ரகசியம் 08 💚

eiIJTS581443-0464bae3

ரகசியம் 08 💚

தன்னவனுடன் ஊரை விட்டுச சென்ற தருணத்தை நினைத்துப் பார்த்த கயலுக்கு தன் முட்டாள்தனத்தை நினைத்து அத்தனை வெறுப்பு!

எத்தனை பெரிய தவறென்று அவனுடன் வாழ்ந்த வாழ்க்கையில்தான் புரிந்துக்கொண்டாள். ஆனால், அவளுக்குள் ஒரு சந்தேகம்!

“கயல்விழி வீரஜ்” என்ற அபிமன்யுவின் வார்த்தைகள் அவள் காதில் ஒலித்துக்கொண்டே இருந்தன. ‘இவருக்கு எப்படி வீர தெரியும்? எனக்கும் வீருக்கும் இடையில இருக்குற உறவு அவருக்கு நல்லாவே தெரிஞ்சிருக்கு. அது எப்படி?’ கேள்விகள் மட்டுமே உதித்தன. விடைகள்தான் தெரியவில்லை.

எழுந்து ஜன்னலருகே வந்து நின்ற கயல், தோட்டத்திலிருந்த ஊஞ்சலை நோக்க, அங்கு ஊஞ்சலில் தலையைத் தாங்கி அமர்ந்திருந்த அபிமன்யுதான் விழிகளில் சிக்கினான்.

‘என்னோட கேள்விகளுக்கான பதில் இவர்கிட்டதான் இருக்கு. கண்டிப்பா தெரிஞ்சிக்கிட்டே ஆகணும்’ உள்ளுக்குள் உறுதியாக நினைத்துக்கொண்டவளின் விழிகளில் இப்போது அதே ஊஞ்சலில் குறும்புச்சிரிப்போடு வீரஜ் அமர்ந்திருப்பது போல் விம்பம் தெரிய, விழிகளிலிருந்து விழிநீர் கசிந்தன.

அடுத்தநாள், வீட்டில் ஏதோ விஷேட பூஜை. சத்யா அம்மாளை காலையிலேயே மங்களகரமாக அலங்கரித்து ஹாலில் அமர வைத்தாயிற்று. வேலையாட்கள் உட்பட வீட்டில் இருப்பவர்களும் அரக்கபறக்க வேலைப் பார்க்க, தனதறையில் வேட்டியோடு மல்லுக் கட்டிக்கொண்டிருந்தான் யுகன்.

“ஓ மை கடவுளே! ஜீன்ஸ் போட்டு பூஜையில கலந்துக்கிட்டா கடவுள் கோச்சிக்கிட்டு போயிடுவாரா என்ன? இடுப்புல நிக்காத வேட்டிய கட்டு கட்டுன்னா எப்படி கட்டுறது? இடியட்ஸ்!” வாய்விட்டே கத்திக்கொண்டு எப்படியோ யூடியூப் காணொளியைப் பார்த்து கட்டி முடித்தவன், ‘அப்பாடா!’ என்று பெருமூச்செடுத்து முடிக்கவில்லை, சரியாக அவனுக்கு ஒரு அழைப்பு!

திரையை புருவத்தைச் சுருக்கிப் பார்த்தவாறு அழைப்பை காதில் வைத்த யுகன், எதிரிலிருப்பவர்கள் பேசுவதற்கு முன்னரே “லுக், நான்தான் முன்னாடியே சொன்னேன்ல, கயல்கிட்ட என்னால இப்போ சொல்ல முடியாது. அதுக்கான நேரம் வரட்டும். அப்போ சொல்றேன். என்ட், நீங்க இப்படி அடிக்கடி கால் பண்ணாதீங்க. நல்லா இல்லை” இடையிட்டு படபடவென்று பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.

அவனுக்குள்ளேயும் சில ரகசியங்கள் ஒளிந்திருக்கின்றன. ‘கயலோட மனசுல என்ன இருக்குதுன்னு தெரியாம எப்படி சொல்றது?’ நெற்றியை தடவியவாறு யோசித்துக்கொண்டே அறையிலிருந்து வெளியேறியவன், சடாரென வேட்டி தடுக்கி எதிரில் வந்துக்கொண்டிருந்தவளின் மேலேயே மோதிவிட்டான்.

இருவருமே நிலத்தில் விழுந்துவிட, ஆண்மகனின் பாரம் தாங்காது “ஆங் அம்மா…” என கயல் வலியில் கத்தியதும், பதறிய யுகன், “சோரி கயல், சோரி… சோரி…” பதறியபடிச் சொன்னவாறு வேகமாக எழுந்து நின்று அவளை எழுப்பிவிட முயற்சிக்க, அவனுடைய உதவியை மறுத்து தானாகவே எழுந்து நின்றாள் அவள்.

வேகமாக கலைந்திருந்த சேலையை சரிசெய்தவாறு விழிகளை மட்டும் உயர்த்தி அவள் அவனை முறைக்க, அப்போதுதான் கயலை மேலிருந்து கீழாக பார்த்தான் யுகன். விழிகள் மின்ன, “வாவ்!” என்றவன், ரசனையாக கயலை நோக்க, அவன் பார்வையில் மேலும் கடுப்பானாள் அவள்.

ஆனால், யுகனோ அவளின் முறைப்பையெல்லாம் கொஞ்சமும் கண்டுக்கொள்ளவில்லை. “எல்லாம் ஓகே. பட், பூவும் பொட்டும் மட்டும் மிஸ்ஸிங். அதுவும் சேர்ந்தா ஏன்ஜல்தான்” அவன் சொல்ல, அந்த வார்த்தைகளில் விழிகள் விரிந்து சட்டென்று கலங்க, ‘பூவுக்கும் பொட்டுக்கும் நான் தகுதியானவ கிடையாது’ அவள் மனம் வேதனையோடு நினைத்துக்கொண்டது.

ஆனால், இங்கு யுகனோ சொல்லிவிட்டு தீவிர சிந்தனையில் இருந்தான். மனம் ஒன்று சொல்ல, தொண்டை வரை வந்த வார்த்தைகளை மூளை மறுத்ததில் நிறுத்தியவன், சொல்ல வந்ததை சொல்லாது யோசனையோடு கயலைப் பார்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்திருந்தான்.

ஆனால், இங்கு கயலுக்குதான் குழப்பம் சூடிக்கொண்டது.

யுகன் ஏதோ சொல்ல வந்ததும் பின் சொல்லாது சென்றதும் அவளால் உணர முடிந்தது. போகும் அவனை புருவத்தைச் சுருக்கிப் பார்த்தவள், முதுகுத்தண்டில் உணர்ந்த துளைத்தெடுக்கும் பார்வையில் அத்திசை நோக்கித் திரும்பினாள். அங்கு, கதவுநிலையில் மார்புக்கு குறுக்கே கைகளை கட்டி கயலையே முறைத்தவாறு நின்றிருந்தான் அபிமன்யு.

அவனைப் பார்த்தவளுக்கு தலைவலியே வந்துவிட்டது. ‘இவர் என்ன எப்போபாரு நம்மள முறைச்சிக்கிட்டே இருக்காரு?’ உள்ளுக்குள் சலிப்பாக நினைத்தவளுக்கு அவனிடம் தெரிந்துக்கொள்ள வேண்டிய தனது கேள்விகள் ஞாபகத்திற்கு வர, அபிமன்யுவை நோக்கி ஒரு அடி வைத்தாள்.

ஆனால், அதற்குள், “ஏய்…” என்று தடுத்தது ரேவதியின் குரல். அவளெதிரே வந்து நின்றவர், “உனக்கு கடவுள் நம்பிக்கை இல்லைதான். அதுக்காக உதவி பண்றது ஒன்னும் தப்பு கிடையாது. போ, போய் பூஜைக்கு தேவையான பொருட்கள ஆளுங்களோட எடுத்து வை!” அதிகாரமாகச் சொல்ல, எப்போதும்போல் அவரை வெறுமை நிறைந்த ஒரு பார்வைப் பார்த்த கயல்,  அபிமன்யுவை திரும்பி ஒரு பார்வைப் பார்த்தாள்.

அங்கு அபிமன்யுவின் புருவங்கள் இப்போது யோசனையில் முடிச்சிட்டிருந்தன. ‘கடவுள் நம்பிக்கை இல்லையா?’ அவனுக்குள் கயலை நினைத்து அந்த கேள்வி!

கயலும் அவள் பாட்டிற்கு வேலையை கவனிக்கச் சென்றுவிட, அடுத்த சில நிமிடங்களில் பூஜையும் சில மந்திரங்களோடு கடவுளின் முன் ஆரம்பிக்கப்பட்டது. விழிகளை மூடி  முழு பக்தியோடு வீட்டிலிருப்பவர்கள் பூஜையில் அமர்ந்திருக்க, ஒரு ஓரமாக உணர்ச்சிகளற்ற முகத்தோடு நின்றிருந்தாள் கயல். அதேநேரம், சத்யாவின் பக்கத்தில் கயலையே பார்த்தவாறு அமர்ந்திருந்தான் அபிமன்யு.

அபியின் காதருகில் குனிந்த யுகன், கயலை பார்த்துக்கொண்டே “ப்ரோ, கயல் ரொம்ப க்யூட்ல, எந்த அலங்காரமும் இல்லாமலயே ஏன்ஜல் மாதிரி இருக்கா” ரசனைக்குரலில் சொல்ல, அபிமன்யுவோ ஒற்றை புருவத்தை தூக்கிய தோரணையில் அவனை ஒரு பார்வைப் பார்த்தான். அப்போது மட்டும் தன் அண்ணனின் முகத்தை யுகன் பார்த்திருந்தால், கயலை பற்றி பேசுவது என்ன, நினைக்கக் கூட செய்திருக்க மாட்டான். அத்தனை உக்கிரம் அவன் முகத்தில்.

இப்படியே பூஜையில் சிலநிமிடங்கள் கழிய, அதற்குமேல் கயல் அங்கு நிற்கவில்லை. அங்கிருந்து நகர்ந்து பால்கனியில் வந்து அவள் நின்றுக்கொள்ள, “கயலு” என்ற குரல். ஆனால், அது அபிமன்யுவுடையது.

சட்டென திரும்பிப் பார்த்தவள், “தேனு என்னை இப்படித்தான் கூப்பிடுவா” கலங்கிய விழிகளோடுச் சொல்ல, பாக்கெட்டில் கைவிட்டு அவள் பின்னே நின்றிருந்த அபிமன்யுவின் இதழ்கள் ஏளனமாக வளைந்தன. அவள் பக்கத்தில் நின்று தோட்டத்திலிருந்த பூக்களை வெறித்தவன், “எல்லாரையும் ரொம்ப மிஸ் பண்றியோ?” உணர்ச்சியற்ற குரலில் கேட்க, விரக்தியாக புன்னகைத்தன அவளிதழ்கள்.

“அவங்கள பார்க்கணும்னு ஆசைப்பட்டா மட்டும் திரும்பி வந்துடுவாங்களா என்ன?” என்ற கயலின் வார்த்தைகள், “என் அப்பா… என்னோட வீர்” என்ற போது அத்தனை வலியோடு வெளிவந்தன.

“அந்த கடவுள் என்னை ஏமாத்திட்டாரு. பத்தொன்பது வயசுல வாழ்க்கையையே தொலைச்சிட்டு நின்னேன். என் நிலைமை என் எதிரிக்கு கூட வரக் கூடாது” கயல் சொல்ல, இப்போது பக்கவாட்டாகத் திரும்பி அவளை கேலியாக நோக்கினான் அபி.

“ஆஹான்! நாம முட்டாளா நடந்துக்குறதுக்கு கடவுள் பழியா? இதுவும் நல்லாதான் இருக்கு” அவனுடைய வார்த்தைகளில் தெரிந்த கேலியில் அவனை குற்றவுணர்ச்சியோடு கயல் நோக்க, “உன் தப்ப உன்னால ஒத்துக்க முடியல. அதனால கண்ணுக்கு தெரியாத கடவுள்மேல பாவத்தை சுமத்திட்ட. வீராவோட போனது நீ. உன் அப்பா இறந்தது உன்னால. அதுக்கப்றம் நடந்த மொத்தமும் உன்னாலதான். அப்றம் வீரஜ்…” என்றுவிட்டு சற்று நிறுத்தி, “எல்லாத்தையும் நீ இழக்க காரணம் நீதான்” விழிகள் சிவக்க உரக்கச் சொன்னான் அவன்.

“போதும் நிறுத்துங்க!” அவனுடைய வார்த்தைகளில் காதுகளைப் பொத்திக்கொண்டவள், “நீங்க யாரு?” விழிகளில் தீர்க்கத்தோடுக் கேட்க, இதழை ஏளனமாக வளைத்துச் சிரித்தவனிடத்தில் பதில்தான் இல்லை.

அவன் பாட்டிற்கு அங்கிருந்து நகர, “உங்களுக்கும் வீருக்கும் என்ன சம்மந்தம்? நடந்தது எல்லாமே தெரிஞ்சிருக்கு. அது… அது எப்படி சாத்தியம்? இப்போ சொல்ல போறீங்களா, இல்லையா?” கயல் ஒருகட்டத்திற்குமேல் போகும் அவனைப் பார்த்து கத்த, “முடியாது” திரும்பிக் கூட பார்க்காது அழுத்தமாகச் சொல்லிவிட்டு அங்கிருந்து மறைந்திருந்தான் அபிமன்யு.

அங்கேயே மண்டியிட்டு அமர்ந்தவளுக்கு வாழ்க்கையே தலைகீழாக சுற்றுவது போலிருந்தது. ‘நடந்ததுக்கு நான் காரணம் இல்லை. நான் காரணம் இல்லை’ அதையே மீண்டும் மீண்டும் தனக்குத்தானே சொல்லிக்கொண்டது அவள் மனம்.

சிலகணங்கள் முகத்தை மூடி அழுதுக்கொண்டிருந்தவளுக்கு விரலில் தட்டுப்பட்டது அந்த வெள்ளி மோதிரம். மங்கலான பார்வையோடு அதை அவள் நோக்க, கயலின் நினைவுகளோ தன்னவனுடனான திருமணத்தை நோக்கிச் சென்றன.

அந்த ஒருமாடிக்கொண்ட வீட்டுவாசலில் வீரஜ்ஜுடன் கயலும் பதட்டத்தோடு நின்றிருக்க, எதிரே இருவரையும் முறைத்தவாறு நின்றிருந்தனர் மனோஜன் மற்றும் ருபிதா. வீரஜை பெற்றெடுத்த பெற்றோர்குலம்.

கூடவே அவனுடைய தமக்கை ஏன்ஜலும் கயலை மேலிருந்து கீழாக பார்வையாலேயே அளசியவாறு நின்றிருக்க, புது முகங்களில் காணும் முறைப்பையும் அலட்சியப் பார்வையையும் பார்த்து கயல்தான் பயத்தில் வீரஜ்ஜின் முழங்கையைப் பற்றிக்கொண்டாள்.

“என்ன இது வீரா? கொஞ்சமாச்சும் அறிவிருக்கா, என்ன காரியத்தை பண்ணிட்டு வந்திருக்க?” உள்ளே கூட அழைக்காது ருபிதா கத்த, பதிலுக்கு தானும் பேசவென, “ஆமா ஆமா, எவளோ ஒருத்திய உன் பாட்டுக்கு கூட்டிட்டு வந்து நிக்குற, நம்ம குடும்பத்துக்குன்னு ஒரு மரியாதை இருக்கு” என்றார் மனோஜன்.

வீரஜோ இருவரையும் மாறி மாறிப் பார்த்துவிட்டு, “நீ ஏன் அமைதியா நிக்குற, உன் பங்குக்கு நீயும் சொல்லலாமே!” அங்கு ஓரமாக கயலை முறைத்துக்கொண்டு நின்றிருந்த ஏன்ஜலைப் பார்த்துச் சொல்ல, அவளோ, “காரணமில்லாம நீ இப்படியெல்லாம் பண்ண மாட்டியே, பார்ட்டி என்ன பெரிய இடமோ?” ஏளனமாக இதழை வளைத்துக் கேட்டாள்.

அதில் அதிர்ந்து விழித்து, “அக்கா…” என்று பல்லைக் கடித்துக்கொண்டு ஓடி வந்தவன், “நாம கொஞ்சம் பேச வேண்டியிருக்கு உள்ள வர்றீங்களா?” என்று கேட்டு ஒரு அடி முன்னே வைத்து பின், “கயல், டூ மினிட்ஸ். புரிய வைச்சிட்டு கூட்டிட்டு வர்றேன்” என்றுவிட்டு வேகமாக மூவரையும் ஒரு அறைக்குள் இழுத்துச் சென்றான்.

கயலின் நிலைதான் பரிதாபம். உள்ளே வரவும் தயக்கப்பட்டு மலங்க மலங்க விழித்துக்கொண்டு வாசலிலேயே நின்றிருந்தாள்.

அங்கு அறையில், “என்னடா நினைச்சிக்கிட்டு இருக்க உன் மனசுல? உன் விஷயத்துல பெரிய கனவு கண்டு வச்சிருந்தேன். நல்ல பணக்கார வீட்டுப்பொண்ண வலைச்சிப்போட்டு உனக்கு கல்யாணத்தை பண்ணி நாம எல்லாரும் செட்டுலாகலாம்னு ப்ளான் போட்டா எல்லாத்தையும் சொதப்பிட்டியேடா, எல்லாமே நாசமா போச்சு, ஏசப்பா!” ருபிதா சாவு விழுந்தது போல் நெஞ்சில் அடித்துக்கொண்டு புலம்ப, “சிட்டிப்பொண்ணா?” தன் சந்தேகத்தைக் கேட்டாள் ஏன்ஜல்.

தன் அம்மாவின் புலம்பலில் இடுப்பில் கைக்குற்றி இருபக்கமும் சலிப்பாக தலையாட்டிய வீரஜ், “கிராமத்துப்பொண்ணு” என்று தமக்கையின் கேள்விக்கு பதில் சொல்ல, “எதே?” அதிர்ந்து கேட்ட மனோஜன், “அம்புட்டுதான் ருபி, இவன் நம்மள பத்தி கொஞ்சமாச்சும் யோசிச்சிருந்தா இப்படி ஒரு கிராமத்து பொண்ண போய் கல்யாணம் பண்ணிருப்பானா? நாம கடைசி வரைக்கும் மளிகைச் சாமானுங்கள வித்துதான் பொழப்ப நடத்தணும் போல!” என்று மனஆதங்கத்தைக் கொட்ட, வீரஜிற்கு அய்யோ என்றாகிவிட்டது.

“ஓ ஷீட்! என்னை கொஞ்சம் பேச விடுறீங்களா?” உரக்கக் கத்தியவன், “அவ கிராமத்துப் பொண்ணுதான். ஆனா, ஆளு பெரிய இடம். அவ அப்பா பரம்பரை பணக்காரராம். அதுக்கு மேல நாம என்ன சொன்னாலும் இல்லை இல்லை நான் என்ன சொன்னாலும் அப்படியே நம்புற ஒரே ஆளு. பணமும் முட்டாள்தனமும் சேர்ந்து கலந்த கலவை மாதாஜீ அவ. எப்படி இப்படி ஒரு பொக்கிஷத்தை விட்டுட்டு வர சொல்றீங்க?” விஷம சிரிப்போடுக் கேட்க, அதிர்ந்து விழித்தனர் மூவரும்.

“நிஜமாவாடா சொல்ற?” ஏன்ஜல் வாயைப் பிளந்துக்கொண்டுக் கேட்க, “அட ஆமாங்குறேன். ஆனா என்ன, அவ அப்பாதான் கொஞ்சம் டெர்ரர் பீசு. அதை சமாளிக்கலாம்னு நம்பிக்கை தந்ததே அவதான்னா பார்த்துக்கோங்க. பெத்த பொண்ணு அப்படியெல்லாம் விட்டுற மாட்டாரு அந்த பெரிய மனுஷன். ஏதாச்சும்னா அதை நான் பார்த்துக்குறேன்” வீரஜ் சொல்ல, அவர்களோ சிரிப்போடு ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.

“அப்போ சரிடா, நான் கூட தினமும் உனக்கொரு நல்ல வாழ்க்கை அமைஞ்சிராதான்னு கர்த்தர்கிட்ட வேண்டிக்கிட்டு இருப்பேன். நீயும் எதையும் செஞ்சபாடில்லை. இப்போதான் மனசு நிறைஞ்சிருக்கு. பிடிச்சாலும் பெரிய புளியங்கொம்பாதான் பிடிச்சிருக்க” என்ற மனோஜன், அறைக் கதவைத் திறந்து வெளியேறச் சென்றவனிடம், “ஆனாலும் வீரா, கிராமத்தாளு. பொண்ண தூக்கிட்டேன்னு அருவாளோட வந்துட்டாருன்னா, உன்னால எங்க உயிருக்கு ஏதும்…” சந்தேகத்தோடு இழுக்க, அவரை நிதானமாகத் திரும்பி ஒரு பார்வை பார்த்தான் வீரஜ்.

“அதான் பார்த்துக்குறேன்னு சொல்றேன்ல” அழுத்தமாகச் சொல்லிவிட்டு அவன் வெளியேற, அவனுடைய பார்வையிலும் அவன் வார்த்தைகளிலிருந்த அழுத்தத்திலும் அதிர்ந்து விழித்தனர் மனோஜனும் ருபிதாவும். வீரஜின் பார்வையில் அந்த ஒருவரின் முகம் இருவரின் மனக்கண் முன் வந்து போக, ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டவர்களுக்கு, ‘ஒருவேள இருக்குமோ?’ என்ற சந்தேகம் ஆயிரத்து ஓராவது முறை மனதில் தோன்றி மறைந்தது.

இங்கு அறையிலிருந்து வரவழைக்கப்பட்ட புன்னகையோடு வீரஜ் கயலுக்கருகில் வர, பொய்யான புன்னகையை முகத்தில் தாங்கி வேகமாக வந்த ருபிதா, வீரஜ்ஜை தள்ளிக்கொண்டு கயலுக்கருகில் ஓடிச் சென்று “என்னம்மா நீ, வாசல்லையே நின்னுக்கிட்டு இருக்க. உள்ள வா! முன்னாடி பேசுனதெல்லாம் மனசுல வச்சிக்காத, இப்போ வீரா எல்லாத்தையும் புரிய வச்சிட்டான். இனி நீ எங்க வீட்டுப்பொண்ணு. வா வா…” பலத்த வரவேற்போடு அழைக்க, கயலுக்கோ அத்தனை ஆச்சரியம்.

“அப்போ எங்களை மன்னிச்சிட்டீங்களா அத்தை? அப்பாவுக்கு பயந்துதான் இப்படி ஒரு காரியத்தை பண்ண வேண்டியதா போச்சு. அவருக்கு மட்டும் தெரிஞ்சிருந்தா ஊருலயே எங்க இரண்டு பேரையும் புதைச்சிருப்பாங்க. அப்பாவுக்கு ஆள்பலம் ஜாஸ்தி, ஆனா நீங்க மன்னிச்சிட்டீங்க. ரொம்ப நன்றி அத்தை” கயல் விழிகளை உருட்டி வெகுளியாகச் சொல்ல, வீரஜ்ஜோடு சேர்த்து மற்ற மூவருமே எச்சிலை விழுங்கிக்கொண்டனர் பயத்தில்.

“ஹிஹிஹி… அதெல்லாம் எதுக்கு பாப்பா? நீ உள்ள வா, கொஞ்சம் ரெஸ்ட் எடு, கூடிய சீக்கிரம் அங்கிளே நம்மள கூப்பிட்டு விடுவாரு பாரு” வீரஜ் அசடுவழிந்தவாறு கயலின் கரத்தைப் பற்றி உள்ளே அழைக்க, ஆனால் அவளிடத்தில் ஒரு தயக்கம்.

கயலின் செய்கையில் நால்வருக்கும் எதுவும் புரியவில்லை. நால்வருமே கயலை புரியாது நோக்க, “அது… கல்யாணமாகாம எந்த உறவுமில்லாம இங்க நான் இருக்குறது ரொம்ப தப்பு. அதனால…” அவள் தயக்கமாக இழுக்க, “அதனால?” எரிச்சலாகக் கேட்டான் வீரஜ்.

“அதனால சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கிட்டா உரிமையோட இந்த வீட்டுல தங்கலாம்” கயல் சொல்ல, ‘எல்லா விஷயத்துலேயும் முட்டாளா இருக்குறது, இதுல மட்டும் தெளிவா இருக்க வேண்டியது’ உள்ளுக்குள் கடுப்பாக நினைத்துக்கொண்டவன், எங்கு திருமணச் செலவு வைத்துவிடுவானோ என்ற பயத்தில் தங்களுக்கும் இவனுக்கும் எந்த சம்மந்தமுமில்லை என்பது போல் நின்றிருந்த தன் குடும்பத்தாரை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு “கல்யாணம்தானே, அதுக்கென்ன? நாளைக்கு மறுநாளே பண்ணிரலாம்” என்றான் இழித்துக்கொண்டு.

இரண்டு மாதங்களுக்கு முன்னே திருமண வேலைகளை ஆரம்பித்து ஒருமாதத்துக்கு முன்னரே நிச்சயதார்த்தத்தை பெரிய கொண்டாட்டத்தோடு முடித்து, ஒரு வாரத்துக்கு முன்னே மொத்த ஊரும் ஒரே வீட்டில் குழுமி அத்தனை சீரும் சிறப்புமாக நடக்கும் திருமணத்தை பார்த்திருந்த கயலுக்கு,  வீரஜ் நாளை மறுநாள் என்றதும் அதிர்ச்சியுடன் கூடிய சந்தோஷம், ஆர்வம், படபடப்பு எ
எல்லாம்.

ஆனால், அவளுடைய மொத்த சந்தோஷமும் திருமணமென்ற பெயரில் வீரஜ் சாதாரணமாக தன் குடும்பத்தோடு ரிஜிஸ்டர் அலுவலகத்தின் முன் நிற்க வைத்ததும் வடிந்தே போயிற்று. நல்ல நேரம் பார்க்காது அக்னி சாட்சியாக மங்களநாணை பூட்டி குங்குமம் வைத்து அர்ச்சதைகளுக்கு மத்தியில் கோயிலில் தன் திருமணத்தை எதிர்ப்பார்த்த கயலுக்கு அத்தனை ஏமாற்றம்.

முகம் சோர்ந்துப்போய் அவள் அமர்ந்திருக்க, தன் கையிலிருந்த வெள்ளி மோதிரங்களை உதட்டைப் பிதுக்கி பார்த்தவாறு நின்றிருந்தான் வீரஜ். ‘அநியாயமா இரண்டு மோதிரத்துக்கு இம்புட்டு செலவாகிட்டே, சரி விடு வீரா! அதான் பொக்கிஷமே கிடைக்குதே’ தனக்குத்தானே மனதை சமாதானப்படுத்திக்கொண்டு எந்த அலங்காரமுமில்லாமல் சேலையில் காதுகளில் தங்கக்கம்மலோடு மட்டும் நின்றிருந்த தன்னவளை பார்த்தவனுக்கு அத்தனை எரிச்சல்.

“உன் நகையெல்லாம் எங்க கயல்? ஊருல இருக்கும் போது தங்கத்துல  பெரிய டொலர் கூட போட்டிருந்தியே, தொலைச்சிட்டியா என்ன?” காலையில் எந்த ஆபரணங்களுமில்லாமல் நின்றிருந்தவளிடம் அவன் கேட்ட கேள்விக்கு, “அப்பாவை விட்டு வர்றேன். அப்பா போட்ட நகை மட்டும் எதுக்குன்னு அதையெல்லாம் பாட்டி படத்துக்கு முன்னாடி கழட்டி வைச்சிட்டு வந்துட்டேங்க”  என்ற அவளின் பதில் இப்போதும் அவனின் ஞாபகத்திற்கு வந்து எரிச்சலை மூட்டியது.

ஆனால், புதுமணத் தம்பதிகள் அலங்காரத்தோடு இருக்கிறாளோ, இல்லையோ? புது ஆடை ஆபரணங்கள் என மின்னிக்கொண்டிருந்தனர் மனோஜன், ருபிதா மற்றும் ஏன்ஜல்.

அடுத்த சிலநிமிடங்களில் ரிஜிஸ்டர் அதிகாரியின் முன் நின்றிருந்தனர் வீரஜும் கயலும். வீரஜ் ஒரு நோக்கத்தோடு கையெழுத்திட்டான் என்றால், தன் கனவு திருமணத்தை எண்ணி மனம் சோர்ந்துப்போய் இருந்தாலும் கையெழுத்திடச் சொன்னதும் முழுக்காதலோடு கையெழுத்திட்டாள் கயல்.

அடுத்து இருவருமே மாலை மாற்றிக்கொண்டு, வீரஜின் கலாச்சார முறைப்படி  மோதிரம் மாற்றிக்கொள்ள, கலங்கிய விழிகளோடு தன் கணவனை ஏறிட்டாள் கயல். ‘கண்ணுல வோட்டர் டேன்க்கையே வச்சிருப்பா போல!’ உள்ளுக்குள் ஆச்சரியமாக நினைத்த வண்ணம், “என்னாச்சு பாப்பா?” வீரஜ் புரியாதுக் கேட்க, தன் சேலையினோரத்தில் சொருகியிருந்த பையிலிருந்த குங்குமத்தை நீட்டினாள் அவள்.

“கல்யாணம் உங்க முறைப்படி நடந்துருச்சு. உங்க கையால தாலி கட்டிக்கணும்னு ரொம்ப ஆசை, ஆனா அது நடக்கல. இந்த குங்குமத்தையாச்சும் வைச்சு விடுங்க” கயல் தேய்ந்த குரலில் சொல்ல, ஏன்ஜலோ விழிகளை சலிப்பாக உருட்டினாள்.

ஆனால், வீரஜ்ஜின் மனதை அவளின் விழிநீர் சற்று அசைத்துப் பார்த்தது. என்ன நினைத்தானோ, குங்குமத்தையெடுத்து அவள் நெற்றி வகுட்டில் அவன் வைத்துவிட, விழிகளை விழிநீரோடு மூடிக்கொண்டாள் கயல்விழி.

Leave a Reply

error: Content is protected !!