லவ் ஆர் ஹேட் 19

eiBXQCU79229-6ffad8d2

லவ் ஆர் ஹேட் 19

காலை அலுவலகத்தில்,

“யாதவ், இதை கொஞ்சம் பாருங்க. எனக்கு கொஞ்சம் டவுட் இருக்கு. கொஞ்சம் க்ளியர் பண்ண முடியுமா?” என்று கேட்டவாறு மூச்சு காற்று படும் தூரத்திற்கு யாதவ்வை அனிதா நெருங்கி நிற்க, அவனோ அவளின் உணர்வுகளையும், நெருக்கத்தையும் கவனிக்கும் நிலையில்லை.

அவனும் அவளோடு ஒட்டிக்கொண்டே அவளின் கையிலிருந்த கோப்பை பார்த்தவாறு சந்தேகங்களை விளக்கப்படுத்திக் கொண்டிருக்க, அப்போது தான் ரேகாவுடன் சிரித்துப் பேசியவாறு வந்த ரித்வியோ இருவரும் நெருக்கமாக நின்றுக் கொண்டிருப்பதை பார்த்து அப்படியே அதிர்ந்து நின்றுவிட்டாள்.

என்ன தான் இருந்தாலும் அவனை பார்த்த முதல் காதலிப்பவள் அவள்! இப்போது கணவனாகிவிட்டவன் இன்னொரு பெண்ணுடன் நெருங்கி நிற்பதை அவளால் எப்படி தான் ஏற்றுக்கொள்ள முடியும்? அதற்கு வேலை என்ற காரணம் இருந்தால் கூட…

ரேகா அழைப்பதை கூட கண்டுக்காது இருவரையும் முறைத்துப் பார்த்த ரித்வி, விறுவிறுவென சென்று நின்றது என்னவோ இருவரின் முன் தான்.

தன் முன் அரவம் உணர்ந்து நிமிர்ந்த யாதவ் அவளை கேள்வியாக நோக்க, அனிதா அப்போதும் அவனை விட்டு விலகுவதாக இல்லை. அவனை மேலும் ஒட்டி நின்றவாறு ஓரக்கண்ணால் யாதவ்வை ரசித்தவாறு அவள் இருக்க, அதை பார்க்க அத்தனை கடுப்பானது ரித்விக்கு!

“அனிதா, உன்னை எச்.ஆர் கூப்பிடுறாரு.” என்று சற்று குரலை உயர்த்தியே ரித்வி சொல்ல, அப்போது தான் நடப்புக்கு வந்த அனிதா ரித்வியை சந்தேகமாக பார்த்து, “இப்போ தானே அவர மீட் பண்ணிட்டு வந்தேன்! மறுபடியும் கூப்பிடுறாரா? அப்படியே கூப்பிடுறதா இருந்தாலும் என்னை டிரெக்ட்டா கான்டேக்ட் பண்ணியிருக்கலாமே!” என்று சொல்ல, பதறிவிட்டாள் ரித்வி.

அனிதாவின் கேள்வியில் யாதவ்வின் புருவங்கள் கூட சந்தேகத்தில் சுருங்க, “அது… அது வந்து…” என்று திணறிய ரித்வி, “எதுக்கு இத்தனை கேள்வி? அவர் எதுக்கு கூப்பிடுறாரு?, ஏன் என்கிட்ட உன்னை கூப்பிட சொன்னாருன்னு எனக்கு என்ன தெரியும்? உனக்கு போகனும்னா போ! அப்றம் வர்ற கேள்விக்கு நான் பொறுப்பில்லை.” என்று சமாளிக்க முயற்சித்தாள்.

“ஓகே யாதவ், நாம அப்றம் டிஸ்கஸ் பண்ணலாம்.” என்றுவிட்டு நகர போன அனிதாவோ ஹீல்ஸ்ஸில் தடுக்கி விழ போக, ரித்வி அவளை பிடிக்கும் முன்னே யாதவ் அனிதாவின் இடையை தாங்கி தன்னுடன் சேர்த்து அணைத்துக்கொண்டான்.

இதைப் பார்த்த ரித்வியின் மனநிலையை சொல்லவா வேண்டும்?

“அவ்வா… அவ்வா… அவ்வா…” என்று நெஞ்சில் கைவைத்தவாறு இருவரையும் அதிர்ந்து நோக்கிய ரித்வியின் குட்டி இதயம் அடுத்த நடந்த சம்பவத்தில் வெடித்தேவிட்டது.

யாதவ் தாங்கிக்கொண்டதும் முப்பத்திரண்டு பற்களும் தெரிய இழித்து வைத்த அனிதா அந்த சந்தர்ப்பத்தை சாக்காக வைத்து, “தேங்க் யூ சோ மச் யாதவ்.” என்றவாறு அவனின் கன்னத்தில் முத்தமிட்டுச் செல்ல, இதை யாதவ் கூட சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை.

அவனுடைய பார்வையோ அவனையும் மீறி ஓரக்கண்ணால் தயக்கமாக ரித்வியின் மீது தான் படிந்தது. ஆனால், அடுத்தநொடி அவளின் முகபாவனையை பார்த்து சிரிப்பு முட்டிக்கொண்டு வந்தது அவனுக்கு.

சிரிப்பை அடக்கிக்கொண்டு அவன் நகர்ந்துவிட, ரித்வியின் அருகே வந்த ரேகாவோ உதட்டை பிதுக்கிக்கொண்டு நின்றிருந்த ரித்வியை புரியாது பார்த்து, “கல்யாணம் ஆனாலும் சைட் அடிக்கிறதை விடமாட்டீங்க போல!” என்று சிரிப்புடன் கேட்டு, “இந்த மாதிரி பையன பார்த்தா பொறாமை வர்றது சகஜம் தான். அதுக்காக சொந்தமா கொண்டாட முடியும்? யாருக்கு கொடுத்து வச்சிருக்கோ?” என்று ஏக்கப் பெருமூச்சுவிட்டவாறு நகர்ந்தாள்.

“சொந்தமா… ஆத்தீ! அவர் என் வீட்டுக்கா…” என்று சொல்ல வந்து நிறுத்தி, ‘கிருஷ்ணா! எனக்கு ஏன் இந்த சோதனை?’ என்று மானசீகமாக புலம்பித் தள்ளிவிட்டாள் ரித்வி.

அதே சமயம் மாத்தளை கிராமத்தின் ரயில் நிலையத்தில்,

“ஏம்மா, என்ன பார்த்துக்கிட்டு இருக்க? ட்ரெயின் கிளம்ப போகுது. இரண்டு வீட்டாளுங்களும் அருவாளோட நம்மள தான் தேடி வந்துக்கிட்டு இருக்காங்க.” என்று படபடவென பேசியவாறு இந்திரன் தன் பக்கத்திலிருந்த உத்ராவின் கைகளை பிடிக்க,

அவளோ தனக்கு பக்கத்திலிருந்த சந்திரனின் கைகளை இறுகப்பிடித்து, “வாங்க! நாம ஊர விட்டே ஓடிரலாம்.” என்று பயந்த குரலில் சொல்ல, சந்திரனோ இருவரையும் மாறி மாறி உக்கிரமாக பார்த்தான்.

இந்திரனோ உத்ராவை இழுத்துக்கொண்டு ஓடி ரயிலில் ஏற, அவளோ சந்திரனை இழுத்துக்கொண்டு வந்து தன்னுடன் ஏற வைத்தாள்.

அன்றிரவு,

இன்று நடந்ததை நினைத்தவாறு சோஃபாவில் ரித்வி கோபமாக அமர்ந்திருக்க, அப்போது தான் வீட்டுக்கு வந்த யாதவ் அவளை சிரிப்பை அடக்கியவாறு பார்த்துவிட்டு அறைக்குள் நுழைந்தான்.

அவனும் கவனித்துக் கொண்டு தானே இருக்கிறான்! அவளின் முறைப்பையும், உதட்டுச் சுழிப்பையும்… அதுவும், அவளின் இந்த சிறுபிள்ளை தனமான கோபம் அவனுக்கு சிரிப்பை தான் வரவழைத்தது.

குளித்து உடை மாற்றி வந்தவனின் கையில் ஒரு டயரிமில்க் சாக்லெட். அவளின் பக்கத்திலே சற்று தள்ளி அமர்ந்தவன், “என்ன இன்னைக்கு முறைப்பெல்லாம் ரொம்ப அதிகமா இருக்கு? அதுவும், உன் சீனியர்னு கூட மரியாதை இல்லாம.” என்று கொடுப்புக்குள் சிரித்தவாறு பொய் மிரட்டலுடன் கேட்க,

அவனை நிமிர்ந்து பார்க்காது தரையை வெறித்தவாறு, “அப்படி என்ன மரியாதை குறைஞ்சி போச்சி? சும்மா சும்மா என்னையே குறை சொல்ல வேண்டியது! ஆனா, அவங்க அவங்களோட போக்குக்கு நடந்துக்க வேண்டியது!” என்று ரித்வி சத்தமாக ஆரம்பித்து முணுமுணுப்போடு நிறுத்த, யாதவ் தான் அதிர்ந்து நோக்கினான்.

முதல்தடவை அவளின் இப்படியான பேச்சை அவன் கேட்கிறான். அவனை பார்த்தாலே வார்த்தைகள் வராது திணறும் ரித்வியா இது? என்ற ஆச்சரியம் அவனுக்கு.

‘வர வர வாய் கொழுப்பு இவளுக்கு ரொம்ப அதிகமாகிருச்சி.’ என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்டவன் சாக்லெட்டை நீட்டி, “உனக்கு ஸ்வீட் அதிகம் பிடிக்கும்னு அதிபா சொன்னான். சாப்பிடுறியா?” என்று கேட்க, சட்டென திரும்பி அதை ஆர்வமாக எடுக்க வந்த ரித்வி, பின்னரே தான் கோபமாக இருப்பதை உணர்ந்து, “அதெல்லாம் வேணாம்.” என்று முகத்தை திருப்பிக்கொள்ள, அவன் விட்டால் தானே!

தோள்களை குலுக்கிவிட்டு கவரை பிரித்து ஒரு சாக்லெட் துண்டை சாப்பிட்ட யாதவ், “ஆஹா! என்ன ருசி? இதை வேணாம்னு சொல்ல உனக்கு எப்படி மனசு வந்திச்சி?” என்று கேட்டு அவளை உசுப்பேற்ற, பொறுத்துப் பொறுத்து பார்த்த ரித்வி ஒரு கட்டத்திற்கு மேல் முடியாமல், “கொடுங்க.” என்று கையை நீட்டினாள்.

அவனோ, “எத?” என்று எகத்தாளமாக கேட்க, அவன்புறம் திரும்பி அமர்ந்தவள், “சாக்லெட் என்னோடது தானே! கொடுங்க.” என்று உதட்டை சுழித்தவாறு சொன்னாள்.

“அதெல்லாம் தர முடியாது. முடிஞ்சா என்கிட்டயிருந்து எடுத்துக்கோ!” என்று கேலியாக சொன்னவாறு அவன் அங்கிருந்து எழுந்து செல்ல, ரித்வியும் சாக்லெட்டை சாப்பிடும் ஆர்வத்தில், “அதை கொடுக்க போறீங்களா? இல்லையா?” என்று கேட்டவாறு அவனிடமிருந்து பிடுங்க முயன்றாள்.

அவனும் கையை மேலே உயர்த்தி, ஒரு கையிலிருந்து இன்னொரு கைக்கு மாற்றி என அவளுக்கு விளையாட்டு காட்ட, அவளும் சாக்லெட்டை எடுப்பதிலே குறியாக இருந்தாள். ஆனால், இருவருமே தாங்கள் நெருங்கி பழகுவதை உணரவில்லை.

சுவரில் சாய்ந்து நின்ற யாதவ் கையை மேலே உயர்த்தி ஏளனமாக சிரிக்க, எட்டி அதை எடுக்க முயற்சித்தவள் முடியாது அவனின் பாதத்திற்கு மேல் தன் பாதத்தை வைத்து ஏறி அதை எடுக்கப் போக, இப்போது தான் நடப்பது மூளைக்கு உரைத்தது யாதவ்விற்கு. இரு உடல்களும் உரச, இருவரும் நெருங்கி நிற்க, அவனுக்கோ இதுவரை அவளிடம் தோன்றாத உணர்வுகள் எல்லாம் தோன்ற ஆரம்பித்தன.

அவனுடலுடன் தன்னுடலை ஒட்டியவாறு  எட்டி சாக்லெட்டை பறித்துவிட்டு அவனுக்கு நாக்கை துருத்தி பழிப்பு காட்டியவாறு அவன் முகத்தை கவனித்தவளுக்கும் அப்போது தான் தன்னவன் பார்வையின் வித்தியாசம் புரிந்தது.

யாதவ்வின் விழிகளையே பார்த்தவாறு ரித்வி இருக்க, படபடக்கும் அவளின் விழிகளை பார்த்தவனின் ஹார்மோன்கள் தாறுமாறாக வேலை செய்ய, தானாக எழுந்த அவனுடைய கரங்கள் அவளின் மெல்லிடையை வளைத்து தன்னுடன் அணைத்துக்கொண்டன. இருவரின் இதயமும் படபடவென அடித்துக்கொள்ள, இதயம் அடித்துக்கொள்ளும் சத்தம் இருவரின் காதுகளிலுமே ஒலித்தது.

இதழ்களை ஈரமாக்கி  அவள் கன்னத்தில் யாதவ் தன் முதல் முத்திரையை பதிக்க, ரித்வியோ கண்களை இறுக மூடிக்கொண்டாள். இருவரும் இந்த உலகிலே இல்லை.

அவளின் கன்னத்திலிருந்து தன்னிதழை எடுக்க மனமில்லாது அவள் கன்னத்தை வருடியவாறே இதழை நாடிக்கு கொண்டு சென்றவன் அங்கும் முத்தத்தை பதிக்க, ரித்வியால் தனக்குள் உண்டாகும் உணர்ச்சி மாற்றத்தை கட்டுப்படுத்தவே முடியவில்லை.

அவளுடைய கைகள் அவனின் டீஷர்ட் கோலரை இறுகப்பற்றியிருக்க, அவனின் கரங்களோ அவளின் இடையை மீட்டிக்கொண்டிருந்தன.

நாடியிலிருந்து அவளிதழுக்கு மேல் தஞ்சமடைந்த அவனிதழ்கள் அதை மெதுவாக வருடி தன் வசமாக்கி இதழ் தேனை அருந்த போகும் சமயம், அழைப்பு மணி சத்தத்தில் மோனநிலை அறுப்பட்டு நடப்புக்கு வந்தனர் இருவரும்.

ரித்வியோ பதறிக்கொண்டு விலகி அடுத்து என்ன செய்வதென்று தெரியாது மூளை வேலை நிறுத்தம் செய்தது போல் உறைந்துப் போய் நின்றிருக்க, யாதவ்விற்கோ இதயம் வேகமாக துடித்தது.

‘என்ன காரியம் செய்துவிட்டாய்? உணர்ச்சிகளை கூட கட்டுப்படுத்த முடியாத பலவீனமானவனா நீ?’ என்று அவனுடைய மனசாட்சி தன்னை தானே கடிந்துக்கொள்ள, தலைமுடியை கோதி தன்னை சமன்படுத்தியவன் வேகமாக சென்று கதவை திறந்தான்.

கதவை திறந்த யாதவ்வின் விழிகள் அதிர்ந்து விரிந்து பின் கேள்வியாக சுருங்க, அவன் அசையாது நிற்பதை பார்த்து வந்த ரித்வியும் எதிரில் நின்றிருந்தவர்களை பார்த்து அதிர்ந்துப் போனாள்.

எதிரே திருதிருவென விழித்தவாறு இந்திரன் உத்ராவின் கையை பிடித்துக்கொண்டு நின்றிருக்க, அவளோ முறைத்துக் கொண்டு நின்றிருந்த சந்திரனின் கையை பிடித்தவாறு ஒருவித சங்கடத்துடன் நின்றிருந்தாள்.

“இந்து… சந்து…” என்று இருவரையும் மாறி மாறி புரியாது பார்த்த ரித்வி உத்ராவை அதிர்ந்து நோக்க, யாதவ்வோ புருவத்தை நெறித்து யோசித்து நடுவிலிருந்த உத்ராவை, “இந்த பொண்ணு…” என்று கேள்வியாக இழுத்தான்.

“இதுவா? என் லவ்வரு.” என்று இந்திரன் பட்டென்று பதில் சொல்ல, அவனை திரும்பி முறைத்துப் பார்த்த உத்ராவோ, “அய்யோ! இல்லை இல்லை. நான் இவரோட லவ்வரு.” என்று பதறியபடி சொல்ல, சந்திரனோ “ஏசப்பா!” என்று வாய்விட்டு புலம்பினாள் என்றால், “ஓஹோ! முக்கோண காதலா? கன்டென்ட் நல்லா இருக்கும் போலயே…” என்று நாடியை நீவிவிட்டவாறு சொல்லிக் கொண்டான் யாதவ்.

உள்ளே வந்த மூவரும் அந்த பெரிய சோஃபாவில் அடுத்தடுத்தென அமர்ந்திருக்க, அவர்களுக்கெதிரே அமர்ந்திருந்தனர் யாதவ்வும், ரித்வியும். ரித்விக்கோ திக்திக் நிமிடங்கள் தான். சிறிது நேரம் அனைவரும் ஒருவித மௌனம்!

அந்த மௌனத்தை கலைக்கும் விதமாக ‘ஹ்ர்ம்… ஹ்ர்ம்…’ என்று குரலை செறுமிய யாதவ், “வேலையில இருந்ததால அப்பா கோல் பண்ணும் போது அட்டென்ட் பண்ண முடியல. இப்போ தான் புரியுது. ஊருல என்ன தப்பு பண்ணிட்டு வந்திருக்கீங்க? இது அந்த ஆரனோட மாமாப்பொண்ணு தானே?” என்று சந்தேகமாக கேட்க, ஒருவரையொருவர் பார்த்துக்கொண்ட மூவரும் திருதிருவென விழித்தனர்.

இருவரும் மூவரை கூர்மையாக நோக்க, தொண்டையை செறுமிய இந்திரன், “நடந்ததை நான் சொல்றேன் யாதவ். இது ஆரனோட மாமாப்பொண்ணு தான். கொஞ்சநாளைக்கு முன்னாடி இந்த பொண்ணு போற வர்ற நேரமெல்லாம் என்னை பார்த்துக்கிட்டு சைட் அடிச்சிக்கிட்டு இருந்திச்சி.” என்று சொல்ல, சட்டென்று அவனை திரும்பி பார்த்து முறைத்தாள் உத்ரா.

“கொஞ்சம் பொறும்மா! பொறு! சொல்லிக்கிட்டு இருக்கேன்ல…” என்று அவளின் முறைப்பை உணர்ந்து சமாளித்த இந்திரன் மீண்டும் தொடர்ந்தான்.

“ஆரம்பத்துல பார்க்குறதோட சரி, அப்றம் ஒருநாள் நான் தோப்புல இருக்கும் போது சட்டுன்னு வந்து என்கிட்ட லவ் அ  சொல்லிருச்சி.” என்று இந்திரன் சொல்லவும், இப்போது அவனை திரும்பி முறைத்துப் பார்ப்பது சந்திரனின் முறையாயிற்று.

“இரு… இரு… எதுக்கு மூக்கால முறைக்கிற? சொல்றேன். சொல்றேன்.” என்றுவிட்டு ஒரு பெருமூச்சுவிட்டவாறு, “அன்னைக்கு என்ன நடந்திச்சின்னா…” என்று இழுத்த இந்திரனின் நினைவுகள் அன்று நடந்த நிகழ்வுக்கு தான் சென்றது.

அன்று தோப்பில்,

இந்திரனின் முன் நின்றிருந்த உத்ராவோ, “அது வந்து… அது… நான் கொஞ்சநாளாவே…” என்று திணற, பரவசமாக அவளை நோக்கிய இந்திரன், “சொல்லு! சொல்லு! எதுக்கு இத்தனை திணறல்? நான் எதுவும் நினைச்சிக்க மாட்டேன். சீக்கிரம்!” என்று அவசரப்படுத்தினான்.

“நானும் கொஞ்சநாளாவே என் மனசுல இருக்குறதை சொல்ல தான் பார்த்துக்கிட்டு இருக்கேன். ஆனா, நீங்க என்ன நினைப்பீங்களோன்னு தான்.” என்று உத்ரா தயக்கமாக இழுக்க, “என்னம்மா நீ? சரி விடு! எனக்கு தான் தெரியுமே… நானும் உன்னை கவனிச்சிக்கிட்டு தான் இருக்கேன்.” என்று வெட்கப்பட்டவாறு சொன்னான் இந்திரன்.

“ஓஹோ! உங்களுக்கு புரிஞ்சிருச்சா? நல்லதா போச்சு! ஆனா, அவங்க ஒத்துக்கனுமே…” என்று உத்ரா உதட்டை பிதுக்க, “யாரு? என் அப்பாவா? அவரு கிடக்குறாரு டம்மி பீஸு!” என்று தெனாவெட்டாக இந்திரன் சொல்லவும், “ச்சீ… ச்சீ… இல்லை. அதான் சந்திரா…” என்று தயக்கமாக இழுத்தாள் அவள்.

அந்த நாதாரி சம்மதம் எல்லாம் நமக்கெதுக்கு? அவனையெல்லாம் மனுஷனாவே மதிக்கிறது இல்லை. நீ மொதல்ல அந்த முக்கியமான மூனு வார்த்தைய சொல்லும்மா.” என்று இந்திரன் மீண்டும் ஆர்வத்துடன் கேட்க, ‘ஙே’ என்று அவனை ஒரு பார்வை பார்த்தவள், “என்ன பேசுறீங்க நீங்க? அவர் ஒத்துக்காம எப்படிங்க நாங்க சேர்ந்து வாழ முடியும்?” என்று புரியாது கேட்டாள்.

நாங்க சேர்ந்து வாழ எதுக்கு அவன்?” என்று அவன் கேட்டதும் அதிர்ந்தேவிட்டாள் உத்ரா.

“ஹெலோ, நான் காதலிக்கிறது உங்க ப்ரதர் சந்திராவ.” என்று உத்ரா சொல்ல, “எத?” என்று அதிர்ந்து கேட்டு நெஞ்சில் கைவைத்தவனுக்கு அட்டகத்தி தினேஷ் நிலை தான். கூடவே, ‘தில்வாலே புச்டே னே சா ஓஓஓ….’ என்ற பிண்ணனி பாடல் வேறு!

நடந்ததை இந்திரன் சொல்லி முடிக்க, யாதவ்விற்கும் ரித்விக்கும் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. சந்திரனோ தலையில் கை வைத்து அமர்ந்திருக்க, அப்போது தான் ஒன்றை உணர்ந்த ரித்வி, “அய்யோ கிருஷ்ணா! அப்போ ஊரே இப்போ களவர பூமியாகியிருக்குமே!” என்று மிரண்டு போய் கேட்க, சரியாக அழைப்பு மணி ஒலித்தது.

வேகமாக ஓடிச்சென்று கதவை திறந்த  ரித்வி எதிரே நின்றிருந்தவனை பார்த்து உற்சாகமாகி, “அதி…” என்று அழைத்து முடிக்கவில்லை, அவளை ஓரமாக தள்ளி நிறுத்தி ஆக்ரோஷமாக உள்ளே வந்த அதிபன் அங்கு நின்றிருந்த இரட்டை சகோதரர்களை, “டேய் இன்னைக்கு உங்க சாவு என் கையில தான்.” என்று கத்தியவாறு அடிக்கத் துரத்த, சந்திரனும் இந்திரனும் வீட்டையே சுற்றிவிட்டனர்.

“என்ன காரியம் பண்ணி வச்சிருக்கீங்க? அங்க ஊரே பிரச்சினையா இருக்கு. அதுவும் அந்த கிழவிய பத்தி சொல்லவா வேணும்? ஏதோ குடும்பமே சேர்ந்து அவங்க வீட்டு பொண்ண தூக்கின மாதிரி வீட்டு வாசல்ல வந்து பிரச்சினை பண்ணுது.” என்று கோபமாக அதிபன் சொல்ல, “பாட்டி…” என்று பல்லைகடித்தாள் உத்ரா.

உத்ராவை முறைத்துப் பார்த்து, “ஏம்மா அறிவில்லை உனக்கு? லவ் பண்றீங்கன்னா வீட்டுல சொல்லி வர்ற பிரச்சினைய ஃபேஸ் பண்ணி சேர ட்ரை பண்ணியிருக்கனும். ஒரு முயற்சியும் எடுக்காம ஓடி வந்துட வேண்டியது! அவ தான் சின்ன பொண்ணு, உங்களுக்கு எங்க டா போச்சு புத்தி?” என்று அதிபன் கேட்ட கேள்விக்கு சந்திரன் சொன்ன பதிலில் உத்ராவும், இந்திரனும் திருதிருவென விழித்தார்கள் என்றால், மற்றவர்களோ அதிர்ந்து வாயிலே கைவைத்து விட்டனர்.

அதிபன் கத்தியதில் கடுப்பான சந்திரன், “டேய், இந்த பொண்ணு லவ் பண்றதே அவ வீட்டை விட்டு ஓடி வந்ததும் தான் டா எனக்கே தெரியும்.” என்று சொல்ல, அதிபனுக்கு தலை சுற்றாத குறை தான்.

உத்ராவை அவன் புரியாது பார்க்க, “அது… அது வந்து… நான் அவரை காதலிச்சேனா… இந்திராக்கிட்ட நான் அவர காதலிச்சதை சொன்னேனா… ஆனா, இந்திரன் அவர்கிட்ட சொல்லல்ல. அப்றம் வீட்டுல மாமாவுக்கு என்னை கட்டிக் கொடுக்குறதை பத்தி பேசினாங்களா… நான் வீட்டை விட்டு ஓடி வந்துட்டேன்.” என்று உத்ரா பாவமாக சொல்லி முடிக்க,

“கல்யாணம் அன்னைக்கு ஓடி வர்ற பொண்ண பார்த்திருக்கேன். இது என்ன கல்யாண பேச்சை எடுத்ததுமே ஓடி வந்திருக்க? புதுசா இருக்கே…” என்று நாடியை நீவியவாறு சொன்னான் யாதவ்.

“இதோ இவனுக்காக ஓடி வந்திருக்கா. அதுவும், எவன் போட்டு கொடுத்தானோ தெரியல. இவ வந்த அரைமணி நேரத்துலயே இவ வீட்டை விட்டு வந்த விஷயம் அவங்க வீட்டுக்கு தெரிஞ்சதா நான் வச்சிருந்த என் உழவுத்துறை அமைச்சால இன்ஃபோர்மேஷன் வந்திச்சி. இவள கூட்டிட்டு நம்ம வீட்டுக்கு போனா கண்டிப்பா செருப்ப சாணியில முக்கி அடிப்பாங்க. அதான் நானே இரண்டு பேரையும் இங்க கூட்டிட்டு வந்துட்டேன்.” என்று இந்திரன் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு சொல்ல, அதிபன் அவனை அடித்தானோ இல்லையோ? சந்திரன் அவனை வெளுத்தெடுத்தான்.

“சந்திரா, நீ உன் மனசை தொட்டுச் சொல்லு! இந்த பொண்ண உனக்கு பிடிக்கலையா?” என்று யாதவ் கேட்க, சந்திரனோ உத்ராவை திரும்பிப் பார்க்க, அவளோ கண்களை விரித்து ஆர்வமாக அவனின் பதிலுக்காக காத்திருந்தாள்.

ஷேஹா ஸகி

Leave a Reply

error: Content is protected !!