ரகசியம் 21 💚

eiPK7A814230-3bace50c

தன்னவனுக்காக கயல் காலையிலிருந்து தயாராகி காத்திருக்க, அவன் சொன்ன இரண்டு மணிநேரங்கள் கடந்ததே தவிர அவன் வந்தபாடில்லை. கூடவே, கர்ணா மீண்டும் அழைத்து கிட்டதட்ட கெஞ்ச ஆரம்பிக்க, கயலுக்கு தன்னிலையை நினைத்து அழுவதைத் தவிர என்ன செய்வதென்று தெரியவில்லை.

அதுவும், வீட்டைத் தாண்டி இந்த ஊரில் எந்த வழிகளும் அவளுக்கு பழக்கமில்லை. ருபிதாவை மீறி செல்லும் தைரியமும் அவளுக்கு இல்லை. அதனாலேயே வீரஜிற்காக காத்திருந்தாள் அவள்.

இதற்கு நடுவே ருபிதா வேறு, “என்னடீ காலையிலிருந்து பார்த்துக்கிட்டு இருக்கேன். அந்த ஃபோன் பக்கத்துலயே மினுக்கிகிட்டு உக்கார்ந்துக்கிட்டு இருக்க? ஓஹோ! ஒருவேள…” நாக்கில் நரம்பில்லாது அவள் நடத்தையை தவறாக பேசிவிட்டு கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல், “ஒழுங்கு மரியாதையா வந்து வேலை பாருடீ” கிட்டதட்டக் கத்த, வாசலை ஏக்கத்தோடு பார்த்துவிட்டு சேலை முந்தானையை இடுப்பில் சொருகியவாறு சென்றாள் கயல்.

ஏற்கனவே கயல்மேல் உச்சகட்ட கோபத்தில் இருக்கிறார் அவர். இன்று தானே வேலை செய்யுமாறு சொல்லும் வரை அவள் வைத்ததில் வேண்டுமென்றே வீட்டு வேலைகளோடுச் சேர்த்து வியாபார வேலைகளையும் அவள் தலையிலேயே கட்டிவிட, சாப்பிட கூட நேரமில்லாது சாப்பாட்டையும் மறந்து மாலை வரை வேலை செய்தாள் அவள்.

இதில் ஒரே நல்ல விடயம் என்னவென்றால், ஆரம்பத்தில் இருந்த மூச்சுத்திணறல் பிரச்சினை கூட இப்போது தினமும் செய்து பழக்கப்பட்ட வேலையால் சற்று குறைந்திருந்தது. சூரியனும் மெல்ல மெல்ல மறைந்துக்கொண்டிருக்க, இப்போது ருபிதாவின் முகத்தில் அத்தனை பதட்டம். வாசலை பார்ப்பதும் நேரத்தை பார்ப்பதுமாக அவர் இருக்க, கயலும் பொருட்களை பாக்கெட்டில் அடைத்தவாறு தன் அத்தையைதான் நோட்டமிட்டுக்கொண்டிருந்தாள்.

சரியாக, வீட்டுக்குள் வேகமாக நுழைந்த வீரஜ், “கயல், சீக்கிரம் வா! போகலாம்” என்க, அவனைக் கண்டதுமே அத்தனை பற்கள் தெரிய புன்னகைத்தவள், செய்துக்கொண்டிருந்த வேலையையும் விட்டுவிட்டு தன்னவனை நோக்கி ஓட, அவளையும் தாண்டி தன் மகனிடத்தில் சென்று புலம்ப ஆரம்பித்துவிட்டார் ருபிதா.

“வீரா, நேத்து ராத்திரி உன் அக்கா ஏதோ பார்ட்டின்னு வெளியில போனவ. இன்னும் வரல்லடா. எனக்கு ரொம்ப பயமா இருக்கு. போய் அவளை கூட்டிட்டு வாடா” அவர் பதறியபடிச் சொல்ல, “என்ன சொல்றீங்க, நேத்து ராத்திரியா? என்னம்மா, இப்படி பொறுப்பில்லாம பேசுறீங்க! எங்க போனான்னு தெரியுமா?” நெற்றியை எரிச்சலாக நீவி விட்டவாறு கேட்டான் வீரஜ்.

இதில் கயலுக்குதான் இதயம் படபடக்க ஆரம்பித்துவிட்டது. “ஏங்க, போகலாமே… ரொம்ப நேரமாச்சு” அவள் இடையில் புகுந்து மெல்ல சொல்ல, இருவருமே அதை கேட்பதாகத் தெரியவில்லை. “அது வந்துப்பா… அவ அடிக்கடி ஒரு பப்புக்கு போவா, உனக்கு கூட தெரியுமே! அங்க போய் ஒருதடவை பாருப்பா” அவர் சொல்ல, வீரஜும் மீண்டும் வீட்டிலிருந்து செல்லவென வெளியேறப் போக, “வீர்…” கத்தலோடு அவன் கையை இறுகப் பிடித்தாள் கயல்.

“அப்பாவ பார்க்க போகணும் வீர். ப்ளீஸ் வாங்க, ரொம்ப நேரமாச்சு. பயமா இருக்கு எனக்கு” அவள் அழுகையோடுச் சொல்ல, “கொஞ்சமாச்சும் அறிவிருக்கா? ஏன்ஜல் எங்க போனான்னு தெரியல. மொதல்ல அவள போய் கூட்டிட்டு வரேன்” கயலின் கைகளை உதறிவிட்டு வீரஜ் வெளியேறிய அடுத்தநொடி, “ஏன்டீ, உனக்கு என் பொண்ண விட இழுத்துக்கிட்டு இருக்க உன் அப்பன்தான் முக்கியமா போயிட்டானா?” பற்களைக் கடித்துக்கொண்டு கயலின் காதுகளை திருகினார் அவர்.

கயலோ இருக்கும் மனவலியோடுச் சேர்த்து இந்த வலியிலும் கத்த, அதையெல்லாம் காதிலே வாங்கிக்கொள்ளவில்லை அவர்.

அடுத்த ஒரு மணிநேரம் கழித்து ஏன்ஜலோடு வீடு வந்து சேர்ந்தான் வீரஜ். ஆனால், அவன் முகமோ சிவந்து இறுகிப் போயிருந்தது. போதையில் தள்ளாடியபடியிருந்த தன் தமக்கையை தோளோடு அணைத்தவாறு அவன் வீட்டுக்குள் நுழைய, தன் மகளை பார்த்ததும் ஓடிச் சென்று அவளை தாங்கிக்கொண்டார் ருபிதா.

அவரிடம் ஏன்ஜலை கொடுத்துவிட்டு விழிகளை மட்டும் உயர்த்தி தன் மனைவியைப் பார்த்தவனுக்கு தரையை வெறித்துக்கொண்டிருக்கும் அவள் நிலையை பார்த்ததும் ஏதோ ஒரு குற்றவுணர்ச்சி. கைகளாலேயே முகத்தை அழுந்தத் துடைத்து தொண்டையை செறுமிக்கொண்டவன், முயன்று முகபாவனையை மாற்றி “பாப்பா, வா போகலாம். இப்போ போனாலும் காலையில போய் சேர்ந்துரலாம்” என்க, மெல்ல எழுந்து நின்று நேருக்கு நேராக தன்னவனை வெறித்துப் பார்த்தாள் கயல்.

அவனும் மீண்டும் வெளியேறவென வாசலை நோக்கி திரும்பப் போக, சரியாக ஒரு அழைப்பு.

வேகமாகச் சென்று அதையேற்றவன், மறுமுனையில் கர்ணாவின் குரலை கேட்டதும், “மாமா…” என்க, ஆனால் அடுத்து அவர் சொன்ன செய்தியிலும் அவரின் கோபமான வார்த்தைகளிலும் ஆடிப்போய்விட்டான் வீரஜ்.

“பார்த்தி எங்க எல்லாரையும் விட்டுட்டு போயிட்டான். ஆனா ஒன்னு, அவனோட கடைசி நிமிஷத்துல கூட அவன பார்க்க வராத அந்த மகாராணிக்கும் எங்களுக்கும் இனி எந்த சம்மந்தமும் இல்லை. அவன காயப்படுத்தி கொன்னு புதைச்சிட்டா அந்த ராட்சசி. இதுக்கெல்லாம் சேர்த்து நல்லா அனுபவிக்க போறா”

என்ற கர்ணாவின் வார்த்தைகளில் அவன் விழிகளை அதிர்ந்து விழித்து கயலை நோக்க, “ஏங்க, இப்போவாச்சும் போகலாமா?” கஷ்டப்பட்டு இதழை அசைத்து தன் கேள்வியை கேட்டாள் அவள்.

பயத்தில் எச்சிலை விழுங்கிக்கொண்டவன், நன்கு அறிவான், அவள் தந்தை மீது அவள் கொண்டிருக்கும் பாசத்தை. ‘இதை எப்படி தாங்கிக்கொள்வாள்?’ என்ற பயம் அவனுக்குள். ஒருமணி நேரத்துக்கு முன் இது தெரிந்தால் சாதாரணமாக அவள் தந்தையின் மரணத்தை அவளிடம் தெரிவித்திருப்பான். ஆனால் இப்போது?

அழைப்பு துண்டிக்கப்பட்டதும் வீரஜ் இதழை ஈரமாக்கியவாறு பயந்தபடி கயலை நோக்க, அவனை மெல்ல நெருங்கியவள், அவனையே கேள்வியாக நோக்கினாள்.

இதற்குமேல் முடியாதென ஆழ்ந்த பெருமூச்செடுத்து, “பாப்பா, அது… அது வந்து மாமா நம்மள விட்டுட்டு கடவுள்கிட்ட போயிட்டாருடா. நீ உடைஞ்சி போயிடாதடா. நான் சொல்றதை…” பேசிக்கொண்டே சென்றவனின் வார்த்தைகள் அவளின் வலி நிறைந்த வெறித்தப் பார்வையில் அப்படியே நின்றதது. அந்த பார்வை வீச்சு அவனை குற்றவுணர்ச்சியில் மூழ்கடிக்க, அவளின் பார்வையை எதிர்கொள்ளும் சக்தியை இழந்துவிட்டான் அவன்.

“பாப்பா…” மெல்ல அழைத்தவாறு அவளை நோக்கி ஒரு அடி வைக்க, “அப்பா…” அவளுடைய இதழ்கள் அசைய, இந்தச் செய்தியில் உண்டான அதிர்ச்சி, ஏற்கனவே சாப்பிடாததில் உண்டான உடல்சோர்வு எல்லாம் சேர்ந்து அப்படியே மயங்கி சரிந்திருந்தாள் கயல்.

நடந்ததை நினைத்துப் பார்த்த கயலுக்கு தன் தந்தையின் கடைசி நிமிடங்களில் கூட அவரை பார்க்க முடியாது போனதை நினைத்து வாழ்க்கையையே  வெறுக்கத் தோன்றியது. எத்தனை பெரிய இழப்பு அது!

ஏற்கனவே அவளுக்குள் அபி வீரஜையுடைய இரட்டைச் சகோதரனாக இருப்பானோ என்ற சந்தேகம் இருக்கத்தான் செய்தது. இப்போது வரதராஜன் பானுமதியுடைய புகைப்படத்தை பார்த்ததிலிருந்து தான் நினைத்ததை உறுதி செய்துவிட்டாள் அவள்.

ஆனால், அவன் காட்டும் நெருக்கம். அது சரியானதா?

பல யோசனைகளில் உழன்றுக்கொண்டிருந்தவளுக்கு அதன் விளைவாக தலைவலிக்கவே ஆரம்பித்துவிட, அத்தோடு அத்தனை குழப்பங்களையும் மனதிலிருந்து ஒதுக்கி வைத்தவள், அடுத்த வந்த நாட்களை சாதாரணமாகக் கடத்தினாள்.

சத்யா அம்மாள் எத்தனையோ தடவை தன்னை பராமரிக்க வேறு ஆட்களை பார்க்கச் சொல்ல, கயலோ மருமகளென்ற முறையில் தானே பார்த்துக்கொள்வதாக விடாப்பிடியாகச் சொல்ல, அதற்குமேல் பெரியவராலும் மறுக்க முடியவில்லை.

அதன் பிறகு வந்த நாட்கள் முயன்றவரை அபியை பார்ப்பத்தை தவிர்த்துக்கொண்டாள் கயல். அவனிடத்தில் தோன்றும் ஏதோ ஒரு பந்தம் அவளையும் மீறி அவள் கட்டுப்பாட்டை இழக்கச் செய்வதை அவள் உணரத்தான் செய்தாள். மூளை மறுக்க, மனம் பழக்கப்பட்ட உணர்வென ஏற்க, இரண்டுக்குமிடையே தத்தளித்தவளுக்கு அவன் விழிகளில் சிக்காது ஒதுங்கியிருப்பதே சரியாகத் தோன்றியது.

இவ்வாறு ஒரு வாரம் கடந்திருக்க, அன்று பெரியவரின் வீட்டில் ஒரு சிறப்புப் பூஜை. வேலையாட்கள் வீட்டை அலங்காரம் செய்ய, வீட்டாற்களோ பூஜைக்குத் தேவையான பொருட்களை எடுத்து வைப்பதில் பரபரப்பாக இருந்தனர். ஆனால், வீட்டிலிருந்தவர்கள் யார் முகத்திலும் கொஞ்சமும் சந்தோஷம் இல்லை.

எல்லார் முகமும் இறுகிப் போயிருக்க விழிகள் கலங்க எப்போதும் தன் கூடவே வைத்திருக்கும் தன் குடும்ப புகைப்படத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த பெரியவரின் காதில், “சத்யா…” என்றொரு பழக்கப்பட்ட குரல் கேட்க, “சீதா…” ஏக்கத்தோடு அழைத்தவாறு வாசலை திரும்பிப் பார்த்தார் அவர்.

அங்கு வாசலில் சீதா அம்மாள் நின்றிருக்க, அவரைப் பார்த்ததும் இவருக்கு அளவில்லா சந்தோஷம். தான் அமர்ந்திருந்த சக்கர நாற்காலியின் சக்கரங்களை வேகமாக தள்ளிக்கொண்டு சீதாவை நோக்கி அவர் வர, அவர் வருவதற்குள் சத்யாவை நெருங்கியிருந்தார் சீதா.

“எப்படிடீ இருக்க? நான் சொன்ன மாதிரி வந்துட்டேன் பார்த்தியா? எங்க கயல்?” சீதா ஆர்வமாகக் கேட்க, “காலையிலிருந்து அவ ரூம்ம விட்டு வரவேயில்லைடீ. இப்போ வருவான்னு நினைக்கிறேன். ஆமா… நீ எப்போ லண்டன்லயிருந்து வந்த?” சத்யா சொல்ல, மற்றவரின் பார்வை பூஜைக்கான ஏற்பாடுகளை கேள்வியாக நோக்கின.

“காலையிலதான். நேரா இங்கேயே வந்துட்டேன். ஆமா… இன்னைக்கு ஏதாச்சும் விசேஷமா?” சீதா சந்தேகமாகக் கேட்க, தன் கையிலிருந்த புகைப்படத்தைக் காட்டியவர், “இதோ இதுக்காகதான்” என்று ஒன்னை குறிப்பிட்டுச் சொல்ல, இப்போது சீதாவுக்கு காரணம் புரிந்துவிட்டது.

அவருடைய முகமும் சட்டென வாட, ஆனால், முயன்று தன்னை சமாதானப்படுத்தி அடக்க முடியாது அழுகும் சத்யாவை அவர் சமாதானப்டுத்திக்கொண்டிருக்க, சரியாக, “கயல்…” என்ற ரேவதியின் அதிர்ச்சிக் குரல்.

எல்லாரும் அத்திசைக்குத் திரும்ப, வெள்ளை புடவையில் நெற்றியில் வெறும் விபூதி மட்டும் இட்டு வந்துக்கொண்டிருந்த கயலின் விதவைப்பெண் கோலத்தில் ஆடிப்போய்விட்டனர் அனைவரும்.

“என்னம்மா கோலம் இது?” ரேவதி அதிர்ந்துக் கேட்க, “இது வழக்கமான ஒன்னுதானேம்மா! இன்னைக்குதான் என் புருஷன நான் இழந்தேன். எல்லா விதவைப் பெண்களும் இருக்க வேண்டிய கோலம்தான். இதுல என்ன ஆச்சரியப்பட இருக்கு?” சாதாரணமாக கேட்பதுபோல் தோன்றினாலும் அத்தனை வலி அவள் வார்த்தைகளில்.

“எங்களுக்கு புரியுதுடா. ஆனா, சின்னப்பொண்ணு நீ. ஒவ்வொரு வருஷமும் இந்த நாளைக்கு இப்படி இருக்கியேடா, எங்க கண்ணு முன்னாடி இப்படி ஒரு கோலத்துல நீ இருக்குறதை பார்க்க முடியலம்மா” சீதா வேதனை குரலில் சொல்ல, விரக்தியாகச் சிரித்துக்கொண்டவள், தன்னவன் அணிவித்த மோதிரத்தை மெல்ல வருடிவிட்டு எதையும் கண்டுக்கொள்ளாது வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள்.

எல்லாரும் அவளை வேதனை நிறைந்த பார்வை பார்த்துவிட்டு தங்கள் வேலைகளை கவனிக்க ஆரம்பித்துவிட, அடுத்த கொஞ்சநேரத்தில் யாருமே எதிர்ப்பார்க்காது சிவப்புநிற நீர் கலந்த வாளியோடு வேகமாக உள்ளே நுழைந்த அபியின் விழிகள் கோபத்தில் சிவந்திருக்க, மின்னல்போல் கயலை நெருங்கி அவள்மேல் நீரை ஊற்றினான் அவன்.

இதை சற்றும் எதிர்ப்பார்க்காத சுற்றியிருந்தவர்கள், “அபி…” என்று கத்த, அவனோ கயல் சுதாகரிக்கும் முன் தட்டிலிருந்த குங்குமத்தை அவள்  இரு புருவங்களுக்கிடையே வைத்துவிட்டு நெற்றி வகுட்டிலும் அழுந்த வைத்துவிட்டான்.

இதில் கயலின் நிலைதான் பாவம். என்ன எதிர்வினை காட்டுவது என்று கூட தெரியாது அதிர்ந்துப்போய் அபியையே வெறித்தவாறு நின்றுக்கொண்டிருந்தாள் அவள்.

ஆனால், அபியோ கோபத்தின் உச்சத்தில் இருந்தான் போலும்! அவளின் முழங்கையை இறுகப்பற்றி தன்னை நோக்கி இழுத்தவன், “இனி ஒருதடவை என் முன்னாடி இந்த கோலத்துல வந்துடாத! கொன்னுடுவேன்” கர்ஜனைக் குரலில் மிரட்டிவிட்டு அங்கிருந்து நகரப் போக, அதிர்ச்சியிலிருந்து தன்னை மீட்டெடுத்தவளுக்கு ஆத்திரம் பொங்கியது.

‘கடவுளே! என்ன காரியம் செய்துவிட்டான் இவன்?’

வேகமாக அவன் நகர்வதற்குள் அவனை பிடித்து தன்னை நோக்கி இழுத்த கயல், மொத்த பலத்தையும் சேர்த்து அவன் கன்னத்தில் அறைந்திருக்க, “கயல்…” சுற்றியிருந்தவர்களின் குரல்கள் எங்கும் ஒலிக்க, விழிகளை அழுந்த மூடித் திறந்து உக்கிரப் பார்வை பார்த்தான் அபி.

ஆனால், அதை விட உக்கிரத்தில் நின்றிருந்தாள் அவள். அவனை கனல் கக்கும் பார்வை பார்த்தவள், “என்ன நினைச்சிக்கிட்டு இருக்கீங்க நீங்க? இதுக்கு முன்னாடி நீங்க பண்ணதெல்லாம் ஏதோ பொறுத்துட்டு போனேன். ஆனா, இப்போ பண்ணது ச்சீ! உங்க எல்லையை மீறிட்டிங்க. எந்த தைரியத்துல நீங்க இப்படி பண்ணீங்க? பண்ண ஒரு பாவத்துக்காக எத்தனை கஷ்டத்தைதான் நான் அனுபவிக்க?” வேதனையோடு அவன் சட்டைக் கோலரைப் பிடித்துக் கத்திவிட்டு விம்மி விம்மி அழுதாள்.

சுற்றியிருந்தவளுக்கே பாவமாகி போய்விட்டது. “இன்னைக்கு என் வீர நான் இழந்தநாள். அவர் இனி இல்லை. ஆனா, அவருக்கு மட்டும்தான் நான் எப்போவுமே சொந்தமானவ. இந்த குங்குமத்தை நீங்க வச்சிட்டீங்கன்னா நான் சுமங்கலி ஆகிருவேனா?” என்றுவிட்டு நெற்றி வகுட்டிலிருந்த குங்குமத்தை அழிக்கச் சென்றவளின் கரம் அந்தரத்தில் நிற்க, அதிர்ந்துப் பார்த்தவளின் விழிகள் தன் முன் நின்றிருந்தவனின் விழிகளில் தெரிந்த கோபத்தால் பயத்தில் விரிந்தன.

அடுத்தகணம் அவள் தாடையை பிடித்து தன் முகத்துக்கு நேரே அவள் முகத்தை கொண்டு வந்த அபி, “புருஷன் இருக்குறப்போ எப்படிடீ நீ விதவை ஆகுவ? நீ எப்படி இருக்கணுமோ அப்படிதான் இருக்க. இதுதான் நிஜம்” அழுத்தமாகச் சொல்லிவிட்டு நகரப் போனான். ஏற்கனவே இது பற்றி அறிந்திருந்த சத்யா அம்மாவிற்கும் யுகனுக்கும் இனி நடக்கப் போவதை நினைத்து பயம் மனதை கவ்விக்கொண்டது.

“அபி அண்ணா…” என்று யுகன் ஒரு அடி வைக்க, “வீரஜ்…” அழுத்தமான விழிகளுடன் பெயரை உச்சரித்தவன், அணிந்திருந்த சட்டையை கழற்றி முதுகுப் புறத்தை காட்ட, அவன் பேசுவதை நம்ப முடியாத திகைப்புடன் கேட்டுக்கொண்டிருந்தவளுக்கு அடுத்து தான் பார்த்த காட்சியில் உலகமே சுற்றிவிட்டது.

தீக்காயங்கள் ஆறிய வடுக்களுடன் கூடிய உடல். அந்த காயங்களுக்கு நடுவே கழுத்திற்கு கீழ் அரைகுறையாக தெரிந்த ஒரு டாட்டூ. அந்த ஒரு ட்ராகன் டாட்டூவென தலைப்பகுதி மட்டும் தெரிந்ததிலேயே உணர்ந்துவிட்டாள் கயல். இத்தனைநாட்கள் அபி ஆடையால் அதை மறைத்திருந்ததில் அவளுக்குத் தெரியவில்லை. இன்று பார்த்துவிட்டாள்.

ஆனால், அவள் கொஞ்சமும் எதிர்ப்பாராத ஒன்று. அவள் மனம் இதற்கு முன் அபியின் அருகாமையில் உணர்ந்த ‘தன்னவன்’ என்ற உணர்வை மீண்டும் ஆணித்தரமாக உணர்த்தியது. கொஞ்சமும் மாறாத இதே டாட்டூ தன்னவனின் கழுத்திற்கு கீழும் இருப்பதை பார்த்திருந்த வீராவின் மனைவிக்கு இனி தெரியாதா என்ன, அபி யாரென்று?

அவளிதழ்கள் “வீர்…” மெல்ல அசைக்க, அழுவதற்கு கூட முடியாத அதிர்ச்சியில் நின்றிருந்தவளுக்கு மூச்சுத் திணறலே வந்துவிட்டது. ஆனால், அவளிடம் தன்னை உணர்த்திவிட்டு அபி இல்லை இல்லை வீரஜ் வேகவேகமாக அங்கிருந்து வெளியேறியிருக்க, கரத்தை அவனை நோக்கி நீட்டி அழைத்தவாறு மூச்சுக்காக சிரமப்பட்டுக்கொண்டிருந்தவளை இறுதியில் சமாதானப்படுத்தியவர்கள் சுற்றியிருந்தவர்கள்தான்.

சில கணங்கள் கழித்தே மூச்சுத்திணறல் சற்று நின்று ஆசுவாசமடைந்தவளின் விழிகள் மயக்கத்தில் மூட, அவள் நினைவுகளோ பார்த்திபன் இறந்ததற்கு பின் நடந்த அத்தனை சம்பவங்களையும் மீட்டின.