ரகசியம் 01 💚

eiZ5BMR90432-14454983

அன்றிரவு அந்த ஊர்க்கோயிலோ பூரண நிலா வெளிச்சத்திலும் கூடவே தீபங்களாலும் மின்ன, கோயிலுக்குள்ளேயும் சுற்றியுள்ள வளாகத்திலும் அந்த ஊரைச் சேர்ந்த மக்கள் திரண்டிருந்தனர்.

ஏதோ விசேஷம் போலும்!

கிட்டதட்ட மொத்த ஊர்மக்களுமே கடவுளே சரணமென கோயிலை நாடிச் சென்றிருக்க, அங்கிருக்கும் குடியிருப்புக்களிலேயே பெரிய வீடு. கிட்டதட்ட சிறிய மாளிகை என்றே சொல்லலாம். அந்த வீட்டின் அறையொன்றில் தரையில் அமர்ந்து கன்னத்தில் அறைந்த காயத்தோடு கதறியழுதுக்கொண்டிருந்தாள் ஒருத்தி.

அடி வாங்கியவள் அழ, அடித்தவனும் அவளெதிரேதான். கோபமாக அல்லாமல், ஒருவித பரிவான பார்வையில் அவள் முன் முட்டி போட்டு அமர்ந்து அவள் கன்னங்களை தாங்கியிருந்தான். சொல்லப்போனால், அழுததில் அவனுடைய விழிகளும் சிவந்து வீங்கிப் போயிருந்தன.

“கயல், நான் சொல்றதை கேளு, மொதல்ல இங்கயிருந்து கிளம்பு!” அவன் அழுத்தமாகச் சொல்ல, பதறியபடி அவனை நிமிர்ந்துப் பார்த்த கயல்விழி, “முடியாது வீர், என்னால உங்கள விட்டு எப்படி போக முடியும்? நா…நான் உங்க கூடதான்…” என்று சொல்லிமுடிக்கவில்லை, அவளுடைய தோள்களை ஆவேசமாக பற்றியிருந்தான் வீரஜ்.

“எத்தனை தடவைடீ சொல்றது உனக்கு? இங்கயிருந்தா உன்னை கொன்னுடுவாங்க. லுக், நீ மொதல்ல இங்கயிருந்து போயிடு!” வீரஜ் மீண்டும் அவளுக்கு புரிய வைக்க முயல, “ஆனா, நான் உங்களைவிட்டு…” மீண்டும் அவனுடைய பயத்தை புரிந்துக்கொள்ளாது கயல் அதே புராணத்தைப் பாட, அவனுக்கு கோபம் உச்சத்தை தொட்டுவிட்டது எனலாம்.

“என்னடீ என்னைவிட்டு? ஏதோ நான் உத்தமன் மாதிரி பேசிக்கிட்டு இருக்க. ஓஹோ! கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் கான்செப்ட்டா? முட்டாள் முட்டாள்! நான் உன்னை எதுக்காக கல்யாணம் பண்ணேன்னு உனக்கு நல்லாவே தெரியும். ஒரு புருஷன் எதையெல்லாம் பண்ணக் கூடாதோ, அதையெல்லாம் நான் பண்ணியிருக்கேன். உன்னை ரொம்ப காயப்படுத்தியிருக்கேன். ஏன், இந்த காயம் கூட…” கோபத்தில் திட்டிக்கொண்டேச் சென்ற வீர், அவளுடைய கன்னத்திலிருந்த தன் விரல் தடத்தை மெல்ல வருட, வலியில் விழிகளை அழுந்த மூடித் திறந்தவள், அவன் விழிகளை ஆழ்ந்து நோக்கினாள்.

“நான் உங்கள ரொம்ப காதலிக்கிறேன் வீர்” அவளுடைய வார்த்தைகளிலும் விழிகளிலும் தெரிந்த காதலில் திக்குமுக்காடிப் போய்விட்டான் அவன். இத்தனைநாள் அவளுடைய காதலை அவன் பயன்படுத்திய விதத்தில் அவனுக்கே தன்னை நினைத்து அருவருப்பு!

கீழுதட்டைக் கடித்து, விழிகளை மூடி உணர்வுகளை கட்டுப்படுத்திய வீரஜ், அவளை நிமிர்ந்துப் பார்த்து, “என் கூட வா!” என்றுவிட்டு அவளை இழுத்துக்கொண்டு அந்த வீட்டின் கீழ்தளத்திலுள்ள பேஸ்மன்ட் பகுதிக்குதான் அழைத்துச் சென்றான். 

அங்கிருந்து குறுக்குவழியாக வெளியேற ஒரு பூட்டப்பட்ட கதவு அங்கிருக்க, வேகமாகச் சென்று அதைத் திறக்க முயற்சித்தான் அவன். ஆனால், அந்த துருப்பிடித்த பூட்டு திறந்தபாடில்லை. இருந்தும், அவன் விடவில்லை. மூலையில் போடப்பட்டிருந்த பழைய பொருட்களிலிருந்து எடுத்த கோடரியை கொண்டு அவன் பூட்டை உடைக்க முயற்சிக்க, அவனுடைய முயற்சியை பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு மனதில் அத்தனை வேதனை!

பூட்டை உடைக்க முயற்சித்தலில் அவனுடைய உள்ளங்கையில் காயமாகிவிட, அதைப் பார்த்துப் பதறிபோய் கயல் வர, கரத்தை நீட்டி அவளை வேண்டாமென்று தடுத்தவன், அந்த கதவைத் திறப்பதிலேயே குறியாக இருந்தான்.

அவனுடைய முயற்சி வீண்போகவில்லை. தன் மொத்த பலத்தையும் சேர்த்து அவன் ஓங்கி பூட்டை அடித்ததில் பூட்டு உடைந்துவிட, கோடரியை கீழே போட்டு சுவரில் சாய்ந்து பெரிய மூச்சுக்களை விட்டுக்கொண்டான் வீரஜ். அவளோ பதட்டமாக தன்னவனையே பார்த்துக்கொண்டிருக்க, விழிகளை மட்டும் உயர்த்தி கயலை பார்த்தவன், மெல்ல அவளருகில் நெருங்கினான்.

அவள் தோளைப் போர்த்தியிருந்த முந்தானையால் அவள் தலையில் முக்காடு போல் போட்டுவிட்டவன், “இங்கயிருந்து போ!” தழுதழுத்த குரலில் சொல்ல, ‘முடியாது’ எனும் விதமாக அழுதுக்கொண்டே தலையாட்டிய கயல், “நீங்களும் என்கூட வாங்க வீர், என்னால தனியா போக முடியாது. பயமா இருக்கு. செத்தாலும் நான் உங்க கூடவே இருக்கேன்” கிட்டதட்ட கெஞ்சவே ஆரம்பித்துவிட்டாள்.

அவளுடைய வார்த்தைகளில் அவளை முறைத்தவன், பின் ஆழ்ந்த பெருமூச்சுவிட்டு அவளிதழை சிறைப்பிடித்திருக்க, விழி விரித்தவள் பின் கண்ணீரோடு விழிகளை மூடி அவனுக்கு இசைந்துக்கொடுத்தாள். சொல்லப்போனால், திருமணமாகி பல மாதங்கள் கடந்துவிட்டன. ஆனால், காதலாக அவன் தன்னவளுக்கு கொடுக்கும் முதல் முத்தம் இது.

இன்றுதான் வாழ்நாளில் கடைசிநாள் என்பது போல் அவளிதழிலேயே குடியிருந்தவன், கோயிலில் கேட்ட பெரிய மணியோசை சத்தத்தில் நடப்புக்கு வந்து, செய்யும் காரியத்தை உணர்ந்து வேகமாக விலகினான். கயலோ அவன் விலகியதுமே உதட்டைப் பிதுக்கி அவனை நோக்க, விழிகளிலிருந்து விழிநீர் வழிய அவள் நெற்றியில் அழுந்த முத்தமிட்டான் வீரஜ்.

தன்னவளின் நெற்றியோடு நெற்றி ஒட்டி, “காதலுங்குற பெயருல உன்னை ரொம்ப காயப்படுத்திட்டேன் பாப்பா. இப்போ உன்கூட வாழ ஆசைப்படுறேன், ஆனா அதுக்கு முன்னாடி ஒரு முக்கியமான வேலை இருக்கு. ஐ லவ் யூ என்ட், ஐ ப்ரோமிஸ்.  கண்டிப்பா உன்னை தேடி வருவேன்” அத்தனை காதலோடுச் சொல்ல, அந்த வார்த்தைகள் அவளின் ஆழ்மனதில் ஆணியடித்தாற் போல் பதிந்தன.

உள்ளுக்குள் வலிக்க வலிக்க தன்னவளை அங்கிருந்து வெளியேற்றிய வீரஜ், கதவை இழுத்துச் சாத்தி கதவின் மேல் சாய்ந்து நின்றான். அவன் முகம் கோபத்தில் சிவந்திருக்க, விழிகளோ ஒரு சிலரை நினைத்து கனலை கக்கியது.

அங்கிருந்து வெளியேறி யாரும் பார்க்காதவாறு முந்தானையால் பாதி முகத்தை மறைத்த வண்ணம் கயல் அந்த ஊரை விட்டுச் செல்வதற்காக கால் போன போக்கிற்கு வேகமாக நடக்க, இரவுநேரம் என்றதாலோ? இல்லை, மொத்த ஊர் மக்களும் கோயில் விசேஷத்தில் இருந்ததாலோ, என்னவோ? ஊரே வெறிச்சோடிப் போயிருந்தது.

குடியிருப்புக்கள் அதிகமுள்ள பகுதியைத் தாண்டி எப்படியோ வேகமாக வந்தவள், தன்னுள் ஏற்படும் மாற்றத்தில் அப்படியே நின்றுவிட்டாள். ஏற்கனவே சிறுவயதிலிருந்து அவளுக்கு மூச்சுத்திணறல் நோயிருக்க, தன்னவனின் நினைவில் உண்டான வலி, வேகமாக நடந்து வந்ததில் உண்டான களைப்பு என்று சேர்ந்து அவளுக்கு மூச்சுக்கு திணற ஆரம்பித்துவிட்டது.

சுற்றிமுற்றி உதவிக்கு கூட யாருமில்லை. விழிகளிலிருந்து விழிநீர் ஓட, கஷ்டப்பட்டு நடந்துச் சென்று பாதையின் ஓரமாக அமர்ந்தவள், எப்போதும் இடுப்பில் வைத்திருக்கும் இன்ஹலரை எடுத்து வேகவேகமாக உபயோகித்தாள்.

மெல்ல அவளுடைய மூச்சுத்திணறல் அடங்க, “வீர்…” அவளிதழ்கள் மெதுவாக முணுமுணுத்தன. சில கணங்கள் தரையை வெறித்தவாறு அமர்ந்திருந்த கயல், அப்படியே பாதையோரமாக மயங்கிச் சரிந்திருந்தாள்.

மூன்று வருடங்கள் கழித்து,

ஆழ்மனதில் பதிந்து போன, “ஐ லவ் யூ. என்ட், ஐ ப்ரோமிஸ், கண்டிப்பா உன்னை தேடி நான் வருவேன்” என்ற வார்த்தைகள் மீண்டும் காதில் ஒலிக்க, “வீர்…” என்ற கத்தலுடன் அலறியடித்துக்கொண்டு எழுந்தமர்ந்தாள் கயல்விழி.

எப்போதும் போல் உண்டான பதட்டத்தில் அவளுக்கு மூச்சுத்திணறல் உண்டாக, மூச்சுக்கு சிரமப்பட்டவாறு பக்கத்திலிருந்த கவிதாவை தட்டினாள். ஏற்கனவே அவளின் தட்டலில் பதட்டமாக எழுந்தமர்ந்தவள், கயலின் நிலையைப் பார்த்ததும் மேலும் பதறிப்போனாள்.

வேகமாக எழுந்து, “கயல் அக்கா, இன்ஹலர் எங்க? எங்கதான் வைச்சு தொலைச்சீங்க!” அங்கிருந்த கபோர்ட்டிலிருந்த பொருட்களை வெளியே தூக்கியெறிந்து கவிதா கயலுக்கான மருந்தைத் தேட, அவளும் பேச முடியாது ஒற்றை விரலால் ஒரு பையை சுட்டிக்காட்டினாள்.

கயலை முறைத்தவாறு  வேகமாக அதையெடுத்து அவளிடம் கொடுத்தவள், அவள் ஆசுவாசமடைந்ததும்தான் ‘அப்பாடா!’ நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொண்டாள். ஆனால், அடுத்தகணம் தன் கூடப் பிறக்காத அக்காவை தாறுமாறாக திட்ட ஆரம்பித்துவிட்டாள் கவிதா.

“எத்தனை தடவை சொல்லியிருக்கேன் அக்கா, இன்ஹலர உங்ககூடவே வச்சிக்கோங்கன்னு. ஏன்க்கா இப்படி பண்றீங்க? ஒவ்வொரு நாளும் காலையிலேயே பதற வச்சிடுறீங்க” மூச்சுவிடாது திட்டி முடித்தவள், பின் “ஆமா… இன்னைக்கும் அதே கனவுதானா?” என்று கேட்டு அவளை கூர்மையாக நோக்கினாள்.

ஆனால், விழிகளை உருட்டி அவளை நோக்கிய கயல், “நான் உனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கேன், அது கனவில்லை. நிஜம்னு” அழுத்தமாகச் சொல்ல, “அட போங்கக்கா, நானும் உங்கள பார்த்துக்கிட்டேதான் இருக்கேன். எனக்கென்னவோ இது வெறும் கனவு, பிரம்மையா இருக்குமோன்னு தோனுது. அந்த கனவுலயிருந்து மொதல்ல வெளியில வாங்கக்கா” என்றாள் சலித்துக்கொண்டு.

ஆனால், பதிலெதுவும் பேசவில்லை கயல். எழுந்து அந்த அறையிலிருந்த ஆளுயர கண்ணாடியில் தன்னை வெறித்து நோக்கினாள். அவளுடைய வலது கரம் இடது கரத்திலிருந்த மோதிரத்தை மெல்ல வருடியது. அவளுடைய பார்வையோ நெற்றி வகுட்டில் வேதனையோடு பதிந்தது. மூன்று வருடங்களுக்கு முன் வைத்திருந்த குங்குமம் இப்போது இல்லை.

தன்னவனுடைய சிரித்த முகத்தை மனக்கண் முன் கொண்டு வந்தவள், கீழுதட்டைக் கடித்து உணர்வுகளை அடக்கிக்கொண்டாள். தன் மன உணர்வுகளை மற்றவர்களின் பார்வைக்கு முன் மறைத்து வாழ்வது இப்போது அவளுக்கு பழகிப்போன ஒன்றாகிவிட்டிருந்தது.

அவளுடைய இந்த மாற்றத்திற்கு காரணம் வயது முதிர்ச்சியா இல்லை, முதிர்ச்சியடைய முன் வாழ்க்கையில் வாங்கிய படிப்பினைகளா என்று அவளுக்கே தெரியாது.

ஆழ்ந்த பெருமூச்சுவிட்டு குளியலறைக்குள் புகுந்தவள், வேகவேகமாக குளித்து தயாராகி சமையலறைக்குதான் ஓடினாள்.

அந்த சமையலறையே அத்தனை பெரிதாக ஒரு வீடு போன்ற தோற்றம். கரங்கள் வேலைகளில் கவனமாக இருக்க, அவளுடைய பார்வையோ சுவற்றில் தொங்கிக்கொண்டிருந்த மணிக்கூட்டில் படிந்தது.

“அய்யோ! இன்னைக்கு ரொம்ப லேட் ஆகிடுச்சு. சீக்கிரம் கவி, அம்மா எழுந்துட போறாங்க. அவங்க வெளியில வர்றதுக்குள்ள காஃபி கொண்டு போய் கொடுக்கணும்” பதட்டமாகச் சொல்லிக்கொண்டு வேகவேகமாக கயல் தேநீரை வடிக்க, அதற்குள் வீட்டை சுத்தம் செய்யும் வேலைக்கார பெண்ணொருத்தி, “கயல், அம்மா உன்னை கூப்பிடுறாங்க” என்றொரு குரல் கொடுத்தாள்.

அதில் நாக்கைக் கடித்துக்கொண்டவள், தேநீர் கோப்பையை தட்டில் வைத்து எடுத்துக்கொண்டு அந்த வீட்டின் எஜமானி அம்மாவின் அறைக்குள் கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தாள்.

அங்கு அறையிலிருந்த பெரிய சோஃபாவில் மூக்குக்கண்ணாடியுடன் ஒரு பத்திரிகையை வாசித்தவாறு அமர்ந்திருந்தார் சீதாலட்சுமி. கலையான முகமதை பார்த்தாலே மதிப்பும் மரியாதையும் தானாக தோன்றும். அத்தனை இலட்சணத்துடன் கூடிய பிரகாசமான முகம்.

அவரைப் பார்த்த கயலுக்கு வழக்கம் போல் மூன்று வருடங்களுக்கு முன் பாதையோரமாக மயக்கமடைந்த சமயம் அரைக்கண்ணில் தெரிந்த பதட்டமான சீதாலட்சுமியின் முகம் மனதில் தோன்ற, விழிகளில் ஒரு நன்றியுணர்ச்சி தானாக வந்து குடிகொண்டது.

அவள் இப்போது ஒரு இடத்தில் பாதுகாப்பாக இருக்கிறாள் என்றால், அதற்கு காரணமே அவர்தானே!

“சீதாம்மா…” என்ற அழைப்போடு அவரருகில் சென்றவள், அவருக்கு அருகிலிருந்த டீபாயில் தேநீரை வைத்துவிட்டு அவரின் காலடியில் தரையிலமர்ந்து காலை மெதுவாக பிடித்துவிட, பத்திகையிலிருந்து பார்வையை நிதானமாகத் திருப்பி அவளை முறைத்துப் பார்த்தார் அவர்.

“ஹிஹிஹி…” கயல் அசடுவழிய, “நீ என்ன ட்ரை பண்ணாலும் சரி, அங்க போய்தான் ஆகணும் கயல். உன்னை இங்க தனியா விட்டுட்டு என்னால போக முடியாது. தட்ஸ் இட்” சீதா கறாராகச் சொல்ல, “அம்மா…” சிணுங்கியவாறு உதட்டைப் பிதுக்கினாள் அவள்.

ஆனால், அவரோ அதையெல்லாம் கண்டுக்கொள்ளவில்லை. மாறாக, அவளின் செய்கையில் அவருக்கு சிரிப்புதான் வந்தது.

அவளை சலிப்பாக தலையாட்டியவாறு நோக்கியவர், “இன்னும் ஒரு வாரத்துல பிஸ்னஸ் சம்மந்தமா நான் லண்டனுக்கு போயாகணும். அதுவரைக்கும் உன்னை என் ஃப்ரென்ட் வீட்டுக்கு அனுப்பி வைக்குறதுக்கு உன்னை தனியா விட்டுட்டு போக முடியாதுங்குற காரணம் மட்டுமில்ல, இன்னொரு முக்கியமான காரணமும் இருக்கு” யோசனையோடுச் சொல்ல, கயலோ அவரை கேள்வியாக நோக்கினாள். 

“அது என்னோட ஃப்ரென்ட் சத்யாவோட வீடுதான். அவளோட ஹஸ்பென்ட் இறந்ததுக்கு அப்றம் அவதான் அவங்களோட பிஸ்னஸ்ஸ கவனிச்சுக்குறா. பட், இப்போ அவளுக்கு உடம்புக்கு ரொம்ப முடியல. கூட இருந்தே அவள கவனிச்சிக்க ஒரு வேலையாள் தேவைப்படுறாங்க. எனக்கு என்னவோ உன்னை விட அவள யாராலேயும் நல்லா பார்த்துக்க முடியாதுன்னு தோனுது” சீதா சொல்ல, “என்னால உங்கள விட்டு போக முடியாது” விடாப்பிடியாகச் சொன்னாள் அவள்.

அதில் மெல்ல சிரித்தவர், “நானும் உன்னை மொத்தமா அனுப்ப போறதில்லை. நான் வரும் வரைக்கும் அங்கயிரு! அது போதும். மூனு வருஷத்துக்கு முன்னாடி உன்னை பார்த்ததிலிருந்து நீ எனக்கு ரொம்ப ஸ்பெஷல் கயல். அங்கயிருக்குறது உனக்கும் பாதுகாப்பா இருக்கும், எனக்கும் நிம்மதியா இருக்கும்” மெதுவாக அவளுக்கு சொல்லி புரிய வைக்க, மௌனமாக புருவத்தை நெறித்தாள் கயல்.

அதிலேயே அவள் சம்மதித்துவிட்டாள் என்பது புரிந்துபோனது அவருக்கு.

தேநீரை அருந்தியவாறு அவளையே சீதா பார்த்துக்கொண்டிருக்க, ஏதோ ஞாபகம் வந்தவளாய், “அம்மா, அவங்களுக்குதான் உடம்புக்கு முடியல்லையே, அப்போ அவங்க வியாபாரத்தை யாரு கவனிச்சிப்பாங்க?” தன் சந்தேகத்தை வெளிப்படையாக கேட்டுவிட்டாள்.

அதில் நெற்றியை தட்டி எதையோ ஞாபகத்திற்கு கொண்டு வந்து, “ம்ம்… அவருக்கு இரண்டு பசங்க இருக்காங்க. இரண்டாவது பையனுக்கு பிஸ்னஸ்ல ஆர்வமில்லைன்னு கேள்விப்பட்டேன். சோ, கண்டிப்பா அவன் ஹேன்டல் பண்ண வாய்ப்பில்லை. எனக்கு தெரிஞ்சி அவரோட மூத்தமகன் அதை ஹேன்டல் பண்ணுவானா இருக்கும். இப்போ அவன் லண்டன்ல இருக்கான். அடுத்தவாரம் வர்றான்னு சொன்னதா நியாபகம் எனக்கு. பேரு கூட ஏதோ…. ஆங் அபிமன்யு” என்றார் சீதா சிரிப்போடு பெயரைக் கண்டுபிடித்த உற்சாகத்தில்.

அபிமன்யு” வாய்விட்டு அந்தப் பெயரை சொல்லிப் பார்த்தவள், அடுத்து குவிந்திருந்த வேலைகளில் அந்த பெயரை மறந்தே போயிருந்தாள்.

ஒருவாரம் கழித்து, சீதாலட்சுமியும் லண்டனுக்கு சென்றுவிட, விமானநிலையத்தில் வைத்து கயல் அழுது ஆர்ப்பாட்டம்  செய்ததில் ஓட்டுனர் ராமனுக்குதான் போதும் போதுமென்று ஆகிவிட்டது.

முதலாளியம்மா விமானத்தில் ஏறும் வரை கயலை சமாதானப்படுத்திக்கொண்டு அங்கு காத்திருந்தவர், அவர் சென்ற மறுநொடி கயலை காரில் அள்ளிப் போட்டுக்கொண்டு எஜமானி சொல்லியிருந்த அவருடைய தோழி சத்யா அம்மாளின் வீட்டுக்கு காரை செலுத்தினார்.

அழுத களைப்பில் காரிலேயே கண்ணயர்ந்தவள், அந்த பெரிய வாசற்கதவைத் தாண்டி கார் உள்ளே செல்லும் போதுதான் மெதுவாக விழிகளை திறந்துப் பார்த்தாள். சின்ன சின்ன விடயங்களை கூட விழிகளை விரித்து ரசிக்கும் மனதுடைய கயலுக்கு அந்த தோட்டத்தின் அழகையும் செயற்கை நீர்வீழ்ச்சியின் வடிவமைப்பையும் ரசிக்காமல் இருக்க முடியவில்லை.

சரியாக அவளுடைய விழிகளில் தென்பட்டது, அங்கிருந்த சில வேலையாட்கள் தோட்டத்திலிருந்த பெரிய மாமரத்திலுள்ள கனிந்த மாம்பழங்களை பறிக்க பெரிய தடியைக்கொண்டு  முட்டி மோதி போட்டி போட்டுக்கொண்டிருப்பது.

அதைப் பார்த்ததுமே அவளுடைய நினைவலைகள் அவனவளின் முகத்தை மட்டுமல்ல, அவனுடனான திருமண வாழ்க்கையில் அவளுக்கு அவன் அளித்த காயங்களையும் ஞாபகப்படுத்தியது. கலங்கிய விழிகளோடு நான்கு வருடத்திற்கு முன் தன் பிறந்த ஊரில் அவனைப் பார்த்த தருணத்தை நினைவுக் கூர்ந்தாள் கயல்.

நான்கு வருடத்திற்கு முன்,

“வாவ்! எவ்வளவு அழகான ஊரு… இது மொத்தமும் நமக்கு சொந்தமாகிருச்சுன்னா, இதுல பல இடத்தை வெள்ளைக்காரனுங்களுக்கு வித்து நல்லா காசு பார்க்கலாம்” காரின் ஜன்னல் வழியே வெளியே வேடிக்கைப் பார்த்தவாறு உற்சாகமாக வீரஜ் சொல்ல,

வழக்கம் போல் எந்த அழகையும் ரசிக்கத் தோன்றாது அதை பணத்தால் மதிப்பிடும் தன் தோழனின் மனதை எண்ணி ‘இவனையெல்லாம் திருத்தவே முடியாது’ உள்ளுக்குள் கடிந்துக்கொண்ட ராகவன், அடுத்து வீரஜ் செய்த காரியத்தில், “வீரா…” என்று கத்தியேவிட்டான்.