யாழ்-28(2)

யாழ்-28(2)

வளைகாப்பு!

‘தாய்மை வாழ்கென தூய
செந்தமிழ் ஆரிராரோ ஆராரோ
தங்க கைவலை வைர கைவலை
ஆரிராரோ ஆராரோ..

இந்த நாளிலே வந்த ஞாபகம் எந்த
நாளும் மாறாதோ
கண்கள் பேசிடும் மௌன பாஷையில்
என்னவென்று கூறாதோ..’

என்ற பாடல் வெகுமிதமாய் அங்கு ஓடிக்கொண்டிருக்க, யாழின் கன்னங்களிலும், நெற்றியிலும் சந்தனங்கள் மணமணத்து, வெற்றி வீட்டின் வரவேற்பறையே பெண்களின் குரலிலும், குழந்தைகளின் சிரிப்புகளிலும், விளையாட்டுகளிலும் ஆனந்தமாய் நிறைந்திருக்க, இரு குடும்பத்திற்கும் இருந்த மனநிறைவுக்கு அளவில்லை.

அனைவரின் கண்களும் யாழின் மேல் படவேண்டாம் என்று எண்ணிய திவ்யபாரதி, எந்த மருமகள்களுக்குமே வளைகாப்பில் நிறைய நபர்களை அழைக்கவில்லை. மனம் நிறைய ஆசிர்வாதம் செய்யும் நல்லெண்ணம் இருப்பவர்களே போதும் என்று அவள் கூற, அனைவருக்கும் அதுவே சரியென்று பட்டது.

நெருங்கிய சொந்தங்கள் நட்புகளை மட்டுமே அழைத்திருக்க, அதுவே இருநூறு பேரை கடந்து வெற்றியின் வீடு கலகலப்பைத் தத்தெடுத்து இருந்தது.

யாழ் கன்னங்களில் சந்தனத்தைப் பூசிய விசாலாட்சி, “இன்னும் இரண்டு வேணும்” பேத்தியிடம் சொல்லி, அருகில் இருந்த வித்யுத்துக்கும் சந்தனம் வைத்தவர் இருவரையும் கணவரோடு சேர்ந்து ஆசிர்வதிக்க, யாழ் கணவனைப் பார்க்க அவனும் அவளைப் பார்த்தாள்.

என்னவென்றே தெரியாத உணர்வு!

மகள் திருப்பிக்கொடுத்த நகையை வைத்துவிட்டு, புதுநகைகளை ஆசையாக செய்த அஷ்வினும், ராஷ்மிகாவும் தந்திருக்க, அதைத்தான் அன்று வளைகாப்பிற்கு அணிந்திருந்து ஜொலித்திருந்தாள் பெண்ணவள்.

பிட்டாக இருந்து வளைவுடன் வைத்திருந்த அவளின் இடை இப்போது வளைவு என்னும் சொல்லுக்கு அர்த்தம் தெரியாது இருக்க, ஆனால் உள்ளே இருந்தவள் பல அர்த்தங்களையும் உணர்வுகளையும் அன்னைக்கும், அவளை தினமும் அணைக்கும் தந்தைக்கும் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

தன் ஒவ்வொரு அசைவாலும் அன்னையிடம் சண்டையிடுபவள், தந்தையின் அணைப்பில் பூனைக்குஞ்சாய் மாறிவிடுவாள்.

அடுத்து பூஜாவும் அவளுக்கு சந்தனத்தைப் பூச, “என்னால முடியல பூஜாக்கா. இத்தனை ஜுவல்ஸை போட்டுட்டு எப்படி சிரிச்சிட்டே இருந்தீங்க இரண்டு வளைகாப்புக்கும். அப்பாஆஆ” அவள் காதில் சொல்ல,

“உன் வீட்டுக்காரன் கையை பிடிச்சிக்க. எல்லாத்துக்கும் அவன்தானே காரணம்” என்றவள் சிரித்துவிட்டு செல்ல, வித்யுத்துக்கு சிரிப்பு வந்தது.

அனைவரும் சீர் செய்ய, மருமகளுக்கு வரிசையாக தங்க வளையல்களை கண்ணாடி வளையல்களுடன் அடுக்கிய திவ்யபாரதி, ராஷ்மிகா கொடுத்த தங்க வளையல்களையும் அணிய, கை முட்டிவரை வளையல்கள் அணுவிக்க, யாருமறியாமல் வித்யுத் வாங்கி வைத்திருந்த வளையல்களுக்கு இடமில்லாது போனது.

தன்னவனிடம் நாள் கூடிய நாட்களை நாணத்துடன் சொன்ன நொடி யாழின் ஞாபகத்தில் வர, கணவனின் கையைப் பிடித்துக் கொண்டவள், வந்தவர்களிடம் சிரித்த முகமாகவே இருக்க, சீரும் சிறப்புமாக, பூரிப்பும் துடிப்புமாக, கரகோஷமும் கலகலப்புமாக இருக்கும் மனையாளைக் கண்டவனின் இதயத்தில் சொல்ல முடியாத பரவசம்.

அவனவள் அவனுக்கு விடுகதையாய் இருந்தாள்!

அவள் நினைப்பதை அவனால் அறியமுடியவில்லை. முதலில் இருந்த அழுத்தத்தை விட வீம்பான அழுத்தம் அவளிடம். குழம்பித்தான் போனான் யாழ்மொழியின் கணவன்.

சகோதரியின் வதனத்தில் இருந்த சந்தனமும், அதில் பரவியிருந்த சந்தோஷ செழுமையையும் கண்ட த்ரூவ், தன் அன்னை பக்கம் நிற்கும் தன்னவளைக் கண்டு, மெல்லிய அர்த்தப் புன்னகையை உதிர்க்க, அவளின் கன்னங்களோ அவனின் விழிகள் சொன்ன செய்தியில் மாதுளையாய் சிவந்து போனது.

வந்ததில் இருந்து அவளுடன் தனிமையில் அவன் பேச முடியாது இருக்க, அவனை வெறியேற்றுவது போல வேண்டுமென்றே, “உன் ஆளு கூட பேசுனியாடா?” கேட்டு யாழ் வெறுப்பேற்றிக் கொண்டே இருக்க,

‘வளைகாப்பு முடியட்டும்’ என்று சரியான நேரத்திற்காக காத்திருந்தது அந்த வேங்கை.

ஒருபக்கம் மித்ரனின் பார்வை வேதாவை தொடர்ந்து கொண்டே இருக்க, அவளோ அதை உணர்ந்து உள்ளுக்குள் அதிர்ந்து சில்லிட்டுப் போனாலும், அவன் பக்கம் திரும்பவில்லை.

‘தன்னிடம் இருக்கும் கேள்விக்கு அவரிடம் விடை இருக்குமா?’, ‘அவரின் பதில் என்னைக் காயப்படுத்தாமல் இருக்குமா?’ என்பதே அவளின் கேள்வியாய் இருந்தது உள்ளுக்குள்.

அவனிடம் கேட்டு தன்னை வருத்திக்கொள்ள விரும்பாதவள், தனக்குள்ளேயே வைத்துக் கொண்டிருக்க, ‘வெயிட் பண்ணட்டும். எங்கிட்ட மறைச்சதுக்கு இப்படியே இருக்கட்டும்’ நினைத்தவள் ராஷ்மிகா அல்லது திவ்யபாரதியுடனே நின்றிருந்தாள்.

ஒருவழியாய் வளைகாப்பு முடிந்து கலவை சாதங்களை கண்ணில் பார்த்த போதுதான் யாழின் அசதி எல்லாம் மறைந்தது.

‘ஹப்பாடா’ நினைத்தவளுக்கு எடுத்து உண்ணக்கூட அயர்வாக இருந்தது. அமர்ந்திருந்தவள் யாராவது தனக்கு ஊட்டுவார்களா என்று பார்க்க, அனைத்தும் தன் ஜோடியுடன் அமர்ந்து அவர்களுடன் கடலை போட்டுக் கொண்டிருந்தது.

யாரைக் கூப்பிட்டாலும் வரப்போவதில்லை என்று நினைத்துக்கொண்டு கணவனிடம் தலையைத் திருப்ப, அவனோ டேபிளில் சாய்ந்து கன்னத்தில் கை வைத்து அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

முகத்தைத் திருப்பிக் கொண்டவள், ‘எப்படி பாக்கிறான் பாரு’ ஓரவிழியால் அவனை முறைக்க, அதற்கு அவன் சளைத்தவன் இல்லியே.

“ம்கூம். சாப்பிடலையா?” அவன் வினவ,

“பசிக்குது” என்றாள் எங்கோ பார்த்தபடி.

“அப்ப சாப்பிடு”

“டயர்டா இருக்கு”

அவளின் எண்ணம் புரிந்தாலும், அவனாய் சென்று கேட்கவில்லை. இதைக்கூட கேட்கமாட்டாளா என்ற எண்ணம் அவனுக்கு. அத்தனை வீம்பு.

“பசிக்குதுனு சொன்னேன்” மீண்டும் அவள் கூற, “அதுக்கு?” என்றான்.

“ப்ச்” சலித்தவள் எழ யோசிக்கும் போதே அவளின் கரம் பிடித்தவன், கல்கண்டு சாதத்தை எடுத்து அவள் வாயில் வைக்க, அவனை முறைத்துக் கொண்டே வாங்கியவள், அவன் அடுத்து ஊட்ட ஊட்ட ஒவ்வொன்றாக வாங்கினாள்.

இலையில் காலியான கவலை சாதத்தைக் கண்ட வர்ஷித், அருகே சாப்பாடு பரிமாற வந்து, “என்ன ஒரே ரொமான்ஸா?” வினவ, இருவரும் ஒருசேர அவனை முறைக்க,

“என்ன சொல்லிட்டேன்னு இப்ப முறைக்கானுக” முணுமுணுத்தவன், அருகே இருந்த இலைகளுக்குச் சென்றுவிட்டான்.

கணவனின் கையால் உண்டு முடித்தவள், “போதும்” என்றுவிட்டு எழ, அவளின் கை பிடித்தவன், அவளுடனே செல்ல, தன்னையே பார்த்துக் கொண்டிருந்த வர்ஷித்தைத் திரும்பிப் பார்த்தவன், ‘தூங்க வச்சுட்டு சாப்பிட வர்றேன்’ சைகையில் சொல்லிவிட்டு நகர, அவனோ இருவரும் நீண்டநாள் கழித்து ஒன்றாக செல்வதைக் கண்டு புன்னகைத்துக் கொண்டான்.

அன்று மதியம் தூங்கி, இரவு எழுந்தவள், கீழே வந்து மீண்டும் சாப்பிட்டுவிட்டு, வர்ஷித்தின் அறைக்குள் புகுந்தாள், தனுவை பார்க்கும் பொருட்டு. பட்டுப்பாவாடை சட்டையுடனே அவள் இதழ்கள் பிரிந்து தூங்கியிருக்க, குளித்து முடித்து ஒன்பது மாத வயிற்றுடன் வெளியே வந்த பூஜா, யாழைக் கண்டு,

“வேதாவை கூப்பிடலாமா?” கேட்டாள்.

“ம்ம்” யாழ் சொல்லியபடியே தனுவின் உடைகளைக் களைந்தவள், அவளைக் காற்றோட்டமாக சாட்ஸுடன் படுக்க வைக்க, வேதா உள்ளே நுழைந்தாள்.

வந்தவளை இரு அண்ணிமார்களும் ஒருவழி பண்ணிவிட்டனர்.

“என்ன வேதா நினைச்சிட்டு இருக்க?” பூஜா கேட்க,

“பாவம் மித்ரன் அண்ணா” என்றாள் யாழ்.

“உன்னை திரும்பித் திரும்பி பாத்துட்டே இருக்காரு. நீ என்னடானா அவரை கண்டுக்கவே மாட்டிற?” பூஜா.

“எதுவா இருந்தாலும் அவருகிட்ட மனசுவிட்டு பேசு” யாழ்.

இருவரும் மாறிமாறி பேச, “அண்ணி எனக்கு பயமா இருக்கு” அவள் கூற இருவரும் புரியாமல் அவளைப் பார்த்தனர்.

“அண்ணி! அவரு எனக்கு பாவம் பாக்கறாரோனு எனக்குத் தோணுது. எனக்கு அப்படி எதுவும் தேவையில்லை. அதுவும் இல்லாம பர்ஸ்ட் டைம் பத்தியும் நினைச்சு பயமா இருக்கு” அவள் சொல்ல அவளை அருகில் அமர வைத்தவர்கள், சில விஷயங்களைச் சொல்ல,

“ஐயோ அண்ணிஈஈஈ” என்றாள் நெஞ்சில் கை வைத்து.

“கத்தாத தனு முழிச்சிப்பா” யாழ் அவளை இடிக்க, வாயை மூடிக்கொண்டாள்.

“லவ பண்ணா மட்டும் பத்தாதுமா..” இருவரும் கேலி செய்ய, இருவரின் வயிற்றையும் பார்த்தவள் இருவரையும் பார்வையாலேயே கேலி செய்ய, அவளின் காதைப் பிடித்த இருவரும் நாத்தனாரை பேசிப் பேசியே கொன்றனர்.

இருவரும் அவளுக்கு ஆர்டர் கொடுத்த உடையை அவளிடம் கொடுக்க, அதைப் பிரித்துப் பார்த்தவள், “அண்ணி! இது என்ன ட்ரெஸ்?” வலைபோல இருந்த ட்ரெஸை பார்த்தவள் கூவியேவிட்டாள். இப்படி ஒரு ஆடையில் மனைவியைக் கண்டால் முற்றும் துறந்த முனிவராக இருந்தாலும் அவ்வளவு தான்.

“இதெல்லாம் அண்ணனுகளுக்குத் தெரிஞ்சா அவ்வளவுதான்” அவள் சொல்ல, அந்த வீட்டு மருமகள்களின் பார்வைகளும் சந்தித்துக் கொள்ள, கணவர்களின் வேட்கையையும் தாபத்தையும் நினைத்துப் பார்த்தவர்களுக்கு, அடுத்தவரின் எண்ண ஓட்டம் புரிய இருவருக்குமே முகம் சிவந்து இதழ்கள் பிரிந்து சிரித்துவிட்டது.

‘இவ அண்ணன் எப்பேர்ப்பட்டவன்னு தெரியாம பேசறாளே’ அவரவர் மனதில் நினைத்துக் கொண்டவர்கள், “இதெல்லாமா கேப்பாங்க. இதை நீ கொண்டு போ. எப்ப யூஸ் பண்ணனுமோ பண்ணிக்க.” யாழ் கூற,

பூஜா, “மித்ரன்கிட்ட பேசிட்டு நல்ல முடிவா எடு வேதா. நாங்க மட்டும் ஹாப்பியா இருந்தா பத்தாது. நீயும் ஹாப்பியா இருந்தாதான். நம்ம தாத்தால இருந்து தனு வரைக்கும் ஹாப்பியா இருப்பாங்க” என்றிட, தலையை ஆட்டியவளிடம்,

“நாங் சொன்னதை ஞாபகம் வச்சுக்க” யாழ் கண்ணடித்துக் கூற, “போங்க அண்ணி” நாணமும் சிணுங்கலுமாய் எழுந்தவள் வீட்டிற்கு தன் வீட்டிற்கு ஓடினாள்.

சிறிது நேரம் பூஜாவுடன் கழித்தவள், பிருந்தாவைத் தேட காணவில்லை. தம்பியையும் காணவில்லை.

“சரி ரைட்டு” நினைத்தவள், மாடியேறி அறைக்குள் நுழைய அவளுக்காக காத்திருந்த வித்யுத் கையிலிருந்த பரிசுடன் எழுந்தான்.