லவ் ஆர் ஹேட் 22

eiBIJLD26702-63f646a6

யாதவ்வே ரித்வியை அலுவலகத்திற்கு தன் வண்டியில் அழைத்துச் செல்ல, அவனுடைய பைக்கில் அமர்ந்துச் சென்றவளுக்கு முதல்தடவை ஊரிலிருக்கும் போது அவனுடன் சென்ற பயணம் தான் நியாபகத்திற்கு வந்தது. கூடவே, அதே  வெட்கமும், பதட்டமும்…

அலுவலகத்தை நெருங்கும் போதே அவன் தோளை, “என்னங்க… என்னங்க…” என்று சுரண்டியவள், “இங்கேயே நிறுத்துங்க. யாராச்சும் பார்த்தா…” என்று முடிக்கவில்லை, மின்னல் வேகத்தில் வண்டியை செலுத்தி அலுவலக கட்டிடத்திற்கு முன் தான் வண்டியை நிறுத்தினான் யாதவ்.

அவன் சென்ற வேகத்தில் பயந்து அவனின் சட்டையை இறுகப்பற்றிக் கொண்ட ரித்வி, அவன் வண்டியை நிறுத்தியதுமே வேகமாக இறங்கி அலுவலகத்திற்குள் ஓடிவிட, அவள் பின்னாலே அடக்கப்பட்ட புன்னகையுடன் வந்த யாதவ் அலுவலகத்திலிருந்து வெளியான போது கூட அவளை விடவில்லை.

பஸ் தரிப்பிடத்தில் பஸ்ஸிற்காக காத்திருந்தவளின் முன்னால் வந்து வண்டியை நிறுத்தி பின்னால் வந்து அமரும்படி யாதவ் கண்களால் சைகை செய்ய, அவளுக்கு தான் திக்கென்றானது. இதில் இவர்களுடன் வேலை பார்க்கும் பாதி பேர் அத்தரிப்பிடத்தில் நின்றிருக்க, கண்களால் மற்றவர்களை காட்டி, “அவங்களுக்கெல்லாம் தெரிஞ்சா பரவாயில்லையா உங்களுக்கு?” என்று ஹஸ்கி குரலில் கேட்டாள் அவள்.

அவனோ குறும்புப்புன்னகையுடன் சாதாரணமாக தோளை குலுக்கி, “எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. உனக்கு பிரச்சினையோ, இல்லையோ? ஐ டோன்ட் க்யார். சீக்கிரம் ஏறு! ஒரு முக்கியமான இடத்துக்கு போகனும்” என்று சொல்ல, தன்னவனையும் தன்னுடன் நின்றிருந்தவர்களையும் மாறி மாறி பார்த்த ரித்வி அவர்களின் வாயைப் பிளந்த வண்ணம் நின்றிருந்த பாவனையில் வெட்கம் கலந்த சங்கடத்துடன் அவனின் பின்னால் ஏறிக்கொண்டாள்.

அவள் ஏறியதுமே வண்டியை வேகமாக செலுத்தியவன், கொண்டு சென்று நிறுத்தியது என்னவோ கொழும்பில் பிரசித்துப்பெற்ற கோல்ஃபேஸ்(Galleface) கடற்கரைக்கு தான். ரித்விக்கோ கடற்கரையை பார்த்ததும் அத்தனை உற்சாகம்!

நீரின் பக்கத்திற்குச் செல்ல தடை விதித்திருந்ததால் அங்கு கட்டப்பட்டிருந்த நீள பாளத்திற்கு மேலிருந்து கடலலைகள் பாய்ந்து வரும் அழகை இவள் ரசிக்க, இவளை ரசித்தவாறே அவள் பக்கத்தில் நின்றிருந்தான் யாதவ். சிறிதுநேரம் அலைகளையே பார்த்திருந்த ரித்வி, தான் உணர்ந்த ஊசி துளைக்கும் பார்வையில் சட்டென திரும்பிப்பார்க்க, அவனின் இமை சிமிட்டாத பார்வையை பார்த்து கன்னங்கள் குப்பென்று சிவந்துவிட்டது அவளுக்கு.

இதெல்லாம் கனவா? நினைவா? என்றே அவளுக்கு இப்போது வரை சந்தேகம் தான். இத்தனைநாட்கள் முறைத்துக்கொண்டு விறைப்பாக திரிந்தவன் இன்று இத்தனை மென்மையாக! சந்தோஷ அலை மோதியது அவள் மனதில்.

அதுவும், அவர்கள் வந்த நேரம் சூரியன் அஸ்தமனமாகும் நேரமென்பதால் அந்த காட்சியோ சூரியன் கடலில் மூழ்குவது போல் காட்சியளிக்க, அந்த கண்ணை கவரும் காட்சியில் ரித்வி மூழ்கினாள் என்றால், தன் விழிகளுக்குள் அவளை மூழ்கடித்துக்கொண்டிருந்தான் யாதவ்.

அங்கு சிறிதுநேரம் இருந்துவிட்டு இருவரும் வீட்டிற்குச் செல்ல, தேவையான பொருளொன்றை வாங்குவதற்காக ஒரு கடைக்கு முன் வண்டியை நிறுத்தினான் யாதவ். அவன் கடைக்குள் நுழைந்ததும் இங்கு வண்டிக்கு பக்கத்தில் நின்றிருந்தவளுக்கு ஏதோ ஒரு மன உந்துதல்!

இந்த இடம்… இந்த பாதை…  ஏதோ ஒன்றை உணர்த்தியது அவளுக்கு. அந்த பாதை ஒரு இடத்திற்கு வழிகாட்டுவது போல் ஒரு பிரம்மை அவளுக்குள்! தன்னை மறந்து அந்த பாதை சொல்லும் வழியில் அவள் கால்கள் தானாக செல்ல, சிலநிமிடங்கள் கழித்து வந்த யாதவ் அங்கு தன்னவளை காணாது அதிர்ந்துவிட்டான்.

“ரித்வி… ரித்விகா…” என்று கத்தி கத்தி அழைத்தவனுக்கு ‘அவள் எங்கு தான் சென்றிருப்பாள்?’ என்று சுத்தமாக தெரியவில்லை. சுற்றி முற்றி அந்த பாதையில் தன்னவளை தேடியவாறு யாதவ் அலைய, இங்கு ஒரு வீட்டின் வாசற்கதவுக்கு முன் பிரம்மை பிடித்தவள் போல் நின்றிருந்தாள் ரித்வி. அவளுடைய கண்ணில் விடாது கண்ணீர் சொரிந்துக்கொண்டிருந்தது.

வாசற்கதவை திறந்து உள்ளே நுழைந்தவளுக்கு அந்த சிறிய தோட்டத்திற்கு நடுவிலிருந்த பூட்டியிருந்த வீட்டை பார்த்ததுமே பல நினைவுகள் மனதில் சுழல ஆரம்பித்தன. எத்தனை எத்தனை இனிமையான நினைவுகள்!

அவளுடைய பார்வையோ தோட்டத்தில் ஒரு ஓரமாக அமைக்கப்பட்டிருந்த அச்சிறிய ஊஞ்சலின் மேல் படிந்தது. சரியாக பராமரிக்கப்படவில்லை போலும்! அந்த ஊஞ்சல் சங்கிலியில் கொடிகள் படர்ந்து சற்று துரும்பிடித்து இருக்க, அதை வருடியவளுக்கு முதல்தடவை இதே இடத்தில் ஊஞ்சலை அமைக்கும் போது தான் கொண்ட சந்தோஷத்தை மறக்கவே முடியாது.

“ப்பா, சீக்கிரம். எனக்கு விளையாடனும்” என்ற குழந்தை ரித்வியின் குரலில் அத்தனை ஆனந்தம்!

ஆம், சிறுவயதில் ரித்வி அவளின் பெற்றோருடன் வாழ்ந்த வீடு தான் அது.

அவள் பெற்றோருடனான ஏகப்பட்ட இனிமையான நினைவுகள் அங்கு!பார்க்கும் இடமெல்லாம் அவளின் சிறுவயது கிறுக்கல்கள். அந்த நினைவுகளிலிருந்து மீளவே முடியவில்லை அவளால்.

அழுகை தொண்டையை அடைக்க, கீழுதட்டை கடித்து கண்களை அழுந்த மூடி அந்த ஊஞ்சல் சங்கிலியை இறுகப்பிடித்தவாறு நின்றிருந்தாள் ரித்வி.

சரியாக, “ரிது…” என்ற குரலில் பட்டென கண்களை திறந்த ரித்வி திடுக்கிட்டு திரும்பிப் பார்க்க, அங்கு யாதவ்வோ கண்கள் சிவந்து முகமெல்லாம் வியர்த்து இடுப்பில் கைக்குற்றி மூச்சுவாங்கியவாறு அத்தனை கோபத்தோடு நின்றிருந்தான். அவனை அதிர்ந்து நோக்கியவள், “என்னங்க, நீங்க…” என்று திக்கித்திணறி கேட்டு முடிக்கவில்லை, வேகமாக அவளை நெருங்கி அவளின் கன்னத்தில் ‘பளார்’ என அறைந்திருந்தான் அவன்.

கன்னத்தை பொத்தியவாறு ரித்வி அதிர்ந்து நோக்க, “கொஞ்சம் கூட அறிவில்லையாடி உனக்கு? இப்படி தான் சொல்லாம கொல்லாம எங்கேயாச்சும் தொலைஞ்சி போய் என்னை பதற விடுவியா? ச்சே! உன்னை காணாம துடிச்சி போயிட்டேன் டி” என்று கோபமாக ஆரம்பித்து தழுதழுத்த குரலில் முடித்த யாதவ் தன்னவளை இறுக அணைத்து அவளின் கழுத்தில் முகத்தை புதைத்துக்கொள்ள, விக்கித்து நின்றுவிட்டாள் அவள்.

அடுத்து என்ன செய்வது? ஏது செய்வதென்றே தெரியவில்லை அவளுக்கு. யாதவ்வோ மீண்டும் அவள் தொலைந்து விடுவாளோ? என்ற பயத்தில் அவளை மேலும் மேலும் இறுக அணைத்துக்கொண்டே செல்ல, அவனின் உடும்புப்பிடிக்கு நடுவில் பெக்கபெக்கவென விழித்தவாறு நின்றிருந்தவளுக்கு நிஜமாகவே அவன் பிடியில் உடல் வலிக்க ஆரம்பித்துவிட்டது.

“ரொம்ப பயந்துட்டேன். இனி இப்படி பண்ணாத ரிது!” என்று அவளை அணைத்தவாறே அவன் சொல்ல, ரித்விக்கோ வானத்தில் பறப்பது போன்ற உணர்வு!

ஏற்கனவே அவனை காதலிப்பவள் அவள்! இப்போது அவனுடைய செயலிலும், நெருக்கத்திலும் அவன் மேலிருந்த காதல் பெருகிக்கொண்டே செல்ல, தன்னை மீறி அவளுடைய கைகள் எழுந்து அவனை அணைக்க சென்றன.

ஆனால், அதேநேரம் அவள் கழுத்தில் முகத்தை புதைத்திருந்த யாதவ், முகத்தை நிமிர்த்தி அவள் கண்களை புருவத்தை சுருக்கி நேருக்கு நேராக  பார்த்து கேட்ட கேள்விகளில் இதுவரை அவளுக்கிருந்த இனிமையான உணர்வுகள் யாவும் வடிந்துப்போய், அவனை அணைக்க வந்த கைகள் அந்தரத்தில் நின்றன.

“ரிது, இங்க ஏன் வந்த? ஆமா… இது யாரோட வீடு? ஆனா, உள்ள யாரும் இருக்குற மாதிரி தெரியல்லையே… ஒருவேள, உனக்கு தெரிஞ்சவங்க யாராச்சும் இங்க இருந்தாங்களா? பட், இந்த ஊருல உனக்கு யாரோட வீட்டுக்கு வர்ற அளவுக்கு பழக்கம்?” என்று யாதவ் தன் கேள்விகளை அடுக்கிக்கொண்டே போக, திணறிவிட்டாள் அவள்.

“அது… அது வந்துங்க நான்… நான் இங்க…” என்ன சொல்வது? எப்படி சமாளிப்பது? என்று தெரியாது ரித்வி தடுமாற, அவளை புருவத்தை சுருக்கி கேள்வியாக பார்த்தவன், “சரி விடு! நேரமாச்சு. வீட்டுக்கு போகலாம்” என்றுவிட்டு அவளின் கையை இறுகப்பிடித்தவாறு அழைத்துச் செல்ல, அவளுக்கோ அப்போது தான் ‘ஹப்பாடா!’ என்றிருந்தது.

வீட்டுக்கு வந்ததுமே குளித்து உடை மாற்றிய ரித்வி, இரவுணவை முடித்துவிட்டு பால்கெனி கதவு நிலையில் சாய்ந்தவாறு வானத்தை வெறித்தவாறு நின்றிருந்தாள். அவளுடைய நினைவுகளோ பத்து வருடத்திற்கு முன் நடந்த சம்பவங்களை தான் மீட்டியது.

“வாவ் ம்மீ! இந்த குட்டி கிருஷ்ணர் சிலை ரொம்ப அழகா இருக்கு” என்று தன் அம்மா கொடுத்த கிருஷ்ணர் சிலையை அத்தனை சந்தோஷத்தோடு பார்த்தவாறு குட்டி ரித்வி சொல்ல, அவளின் கன்னத்தில் முத்தமிட்ட ரித்வியின் தாய் ருபிதா, “உனக்கு பிடிச்சிருக்கா பட்டு?” என்று புன்னகையுடன் கேட்டார்.

ரொம்பரொம்ப…” என்று கைகளை விரித்து காட்டிய ரித்வி, “ஆனா ம்மீ, உங்களுக்கு ஜீஸஸ் தானே பிடிக்கும்! அப்படி இருக்கப்போ கிருஷ்ணர வாங்கியிருக்கீங்க?” என்று இதழை சுழித்தவாறு தன் சந்தேகத்தை கேட்க, “நமக்கு பிடிச்சதை விட நம்ம கூட இருக்குறவங்களுக்கு என்ன பிடிக்குமோ அதை பார்த்துப் பார்த்து பண்ணனும். அதுல தான் உண்மையான சந்தோஷமே இருக்கு” என்று புன்னகையுடன் சொன்னார் ருபிதா.

கூடவே, “ராதாவ காதலிச்ச   கிருஷ்ணர் மாதிரி உனக்கு ஒரு பையன் கிடைப்பான் பட்டு” என்று அவர் சொல்ல, சரியாக அவரை இடையிட்டார் அவரின் காதல் கணவர் இளமாறன்.

“என் பொண்ணுக்கு கிருஷ்ணர் மாதிரி வேணாம். அந்த ராமன் மாதிரி பையன் தான் கிடைப்பான். இவள மட்டுமே நேசிக்கிற பையன்” என்று இளமாறன் ரித்வியின் தலைமுடியை கலைத்துவிட்டவாறு சொல்ல, இருவரையும் உதட்டி பிதுக்கி மாறி மாறி பார்த்த குட்டி ரித்வி, “எனக்கு இப்போ கல்யாணம் பண்ண இஷ்டம் இல்லை” என்று பெரிய மனுஷி தோரணையில் சொன்னதும், அவள் சொன்ன விதத்தில் பக்கென்று சிரித்துவிட்டனர் இருவரும்.

தன் பெற்றோரின் நினைவுகளில் அவள் கண்களிலிருந்து சொரிந்த விழிநீர் கன்னத்தினூடே தரையை தொட, “ம்மீ… ப்பா…” என்று வானத்தை பார்த்து இதழைச்சத்தவள் கண்ணீரை அழுந்தத்துடைத்து மீண்டும் முழுநிலவை வெறித்தவாறு நின்றாள்.

சரியாக தன் காதருகே உணர்ந்த சூடான வெப்பக்காற்றில் விதிர்த்துப் போய்விட்டாள் ரித்வி. சட்டென அவள் திரும்ப அவளது நெற்றியோ அவளுக்கு பின் மிகவும் நெருக்கமாக நின்றிருந்த அவனவளின் இதழில் பட,  உடலில் ஒரு சிலிர்ப்பு! அவனுக்கும் அதே சிலிர்ப்பு உண்டானதோ என்னவோ!

“என்ன யோசிச்சிக்கிட்டே இருக்க?” என்று யாதவ் கேட்கவும், அவனின் பார்வையை சந்திக்க முடியாது தலைகுனிந்தவளுக்கு சொல்ல முடியாத குற்றவுணர்ச்சி! என்ன தான் இருந்தாலும் அவளின் பெற்றோர் பற்றிய ரகசியத்தை அவனிடம் மறைக்கத்தானே செய்கிறாள்!

“அது வந்து… அது…” என்று ரித்வி தடுமாறவும் அவளின் உதட்டில் விரலில் வைத்து, ‘ஷ்’ என்றவன், அவளின் நாடியை நிமிர்த்தி அவள் விழிகளை தன் விழிகளுடன் சந்திக்க வைக்க, அவனின் விழிகளை நோக்கியவளுக்கு ஒருநொடிக்கு மேல்  அவன் பார்வையை எதிர்க்கொள்ளவே முடியவில்லை.

ஆனால், இப்போது குற்றவுணர்ச்சி கிடையாது. பார்வை மாற்றத்தினால் உண்டான வெட்கம் அது!

அவளின் மூக்குக்கண்ணாடியை சரிசெய்த யாதவ், அங்குமிங்கும் அலைப்பாய்ந்துக்கொண்டிருந்த தன்னவளின் விழிகளை குறும்பாகப் பார்த்து சிரித்தவாறு, “கயல் மீன்களே பொறாமைக் கொள்ளுமடி உன் கயல்விழிகளின் அழகிய அலைப்புறுதலை பார்த்து…” என்று சொல்ல, அவன் விழிகளை நோக்கியவளுக்கு கன்னங்கள் குப்பென்று சிவந்துபோன.

ஒற்றை விரலால் அவளின் கூர்நாசியை வருடியவன், “என் முகத்தில் எழுதிடு முத்தென கவிகள் உன் கூர்நாசியாலே…” என்று சொல்ல, லேசாக அவளிதழ்களில் வெட்கச்சிரிப்பு எட்டிப்பார்க்க, அதை ரசித்தவாறு அவளிதழை வருடினான் யாதவ்.

“இத்தனைநாள் என் இதழ்கள் இருந்த தவத்தை கலைக்க வேண்டுமடி உன் செவ்விதழ்கள்” என்று அவன் சொன்னதுமே அவளின் இதயம் தாறுமாறாக துடிக்க, அடுத்து அவன் அவளின் இதழை நெருங்கியதும்  கண்களை இறுக மூடிக்கொண்டாள் அவள்.

அவனோ அவளிதழ்களை  பார்த்தவாறு மெல்ல மெல்ல நெருங்க, சட்டென அவனுக்கு வந்த அழைப்பில் “ஸ்ஸ்…” என்று கண்களை மூடி பல்லைக்கடித்த யாதவ், அவசரமாக அந்த அழைப்பை ஏற்று “நேரங்கெட்ட நேரத்துல கோல் பண்ணாதன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன். அப்றம் பேசுறேன். வச்சி தொலை!” என்று தன் நண்பனிடம் கத்திவிட்டு அழைப்பை துண்டித்து திரும்ப, அங்கு அவள் இருந்தால் தானே!

“ரித்விகா…” என்று பல்லைக் கடித்தவாறு திரும்பியவன், அறைக்கதவில் கை வைத்து நின்றிருந்தவளை பார்த்து இடுப்பில் கைக்குற்றி முறைக்க, அவளோ, “என்னங்க, இன்னைக்கு நேரம் சரியில்லைன்னு நினைக்கிறேன். நாம நாளைக்கு பேசிக்கலாம். கிருஷ்ணர வேண்டிட்டு தூங்குங்க” என்றுவிட்டு கதவை வேகமாக சாத்தினாள்.

அவளின் செயலில் “கிருஷ்ணா!” என்று முதலில் வானத்தை பார்த்து புலம்பியவன், பின் பின்னந்தலையில் அடித்து வெட்கமாக சிரித்துக்கொள்ள, ரித்வியோ பூட்டிய கதவில் சாய்ந்து வெட்கப்பட்டு சிரித்துக் கொண்டாள்.

அடுத்தநாள் அலுவலகத்தில்,

ரித்வி கணினியில் வேலைப்பார்த்துக் கொண்டிருக்க, புதிதாக இவர்களின் குழுவில்  இணைந்த தருண் ரித்வியின் அருகில் அமர்ந்து, “ஹாய் ரித்விகா…” என்று பேச ஆரம்பிக்க, “ஹாய் மிஸ்டர்…” என்று நிமிர்ந்து கூட பார்க்காது சொன்னவளின் கவனம் முழுக்க வேலையில் தான்.

நகரத்தில் மேக்கப் முகங்களையே பார்த்து பழக்கப்பட்ட தருணுக்கு ரித்வியின் சாதாரணமான தோற்றமும், பெரிய மூக்குக்கண்ணாடியும், வெகுளியான முகமும் மிகவும் பிடித்துப்போக, அவளுடன் அடிக்கடி பேச ஆரம்பித்தான். ரித்வியும் சாதாரணமாக பேச, இதை யாதவ்வால் தான் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை.

இன்றும் அவன் அவளுடன் பேச ஆரம்பிக்க, ரித்வி இதையெல்லாம் பெரிதாக கண்டுக்கொண்டாளோ, இல்லையோ? தனதறையிலிருந்து  கண்ணாடி வழியாக உதட்டை சுழித்து இதைப் பார்த்துக்கொண்டிருந்தான் யாதவ்.

“வாவ் ரித்விகா! நீ மட்டும் சுடிதார், சாரின்னு இவ்வளவு ட்ரெடிஷனல்லா இருக்க. ஒருவேள, நீ கிராமத்து பொண்ணா?” என்று தருண் கேட்க,  லேசாக சிரித்து, “ஆமாங்க, மாத்தளையில ஒரு குட்டி கிராமம். ரொம்ப அழகா இருக்கும்” என்று பேசியவளுக்கு தன் வீட்டின் நினைவில் கண்கள் கூட சற்று கலங்கின. கூடவே, ஊரின் நினைவில் உறைந்த புன்னகை அவளிதழில்!

சற்றுநேரம் இருவரும் பேசுவதையே பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு ஒருகட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாது போக, ரித்விக்கே அழைத்துவிட்டான். அவள் அழைப்பை ஏற்று “ஹெலோ…” என்று கூட சொல்லி முடிக்கவில்லை, “ரூம்க்கு வா!” என்றுவிட்டு யாதவ் அழைப்பை துண்டித்திருக்க, சட்டென ரிசீவரை காதிலிருந்து எடுத்து அவனின் அறையை எட்டி ஒரு பார்வை பார்த்தாள் ரித்வி.
  
கதவை தட்டி அனுமதி கேட்டு அவள் அறைக்குள் நுழைய, மேசையின் மேல் ரிபோர்ட்டை தூக்கிப்போட்ட யாதவ், “வட் இஸ் திஸ் ரித்விகா? உனக்கு வேலை தெரியுமா, தெரியாதா?” என்று காட்டமாக கேட்க, அவளுக்கோ எதுவுமே புரியவில்லை.

அவளோ, “என்ன மிஸ்டேக் சார்? நான் எல்லாம் கரெக்டா தானே…” என்று பாவமாக இழுக்க, இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்து நாடியை நீவி விட்டவாறு, “என்ன கரெக்டா? எல்லாமே தப்பா பண்ணியிருக்க. எல்லாமே எரர்” என்று சொல்லவும், அவளுக்கு தான் குழப்பம் சூடிக் கொண்டது.

‘என்ன தப்பாகி இருக்கும்?’ என்று தீவிரமாக யோசித்தவளுக்கு அடுத்து அவன் பேசிய பேச்சில் ‘எதையாவது எடுத்து அவனை அடிக்கலாமா?’ என்று தான் தோன்றியது.

“எப்போ பாரு பேசிக்கிட்டு! வேலைக்கு வந்தா வேலையில மட்டும் கவனமா இருக்கனும். பழைய ஸ்டாஃப்ல இருந்து புது ஸ்டாஃப் வரைக்கும் எல்லார் கூடவும் கதைச்சிக்கிட்டு இருந்தா எப்படி சரியா வேலை நடக்கும்? நம்ம கம்பனிய நல்ல இடத்துக்கு கொண்டு போகனும்னு கொஞ்சமாச்சும் நினைப்பு இருக்கா? போங்க போய் வேலையில கவனம் செலுத்துங்க!” என்று பொய்யாக திட்டிவிட்டு கொடுப்புக்குள் சிரித்த யாதவ்விற்கு ‘தான் பேசியது அதிகப்படியோ?’ என்றிருந்தது அவளின் உக்கிரமான முறைப்பைப் பார்த்து.

ரித்வியோ அவனை கோபமாக முறைத்து மூக்குக்கண்ணாடியை சரிசெய்தவாறு அங்கிருந்து விறுவிறுவென வெளியேறிவிட, ‘என்ன கோபமா போறா? ஒருவேள, நிஜமாவே கோச்சிக்கிட்டாளா? அய்யய்யோ!’ என்று பதறியவனுக்கு தன்னை நினைத்தே சிரிப்பாகத் தான் இருந்தது.

ஷேஹா ஸகி