Neer Parukum Thagangal 3.1

NeerPArukum 1-01822c5e

நீர் பருகும் தாகங்கள்


அத்தியாயம் 3.1

ஒருசில நொடிகள் அங்கேயிருந்த ஒருவருக்கும் ‘என்ன நடக்கிறது?’ என்றே புரியவில்லை! அதிர்ச்சியின் பிடியினில் சிக்கியிருந்தார்கள். ஆனால் அந்த அதிர்ச்சி நொடிகளெல்லாம் முடிந்ததும், ‘என்ன நடந்து கொண்டிருக்கிறது? என்று புரிந்து போனது!!

‘அடுத்தென்ன நடக்கப் போகிறது?’ என்ற பதற்றமும், ‘தங்கள் உயிருக்கு ஏதும் ஆகிவிடுமோ?’ என்ற அச்சமும் வந்து ஒட்டிக்கொண்டது! உடனே அனைவரும் எஸ்கலேட்டர், லிஃப்ட் வழியாக வெளியே தப்பிச் செல்வதற்கு விழுந்தடித்துக் கொண்டு ஓடினார்கள்!!

நான்காவது தளத்திலிருந்து கேட்ட சத்தத்தாலும், அங்கிருந்து அலறி அடித்துக் கொண்டு வந்த மக்களைப் பார்த்ததாலும், மற்ற தளங்களில் இருந்தவர்களும் உயிர்மேல் இருக்கும் பயத்தில் தப்பியோட ஆரம்பித்தனர்!!

பொதுமக்கள் மட்டுமில்லாமல்… நான்கு தளங்களின் கடைச் சிப்பந்திகளும், பொருட்களுக்குச் சேதம் வந்துவிட கூடாதென கடையின் கதவுகளை அவசர அவசரமாக அடைத்துவிட்டு ஓடினார்கள்!

அது ஒன்றும் பெரிய மால் இல்லை அல்லவா? நீள அகலங்கள் குறைவுதானே? மேலும் படிக்கட்டுக்கள் சீரமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்ததால், அதை யாரும் பயன்படுத்த இயலவில்லை!

ஒரே நேரத்தில் உள்ளிருந்த அனைத்து மக்களும் தப்பிச் செல்ல பார்த்ததால், வெளியே செல்லும் வழிகளான லிஃப்ட் மற்றும் எஸ்கலேட்டர் ஜனநெருக்கடி நிரம்பியதாக தோற்றம் அளித்தது!

பெரிய கூட்ட நெரிசல்தான் அங்கே!!

**************************

இதே நொடிகளில் செல்வி!

மகனுக்கு ஊட்டி விடுவதிலே கவனம் வைத்திருந்த செல்வி, அந்தத் தளத்தின் பொருட்கள் உடைபடும் சத்தம் கேட்டதுமே, ‘ஏதோ விபரீதம்?’ என்று புரிந்தது. அங்கிருந்தவர்கள் அச்சத்துடனும், அலறலுடனும் ஓடுவதைப் பார்த்தவளுக்கு, ஒருநொடி பயத்தில், ‘என்ன செய்ய?’ என்று தெரியவில்லை!

இதற்கிடையே சத்தங்கள் நிறைந்த சூழலால் ஹரி அழ ஆரம்பித்தான்!!

உடனே, ‘ஒன்னுமில்லை… ஒன்னுமில்லை. அழாத ஹரி’ என தட்டிக் கொடுத்து, வீறிட்டு அழும் மகனை தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள்!

சுற்றி நடப்பவைகளைப் பார்த்தவளுக்கு, ‘தனக்கு ஏதாவது நேர்ந்தால் மகன் நிலை என்னவாகும்?’ என்ற எண்ணம் அலைமோதி… சில நொடிகள் அவளை நிலைகுலைய செய்தது! பயத்தில் உடல் நடுங்கியது!

ஆனால் அப்படி இருந்தது சில நொடிகளே!!

அதன்பின், ‘இப்படியே இருக்க கூடாது! தப்பிக்க வேண்டும்!!’ என்று நினைத்து, மகனைத் தூக்கி எழுந்த வேகத்தில் மேசை மேல் இடித்துக் கொண்டாள்!

மேசையிலிருந்த பொருட்கள் அனைத்தும் கீழே விழுந்தன!!

பொருட்கள் உடைக்கப்படும் சத்தமும், பயத்தில் மக்கள் அலறி அடித்து ஓடும் சத்தமும் விடாமல் கேட்டபடியே இருந்ததில், ஒருவிதமான பதற்றம் தொற்றிக் கொண்டு, எந்தப் பக்கம் போகவென்று தெரியாமல் விக்கித்து நின்றாள்!

ஆனால் அப்படி நின்றதும் ஒருசில நொடிகளே!!

அந்த பதற்ற வினாடிகள் முடிந்ததும் நெற்றியில் லேசாக தட்டிச் சுதாரித்தாள். மகனை இறுக்கமாக பிடித்தபடியே, குறுக்கே நெடுக்கே ஓடி வரும் மக்களைச் சமாளித்து வலப்பக்கமாகத் திரும்பி ஓடுகையில், முகமூடி உருவத்தில் ஒன்று அவள் முன்னே வந்து நின்றது!

அவளுக்கும்… அந்த முகமூடி உருவத்திற்கும்… இடையே ஒரு மேசை மட்டுமே இருந்தது. அதாவது அந்த அளவு இடைவெளியில்தான் நின்றாள்!!

பின்னால் திரும்பி ஓடலாம்! ஆனால் திரும்பும் பொழுது கட்டையால் அடித்து இங்கேயே பிடித்து வைத்துக் கொண்டால், ‘என்ன செய்ய?’ என்ற அச்சம் வந்து செல்வியின் இதயம் வேகமாகத் துடித்தது!!

மேசையின் வலப்பக்கமோ இடப்பக்கமோ ஓடி… தப்பிக்கலாம்! ஆனால் பயம் இன்னும் அதிகரித்திருந்தது! அதனால் தப்பி ஓடும் வலு கால்களுக்கு இல்லை! பதற்றம் கூடிப்போய் கண்ணைக் கட்டிக் கொண்டு வந்தது!

அவ்வளவு அருகில் அந்த உருவத்தைப் பார்க்க… பார்க்க, அதீத பீதியில் அவள் உடல் முழுதும் வியர்வை வழிந்தோட விதிர்விதிர்த்துப் போய் நின்றாள்!

தன்னையோ… மகனையோ தாக்கி விடுமோ? இருவரில் எவருக்கும் ஏதேனும் ஆகிவிடுமோ? என்ற பயம் எக்கச்சக்கமாக உண்டாகி தப்பியோட முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தாள் செல்வி!

ஆனால் இப்படிப் பயந்ததும் ஒருசில நொடிகளே!!

அடுத்த கணமே, ‘துணிந்து முடிவெடு! உன்னையும், உன் மகனையும் காத்துக் கொள்ள ஏதாவது செய்!’ என மூளையின் ஓர் பகுதி கட்டளைப் பிறப்பித்தது!

அடுத்த நொடி, ‘என்ன செய்ய, என்ன செய்ய?’ என யோசித்தாள்! அதற்கடுத்த நொடி, ‘என்ன செய்ய?’ என்று முடிவெடுத்துவிட்டாள்!

ஒருகையில் மகனை வலுவாகப் பிடித்துக் கொண்டு, மறுகையால் மேசையை முகமூடி உருவம் மீது தள்ளிவிட்டாள்! அதன் கவனம் சிறிதளவு சிதறுகையில் வலப்பக்கமாக தப்பி ஓடிவிடப் பார்த்தாள்!

ஆனால் அந்தப் பக்கத்தில் இன்னொரு உருவம் வந்து கொண்டிருந்தது!!

‘ஐயோ!!’ என்று மனமும் உடலும் துவண்டு போனாலும், ‘ஏதாவது செய்’ என்று மூளை உத்தரவிட, மின்னல் வேகத்தில் இடப்பக்கமிருந்த கடையில் நுழைந்து, கீழே அமர்ந்து தன்னை மறைத்துக் கொண்டாள்!

மறைந்திருப்பதை அந்த உருவம் பார்த்திருக்கமோ? மாட்டிக் கொள்வோமே? என்ற பயத்துடனே இருந்தாள்! மேலும் அழுகின்ற மகனின் வாயை கையால் லேசாக மூடி, ‘அழாத ஹரி’ என்பது போல் தலையசைத்தாள்!

இது எல்லாம் ஒரு வினாடிக்கும் குறைவான நேரத்தில் நடந்திருந்தது!!

அதன்பின் வெளியே போகவும் துணிவில்லை! அதேபோல் அந்த இடத்திலே இருப்பதும் சரியென படவில்லை!!

அதனால் கடையின் முன்பகுதியைக் கடந்து, பின்புறப் பகுதிக்கு தவழ்ந்தபடி வந்து… எழுந்து நின்ற அடுத்த நொடியே… பாதுகாப்பிற்காக அந்த அறைக்கும் முன்பதிக்கும் இடையே இருந்த மரக்கதவை மூடி தாழ் போட நினைத்தாள்!

அந்தோ பரிதாபம்! கதவு தாழ்பாள் சரியாக வேலை செய்யவில்லை! அவளும் எவ்ளவோ முயன்று பார்த்தும் தாழ் போட முடியவேயில்லை!!

அந்த உருவம் உள்ளே வந்தால் என்ன செய்ய? அதனைத் தாக்கி இருப்பதால், தன்னையும் தாக்குமோ? என்ற பயம்! ‘இனி என்ன செய்ய?’ என தெரியாமல் மகனை கழுத்தோடு சேர்த்தணைத்து, சாத்திய கதவில் அப்படியே கண்கள் மூடிச் சாய்ந்தாள்!!

அக்கணத்தில் ஓர் சத்தம் கேட்க, செல்வி திடுக்கிட்டு கண் திறந்தாள்!!!

***************************

இதுபோன்ற நொடிகளில் கண்மணி!

சாப்பிட்டுக் கொண்டிருந்த கண்மணி, பொருட்கள் அடித்து நொறுக்கப்படும் சத்தம் கேட்டதும் எழுந்துவிட்டாள்! மற்றவர்களைப் போல் அவளுக்கும் உயிர் பயம் இருந்தது! ஆனாலும் சில நொடிகள் நின்று பொதுமக்கள் தப்பியோடும் சூழலைக் கவனித்தாள்!!

உடனே ஒர் முடிவெடுத்தவள், கைப்பையை மாட்டிக் கொண்டு, குனிந்து கீழே அமர்ந்தாள்! சுற்றிலும் கவனம் வைத்தபடி மேசைகளுக்கு இடையே பதுங்கிப் பதுங்கிச் செல்ல ஆரம்பித்தாள்!

இப்படியே நான்காவது தளத்தின் மத்தியிலிருந்து படிக்கட்டுகள் இருக்கின்ற முனைக்கு வந்தவள், மெதுவாக எழுந்து நின்றாள்!

உடைந்து கிடைக்கின்ற கண்ணாடித் துண்டுகள் காலில் குத்திடா வண்ணம் கவனமாக, பின்னாலிருந்து யாரும் வருகிறார்களா? என்ற எச்சரிக்கையுடன், மெல்ல நடந்து சென்று ஒரு முகமூடி உருவத்தின் பின் வந்து நின்றாள்!!

அதன்பின்னர் நொடியும் தாமதிக்காமல், நாற்காலி ஒன்றைத் தூக்கி முகமூடி உருவத்தின் முதுகில் முடிந்தமட்டும் ஓங்கி அடித்தாள்! திடுவிரைவான இந்தத் தாக்குதலில் முகமூடி உருவம் தடுமாறி விழுந்தது!!

அடுத்த அடி அடிக்க கைகளைத் தூக்கி தயாராக நிற்கும் பொழுதே, இதைக் கண்ட மற்றொரு உருவம் ‘ஏன் அடித்தாய்?!’ என்ற ஒரு பெருங்கோபத்துடன் கண்மணியை நோக்கி ஓடி வந்தது!!

அதையும் அடிக்க தயாராக இருந்தாள்! ஆனால் அதன் கையில் இருக்கின்ற துப்பாக்கியைப் பார்க்கும் வரைதான் கண்மணியின் ‘இந்த தயார் நிலை’! பார்த்ததும் அவளுக்கு பயம் மட்டும்தான்!!

கவனிக்கவில்லை! இதைக் கவனிக்கவில்லை!

அந்த முகமூடி உருவங்கள் உருட்டுக் கட்டைகள்தானே வைத்திருக்கின்றன! ஏன் பயந்து ஓட வேண்டும்? எதிர்த்து பார்த்தால் என்ன? என்று தோன்றியது!அதனால்தான் ஒரு உருவத்தை அடித்து தள்ளியிருந்தாள்!

ஆனால் துப்பாக்கி இருப்பதைக் கவனிக்கத் தவறிவிட்டாள்! இப்பொழுது அவளுக்குத் தோன்றுவதெல்லாம், ‘எப்படித் தப்பிக்க?’ என்பதுதான்!!

கண்மணியை நோக்கி ஓடி வந்த உருவம், கீழே விழுந்த கிடந்த உருவத்திற்கு கைகொடுத்து எழுப்பிவிட்டது! இப்பொழுது இரண்டு உருவங்களும் சேர்ந்து கண்மணியைப் பார்த்தன!!

அவள் முகமெங்கும் பயத்தின் வியர்வைத் துளிகள் அரும்பின!!

அந்த உருவங்களுக்கு நிச்சயம் கோபம் இருக்கும்! கோபத்தில்… கட்டையால் அடிக்கலாம்! இல்லை துப்பாக்கி கொண்டு சுடலாம்! எது வேண்டுமானாலும் தனக்கு நடக்கலாம் என்று பயந்தாள்!!

அந்த நேரத்தில், ‘நான் இல்லை என்றால் என் அம்மா, அப்பாவின் நிலைமை என்னவாகும்?’ என்ற கேள்வி வந்து… அவளின் உயிர்பயத்தைக் கூட்டியது!

இல்லை! எதுவும் நடக்கக் கூடாது! தப்பிக்க வேண்டும்!!

உடனே அவள் விழிகள் இரண்டும் அதற்கான வழியைப் பார்த்தன. தனக்குப் பின்பக்கமாக தப்பிக்க ஏதும் வழி இருக்காவென்று பார்க்க முடிவு செய்தாள்.

தாக்குதலுக்கு தயாராக நாற்காலியை பிடித்தவாறே… அதிகபட்ச எச்சரிக்கை உணர்வுடனே… முழுவதும் திரும்பினால் முகமூடி உருவம் தாக்கிடுமோ என்ற பயத்துடனே… கொஞ்சமாக பின்புறம் திரும்பிப் பார்த்தாள்!

படிக்கட்டுகள் தெரிந்தன! கூடவே ‘மக்கள் பயன்படுத்த வேண்டாம்’ என்ற பதாகையும் தெரிந்தது!!

உடனே அடுத்த வழிகளைப் பார்த்தாள். ஒன்று எஸ்கலேட்டர்! மற்றொன்று லிஃப்ட்! ஆனால் இந்த இரு வழிகளை அடைய வேண்டுமென்றால், முகமூடி உருவங்களைக் கடந்துதான் செல்ல வேண்டும்!!

அது சாத்தியமா என தெரியவில்லை! சட்டென்று ஒரு யோசனை வந்தது!!

அது வட்டவடிவ தளம்தானே! ஆகையால் சுற்றிச் செல்லலாம் என நினைத்து திரும்பிய போது, அந்தப் பக்கத்திலிருந்து மூன்றாவது முகமூடி உருவம் வந்து கொண்டிருந்தது!

இப்பொழுது கண்மணியின் பயம் இருமடங்கானது! அதிலும் மூன்று முகமூடி உருவமும் ஒன்றை ஒன்று பார்த்து… தலையை லேசாக அசைத்து… கைகளால் ஏதோ சைகை செய்ததும்… அச்சத்தில் அவள் உடல் வெடவெடத்தது!!

இருந்தாலும்… சோர்ந்து போகாமல், ‘தப்பிக்க வேறு வழி என்ன?’ என்று அவள் மூளை சுறுசுறுப்பாக யோசிக்கையில் படிக்கட்டு பக்கமிருந்த மூலையில் ஓர் இடுக்கு இருப்பது தெரிந்தது!

பார்த்ததுமே அந்த உருவங்களை நோக்கி நாற்காலியை எறிந்துவிட்டு, அந்த இடுக்கை நோக்கி ஓடினாள்! இரு உருவங்கள் அங்கேயே நின்று கொண்டன! ஆனால் ஒரு உருவம் வேகமாக அவளைப் பின்தொடர்ந்து ஓடியது!!

துரத்தப்படுகிறோம் என்று தெரிந்ததும் ஓடுகின்ற வேகத்தைக் கூட்டினாள்!

மற்ற பகுதிகளைப் போல் இங்கு போதிய வெளிச்சம் இல்லை. குறுகிய பாதை வேறு! அதிலும் அட்டைப் பெட்டிகள் கிடந்தன! அந்த இருட்டில் பெட்டிகளைக் குத்துமதிப்பாக கணித்து ஓடினாள்! பயத்தில் சில இடங்களில் தடுமாறி கீழே விழவும் செய்தாள்!

உடனே எழுந்து ஓடவும் செய்தாள்!!

வெளியே செல்ல வழி இருக்காதோ? மாட்டிக் கொள்வோமோ? என்றெல்லாம் பயப்படுகையில், அங்கே ஒரு அறை இருப்பது தெரிந்தது!

அந்த அறை திறந்தும் கிடந்தது. வேகத்தை அதிகப்படுத்தி… அந்த அறையை அடைந்து… உள்ளே சென்று… சட்டென்று பூட்டிக் கொண்டாள்! மேலும் கதவில் காது வைத்து, ‘முகமூடி உருவம் வருகின்றதா?’ என்றும் கேட்டாள்!

உருவத்தின் காலடிச் சத்தம் கேட்டது. ‘அய்யோ!! கதவை உடைத்து விட்டால் என்ன செய்ய?’ என்ற பயத்தில் உடலெங்கும் வேர்த்துக் கொட்டியது. இதயம் ‘பட்… பட்’ என்று வேகமாக அடித்துக் கொண்டது!!

அந்த உருவம் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வந்து, அதன் காலடிச்சத்தம் கதவின் முன் கேட்டதும் கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டாள்! அப்படி நின்றவளுக்கு வெளிப்புறத் தாழ்ப்பாள் போடும் சத்தம் கேட்டது!!

கோபத்தில் அந்த உருவம், அவளை உள்ளே வைத்துப் பூட்டிச் சென்றுவிட்டது!

இரண்டு நிமிடங்களுக்குள் இவை எல்லாம் நடந்தேறியிருந்தன!!

ஆனால் அந்த இரண்டு நிமிடங்கள் முழுதும் பயத்தில் கழிந்ததால், அவளுக்கு அது ஒரு யுகமாக தெரிந்தது! சற்றுநேரம் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க நின்று, தன்னை ஆசுவாசப்படுத்திவிட்டு, கண்களைத் திறந்தாள்.

மாட்டிக் கொண்டோம் என்று தெரிந்தது. ஆனால், இப்போதைக்கு உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றதில் ஓர் நிம்மதி வந்தது. கூடவே, ‘அந்த உருவம் திரும்ப வந்தால் என்ன செய்ய?’ என்ற பயமும் பதற்றமும் இருந்தது.

யாரையாவது அழைத்து உதவி கேட்கலாமா? என்று நினைத்தாள். ஆனாலும் யாரை அழைக்க என தெரியவில்லை. காவலர்கள் காப்பாற்ற வருவார்களா? தான் மட்டும்தான் மாட்டிக் கொண்டோமா? என்ற கேள்விகள் வந்தன.

இதெல்லாம் மூளைக்குள் போய்க் கொண்டு இருந்தாலும், ஓடி வந்த அலுப்பில் ‘ஷப்பா’ என்று மூச்சுவிட்டு, முந்தானையால் வியர்வையைத் துடைத்தபடியே திரும்பி நின்றதும் திகைத்துப் போய்விட்டாள்!!

வெளிச்சமோ, காற்றோட்ட வசதியோ இல்லாத ஒரு அறை! சிறிய அறைதான்! அதிலும் ஒழுங்கில்லாமல் அட்டைப் பெட்டிகள் கிடந்தன! அதனால் இன்னுமே அறை சிறியதாகத் தெரிந்தது!!

அவள் திகைத்தற்கான காரணம் அறையின் நீள அகலங்கள் அல்ல! அங்கே நின்று கொண்டிருந்தவன்! அவன் சேது!!

அந்த ஆள் யாரென்று தெரிந்ததுமே, ‘நீயா!?!’ என்று அதிர்ச்சியுடன் சொல்லி, சட்டென திரும்பி, உள்தாழ்ப்பாளைத் திறந்து கதவைத் திறக்கப் பார்த்தாள்.

ஆனால் கதவு திறக்கவில்லை! எப்படித் திறக்கும்? அதுதான் வெளிப்புறமாக தாழ் போடப்பட்டிருக்கிறதே! சற்று நேரத்திற்குப் பின்தான் மூளைக்கு இந்த விடயம் உரைத்தது!!

‘ஐயோ’ என முன்நெற்றியைக் கதவில் முட்டிக் கொண்டாள். எல்லாரும் போல் தானும் தப்பிச் சென்றிருந்தால், இந்தச் சிக்கலை தவிர்த்திருக்கலாமே? என்று நொந்து, ‘தன் நிலை என்னாகுமோ?’ என மனக்கலக்கம் கொண்டாள்.

துடைக்கத் துடைக்க வியர்வை வழிந்திட, உடலின் குருதியோட்டம் முழுவதும் பயம் கலந்து ஓட கண்மணி திரும்பி நின்றாள்!!

அவளின் தோற்றம் கண்டு அவன் ஒரு சிரிப்பு சிரித்தான். மேலும் அந்தச் சிரிப்பின் ஊடேயே, “பொறுக்கி! ஆங்!?” என்று கேட்டான். சட்டென சிரிப்பை நிறுத்தி, “இப்ப சொல்லேன் பார்க்கலாம்!?” என்று சேது கோபப்பட்டான்!  

அவன் சிரிப்பு… பேச்சு… இரண்டுமே கண்மணியை அச்சுறுத்தியது!!

***********************