ரகசியம் 04 💚

ரகசியம் 04 💚
வீரஜ் மெல்ல அடியெடுத்து அவளை நெருங்க, கயலுக்கோ பதட்டத்தில் வியர்க்க ஆரம்பித்துவிட்டது.
ஒரு கரத்தை சுவற்றில் வைத்து அவளை பாதி அணைத்தாற் போல் நின்று, மற்ற கரத்தை பாக்கெட்டில் வைத்திருந்தவன், மெல்ல அவள் காதருகில் நெருங்கி, “கயல்விழி. உனக்கு பொருத்தமான பெயருதான்” அவளுடைய அலைபாயும் விழிகளை ரசித்தவாறு ஆழ்ந்த குரலில் சொல்ல, கயலுக்கு குப்பென்று முகம் சிவந்துவிட்டது.
“என்…என்ன பண்றீங்க நீங்க? இப்படி இருக்குறதை யாராச்சும் பார்த்தா தப்பா நினைப்பாங்க” கயல் தடுமாற, “சோ வாட்?” அலட்சியமாக கேட்ட வீரஜிற்கு அவளுடைய வார்த்தைகளில் தெரிந்த தடுமாற்றத்தையும் அவளின் பதட்டத்தையும் கண்டு உள்ளுக்குள் ஜிவ்வென்று இருந்தது.
“நான் இப்போ உன்னை ஏதாச்சும் பண்ணேனா என்ன? ஏன் இவ்வளவு பயப்படுற? என் விரல்நுனி கூட உன் மேல படல. அப்றம் என்ன? அதுவும், என்னை பார்த்து ஏன் உனக்குள்ள இவ்வளவு தடுமாற்றம்?” அவன் அவளை மேலிருந்து கீழ் பார்வையாலேயே விழுங்கியவாறுக் கேட்க, எச்சிலை விழுங்கிக்கொண்டவளுக்கு பதட்டத்தில் கைகால்கள் நடுங்க ஆரம்பித்துவிட்டது.
அதுவும் அவள் நெற்றியில் மூச்சுக்காற்று பட, “நீ ரொம்ப அழகா இருக்க பாப்பா” வீரஜ் சொன்ன வார்த்தைகளில் கயலுக்கு உடல் சில்லிட்ட உணர்வு!
சிறுவயதிலிருந்து பெண்கள் பாடசாலையில் படித்து வளர்ந்த கயல் இதுவரை பழகியிருக்கும் ஒரே ஆணென்றால் அது அவளுடைய தந்தைதான். கிராமத்தில் அவளுடைய தந்தையின் செல்வாக்குக்கு பயந்து மற்ற இளைஞர்களோ அவளை நெருங்கவே பயப்படுவர்.
அதனாலேயே எந்த ஆண்மகனுடனும் பழகியிராத அந்த பதினெட்டு வயது பாவைக்கு, வீரஜின் ரசனைப்பார்வையும் குறும்புப்பேச்சுக்களும் அவன்மேல் ஒரு ஆர்வத்தை உண்டாக்கியிருந்தது. ஆனால், இங்கு வீரஜின் எண்ணமோ வேறு!
அவள் மறுக்காததையும் அவளின் பதட்டத்தையும் தனக்கு சாதாகமாக எடுத்துக்கொண்டவன், பாக்கெட்டிலிருந்த கரத்தை அவளிடையை தொடவென மெல்ல கொண்டு வர, அடுத்தகணம் பெரிய மூச்சுக்களை இழுத்து விட ஆரம்பித்துவிட்டாள் அவள்.
ஏற்கனவே ஆடியதில் உண்டான களைப்பு, இப்போது அவனின் நெருக்கத்தில் உண்டான பதட்டமென சேர்ந்து அவளுக்கு மூச்சுத் திணறலை உண்டாக்கியிருக்க, அவளின் நிலையில் வீரஜ்தான் பதறிவிட்டான்.
அவளை விட்டு இரண்டடி விலகி நின்றவன், என்ன செய்வது ஏது செய்வதென தெரியாது பதட்டமாக அவளை நோக்க, அதேநேரம் அவன் விழிகளில் சிக்கியது, இடையோரத்தில் சேலையோடு கட்டி வைத்திருந்த பையில் அவள் மூச்சு வாங்கியவாறு எதையோ தேட தடுமாறுவது.
அது என்னவென்பதை உடனே புரிந்துக்கொண்டவன், வேகமாக அவள் கையை தட்டிவிட்டு அந்த பையிலிருந்த இன்ஹலரை எடுக்க, அவளோ விழி விரித்து அவனை நோக்கினாள். அடுத்தகணம் அவளின் பின்னந்தலையை பிடித்து அவனே அவளுக்கு மருந்தைக் கொடுக்கவும், விழிகளை அழுந்த மூடிக்கொண்டாள் கயல்.
உதடுகளை பதட்டத்தில் ஈரமாக்கியவாறு அவளையே பார்த்திருந்த வீரஜ், அங்கு ஆட்கள் வருவதற்கான அரவத்தை உணர்ந்து அவளின் இன்ஹலரையும் கொடுக்காது அங்கிருந்து மாயாமாகியிருக்க, பட்டென்று விழிகளை திறந்தவளுக்கு அவன் இல்லாதது சற்று அதிர்ச்சியாக இருந்தாலும் மருந்து எடுத்துக்கொண்டதில் மூச்சு திணறல் அடங்கியிருந்தது.
சரியாக, “ஏம்மா கயலு, இங்க என்ன பண்ற? ஆமா… ஏன் உன் முகமெல்லாம் இப்படி வேர்த்திருக்கு?” பதட்டமாக கேட்டவாறு இரு பெண்மணிகள் அவளை நோக்கி வர, “அது… அது ஒன்னுமில்லை. லேசா மூச்சு திணற ஆரம்பிச்சிருச்சு. இப்…இப்போ பரவாயில்லை” திக்கித்திணறி பேசியவளின் விழிகள் வீரஜை தேடி அங்குமிங்கும் அலைப் பாய்ந்தன.
அன்றிரவு, படுக்கையிலிருந்த கயலுக்கு வீரஜின் நினைவுகள்தான்.
அவனை இரண்டு தடவைகள்தான் சந்தித்திருக்கின்றாள். ஆனால், அவன்மேல் ஏதோ ஒரு ஈர்ப்பு. பார்த்த முதல்தடவை அவன் தோற்றத்தில் அவன்மேல் ஆர்வம் கொண்ட பெண்ணவளுக்கு, இப்போது அவன் பேச்சுக்களில் உள்ளுக்குள் இனம் புரியாத உணர்வு!
அந்த வயதில் தோன்றும் இனக்கவர்ச்சியை கட்டுப்படுத்தவா முடியும்?
அவள் தன்னவனை நினைத்து மெல்லிய சிரிப்புடன் விட்டத்தை வெறித்தவாறு படுத்திருக்க, “கயலு…” கதவைத் தட்டிவிட்டு உள்ளே வந்தார் பார்த்திபன்.
அவளோ தன் அப்பா வருவதை உணர்ந்து பட்டென்று விழிகளை மூடிக்கொள்ள, ஆனால், உள்ளே வந்தவருக்கு அவளுடைய புருவ முடிச்சுகளை பார்த்ததுமே அவள் உறங்குவது போல் நடிப்பது புரிந்துப் போனது.
“இன்னும் தூங்காம என்ன பண்ற?” அவருடைய வார்த்தைகள் கண்டிப்பாக வர, “நான் தூங்கிட்டேன்ப்பா” அப்போதும் சமாளிக்கின்றேன் பேர்வழியென்று கயல் விழிகளை மூடிக்கொண்டேச் சொல்ல, தன் மகளின் செய்கையில் அவரின் வன்மையான இதழ்களில் லேசாக சிரிப்பு எட்டிப் பார்த்தது.
மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு அவளையே சிரிப்போடு பார்த்தவாறு பார்த்திபன் நிற்க, ‘என்ன சத்தத்தையே காணோம், போயிட்டாரு போல!’ உள்ளுக்குள் நினைத்து ஒற்றை கண்ணை மட்டும் திறந்துப் பார்த்தவள், எதிரே தன் தந்தை நிற்கும் தோரணையில் இரு கண்களையும் பட்டென்று திறந்தாள்.
அவரோ அவளை பொய்யாக முறைக்க, “ஹிஹிஹி…” என்று அசடுவழிந்தவாறு மெல்ல எழுந்தமர்ந்த கயல், “சோரிப்பா” கொஞ்சும் குரலோடுச் சொல்ல, அவளின் விளையாட்டில் அவருக்கு இருந்த கொஞ்சநஞ்ச கோபமும் காற்றில் பறந்து போனது.
மெல்ல அவளருகில் அமர்ந்தவர், அவள் தலையை வாஞ்சையுடன் வருடி “சோரி கண்ணம்மா, அப்பாவால உன் கூட நேரம் செலவளிக்கவே முடியுறதில்லை. வியாபாரத்துல ஏகப்பட்ட சிக்கல். கருணாவால இதையெல்லாம் தனியா சமாளிக்க முடியாது. ஆனா ஊனா என்னைதான் கூப்பிடுறான்” சற்று வேதனை கலந்து சொல்ல, அவளோ எதுவும் பேசவில்லை.
அமைதியாக கயல் தந்தையையே பார்த்தவாறு அமர்ந்திருக்க, சட்டென பார்த்திபன், “கயல், உன்கிட்ட ஒன்னு கேக்கணும். இன்னைக்கு கோயிலுக்கு பின்னாடியிருக்குற பகுதியில நீ என்ன பண்ணிக்கிட்டு இருந்த? உனக்கு மூச்சு திணற ஆரம்பிச்சது, கையில மருந்தும் இல்லை, ஏதோ கடவுள் பக்கத்துல இருந்ததால எந்த ஆபத்தும் இல்லைன்னு லட்சுமி சொல்லிக்கிட்டு இருந்தா” என்று கேட்டு கூர்மையான பார்வையுடன் நோக்க, உள்ளுக்குள் அதிர்ந்துவிட்டாள் அவள்.
‘ஏய் கேடிக்கிழவி ஊர் கதை பேச எதுவுமில்லைன்னு என்னை போட்டுக்கொடுத்துட்டியே, பாவி!’ உள்ளுக்குள் பொறுமிக்கொண்டு, “அதுப்பா… அது கோயிலுக்குள்ள ரொம்ப கூட்டமா இருந்துச்சு. என்னால இருக்க முடியல. அதான், நானும் தேனுவும் கோயிலுக்கு பின்னாடி போய் நின்னுகிட்டு இருந்தோம். அப்போ தேனுவோட அக்கா கூப்பிட அவ போயிட்டா. அவளுக்காக காத்திருந்து தனியா இருந்தேன்னா… பதட்டத்துல மூச்சு திணற ஆரம்பிச்சிருச்சு. மருந்தை வேறு நான் எங்கேயோ தொலைச்சிட்டேன்” தந்தையின் விழிகளை நோக்காது எங்கோ பார்த்துக்கொண்டு கயல் திக்கித்திணறிச் சொல்லி முடிக்க, பார்த்திபனின் புருவங்கள் யோசனையில் சுருங்கின.
“ஓஹோ!” என்று மட்டும் யோசனையோடு இழுத்தவர், “இன்னொன்னு கேக்கணும்டா. அன்னைக்கு குணசேகரனோட மாந்தோப்புல என்ன பண்ணிக்கிட்டு இருந்தீங்க? அதுவும், வைகுவோட வீட்டுக்கு புதுசா வந்திருக்குற அந்த வெளியூரு பையனோட என்ன பேச்சு வேண்டி கிடக்குது?” என்று கேட்க, அவரின் குரலில் அடங்கியிருந்த கோபத்தை கயலால் உணர முடிந்தது.
‘அய்யோ கடவுளே! இதை அப்பாக்கிட்ட யார் சொன்னாங்கன்னு தெரியல்லையே…’ பயத்தில் கைகளை பிசைந்துக்கொண்டவள், எச்சிலை விழுங்கி “அப்பா, நான்… அது உங்களுக்கே தெரியும்தானே! அவங்க ஊருக்கு புதுசு. அதான் தோப்புக்குள்ள வந்து ஊரைப்பத்தி சும்மா எங்ககிட்ட கேட்டுட்டு இருந்தாங்க. அவ்வளவுதான்” தட்டுத்தடுமாறி சொல்லி முடிக்க, “ம்ம்… புரியுது. ஆனா, நீ எதுக்கும் ஜாக்கிரதையா இரும்மா. உன் அம்மா ஒழுங்கா இருந்திருந்தா அவ உனக்கு பாதுகாப்பா இருக்கான்னு நான் நிம்மதியா இருப்பேன். ஆனா அவ…” பற்களைக் கடித்துக்கொண்டார் அவர்.
அவளுடைய தாயைப் பற்றி பேசியதுமே அவளின் விழிகள் கலங்க, அதை உணர்ந்தவர், “அச்சோ கண்ணம்மா! எனக்கு என் பொண்ண பத்தி தெரியும். இருந்தாலும் நான் எதுக்கு சொல்றேன்னா… முன்னெச்சரிக்கையா இருக்கணும்லடா! அதுவும் அந்த பையன் வேற ஜாதி மட்டுமில்ல ஏதோ கிறிஸ்தவ பையனாம். இந்த வயசு ரொம்ப கோளாறு புடிச்சது. அதான்டா. நீ நல்லா தூங்கும்மா. அப்பா நாளைக்கு பேசுறேன்” என்றுவிட்டு வெறியேறச் சென்று, சற்று நின்று திரும்பிப் பார்த்து “உனக்கு மாங்காய் வேணும்னா நம்ம தோப்புலயே நீ எடுத்துக்கலாம். ஊரான் வீட்டு எச்சில் நமக்கு தேவையில்லை” மிரட்டல் அடங்கிய கேலியோடு சொல்லிவிட்டுச் சென்றார்.
ஆனால், இங்கு கயலுக்குதான் அதிச்ச்சி!
அவள் நன்கு அறிவாள். என்னதான் அவளுடைய தந்தை அந்த காலத்திலேயே படித்து பட்டம் வாங்கியவராக இருந்தாலும் இந்த ஜாதி, மதம், இனம் என்பவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் மனிதர். அப்படியிருக்கையில் வேறு மதத்தை சார்ந்த இவனிடத்தில் தன் மகளின் பார்வை செல்வது தெரிந்தால்?
நினைக்கவே அவளுக்கு அடிவயிறு கலங்க, ‘நம்மளால அவருக்கு ஆபத்து வந்துரும் போலயே… இனி அவர் பக்கம் போக கூடாது’ ஒரு முடிவு எடுத்தவளாக தூங்காது அந்த இரவை கழித்த கயலின் முடிவு அடுத்தநாள் அவனுடனான மூன்றாவது சந்திப்பில் காற்றில் மாயமாகிப் போனது.
அந்த மூன்றாவது சந்திப்பை அவள் தன்னெதிரே இருந்த கண்ணாடியை வெறித்தவாறு நினைக்க, அதற்குள் “கயல்…” என்ற அழைப்போடு கதவை தட்டினார் அந்த வீட்டின் சமையல்காரப் பெண்மணி.
கயல் சென்று கதவைத் திறக்க, அங்கு அறைக்கு வரும்படி சத்யா அம்மாளின் அழைப்பு.
மீண்டும் கண்ணாடிக்கு எதிரே வந்தவள், முகத்தை நீரினால் அடித்து கழுவிவிட்டு அடுத்தநிமிடம் சத்யா அம்மாளின் அறை முன்தான் நின்றிருந்தாள்.
ஆனால், அவளுக்குள் அத்தனை படபடப்பு! கதவிடுக்கின் வழியே உள்ளே ஆறடி உயரத்தில் அந்த ஆண்மகன் இருப்பதும் புரிந்தது. கிட்டதட்ட என்னவென்று சொல்ல முடியாத மனக் குழப்பம் வேறு!
இந்த பதட்டம், உணர்வு என்பவற்றை இதற்குமுன் அவள் முதலும் கடைசியுமாக உணர்ந்த ஆண்மகன் வீரஜ்தான். ஆனால், இப்போது முன்பின் தெரியாத இவனை நெருங்குகையில் அவளுக்குள் தோன்றுகிறது.
அதேநேரம் அவளின் வருகையை அபிமன்யுவும் உணர்ந்துவிட்டான் போலும்! அழுத்தமான காலடிகளுடன் வந்து கதவைத் திறந்து அவளை கூர்மையாக நோக்க, அவனைப் பார்த்ததும் தடுமாறியவள், “அது… அம்மா கூப்பிட்டாங்க. அதான்…” திக்கித்திணறி அவன் பார்வைக்கு பதிலளித்தாள். ஆனால், அவன் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை.
சில கணங்கள் அவளை அழுத்தமாக நோக்கியவன், மெல்ல நகர்ந்து அறைக்குள் நுழைய வழிவிட, வேகமாக அறைக்குள் நுழைந்தாள் கயல்.
உள்ளே சென்றவள், அங்கிருந்த காலியான பாத்திரங்கள், தட்டுக்களைப் பார்த்து “அச்சோ, மன்னிச்சிடுங்கம்மா. இனி இந்த மாதிரி நடக்காது” பதறியபடி சொன்னவாறு அவைகளை எடுத்து வெளியேறப் போக, “கயல்…” என்றழைத்து அவளை நிறுத்திய சத்யா அம்மாள், “உனக்கு வீசிங் பிரச்சினை இருக்கா?” என்று கேட்டார் யோசனையோடு.
“அது அம்மா… சின்னவயசுலயிருந்து இருக்கு. ரொம்ப பதட்டமாகினா மூச்சு திணற ஆரம்பிச்சுரும்” அவரின் கேள்விக்கு பதிலளித்துவிட்டு அறையிலிருந்து வெளியேறவெனத் திரும்ப, அவளெதிரே அசையாது நின்றுக்கொண்டிருந்தான் அந்த நெடியவன். அதில் அதிர்ந்தவள், விழிகளை மட்டும் உயர்த்தி தன்னெதிரே நின்றுக்கொண்டிருந்தவனை நோக்க, அபிமன்யுவோ அவளையேதான் இமைசிமிட்டாது பார்த்திருந்தான்.
அவனுடைய பார்வை வீச்சை அவளாலேயே தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதுவும், உணர்ச்சிகளற்ற அந்த பார்வையில் என்ன இருக்கின்றதென்பது கூட அவளால் புரிந்துக்கொள்ள முடியவில்லை.
இங்கு சத்யா அம்மாளும் தன் மகனின் பார்வையை சந்தேகமாக நோக்கி, கயலின் பார்வையை உணர்ந்து “அது அபிமன்யு. என்னோட மூத்த மகன்” என்க, “ஹிஹிஹி… வணக்கம் ஐயா” என்ற கயல் அவனின் பார்வை வீச்சை தாங்க முடியாது பார்வையை தாழ்த்தியவாறு அப்படியே நிற்க, என்ன நினைத்தானோ, நகர்ந்து நின்றுக்கொண்டான்.
விட்டால் போதுமென்று அவளும் அங்கிருந்து ஓடியே விட, போகும் அவளையே பார்த்திருந்தவனின் உணர்ச்சியற்ற விழிகளில் இப்போது ஒரு வேதனை குடிகொண்டதை அவனையே கவனித்துக்கொண்டிருந்த சத்யா அம்மாளும் உணரத்தான் செய்தார்.
நேரமும் கடக்க, அன்றிரவு பெரியவருக்கான இரவுணவை எடுத்துக்கொண்டு ஹோலை தாண்டி மாடிக்கு சென்றுக்கொண்டிருந்த கயலை கவனித்த ரேவதி, “ஏய்…” என்று சொடக்கிட்டு நிறுத்த, அவளும் நின்று திரும்பி அவரை கேள்வியாக நோக்கினாள்.
அவரோ அங்கு உணவு மேசையில் சிந்தியிருந்த பதார்த்தங்களை கவனித்துவிட்டு, “அன்னி இப்போ தூங்கிட்டு இருக்காங்க. அவங்க சாப்பிடுறதுக்கு இன்னும் நேரம் இருக்கு. அதுக்குள்ள நீ என்ன பண்ணு, டைனிங் டேபிள்ள க்ளீன் பண்ணிரு” அதிகாரமாகச் சொல்ல, எதுவும் பேசாது சில கணங்கள் அவரை அழுத்தமாகப் பார்த்தவள், கையிலிருந்த தட்டை ஒரு ஓரத்தில் வைத்துவிட்டு மேசையை சுத்தம் செய்ய ஆரம்பித்தாள்.
ஆனால், அவளுடைய அழுத்தமான பார்வையில் ரேவதிதான் சற்று ஆடிப் போய்விட்டார். ‘இந்த பார்வை…’ இதற்குமுன் உணர்ந்திருக்கும் கயலின் பார்வையை உள்ளுக்குள் நினைத்து அதிர்ந்தவாறு ரேவதி அப்படியே நிற்க, “ஏன் அத்தை, அந்த பொண்ணு அம்மாவ கவனிக்கத்தானே வந்திருக்கா. எதுக்கு இந்த வேலையெல்லாம் பார்க்கணும்?” அடக்கப்பட்ட கோபத்தோடு கேட்டவாறு மாடியிலிருந்து இறங்கி வந்தான் யுகன்.
அவனின் குரலில் நடப்புக்கு வந்து திரும்பியவர், யுகனின் வார்த்தைகளில் அவனை சந்தேகமாக நோக்க, அவனோ அதையெல்லாம் கண்டுக்கொள்ளாது “ஏய் கயல், நீ அம்மாக்கு சாப்பாடு எடுத்துட்டு போ! இதையெல்லாம் கவனிச்சிக்க ஆளுங்க இருக்காங்க” என்றான் விழிகளில் மின்னலோடு.
கயலும் ரேவதியை ஒரு பார்வை பார்த்துவிட்டு பெரியவருக்கான உணவுத்தட்டை எடுத்தவள், “சரிங்க ஐயா” என்றுவிட்டு நகர போக, “ஐயாவா! என்னை பார்த்தா அவ்வளவு வயசானவன் மாதிரியா தெரியுது? யுகன்னு என் பெயர் சொல்லியே கூப்பிடு கயல்” அப்பட்டமாக அவன் வழிய, ‘ஙே’ என அவனை மேலிருந்து கீழ் அவள் பார்த்தாள் என்றால், ரேவதிக்கு எங்கேயாவது முட்டிக்கொள்ளலாம் போலிருந்தது.
“அந்தந்த ஆளுங்கள அந்தந்த இடத்துல வைக்கணும். இல்லைன்னா, நமக்கு மரியாதை இல்லாம போயிடும்” ரேவதி கடுப்பாகச் சொல்ல, “அழகான பொண்ணு என்னை ஐயான்னு கூப்பிட்டு அசிங்கப்படுத்துறதை விட அது ஒன்னும் மோசம் கிடையாது” பதிலுக்குச் சொன்னவன், கயலை குறும்புச் சிரிப்போடு நோக்கினான்.
ஆனால், அவளோ ரேவதியின் முறைப்பையே திரும்பித் திரும்பிப் பார்த்தவாறு முன்னே நடக்க, அடுத்தகணம் எதிரே வந்து நின்றவனின் மீதே மோதி நின்றாள். கையிலிருந்த சூடான உணவு மொத்தமும் அவனுடைய சட்டையில் கொட்டிவிட, அவளுக்கு தூக்கி வாரிப்போட்டது. கூடவே, அங்கு நின்றிருந்த இருவருக்கும்.
“அய்யோ கடவுளே! என்னை மன்னிச்சிடுங்க” பதறியபடி சொன்னவாறு சட்டையில் ஒட்டியிருந்த கரையை பதட்டத்தில் கையாலேயே தட்டிவிட்டாள் கயல். மீண்டும் அதே உணர்வு! அந்த ஸ்பரிசம் அவள் இதற்கு முன் உணர்ந்திருக்கின்றாள். உள்ளுக்குள் சிந்தனைகள், குழப்பங்கள் ஓடினாலும் கை தன் வேலையை செவ்வனெச் செய்தன.
ஆனால், அத்தனை சூடான உணவு உடலில் பட்டும் எதிரே நின்றிருந்தவனிடத்தில் எந்த அசைவும் இல்லை. அதை உணர்ந்தவள், வேகமாக நிமிர்ந்துப் பார்க்க, அங்கு அபிமன்யுவின் விழிகள் தீப்பிழம்பாய் கொதித்துக்கொண்டிருந்தன.
அதைப் பார்த்ததுமே அவளுக்கு முதுகுத்தண்டு சில்லிட, அவனை விட்டு வேகமாக பின்னால் நகர்ந்தவள், “என்னை மன்னிச்சிடுங்க” பயந்தபடி சொன்னவாறு கீழே விழுந்திருந்த உணவை சுத்தம் செய்யப் போனாள்.
ஆனால், அவளால் நகர முடியவில்லை. காரணம், அவளின் முழங்கையை இறுகப் பிடித்து அவள் முகத்தை தன் முகத்துக்கு நேராக அபிமன்யு கொண்டு வந்திருக்க, அவனின் சிவந்த விழிகளில் தெரியும் அனலை பார்த்தவளுக்கு பயத்தில் வியர்க்க ஆரம்பித்துவிட்டது.