ரகசியம் இறுதி அத்தியாயம் 💚

ரகசியம் இறுதி அத்தியாயம் 💚
அந்த மாந்தோப்புக்குள், தேனு அங்குமிங்கும் யாராவது வருகின்றார்களா என பார்த்துவிட்டு மரத்திலுள்ள மாங்காய்களை குறிப் பார்த்து பெரிய தடியால் அடிக்க, கயலின் நிலைதான் அந்தோ பரிதாபம்!
“உனக்கு நியாபமிருக்கா தேனு? இங்கதான் அவரை முதல் தடவை நான் பார்த்தேன்” என்ற கயலின் நினைவுகள் அன்று வீரஜைப் பார்த்த தருணத்தை நினைத்துப் பார்க்க, தேனுவோ சட்டென “ஷ்ஷ்… வாய மூடு! அந்த ஐயாவுக்கு தெரிஞ்சது அம்புட்டுதான்” என்றாள் பயந்தவாறு.
இப்போது தேனுவின் முகபாவனையில் கயலுக்கே இதழில் லேசான புன்னகை அரும்பியது. நெற்றியில் பூத்திருந்த வியர்வையை துடைத்துவிட்டவள், தேனுவின் கையிலிருந்த கம்பையெடுத்து தூக்கிப் பிடித்து மரத்திலிருந்த மாங்காய்களை குறிப்பார்த்து அடிக்க, அந்த கம்பில் பட்டு சில மாங்காய்களும் தரையில் அடுத்தடுத்தென விழுந்தன.
அன்று தோன்றியது போல இன்றும் அவள் முகத்தில் எதையோ சாதித்துவிட்ட தேஜஸ்!
“ஏ கயலு! மாங்காய் குறிப்பார்த்து அடிக்கிறதுல உன்னை அடிச்சிக்க ஆளேயில்லை” கயலை புகழ்ந்துத் தள்ளியவாறு ஒரு மாங்காயை தன் முந்தானையால் துடைத்து தேனு ஒரு கடி கடிக்க, “அன்றும் இன்றும் என்றும் ஊரான் வீட்டு மாங்காய் டேஸ்ட்டு சொந்த வீட்டு மாங்காய்ல கிடைக்காது தேனு” என்றாள் கயல் தானும் ஒரு மாங்காயை சுவைத்துக்கொண்டே.
எப்போதும்போல் தன் தோழியின் கன்னத்தை செல்லமாகக் கிள்ளிவிட்டு திரும்பிய தேனு எதிரே நின்றிருந்தவனைப் பார்த்து ஆனந்த அதிர்ச்சியில் நின்றாள். தேனுவுக்கு கூட இப்போது அன்றைய ஞாபகங்கள்தான்.
கன்னத்தைக் கிள்ளியதில் உண்டான வலியில் முகத்தை சுருக்கிக்கொண்ட கயலும், “எத்தனை தடவை சொன்னாலும் திருந்த மாட்டியா நீனு? ஏற்கனவே கன்னம் வத்தி போயிட்டு. கிள்ளுறதுல இருக்குற கொஞ்ச நஞ்சமும் போயிரும்போல!” தேனுவை அர்ச்சித்துக்கொண்டே திரும்பினாள்.
அடுத்தகணம், வீரஜை பார்த்து அவள் திகைத்துப்போய் நிற்க, அவனோ அன்று செய்ததுபோல் அலைபேசியில் அவர்களை படமெடுத்துக்கொண்டிருந்தான்.
தேனுவோ அடக்கப்பட்ட சிரிப்போடு, “ஏங்க, என்ன பண்றீங்க?” கயலை ஓரக்கண்ணால் பார்த்து பொய்யாக முறைத்தவாறுக் கேட்க, அலைப்பேசித் திரையிலிருந்து பார்வையை விலக்கி தலையை சரித்தவாறு அதே குறும்பு விழிகளோடு தன்னவளை ஒரு பார்வைப் பார்த்தான் அவன்.
அவனையே பார்த்துக்கொண்டிருந்த கயலுக்கு அந்த பார்வையில் பழைய நினைவுகள் கொல்லாமல் கொல்ல, விழிகள் சட்டென கலங்கிவிட்டது.
“பார்த்தா தெரியல, ஃபோட்டோ எடுத்தேன்” அன்று சொன்னதுபோல் இன்றும் வீரஜ் அதே பதிலைச் சொல்லி வாயைப் பொத்திச் சிரிக்க, “ஆஹான்!” வாய்விட்டு சிரித்தவாறு, “ஆகட்டும் ஆகட்டும்!” என்றுக்கொண்டே கயலை நமட்டுச் சிரிப்போடு ஒரு பார்வைப் பார்த்துவிட்டு நகர்ந்தாள் தேனு.
இப்போது அங்கு வீரஜும் கயலும் மாத்திரமே…
அவளோ அவன்மேலுள்ள கோபத்தில் அவனை கண்டுக்கொள்ளாதது போல் வேறு எங்கோ வெறித்துக்கொண்டு நிற்க, “பாப்பா…” என்ற வீரஜின் அழைப்பு. எத்தனை வருடங்கள் கழித்து அவன் அழைத்து அவள் கேட்கின்றாள்.
தன்னையும் மீறி அவள் விழிகளில் கண்ணீர் ஓட, அவளவனுக்கோ அவளின் விழிநீரை பாத்து, அவளின் விழிகளில் தெரியும் வேதனையைப் பார்த்து உள்ளுக்குள் அத்தனை வலி!
மெல்ல அவளருகில் நெருங்கியவன், அவள் விழிநீரைத் துடைத்தவாறு “நீ சொன்னது உண்மைதான் பாப்பா, அன்னைக்கும் சரி இப்போவும் சரி உன்னை ரொம்ப காயப்படுத்திட்டே இருக்கேன். உன் காதலுக்கு முன்னால என் காதலெல்லாம் ஒன்னுமே இல்லைடீ” என்றான் கரகரத்த குரலில்.
‘அவன் அழுகிறானோ?’ என குரலை வைத்து உணர்ந்தவள், சட்டென்று நிமிர்ந்து அவனை நோக்க, அவள் நினைத்தது சரியே. அவன் விழிகளிலிருந்தும் கண்ணீர் வழிந்து தரையைத் தொட்டது.
கயலோ தன்னவனை அதிர்ந்துப்போய் பார்க்க, “எனக்கு தெரியும் என்மேல கோபமா இருப்னேன்னு. என் பயம் அப்படி பாப்பா, நீ என்னை காதலிக்கிறேன்னு தெரியும். ஆனா, இந்த முகத்தை உன்னால ஏத்துக்க முடியுமான்னு ஒரு பயம். உன்னை விட்டு விலகுற ஒவ்வொரு நொடியும் உன்னை விட நான்தான்டீ துடிச்சு போனேன்” என்ற வீரஜின் குரலில் ஏக்கமும் காதலும் பிரிவின் வலியும் போட்டிப் போட்டது.
அதை உணர்ந்தாலும் கயல் அமைதியாகவே நிற்க, அவளை மேலும் நெருங்கி தன்னவளின் நெற்றியில் அழுத்தமாக இதழைப் பதித்தான் வீரஜ். அந்த முத்தத்திலும் ஸ்பரிசத்திலும் விழிகளை மூடிக்கொண்டாள் அவள்.
நெற்றியில் இதழுரச, “கொடுத்த வாக்குப்படி உன்னை தேடி வந்துட்டேன். இனி நீயே சொன்னாலும் உன்னை விட்டு போக மாட்டேன். மறுபடியும் உன்னை இழந்து தவிக்க நான் தயாரா இல்லை. லவ் யூ பாப்பா” காதலோடுச் சொல்லி காதலிப்பதை அழுத்தமாகச் சொல்லி முடிக்க, ‘இந்த ஒரு நாளுக்காகத்தானே இத்தனைநாள் காத்திருந்தேன்!’ உள்ளுக்குள் நினைத்துக்கொண்ட கயல், சந்தோஷத்துடன் கூடிய அழுகையில் வெடித்தழுதாள்.
அவளின் அழுகையில் வீரஜே ஒருநிமிடம் பதறிவிட்டான். “பாப்…பாப்பா, என்னாச்சு? சோரி பாப்பா, அதான் மன்னிப்பு கேக்குறேன்ல! அழாதடீ” அவன் பயந்துப்போய் கெஞ்ச, சிவந்து கலங்கிய விழிகளோடு அவனை முறைத்துப் பார்த்தவளோ, “இப்போ மட்டும் கெஞ்சுறீங்க, உங்க லவ்வு கிவ்வு எதுவும் எனக்கு வேணாம். போங்க, உங்க லண்டனுக்கே போங்க. அதானே வேணும்” நடந்ததற்கெல்லாம் சேர்த்து வைத்து கோபத்தை காட்டத் துவங்கினாள்.
இதில் வீரஜ்தான் திண்டாடிப் போய்விட்டான்.
“அய்யோ செல்லமே! எனக்கு அதெல்லாம் வேணாம்டீ. நீதான் வேணும். நீ மட்டும் போதும்டீ எனக்கு” பாவமாக முகத்தை வைத்துச் சொல்ல, அவன் மார்பில் கை வைத்துத் தள்ளி, “ஓஹோ! இதை நான் நம்பணுமாக்கும். அன்னைக்கு என்னையும் கூட்டிட்டு போங்கன்னு சொன்னதுக்கு என்ன பேச்சு பேசினீங்க, உங்க அக்கா ராட்சசி சாரி சாரி ஏன்ஜலு என்னை தள்ளி விட்டப்போ கூட கண்டுக்காமதானே போனீங்க. இப்போ மட்டும் எங்கிருந்து முளைச்சது இந்த பாசம்?” அவன் செய்தவையெல்லாம் சொல்லிக்காட்டி திட்டிக்கொண்டே முன்னேச் சென்றாள் கயல்.
வீரஜிற்குதான் ஆயாசமாகப் போய்விட்டது. அவளை எப்படி சமாதானப்படுத்துவது என்று கூட அவனுக்குத் தெரியவில்லை.
“பாப்பா பாப்பா, எல்லாத்துக்கும் சேர்த்து உன் புருஷனை மன்னிச்சிருடீ. புருஷனை இப்படி கெஞ்ச விடுறது ரொம்ப தப்புடீ. என்னை பார்த்தா உனக்கு பாவமா இல்லையா?” அவனும் விடாது கெஞ்சிக்கொண்டு கொஞ்சிக்கொண்டு அவள் பின்னேச் செல்ல, “இல்லை” ஒற்றை வார்த்தையில் அழுத்தமாகச் சொல்லிவிட்டு முன்னே விறுவிறுவென முறுக்கிக்கொண்டு நடந்தாள் அவள்.
அடுத்தகணம், அவளின் மெல்லிய கரத்தை பிடித்திழுத்து தன் வலிய கரங்களுக்கிடையில் சிறைப்பிடித்தவன், “என்னடீ ரொம்பதான் ஓவரா பண்ற, நான் இல்லாம உனக்கு ரொம்ப கொழுப்பு கூடிப்போயிருச்சு. அதான் சாரி கேக்குறேன்ல, ரொம்பதான் பிகு பண்ற” பொய்யான மிரட்டலோடுக் கேட்டு அவளை மேலும் தன்னோடு நெருக்க, அவனின் அருகாமையில் உள்ளுக்குள் தறிக்கெட்டு ஓடும் உணர்ச்சிகளை அடக்க முடியாது நெளிய ஆரம்பித்தவளின் இதழிலும் பொய்யான முறைப்பு.
“அப்படிதான் பண்ணுவேன்” அவள் உதட்டைச் சுழித்துக்கொண்டு சொன்ன விதத்தில் வீரஜின் மனம் மயங்க, ஒரு கரத்தால் சேலையூடே தெரிந்த அவளிடையில் அழுத்தமாக பதித்து, மற்ற கரத்தால் அவள் கன்னத்தைத் தாங்கிக்கொண்டவன், அவளின் மெல்லிய இதழை தன்னிதழால் சிறைப்பிடித்திருந்தான்.
ஆரம்பத்தில் பொய்க்கோபத்தில் திமிறியவாறு அவனை தள்ளி விட முயன்ற கயலின் உணர்வுகளோ, தன்னவனின் இதழ் செய்யும் மாயத்தில் அப்படியே உருகி குலைந்து அவனுக்கு ஒத்துழைக்க, முத்தமிட்டுக்கொண்டே சிரித்தான் வீரஜ்.
அதை உணர்ந்தவள் கஷ்டப்பட்டு விலகி, “சிரிக்கிறீங்களா வீர்?” கோபமாகக் கேட்க, “இல்லையே…” அவளின் கோபத்தைப் பார்த்து முட்டிக்கொண்டு வரும் சிரிப்பை அடக்க, மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க முறைக்க முயன்றவளுக்கும் ஒரு கட்டத்தில் சிரிப்பு வந்து விட்டது.
சிரிப்போடு அவன் மார்பில் குத்தியவள், “லவ் யூ வீர்” என்றவாறு அவன் மார்பில் சாய்ந்துக்கொள்ள, அழுத்தமாக அவளின் உச்சந்தலையில் முத்தமிட்ட வீரஜ், மெல்ல அவள் நாடியை நிமிர்த்து தலை குனிந்து அவளிதழில் மீண்டும் தன்னிதழை பொருத்தினான் காதலொடு.
அடுத்த சில நிமிடங்களில் பாதியணைத்தவாறு சிரித்து பேசிக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்த மிஸ்டர் என்ட் மிஸஸ் வீரஜை பார்த்த வீட்டாற்களுக்கு முதலில் அதிர்ச்சி என்றால், பின் எல்லையில்லா சந்தோஷம். தங்களைப் பார்த்துவிட்டு முகம் சிவந்த தன் மகளை பார்த்த ரேவதியோ, விழிகள் கலங்க சத்யா அம்மாளைப் பார்க்க, அவரோ தன் மகனைதான் ஆனந்த கண்ணீரோடு பார்த்தார்.
அன்று மாலையே, எல்லோரும் செல்லத் தாயாராகி வாசலில் நிற்க, “கண்டிப்பா எல்லாரும் மறுபடியும் எங்க ஊருக்கு வரணும். ஆனா, மாப்பிள்ளையும் கயலும் இன்னும் கொஞ்சநாள் இங்க இருந்திருக்கலாம்” கர்ணா குறைப்பட்டுக்கொள்ள, “இல்லை மாமா, அம்மா சார்புல நான்தான் கம்பனிய பார்த்துக்குறேன். இன்னொருநாள் கண்டிப்பா வருவேன்” என்றான் வீரஜ் தயக்கமாக.
எல்லோரும் வெளியேற எத்தனிக்க, சத்யா அம்மாள் மற்றும் கர்ணாவின் முன் ஒருவித சங்கடத்தோடு எதையோ கேட்க வருவதும் பின் தயங்குவதுமாக இருந்தார். கர்ணாவுக்கும் அது புரியாமலில்லை.
அவரை கேள்வியாக நோக்கியவர், “என்னம்மா ஆச்சு? நீங்க ஏதோ சொல்ல நினைக்கிறீங்கன்னு தெரியுது. ஆனா, ஏன் எங்ககிட்ட தயங்குறீங்க? தயங்காம கேளுங்க அம்மா” சிரிப்போடுச் சொல்ல, அவரும் வீரஜை ஒரு பார்வைப் பார்த்தவர், அவன் விழிகளால் கொடுத்த ஆறுதலில் சற்று தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, “அது வந்துப்பா… உங்க வீட்டு பொண்ண என் மகன் யுகனுக்கு கொடுக்க உங்களுக்கு சம்மந்தமா?” திக்கித்திணறி கேட்டு முடித்தார்.
கர்ணாவுக்கோ ஒருபக்கம் அதிர்ச்சி! இன்னொரு பக்கம் ஆனந்தம்! அதேநேரம், வெளியேறச் சென்ற யுகனுக்கு தூக்கி வாரிப்போட்டது என்றால், தேனுவோ பதட்டமாக நகத்தை கடித்துக்கொண்டிருந்தாள்.
“தேனு ரொம்ப நல்ல பொண்ணு. அவள எங்க வீட்டு பொண்ணா பார்த்துப்போம். நீங்க பயப்படாம உங்க பொண்ண என் பையனுக்கு கொடுக்கலாம். நான் ஏதாச்சும் தப்பா கேட்டேன்னா என்னை மன்னிச்சிருங்க தம்பி” சத்யா அம்மாள் தன் மனதிலிருந்ததை சொல்லிவிட்டு தயக்கமா கர்ணாவை நோக்க, “அய்யோ அம்மா! என்னம்மா நீங்க மன்னிப்பெல்லாம் கேட்டுக்கிட்டு” என்ற கர்ணாவோ தன் மகளின் முகத்தைப் பார்த்தார்.
அவளோ ஆர்வமாக தந்தையின் முகத்தைப் பார்க்க, “உன் பதிலென்னடா?” தன் மகளிடமே கேட்டுவிட்டார் அந்த தந்தை. அவளென்ன வேண்டாமென்றா சொல்லப் போகிறாள்!
உள்ளுக்குள் உற்சாகம் ஊற்றெடுத்தாலும் அதை அடக்கிக்கொண்டு, “உங்க விருப்பம்தான் என் விருப்பம்” என்றாள் வராத வெட்கத்தை வரவழைத்து தலைகுனிந்துக்கொண்டே.
இதில் யுகன், வீரஜ் மற்றும் கயலுக்குதான் ‘என்ன நடிப்புடா சாமி!’ என்றிருநந்தது அவளின் முகபாவனையைப் பார்த்து.
தன் மகளின் பதிலில் சந்தோஷம் பொங்க, “எங்களுக்கு சம்மதம்மா” என்றார் கர்ணா அத்தனை உற்சாகத்தோடு. சத்யா அம்மாளோ வீரஜை சிரிப்போடு நோக்க, அவனோ ஒற்றை கண்ணை சிமிட்டி சிரித்துக்கொண்டான்.
சத்யா அம்மாளிடம் விடயத்தைச் சொன்னதே அவன்தானே!
யுகனுக்கும் தேனுவும் கால்கள் தரையிலேயே இல்லை. வானத்தில் பறப்பது போன்ற உணர்வு!
“அப்போ சரி தம்பி, சீக்கிரமே கல்யாணத்தை நடத்திரலாம். ஒரே மாசத்துல ஒரு நல்ல நாளா பார்த்து சொல்லுங்க” சத்யா அம்மாள் சொல்ல, கர்ணா பேசும் முன்னே அவரை இடைவெட்டி, “அதேநாள் எங்க கல்யாணத்தையும் வச்சிருங்கம்மா” என்றான் வீரஜ் சட்டென்று.
எல்லாரும் கேள்வியாக நோக்க, கயலுக்கும் ஒன்றும் புரியவில்லை.
“அதான் ஏற்கனவே…” அவள் புரியாதுக் கேட்டவாறு இழுக்க, “ஆமா கல்யாணமாச்சு. ஆனா, உனக்கு பிடிச்ச மாதிரி இல்லையே பாப்பா” என்றவன், மற்றவர்களின் புறம் திரும்பி, “மோதிரம் மட்டும் மாத்தி நாலு பேருக்கு நடுவுல ரிஜிஸ்டர் ஆஃபீஸ்ல நடந்த கல்யாணம் எங்களோடது. ஆனா, என் பாப்பா விருப்பப்படி கோயில்ல அக்னி சாட்சியா, தாலி கட்டி, குங்குமம் வச்சி, எங்க சொந்தங்களுக்கு நடுவுல மேளதாள சத்தத்தோட எங்க கல்யாணம் நடக்கணும்” என்றான் தன்னவளின் விழிகளைப் பார்த்துக்கொண்டே.
கயலின் இதழ் புன்னகையில் விரிய, விழிகள் கலங்கிவிட்டது.
“அதுக்கென்ன மாப்பிள்ளை, பேஷா பண்ணிரலாம். என்ன சொல்றீங்கம்மா?” கர்ணா சொல்லிவிட்டு சத்யா அம்மாளிடம் கேட்க, அவர் என்ன முடியாதென்றா சொல்லப் போகிறார்?
தன் மகன் அபியின் திருமணத்தைப் பற்றி ஏகப்பட்ட கனவுகளை வைத்திருந்தவர் அவர். இப்போது வீரஜின் வார்த்தையில் இழந்து விட்டதாக நினைத்த பல பாக்கியங்கள் மீண்டும் கிடைக்கும் உணர்வு!
“ரொம்ப நன்றிப்பா” தன் மகனிடத்தில் தழுதழுத்த குரலில் சொன்னவர், “ஜாம் ஜாம்னு என் இரண்டு பையனோட கல்யாணத்தையும் ஒரே மேடையில பண்ணிடலாம்” என்றார் உற்சாகமாக. எல்லாருக்கும் வீட்டில் நடக்கும் விசேஷத்தை நினைத்து இப்போதே எதிர்ப்பார்ப்பு கூடிவிட்டது.
நான்கு வருடங்கள் சிரிப்பின்றி சென்ற சூனியமான நாட்கள் எல்லாம் இன்றோடு மாறிவிட்டது. சிறிதுநேரம் வாசலில் நின்றவாறே சிரித்துப் பேசிவிட்டு சத்யா அம்மாளின் மொத்த குடும்பமும் அங்கிருந்து வெளியேறப்போக, பின்னால் தன்னவனின் கரம் பிடித்து வந்த கயலை திரும்பிப் பார்த்த சீதா அம்மாள், “நீ எங்க வர்ற?” என்று கேட்டார் சந்தேகமாக.
“வீட்டுக்குதான்” அவளும் சாதாரணமாகச் சொல்ல, “கயல், நீ போகாதேம்மா, அதான் கல்யாணம் ஆக போகுதுல்ல, கல்யாணம் வரைக்கும் இங்கேயே இரு!” ரேவதி மகளிடம் சொல்லிவிட்டு, “அண்ணி, நீங்க போங்க, பொண்ணுங்களோட அம்மாவா நான் இங்கயே இருந்துக்குறேன்” என்றார் தீவிரமாக. இதில் கயல்தான் ‘மீண்டுமொரு பிரிவா?’ என ஆடிப் போய்விட்டாள்.
“இல்லை, அதெல்லாம் முடியாது. நா..நான் ஏன்? முடியாதும்மா” அவள் கெஞ்ச, “இது நம்ம சம்பிரதாயம்மா, கொஞ்சநாள்தானே!” என்றார் கர்ணா. அவரை மீறி எதுவுவம் பேச முடியாது கயல் தன்னவனை பாவமாக நோக்க, அவனுக்கோ அவளின் உதட்டை பிதுக்கிய பாவனையில் முட்டிக்கொண்டு சிரிப்பு வந்தது.
மெல்ல தன்னவளை நெருங்கி, “பாப்பா, இத்தனைநாள் பிரிஞ்சு ஒருத்தரொருத்தருக்காக காத்திருந்தோம். இது நம்ம கல்யாணம். இந்த பிரிவு வேற ஃபீல் கொடுக்கும்டா, அதுக்கப்றம் உன்னை என் கண்ணுக்குள்ளேயே வச்சிருப்பேன்” வீரஜ் காதலொடுச் சொல்லி அவள் நெற்றியிலும் கன்னத்திலும் பிரிவின் ஏக்கத்தை போக்கும் விதமாக அழுந்த முத்தம் பதிக்க, அவளோ அழுதவாறு தன்னவனை இறுக அணைத்துக்கொண்டாள்.
பெரியவர்களோ சிரித்துக்கொண்டு முகத்தை வேறுபுறம் திருப்பிக்கொள்ள, “ஹ்ர்ம் ஹ்ர்ம்… கயலு எல்லாரும் இங்கதான் இருக்கோம்” என்று கேலிக்குரலில் சொன்னான் யுகன்.
“யாரு இருந்தா எனக்கென்ன, நான் என் புருஷனைதானே கட்டிப் பிடிச்சிருக்கேன்” கயலும் பதிலடிக் கொடுக்க, “அது சரி!” நமட்டுச் சிரிப்போடு தலையாட்டிய யுகன், தன்னவளை நோக்க, அவளோ அவன் சற்றும் எதிர்ப்பார்க்காது ஒற்றைக் கண்ணைச் சிமிட்டி பறக்கும் முத்தத்தை வழங்கினாள்.
யுகனின் விழிகள் தெறித்து விடுமளவிற்கு விரிந்து சுற்றிமுற்றி யாரும் பார்த்துவிட்டார்களோ என பதட்டமா நோக்க, தேனுவோ கொடுப்புக்குள் சிரித்தவாறு அவனை பார்த்தாள் என்றால், ‘அய்யோ கொல்றாளே! இனி கல்யாணம் வரைக்கும் காலத்தை எப்படிதான் கடத்தப் போறியோ யுகா…’ அவளின் காதல் பார்வையில் உள்ளுக்குள் புலம்பித் தள்ளிவிட்டான் யுகன்.
அடுத்த சில நிமிடங்களில் எல்லோரும் அங்கிருந்து கிளம்ப, சரியாக ஒரே மாதத்தில் திருமணம் இரு தம்பதிகளுக்கும் நிச்சயிக்கப்பட்டது.
இந்த சிறு பிரிவு இரு காதல் ஜோடிகளுக்குமிடையே காதலையும் ஏக்கத்தையும் மேலும் அதிகரிக்க, வீரஜோ பிரிவின் வலியின் சுகத்தை விருப்பப்பட்டு அனுபவித்தான் என்றால், யுகனுக்குதான் புதுக் காதல் அல்லவா! அவளை அலைப்பேசியில் அழைக்கவும் முடியாது, பார்க்கவும் முடியாது தவித்துப் போய்விட்டான்.
இவ்வாறு நாட்கள் கழிந்து திருமணத்திற்கு ஒருவாரம் இருக்கும் போதே சத்யா அம்மாளின் மொத்தக் குடும்பமும் கயலின் ஊருக்குச் செல்ல, அங்கு மாப்பிள்ளை வீட்டாற்களுக்கென அத்தனை வசதிகளோடு வீட்டை ஏற்பாடு செய்துக் கொடுத்திருந்தார் கர்ணா.
திருமணத்திற்கென வேலைகள் தடல்புடலாக நடக்க, இன்னும் திருமணத்திற்கு நான்கே நாட்கள் இருக்கும் சமயத்தில், சத்யா அம்மாள் மருமகள்களுக்கென கொடுத்துவிட்டிருந்த புடவைகளையும் நகைகளையும் சிரித்துச் சிரித்துப் பேசியவாறு பார்த்துக்கொண்டிருந்தனர் தேனுவும் கயலும்.
சரியாக, தேனுவின் அலைப்பேசிக்கு ஒரு அழைப்பு வர, அதையெடுத்துப் பார்த்தவளின் விழிகளோ அதிர்ந்து விரிந்தன.
‘இவர் எதுக்கு இத்தனைநாள் இல்லாம இன்னைக்கு கால் பண்றாரு. அய்யோ அப்பா பார்த்தாரு சேத்தேன்’ உள்ளுக்குள் புலம்பியவள், மெல்ல சுற்றிமுற்றி பார்த்துவிட்டு, “கயலு, உள்ள வா!” கயலின் காதருகில் கிசுகிசுப்பாகச் சொல்லிவிட்டு அறைக்குள் நுழைய, அவளும் யோசனையில் புருத்தை நெறித்தவாறு அவள் பின்னே ஓடினாள்.
கயல் உள்ளே நுழைந்ததுமே கதவை சாத்தி தாழிட்ட தேனு, “ஹலோ…” மென்மையாக அழைக்க, மறுமுனையிலிருந்த யுகனுக்கோ பல நாட்கள் கழித்துக் கேட்ட தன்னவளின் குரலில் காதல் பொங்கியது.
காதலொடும் ஆசையோடும் அவன், “தேனு செல்ல…” என்று அவன் கொஞ்ச வர அதற்குள், “ஏங்க, ஏன் எனக்கு கால் பண்ணீங்க? அப்பாவுக்கு மட்டும் தெரிஞ்சது அம்புட்டுதான். அதான் கல்யாணம் வரைக்கும் நம்மள பேசக் கூடாது, பார்க்கக் கூடாதுன்னு சொல்லியிருக்காங்களே! உங்களுக்கு கொஞ்சமும் பொறுமை இல்லை” அவனை இடைவெட்டி படபடப்பாக பேசிக்கொண்டே போனாள் அவள்.
அங்கு யுகனுக்குதான் அவளின் பேச்சில் ஊற்றெடுத்த காதல் அப்படியே புஸ்ஸென்று போய்வீட்டது. ‘க்கும்! எனக்கு தேவைதான்’ தனக்குள்ளேயே நொடிந்துக்கொண்டவன், “நான் உங்க வீட்டுக்கு வெளியிலதான் நின்னுக்கிட்டு இருக்கேன். மொட்டை மாடிக்கு வா, மறக்காம கயலையும் கூட்டிட்டு வா!” என்க, விழி விரித்து, “நிஜமாவா?” ஆச்சரியமாகக் கேட்டவளுக்கு இதழ் முழுக்க புன்னகை.
“கயலு, அவரு என்னை பார்க்க வந்திருக்காரு. வா வா” கயலின் கையைப் பிடித்து யாருக்கும் சந்தேகம் வராதபடி அவள் மாடிக்கு இழுத்துச் செல்ல, ‘யுகன் மாமாவுக்கு இருக்குற காதல் கூட நம்ம ஆளுக்கு நம்ம மேல இல்லை போல!’ உள்ளுக்குள் சலித்தவாறு தன் தோழியோடு சென்று நின்றுக்கொண்டாள்.
ஆனால், தேனு பார்க்கும் திசையை அவள் பார்க்கவில்லை.
காதலர்களை பார்ப்பது அவர்களை சங்கடத்திற்குள்ளாக்குமென எங்கோ பார்த்தபடி கயல் நிற்க, “கயலு, உனக்குதான்டீ காலு. பேசுடீ” தேனு அவளின் முகத்திற்கு நேராக அலைப்பேசியை நீட்டிச் சொல்ல, ‘எதே எனக்கா?’ புரியாது நினைத்தவாறு அலைப்பேசியை காதில் வைத்தவளுக்கு அடுத்தகணம் மறுமுனையில் கேட்ட குரலில் அழுகையே வந்துவிட்டது.
“பாப்பா…” வீரஜ் அழைக்க, “வீர்…” பிரிவின் வலியில் விழிகள் கலங்கி மூக்கை உறிஞ்சியவள், “என்கிட்ட பேச இத்தனைநாளாச்சா உங்களுக்கு? என் நினைப்பே இல்லை” என்றாள் குறைப்பட்டுக்கொண்டு.
“ஆமா ஆமா எனக்கில்லைதான். இப்போ கொஞ்சம் வெளியில பார்க்குறியா?” சிரித்தவாறு அவன் சொல்ல, முட்டை விழிகளை விரித்து வேகமாக தேனு பார்க்கும் திசையைப் பார்த்தாள் கயல். அங்கு யுகன் நின்றிருக்க, பைக்கில் சாய்ந்து நின்று தன்னவளை பார்த்துக்கொண்டிருந்தான் வீரஜ்.
அவனைப் பார்த்ததும் வானில் பறப்பது போன்ற உணர்வு கயலுக்கு.
“வீர், நான் உங்களை ரொம்ப மிஸ் பண்ணேன். ஆனா, நீங்கதான் என்னை பார்க்க கூட வரல” சின்ன விசும்பலோடு அவள் பேச, தன்னவளை விழிகளில் நிரப்பியவாறு, “நான் உன் நினைப்பில்லாம இருந்திருப்பேன்னு நினைக்கிறியா பாப்பா, உன்னை விட அதிகமா நான் உன்னை மிஸ் பண்ணேன்டீ. ஆனா, இந்த பிரிவு ஒரு சுகமான வலி. இரண்டுபேரும் பார்க்காம பேசாம ஒன்னு சேர்ற நாளுக்காக ஏக்கத்தோடு காத்திருக்குற சுகமே ஒரு தனி ஃபீல் கயல். ஆனா, கல்யாணம் வரைக்கும் பாடி தாங்காதும்மா. அதான் இப்போவே உன்னை பார்க்க வந்துட்டேன். ஆனா, இத்தனைநாள் பார்க்காம பேசாம இப்போ உன்னை பார்க்கும் போது உள்ளுக்குள்ள ஏதோ பண்ணுதுடீ. நல்லாயிருக்கு” காதலை, பிரிவின் வலியை உணர்ந்துத் பேசினான் அவன்.
அவனின் வார்த்தைகளைக் கேட்டு உள்ளுக்குள் உணர்ச்சிகள் தாறுமாறாக செயற்பட்டாலும் அதை அடக்கி, “க்கும்! பெரிய காதல் மன்னர் இவரு” கயல் நொடிந்துக்கொள்ள, வீரஜுக்கும் அவளின் பாவனையில் சிரிப்பு வந்துவிட்டது.
அதேநேரம் இங்கு மற்ற ஜோடிகளோ எப்படி இருக்கீங்க, நல்லா இருக்கீங்களா, சாப்பிட்டீங்களா என்று சைகையாலேயே விழிகளில் காதலொடுப் பேசிக்கொண்டனர்.
சரியாக, “இரண்டு பேரும் இங்க என்ன பண்றீங்க?'” என்ற கர்ணாவின் குரல். திடுக்கிட்டு நிமிர்ந்தவர்கள் மெல்ல எச்சிலை விழுங்கிக்கொண்டு, “ஹிஹிஹி…” அசடுவழிந்தவாறு திரும்பிப் பார்க்க, அவரோ இருவரையும்தான் உறுத்து விழித்துக்கொண்டிருந்தார்.
கயலோ அவரின் முறைப்பில் பயந்து கிட்டதட்ட உண்மையை உளறப்போக, அதை உணர்ந்தவள் போல் தேனுவோ சட்டென்று குறிக்கிட்டு, “அதுப்பா… அது வந்து கொஞ்சம் காத்து வாங்கலாமேன்னு… ஏன் மொட்டை மாடிக்கு கூட எங்களுக்கு வர உரிமை இல்லையா?” பொய்யாக சலித்தவாறுக் கேட்க, தன் மகளை கூர்ந்துக் கவனித்தவாறு, “கீழ சொந்தபந்தங்கள் இருக்கும் போது நீங்க இப்படி தனியா மாடியில இருக்குறது சரியில்லை. மொதல்ல கீழ போய் வந்தவங்கள கவனிங்க” என்றார் கர்ணா கறாராக.
‘அப்பாடா!’ விட்டால் போதுமென்று அங்கிருந்து இருவருமே ஓடிவிட, போகும் அவர்களை சந்தேகமாகப் பார்த்தவர் மெல்ல வெளியே எட்டிப் பார்த்தார். அதேசமயம்தான் அலைப்பேசி வழியே கர்ணாவின் குரல் கேட்டு அடித்து பிடித்து யுகன் பின்னால் அமர வீரஜ் வண்டியை படு வேகமாக ஓட்டிச் செல்ல, ஏனோ அனுபவசாலியான அவருக்கு தன்னையும் மீறி இதழில் புன்னகை அரும்பியது.
இவ்வாறு நான்கு நாட்கள் கழித்து ஊர்க்கோயில் மண்டபத்தில் இரு தம்பதிகளும் மணமேடையில் ஹோமகுண்டத்தின் முன் அமர்ந்திருந்தனர். ஐயர் மந்திரம் சொல்லி, “கெட்டி மேளம்… கெட்டி மேளம்…” என்று குரல் கொடுக்க, அவர் கொடுத்த மங்களநாணை கையில் ஏந்தியவர்களுக்கு நிஜமாகவே அதை தம் துணைகளின் கழுத்தில் எப்படி கட்ட வேண்டுமென்று கூட தெரியவில்லை.
அக்னி சாட்சியாக, பல சொந்தபந்தங்களுக்கு நடுவே கட்டத் தெரியாத தாலியை பலபேரின் சிரிப்புகளுக்கு மத்தியில் தட்டுத்தடுமாறி தத்தமது துணைகளின் கழுத்தில் இரு ஆடவர்களும் பூட்ட, அவர்களும் கைக் கூப்பி வணங்கியவாறு ஆனந்தக் கண்ணீரோடு அதை ஆனந்தமாக வாங்கிக் கொண்டனர்.
எத்தனை வருட பிரிவு, வலி, ஏக்கம், காதல்! இன்று மொத்தக் காதலையும் விழிகளில் சேர்த்து தன்னவளைப் பார்த்த வீரஜ், குங்குமத்தை நெற்றி வகுட்டிலிட்டு, “லவ் யூ பாப்பா” தன்னவளுடன் சேர்ந்த சந்தோஷத்தில் உண்டான அழுகையில் குரல் கரகரக்கச் சொல்ல,
அவளுடைய மனநிலையை வார்த்தையால் வடிக்க முடியுமா என்ன?
விழிகளில் கண்ணீரோடு இதழில் புன்னகையோடு தன்னவனை பார்த்துவிட்டு கூட்டத்தின் புறம் திரும்பியவளுக்கு கூடவே தன் தந்தையும் பார்த்துக்கொண்டிருப்பது போன்ற பிரம்மை. “அப்பா…” இதழை மெல்ல அசைத்தவளுக்கு மேலிருந்து அவரின் ஆசிர்வாதத்தையும் பெற்ற உணர்வு.
ரேவதியோ தன் கணவர் கடைசியாக தன் மனைவிக்கென வாங்கி வைத்திருந்த புடவையையே கட்டியிருந்தார். அன்றே கயல், “அம்மா, அப்பா உங்களுக்காக வாங்கினது” என்று அந்த புடவையை சேர வேண்டிய இடத்திலேயே சேர்த்திருக்க, அதை அணைத்துக்கொண்டு கதறியழுதுவிட்டார் அவர். இன்று மகளின் திருமணத்திற்காக அதையே அவர் அணிந்திருக்க, தன் கணவரும் தன்னுடனே இருப்பது போன்ற பிரம்மை அவருக்கு.
பெரியவர்களின் சந்தோஷத்திற்கோ அளவில்லை. இரு மகன்களின் திருமணத்தை ஒரே மேடையில் பார்த்த சத்யா அம்மாளிற்கு மனம் நிறைந்துப் போய்விட்டது. சீதா அம்மாளை அவர் புன்னகையோடு நோக்க, “இனி எல்லாம் நல்லதாகவே நடக்கும்” தன் தோழியை மகிழ்வோடு அணைத்துக்கொண்டார் சீதா அம்மாள்.
மண்டபத்திலிருந்து வெளியேறியதுமே ஒரு பெரிய வேனில் மொத்தக் குடும்பமும் ஏற, வீடு செல்லும் பாதை அல்லாது வேறு திசைக்கு வண்டி செல்வதை உணர்ந்து “வீட்டுக்கு போகல்லையா?” சந்தேகமாக் கேட்டாள் கயல்.
மற்றவர்களோ நமட்டுச் சிரிப்பு சிரிக்க, “வீட்டுக்குதான் போறோம்” என்ற வீரஜ், எத்தனை முறை விதவிதமாக தன் மனைவி கேட்டும் வாயே திறக்கவில்லை.
அவளும் ஒருகட்டத்தில் ஏற்கனவே இருந்த திருமண களைப்பில் தூங்கிவிட, சிலமணி நேரங்கள் கழித்து, “பாப்பா…” என்றழைத்தவன், அவள் தூக்க கலக்கத்திலிருக்கும் போதே தன்னவளை கைகளில் ஏந்திக்கொண்டுச் சென்று, “பாப்பா, கண்ணை முழுசா திறந்து பாருடீ” குறும்புச் சிரிப்போடுச் சொல்ல, “அதுக்குள்ள வீட்டுக்கு வந்துட்டோமா? எனக்கு தூக்கம் தூக்கமா வருதுங்க” முணங்கியவாறு விழிகளை திறந்தவளின் விழிகள் ஆச்சரியத்தில் மேலும் சாரசர் போல் விரிந்தன.
“வீர்…” ஆச்சரியம் கலந்த புன்னகையோடு விழிகளை விரித்து கயல் தன்னவனை அழைக்க, “நம்ம வீடு பாப்பா” என்றவன், அவளை கைகளில் ஏந்திக்கொண்டே உள்ளே சென்றான். அவளும் உச்சக்கட்ட சந்தோஷத்தில் அவன் கைகளிலிருந்தவாறே அவன் கோலரைப் பற்றியிழுத்து அவன் கன்னத்தில் அழுந்த முத்தமிட்ட, மற்றவர்களின் பார்வையை உணர்ந்து ஆண்மகனான அவனுக்கும் வெட்கத்தில் முகம் சிவந்துவிட்டது.
பெரியவர்களும் சிறியவர்களும் கூட அவர்களின் அந்நியொன்னியத்தை, காதலைப் பார்த்து தங்களுக்குள் கிசுகிசுத்துக்கொண்டு சிரிப்போடு அவர்களின் பின்னே வீட்டின் வளாகத்திற்குள் நுழைந்தனர்.
பார்த்திபன் அன்று மகளுக்காக கொடுத்த வீடு மீண்டும் புதிதாக பராமரிக்கப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டிருக்க, தன்னவனின் தோளில் கண்ணீரை துடைத்தவாறு சாய்ந்துக்கொண்ட கயலின் விழிகளுக்குச் சிக்கியது, மீண்டும் நிறப்பூச்சு அடிக்கப்பட்டு தோட்டத்தில் மின்னிக்கொண்டிருந்த ஊஞ்சல்.
“வீர், என் ஊஞ்சல்” ஓடிச் சென்று கயல் அமர்ந்துக்கொள்ள, வீரஜும் சிரித்துக்கொண்டே சென்றவன், ஊஞ்சலை பின்னாலிருந்து ஆட்டி விட ஆரம்பித்தான்.
“குழந்தைய பெத்து அதை தொட்டில்ல போட்டு ஆட்டி விடுற வயசாகுது இதுங்களுக்கு. இப்போ போய் ஊஞ்சல்ல விளையாட்டிக்கிட்டு இருக்குதுங்க” யுகன் கயலின் காலை வார, அவளோ, “வீர்…” என்று சிணுங்கியவள், “தேனு உன் புருஷனை அமைதியா இருக்கச் சொல்லுடீ, இல்லைன்னா…” தேனுவிடம் கத்திக்கொண்டு கீழேயிருந்த கல்லை தூக்கி யுகனின்மேல் எரிந்தாள்.
“ஆத்தாடி ஆத்தா! கொலை” அவன் தன் மனைவியின் பின்னால் ஒழிந்துக்கொள்ள, சுற்றியிருந்தவர்களோ வாய்விட்டுச் சிரித்தனர்.
இனி வரும் காலங்களும் அதே சிரிப்பும், சின்ன சின்ன சண்டைகளும், சமாதானங்களும், சந்தோஷமும் அவர்களின் வாழ்க்கையைச் சுற்றி நிறைந்திருக்கும்.
****சுபம்****
-ஷேஹா ஸகி