம் இழுத்துவிடுமோ என்று அஞ்சியவன் அதைத் தான் சம்யுக்தாவுக்கு செய்யும் துரோகமாகவே நினைத்தான். அந்த கோபத்திலும், இயலாமையிலும் தான் அவன் வெறுப்பை வேதா மீது காட்டியது. திருமணத்திற்கு பிறகு அவளிடம் பேசாமல் இருந்தது.

காதல் மனைவிக்கும் கட்டிய மனைவிக்கும் இடையே மூளை குழம்பிப் போனான் அவன். அதுவே அவனை மீண்டும் மன அழுத்தத்தில் ஆழ்த்துவது போல இருக்க, அவனின் அனைத்து உணர்வுகளையும் வெடிக்க வைத்தது, அன்று வித்யுத் யாழை கை ஓங்கிய செயல். அதன்பிறகு மனதில் உள்ள பாரங்கள் இறங்கியது போலத்தான் உணர்ந்தான்.

வேதாவின் அழுகையை நினைத்து பயந்தவனுக்கு, அவளின் நடவடிக்கை பிடித்துத்தான் போனது. பிறகு அவளின் ஒவ்வொரு செயல்களையும் கவனித்துப் பார்த்தவனுக்கு, ஒவ்வொன்றும் மனதில் பதிய ஆரம்பித்தாலும், சம்யுக்தாவிற்கு துரோகம் செய்வது போல அவனின் மனம் உறுத்தத்தான் செய்தது.

ஒரு மாதத்திற்கு முன், அனைத்தும் அனைவருக்கும் தெரிந்த பிறகு, வித்யுத் தோட்டத்தில் இருந்த கிணற்றின் மேல் இரவு நேரம் அமர்ந்திருக்க அவனருகே வந்த மித்ரன், அவனருகே ஏறி அமர்ந்தான்.

இருவரின் இடையே பலத்த அமைதி நிலவ, “இங்க வாடா மணி” என்ற குரலில் இருவரும் பார்க்க, வேதா நாய்க்கு உணவு வைத்துக் கொண்டிருந்தாள்.

அது உண்ணும் போது வழக்கம் போல அதன் தலையை நீவிக் கொடுத்தவள், அது உண்டு முடித்த பின்னே உள்ளே சென்றாள். இருவரும் வேதாவையே பார்த்திருக்க, “என்ன முடிவுல இருக்க மித்ரன்?” வித்யுத் கேட்க,

“எதுல கேக்கற வித்யுத்?”

“வேதா விஷயத்துல தான்” இரு கைகளையும் திண்டின் மேல் ஊன்றியபடி கேட்டான் வித்யுத்.

“அவளை எப்ப கல்யாணம் பண்ணனோ அவ என்னோட பொறுப்பு வித்யுத். நீ கவலைபட வேண்டாம்” என்றவனை வித்யுத் இடுங்கிய விழிகளுடன் கேட்க,

“என்னை வளத்த கடமைக்காக இல்ல. அவங்க வளத்ததை விட நிறைய சொல்லிக் குடுத்திருக்காங்க. அதுல இதுவும் ஒண்ணு. நம்பி வந்தவங்களை விட்டுட்டு போகக்கூடாதுனு” என்றவனின் தோளில் வித்யுத் கைபோட்டபடி அமர்ந்தான்.

வர்ஷித், மித்ரன் நெருக்கம் வித்யுத், மித்ரன் கிடையாது. அதுவுமில்லாமல் சிறிய வயதில் இருந்து ஒரே வகுப்பில் மித்ரன் வர்ஷித்துடன் படித்ததால், அவனுக்கு வர்ஷித்திடம் நட்பு வித்யுத்திடம்விட பன்மடங்கு அதிகம். அதனால் இருவரும் அவ்வளவாக பேசிக் கொண்டதில்லை. விளையாடும் போது பேசுவதே சரி.

அதுமில்லாமல் மித்ரனின் மேல் திவ்யபாரதியும் காட்டும் அன்பில், வித்யுத்திற்கு சிறிது பொறாமையே. அவன் மேல் மட்டுமல்ல அன்னை யார் மீது காட்டும் அன்பிலும் அவனுக்கு பொறாமை. வெற்றியின் மீது கூட. அதனால்தான் வித்யுத்துக்கும் வேதாவுக்கும் இடையே இடைவெளி கூட அதிகமாகி இருந்தது. அதில் படாதபாடு பட்டுப்போன வெற்றி, திவ்யபாரதிக்கும் தான் தெரியும் வேதா உருவாவதற்கு அவர்கள் பட்ட துன்பம்.

வித்யுத்தை தேடி அங்கு வந்த வர்ஷித் இருவரும் அமர்ந்திருந்த காட்சியை பார்த்துக் கொண்டு, மனதில், ‘பொண்டாட்டியை புரிஞ்சிக்காம இருந்தா கடைசி வரைக்கும் நீங்கதான்டா உக்காரணும்’ மனதுக்குள் பேசியவன், இருவரிடமும் சென்றான்.

“வா வர்ஷித், உக்காரு” கை கொடுத்த மித்ரனின் கரத்தை தட்டிவிட்டவன், “இரண்டுபேர் கிட்டையும் பேச வந்திருக்கேன்” என்றான். வெகு அழுத்தமான குரலில்.

“என்னை நீங்க கல் நெஞ்சக்காரனே நினைச்சாலும் சரிடா. நான் பேசிதான் ஆகணும். போனவங்கள நினைச்சு இருக்கவங்கள சாவடிச்சறாதீங்க. எல்லாருக்கு அந்த இழப்பு இருக்குதான். அந்த வலியும் இருக்குதான். ஆனா, அதுனால நீங்க உங்க வாழ்க்கையை கெடுத்துக்கிறதை யாரும் விரும்பமாட்டாங்க”

“ஐ நோ மித்ரா.. நீயும் அவளும் இன்டிமேட்டா இருந்துட்டு, இப்ப அவ இடத்துல வேதாவை பாக்க முடியலைனு தெரியும். பட் உனக்குனு ஒரு வாழ்க்கை இருக்கு. உனக்குனு வருங்காலம் இருக்கு. உன்னை நம்பி ஒருத்தி இருக்கா. அவளுக்கும் நிறைய ஆசை இருக்கும். சம்யுவும் வேதாவும் எங்களுக்கு ஒண்ணுதான். வேதா அழுதாலும், அவ துடிச்சாலும் நாங்க யாரும் தாங்கமாட்டோம். இப்ப கூட அவ, ஒரு வார்த்தை உன்கிட்ட கேக்கலை போல. அம்மா சொன்னாங்க. உங்களுக்காக இருக்கவங்ககிட்ட முதல்ல கவனிங்கடா” என்றவன் சகோதரனைப் பார்த்தான்.

தலையில் இருந்த ப்ளாஸ்த்ரியைப் பார்த்தவன், “உனக்கு நான் சொல்லத் தேவையில்லைனு நினைக்கறேன்டா” என்றிட, அவனும் தலையை ஆட்டிக்கொண்டான்.

பின் மூவரும் நின்று பேச வெளியே வந்த வேதா, இரவு உணவு தயார் என்பதை கண்களாலேயே சொல்லிவிட்டுச் செல்ல, மித்ரன் எழுந்தான். அதைப் பார்த்த சகோதரர்கள் அர்த்தப் பார்வைகளை பரிமாறிக்கொண்டு அங்கிருந்து அகன்றனர்.

இத்தனை நாட்களில் அவனுக்கு காதல் என்பதை விட, கட்டிய மனைவியின் மேல் அக்கறை, பாசம், அனைத்தும் வந்திருந்தது. அவளின் செய்கைகளை அவ்வப்போது ரசிக்கக் கூட வைத்தது. கள்ளத்தனமாய் அவளறியாமல் பார்க்க வைத்தது. அவள் உறங்கும் போது அவளின் கன்னத்தை நடுங்கும் விரல்களுடன் தொட்டுப் பார்க்க வைத்தது.

அவளுக்காக வாங்கி வைத்த வெள்ளிக் குங்குமச் சிமிழை எடுத்துப் பார்த்தவன், அவள் வருவதற்காக காத்திருந்தான்.

காரை யாழ் ஓட்டிக் கொண்டு வர, வேதாவுக்கு தன் அண்ணியைப் பார்த்து பெருமையாக இருந்தது. நினைத்தால் வீட்டில் உட்கார்ந்து சாப்பிடும் அளவுக்கு அவளுக்கும் சொத்து இருக்கிறது, தங்கள் வீட்டிலும் சொத்து இருக்கிறது. ஆனால், கருவை சுமந்து கொண்டு, அண்ணனிடமும் பேசமால் தன் காலில் நிற்பவளைக் கண்டவள், “நீங்க மாஸ் அண்ணி” சொன்னதுதான் கோடு கார் நின்றுவிட்டது.

“காருக்கே பொறுக்கல போல” சிரித்த யாழ், இறங்க, வேதாவும் இறங்கினாள்.

“காரை வந்து யாராவதை எடுக்க சொல்லிக்கலாம் வேதா. பக்கத்துல தானே வீடு. வா நடந்தே போயிக்கலாம்” இருபெண்களும் ஹான்ட் பேக்கினை எடுத்துக்கொண்டு நடக்க ஆரம்பிக்க, நூறு மீட்டர் நடந்த பின் அவர்கள் அருகே வந்து நின்றது வித்யுத்தின் அலுவலக கார்.

வேதா யாழை பார்க்க, “நீ வேணும்னா வா வேதா. நான் நடந்தே வந்திடறேன்” என்றவள் நடக்க ஆரம்பிக்க, வேதாவும் அவளைத் தனியே விடமனமில்லாது அவளுடனே நடந்தாள்.

மனைவியின் செயலில் கோபம் கொண்டவன், ‘வீம்புக்காரி’ என்று அவளுக்கு பட்டத்தையும் வழங்கிவிட்டு, ஓட்டுநரை காரை எடுக்கச் சொல்ல அவர்கள் இருவரையும் தாண்டி முன்னே சென்ற சமயம், யாழை பயமுறுத்துவதைப் போன்று அவள் பின்னே வந்த மோட்டார் வண்டி, ‘உர்’ என்ற சத்தத்துடன் இரு பெண்களையும் தாண்டிச் செல்ல, வயிற்றை இரு கைகளால் பிடித்துக் கொண்டவளுக்கு பதட்டம்! பயம்! படபடப்பு!

இடிப்பது போல அல்லவா வந்தது வண்டி.

வேதா யாழை பிடித்துக்கொள்ள, முன்னே சென்றது வேறு யாருமல்ல செந்தில்தான். அன்று வர்ஷித் அடித்துவிட்டு சொன்ன வார்த்தை அவனை சீண்டியது. ‘அப்படியென்ன அவன் தம்பி அப்பேர்ப்பட்ட ஆளா?’ என்ற எண்ணம் அவனுக்கு.

பெண்கள் வருவதை முன்னே கண்டவன், பின் வித்யுத் செய்வதையும் பார்த்துவிட்டு, ‘இருடா உன் முன்னாடியே உன் பொண்டாட்டியை என்ன பண்றேன் பாரு’ நினைத்தவன் வண்டியை இடிப்பது போலத்தான் வந்தது. நொடியில் பெண்ணவள் சுதாரிக்காமல் இருந்திருந்தால் நடந்திருப்பதே வேறு.

இருவரும் அவனை முறைத்தபடி நிற்க, வாய்விட்டு வன்மமாய் சிரித்துக் கொண்டவன், வித்யுத்தின் காரை முந்தச் செல்ல, அவன் காரை பாதி தூரம் கடக்கையில் பின்பக்கம் அமர்ந்திருந்த வித்யுத் கதவை சடாரென திறக்க, வந்து கொண்டிருந்த வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்தவன், சுதாரித்து ப்ரேக் போடும் முன், அதே வேகத்தில் வந்து கதவில் மோதி பெருஞ் சத்தத்துடன் கீழே விழ, கார் சிறிதுதூரம் சென்று நின்றது.

காரிலிருந்து கம்பீரமாய் இறங்கிய வித்யுத், தன் சட்டை கைகளில் இருந்த பட்டன்களை அவிழ்க்க, யாழ் பின்னே சத்தம் கேட்டு திரும்ப, அஷ்வின் தனது ஆடியில் இருந்து இறங்கி பின்னே நின்றிருக்க, தந்தையைப் பார்த்தவள் அதிர்ந்துவிட்டாள்.

இரு நாட்கள் கழித்து மகளுக்கு நடக்கவிருக்கும் வளைகாப்பிற்காக குடும்பமே வந்திருக்க, தந்தைக்கு அந்தப்பக்கம் இருந்த இறங்கிய சிறிய வயது அஷ்வினைக் கண்ட யாழுக்கு, தூக்கிவாரிப் போட்டது. ஆம் அவளின் தமையன் த்ரூவ் அக்காளுக்கு இன்ப அதிர்ச்சி தந்திருந்தான்.

முன்னே வித்யுத். பின்னே அஷ்வினும், த்ரூவும்.

சிம்மத்திற்கும், வேங்கைகளுக்கும் நடுவில் நரி மாட்டிக்கொண்டது.

வித்யுத்தின் கரமும், அஷ்வினின் கரமும் தனது காரின் உள்ளே இருந்த தங்களது பிஸ்டல்களை ஒரே நேரத்தில் எடுக்க, த்ரூவ் இதை மெல்லிய கீற்றான புன்னகையுடன் சாதரணமாக பார்த்துக் கொண்டிருக்க, காருக்குள் இருந்த ராஷ்மிகா, காதைப் பொத்திக் கொண்டாள்.