ரகசியம் 11 💚

ரகசியம் 11 💚
“கண்ணம்மா…” என்ற அழைப்பில் அறையிலிருந்து “அப்பா…” என்ற கத்தலோடு வெளியே ஓடி வந்த கயல், வாசலில் நின்றிருந்த கர்ணாவைப் பார்த்து “சித்தப்பா…” என்று விழிகளை விரித்தாள். அவருக்கோ அவளைப் பார்த்ததும் விழிகள் கலங்கிவிட்டது.
அவளை பார்த்திபனுக்கு அடுத்து கண்ணம்மாவென்று அழைக்கும் ஒரே ஆள் கர்ணாதான். கூடவே, அவளுடைய உயிர்தோழி தேனுவின் தந்தையும் கூட. அவரை விழி விரித்து பார்த்தவளின் விழிகள் அவரின் பின்னால் தன் தந்தையைத் தேடிதான் அலைப்பாய்ந்தன.
வேகமாக சென்றவள் கர்ணாவை கடந்துச் சென்று வெளியில் நின்றிருந்த வண்டியை நோக்கி ஓடினாள். வெளியிலிருந்து “அப்பா… அப்பா இருக்கீங்களா? அப்பா…” கத்திக்கொண்டே வண்டியின் ஜன்னல் கண்ணாடிகளை சுற்றி சுற்றி ஓடி வந்தவாறு தட்டி அழ, வண்டி ஓட்டுனருக்கே அவளைப் பார்க்க பாவமாக போய்விட்டது.
“அப்பா வரல்லையா சித்தப்பா?” கயல் உதடுகள் துடிக்க அழுதுக்கொண்டே கேட்க, “உன் அப்பாவ பத்தி உனக்கு தெரியாதாடா?” பதிலுக்குக் கேட்டவர், அவளை குற்றம் சாட்டும் பார்வையோடு நோக்க, அதில் கூனிக் குறுகியவள், தலையைக் குனிந்து சிலநொடிகள் விழிநீர் சிந்தினாள். இந்த பத்து நாட்களே வெளியுல கஷ்டத்தை அவளுக்கு காண்பித்துவிட்டது.
அவள் நன்கு அறிவாள் பார்த்திபனின் கோபத்தின் அளவை. மனைவி விட்டுச் சென்ற போது கூட தன் மனைவி சம்மந்தப்பட்ட அனைத்தையும் நடுவீதியில் எரித்தவர் அவர். இப்போது மகளை மட்டும் மன்னித்துவிடுவாரா என்ன? அதை அறிந்ததால்தான் இன்னும் அப்பாவை நாடாது இங்கு தவித்துக்கொண்டிருக்கிறாள்.
இப்போது கர்ணாவை கண்டதும் தந்தை வந்ததாக சந்தோஷத்தின் உச்சத்திற்குச் சென்றவளுக்கு அவர் தன்னை மன்னிக்கவேயில்லை என்றதும் மனம் சோர்ந்துவிட்டது.
நிமிடங்கள் கடக்க அங்கேயே நின்றிருந்தவளுக்கு அப்போதுதான் கர்ணா வாசலிலேயே நிற்பது ஞாபகத்திற்கு வர, “அய்யோ சித்தப்பா! மன்னிச்சிருங்க, மொதல்ல உள்ள வாங்க” சேலை முந்தானையால் முகத்தை அழுந்தத் துடைத்துக்கொண்டு உள்ளே அழைத்த கயல், “நீங்க இருங்க, மொதல்ல உங்களுக்கு குடிக்கிறதுக்கு தண்ணீ எடுத்துட்டு வர்றேன்” என்றுவிட்டு சமையலறைக்குள் நுழைய, கர்ணாவோ விழிகளாலேயே வீட்டை அளவிட்டார்.
சரியாக, அறையிலிருந்து தலையை சொரிந்துக்கொண்டே வெளியே வந்த ருபிதாவுக்கு சோஃபாவில் அமர்ந்திருந்த கர்ணாவைப் பார்த்ததும் தூக்கி வாரிப்போட்டது.
‘யார்ரா இவரு, முறுக்கு மீசை அய்யனாராட்டம் நம்ம வீட்டு நடுவுல உக்கார்ந்துட்டு இருக்காரு? ஒருவேள, கஸ்டமரா இருக்குமோ?’ யோசித்துக்கொண்டே அவரெதிரே வந்தவர், “என்னங்க மளிகை சாமான் வாங்க வந்தீங்களா? மொதல்லையே சொல்லிட்டு வர மாட்டீங்களா? இங்கபாருங்க, இது பெரிய பிஸ்னஸ். அப்பாய்ன்ட்மென்ட் வைக்காம உங்க பாட்டுக்கு வந்தீங்கன்னா சாமான் எல்லாம் கொடுக்க முடியாது” அலட்சியமாக பேசிக்கொண்டே போக, சுற்றி அங்குமிங்கும் சிதறிப்போட்டிருந்த பாக்கெட்டுக்களை ஒரு மார்கமாக பார்த்த கர்ணாவுக்கு சிரிப்புதான் வந்தது.
“ருபிதா ஜோசஃப்” அவர் ஏளனமாகச் சிரித்தவாறு பெயரை அழுத்திச் செல்ல, ருபிதாவுக்கு அடுத்த அதிர்ச்சி!
‘இந்த ஆளுக்கு எப்படி நம்ம அப்பா பெயரு தெரியும்?’ கர்ணாவையே அதிர்ந்து பார்த்தவாறு ருபிதா சிலைபோல் நிற்க, அந்த பாவனையில் உள்ளுக்குள் சிரித்தவர், தங்கள் வீட்டுப்பெண் வாழச் சென்ற வீட்டைப் பற்றி விசாரிக்காமலா இருந்திருப்பார்? குடும்பத்தைப் பற்றி அக்குவேர் ஆணிவேராக விசாரித்தவருக்கு இவர்களின் குணம் தெரியாமலா இருக்கும்?
அது அறிந்ததால்தான் ஏளனமாக வளைந்தன அவருடைய இதழ்கள். அதேநேரம் தண்ணீரை எடுத்துக்கொண்டு வந்த கயல், அங்கு ருபிதா நின்றிருப்பதைப் பார்த்து “அத்தை, எழுந்துட்டீங்களா? இது.. இது கர்ணா சித்தப்பா. அப்பா கூட பிறக்கலன்னாலும் அப்பாவுக்கு எல்லாமே இவருதான்” கர்ணாவை அறிமுகப்படுத்தி வைக்க, “என்ன சொன்ன நீ?” அதிர்ச்சிக்குமேல் அதிர்ச்சியோடு கேட்டார் அவர்.
“என் சொந்தம்னு சொன்னேன் அத்தை” கயல் கொஞ்சம் சத்தமாக சொன்னதும்தான் தாமதம், துள்ளிக் குதிக்க ஆரம்பித்துவிட்டார் ருபிதா.
“அய்யோ என்னம்மா நீ, வந்ததுமே என்னை எழுப்பியிருக்க வேணாமா? நீங்களும் சொல்லாம கொள்ளாம திடுதிப்புன்னு வந்துட்டீங்க, சொல்லிட்டு வந்திருந்தா விருந்தே ஏற்பாடு பண்ணியிருக்கலாம். அச்சோ! கொஞ்சம் இருங்க” படபடவென பேசிவிட்டு, “என்னங்க… ஏன்ஜலு… டேய் வீரா! சீக்கிரம் வந்து யாரு வந்திருக்காங்கன்னு பாரு” என்று கத்த, ருபிதாவின் செயலில் கர்ணாவுக்கு சிரிப்பு முட்டிக்கொண்டு வந்தது.
ஆனாலும், அவர் அமைதியாக அமர்ந்திருக்க, சட்டை பட்டன்களை போட்டுக்கொண்டு யாரென்ற கேள்வியில் புருவத்தை நெறித்தவாறு அறையிலிருந்து வெளியே வந்த வீரஜிற்கு கர்ணாவைப் பார்த்ததும் தூக்கி வாரிப்போட, ஆடிப்போய்விட்டான். பார்த்திபனோடு அவரை அவன் ஊரிலிருக்கும் போது பார்த்திருக்கின்றானே!
பதட்டத்தில் இதழை நாவால் ஈரமாக்கிக்கொண்டவாறு, “ஹிஹிஹி… ஹெலோ அங்கிள்” என்றுக்கொண்டே வீரஜ் அவரெதிரே வர, அவனை முறைத்துப் பார்த்த கர்ணா, அடுத்தகணம் தன் பாவனையை மாற்றி வரவழைக்கப்பட்ட புன்னகையோடு, “எப்படி இருக்கீங்க மாப்பிள்ளை? பொண்ண நல்லா பார்த்துக்குறீங்களா?” சற்று மிரட்டலாகக் கேட்க, பூம்பூம் மாடுபோல் எல்லா பக்கமும் தலையாட்டினான் அவன்.
கயலோ ஆர்வமாக, “ஏங்க, தேனுவ தெரியும்தானே! அவளோட அப்பாதான் இவரு” என்க, “ஓஹோ! ஹிஹிஹி… பொண்ண நல்லா வளர்த்திருக்கீங்க. தங்கமான பொண்ணு” அசடுவழிந்தான் வீரஜ்.
அப்போதுதான் வந்த கணவரிடமும் ஏன்ஜலிடமும் ருபிதா விடயத்தைச் சொல்ல, ஏன்ஜலோ விழிகளை கூட எட்டாத புன்னகை புரிந்தாள் என்றால், “வாங்க வாங்க… எப்படி இருக்கீங்க?” என்று சொல்லிக்கொண்டே மனோஜன் அவர் பக்கத்திலமர, “அதான் வந்தாச்சே, அப்றம் எங்க வர மச்சான்?” கேலியாகப் பேசி அவர் முதுகில் ஒரு தட்டு தட்டினார் கர்ணா.
கயலோ அவரின் செய்கையில் பலநாட்கள் கழித்து வாய்விட்டு சிரித்தவாறு, “சித்தப்பா, தேனு எப்படி இருக்கா? நான் பண்ண காரியத்துல என்மேல கோபமா இருக்காளா? எனக்கு தெரியும், அவ…” என்று பேசி முடிக்கவில்லை, “ஆமாம்மா கோபமா இருக்கா. உனக்கு உதவி பண்ணதால என்கிட்ட அடி வாங்கினதுல உன்மேல ரொம்ப கோபத்துல இருக்கா” என்க, “அது சித்தப்பா… அவ எதுவும்…” தடுமாற ஆரம்பித்தாள் அவள்.
“சின்ன வயசுலயிருந்து உங்க இரண்டு பேரையும் வளர்த்தவன் நான். என்கிட்ட தப்ப முடியாது. பார்த்திபா சொன்ன ஒரே காரணத்துக்காகதான் ஒரு அடியோட அந்த கழுதைய விட்டேன்” அவர் கோபமாகச் சொல்ல, ‘ஆத்தீ! உதவி பண்ணதுக்கே பெத்த பொண்ணுன்னு பார்க்காம அடின்னா, நாம எல்லாம் தனியா சிக்கியிருந்தா சட்னிதான் போலயே!’ உள்ளுக்குள் மிரட்சியாக நினைத்துக்கொண்ட வீரஜ், கயலுக்கருகில் சென்று நின்றுக்கொண்டான்.
ஆனால், அடுத்து அங்கிருந்தவர்களை கொஞ்சமும் கண்டுக்கொள்ளவில்லை கர்ணா. வாசலிலிருந்த ஓட்டுனருக்கு அழைப்பையெடுத்து, “எல்லாத்தையும் உள்ள கொண்டு வந்து வை!” என்றுவிட்டு அவர் வைக்க, நாக்கை தொங்கவிட்டுக்கொண்டு வாசலை ஆர்வமாக பார்த்தனர் ருபிதாவும் ஏன்ஜலும்.
பழங்கள், மரக்கறிகள் என வீட்டுக்குத் தேவையான அனைத்தையுமே சீர்வரிசையாக மூட்டை மூட்டையாக இறக்கியவர், வேட்டி சட்டை, கைக்கடிகாரம், புடவை, பூ, நகைகள் வைத்த தட்டை கர்ணாவின் கையில் வந்து கொடுக்க, அதை எடுத்துக்கொண்டு எழுந்து நின்றவர், மிஸ்டர் என்ட் மிஸஸ் வீரஜிடம் நீட்ட, வீரஜோ இழித்தவாறு வாங்கிக்கொண்டான் என்றால், விழிகள் கலங்க புன்னகையோடு வாங்கிக்கொண்டாள் கயல்.
அடுத்து வண்டி ஓட்டுனரிடம் கர்ணா விழிகளில் ஏதோ சொல்ல, அடுத்தகணம் கயலின் முன் வைக்கப்பட்டிருந்தன அந்த பத்திரங்கள்.
கயலோ கர்ணாவை புரியாது நோக்க, “உன் அப்பா என்னதான் கோபமா இருந்தாலும் உனக்கு செய்ய வேண்டியதை சரியா பண்ணியிருக்கான்” என்றுவிட்டுச் சிரித்தவர், “கண்ணம்மா, இங்கேயே பக்கத்துல உனக்காக ஒரு வீடு பார்த்திபா வாங்கியிருக்கான். பொண்ணு வீட்டுலயிருந்து பொண்ணுக்காக செய்ய வேண்டியதை செய்துதானே ஆகணும்! நீங்க என்ன சம்மந்தி சொல்றீங்க?” ருபிதா, மனோஜனை பார்த்துக் கேட்க, “ஆமா ஆமா பின்ன இல்லையா?” பதிலுக்கு இழித்துக்கொண்டனர் அவர்கள்.
வீரஜிற்கோ விழிகள் மின்ன ஆரம்பித்தன. ‘கண்ணா லட்டு திண்ண ஆசையா?’ அவன் மனம் உற்சாகத்தில் துள்ள, அடுத்து கர்ணா சொன்ன, “மாப்பிள்ளைக்கு புல்லட் ரொம்ப பிடிக்குமாமே, அதுவும் மாப்பிள்ளைக்காக கொடுத்து விட்டிருக்கான் உன் அப்பா” என்ற வார்த்தையில், ‘கண்ணா இரண்டாவது லட்டு திண்ண ஆசையா’ என்று மனம் சிறகில்லாமல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
ஆனால், கயலுக்கு இதில் சுத்தமாக உடன்பாடில்லை. “சித்தப்பா, எனக்கு இதெல்லாம் வேணாம். அப்பாவ என்னோட பேச சொல்லுங்க, அதுவே போதும்” கலங்கிய விழிகளோடு அவள் சொல்ல, அவள் புகுந்த வீட்டு குடும்பத்தினர் ‘எதே?’ உள்ளுக்குள் அதிர்ந்தவாறு அவளை நோக்கினர்.
வீரஜ்ஜோ கடுப்பில் பற்களைக் கடிக்க, “இங்க பாரு கயல், இது எங்க கடமை. உன் அப்பாவ பத்தி உனக்கு நல்லாவே தெரியும். கோபக்காரன்தான், ஆனா சீக்கிரம் உன்னை ஏத்துக்குவான். அதுவரைக்கும் பொறுமை இரு!” கயலின் தலையை வாஞ்சையுடன் வருடியவாறு சொன்னவர், “நீ கையெழுத்து போட்டுட்டேன்னா, இரண்டே நாள்ல அந்த வீட்டுக்கு போயிடலாம்” என்றார் சிரிப்போடு.
அவளோ அப்போதும் தயங்க, “பாப்பா, அதான் அவ்வளவு சொல்றாங்களே, கையெழுத்து போடுடா! அப்பா பாவம்ல” கொஞ்சலோடு சேர்த்து உள்ளுக்குள் கெஞ்ச, பலநாட்கள் கழித்து கேட்ட அவனின் பாப்பா என்ற அழைப்பில் உருகியவள், புன்னகையோடு பத்திரத்தில் கையெழுத்திட்டாள்.
“ஆமா பெரியவரே, இங்க பக்கத்துலன்னு சொன்னீங்க? எங்கேன்னு சரியா சொல்ல முடியுமா?” மனோஜன் ஆர்வமாகக் கேட்க, “சொல்றது என்ன காட்டவே செய்றேன்” என்ற கர்ணா, அடுத்த அரைமணி நேரத்தில் இவர்கள் தங்கியிருக்கும் தெருவுக்கு அடுத்த தெருவிலுள்ள மூன்று மாடிகள் கொண்ட அத்தனை பெரிய வீட்டின் முன் வாயைப் பிளந்து நிற்க வைத்திருந்தார்.
வெளிநாட்டிலிருக்கும் அந்த வீட்டுக்குச் சொந்தமான ஒருவரிடமிருந்து பார்த்திபன் வாங்கியிருப்பார் போலும்! வீட்டை புதுப்பிக்கவென சில ஆட்கள் வேலை செய்துக்கொண்டிருக்க, “ஏன் சித்தப்பா, இவ்வளவு பெரிய வீடு?” கயல் புரியாதுக் கேட்டாள்.
“அது…” கர்ணா பேச வர, அதற்குள் “என்னம்மா பேசுற நீ? வீட்டுல அஞ்சு பேரு இருக்கோம். மூனு மாடியே போதாதுதான். இருந்தாலும் பரவாயில்லை. நீயும் உன் புருஷனும் மூனாவது மாடியில இருங்க, ஏன்ஜல் நீ இரண்டாவது மாடி, நானும் இவரும் முதலாவது மாடியில இருக்கோம். லிஃப்ட் இருக்கா உள்ள? இருந்தா இன்னும் நல்லாயிருக்கும்” என்று பேசிக்கொண்டே போக, ‘ஙே’ என அவர்களைப் பார்த்திருந்தார் அவர்.
“இது கயலுக்கும் மாப்பிள்ளைக்கும் பார்த்திபன் கொடுத்தது. உங்க வீட்டுல நீங்க தாராளமா வசதியா இருந்துக்கலாம்” அவர் அழுத்தமாகச் சொல்ல, ருபிதாவினதும் மனோஜனதும் முகம் கடுகடுவென மாற, கயலுக்கோ ஒரே சங்கடமாகப் போய்விட்டது.
“சித்தப்பா, அவங்ககிட்டயிருந்து என் புருஷனை நான் பிரிச்சு கூட்டிட்டு வந்து வாழ நினைக்கல. நாங்க இரண்டு பேரும் மட்டும் இம்புட்டு பெரிய வீட்டுல என்ன பண்ண போறோம். ரொம்ப ஜாஸ்தி. அவங்களும் எங்க கூடவே இருக்கட்டும்” அவள் சொல்ல, வீரஜோ கயலை ஆச்சரியமாகப் பார்த்தான்.
இத்தனைநேரம் வீடு, வாகனம் கிடைத்துவிட்ட சந்தோஷத்தில் இருந்தவன், தன் பெற்றோரை நோக்கிய கர்ணாவின் வார்த்தைகளில் கோபப்படவில்லை. ஆனால், கயல் அவனின் குடும்பத்திற்காக பேசியது அவனை ஆச்சரியத்தில்தான் தள்ளியது.
மருமகள் சொன்ன அடுத்தகணமே கொஞ்சமும் வெட்கமில்லாது கர்ணாவை தெனாவெட்டாக ஒரு பார்வைப் பார்த்த மற்ற மூவரும் அவர்கள் பாட்டிற்கு உள்ளேச் சென்று வீட்டை ஆராய, கயலோ கர்ணாவோடு வாசலிலேயே நின்றிருந்தாள்.
சிலநிமிடங்களில் வீரஜும் தோட்டத்தில் வைத்திருந்த அவனுக்காக பார்த்திபன் கொடுத்த வாகனத்தை சுற்றி சுற்றி வர, அவனுடைய கவனம் இங்கில்லை என்பதை புரிந்துக்கொண்டவர், “நீ சொன்னதுல எனக்கு கொஞ்சமும் உடன்பாடில்லை” என்றார் அழுத்தமாக.
“சித்தப்பா, அவங்க அவர பெத்தவங்க, என்னோட சொந்தம். நீங்க இப்படி பேசுறது…” கயல் சங்கடமாக இழுக்க, ஏளனமாக இதழை வளைத்தவர், “புகுந்தவீட்டுமேல இம்புட்டு பாசமா கண்ணம்மா!” கேலியாக கேட்டுவிட்டு, “ஆனா, நான் விசாரிச்ச வரைக்கும் இவங்க அவ்வளவு நல்லவங்களா தெரியல கயல்” என்றவரின் முகம் தீவிரமாக மாறியது.
“சித்தப்பா…” அவள் அதிர்ந்து விழிக்க, “நீ கல்யாணம் பண்ணிட்டேன்னு நாங்க உன்னை அப்படியே விட்டுட முடியுமாடா, பார்த்திபா சொன்னதும் குடும்பத்தை பத்தி விசாரிச்சேன். எதுவுமே நல்லதா இருக்கல்ல. மாப்பிள்ளையோட பழக்கவழக்கம் கூட. நீ தப்பான முடிவு எடுத்துட்டியோன்னு…” அவருடைய குரல் தேய்ந்து ஒலிக்க, கயலுக்கு கூட இதயம் படபடவென அடித்துக்கொண்டது.
அவள் இங்கு வந்த பத்து நாட்களிலேயே அறிந்துக்கொண்ட விடயம் அல்லவா அது! மனம் தவறு செய்துவிட்டாயென அடிக்கடி எச்சரித்த போது ஏதேதோ காரணங்கள் சொல்லி சமாளித்தவளுக்கு இப்போது கர்ணாவே சொன்னதும் என்ன சொல்வதென்று தெரியவில்லை.
“அது… அது சித்தப்பா… அது பொய்யா கூட இருக்கலாம்ல! அப்படியே எதுவா இருந்தாலும் அதை நான் பார்த்துக்குறேன். நீங்க அப்பாவ சமாதானப்படுத்துங்க. அவர் மடியில தூங்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு” கயல் விழிநீரை அடக்கிக்கொண்டுச் சொல்ல, “சரிம்மா. எல்லாமே சரியாகும், நீ ஜாக்கிரதையா இரு!” என்றவருக்கு இப்போது யோசனை முழுக்க கயலைப் பற்றிதான்.
அடுத்த வந்த நாட்கள் வேகமாக ஓட, அன்று புதிய வீட்டுக்குச் செல்லும் நாள்.
“என்னடா பண்ணிக்கிட்டு இருக்கா அவ? மகாராணி ரெடியாக இம்புட்டு நேரமா? ஓஹோ! ஒருவேள, அவ அப்பன் வாங்கி கொடுத்த வீடுன்னு தெனாவெட்டோ?” ருபிதா கத்திக்கொண்டிருக்க, “இந்த பட்டிக்காடு வாழ்க்கையில பண்ண ஒரே நல்லது எங்களுக்கு இம்புட்டு பெரிய வீட்டுல வாழ்றதுக்கு ஏற்பாடு பண்ணி தந்ததுதான். ஆனா ஒன்னு, மகாராணி கொடுத்த வச்சவ, வீடு அவ பெயருலதானே இருக்கு!” பொறாமையில் நொடிந்துக்கொண்டாள் ஏன்ஜல்.
அவர்களின் பேச்சையெல்லாம் சலித்தவாறு கேட்டுக்கொண்டிருந்த வீரஜின் விழிகள் எதேர்ச்சையாகத் திரும்ப, அடுத்தகணம் அவனின் பார்வை அங்கேயே நிலைக்குத்தி நின்றன.
அங்கு பார்த்திபன் வாங்கிக் கொடுத்த அரக்குநிற புடவையில் நெற்றி வகுட்டில் குங்குமம், தலையில் மல்லிகைச்சரம் சூடி தேவதைபோல் சேலையை கால் தடுக்காது தூக்கிக்கொண்டு கயல் வர, வீரஜால் விழிகளை அசைக்கவே முடியவில்லை. “பாப்பா…” அவனிதழ்கள் தானாக முணுமுணுக்க, காமம் கலக்காத ரசனைப்பார்வை பார்த்தான் அவன்.
கயலும் அவனெதிரே வந்து ‘போலாமா?’ என்ற ரீதியில் விழிகளாலே கேட்டு தலையசைக்க, அதில் மொத்தமாக சொக்கிப் போய்விட்டான் வீரஜ். ‘நிஜமாவே இவ நம்ம பொண்டாட்டிதானா!’ என்ற சந்தேகம் வேறு அவனுக்குள்.
அந்த பெரிய வீட்டின் முன் அத்தனை பேரும் நிற்க, வீரஜ் குடும்பத்தினரின் சம்பிரதாயங்களை அறிந்து வீட்டுக்குள் செல்வதற்கு முன் செய்ய வேண்டிய பூஜைக்கான எல்லா ஏற்பாடுகளையும் கர்ணாவே செய்திருக்க, பார்த்திபனோ தான் வராவிட்டாலும் தன் மகளின் வீட்டை பூக்களாலும் விளக்குகளாலும் அலங்கரித்திருந்தார்.
கர்ணாவோ தன் அலைப்பேசியை வீரஜின் கையில் கொடுத்தவர், “பொண்ணு உள்ள போறதை ஃபோட்டோ எடுப்பா, உன் மாமனாருக்கு காட்டணும்” சிரித்துக்கொண்டுச் சொல்ல, ‘இந்த வீட்டு மாப்பிள்ளைன்னு கொஞ்சமாச்சும் மரியாதை இருக்கா?’ உள்ளுக்குள் பொறுமிக்கொண்டவாறு கேமரா வழியாக மனைவியை பார்த்தவனுக்கு இப்போது விழிகள் மின்ன ஆரம்பித்தன.
“வாவ்!” அவனிதழ்கள் சொல்ல, சிரிப்போடு தேவதைபோல் வீட்டுக்குள் சென்ற தன்னவளை அலைப்பேசியில் ரசனையோடு படமெடுத்தான் வீரஜ்.
அந்த புகைப்படம்தான் கயல் அபியின் அலைப்பேசியில் பார்த்து அதிர்ந்த அவளுக்கேத் தெரியாத அதே புகைப்படம்.