எந்நாளும் தீரா காதலாக – 27

f7373c914a3b08653c46dc401fc13896-222534c2

எந்நாளும் தீரா காதலாக – 27

💝💝27                

கேசவனின் வீட்டு டைனிங் டேபிளில், சிவாத்மிகா அர்ஜுனைப் பற்றிய பேச்சு ஓடிக் கொண்டிருந்தது. அவர்களது சமீபத்திய புகைப்படங்களைப் பார்த்துக் கொண்டே, “இங்கப் பாருடா.. ரெண்டு பேருமே பார்க்க சூப்பரா இருக்காங்க இல்ல.. ஹையோ நான் இன்னும் அவங்க வெட்டிங் காஸ்டியும் எல்லாம் பார்க்க ரொம்ப ஆசையா இருக்கேன்.. இதுவே இப்படின்னா.. கல்யாணத்துக்கு செமையா இருக்கும் இல்ல..” என்று அவரது மகன் ஹரியும் மகள் சிவானியும் பேசிக் கொண்டிருக்க, கேசவனுக்கோ அதைப் பார்க்க ஆவல் மிகுந்தது.

“யாரும்மா அந்த போட்டோல அர்ஜுனும் சிவாவுமா?” என்று கேட்டார்.  கொஞ்சம் நாட்களாகவே அவர்களைப் பற்றிய பேச்சு அந்த நேரத்தில் அடிப்படுவது வழக்கமாக இருக்கவும், கேசவன் தன்னை மீறிய ஆவலில் கேட்க,  

அவரைக் குழப்பமாகப் பார்த்த அவரது மகன், “இல்லப்பா.. அவங்க பேர் ஆத்மிகா.. அர்ஜுனோட ஃபியான்சி.. கூடிய சீக்கிரம் மேரேஜ் பண்ணிக்கப் போறாங்க.. ஆமா.. யாரு சிவா?” மகன் தகவல் சொல்லிவிட்டு கேள்வி கேட்க,

மகளோ, “ஆமாப்பா.. இப்போ ரிசன்ட்டா இங்க பெங்களூர்ல நடந்த ஒரு ஃபேஷன் ஷோல பார்டிசிபேட் பண்ணி இருக்காங்க.. அதுல ஆத்மிகாவும் ரேம்ப்ல வாக் பண்ணி இருக்காங்க.. அப்போ அர்ஜுன் சப்ரைசா வந்தாரா என்னன்னு தெரியல.. அவரைப் பார்த்ததும் அவங்க ஃபேஸ் அப்படியே மலர்ந்தது ரொம்ப அழகா இருந்தது.. அந்த வீடியோவ நான் எத்தனை தடவை பார்த்தேன்னு தெரியல.. இப்போ பார்த்தாலும் பார்த்துக்கிட்டே இருப்பேன்.. கண்ணுபடாம அவங்க லாஸ்ட் வரை இப்படியே சந்தோஷமா இருக்கணும்.. அவங்க இங்க வந்தது தெரிஞ்சு இருந்தா நான் போய் பார்த்து இருப்பேன்.. மிஸ் பண்ணிட்டேன்..” படபடவென்று பேசிக் கொண்டே போக, அவரது ஆவல் பலமடங்காக உயர்ந்தது.

“எங்க காட்டுங்க..” என்றவர், ஆர்வமாக கையை நீட்ட,         

“இதோ பாருங்கப்பா..” என்று தனது மொபைலை அவரிடம் நகர்த்தவும், அதில் இருந்த அர்ஜுன் சிவாத்மிகாவின் புகைப்படத்தைப் பார்த்தவரின் கண்கள், தன்னையறியாமலே நிறைந்து போனது..

பேஷன் ஷோவில் எடுக்கப்பட்டு, வினயினால் பகிரப்பட்டதும், வேறு சில வலைத்தளங்களின் மூலம் கிடைத்த அந்தப் புகைப்படங்களையும், ஒவ்வொன்றாக ரசித்து, திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டிருந்தவர், அவள் காட்டிய வீடியோவை மீண்டும் மீண்டும் இயக்கிப் பார்த்துக் கொண்டிருக்க, அவரது மனைவி அவரை முறைத்து, தன்னிலை இழந்து, “என்ன அப்படியே உருகிட்டு இருக்கீங்க? ரொம்ப பாசமோ?” என்று கேட்க, அவரது மக்கள் இருவரும் அவரை புரியாமல் பார்த்தனர்.  

அவரும் தன்னை மறந்து, “பின்ன? ரெண்டு பேரும் எப்படி இருக்காங்க பாரு? என் கண்ணே பட்டுடும் போல இருக்கு.. இதுல அர்ஜுன் சிவாவைப் பார்க்கறதுல எவ்வளவு அன்பும் காதலும் இருக்குப் பாரு.. ரெண்டு பேர் முகத்துலையும் எவ்வளவு சந்தோசம் பாரேன்.. நான் தான் அர்ஜுனை தப்பா நினைச்சிட்டேன்.. அதோட ஜார்ஜ் அனுப்பின வீடியோ ஒண்ணு இருக்கு.. வினய், அது தான் அர்ஜுனோட மச்சான்.. அவர்கிட்ட ஜார்ஜ் அடிக்கடி பேசறான்..

அப்படி பேசும்போது அவர் கிட்ட கேட்டு ஜார்ஜ் போட்டோ எல்லாம் வாங்கி எனக்கு அனுப்பினான். சிவாவோட பிறந்தநாள் அன்னைக்கு எடுத்தது… அர்ஜுன் அவளை அவ்வளவு உயிரா பார்த்துக்கறார்.. ஜார்ஜ் கூட சொன்னான்.. அவங்க கல்யாணத்துக்கு நல்ல கிராண்ட்டா ப்ளான் பண்றாங்கன்னு. எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்குத் தெரியுமா?” என்றவர், இருக்கும் இடம் மறந்து, தனது செல்லை எடுத்துக் கொண்டு வர, அவர் சொன்னதைக் கேட்டு, திகைத்துப் போய், அவரது கையில் இருந்து அவசரமாக செல்லைப் பிடுங்கிய அவரது மகள், ஜார்ஜின் பெயரில் இருந்த மெசேஜ்களை திறந்துப் பார்த்து, திகைத்துப் போனாள்.

அவளது திகைத்த முகத்தைப் பார்த்து, அவரது மகனும் அதை எட்டிப் பார்க்க, அதில் சிவாத்மிகாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் எடுத்த இரண்டு வீடியோக்களும், நிறைய புகைப்படங்களும் இருக்கவும், அதை இயக்கிப் பார்த்தவள் அவளது தந்தையைக் குழப்பத்துடன் பார்த்தாள்.

“அப்பா.. இந்த வீடியோ எங்கயுமே ரிலீஸ் ஆகலைப்பா.. இது அவங்க ப்ரைவேட்டா எடுத்த வீடியோ போல இருக்கே.. அர்ஜுன், அவங்க அம்மா எல்லாரும் இருக்காங்க.. அர்ஜுன் எங்கயுமே அவங்க அம்மா போட்டோவோ வீடியோவோ போடவே மாட்டரே.. அவரோட ஸ்டோரில வந்த போட்டோல கூட அவங்க ரெண்டு பேரும் தானே இருந்தாங்க.. இது ஃபேமிலியா இருக்காங்க..” படபடவென்று கேட்டவள், அடுத்த வீடியோவைக் காட்டி,  

“இது அர்ஜுன் ஆத்மிகாவுக்கு இவ்வளவு க்ளோசா கேக் ஊட்டி விட்டு விளையாடற வீடியோப்பா.. இதை உங்களுக்கு யாரு அனுப்பி வச்சா? அப்போ உங்களுக்கு அர்ஜுனை தெரியுமா? ஆத்மிகா.. ஆத்மிகா தான் நீங்க சொல்ற சிவாவா? இது.. இது பீச் போட்டோப்பா.. இது தனியா தான் போட்டோ போட்டாங்க ரெண்டு பேருமே.. இதுல சேர்ந்து இருக்காங்க.. ஹர் கிங்.. ஹிஸ் குவீன்னு.. அதும் செஃல்பி.. எப்படிப்பா?” என்று கேட்க, அப்பொழுது தான், தான் இருக்கும் இடம் நினைவு வந்தவராக கேசவன் அதிர்ந்து, தடுமாறிப் போனார்.    

“இல்ல.. அது.. அது.. என் ஃப்ரென்ட் அனுப்பி வச்ச போட்டோ..” திக்கித் திணறி அவர் சொல்ல, அதை மக்கள் இருவருமே நம்ப மறுத்தனர்.

“இல்ல.. நீங்க ஏதோ சமாளிக்கறீங்க? இது எல்லாமே எங்கயுமே வெளிய வராத போட்டோஸ்.. அர்ஜுனோட க்ளோஸ் ஃப்ரெண்ட்டை தெரியற அளவுக்கு உங்களுக்கு பழக்கம் இருக்கா.. அப்போ நாங்க பேசறது எல்லாம் கேட்டுக்கிட்டு சும்மா இருந்தீங்க?” என்றபடி மறுப்பாக தலையசைத்தவள், அதில் இருந்த புகைப்படங்களைப் பார்த்துவிட்டு, அதில் இருந்த மெசேஜ்களை படிக்கத் துவங்கினாள்.

‘சிவா இன் ரிலேஷன்ஷிப் வித் அர்ஜுன்.. கன்ஃபார்ம்ட்..’

‘கால்ட் ஹேர் டு மீட் யூ.. ஷி வில் கம் டு ஆபீஸ்.. வென் ஆர் யூ கம்மிங்..’

‘அர்ஜுன் அவ கூட ரிசார்ட்ல பர்த்டே செலிபரேட் பண்ணி இருக்கார்.. அவங்க கமிட்டட்ன்னு மோதிரத்தைக் காட்டி போட்டோ போட்டு இருக்கார்.. அர்ஜுன் உங்களுக்கே தெரிய வரும்ன்னு சொன்ன சப்ரைஸ் இது தான் போல..’ என்றபடி, அவர்கள் மோதிரம் போட்ட பொழுது எடுத்த புகைப்படமும், புடவையில் அர்ஜுனின் கையணைப்பில் சிவாத்மிகா ஒரு கோவிலின் வாயிலில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும், பார்த்தவர்கள் திகைப்புடன் கேசவனை நிமிர்ந்துப் பார்த்தனர்.       

‘மேரேஜ் டேட் பிக்ஸ்ட்.. ஜனவரி 20.. காலையில 6-7 வினய்–ராதாக்கு முஹுர்த்தம் வச்சிருக்காங்க.. 9-10 அர்ஜுனுக்கும் சிவாவுக்கும் முஹுர்த்தமாம்.. விஜய் மஹால்ல.. முஹுர்த்தம் முடிஞ்சதுமே இவங்களுக்கு மட்டும் ரிசப்ஷன் வச்சிருக்காங்க.. எல்லா வேலையுமே ஈவென்ட் மேனஜ்மென்ட் கிட்ட விட்டு இருக்காங்க..’ என்றபடி, அவர்கள் இருவரையும் பற்றிய முக்கியமான தகவல்கள் இருக்கவும், அவரை திகைப்புடன் நிமிர்ந்துப் பார்த்தவள், மீண்டும் செல்லைப் பார்த்தாள்.

‘வினய்யும் சிவாத்மிகாவும் சேர்ந்து ஒரு பிராண்ட் ஆரம்பிச்சு இருக்காங்க. வினய் கடையை சிவாவோட கடைக்கு பக்கத்துலயே மாத்திட்டார்.. எல்லாமே அர்ஜுனோட ஏற்பாடு போல.. சிவாவுக்கு மேரேஜ் அப்பறம் போய் வர ஈசியா இருக்கும்ன்னு..’ என்ற மெசேஜ்சைப் படித்தவள்,

“இதெல்லாம் உங்ககிட்ட யாரு சொல்றாங்க? ஏன் அர்ஜுனைப் பத்தின எல்லா தகவலும் சொல்லணும்? ஆத்மிகாவை ஏன் சிவான்னு கூப்பிடறீங்க? அது தான் அவங்க உண்மையான பேரா? சரி உங்கக்கிட்ட இவ்வளவு போட்டோ இருக்குன்னு ஏன் எங்க கிட்ட சொல்லல?” என்று அவரது மகன் கேள்வி மேல் கேள்வி கேட்கவும், கேசவன் அமைதியாக தலைகுனிந்து இருக்க, அவரது மனைவி இப்பொழுது மொத்தமாக நிலையிழந்து போனார்.

“சொல்லுங்க.. பையன் கேட்கறான் இல்ல சொல்லுங்க.. அவ யாரு என்னன்னு எல்லாம் சொல்லுங்க.. உங்களுக்கும் அவளுக்கும் என்ன சம்பந்தம்ன்னு எல்லாம் சொல்லுங்க.. ஏன் அமைதியா நிக்கறீங்க?” என்று சத்தமிட, பிள்ளைகள் இருவருமே, பெற்றவர்களைப் புரியாமல் பார்த்தனர்.

“உங்களுக்கு ஆத்மிகாவைத் தெரியுமா? உங்களுக்கும் அவளுக்கும் சம்பந்தம்ன்னா? என்னப்பா? அம்மா என்ன சொல்றாங்க? ஏதாவது பேசுங்க.. ஏன் இப்படி அமைதியா இருக்கீங்க?” அவரைப் பிடித்து உலுக்கி மகள் கேட்க, கேசவன் இப்பொழுதும் அமைதியாக நிற்கவும்,

“சொல்லுங்கப்பா.. அவங்க ரெண்டு பேரையும் உங்களுக்குத் தெரியுமா? யாரு உங்களுக்கு அவங்களைப் பத்தின மெசேஜ் எல்லாம் அனுப்பறது? ஜார்ஜ்ங்கற பேரை நான் இதுவரை இந்த வீட்ல கேட்டதே இல்லையே.. அதுவும் கல்யாண தேதி.. முஹுர்த்தம் எல்லாம் சொல்றாங்கன்னா உங்களுக்கும் அவங்களுக்கும் என்ன சம்பந்தம்?” என்று கேட்கவும்,

“அவன் என்னோட ஃப்ரெண்ட் ஜார்ஜ்.. வக்கீலா இருக்கான்.. எனக்கும் சிவாவுக்கும் நடுவுல அவர் தான் எல்லாமே பார்த்துக்கறார்..” அவர்களது முகத்தைப் பார்க்காமல் சொல்லவும்,

“எதுக்கு அவங்க உங்களுக்கு நடுவுல இருக்கணும்? உங்களுக்கும் சிவாவா.. ஆத்மிகாவா? அவங்க பேர் தான் என்ன? உங்களுக்கும் அவங்களுக்கும் என்ன சம்பந்தம்?” என்று கேட்கவும்,

“அவ பேர் சிவாத்மிகா.. அவ பேஷன் இண்டஸ்ட்ரிக்காக ஆத்மிகான்னு பேர் வச்சிருக்கா.. அவ என் மூத்த பொண்ணு.. உங்களுக்கு அக்கா..” கேசவன் வாயைத் திறக்கவும், பிள்ளைகள் இருவரும் அதிர்ந்து நின்றனர்.

“என்னது? எங்க அக்காவா?” இருவரும் அதிர,

“அவளை உங்கப் பொண்ணுன்னு சொன்னீங்க அவ்வளவு தான் சொல்லிட்டேன்.. நீங்க எனக்கு பண்ணிக் கொடுத்த சத்தியத்தை மறந்துடாதீங்க.. அவ உங்க பொண்ணு இல்ல.. பொண்ணு இல்ல..” என்று அவரது மனைவி கூச்சலிட்டார்..

“என்னம்மா அப்பா சொல்றாங்க? ஆத்மிகா.. இல்ல.. சிவாத்மிகா.. அவங்க எங்க அக்காவா? என்ன சத்தியம்? என்ன தான் நடக்குது இந்த வீட்ல? சொல்லுங்களேன்..” மக்கள் இருவரும் கேட்க,

“ஆமா.. சிவா என்னோட பொண்ணு தான்.. எனக்கு நடந்த முதல் கல்யாணத்துல பிறந்த பொண்ணு.. விவரமே தெரியாத அந்த பச்சைப் பிள்ளையை, அஞ்சு வயசுலயே ஹாஸ்டல்ங்கற பேர்ல நான் அப்படியே இருட்டுல விட்டுட்டு திரும்பிக் கூடப் பார்க்காம வந்த என் பொண்ணு..” கேசவன் உண்மையைச் சொல்லவும், மேலும் அதிர்ந்த அவரது இரு மக்களும்,

“அஞ்சு வயசுல ஹாஸ்டலா?” என்று அதிர்ந்தனர் அவரது பிள்ளைகள்.. ஊசி விழுந்தால் கூட பெரிய சத்தமாக கேட்கும் அளவிற்கு அந்த இடத்தில் அமைதி நிலவியது.   

சிறிது நேரத்தில் தங்களைச் சுதாரித்துக் கொண்டவர்கள், “என்னப்பா.. என்ன சொல்றீங்க? உங்களுக்கு, அம்மாவுக்கு முன்னாலேயே ஏற்கனவே ஒரு கல்யாணம் ஆகிடுச்சா? சிவாத்மிகா உங்களுக்கு முதல் பொண்ணா? ஆனா.. அவங்களைப் பத்தி இந்த வீட்ல பேசி நான் கேட்டது இல்லையே.. உங்க முதல் மனைவி இறந்துட்டாங்களா? அம்மாவுக்கு என்ன சத்தியம் பண்ணிக் கொடுத்தீங்க? நீங்க ஏன் போய் அவங்களைப் பார்க்கல?” என்ற கேள்விகளை மகனும் மகளும் அடுக்க, கேசவன் அமைதியாக தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தார்.

அவரது அமைதி, அவர்களை மேலும் படபடக்க வைக்க, “இப்போ சொல்லப் போறீங்களா?  இல்ல நாங்க உங்க ப்ரெண்டுக்கு கால் பண்ணிக் கேட்கவா?” என்ற மகன் அவரது மொபைலைக் கையில் எடுக்க,

“சொல்றேன்.. எல்லாம் சொல்றேன்.. எனக்கும் நாளாக ஆக உண்மை எல்லாம் மறைச்சு மூச்சடைக்குது..” என்றவர், தனக்கு நடந்த திருமணத்தில் இருந்து, சிவாத்மிகாவை ஹாஸ்டலில் விட்டுவிட்டு வந்து, இரண்டாவது திருமணம் செய்தது வரை அனைத்தையும் கொட்டித் தீர்த்தார்.

புயலுக்குப் பின் அமைதி போல வீட்டில் அப்படி ஒரு அமைதி.. மனதில் அடைத்துக் கொண்டிருந்ததை கொட்டித் தீர்த்த கேசவன், தலைகுனிந்து அமைதியாக அமர்ந்திருக்க, “உங்களுக்கு ஏன் மூச்சு முட்டனும்? இல்ல கேட்கறேன்.. நீங்க என்ன தப்பு செய்தீங்க? நீங்க அவளை அஞ்சு வயசுல விட்டதுல இருந்தே கொஞ்சிக் குலாவிட்டு இருந்தீங்களா என்ன? நம்ம கல்யாணத்து அப்போ அவளுக்கு ஏழு வயசு.. அந்த ஏழு வயசு பொண்ணுக்கு மாச செலவுக்கு, ஸ்கூல் ஹாஸ்டல் செலவுக்குன்னு ஐயாயிரம் ரூபாய் தந்திருக்கோமே..

அதோட அவ படிச்சு வந்ததும், அவ தங்க தான் அந்த பழைய வீட்டையும் அவகிட்டயே எழுதிக் கொடுத்தாச்சே.. அவளை ஒண்ணும் அப்படியே விட்டுடலையே.. பணம் கொடுத்து ஒரு இடத்துல தங்க தானே வச்சோம்.. அநாதை ஆசிரமத்துலையா விட்டோம்? இல்ல நடுரோட்டுலையா?” என்று கேசவனின் மனைவி கேட்கவும், கேசவன் முற்றிலுமாக உடைந்து போனார்.

“ஆமா.. ஆமா.. ஆமா.. கொடுத்தேன் தான்.. ஆனா.. அந்த ரோஷக்காரி அந்த பணத்தை எல்லாம் செலவு செய்யாம அப்படியே வச்சிருக்கா.. அவளோட அடிப்படைத் தேவைக்கான பணத்தைத் தவிர, எந்த பணத்தையும் எடுக்கல. செலவு செய்த ஒரு குண்டூசிக்கு கூட கணக்கு எழுதி, மத்ததை எல்லாம் சேர்த்து வச்சு, மொத்தத்தையும் எனக்கு திருப்பிக் கொடுத்துட்டா..” என்றவர், தலையில் அடித்துக் கொண்டு,

“ஒரு பொண்ணு, அப்பாவுக்கு கணக்குக்காக கூட வெளிப்டையா கொடுக்க முடியாத ஒரு பொருளுக்கு கூட மாசாமாசம் கணக்கு எழுதி வச்சிருக்கா அந்த ரோஷக்காரி.. ஏன் அந்தப் பொண்ணு வயசுக்கு வந்துட்டான்னு போன் வந்த பொழுது கூட, ஒரு ஸ்வீட்டை யாரோ ஒரு மூணாவது மனிஷங்களை விட்டு வாங்கிக் கொடுக்க சொல்லி, அவளுக்கு அந்த நிகழ்வை முடிச்சிட்டேனே.. அந்தப் பொண்ணைப் போய் பார்த்து, ஒரு புது துணி எடுத்துக் கொடுத்து, ஒரு முழம் பூ வாங்கிக் கொடுத்து, ஒரு அப்பனா எதுவுமே பண்ணலையே..” என்றவர் குலுங்கி அழத் துவங்கினார்..    

“அந்த வீட்டையும் அவளோட சக்திக்கு மீறி லோன் போட்டும், அவ குருவி சேர்க்கறது போல சேர்த்து வச்ச பணத்தை எல்லாம் கொடுத்து தன் பேர்ல ரெஜிஸ்டர் பண்ணி வாங்கிக்கிட்டா.. அதுவும் என்கிட்டே இருந்து வாங்க அவளுக்கு விருப்பம் இல்ல.. அதைக் கட்ட அவ ராவா பகலா ஓய்வு இல்லாம உழைக்கிறா..    

இப்போ அவளோட கல்யாணத்துக்கு கூட, ‘நான் எல்லாமே அர்ஜுனே செலவு செய்ய விட முடியாது.. நான் ஏதாவது கொஞ்சமாவது செய்யணும் இல்ல’ன்னு வினய் கிட்ட கேட்டவ, அதுக்கும் அவளே பைசா சேர்த்துட்டு இருக்கா.. அதுக்காக ராவா பகலா எக்ஸ்ட்ராவா உழைச்சு காசு சேர்த்து வைக்கிறா.. ஒரு அப்பனா எதுவுமே செய்ய முடியாம, கையாளாகாத்தனமா வேடிக்கை மட்டும் தான் என்னால பார்க்க முடியுது..

இப்போக் கூட அந்தப் பொண்ணுக்கு அப்பனா, உரிமையா ஒரு கூரைப் புடவை எடுத்துக் கொடுக்க முடியலையே.. நான் எல்லாம் என்ன அப்பன்? அந்த பொண்ணு எங்களுக்குப் பிறந்த பாவத்தைத் தவிர எதுவுமே செய்யலையே.. அவளைப் பெத்தவ செஞ்சத் தப்புக்கு, பெத்தவன் அப்படியே விட்டுட்டு போனதுக்கு.. அவ கேட்கக் கூடாத பேச்சை எல்லாம் கேட்டுக்கிட்டு இருந்திருக்காளே.. அவளை கீ..” என்று அந்த வார்த்தையை சொல்ல முடியாமல் நிறுத்தியவர்,

“அதை எல்லாம் கேட்டுட்டு நான் இன்னும் உயிரோட நடமாடிக்கிட்டு இருக்கேனே..” அவர் தனது தலையில் அடித்துக் கொண்டு சொல்லவும், இருவருமே அதிர்ந்துப் போயினர்..

இப்படி ஒரு விஷயத்தை இதுவரை அவரது மக்கள் இருவருமே கனவில் கூட கற்பனை செய்து பார்த்தது இல்லை.. அப்படி இருக்க, கேசவன் சொல்வதைக் கேட்ட இருவருமே என்ன செய்வதென்று, எப்படி எடுத்துக் கொள்வது என்று தடுமாறிப் போயினர்.

அவர்களை அதிகம் சிந்திக்க விடாமல் அவர்களது அன்னையின் குரல் அவர்களைக் கலைத்தது. “என்ன? என்ன சொல்றீங்க? அவ பணம் தந்தாளா? நீங்க கொடுத்த பணத்தைத் திருப்பித் தர அளவுக்கு அந்த கழுதைக்கு அவ்வளவு திமிரா? என்ன டிராமா இது? என்ன அவ நல்லவளா நடிச்சு உங்களை அவ பக்கம் இழுக்கப் பார்க்கறாளா? ஓடிப் போன அம்மாவுக்கு பிறந்தவ தானே.. அவ மட்டும் எப்படி இருப்பா? பாவம் அந்தப் பையன்.. சீக்கிரமே இவ..” அவரது மனைவி கோபமாக வார்த்தையை விட, ‘நிறுத்து..’ கேசவன் கோபமாகக் கத்தினார்.

“இன்னொரு தடவ சிவாவைத் தப்பா பேசின நான் கேட்டுட்டு சும்மா இருக்க மாட்டேன்.. போதும்.. அந்த பிசாசு செஞ்சத் தப்புக்கு.. அவளை கண்ட மாதிரி எல்லாரும் பேச நான் அனுமதிக்க மாட்டேன்.. அவ அம்மா தானே போனா? அதுக்கு இவ என்ன பண்ணுவா? அந்தப் பொண்ணு செய்யாத பாவத்துக்கு அவனவன் அவளை எந்த மாதிரி எல்லாம் பார்த்து இருக்கானுங்க தெரியுமா?  

அந்த வார்த்தையை சொன்ன பொழுது அவ துடிச்ச துடிப்பு.. ஹையோ.. நான் எல்லாம் ஒரு மனுஷனா கூட அந்த இடத்துல நிக்க முடியாம நின்னேன்.. என் பொண்ணை எவ்வளவு கேவலமா இந்த கழுகுங்க கிட்ட நானே கொடுத்திருக்கேனே? எல்லாமே என்னோட வாழ்க்கையை மட்டும் பார்த்த என்னோட சுயநலத்துனால.. ஐயோ.. நான் எல்லாம் ஒரு அப்பனா?” முதலில் கோபத்தில் கத்தி விட்டு, வலியில் கதறியவர்,

“அந்த பிசாசு தன்னோட சுயநலத்துல செஞ்சத் தப்புக்கு இன்னைக்கு வரை சிலுவையை சும்மகறவ அவ தான்.. எங்க சுயநலத்துல கஷ்டப்பட்டவ அவ மட்டும் தான்.. எந்தத் தப்புமே செய்யாத அவ தண்டனையை அனுபவிக்க, நாங்க சந்தோஷமா எங்க வாழ்க்கையை குடும்பமா வாழ்ந்து இருக்கோம்.. ‘நம்ம கல்யாணத்துக்கு அப்பறம் அவளை கூடவே வச்சுக்கக் கூடாது.. அவ என் கூட இருந்தா.. என் கூட குடும்பம் நடத்த மாட்டேன்’னு நீ மிரட்டி சத்தியம் வாங்கினதுனால அவளை அப்படியே அம்போன்னு விட்டுட்டு வந்தேனே..

குடும்பம் குட்டின்னு சந்தோஷத்தை நான் அனுபவிச்சுட்டு, அந்தப் பொண்ண தன்னந்தனியா இந்த உலகத்துல போராட விட்ட நான் எல்லாம் சுயநலப் பிசாசு.. அவ என்னை நிக்க வச்சு, நாக்கை பிடுங்கிக்கிற மாதிரி கேள்வி கேட்டது எல்லாம் எனக்கு மறக்கவே மறக்காது.. அவ கேட்ட ஒரு கேள்விக்கு கூட எனக்கு பதில் சொல்ல முடியல.. அப்படி இருக்க, நான் எந்த உரிமையில அவகிட்ட அர்ஜுனை கல்யாணம் பண்ணிக்க கூடாதுன்னு சொல்லப் போனேன்னு தான் தெரியல.. எது என்னை அங்க கொண்டு விட்டதுன்னும் புரியல..” என்றவர், கண்களைத் துடைத்துக் கொண்டு,  

“ஆனா.. போனது நல்லது தான்.. அர்ஜுனை மீட் பண்ணினேன். ரொம்ப நல்ல பையன்.. அவ மேல உயிரையே வச்சிருக்கான்.. அதை விட எங்களால ஏற்பட்ட மனக்கசப்புல, அர்ஜுனை லவ் பண்ணியும், எங்க கல்யாணம் பண்ணிக்கிட்டா.. எங்களால ஏற்பட்ட மனகசப்புல அர்ஜுனை ஹர்ட் பண்ணிடப் போறேன்.. அதுனால அர்ஜுனுக்கு கல்யாண வாழ்க்கை நரகம் ஆகிடப் போகுதுன்னு அவ்வளவு யோசிச்சு இருக்கா..

நான் அன்னைக்கு அர்ஜுனைக் கல்யாணம் பண்ணக் கூடாதுன்னு சொன்னதுல, ரோஷத்தோட அர்ஜுன் கிட்ட கல்யாணத்துக்கு நாள் பார்க்க சொல்லிட்டா.. அவ இனிமே சந்தோஷமா இருப்பா.. அவ வாழ்க்கை இனிமே நல்லபடியா சந்தோஷமா இருக்கும்.. அதை விட அர்ஜுனோட அம்மா.. ரொம்ப நல்ல மாதிரி.. என் மகளா நான் அவளைப் பார்த்துப்பேன்னு அவ்வளவு இதுவா சொன்னாங்க..” என்று தலையில் அடித்துக் கொண்டு, மனதில் அடைத்துக்கொண்டிருந்த அனைத்தையும் கண்ணீருடன் கொட்டியவர், இறுதியாக அவளது வாழ்க்கை நல்ல விதத்தில் அமைந்ததில் திருப்தியுற்றவராக சொல்லி நிறுத்தினார்.  

“என்ன? அவங்களை எல்லாம் போய் பார்த்தீங்களா என்ன? உங்களுக்கு வேற வேலை இல்ல.. எல்லாம் நடிப்பு.. நாடகம் அவளை நம்பாதீங்க.. எங்க கிட்ட இருந்து உங்களைப் பிரிக்க பார்க்கறா..” என்று மேலும் அவர் சத்தமிட,     

“இப்போ தான் அர்ஜுன் அவ வாழ்க்கையில வந்த அப்பறம் சந்தோஷமா இருக்கா.. அது உனக்கு பொறுக்கலையா? அவ நம்ம வாழ்க்கையில வர மாட்டா.. அந்த ரோஷக்காரி என்னை அப்பான்னு கூட ஒரு வார்த்தை கூப்பிடல.. அவ வீட்ல தங்கி இருந்த பொழுது கூட என்னை ஒருமுறை திரும்பிப் பார்க்கல.. கல்யாணத்துக்கு கூட அவ ஒரு பைசா ஏத்துக்க மாட்டா.. நீ நினைக்கிறதுக்கு எல்லாம் மேல அவ ரொம்ப ரோஷக்காரி… பயப்படாதே.. நான் இங்க தான் இருப்பேன்..” என்று தனது மனைவியிடம் கத்தியவர்,

கண்ணீருடன், “அவ பிறந்த பொழுது இந்தக் கையாள எவ்வளவு ஆசையா அவளைத் தூக்கினேன் தெரியுமா? ரோஜா மொட்டு போல நான் தூக்கினா என் கை விரலைப் பிடிச்சுப்பா.. இன்னும் அந்த நிமிஷம் எல்லாம் என் கண்ணுக்குள்ள நிக்குது.. அவ முதல் முறை அப்பான்னு கூப்பிடதையும், அவ தத்தி நடந்து வந்து என்னை மார்புல விழறதையும் ரசிச்சவன்.. அன்னைக்கு அவ என் கண்ணு முன்னால உட்கார்ந்து இருந்த பொழுது, அவளை அடையாளம் கூடத் தெரியாம இருந்த அப்பன் தான் நான்.. அந்த அளவு நான் உனக்கு கொடுத்த சத்தியத்தை காப்பாத்தின பாவி நான்..” என்றவர், தனது இரு மக்களையும் பார்த்து,    

“உங்களை எல்லாம் கூட அவளுக்கு நல்லா தெரிஞ்சு இருக்கு.. நான் சொல்லாமையே உங்களைப் பத்தி அவ சொன்னா.. உங்க பொண்ணும் பையனும்ன்னு சொல்லி உங்களை குறிப்பிட்டு பேசினா.. எனக்கே அது ஷாக் தான்.. அப்போ அவ என்னை பார்த்துட்டு தான் இருந்திருக்கா இல்ல.. நாம போடற ஒரு ஒரு போட்டோவையும் பார்த்து அவ என்ன பாடுபட்டு இருப்பா.. அவ மனசு அதை எல்லாம் பார்த்து என்ன பாடுபட்டு இருக்கும்? நான் இங்க உங்க கூட எல்லாம் சந்தோஷமா இருந்துக்கிட்டு.. அவ வளர்ந்த பிறகு எப்படி இருப்பான்னு ஒரு போட்டோல கூட பார்க்க ஆசைப்படாத, அதைப் பத்தி தோணக் கூட இல்லாத நான் எல்லாம் ஒரு பெத்தவனா?” எனவும், மக்கள் இருவருமே அங்கு நடக்கும் விஷயத்தை மூளையில் ஏற்றிக் கொள்ள முடியாமல், மெல்ல கேசவன் பேசுவதை கேட்டபடி சிலையாக நின்றனர்.

மீண்டும் அந்த இடத்தில் ஒரு பேரமைதி.. கடிகார முட்களின் சத்தம் மட்டுமே அந்த இடத்தை நிறைக்க, கேசவன் தலை குனிந்து அமர்ந்திருந்தார்.

முதலில் அந்த அமைதியைக் களைத்து பேசியது அவரது மகள் தான்.. ஒரு பெண்ணாக சிவாத்மிகாவின் நிலையைப் பற்றி யோசித்தவள், அதுவும் அவளை தவறான பார்வை பார்த்ததாக கேசவன் சொன்னதை ஏற்றுக் கொள்ள முடியாமல், “ஏன்ப்பா இப்படி பண்ணினீங்க? சிவாக்கா பாவமில்லையா? அவங்க அம்மா தான் போயிட்டாங்க சரி.. நீங்க ஏன்ப்பா இப்படிப் பண்ணினீங்க? ஒரு அஞ்சு வயசு குழந்தையை நீங்களும் அப்படியே விட்டுட்டீங்களே.. அவ்வளவு சுயநலமாப்பா உங்களுக்கு? அப்படியா உங்க பொண்ணை விட உங்க வாழ்க்கை முக்கியமா போயிடுச்சு..

எங்களைப் பார்க்கும்போது கூட அவங்க எப்படி இருப்பாங்க? என்ன பண்ணிட்டு இருப்பாங்கன்னு உங்களுக்கு பார்க்கத் தோணலையாப்பா? அம்மாவுக்கு செஞ்ச சத்தியம் இருக்கட்டும்.. உங்களுக்கு கொஞ்சம் கூடவா அவங்களைப் பார்க்கணும் பேசணும்னு ஆசை வரல? அம்மா அப்பா இருந்தும் அவங்களை அப்படித் தனியா விட்டுட்டீங்களே.. உங்களுக்கு பிறந்த பாவத்தைத் தவிர அவங்க என்னப்பா பாவம் பண்ணினாங்க? நீங்க சொன்னீங்களே அந்த கழுகுங்க, ஒருவேளை அவங்களை இரை ஆக்கி இருந்தாங்கன்னா அந்த பாவம் நம்மைச் சும்மா விடுமா? இல்ல அந்த நினைப்பு உங்களை நிம்மதியா இருக்க விடுமா?” கேசவனின் பெண் கேட்க, அவர் பேச பதிலின்றி நின்றார்.

தனது அன்னையை ஒரு பார்வைப் பார்த்த அவரது மகன், “சி..த்..தி… அந்தப் பதவி வந்த உடனே, அந்த புத்தி வந்திருச்சு இல்ல..” என்று நக்கலாகக் கேட்க,

“டேய்.. அவளை நான் ஏண்டா பார்த்துக்கணும்.. அவளைப் பெத்தவளே வேண்டாம்ன்னு விட்டுட்டு அவ வாழ்க்கையைப் பார்த்துக்கிட்டு போயிட்டா.. நான் ஏன் அவளைத் தூக்கி சுமக்கணும்?” என்று கேள்வி கேட்க, மக்கள் இருவரும் அவரை விசித்திரமாகப் பார்த்தனர்.

“நீங்க தூக்கி சுமக்க வேண்டாம்.. ஆனா.. அவங்களைப் பெத்தவரை அட்லீஸ்ட் போய் பார்க்க விட்டு இருக்க வேண்டாமா? அந்த அளவுக்கு கூடவா உங்க மனசுல ஈரம் இல்லாம போச்சு? அவங்களுக்கும் இவரு அப்பா தானே. அப்பாகிட்ட அவங்களுக்கு இருக்கற அந்த உரிமையை மறுக்க நீங்க யாரு? பணத்தைக் கொடுத்தா எல்லாம் கிடைச்சிடுமா? அப்போ எங்களையும் அப்படியே விட்டு இருக்கலாமே.. அப்பறம் ஏன் நாங்க எங்க படிக்கறோமோ அங்கேயே வீட்டை.. பிசினஸை மாத்திக்கிட்டு வந்தீங்க?

நாங்க படிக்கிற காலேஜ்லையும் எங்களுக்கு ஹாஸ்டல் இருக்கு.. பணத்தை கொடுத்திருந்தா ஹாஸ்டல்ல தங்கி படிச்சு இருப்போமே? ஏன் நாங்க கெட்டுப் போயிடுவோம்ன்னா? அப்போ சிவாக்கா என்ன ஆனாலும் பரவால்லையா? போனாலும் அவங்க அம்மா போல பிள்ளைன்னு ரொம்ப ஈசியா சொல்லிடலாம் இல்ல.. உங்க பொண்ணுன்னா ஒண்ணு. அவங்கன்னா ஒண்ணா? ஆனா.. இவங்க பேச்சைக் கேட்டு நீங்க பண்ணின காரியம் இருக்கே..” நக்கலாக அவரது மகன் கேட்க, அவனது அன்னை வாயடைத்துப் போனார்.

“நீங்க ரெண்டு பேரும் இப்படி இருப்பீங்கன்னு நான் நினைக்கவே இல்ல.. செல்பிஷ்னஸ் இருக்கும் தான்.. ஆனா.. அதுக்குன்னு இவ்வளவா? பெத்த பாசம்ன்னு ஒண்ணு இல்லாமையா?” என்று கேட்டவன்,

“இல்ல.. எனக்கு அவங்களைப் பார்க்கணும்.. பேசணும்.. உங்க சார்பா மன்னிப்பு கேட்கணும்..” என்றவன், தனது செல்லை எடுத்து ஃப்ளைட் டிக்கெட்டை தேடத் துவங்கினான்.        

“நீ நம்ம கார் ட்ரைவரை வரச் சொல்லுண்ணா.. நாம போய் அவங்களைப் பார்த்துட்டு வரலாம்.. நமக்கு சென்னை பழக்கம் கிடையாது.. நம்ம டிரைவர் கூட போனா ஈசியா அவங்க இடத்துக்கு போயிடலாம்..” என்றவள், தங்களது டிரைவரை அழைத்து, உடனே சென்னைக் கிளம்பத் தயாராக,

“என்ன அக்கா பாசம் ரொம்பப் பொங்குது? போய் உங்க வேலையைப் பாருங்கடா.. எக்ஸாம் வருதுல்ல படிக்க போங்க..” என்று அவர்களது அன்னைக் கேட்கவும்,

“நீங்க அவங்களுக்கு செஞ்சது அநியாயம்.. நாங்களும் அவங்க பிறந்த அதே அப்பாவுக்கு தானே பிறந்தோம்? அப்போ அவங்களும் எங்க ரத்தம் தானே.. எங்க அக்காவைப் பார்க்கப் போறோம். அதைத் தடுக்க உங்களுக்கு எந்த உரிமையும் இல்ல..” எனவும், அந்தப் பெண்மணி வாயடைத்துப் போய் நிற்க,

“அவ ரோஷக்காரி.. உங்களைத் தெரிஞ்சாலும் தெரியாதது போலத் தான் நடந்துப்பா.. யாரோ போல தள்ளி நிறுத்தி தான் பேசுவா..” என்றவர், அதற்கு மேல் எதுவும் பேசாமல் தளர்ந்த நடையுடன் எழுந்துச் சென்றார்.

பெங்களூரில் இருந்து வந்த மறுநாளே அர்ஜுன் ஷூட்டிங்கிற்கு கிளம்பிச் செல்ல, வினய்யும் அவனுடனே கிளம்ப, “டேய்.. இப்போ உடனே நீ என் கூட வர வேண்டாம்.. ஒரு ரெண்டு நாள் கழிச்சு வா போதும்.. நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு வாடா..” அர்ஜுன் வினயிடம் சொல்லவும், அதே போலவே வினய், இரண்டு நாள் கழித்து அவனுடன் சென்று இணைவதாக முடிவெடுத்திருந்தான்.

அதே போலவே ஒரு நாள் முழுவதும் உறங்கி விட்டு, அந்த ஃபேஷன்ஷோவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பெரிதாக ப்ளோஅப் செய்து மாட்ட முடிவெடுத்து, அதற்கான வேலைகளை சிவாத்மிகாவுடன் சேர்ந்து செய்தான்.  

மறுநாள் காலை ஹைதராபாத் கிளம்பிச் செல்ல வினய் ஃப்ளைட் டிக்கெட்  புக் செய்திருந்தான்.. அவன் ஹைதராபாத் சென்றால் வர பதினைந்து நாள் ஆகும் என்பதால் ராதாவை அழைத்துக்கொண்டு ஊரைச் சுற்றி வந்தவன், ஒரு புகழ்பெற்ற கடைக்கு அழைத்துச் சென்றான்.

“இப்போ எதுக்கு என்னை இங்க கூட்டிட்டு வந்திருக்கீங்க? கல்யாணத்துக்கு வாங்க இன்னும் நாள் இருக்கு இல்ல..” ராதா புரியாமல் கேட்க,

“இது கல்யாண ஷாப்பிங் இல்ல.. சும்மா ஷாப்பிங்.. உனக்கு எந்த புடவை வேணுமோ அதை எடுத்துக்கோ.. நிறைய புது டிசைன் நிறைய வந்திருக்கு.. வீட்டுக்கு கட்டறது போல கொஞ்சம் எடுத்துக்கோ..” என்றவன், அவளை அந்த பிரிவிற்கு அழைத்துச் சென்றான்.

“இப்போ எதுக்கு எனக்கு புடவை? என்கிட்டே தான் நிறைய இருக்கே.. சிவா தான் எங்கயாவது ஏதாவது நல்ல புடவையா பார்த்து உடனே எனக்கு வாங்கிட்டு வந்துடுவா.. வீட்டுக்கு எல்லாம் அவ வாங்கிட்டு வரதை கட்ட முடியுமா? அவளுக்கு கூட அவ அப்படி வாங்கிக்க மாட்டா.. எல்லாமே அதிக விலை கொடுத்து தான் அவ எனக்கு வாங்குவா..” நெகிழ்ச்சியாக அவள் சொல்லவும், வினய் அவளது கையை அழுத்தினான்.   

“அதெல்லாம் இங்க செல்லாது.. அவ அவங்க அக்காவுக்கு வாங்கித் தந்திருக்கா.. இது நான், என் பொண்டாட்டிக்கு எடுத்துத் தரது.. உன்கிட்ட இல்லைன்னு நான் வாங்கித் தரலை மை ராதா. எனக்கு ஆசையா இருக்குன்னு வாங்கித் தரேன்…” என்றவன், அவள் கண்களை விரித்துப் பார்க்கவும்,

“நான் இல்லைன்னு சொன்னா என் தங்கை உன்னை நல்லா பார்த்துக்காதது போல ஆகிடும்.. இது அப்படி இல்லை.. உன் புருஷனா நான் உனக்கு வாங்கித் தரேன்.. எடுத்துக்கோயேன்.. என் செல்லமில்ல..” என்று கொஞ்சவும்,  

“ரொம்ப அடம் பண்றீங்க நீங்க..” என்றபடி, அங்கு அடுக்கப்பட்டிருந்த புடவை வகைகளைப் பார்த்துக் கொண்டே வந்தவளுக்கு, தனது முதுகைத் துளைக்கும் உணர்வு.. அவள் புரியாமல் திரும்பிப் பார்த்துக் கொண்டே வர,

“யாரைத் தேடற?” வினய் புரியாமல் கேட்க,

“இல்ல.. யாரோ என்னை உத்து பார்க்கற மாதிரி இருக்கு.. ஒரு மாதிரி உணர்வு.. எனக்கு சொல்லத் தெரியல..” ராதா சொல்லவும்,

“உன்னை நான் தானே பார்த்துட்டு வரேன்..” வினய் கேலி செய்தாலும், அவள் கூறியது அவனது மூளைக்கு உறைத்தது.   

“நீ புடவையைப் பாரு.” என்றவன், அங்கிருந்த ஒரு இடத்தில் இருந்த புடவை வகைகளைக் காட்டச் சொல்லி விட்டு சுற்றி பார்வையை ஓட்டத் துவங்கினான்.  

அங்கு அமர்ந்து ராதாவையே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த ஒருவனைப் பார்த்த வினயின் பார்வை, அவனை அளவிடத் துவங்கியது.

அவனது பார்வையில் ராதாவை நன்குத் தெரிந்த பரிட்சயம் தெரிந்தது. அண்ணாக இருந்தால், அவள் வீட்டை விட்டு வந்ததற்கு அவளைத் திட்டவாவது செய்திருப்பான்..  அல்லது கோபமாக முறைத்தாவது இருப்பான்.. ஆனால் இவனது பார்வை அப்படி இல்லை என்று உணர்ந்தவனுக்கு, ராதாவின் வாழ்வில் மீதம் இருக்கும் அந்த ஆடவன் நினைவு வரவும், அவனது முகத்தில் எள்ளல் நகை வந்து ஒட்டிக் கொண்டது.

“ராதா.. அங்க இருக்கறவங்க உனக்குத் தெரிஞ்சவகளா?” வேண்டுமென்றே வினய், அந்த ஆடவனைக் காட்டி வம்பு வளர்க்க,

“யாரு?” என்று திரும்பியவள், அங்கு ஒரு இருக்கையில் அமர்ந்து அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தவனைப் பார்த்தவளின் முகம் ரௌத்திரமாகவும், உடனே வலியையும் காட்டவும், வினய் அவளது தோளை அழுத்தினான்.

அவளது காதின் அருகே நெருங்கியவன், “மை டியர் செல்லம்ஸ்.. நாம வந்த வேலையைப் பார்ப்போமா? நம்ம இங்க எதுக்கு வந்திருக்கோம்? புடவை எடுக்க..” என்று அவளது கவனத்தை அவன் திருப்ப முயன்றான்.

“அந்த ஆளு எதுக்கு என்னைப் பார்க்கறான்.. எனக்கு அப்படியே அவனை கன்னம் கன்னமா அரையனும் போல இருக்கு..” அவள் கோபமாகப் பேச,  

“பேபி.. உனக்கு ஒண்ணு தெரியுமா? ஒருத்தன் பொண்டாட்டியை இன்னொருத்தன் கட்ட முடியாதுன்னு சொல்லுவாங்க.. நீ என் பொண்டாட்டி.. எனக்காகவே பிறந்தவ.. உன்னை எந்த கொம்பனாலும் தூக்க முடியாது.. அதோட.. நீ சொன்னியே ஒரு ஆளு.. அவன் ஒரு வெத்து பீசு.. அப்படித் தானே” என்று கேட்க, ராதா அவனது விளையாட்டு புரிந்து, ‘ஆம்’ என்று தலையசைக்க,

“வேணா ஒண்ணு செய்வோமா? உன்னை ஏமாத்தி கல்யாணம் பண்ணிட்டான்னு போலீஸ்ல கேஸ் கொடுக்கலாமா?” என்று சத்தமாகவே கேட்க, அந்த ஆள் ஆடிப் போனான்.

ராதாவோ, “அய்யே.. அந்த கரும்மத்தை எதுக்கு பார்த்துக்கிட்டு? அதுக்கு எல்லாம் அந்த ஆள் வர்த் இல்லை.” ஏளனமாக அவள் கூற, வினய் அவளது கன்னத்தைத் தட்டினான்.

“அவ்வளவு தான்.. சரி.. அவனை நானே கவனிக்கவா? உன்னை ஏமாத்தினவன் என் கையில கிடைச்சான்னு வையேன், அவனை கை கால் உடைச்சு, அந்த புடைப்பா இருக்கற மூக்க ஒரே குத்தா குத்தி, அந்த மூக்குல மூச்சு விட முடியாம செஞ்சிடலாமா? இல்ல.. சொல்லு மொத்தமா அவன் கதையை முடிச்சிடலாம்.. ஒரே ஒரு வார்த்தை சரின்னு சொல்லு.. வச்சு செஞ்சிடலாம்..” வேண்டுமென்றே இழுத்து சத்தமாகச் சொன்னவன், அந்த ஆளை ஏற இறங்கப் பார்க்க, அந்த ஏமாற்றுக்காரனின் முகம் கருத்து, அந்த ஏசியிலும் உடல் வேர்க்கத் துவங்கியது.

“வா.. போகலாம்.. இங்க எதுவுமே நல்லா இல்ல..” அவனை முறைத்துக் கொண்டிருந்த அவனது மனைவியை, இழுக்காத குறையாக இழுத்துக் கொண்டு சென்றவனைத் திருப்தியுடன் பார்த்தவன்,

“துரைக்கு இன்னைக்கு வீட்டுல கும்மாங்குத்து இருக்கும்ன்னு நினைக்கிறேன்.. நான் சொன்னதை எல்லாம் அவனோட பொண்டாட்டியே செஞ்சிடுவா..” கேலியாகச் சொன்னவன், ராதா அவனை விழிகள் விரியப் பார்க்கவும்,

“நீ எனக்கு சொந்தமானவ ராதா.. நீ எனக்கே எனக்கு மட்டும் தான்.. அவன் கிடக்கான் ப்ராடு.. அவனை என்ன பார்வை? என்னைப் பாரு..” என்றவன், புடவையைப் பார்க்கத் துவங்கினான்.   

ராதா வினயை நன்றியுடன் பார்க்க, “என்ன பார்க்கற? வா.. நாம இப்போ சந்தோஷமா ஷாப்பிங் பண்ணலாம்.. அவன் எல்லாம் ஒரு ஆளுன்னு உன் முகம் மாறலாமா என் செல்லமே. அந்த ஆளும் மூஞ்சியும்.. அவன் முன்னால நீ என்னை கொஞ்ச வேண்டாமா? இப்படி அவனை கோபமா பார்த்துட்டு இருக்க?” என்றவனை அவள் முறைக்க,

“அப்படி மட்டும் கொஞ்சி இருந்தன்னு வையேன்.. அவன் அப்படியே பொசுங்கி போயிருப்பான். நீ மிஸ் பண்ணிட்ட? நானும் கொஞ்சம் ஜாலியா ரிஹர்சல் பார்த்து இருப்பேன்..” என்றவனின் கையைக் கிள்ளியவள்,  

“ஆசை தோசை அப்பளம் வடை.. ஆளைப் பாரு.. ரிகர்சல் பார்க்கறாராம் இல்ல..” என்றவளைப் பார்த்து முகத்தைச் சுருக்கியவன்,

“என் மச்சான் எல்லாம் அனுபவிக்கிறான் தெரியுமா? நான் தான் பாவம்..” என்று விடாமல் அவன் வம்பு வளர்க்க, ராதா சிரிக்கவும்,

“சரி வா. ஷாப்பிங் பண்ணிட்டு போகலாம்..” என்றவனுடன், சந்தோஷத்துடன் அவன் தேர்வு செய்த புடவைகளை வாங்கிக் கொண்டு வந்தாள்.

மறுநாள் காலையிலேயே வினய் ஹைதராபாத் கிளம்பிச் சென்று விட, வழக்கம் போல காலையில் வேலைகளை முடித்துவிட்டு, நிர்மலாவிடம் பேசிவிட்டு, சிவத்மிகா தனது பொட்டிக்கிற்குச் சென்றாள்..

வினயின் யோசனைப்படி, அவர்கள் பேஷன் ஷோவில் அணிந்த உடைகளை பெரிய ப்ளோவப்பாக அவன் செய்திருக்க, அது அவளது பொட்டிக்கின் உள்ளே பொருத்தப்படும் வேலை நடந்துக் கொண்டிருந்தது..

அதை பார்வையிட்டு வந்தவள், அந்த ஹீரோயினின் படத்திற்கான உடைகளை, அந்த கதைக்கு ஏற்ப எடுத்து வைத்துக் கொண்டிருக்க,

“ஹாய்.. குட் மார்னிங்.. நாங்க சிவாக்காவைப் பார்க்கணும்..” என்ற குரல் கேட்கவும், அந்த குரலில் நிமிர்ந்துப் பார்த்தவள், அங்கு நின்றிருந்தவர்களைப் பார்த்து அதிர்ந்து போனாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!