Kalangalil aval vasantham 34

‘உலக கிரிக்கெட் ரசிகர்கள், விமர்சகர்கள், வீரர்கள் என அனைவரின் பார்வையும் அன்று பெங்களூரு மீதிருந்தது. காரணம் அன்று தான் டி20 ஐபிஎல் லின் மெகா ஏலம் நடைபெற இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் வளர்ந்து கொண்டே இருக்கும் ஐபிஎல் இன்று மேலும் பெரிதாகியுள்ளது. அணிகளின் எண்ணிக்கை எட்டிலிருந்து பத்தாக உயர்ந்து உள்ளது. லக்னவ் மற்றும் குஜராத் உள்ளே வந்துள்ளார்கள். இதனால் இரண்டாயித்து இருபத்தி இரண்டு ஐபிஎல் ஏலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு சிறந்த சிலையை வடிக்க, சிற்பி முதலில் சிறந்த கல்லை தேர்ந்தெடுப்பது போல, ஐபிஎல் கோப்பையை வெல்ல, பத்து அணிகளும் அன்று தங்கள் வெற்றி வீரர்களை தேர்ந்தெடுப்பதற்காக பெங்களூருவில் கூடியிருந்தன.

களத்தில் ஆடுவதற்கு முன்பு இங்கு நடக்கும் எண்கள் ஆட்டத்தில் நன்றாக ஆட வேண்டும். ஏலத்தில் இருக்கும் வீரர்களின் எண்ணிக்கை ஐநூற்றி தொண்ணூறு. வீரர்களை வாங்க பத்து அணிகளிடம் இருக்கும் மீதத் தொகை ஐநூற்றி அறுபத்தி இரண்டு கோடி. பத்து அணிகளின் அதிகபட்ச தேவை இருநூற்றி பதினேழு வீரர்கள்.

எண்கள் மீது கண்கள் வைத்து பலமான அணியை அமைக்கப் போவது யார்? திறமைக்கு அள்ளிக் கொடுக்கப் போகும் அணிகள் யார்? ‘சோல்ட்’ என்ற சத்தம் கேட்டு மகிழப் போகும் வீரர்கள் யார்?

அதை தெரிந்து கொள்ள நாமும் தயார்.’

டிவி தொகுப்பாளர் தனது முன்னுரையை வழங்கிக் கொண்டிருந்தார்.

“ஒவ்வொருவரும் ஒவ்வொரு கணக்கை போட்டுக் கொண்டு உள்ளார்கள். ஆனால் யாருடையது வெற்றிக் கணக்கு என்பதை இன்று பார்க்கப் போகிறோம். கிட்டத்தட்ட அறுநூறு வீரர்கள், அறுநூறு கோடி. அடுத்த பத்தாண்டுகளுக்கு யார் நல்ல அஸ்திவாரத்தை அமைக்கப் போகிறார்கள் என்பதை இந்த மெகா ஏலத்தில் இன்று பார்க்க போகிறோம்.” என்ற தொகுப்பாளர்,

“ஏலம் என்பது ஒரு பொருளை ஏலமிட்டு பார்த்திருக்கிறோம். ஆனால் வீரர்களை ஏலம் எடுப்பது, அதாவது வீரர்கள் அவர்களது வித்தைகளை ஏலம் எடுப்பது என்பது ஐபிஎல் லில் வந்த கான்செப்ட். இதை எவ்வளவு புதுமையாக பார்க்கிறீர்கள்?” என்று தன் முன்னிருந்த விருந்தாளியை கேட்க,

“இந்த கான்செப்ட் வந்து ரொம்ப வருஷம் ஆகிடுச்சுங்க. வீரர்களை ஏலம் எடுப்பதை காட்டிலும், அந்த எக்சைட்மென்ட் இருக்கு பாருங்க, அது வேற லெவல். ஒரு மாக் ஆக்ஷன் நடத்தறது, டேட்டாஸ் எல்லாம் ஒரே இடத்துல கொண்டு வர்றது, டீம் கட்டமைக்கறது, ஒரு காம்பினேஷன கொண்டு வர்றது, ஒவ்வொரு டீமுக்கும் இருக்க ஸ்ட்ராங்ஹோல்ட்ஸ் என்ன, ஏலத்துல எந்த அளவுக்கு போலாம், யார் பேடில் தூக்க போறாங்க, ஐ திங்க் இட்ஸ் எ எக்ஸ்சைட்மென்ட் ஃபார் ஆல். இது மே பி கடைசி ஏலமா கூட இருக்கலாம். நாம இந்த வரலாற்று சிறப்பு மிக்க மெகா ஏலத்துல பங்கெடுத்துக்க போறோம்ங்கறது பெரிய விஷயம்…”

“இந்தியன் கிரிக்கெட்க்கு இந்த ஐபிஎல் பெரிய ஈவன்ட்டா இருக்கு. ஆனா உலக கிரிக்கெட்டுக்கும் இது முக்கியமான ஈவன்ட் இல்லையா? அதாவது மார்க்கீ ஈவன்ட். உலக கிரிக்கெட் இப்போது இந்த ஏலத்தை உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது என்றால் அது மிகையாகாது. அதோடு குஜராத் மற்றும் லக்னவ் புதிதாக பிரான்சைஸியில் இணைந்திருக்கின்றது. அவர்களின் ஏல யுக்தி என்ன என்பதையும் பார்க்க போறோம்.

இந்த ஏலத்தில் கேப்டன்களை தேடி களம் இறங்குகிறார்கள் பெங்களுரூ, பஞ்சாப் மற்றும் கல்கத்தா. அவர்களுக்கு எந்த மாதிரியான கேப்டன்கள் அமைவார்கள் என்ற ஆவலும் அனைவருக்கும் இருக்கிறது. ஆறு அணிகளுக்கு விக்கெட் கீப்பர்கள் தேவை.

சென்ற மெகா ஏலத்திலிருந்து இரண்டே அணிகள் தான் கோப்பையை வென்றிருக்கின்றது. சென்னை மற்றும் மும்பை. அவர்கள் இருவரும் அடிப்படையிலிருந்து அணியை கட்டமைத்தாக வேண்டும். அவர்களின் திட்டம் என்ன என்பதை பார்க்க வேண்டும்.

டீம கட்டமைக்கணும், காம்பினேஷன கட்டமைக்கணும், எடுக்க போகும் வீரர்கள் அவரவர் அணியின் லெவனில் உட்கார வேண்டும், அதே சமயம் பர்சையும் பார்க்க வேண்டும் என்று எத்தனையோ சவால்கள் இருக்கிறது. அந்த சவால்களை யார் இன்று வெல்ல போகிறார்கள் என்று பார்க்கலாம்.”

தொலைக்காட்சி அறிவிப்பாளர்களும், விருந்தினர்களும் ஏலத்தை உள்ளும் புறமுமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்க, அந்த இடமே பரபரப்பாக இருந்தது. இன்னும் சற்று நேரத்தில் துவங்கவிருக்கும் ஏலத்தில் கலந்து கொள்ள பத்து அணியை சேர்ந்தவர்களும் ஒவ்வொருவராக வந்து கொண்டிருந்தார்கள். மெகா ஏலத்தை நேரடியாக ஒளிபரப்பு செய்ய தொலைகாட்சிகள் தயாராகிக் கொண்டிருந்தன.

ஏலத்தை நடத்த ஹியுக் எட்மிடிஸ் தயாராகிக் கொண்டிருந்தார். அவர் ஒவ்வொரு முறையும் கே’வலை தட்டும் போது ஒவ்வொரு வீரர்களின் தலையெழுத்தும் மாற்றி அமைக்கப்படும் என்பதை அவர் அறிந்திருந்தார்.

ஒரு சாம்ராஜ்யம் ஒரே நாளில் உருவாவதில்லை. பல தடைகள், பல சோதனைகள் என தாண்டி, ஒரு சிறந்த தலைவன் கிடைக்கும் போதுதான் அந்த சாம்ராஜ்யம் உருவாகிறது. அப்படி உருவான ஒரு சாம்ராஜ்யம் தான் சென்னை கிரிக்கெட் அணி. ரசிகர்களின் அதீத அன்பை பெற்ற முதன்மையான அணி என்பதில் மாதேஸ்வரனுக்கு மிகுந்த பெருமை உண்டு. கிரிக்கெட்டில் அந்த அணியின் வீரர்கள் ரசிகர்களின் நாயகர்களாய் உருவாக வேண்டும் என்று எண்ணினார் அவர். அதனைக் கொண்டே சென்னை அணி கட்டமைக்கப் பட்டது.

அந்த சாம்ராஜ்யம் இனி என்னாகும்?

குடும்பத்தினரின் தனிப்பட்ட பகையால் வாழுமா? வீழுமா?

பத்து அணியின் உரிமையாளர்களும், அவர்தம் குழுவினரோடு வரத் துவங்கினார்கள்!

ஏலம் நடைபெறும் லீலா பேலஸ் களைகட்டியிருந்தது.

தனது ஜாகுவாரிலிருந்து இறங்கிய ஷான், அருகிலிருந்த ப்ரீத்தியின் கையை பிடித்துக் கொண்டான். மீடியாவுக்கு, அங்கு வரும் ஒவ்வொருவரும் ஸ்பெஷல் தான் என்றாலும் ஷான் இன்னும் ஸ்பெஷல். சமீபத்தில் ஸ்வேதா உருவாக்கிய சர்ச்சை, அதை தொடர்ந்து ஜுபிடரின் நிர்வாகத்தை கைப்பற்றியது, சென்னை அணியின் அதிகாரப்பூர்வ தலைவராகியது என்று தொடர்ந்து கொண்டிருந்த அதிரடிகளின் மைய புள்ளி அவன்.

பீஜ் நிற பென்சில் ஸ்கர்ட் சூட், எப்போதும் போல உயர்த்தி போடப்பட்ட தீபிகா படுகோன் டாப் நாட், இடது கையில் டைட்டன் ராகா, காலில் வெட்ஜஸ் ஹீல்ஸ் என வெகு நாகரிகமாக, நாசூக்கான ப்ரீத்தி.

வெகு நேர்த்தியான அடர் நீல வண்ண சூட், கண்களிலிருந்த ரேபான், இடது கையிலிருந்த ஒரிஸ் டைவர்ஸ் என மாடல் போல ஷான். இருவரையும் சூழ்ந்து கொண்டார்கள் நிருபர்கள்.

“சென்னை அணியின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட பின் நடக்கும் முதல் மெகா ஆக்ஷன் இது. அதை பற்றி என்ன நினைக்கிறீர்கள் சஷாங்கன்?” ஷான் முன் மைக்கை நீட்டியவர்கள் கேள்விகளை கேட்க போட்டியிட, அவனும் புன்னகையோடு,

“அனைத்தும் சுபமாக வேண்டும் என்று நினைக்கிறேன்…” என்றான்.

“திடீர் நிர்வாக மாற்றம் ஏன் சர்?” இன்னொருவர் கேட்க,

“எனது தந்தைக்கு நான் ஒய்வு கொடுக்க வேண்டுமல்லவா…” என்று சிரிக்க, அந்த நிருபரும் சிரித்தார்.

“சென்னை அணியின் பிரான்ட் அம்பாசிடராக நியமிக்கப்பட்ட ஸ்வேதா திடீரென நீக்கப்பட்ட காரணம் என்ன சஷாங்கன் சர்?”

“நோ கமெண்ட்ஸ்…” என்று புன்னகைத்தான்.

“உங்களுக்கும் அவருக்கும் ஏற்பட்ட பிணக்கின் விளைவாகத்தான் அவர் நீக்கபட்டார் என்று கூறப்படுவதைப் பற்றி?”

“அவர் எனது நல்ல நண்பர். அதற்கு மேல் கூறுவதற்கு ஏதுமில்லை.” மிக இயல்பாக முகத்தை வைத்துக் கொண்டு அவன் கூற,

“இந்த ஏலத்தில் உங்களால் வெற்றிகரமாக டீமை உருவாக்க முடியும் என்று நினைக்கிறீர்களா?”

“நம்பிக்கையுடன் இருக்கிறோம். என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்…” என்றவன், “ப்ளீஸ் எக்ஸ்க்யூஸ் அஸ் கைஸ்…” என்று ப்ரீத்தியின் கை பிடித்து, யாரும் இடித்து விடாதபடி, அவளை பாதுகாப்பாக உள்ளே அழைத்துக் கொண்டு சென்றான் ஷான்.

கேமராக்கள் இருவரையும் படமெடுத்து தீர்த்தது!

இவர்களுக்கு பின்னால் மாதேஸ்வரன், ரவி, டீம் மேனேஜர் என்று வரிசையாக உள்ளே நுழைய, நிருபர்கள் அவர்களையும் கேள்விகளால் துளைத்தெடுத்தார்கள்.

அந்த பெரிய ஹாலில் வட்ட மேசைகளில் அனைத்து டீம்களின் நிர்வாகத்தினரும் அமர்ந்திருக்க, ஹியுக் எட்மிடிஸ் அனைவரையும் வரவேற்று ஏலத்தை துவக்கினார்.

அவர்களுக்கு முன்னே இருந்த அந்த பெரிய எல்ஈடி ஸ்க்ரீனில் முதலில் மார்க்கீ வீரர்கள் பத்து பேரின் பெயரும், அவர்களது அடிப்படை விலையும், அவர்களது சாதனைகளும் பட்டியலிடப்பட்டன.

மார்க்கீ வீரர்கள் என்பவர்கள் முதல் நிலை வீரர்கள். ஐபிஎல் ரெஜிஸ்டரில் பதிவு செய்த வீரர்களின் தர வரிசையில் முன்வரிசையில் இருப்பவர்கள் அவர்கள்.

இந்த முறை பிசிசிஐ பத்து வீரர்களை மார்க்கீ வீரர்களாக அறிவித்திருந்தது. ஷிக்கர் தவான், முஹம்மத் ஷம்மி, ஷ்ரேயஸ் அய்யர், ரவிச்சந்திரன் அஸ்வின், ஃபாஃப் டி ப்ளெசிஸ், டேவிட் வார்னர், பேட் கம்மின்ஸ், க்வின்டான் டி காக், காகிஸோ ரபடா, ட்ரென்ட் போல்ட் ஆகிய பத்து பேரும் தான் அந்த மார்க்கீ ப்ளேயர்ஸ்.

குலுக்கல் ஆரம்பித்தது. அதாவது பத்து மார்க்கீ வீரர்களின் பெயரையும் குலுக்கிக் போட்டு அதில் வருபவரை ஏலம் விட ஆரம்பிப்பார்கள். அவர்களது ஆரம்ப விலையிலிருந்து மிக அதிகமாக கேட்பவர்களுக்கு அவர்களை ஒதுக்குவார்கள். பேஸ் ப்ரைஸ் எனப்படும் ஆரம்ப விலை, வீரர்கள் தங்களுக்கான விலையாக குறிப்பிடப்படுவது. அதிகபட்சம் இரண்டு கோடி வரை குறிப்பிடலாம்.

இப்படித்தான் முதல் நாள் ஏலம் ஆரம்பிக்கும். மொத்தம் இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த ஏலத்தில், அணிகளுக்குத் தேவையான அனைத்து வீரர்களையும் ஏலத்தில் எடுப்பார்கள்.

வீரர்கள் ஒவ்வொருவராக ஏலம் போக ஆரம்பித்தனர்.

ரவி கூறிய வீரர்களை எல்லாம் ஷான் நிராகரித்துக் கொண்டே இருந்தான்.

“அஸ்வினை நாம லாக் பண்ணலாம் ஷான்…” ரவி அழுத்தமாக கூற,

“வேண்டாம் மாமா…” என்று நிர்தாட்சண்யமாக மறுத்தான்.

“மாப்பிள்ளை சொல்றதை கேளு ஷான்…” இருவருக்கும் பிணக்காகி விட கூடாதே என்று மாதேஸ்வரன் கூற,

“கொஞ்சம் வெய்ட் பண்ணுங்கப்பா. நாற்பத்தி எட்டு கோடி தான் கைல இருக்கு. மார்க்கீ ப்ளேயர்ஸ் எடுத்தா நமக்கு சரி வராதுன்னு மீட்டிங்ல பேசினோமே. மறந்துட்டீங்களா? சீப் ரேட்டுக்கு ப்ளேயர்ஸ லாக் பண்றதுதான் நமக்கு புத்திசாலித்தனம்…” என்று அவன் கூறுவதும் சரியாகத்தான் பட்டது. ஆனால் கொதித்துக் கொண்டிருக்கும் ரவியை எப்படி குளிர செய்வது?

“ஸ்ட்ராங் ப்ளேயர்ஸ் இல்லைன்னா நம்ம காம்பினேஷனை எப்படி வொர்க் அவுட் பண்ண முடியும் ஷான்?”

“பண்ண வைக்கலாம் மாமா…” என்றவன் ஏலத்தில் கவனமானான்.

ப்ரீத்தியின் செல்பேசி அழைத்தது. காயத்ரி தான் அழைத்தாள்.

“சொல்லு காயத்ரி…” என்றாள் ப்ரீத்தி, மெல்லிய குரலில்.

“ஏய் என்ன ப்ரீத்திக்கா, நீயும் ஆக்ஷன் டேபிள்ல உட்கார்ந்து இருக்க?” ஆச்சரியமாக வினவினாள்.

“பார்த்துட்டு இருக்கியா காயூ?” ஆசையாக கேட்டாள். அவர்களுக்கு இவையெல்லாம் மிக மிக பெரிய கனவுகள் அல்லவா!

“ஆமா க்கா. முதல்ல இருந்தே பார்த்துட்டு இருக்கேன். டிவில நீ செமையா இருக்க! உன்னோட பாஸ் செம ஹேன்சம். என்னோட ஃப்ரெண்ட்ஸ் எல்லார் கிட்டயும் சொல்லிட்டு இருக்கேன் பார்க்க சொல்லி…” என்றவளின் குரலில் சந்தோஷக் கூச்சல்.

“சரிடி… வெச்சுடு… இங்க பிசியா போயிட்டு இருக்கு.” என்று வைத்தாள். முகம் மகிழ்ச்சியில் மலர்ந்து இருந்தது.

ஷான் ஏலத்தை கவனித்தபடி, மற்ற ஆட்களுடன் பேசிக் கொண்டிருந்தாலும் அவ்வப்போது செல்பேசியை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

செல்பேசி நோடிபிகேஷன் வந்தது!

‘மிஷன் அக்கம்ப்ளிஷ்ட்’

ஷானின் முகத்தில் புன்னகை வந்தமர்ந்தது!

அடுத்த நொடி அனைத்து செய்தி நிறுவனங்களின் ட்விட்டர் கணக்குகளும் தீப்பிடிக்க ஆரம்பித்தது.

‘ஏடிஜிபி சரண்சிங்கின் வீட்டில் பதுக்கப்பட்டிருந்த இருநூறு கோடி ரூபாய் பணம்! யாருடையது?’

இந்த தலைப்பையிட்டு ஒவ்வொரு கணக்குகளும் கொதிக்க ஆரம்பிக்க, அடுத்ததாக மீடியாவுக்கும் அந்த தீ பரவ ஆரம்பித்தது.

கூடவே சரண் சிங்கின் வீட்டில் எடுக்கப்பட்ட அந்த வீடியோவும்.

அனாமதேய ஆதாரமாக கிடைக்கபெற்றதாக கூறப்பட்ட அந்த செய்தியால் தமிழ்நாடு பற்றியெரிய துவங்கியது. அதி முக்கியமான பதவியிலிருக்கும் முக்கியமான நபர் என்பதால் அது கூடுதல் முக்கியத்துவம் பெற துவங்கியது.

“இன்று காலை அனாமதேயமாக கிடைக்கபெற்ற தகவலின் அடிப்படையில் நமது செய்தி நிறுவனம், திரு சரண்சிங் அவர்களின் வீட்டுக்கு சென்றது. அப்போது அந்த வீட்டில் ரகசியமாக பதுக்கப்பட்டிருந்த இருநூறு கோடி பிடிபட்டது. அமலாக்கத் துறையும், லஞ்ச ஒழிப்புத் துறையும் தீவிர விசாரணை நடத்திக் கொண்டுள்ளனர்.”

செய்தியாளர் கூறிய செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்தான் ரவி.

அவனது முகத்தில் ஈயாடவில்லை.

முகம் வேர்த்தது… அவனது ரத்த அழுத்தம் எகிறியது!

எப்படி இப்படி நடந்திருக்கும் என்று அவனுக்கு புரியவில்லை. யூகிக்கக் கூட முடியவில்லை. அவனால் அந்த ஏலத்தில் உட்கார முடியவில்லை. அவனை யோசிக்கக் கூட விடாமல் அடித்தவன், தன் முன்னே தான் அமர்ந்திருக்கிறான் என்பதை கூட அவன் அறியவில்லை.

“என்ன மாமா? இப்படி ஆகிருக்கு? உங்க பிரென்ட் தான?” எதையும் காட்டிக் கொள்ளாமல் ஷான் கேட்க, ரவியிடம் பதிலில்லை.

“புரியல ஷான். எப்படி?” என்றவன் முடிக்கமுடியாமல் திணறினான்.

“என்னாச்சு ஷான்?” மாதேஸ்வரன் கேட்க,

“ஏடிஜிபி சரண்சிங் இருக்கார்ல ப்பா…?”

“ம்ம்ம் ஆமா…”

“அவர் வீட்ல எவ்வளவோ அமௌன்ட் சீஸ் பண்ணிருக்காங்களாம்…” என்று ஷான் கூற,

“ஓஓ…” என்ற மாதேஸ்வரன், “இதுக்கெல்லாம் முன்னாடி போய்டாதீங்க மாப்ள. உங்க ஃப்ரெண்ட்ஷிப் வேற, இது வேற… நம்ம பேர் கெட்டுடும்…” கறாராக கூறினார்.

அவரை ஏதோவொரு உணர்வோடு பார்த்தான் ரவி.

ஷானும் ப்ரீத்தியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

வீடியோ ஆதாரம் சமூக வலைதளங்களில் பட்டையை கிளப்பிக் கொண்டிருந்தது. பல ஆயிரம் பேர்கள் ஷேர் செய்து அதை ட்ரென்டிங் செய்து கொண்டிருந்தனர்.

அடுத்ததாக முக்கியமான செய்தி நிறுவனங்களை டேக் செய்து பரவ ஆரம்பித்தது ஆடியோ பைல்.

அதில் பேசியவர்கள், சரண் சிங்கோடு இன்னும் சில பேர்.

அனைவருமே, ஒவ்வொரு ஐபிஎல் அணியை சேர்ந்த முக்கியஸ்தர்கள்.

ஒவ்வொருவரிடமும் டீம் பிக்ஸிங் செய்து கொண்டிருந்தார் சரண் சிங். அதாவது டீமில் இவர்கள் தான் இடம் பெற வேண்டும் என்று லிஸ்ட் போட்டுக் கொண்டிருந்தார். அதற்கு இவ்வளவு விலை என்று பேசிக் கொண்டிருந்தார்.

இதற்கு எந்த அணியும் தப்பவில்லை.

அடுத்ததாக மாட்ச் பிக்ஸிங் பற்றியும் பேசினார். கூடவே சைலேஷ் பேசியதும் வந்தது.

தீ இன்னும் பரவத் துவங்கியது.

ஏல அரங்கிலேயே சலசலப்புகள். ஹியுக் எட்மிடிஸ் ஏலத்தை சற்று நேரத்துக்கு நிறுத்தி வைத்தார். ஒவ்வொருவரின் முகத்திலும் கலவரம்!

ஷான் அமைதியாக அமர்ந்து கொண்டு வேடிக்கை பார்க்கத் துவங்கினான்.

வெறுமனே ரவியின் தொடர்பை மட்டும் வெளியிட்டால் நஷ்டம் யாருக்கு?

அவர்களது அணிக்கு மட்டும் தானே!

அணி தடை செய்யப்படலாம். சட்ட ரீதியான நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கலாம். இன்னும் எத்தனையோ லாம்கள் இருக்கலாம். மூழ்க ஆரம்பிக்கிறது எனும் போது மொத்தத்தையும் தூக்கி கடலில் வீசினால் தான் படகு தப்பிக்குமாம்!

அதை தான் செய்து கொண்டிருந்தான் ஷான்.

ப்ரீத்தியை பார்த்தான். அவளும் அவனையே தான் பார்த்துக் கொண்டிருந்தாள். அவர்களது உழைப்பின் க்ளைமாக்ஸ் காட்சி இது என்பதை இருவரும் உணர்ந்தனர்.