Kalangalil aval vasantham 28(2)

“ஆஃபீஸ்ல அட்வான்ஸ் தான போடுவ?” அவளது கோபம் அவனை சற்றும் பாதிக்கவில்லை.

“இல்ல. வேண்டாம். வாங்கின லோனை எல்லாம் ரீபே பண்ணியாகணும். இன்னமும் வாங்கிட்டே இருந்தா நான் எப்படி ரீபே பண்றது?”

“அதெல்லாம் ரீபே பண்ணிக்கலாம். இப்போதைக்கு ஆஃபீஸ்ல அட்வான்ஸ் போட்டு வாங்கிக்க…” என்று கூற, உறுதியாக மறுத்தாள்.

“வேண்டாம்… நான் பார்த்துக்கறேன்…”

“அதை அப்புறமா பார்த்துக்க. இப்ப நான் சொல்றதை கேளு…”

“முடியாது…”

“ஏன்?”

“இதனால தான் உன் கிட்ட சொல்ல வேண்டாம்ன்னு நினைச்சேன். என்னோட வழில என்னை விடு ஷான்…” என்றவளை ஆழமாகப் பார்த்தவன், மாதேஸ்வரனை பார்த்தான்.

“சுயமரியாதை சிங்கம். கொஞ்சம் கூட அசைஞ்சு குடுக்காதுப்பா. கொஞ்ச நஞ்ச பிடிவாதமில்லை. முரட்டு பிடிவாதம்…” என்று அவன் கூறுகையில் மாதேஸ்வரன் ப்ரீத்தியை மட்டும் தான் பார்த்துக் கொண்டிருந்தார்.

எப்படி இப்படி ஸ்ரீமதியை பிரதி எடுத்தார் போல இருக்கிறாளே என்ற ஆச்சரியம் தான் அவருக்கு இப்போது! ஒவ்வொரு வார்த்தையிலும் கூட ஸ்ரீமதியை ப்ரீத்தி நினைவுப்படுத்துவதை அவர் உணர்ந்தார்! ஸ்ரீமதியும் அவரது சுயமரியாதையை கொஞ்சம் கூட விட்டுத் தர மாட்டார். முடியாது என்றால் முடியாதுதான். அதற்கு பின் அவரிடமும் வார்த்தைகளில்லை. அதன் பின் எவ்வளவு குட்டிக்கரணம் போட்டாலும் அவரை மாற்ற முடியாது. இப்போது தன்னுடைய நிலையிலிருக்கும் தன் மகனை நினைக்கும் போதுதான் பாவமாக இருந்தது. ஆனால் இவனை போன்றவனுக்கு ப்ரீத்தி தான் சரி என்று முற்றுமாக முடிவுக்கே வந்துவிட்டார்!

“தப்பென்ன இருக்கு ஷான். ப்ரீத்திக்கு சரின்னு பட்டதை செய்யுது…” என்று அவர் கூறினார்.

அவளது செல்பேசியில் வாட்ஸ்அப் மெசேஜ் ஒலி எழுப்ப, ப்ரீத்தி எடுத்துப் பார்த்தாள்.

காயத்ரியின் எண்ணிலிருந்து வந்திருந்தது.

திறந்து பார்த்தாள். வந்த வரனின் புகைப்படத்தை அனுப்பி விட்டிருந்தாள். பார்க்க நன்றாகத்தான் இருந்தான்.

ஓரக்கண்ணால் படத்தை பார்த்துவிட்டவன், அவளிடமிருந்து செல்பேசியை பிடுங்கினான்.

“பாஸ்…”

“இது யார் தலைவரே?” படத்தைப் பார்த்தவன் முந்தைய கோபத்தை விடுத்து சிரித்தபடி கேட்க,

“ம்ம்ம்… அது உங்களுக்கு எதுக்கு?” என்று செல்பேசியை பிடுங்க பார்த்தாள். ஆனால் அவனா தருவான்?

“ஒழுங்கா சொல்றியா இல்லையா?”

அவனைப் பார்த்து முறைத்தவள், மாதேஸ்வரனையும் ஒருமுறை பார்த்துவிட்டு, “ஒரு வரன் வந்துருக்காம். அந்த போட்டோவை தான் அனுப்பி விட்ருக்காங்க…”

“என்கிட்டே குடு தம்பி…” என்று மாதேஸ்வரன் கேட்க, அவரிடம் கொடுத்தான் ஷான். அவரும் பார்த்தவர், “எனக்கு பையன் பிடிக்கல…” என்று ஷானிடமே திருப்பிக் கொடுத்தார்.

“அப்பா… உங்களுக்காகவா பார்த்து இருக்காங்க?” வைஷ்ணவி கோபமாக கேட்டாள். இதென்ன இதிலெல்லாம் தலையிடுகிறார் என்ற எரிச்சல். ஆனால் ப்ரீத்தி மேல் மரியாதை வந்திருந்தது.

“ஆமா அதான. பையனுக்கு என்னப்பா? நல்லா தான இருக்கான்?” என்று ஓரக்கண்ணால் ப்ரீத்தியை பார்த்தபடி ஷான் கூற,

“ஆமா நல்லா இருக்கான்…” என்று கூறியவள், செல்பேசியைப் பிடுங்க பார்த்தாள். ஆனால் அவன் கொடுக்காமல் போக்கு காட்டியபடி படத்தைப் பார்க்க, அவளுக்குப் பற்றிக் கொண்டு வந்தது.

செல்பேசியை கொடுக்காமல் போக்குக் காட்டிக் கொண்டே, “வைபவ்… இங்க வா…” என்று மருமகனை அழைக்க, அந்த குறும்பனும் ஷானிடம் வந்தான், குதித்தபடியே!

“எஸ் மாம்ஸ்…” என்று அவன் முன்னே சென்று குதிக்க,

“இந்த அங்கிளை பாரு. நல்லா இருக்காரா?” என்று செல்பேசியை காட்டியபடி கேட்க, அந்த புகைப்படத்தை உற்றுப் பார்த்தவன், நிமிர்ந்து ஷானை பார்த்து, “எதுக்கு மாமா?” என்று கேட்க,

“இந்த அங்கிளை சாக்கி ஆன்ட்டிக்கு பிடிச்சிருக்காம். கல்யாணம் பண்ணிக்க போறாங்களாம். உனக்கு ஓகேவா?” என்று கேட்டான் ஷான்.

“அய்யயோ சாக்கி ஆன்ட்டி… இவர் நல்லாவே இல்ல…” என்று முகத்தை அஷ்டகோணலாக்கியவனை பார்க்கையில் வைஷ்ணவிக்கே சிரிப்பு வந்தது.

“ஷான்… என்கிட்ட குடு…” என்று பேசியை வைஷ்ணவி வாங்க, சிரித்தபடியே அவளிடமும் கொடுத்தான் ஷான். தலையில் கை வைத்துக் கொண்டாள் ப்ரீத்தி.

“இப்ப என்ன தான் உங்க ப்ராப்ளம் பாஸ்?” என்று கடுப்பாக கேட்க,

“இருங்க தலைவரே… நாலு பேர் கிட்ட கேட்டுத்தான் முடிவு பண்ணனும்ன்னு சொல்வாங்களே. அது உங்களுக்கு தெரியாதா…” என்று காலை வாருவதிலேயே குறியாக இருந்தான் ஷான், பொங்கலை விழுங்கியபடியே!

“உன்னோட கம்பேர் பண்ணும் போது இந்த பையன் கொஞ்சம் சுமார் தான் ப்ரீத்தி…” தான் நினைத்ததை அப்படியே கூறினாள் வைஷ்ணவி.

மகளுக்கு ஹைபை கொடுத்தவர், “அதே தான் நானும் சொன்னேன்…” சிரித்துக் கொண்டே கூறினார் மாதேஸ்வரன்.

“இப்ப தான் பார்க்க ஆரம்பிச்சுருக்காங்க மேடம்.” என்று வைஷ்ணவியிடம் கூறிய ப்ரீத்தியை ஆழ்ந்து பார்த்தான் ஷான். அவளது அந்த ‘மேடம்’ உறுத்தியது. அவள் இன்னும் அந்த பத்து லட்சத்திலிருந்து வெளிவரவில்லை என்று தோன்றினாலும், அதை தவிர்த்து வேறு ஏதேனும் இருக்கிறதா என்று யோசித்தான் ஷான்.

“பையன் என்ன பண்றானாம்?” வைஷ்ணவி தான் கேட்டாள்.

“தெரியல மேடம். பிடிச்சிருந்தா மேற்கொண்டு பேசலாம்ன்னு அம்மா சொன்னாங்க…” என்று ப்ரீத்தி கூற, மாதேஸ்வரன்,

“அதெல்லாம் பிடிக்கவே பிடிக்கலன்னு சொல்லிடு ப்ரீத்திம்மா…” முடியவே முடியாதென தலையாட்டினார்.

“அப்படியெல்லாம் சொல்ல வேண்டாம் ப்பா. அவங்க பொண்ணுக்கு அவங்க பார்க்கறதை பார்க்கட்டும்…” என்று ஷான் கூற, மாதேஸ்வரனை பார்த்தவள், “ஆமா ப்பா” என்று ப்ரீத்தியும் ஆமோதித்தாள்.

மாதேஸ்வரன் மெளனமாக இருவரையும் பார்த்தார். இருவரது மனதிலும் என்ன இருக்கிறது என்று அவரால் கணிக்க முடியவில்லை. ஆனால் ப்ரீத்தியை விட்டுக் கொடுக்க அவருக்கு மனம் வரவில்லை. ஆனால் முடிவெடுக்க வேண்டியவனே, இம்மாதிரி சொல்லும் போது அவர் என்ன செய்ய முடியும்?

“என்ன பிடிக்கலைன்னு சொல்ல சொல்றீங்க மாமா?” என்று கேட்டபடியே உள்ளே வந்தான் ரவி. ப்ரீத்தியை கண்டதில் ஆச்சரியம் அவனுக்கு! அதை வெளிப்படையாக முகத்தில் காட்டியவன், “அட ப்ரீத்தி! என்ன இவ்வளவு இயர்லியா?” என்று புன்னகைக்க, அவளுக்கோ உள்ளுக்குள் கடுப்பானது. “அன்னைக்கு நைட் ஒரு மணி, இன்னைக்கு காலைல ஏழுமணிக்கே…” என்று சிரித்தான்.

“என்ன சொல்றீங்க?” என்று வைஷ்ணவி கேட்க,

“உன் தம்பி பண்ற வேலை தான். இந்த பொண்ணை கொஞ்சமாவது பாவம்ன்னு நினைக்கறானா? அன்னைக்கு நைட் ஒரு மணிக்கு எழுப்பி விட்டு வண்டிய எடுக்க சொல்லி டிரைவர் வேலை பார்க்க சொல்லிருக்கான் வைஷு. அதுவும் பாதி தூக்கத்துல ஓட்டிகிட்டு வருது…” என்று கூறவும், ஷானை பார்த்தாள் வைஷ்ணவி.

“என்னடா தம்பி இது?” என்றவளின் குரலில் அதிர்ச்சி.

“டிரைவர் வேலை மட்டுமில்ல, செக்ரட்டரி வேலை, எடுபிடி வேலை, மேஸ்திரி வேலை இன்னும் என்ன வேலை வேணும்னாலும் வாங்குவேன். உங்களுக்கு ப்ரீத்தி மாதிரி ஒரு அடிமை சிக்கலைன்னு பொறாமை மாமா…” என்று ஷான் சிரிக்க, ப்ரீத்தி அவனை முறைத்தவள், ரவி பக்கம் திரும்பி,

“சர் தப்பா நினைச்சுட்டு இருக்கீங்க. காலைல எல்லாம் வர சொல்லலை.” என்று நிறுத்தியவள், “ஹாஸ்டலுக்கே போக விடல… என்னோட ரூமை உருப்படியா பார்த்து எத்தனை நாளாச்சுன்னு எனக்கே கணக்கு தெரியல ரவி சார்…” என்று பாவப்பட்ட குரலில் கூற,

“பாவம்டா இந்த பிள்ளை…” என்ற ரவியின் தொனியில் சிரித்தாள் வைஷ்ணவி. கூடவே மாதேஸ்வரனும்!

“ப்ரீத்திம்மா ஏமாளியா இருக்கு மாப்பிள்ளை… இல்லைன்னா இவன் பண்றதுக்கெல்லாம் தலையாட்டிட்டு இருக்குமா?” என்று மாதேஸ்வரனும் அவர் பங்குக்கு கூற,

“ஹலோ என்ன இது? எல்லாரும் சேர்ந்து ரவுன்ட் கட்றீங்களா?” என்ற ஷானின் தொனியில் சிரித்தவர்,

“தயவு செஞ்சு இனிமே லேட் நைட் வொர்க்ஸ்க்கு எல்லாம் ப்ரீத்திம்மாவை கூப்பிடாத ஷான். எல்லாரோட பார்வையும் ஒரே மாதிரி இருக்காது. கல்யாணமாக வேண்டிய பொண்ணு. எந்த வீட்டுக்கு போனாலும், இது தப்பாத்தான் தெரியும்…” தீவிரமான குரலில் கூறியவரை பார்த்தவன்,

“ப்ரீத்தி இருந்தா தான் எனக்கு வேலையே நடக்கும் ப்பா. பெருசா வேலை வாங்கறதெல்லாம் இல்ல. சும்மாவாவது இது கூட இருக்கணும். அப்ப தான் என்னோட மைன்ட் வொர்க் ஆகுது” என்றவன், அவர் முறைத்த முறைப்பில், “சரி இனிமே நான் குறைச்சுக்கறேன்…” என்று ஒத்துக்கொள்ள, அவசரமாக மறுத்தாள் ப்ரீத்தி.

“அதெல்லாம் எனக்கொன்னும் பிரச்சனை இல்லப்பா. நான் ஷானுக்கு எடுபிடி தான்னே இருக்கட்டும். ஐ டோன்ட் பாதர் ப்பா. இதுல என்ன இருக்கு? நான் ரவி சர் கிட்ட சொல்றது எல்லாம் விளையாட்டுக்குத்தான். அது சாருக்கும் தெரியும்…” என்று ரவியையும் கூட்டு சேர்த்துக் கொள்ள, அவனும் புன்னகை முகமாக,

“ஆமா ஆமா…” என்று சிரித்தவன், ஷான் புறம் திரும்பி, “சாரி மாப்ள… அன்னைக்கு சரண்சிங் பிஹேவ் பண்ண விதம் எனக்கே பிடிக்கல…”

“ஜஸ்ட் லீவ் இட் மாமா. ஏதாவது சீரியஸா பேசிருந்தா இந்த பையனே ரெண்டு போட்ருப்பான். சும்மா இல்ல, ஜூடோல பிரவுன் பெல்ட்.” என்று ப்ரீத்தியை காட்டி சிரித்தபடி கூற, மாதேஸ்வரனால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

“அடடா, நான் வேற சரண் கிட்ட அடக்க ஒடுக்கமான குடும்ப பொண்ணுன்னு சொல்லி வெச்சுருக்கேனே…” ரவி சிரித்தான்.

“ஏன் குடும்ப பொண்ணுங்க ஜூடோ கத்துக்க கூடாதா மாமா?” இயல்பாக கேட்டவனை புன்னகையோடு பார்த்தான் ரவி. ஆனால் உள்ளுக்குள் எரிச்சல்.

“ஏன் வைஷு கூடத்தான் டேக்வாண்டோ போனா. பொண்ணுங்க இதை பண்ண கூடாது, அதை பண்ண கூடாதுங்கற க்ளிஷே தாட்ஸ் தப்பு மாப்ள.” மாதேஸ்வரன் அவரது மகளுக்கு வக்காலத்து வாங்கினார்.

ரவி கையிரண்டையும் மேலே தூக்கி, “சரண்டர்… சரண்டர்…” என்று கூற, ஷான் சிரித்தான்.

“அக்கா உங்க கிட்ட இன்னும் அவளோட டேக்வாண்டோ டெக்னிக்ஸ் காட்டலைன்னு நினைக்கறேன். படிக்கும் போதெல்லாம் எங்க ரெண்டு பேருக்கும் தான் வீட்ல ஒன் டூ ஒன் பேட்டில் நடக்கும்.”

“ஆமா. என்கிட்ட அடிவாங்கிட்டு அழுதுட்டு போவான்…” வைஷ்ணவி சிரித்தபடி ஷானை ஓட்ட,

“ஏது… நான் உன்கிட்ட அடிவாங்கிட்டு அழுவேனா? என்கிட்ட அடிவாங்கிட்டு அம்மாகிட்ட போய் கம்ப்ளைன் பண்ணி எனக்கு அடி வாங்கி குடுப்ப…” வாய்விட்டு சிரித்தான் ஷான்.

இருவரின் கால்வாரல்களை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள் ப்ரீத்தி.

இந்த ஷானை அவளுக்கு மிக மிக பிடித்தது. அவனுக்குள் ஒரு அங்கமாக முடியாதா என்று அவளது மனம் ஏங்கத் துவங்கியதை உணர்ந்தாள். இத்தனை நாட்கள் இவன் எங்கு ஒளிந்திருந்தான்?

“மாப்ள… விஷயம் தெரியுமா?” பீடிகையோடு ரவி ஆரம்பிக்க, ஷான் அர்த்தமாய் ப்ரீத்தியை பார்த்தான்.

“என்ன மாமா?” என்று நிதானமாக கேட்க,

“ஸ்வேதாவோட அங்கிள் தான் இப்ப ஹாட் டாபிக்…” என்று அவர் கூறியதை முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல் கேட்டுக் கொண்டான்.

இருவரின் முகத்தையும் மாற்றி மாற்றி பார்த்த ரவியால் எதையும் கண்டுகொள்ள முடியவில்லை. மாதேஸ்வரனுக்கும் வைஷ்ணவிக்கும் இது புதிய செய்தி, அதனால் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.

“என்னவாம்?” வைஷ்ணவி கேட்டாள்.

“மனுஷன் என்னத்தை அடிச்சான்னு தெரியல, பயங்கர போதைல ஆட்டம் போட்டுருக்கான். போற வர்ற…” என்று நிறுத்த,

“பொண்ணுங்களா?” என்று சிரித்தபடி ஷான் கேட்டான்.

“இல்ல பசங்க கிட்ட தப்பா பிஹேவ் பண்ணிருக்கான். துணியொருபக்கம், இந்தாளு ஒரு பக்கம், ஊரே சிரிச்சு கிடக்குது… சோஷியல் மீடியா முழுக்க இதான் பேச்சு…” என்று சொல்ல,

“பசங்க கிட்ட ஏன் மாமா?” நமுட்டு சிரிப்போடு அவன் கேட்டான்.

“கர்மம்…” என்று தலையிலடித்துக் கொண்டாள் வைஷ்ணவி.

ஷான் முகத்திலிருந்த குரூரமான திருப்தி, ரவிக்கு வேறு கதையை சொன்னது. ஷானும் ப்ரீத்தியும் பரிமாறிக் கொண்ட மௌனமொழிகள், இதற்கு பின் இவன் இருக்கிறான் என்ற செய்தியை சொன்னது. ரவியின் மனதுக்குள்ளிருந்த கொதிப்பு, இன்னும் கொதிநிலையை அடைந்தது.

“ஷான்…” என்றவன் சற்று இடைவெளி விட,

“சொல்லுங்க மாமா…” என்றான் ஷான்.

“இதுல உனக்கொன்னும் சம்பந்தம் இல்லையே?” ஒருவித குழப்பமான மனநிலையில் ரவி கேட்டான்.

இதுவரை ரவி மட்டும் தான் அடித்துக் கொண்டிருந்தவன். அவன் தான் அடிக்கிறான் என்பதை அறியாமலேயே அடி வாங்கிக் கொண்டிருந்தான் ஷான். ஆனால் இப்போது ஸ்வேதா விஷயத்தில் ஷானின் இந்த நிலை, ரவியை எச்சரித்தது.

“ம்ம்ம்… நீங்க என்ன மாமா நினைக்கறீங்க?” என்று பதிலுக்கு அவன் கேட்க,

“இதெல்லாம் உனக்கு தேவையில்லைன்னு நினைக்கறேன் ஷான்…”

“அதை நான் தான மாமா முடிவு பண்ணனும்…” என்றவன், “யார் எனக்கு என்ன கொடுத்தாங்களோ, அதை தான் நான் திருப்பிக் கொடுத்திருக்கேன்…” என்றவனின் குரலில் அத்தனை வஞ்சம்.

குரூரமாக கூறியவனை ஆழமாகப் பார்த்தான் ரவி… ஆழம் பார்த்தான்!

ஆனால் சுதாரிப்பதற்குள் ஆளையே முடித்து விடுபவன் ஷான் என்பதை அவன் இன்னும் புரிந்துகொள்ளவில்லை!