emv19a

emv19a

எனை மீட்க வருவாயா! – 19A

 

முக்கிய நபர்கள் குழுமி, ஜெகன், திவ்யாவை தனிக்குடித்தனம் எங்கு வைக்கலாம் எனப் பேசிக் கொண்டிருக்க, அவளின் அறையில் இருந்தவளை சாளரம் மூலம் தரிசித்து சட்டென விமோசனம் பெற்றிருந்தான் ஜெகன்.

மனைவியைக் கண்டதுமே, தாளம் தப்பிப்போயிருந்த அவனது நிமிடங்கள் அனைத்தும் சரியான உணர்வு.

நீண்ட நேரம் விழியால் அவளின் உருவ அமைப்பைப் பருகி, இழந்த நாட்களை ஈடுசெய்திடும் வகை தெரியாமல், கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள விழைந்தான்.

ஏதோ சாளரத்தின் வழியே எழுந்த நிழலைக் கண்டு பதறி தனது ஓரக்கண்ணால் பார்த்தவளுக்கு, அது ஜெகன்போல இருக்கவே ஆரம்பத்தில் நம்ப முடியாமல், திரும்பி நோக்க மனம் உந்த, அறிவால் அதைக் கட்டுக்குள் கொணர்ந்தவள், அதிர்ச்சியோடு குனிந்து யோசித்தாள்.

காளியம்மாள், வீரத்தின் சத்தம் மட்டுமே தனது வீட்டின் முன்னறையில் கேட்டது.  ஜெகன் வரவில்லையென அதுவரை ஏக்கமாக நினைத்துக் கொண்டிருந்தவளுக்கு, அவனும் வந்திருப்பது சாளரத்தின் பின்னே தெரிந்தவனைக் கண்டதுமே ஊர்ஜிதமாயிருந்தது.

“ஏய்.. லட்டுமா!”

வந்திருப்பது கணவன்தான் என மனம் அறுதியிட்டு உறுதிகூற, அதேநேரம் அவனது அழைப்பைக் கேட்டதும், லட்டு என தன்னை, தன் கணவனைத் தவிர வேறு யாரும் அழைப்பதற்கு வாய்ப்பில்லை எனப் புரிந்தாலும், சட்டெனத் திரும்பாது, காதில் விழாததுபோல இருந்தாள்.

தன்னை தாய் அழைத்து வந்த தருணத்தில்கூட, தனது மனவோட்டத்தை வெளியில் காட்டாமல்,  அவனது தாய் தந்தையரை எண்ணி, தன்னை ஒரு பொருட்டாகக் கருதாது, அமைதியாக இருந்தவன் மீது, மிகுந்த அதிருப்தி எழுந்தது என்னவோ உண்மைதான். 

ஆனால் அதே அதிருப்தி சில காலத்தில் விலகி, அவனது அருகாமைக்கு உள்ளம் ஏங்கிட, அந்த நாளின் துயரத்தின் அளவை மறந்து போனதுபோலத்தான் அவனைக் காணும் நாளுக்காய் இதுவரைக் காத்திருந்தாள் திவ்யா.

ஆனால் ஜெகனைப் பற்றி ஓரளவிற்கு திவ்யாவால் கணிக்க முடிந்த அளவில், அவன் தன்னைத் தேடி வர இன்னும் நாளாகும் என எண்ணியிருந்தாள்.  ஆனால் அந்தக் காலகட்டத்திற்குமுன் தன்னைக் காண வந்தவனைக் கண்ட அதிர்ச்சி மனதில் இருந்தாலும், அதைக் காட்டிக் கொள்ளாது வேலையில் கவனமாய் இருப்பதுபோல இருந்தாள்.

மீண்டும், “லட்டும்மா” என அவன் அழைக்க

சாதாரணமாய் முகத்தை மிகுந்த பிரயாசத்தோடு வைத்துக் கொண்டு திரும்பியவள், தனது மனதில் தோன்றிய பரவசத்தை மறைத்து, கணவனை அடிபட்ட பார்வை பார்த்தாள்.

மனைவியின் பார்வையிலேயே அவளின் மனநிலையை உணர்ந்து கொண்டவன், “லட்டு.. அன்னைக்கு நடந்த எல்லாத்துக்கும் சாரிடீ.  நீயில்லாம எதுவுமே எனக்கு நல்லாயில்லடீ.  எங்கூட இப்பவே வந்திரு.  நான் உன்னை நல்லாப் பாத்துப்பேன்!”

“…”

மனைவி தன்னைக் கண்டதும், ஆனந்தத்தில் ஆளாய் பறந்து வந்து கட்டிக் கொள்வாள் எனும் கனவோடு வந்தவனுக்கு, பெண்ணது ஒதுக்கம் ரணத்தைத் தந்திட, “என்னோட பேசு லட்டு” எனக் கெஞ்சத் தூண்டியிருந்தது.

திருமணமாகி தன்னுடன் வாழ்ந்த இரண்டரை மாதங்களில், இருவருக்கிடையேயான தாம்பத்யம் மட்டுமே இல்லாமல் இருந்தது. 

மற்றபடி ஒருவரின் அருகாமையை மற்றவர் ரசித்து எதிர்கொண்ட தருணங்கள் அனைத்தும் அவனது மனப்பெட்டகத்தில் இருக்க, அதேபோல இன்றும் மனைவி தன்னை எதிர்கொள்வாள் என எண்ணி வந்தவனுக்கு, மனைவியின் ஒதுக்கமான செயல் ஏமாற்றத்தைத் தந்திருந்தது.

“…”

தான் இவ்வளவு சொல்லியும், மனைவி தன்னிடம் எதுவும் பேசாமல் நிச்சலனமாய் இருப்பதைப் பார்த்தவனுக்கு, இதயமெங்கும் தன்னவளது நிராகரிப்பின் வேதனை.  தாங்க இயலாதவன், “சாரிடீ… இனிமே உனக்கு என்னாலயோ, எங்க வீட்டு ஆளுங்கனாலயோ, எந்த பிரச்சனையும் வராம நல்லாப் பாத்துக்கறேன்டீ.  இப்ப ஒரு வார்த்தையாவது எங்கூடப் பேசுடீ!” பாவமாய் இரைஞ்சினான்.

“எதே.. இவ்வளவு நடந்தும், புத்தியில்லாம இன்னும் உங்களை எப்டி நான் நம்பறது?” எனக் கேட்டவள், “எல்லாக் கோட்டையும் அழிச்சிட்டு, திரும்பவும் மொதல்ல இருந்தா? என்னால முடியாது”

“அப்டியெல்லாம் இனி நடக்காதுடீ.  அதுக்கு நான் பொறுப்புடீ”

“எதுனாலும், இனி ஈஸ்வரி சொன்னாத்தான்.  எதுக்கு நேரத்தை வேஸ்ட் பண்ணிகிட்டு.  முதல்ல இங்க நிக்காதீங்க!” பட்டென முகத்திலடித்தாற்போலக் கூறிவிட்டு, ஜெயம் படத்தின் கதாநாயகி சதா கூறுவதுபோல, வலக்கையை நீட்டி அவன் செல்ல வேண்டிய வழியை தலையைக் கவிழ்ந்தபடி கணவனுக்குக் காட்டினாள்.

அவன் தன்னைத் தேடி வந்ததில், அவளுக்கு சந்தோசமாய் இருந்தாலும், அதை முழுமையாக அனுபவிக்க இயலாதபடி, அந்த நாளின் துயரம் மீண்டும் அவளின் நினைவில் வந்து, மனம் முழுமைக்கும் வேதனை ஆக்ரமித்து வதைத்தது.

“அப்டி சொல்லாதடீ லட்டு!  நீ மனசு வச்சாதான்டீ இனி எனக்கு வாழ்க்கையே!”

“அப்போ.. அன்னைக்கு உங்க வீட்ல, உங்கம்மா அவ்ளோ பேசினப்போ, யாருக்கோ வந்த விதியே.  கோழிக்கு வந்த கொல்லக் கேடேன்னு, எனக்கென்னானு  ஏன் ஒக்காந்திருந்தீங்க!” சாட்டையாய் வார்த்தைகளை வீசினாள்.

வலித்தது. ஆனாலும், “அப்டி இருந்தது தப்புதான்டீ.  ஆனா அவங்கதான என்னைப் பெத்து ஆளாக்குனாங்க.  அவங்களை எல்லார் முன்னாடியும் எதிர்த்துப் பேசினா, அது நல்லாருக்காதுன்னுதான், நான் அப்போ வாயேத் திறக்கலை.  நீயும் என்னைப் புரிஞ்சிக்கலைனா நான் என்னதாண்டீ செய்வேன்!”

“உங்களை இன்னுமா புரிஞ்சிக்காம இருக்கேன்”

“அப்ப எங்கூட கிளம்பி வாடீ”

“புரிஞ்சதாலதான், உங்ககூட வரணுமானு யோசிக்கிறேன்”

“அப்டிச் சொல்லாதடீ.  அவங்களும் வேணும், நீயும் எனக்கு வேணும்டீ”

“இவ்ளோ நடந்தப்புறம் எதாவது ஒன்னுதான் உங்களுக்கு.  அவங்க வேணுனா, தாராளமா அவங்க சொல்ற மாதிரியே போயிக் கேளுங்க!”

“நீயில்லாம என்னால வாழவே முடியாதுடீ!”

“இதை எல்லாம் என்னை நம்பச் சொல்றீங்களா?  நீங்க சொல்றதை நம்பறதுக்குனு எவளாவது களத்து மேட்டுல இருப்பா?  அவகிட்டப் போயிச் சொல்லுங்க!”

“அவளும், நீயும் எனக்கு ஒன்னாடீ!”

“அன்னைக்கு இதெல்லாம் உங்களுக்குத் தோணலையாக்கும்!”

“தோணுச்சு… ஆனா”… என ஜெகன் இழுக்க

“…உங்களுக்கு எல்லாம் எதுக்கு பொண்டாட்டி! போங்க அங்கிட்டு! எம்முன்னாடி நிக்காம இங்க இருந்து மொதல்ல கிளம்புங்க!” என மனைவியின் விரட்டலில் உழன்று போய் நின்றான் ஜெகன்.

ஆனாலும் மனைவிக்கு தன்னைப் புரிய வைக்க முயன்று, “அது வேற திவ்யா!  அவங்களுக்கு ஒரு மகனா மதிப்பு குடுக்கறது என்னோட கடமை.  அதுபோல என்னோட வயிஃபை நல்லா வச்சிக்கணுங்கறதும் என்னோட கடமை.  ஒருத்தவங்களுக்காக மத்தவங்களை கீழிறக்கிப் பேசறதோ, மரியாதைக் குறைவா நடத்திறதோ, கண்டுக்காம போறதோ எனக்குப் பிடிக்காது.  அன்னைக்கு அவங்க உன்னை அப்டி நடத்தினதுக்கு, அவங்க அதுக்கான தண்டனையா இப்ப என்னைய மொத்தமா இழந்துட்டாங்க… நான் இப்ப அவங்ககூட இல்லைடீ!”

“புத்தனாட்டம் பேசிட்டு இருக்காம, அப்டியே பொடி நடையா இங்கிருந்து நடையக் கட்டுங்க.  எனக்கு நிறைய வேலை கிடக்கு!”

“என்னைப் பாத்தா உனக்கு கேலியாத் தெரியுதா லட்டு!  நான் என்ன சொல்றேன்னுகூட காது குடுத்துக் கேக்கப் பிடிக்கலையா?”

“உங்களை கேலி பண்றதுக்கு எனக்கு என்ன உரிமை இருக்கு? நான் யாரு உங்களுக்கு?”

“இப்டி யாரோ மாதிரி பேசாதடீ!  என்னைவிட்டுத் தள்ளிப் போகாதடீ!”

“நான் உங்களுக்கு யாரோ மூனா மனுசிதான!  உங்களை மட்டுமே நம்பி வந்தவளுக்கு, நீங்க இதுவரை செஞ்சது என்னனு சொல்லுங்க?”

“எதுனாலும் எங்கூட வந்திருந்து, எங்கூட சண்டைபோடுவியாம்.  என்ன வேணாலும் சொல்லு. செய்யிறேன். கேளு, வாங்கித் தரேன்.   ஆனா என்னை வேணானு மட்டும் சொல்லிறாத லட்டு!”

“நல்லாத்தான் பேசுறீங்க.  ஆனா இன்னும் அங்க வந்து இடிபட எனக்கே இஷ்டமில்லை.  உங்கம்மா சொல்றமாதிரியே இனி நீங்க கேட்டுக்கங்க.  அதுதான உங்களுக்கும் சந்தோசம்!”

“நீதான் என் சந்தோசம்.  அது உனக்கே தெரியும்ல லட்டு!”

கணவனின் இரங்கிய குரலில் வந்த கெஞ்சல் தொனியில் திவ்யாவின் மனம், அவன் பின்னே செல்ல எத்தனிக்க சுதாரித்தவள், “நாந்தான் முடிவாச் சொல்லிட்டேனே.  இன்னும் இங்கேயே நீங்க நின்னுட்டு இருந்தா, ஜன்னக் கதவை அடைக்கறதைத் தவிர, வேற வழியில்லை எனக்கு.  இங்க நீங்கதான் நின்னீங்கனு தெரிஞ்சாலும், எதுவுமே தெரியாத மாதிரி, வாயில வந்ததைப் பேசுற ஜனங்க இருக்கற இடமிது. முதல்ல இங்கிருந்து கிளம்புங்க!” என்ற வார்த்தையைக் கேட்டும் நகராமல் ஜெகன் நிற்க

“ஜன்னல்ல நின்னு… ஊருப்பய எவனோடையோ, ஈஸ்வரி மக பேசுறான்னு, எனக்கு கெட்ட பேரு வாங்கிக் குடுக்காமப் போகமாட்டீங்க போலயே! உங்களால வாழறதுக்கு முன்னாடியே, வாழவெட்டியா வந்து எங்கம்மா வீட்டுல இருக்கறது பத்தாதுன்னு, உங்களைக் கட்டிக்கிட்ட பாவத்துக்கு, இதையும் சேத்தே இனி அனுபவிக்கிறேன்.  எல்லாம் என் தலையெழுத்து!” என வெடுக்கெனப் பேசியதோடு தலையில் அடித்துக்கொள்ள, அவளின் வார்த்தையில் இருந்த உண்மையில், அவளின் எதிர்கால நிலை புரிய, அங்கிருந்து வேகமாக அகன்றிருந்தான் ஜெகன்.

…………………………..

கிராமத்து வீட்டை நம்பி இனி அனுப்ப இயலாது.  வேண்டுமானால் ஆர்எஸ் மங்கலத்திலோ அல்லது காரைக்குடியிலோ தம்பதியினரை தனிக்குடித்தனத்திற்கு ஏற்பாடு செய்யுமாறு, ஈஸ்வரியின் சார்பாக வந்தவர்கள் கூற,

அதை மறுத்த எதிர்தரப்பு, “அது எப்படி.  வயசானவுகளை விட்டுட்டு தனிக்குடித்தனம் வைக்கறது.  எல்லாம் யோசிச்சுச் செய்யுங்க” என வாதாட

காளி அமைதியாய் இருப்பதுபோல நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தார்.

அதேநேரம், “நீ மட்டும் கூட்டுக் குடும்பத்துல வாக்கப்பட்டு வந்து, அவுக கூடையா இருந்த.  உனக்கு ஒரு நியாயம்.  இப்ப உங்க வீட்டுக்கு வந்த புள்ளைக்கு ஒரு நியாயம்னு எப்டிப் பேசுற!” என ஈஸ்வரியின் தரப்பிலிருந்து காளியிடம் நியாயம் கேட்க

வாதங்கள் வலுத்தது.  தான் அப்டியில்லை என சாதித்தார் காளி.  வீரத்திடம் உண்மையைக் கூறும்படி சொல்ல, அவரோ மனைவியின் வாயிக்குப் பயந்து அமைதி காத்தார்.

இறுதியில், “நீங்க எல்லாம் வாழ்ந்து முடிச்சிட்டீங்க.  இந்தப் புள்ளைக இன்னும் வாழவே ஆரம்பிக்கலை.  அதுகளை முதல்ல மனசார வாழ விடுங்க” பொதுவில் இருந்த நபர் கூற

“வாழவிடாம நாங்க என்ன புடிச்சிக்கிட்டா இருக்கோம்.  அங்க வசதியில்லைனு பொண்ணைப் பெத்தவுகதான், அவுகளாவே கூட்டிட்டு வந்துட்டாங்க” என ஈஸ்வரியின் மீது காளி புகார் கூற

அன்றைக்கு காளி பேசிய பேச்சுகள் நினைவு கூறப்பட்டு, “நாளுக்கு ஏத்த மாதிரி, திணுசு, திணுசா எப்டித்தான் உன்னால பேச முடியுதோ காளி.  இப்ப முடிவா என்ன செய்யலாம்னு சொல்லு” பொதுநபர்.

“நீங்க பாத்து எது சொன்னாலும், நாங்க கட்டுப்படறோம்” வீரம் கூற, மனைவி தன்னை முறைப்பதைக் கண்டு கொள்ளவில்லை அவர்.

வீரப்பெருமாளுக்கு மனைவியின் தவறுகள் புரிந்துதான் இருந்தது.  இவளை விட்டால் இன்னும் தடையாய் ஏதேனும் கூறி, நேரத்தை வீணாக்குவாள் எனக் கருதியே, அவர் முந்திக் கொண்டிருந்தார்.

“அப்போ வாழப் போறவுகளோட தோதுப்படி, ரெண்டுபேரும் தனியா எங்க வேணுமே அங்க குடித்தனத்தை ஆரம்பிக்கட்டும்.  இதுக்கு ரெண்டு சார்பிலயும் சம்மதம்னா, சம்பந்தப்பட்டவங்களைக் கூப்பிட்டுப் பேசிறலாம்”

“எங்களுக்கு சம்மதம்” என கோரசாக ஈஸ்வரியின் தரப்பில் முந்திக் கொண்டு தங்களின் ஆமோதிப்பைக் கூற

எதிர் தரப்பில் சலசலப்பிற்கு குறையாமல் சத்தம் நீண்டிருந்தது.

அதற்கு பத்து நிமிடம் முன்பு அங்கு வந்த ஜெகன், நடப்பதைப் பார்த்தபடி இருந்தவன் சரியான தருணம் இதுவே என யூகித்து, “எங்க சார்புல நான் உங்க கருத்தை ஏத்துக்கறேன் ஐயா” என்க

காளிக்கு தனது வாயால் அதை ஒத்துக் கொள்ளும் மனமில்லை.  அது தெரிந்த ஜெகன் முந்திக் கொண்டிருந்தான்.

“என்ன உங்க மயன் சொல்றதையே ஏத்துக்கலாமா?”

வீரம் மட்டும் தலையை அசைத்து ஆமோதிக்க, ஒருவழியாய் முடிவுக்கு வந்த பேச்சுவார்த்தையின் அடுத்த கட்டமாய், தம்பதிகளை அழைத்தனர்.

ஜெகனுக்கோ மனைவி மறுத்துவிடக் கூடாதே என்றிருந்தது.

“உங்க ரெண்டு பேருக்கும், எந்த இடத்தில தனியா குடித்தனம் வச்சா உங்களுக்கு வசதியா இருக்கும்னு சொன்னா, அங்கேயே அதுக்கான ஏற்பாடு பண்ணிறலாம்” பொதுநபர் கூற

திவ்யா, “காரைக்குடி”

ஜெகன், “ஆர்எஸ் மங்கலம்” என ஒரே நேரத்தில் வெவ்வேறு இடங்களைக் கூற

“ரெண்டு பேரும் ஆளுக்கொரு இடமாச் சொன்னா எப்டி?  பேசி ஒரு நல்ல முடிவா எடுங்க” என பொது நபர் உரைக்க

ஜெகனுக்கு, திவ்யா காரைக்குடி என்றதிலேயே, அவன் தன்னோடு வரச் சம்மதித்ததிலேயே ஏதோ சாதித்த உணர்வு,  அதற்குமேல் எதையும் யோசிக்காதவன், சந்தோசமாய் மனைவியின் முடிவினை ஆமோதிக்கத் தயாராகியிருந்தான்.

“அது சொல்ற மாதிரியே காரைக்குடியிலேயே பாத்திரலாம்” என ஜெகன் ஆமோதித்து, ஒரு வழியாய் அந்த பேச்சுவார்த்தை, சுமுகமாய் நிறைவடைந்தது.

நல்லதொரு நாளில், காரைக்குடியில் வீடு பார்த்து பால்காய்ச்சி, இருவரையும் தனிக்குடித்தனம் அமர்த்திவிட்டு, இரு வீட்டு நபர்களும் கிளம்பியிருந்தனர்.

காளியம்மாள் புலம்பலோடும், ஈஸ்வரி ‘இனியாது இந்தப் புள்ளை வாழ்க்கை நல்லா இருக்கணும் கடவுளே’ எனும் பிரார்த்தனையோடும் இருவரின் தனிக்குடித்தனம் துவங்கியிருந்தது.

……………………….

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!