லவ் ஆர் ஹேட் Final

eiD6VJ862373-494b739f

வளைக்காப்பு முடிந்த நாளிலிருந்து கணவனின் அருகாமைக்காக அதிகம் ஏங்க ஆரம்பித்தாள் ரித்வி என்றுதான் சொல்ல வேண்டும். இப்போதெல்லாம் தன் தேவையை நேரடியாகவே யாதவ்விடம் அவள் கேட்க, அவள் கேட்காத போதே விழுந்து விழுந்து அவளுக்கு சேவகம் செய்பவன், வாய் திறந்து கேட்டால் சும்மாவா இருப்பான்?

அதுவும், பிரவசத்திற்கான நாள் நெருங்க நெருங்க ரித்வியை விட அதிகம் பயந்தது என்னவோ யாதவ் தான். ரித்வியே மறுத்தாலும் விடாப்பிடியாக அவளை அழைத்துச் சென்று தன் குழந்தையுடன் பேசியவாறு ஒரு அரைமணிநேரமாவது தோட்டத்தில் தன்னவளை நடக்க வைப்பான் அவன்.

ஆனால், ஆரம்பத்தில் யாதவ்வை கோபமாக நோக்கிய ரித்வியின் விழிகள் இப்போதெல்லாம் ரசனையுடன் பார்க்க ஆரம்பித்தன. அவன் பார்க்கும் போது முகத்தை திருப்பிக் கொள்பவள், அவன் பார்க்காத நேரம் தன்னவனையே இமை சிமிட்டாது பார்த்துக் கொண்டிருப்பாள். இதை யாதவ்வும் அறியவில்லை.

தன்னவன் மேல் முன்னிருந்த கோபம் இப்போது இல்லை அவளுக்கு. ஆனாலும், ஏதோ ஒரு இடைவெளி இருவருக்குள். அந்த இடைவெளியை உருவாக்கியவளால் மட்டுமே அதை இல்லாமல் செய்ய முடியும். சரியாக அந்த கண்ணுக்குத்தெரியாத தடுப்புச்சுவரை உடைக்கும் நாளும் வந்தது.

இப்போது ரித்விக்கு ஒன்பது மாதங்கள் கடந்திருக்க, பிரசவத்திற்கு இன்னும் சில நாட்களே…

அன்று, தோட்டத்தில் சில பழைய நினைவுகளை மீட்டியவாறு யாதவ் நின்றிருக்க, “இதெல்லாம் ரித்வி இங்க வந்த போது நட்டது. அவளுக்கு தெரியாம யாராச்சும் இந்த பூக்களை பறிச்சா அவ்வளவு தான். அன்னைக்கு வீடே களவரமாகிரும்” என்று சிரிப்புடன் சொன்னவாறு வந்து நின்றார் மஹாதேவன்.

“எனக்கென்னமோ ரித்விக்கு உன் மேல இருந்த கோபம் போயிருச்சின்னு நினைக்கிறேன் கார்த்தி. சீக்கிரமாவே உன்கிட்ட உரிமையா நடந்துப்பா” மஹாதேவன் நம்பிக்கையுடன் சொல்ல, லேசாக சிரித்து “உங்களுக்கொன்னு தெரியுமாப்பா? சிலநேரம் எனக்கு அதிபாவ நினைச்சி பொறாமையா இருக்கும், என்னை விட அதிகநாள் ரிதுவோட பாசத்தை அவன் அனுபவிச்சிருக்கான்னு” என்று யாதவ் சொல்ல, வாய்விட்டு சிரித்தார் அவர்.

“அவளோட நான் வாழ்ந்த வாழ்க்கை பொய்யில்லை. அவ மேல எனக்கு இருக்குற காதல் பொய்யில்லை. அவளோட இருக்கும் போது அப்பப்போ  நியாபகம் வரும், இவளோட தாத்தாவால தான் என் அம்மா இறந்தாங்கன்னு. அந்த கோபத்தை அவ மேல காட்டாம என்னை கட்டுப்படுத்திக்க நான் தவிச்ச தவிப்பு எனக்கு தான் தெரியும். தப்பு பண்ணிட்டேன் தான். என் கோபத்தை போக்கிக்க அந்த ஒருவழி தான் எனக்கு தெரிஞ்சது. ரிது எப்படியும் என்னை விட்டு போக மாட்டா, அவள வச்சி பாட்டிய மன்னிப்பு கேட்க வைச்சு அவமானப்படுத்தலாம்னு யோசிச்சேன். ஆனா, எல்லாமே தலைகீழா மாறிட்டு. அம்மா மட்டும் இருந்திருந்தா கண்டிப்பா என்னை அடிச்சிருப்பாங்க” என்ற யாதவ்வின் குரல் தழுதழுக்க, மஹாதேவனுக்கோ நடந்ததை நினைத்து வேதனை தான்.

“குழந்தை பிறந்ததும் எல்லாமே சரியாகிரும்ப்பா. இப்போவே ரித்விமா உன்னை தான் எதிர்ப்பார்க்குறா.  குழந்தை வந்ததும் பழைய மாதிரி முழுசா மாறிடுவா” என்ற மஹாதேவன் அடுத்து தன் மகன் சொன்ன செய்தியில் ஆடிப்போய்விட்டார்.

“என் ரிது சின்ன வயசுலயிருந்து நிறைய இழந்துட்டா அப்பா. கூடவேயிருந்து அவளோட சந்தோஷத்தை கெடுக்க நான் விரும்பல. குழந்தை பிறந்த கொஞ்சநாள்ல மறுபடியும் லண்டன் போறதா இருக்கேன். எனக்கு தெரியும், ரிது என்னை விட குழந்தையை நல்லா பார்த்துப்பா. ஆறு மாசத்துக்கு ஒருதடவை வந்து என் அம்முவையும் அவளையும் பார்த்துட்டு போறேன். அவளே ஒரு குழந்தை. அவளுக்கு ஒரு குழந்தை” என்று சிரிப்புடன் சொன்ன யாதவ்,

“இப்போ நான் பக்கத்துல இருக்குறதால அதட்டி மிரட்டியாவது சாப்பிட வைக்கிறேன். குழந்தை பிறந்ததும் சரியாகிடுவா. நானும் போயிருவேன்” என்றுவிட்டு, “கிருஷ்ணனுக்காக காத்திருந்த மீராவை எனக்கு ரொம்ப பிடிக்கும்ப்பா. அந்த மீராவே ரிது ரூபத்துல எனக்கு கிடைச்சிருக்கான்னு எனக்கு அப்போ தெரியல. ரித்விகா எனக்காக காத்திருந்த இந்த யாதவ்வோட மீரா” என்று சொல்லி முடிக்க, ‘இவனை என்ன செய்தால் தகும்’ என்று தான் இருந்தது மஹாதேவனுக்கு.

‘மீண்டும் அதே தப்பை செய்யும் முட்டாள் நீ!’ என்று அவனை திட்ட வேண்டும் போலிருந்தது அவருக்கு. ஆனால், அதைக் கேட்பதற்கு அவரின் மகனுக்குத்தான் நேரமில்லை. அழைப்பு வரவும் அதை ஏற்றுக்கொண்டு யாதவ் நகர்ந்துவிட, மஹாதேவனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. கூடவே, இவர்கள் பேசியதை ரித்வி கேட்டதையும் இருவரும் அறியவில்லை.

அறைக்கு வந்து அமர்ந்தவளுக்கோ யாதவ் மஹாதேவனிடம் சொன்ன செய்திதான் தலைக்குள் ஓடிக்கொண்டிருந்தது. ‘அப்போ அவரு என்னை விட்டுப் போயிருவாரா?’ என்று நினைத்தவளுக்கு அழுகை தொண்டையை அடைத்தது.

தன் வயிற்றை வருடியவாறு, ‘அம்மு, உன் அப்பா மறுபடியும் என்னை விட்டுப் போக போறாரு. பொண்டாட்டி, புள்ள கூட இருக்கனும்னு அவருக்கு கொஞ்சம் கூட நினைப்பே இல்லை. வெளியூருக்கே போய் அவர் பழைய காதலி கூட சந்தோஷமா இருக்கட்டும். நமக்கென்ன? நாம… நாம ஹேப்பியா இருக்கலாம். அவர் வேணாம் நமக்கு. அவர் நம்மள பார்க்க வரும் போதும் நாம பார்க்க வேணாம். விரட்டிவிடலாம். ரொம்ப கொழுப்பு கூடிப்போயிருச்சி அவருக்கு. ஆனா அம்மு, நீ அப்பாவை பிரிஞ்சி இருப்பியா என்ன?” கண்கள் கலங்க பேசிக்கொண்டே சென்றவளின் வயிற்றில் சுள்ளென்று ஒரு வலி எடுக்க, அந்த வலி தாங்க முடியாது “அம்மா…” என அலறி விட்டாள் ரித்வி.

ரித்வியின் அலறல் பக்கத்து அறையிலிருந்த உத்ராவுக்கு கேட்க, வேகமாக ரித்வியிருந்த அறைக்குச் சென்றவள், வயிற்றைப் பிடித்துக்கொண்டு அழுதுக்கொண்டிருந்தவளைப்  பார்த்து பயந்தே விட்டாள்.

“அய்யோ! அத்தை… மாமா… இங்கே வாங்களேன்…” என்ற உத்ராவின் கத்தலில் சமையலறையிலிருந்த பெரியவர்கள் என்னாச்சோ, ஏதாச்சோ? என வேகமாக அங்கு வர, “அக்காவுக்கு வலி வந்துடுச்சு போல, அழுகுறாங்க” என்று அவள் சொல்லி முடிக்கும் முன்பே ரித்வியை தங்கள் மடியில் தாங்கியிருந்தனர் சகுந்தலாவும் ஆண்டாளும்.

விஷயத்தைக் கேள்விப்பட்ட யாதவ்விற்கு கை கால்களே நடுங்கி விட்டது. அதுவும், “பிரசவ வலிதான்” என்று ஆண்டாள் சொன்னதுமே என்ன செய்வதென்றே தெரியவில்லை. மூளை செயலிழந்து விட்ட உணர்வு அவனுக்கு.

“அப்பா… அப்பா அதுதான் இன்னும் நாள் இருக்கே. அதுக்குள்ள… ஏதாவது பிரச்சனையா?” யாதவ் திக்கித்திணறி கேட்க, “அதெல்லாம் டோக்டெர் சொன்ன திகதிக்கு நடக்காதுப்பா. சொன்ன திகதிக்கு முன்னேயே வலி வரலாம். சிலபேருக்கு சொன்ன திகதிக்கு அப்புறமும் கூட…” என்று சகுந்தலா சொல்ல, வேகமாக வந்து, “மாமா, அவருக்கு விஷயத்தை சொல்லிட்டேன். சீக்கிரம் ரித்விய அழைச்சிட்டு போகலாம்” என்றாள் வைஷ்ணவி பதட்டமாக.

ஆனால், இங்கு ரித்வியோ அழுதவாறு, “யது… யது…” என்று தன்னவனையே அழைத்துக் கொண்டிருக்க, அதை கவனித்த சகுந்தலா, “யாதவ், ரித்விய நீயே காருக்கு தூக்கிட்டு வாப்பா” என்று அவன் மனைவியை கவனிக்கும் பொறுப்பை அவனிடமே ஒப்படைத்தார்.

அவனும், “ரிது, ரொம்ப வலிக்குதாம்மா?” என்று பயந்த குரலில் கேட்டவாறு தன்னவளை கைகளில் ஏந்திய வண்ணம் காருக்கு அழைத்து வர, ‘ரித்வியை பார்த்து உத்ரா பயந்துவிடுவாள்’ என அவளை வீட்டில் வைத்து அவளுக்கு பாதுகாப்புக்காக ஆண்டாளை வைத்துவிட்டு வைத்தியசாலைக்கு புறப்பட்டனர் மற்றவர்கள்.

வைத்தியசாலைக்கு ரித்வியை அழைத்து வரும் முன்னேயே அத்தனை ஏற்பாடுகளையும் செய்திருந்த அதிபனுக்கும் தன் தோழியை நினைத்து சற்று பதட்டம் தான். மரணத்தை தொட்டு வரும் பெண்களின் பிரசவ வலியை அவன் உணராவிட்டாலும், ஒரு வைத்தியராக கண்கூடாக பார்த்திருக்கிறான் அல்லவா!

ரித்வியை பிரசவ அறைக்கு அழைத்துச் செல்ல, தன்னவள் இறுகப்பற்றியிருந்த தன் கரத்தை அவள் கரத்திலிருந்து பிரித்தெடுத்த யாதவ் அவளோடு செல்லாது வாசலிலே நின்று விட, “யது… யது…” என்றழைத்தவாறு கதறியழ ஆரம்பித்தாள் அவள்.

ஒருவித பயத்தில் ‘இல்லை’ எனும் விதமாக தலையாட்டி திரும்பி நின்று கொண்டவனுக்கு கண்களில் விடாது கண்ணீர் சொரிந்து கொண்டிருந்தது. இங்கு பிரசவ அறைக்குள் வந்ததும் தொடர்ந்து பத்து நிமிடமாக எடுத்த வலி அப்போதுதான் சற்று மட்டுப்பட்டிருக்க, தன் பக்கத்திலிருந்தவர்களிடம் தன்னவனை பற்றிதான் விடாது கேட்டுக் கொண்டிருந்தாள் ரித்வி.

“அவர வர சொல்லுங்க. ப்ளீஸ் அவர என் பக்கத்துல இருக்க சொல்லுங்க. அதி அவர வர சொல்லு” விடாது  ரித்வி அதையே சொல்லிக்கொண்டிருக்க, வெளியில் தலையில் கைவைத்தவாறு, “சோரி ரிது… சோரிம்மா” என்று அதையே பைத்தியம் போல் முணுமுணுத்துக் கொண்டு தளர்ந்துப்போய் இருக்கையில் அமர்ந்திருந்தான் யாதவ்.

“யாதவ், என்னடா நினைச்சிக்கிட்டு இருக்க? அங்கு அவ உன்னை தான்டா தேடி அழுதுகிட்டு இருக்கா. அவ பக்கத்துல வந்து நில்லு! அவளுக்கு கொஞ்சம் தைரியமாக இருக்கும்” அதிபன் வந்து கத்த, சரியாக அங்கு வந்து சேர்ந்தனர் தேவகியும் ஆரனும் பதட்டத்தோடு.

“பேராண்டி…” தேவகி அழைக்க, அவரை நிமிர்ந்து பார்த்த யாதவ்வின் கண்களில் பயம் கலந்த பதட்டம்.

“போ கார்த்தி. ரித்விமாவுக்கு இப்போ நீ தேவை” மஹாதேவன் சொல்லிக்கொண்டிருக்கும் போதே அங்கு பிரசவ அறையில் பத்துநிமிடமாக விட்டிருந்த வலி மீண்டும் ஆரம்பித்து இடுப்பு எலும்புகள் உடைவது போலிருக்க, “யது…” என்று கத்திவிட்டாள் அவள்.

யாதவ்வின் பக்கத்தில் அமர்ந்து, “நமக்கு கஷ்டம்னு ஒன்னு வரும்போது நம்ம மனசு ஒருத்தரோட அருகாமைய நாடும். அப்போ அவங்க தான் நமக்கு எல்லாமே… இப்போ அவ அழைக்கிறது உன்னை தான். அவளுக்கு இப்போ நீ வேணும் பேராண்டி. போய் அவ பக்கத்துல இரு!” என்ற தேவகி, கலங்கிய விழிகளுடன் அவரை ஏறிட்டு, “அவ அழுகுறதை என்னால பார்க்க முடியல. ரொம்ப கஷ்டமா இருக்கு” என்று அழும்குரலில் சொன்னவனை சமாதானப்படுத்தி ரித்வியின் பக்கத்தில் அனுப்பிவைத்தார்.

கண்களை மூடி பற்களை கடித்தவாறு வலியை பொறுத்துக் கொண்டிருந்தவள் அரவம் உணர்ந்து சட்டென விழிதிறந்து திரும்பிப்பார்க்க,  அவள் பக்கத்தில் அவளவன்! புதுத்தெம்பு வந்தது போலிருந்தது அவளுக்கு.

ரித்விக்கு ஒருகையில் ட்ரிப்ஸ் ஏற்றியிருக்க, தன்னவளின் மறுகையை யாதவ் இறுகப் பற்றிக்கொள்ள, அவன் கைகளின் நடுக்கத்தையும் முகத்திலிருந்த பதட்டத்தையும் ரித்வியால் கூட உணரத்தான் முடிந்தது.

அந்த நிலையிலும் அவனை முறைத்துப் பார்த்தவள், “எங்கடா போய் தொலைஞ்ச? அப்போ எங்களுக்குள்ள எல்லாம் அவ்வளவுதானே!” என்று கோபமாக கேட்க, தன்னவளை அதிர்ந்து நோக்கியவனுக்கு அவளை விட்டு விலகி நின்றது சற்று குற்றவுணர்ச்சியாகத் தான் இருந்தது.

பத்துநிமிடம் தொடர்ந்து எடுத்த வலி மீண்டும் சற்று மட்டுப்பட, தன்னவனையே மூச்சு வாங்கியவாறு பார்த்து, “எனக்கு குழந்தை பிறந்ததும் என்னை விட்டுப் போயிடுவீங்க தானே!  இப்போ மட்டும் ஏன் நின்னுக்கிட்டு இருக்கீங்க? இங்கிருந்து போங்க” ஒரு மனைவியாய் அந்த இடத்திலும்  சண்டை போட்டவளுக்கு, “அய்யோ ரிது! நான் ஏன்டி உன்னை விட்டு போக போறேன்? அப்படியெல்லாம் இல்லைடி” என்ற யாதவ்வின் வார்த்தைகளை கேட்டு கோபம் தாறுமாறாக எகிறியது.

“போடா, என் முன்னாடி நிக்காத! உன்னால தான்டா எனக்கு வலிக்குது. ஆனா, என்னை விட்டுப் போற தானே!” கோபமாக திட்டிக்கொண்டே சென்றவளின் வார்த்தைகளை அவன் அதிர்ந்து நோக்க, மீண்டும் எடுத்த சுள்ளென்ற வலியில் “ஆ…” என்று அவள் கத்தியதும் யாதவ்வோ பயந்தேவிட்டான்.

“அதிபா, ஏதாவது பண்ணுடா” யாதவ் பதற, “கொஞ்சம் பொறுத்துக்கோ ரித்விமா, இன்னும் பனிக்குடம் உடையல. இன்னும் நேரம் இருக்கு” என்ற அதிபனின் வார்த்தைகளில் “என்ன விளையாடுறியா? வலியில துடிச்சிக்கிட்டு இருக்கா. அதை புரிஞ்சிக்காம இன்னும் நேரமிருக்குன்னு சொல்ற” என்று கத்திவிட்டான் யாதவ்.

நெற்றியை நீவி விட்டுக்கொண்ட அதிபன், “யாதவ், இன்னும் பனிக்குடம் உடையலடா. குழந்தை சரியான பொசிஷனுக்கும் இன்னும் வரல. கொஞ்சம் பொறுமையா இரு!” என்று சமாதானப்படுத்த, யாதவிற்கு தான் ரித்வியின் அழுகையை பார்க்கவே முடியவில்லை.

இருபது நிமிடமாக தொடர்ந்து எடுத்த வலியில் அவள் மரணத்தையே தொட்டு வந்துவிட்டாள். இடுப்பு எலும்புகள் நொறுங்கும் வலியை மெல்லிய பெண்ணவள் தன் குழந்தையை பெற்றெடுக்க தாங்கத்தானே செய்கிறாள்!

அடுத்த பத்துநிமிடம் வலி மட்டுப்பட்டு மூச்சுவாங்கியவாறு அவள் படுத்திருக்க, மொத்த குடும்பமும் பதட்டமாக அமர்ந்திருக்க, சில மணிநேரங்கள் கடந்தேவிட்டிருந்தது. ஆனால், பனிக்குடம் தான் உடைந்தபாடில்லை.

மீண்டும் வலி எடுக்கவும் ரித்வி பல்லைக்கடித்துக்கொண்டு அழ, அவளின் கன்னத்தோடு தன் கன்னத்தை வைத்து உரசிய யாதவ், “என்னால நீ அழுகுறதை பார்க்க முடியல. ரொம்ப கஷ்டமா இருக்கு. ஆனா, இதை விட பெரிய வலிய நான் உனக்கு கொடுத்திருக்கேன். என்னை மன்னிச்சிரு. நானே என் கோபத்தால என் ரிதுவ தொலைச்சிட்டேன்” என்றவனின் கண்ணீர் அவளின் கன்னத்தை நனைத்தது.

வலி மெதுவாக மட்டுப்படவும், தான் பற்றியிருந்த அவனின் கரத்தில் அழுத்தம் கொடுத்து, “என்னை விட்டு லண்டன் போறேன், ஆபிரிக்கா போறேன்னு ஏதாச்சும் சொன்னீங்கன்னா அவ்வளவு தான் யது நீங்க. என் கூடவே இருக்கனும், நான் பண்ற எல்லா டோர்ச்சரையும் தாங்கிகிட்டு. பிகாஸ், அம்மு என்ட் ரிது லவ் யூ அ லொட்” என்ற ரித்வியை கண்கள் மின்ன பார்த்தான் அவன்.

சரியாக மட்டுப்பட்டிருந்த வலி மீண்டும் மெதுமெதுவாக சுள்ளென்ற வலியில் ஆரம்பித்து எலும்புகளை நொறுக்குவது போல் அதிகரிக்க,  பனிக்குடமும் உடைந்து நீர் வெளியேறியது. ரித்வியை பரிசோதித்த அதிபன், “ரித்விமா, குழந்தை பிறக்க போகுது” என்று சொல்ல, தாங்கமுடியாத வலியில் “முடியல யது…” என்றவாறு  கண்ளை மூடப்போனாள் ரித்வி.

“அதிபா, எவ்வளோ நேரம்டா?” முகமெல்லாம் வியர்த்துப்போய் பதட்டமாக யாதவ் கேட்க, பத்துநிமிடமாக விடாது எடுத்த பிரசவ வலி அவளுக்கு மரணபயத்தையே காட்டிவிட்டது. “ரொம்ப வலிக்குது” என்று கதறியவாறு ரித்வி பற்றியிருந்த யாதவ்வின் கையே அவள் பற்றியிருந்த விதத்தில் வலி எடுக்க ஆரம்பிக்க, வலியில் “ஸ்ஸ்…” என்றான் அவன்.

அடுத்த பத்துநிமிடங்களில் அத்தனை வலிகளையும் தாண்டி ரித்வி தன் குழந்தையை ஈன்றெடுக்க, “வெல்கம் டூ த வர்ல்ட் அம்மு” என்றவாறு குழந்தையை தலைகீழாக தூக்கிப்பிடித்தான் அதிபன்.

யாதவ்வோ விழிநீர் ததும்ப குழந்தையை நோக்க, தொப்புள்கொடி வெட்டி குழந்தையை அப்படியே ரித்வியின் நெஞ்சில் மல்லாக்காக படுக்கவைத்தான் அதிபன். இத்தனைநேரம் அனுபவித்த மொத்த வலியும் அந்த தாயிற்கு தன் பிஞ்சை பார்த்ததும் காணாமற் போன உணர்வு!

“யது, நம்ம குழந்தை…” ரித்வி மூச்சுவாங்கியவாறு கண்ணீர் வழிய சொல்லி தன்னவனை காதலோடு நோக்க, “லவ் யூ ரிதும்மா என்ட் தேங்க் யூ சோ மச்” என்றவாறு தன்னவளின் நெற்றியில் அழுந்த முத்தமிட்டு, தன் உயிர்நீரில் உருவான தன் ஜீவனின் குட்டிகையை பிடித்து, “வெல்கம் அம்மு” என்று இதமாக முத்தமொன்றை பதித்தான் யாதவ் கண்களில் கண்ணீரோடு.

சரியாக ஒன்றரை வருடம் கழித்து,

“அச்சோ அம்மு! மறுபடியுமா? உன் ம்மீ வந்தா அவ்வளவு தான்” மூன்றாவது தடவையாக மாற்றியிருந்த  உடையையும் அழுக்காக்கியிருந்த தன் குழந்தையை செல்லமாக முறைத்தவாறு யாதவ் அவளை சுத்தம் செய்ய ஆரம்பிக்க, தன் தந்தையையே பெக்கபெக்கவென விழித்தவாறு பார்த்துக்கொண்டிருந்தாள் அம்மு என்று செல்லமாக அழைக்கப்படும் யாதவ் ரித்வியின் புதல்வி அதிதி.

தன் குழந்தையின் முழியை பார்த்தவனுக்கோ சிரிப்புத்தான் வந்தது. அவன் செல்லமாக இடுப்பில் கைகுற்றி முறைக்க, இருகைகளையும் அவனை நோக்கி நீட்டி கன்னத்தில் குழி விழ அதிதி  சிரிக்க, அதற்குமேல் பொய்யாக கூட கோப நாடகத்தை ஆட முடியவில்லை அவனால்.

“உன்னை…” என்றவாறு அதிதியை யாதவ் தூக்கி கொஞ்சவும், “நீங்க இன்னுமா ரெடியாகல?” என்று ரித்வி கத்திக்கொண்டு அறைக்குள் நுழையவும் சரியாக இருந்தது.

இருவரையும் மாறி மாறி பார்த்தவள் கணவனையும் மகளையும் இடுப்பில் கைகுற்றி முறைத்தவாறு, “எல்லாரும் போயிட்டாங்க. அங்க மண்டபத்துல ஆரன் அத்தான் ரெடியாகாம அலுச்சாட்டியம் பண்ணிக்கிட்டு இருக்காரு. கடத்திட்டு வந்தா மட்டும் போதாது, கல்யாணம் முடியுற வரைக்கும் எல்லா வேலையையும் இழுத்துப்போட்டு செய்யனும். உங்க இரண்டு பேரையும் வச்சிக்கிட்டு…” என்று நெற்றியை நீவிவிட்டுக் கொள்ள, ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர் தந்தையும் மகளும்.

“என்ன? என் முகத்தையே எவ்வளவுநேரம் பார்த்துக்கிட்டு இருக்க போறீங்க இரண்டுபேரும்? சீக்கிரம்” ரித்வி அவசரப்படுத்த, “ப்பா, ம்மீ ரொம்ப பேட்” என்று அதிதி தன் தந்தையின் காதில் ரகசியமாக சொல்கிறேன் பேர்வழியென்று கத்தியே சொல்ல, ரித்வியோ தன் மகளை உதட்டை சுழித்து பார்த்தாள் என்றால், மெல்லியதா சிரித்தவாறு தன்னவளையே கூர்ந்து பார்த்தான் யாதவ்.

அவளோ அவனின் பார்வையை புரியாது நோக்க, தன்னவளை நெருங்கியவன் நாடியை நீவிவிட்டவாறு, “அம்முவ பிடிச்சிக்கோ ரிது, இதோ வர்றேன்” என்றுவிட்டு ரித்வியின் மூக்குக்கண்ணாடியை தேடி எடுத்து வந்து அவளுக்கு போட்டுவிட்டு, “இப்போ பர்ஃபெக்ட்” என்று சொல்லிமுடிக்கவில்லை, “தண்ணாடி தா ம்மீ…” என்று பிடிவாதமாக கேட்டவாறு அடுத்தநொடி அந்த கண்ணாடியை பிடுங்கி கீழே சிதறவிட்டிருந்தாள் அவர்களின் அம்மு.

ரித்வியோ யாதவ்வை முறைக்க, “ஹிஹிஹி… மறுபடியுமா?” என்று அசடுவழிந்தவாறு இழித்து வைத்தான் அவளவன்.

அதிதி பொருட்களை எட்டி எடுக்க பழகிய நாளிலிருந்து ரித்வி மாற்றிய நான்காவது மூக்குக்கண்ணாடி இது. ரித்வியும் தன் குழந்தை செய்யும் சேட்டைகளினாலே லென்ஸ் போட்டுக்கொள்ள, யாதவ் தான் அவளை வற்புறுத்தி மூக்குக்கண்ணாடியை அவளுக்கு அணிவிப்பான். கூடவே, அம்மு உடைத்ததும் அதற்கு இழித்தும் வைப்பான்.

மூக்குக்கண்ணாடி கீழே விழுந்ததுமே தன் அம்மா திட்டுவதற்கு முன்னே அதிதி உதட்டை பிதுக்கி அழுவதற்கு தயாராக, அதற்கு மேல் திட்ட வார்த்தைகள் வருமா அந்த தாயிற்கு?

“அப்பா மாதிரியே இருக்க” செல்லமாக திட்டியவாறு ரித்வி அதிதியை யாதவ்விடம் நீட்ட, குழந்தையை அவளிடமிருந்து வாங்கியவாறு தன்னவளின் கன்னத்தை யாதவ் நறுக்கென்று கிள்ளிவிட்டு ஓடிவிட, ரித்வி தான், “யது…” என்று கத்தியவாறு வலித்த கன்னத்தை தடவி விட்டுக்கொண்டாள் .

எப்படியோ அம்முவிடம் கெஞ்சி, கொஞ்சி, அதட்டி, மிரட்டி அவளை தயார்படுத்தி தானும் தயாராகி யாதவ் நிற்க, இருவரையும் மண்டபத்திற்கு அழைத்துச் செல்வதற்குள் படாதபாடு பட்டுத்தான் போனாள் ரித்வி.

இங்கு மண்டபத்தில் மணமகன் அறையில்,

“என்னடா நினைச்சிக்கிட்டு இருக்கீங்க? எனக்கு கல்யாணமே வேணாம். அதுவும், அந்த வாயாடி வேணவே வேணாம்” ஆரன் விடாது கத்திக்கொண்டிருக்க, அதிபனும் சந்திரனும் தான் அவனை சமாளிக்க முடியாது திணறிவிட்டனர்.

“நேரமாச்சுடா அறிவுகெட்ட ஆரா! இப்போ நீ ரெடியாக போறியா, இல்லையா?” சந்திரன் பொறுக்க முடியாது கத்த, “டேய்! என்னை ஏன்டா கடத்தினீங்க? அன்னைக்கு அவ ஏதோ என்னை கடத்தி கல்யாணம் பண்ணுவேன்னு விளையாட்டா சொல்றான்னு நினைச்சேன். ஆனா, இப்போ… கொஞ்சநாளா அந்த யாதவ் பின்னால மாமா மாமா ன்னு அவ திரியும் போதே நான் யோசிச்சிருக்கனும். அதுவும் கடத்த வேற நேரங்காலமே தெரியலயா? இருக்குற நாலு ஃப்ரென்ட்ஸ் அ அதட்டி, மிரட்டி ஒரு ட்ரிப் கூட்டிட்டு போறது என்ன சாதாரண விஷயமா? எல்லாத்தையும் நாஸ்தி பண்ணிடீங்களேடா பாவிகளா! உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா?” திட்டிக்கொண்டே சென்ற ஆரன், யாதவ்வின் குரலில் தன் பேச்சை நிறுத்தி கோபமாக அவனிருந்த திசையை நோக்கினான்.

“உன் முகஅமைப்புக்கெல்லாம் கல்யாணம் ஆகுறதே பெரிய விஷயம். சோ, நடக்குறதை நினைச்சி சந்தோஷப்படு!” யாதவ் கேலியாக சொல்லியவாறு அறைக்குள் நுழைய, ஆரனோ அவனுடைய பேச்சில் அவனை முறைத்துப்பார்த்தான்.

யாதவ்வும் பதிலுக்கு அவனை முறைக்க, இதில் சந்திரனும் அதிபனும் தான், “அக்னி நட்சத்திரம் விக்ரம், பிரபு ன்னு நினைப்பு  இரண்டு பேருக்கும்” என்று வாய்விட்டே பொறுமிக்கொண்டனர். என்னதான் இருகுடும்பங்களுக்கும் இடையிலிருந்த பிரச்சினைகள் சீராகி இணைந்தாலும் யாதவ்வும் ஆரனும் மட்டும் இன்னும் முட்டிக்கொள்வதை நிறுத்தவில்லை.

சரியாக, “ஹெலோ டியூட்ஸ், வட்ஸ் அப்? என்ன மேன், ஸ்டில் ரெடியாகாம? ஓ கோட்! ஹர்ரி அப்… ஹர்ரி அப்…” அரைகுறை ஆங்கிலத்தில் ஸ்டைலாக பேசியவாறு அறைக்குள் நுழைந்த  இந்திரனை பார்த்த மற்ற ஆடவர்களுக்கு ‘இருக்குற பிரச்சினையில இவன் வேற…’ என்று தான் இருந்தது. அன்று வீட்டிலிருந்து வெளியேறியவன் அதிதி பிறந்ததும் தான் வீட்டிற்கே வந்தான் அதுவும் ஹெலனுடன். 

நடாஷா புதுக்கிளை ஆரம்பிப்பது தொடர்பாக கொழும்பில் வசித்திருந்த அவளின் வீட்டிற்கு சென்றவன், அங்கு யாதவ் சார்பாக நடாஷாவுக்கு உதவுகிறேன் பேர்வழியென்று ஹெலனின் பின்னால் லோலோவென அலைந்து எப்படியோ காதலுக்கு சம்மதிக்க வைத்து விட்டான்.

ஆறு மாதத்துக்கு முன் தான் பல பிரச்சனைகளை கடந்து இந்திரன் ஹெலனை இருமத முறைகளிலுமே திருமணம் செய்திருக்க, “சந்திரனாவது ஓடிப்போய் நம்ம ஊரு பொண்ண கல்யாணம் பண்ணிட்டு வந்தான். ஆனா இவன், சொல்லிட்டே போய் ஏதோ ஒரு வெள்ளைக்காரிய பிடிச்சுட்டு வந்திருக்கான்” என்று சில மாதங்களாக தன் மகனுடன் பேசாத சகாதேவன், இப்போதுதான் பேசவே ஆரம்பித்துள்ளார்.

அதுவும், திருமணமாகி கடந்த ஒரு மாதம் லண்டனிலிருக்கும் ஹெலனின் வீட்டிற்கு சென்ற இந்திரன், ஒரு வாரத்திற்கு முன் தான் ஊருக்கே வந்திருக்க, வந்ததிலிருந்து அவனின் அரைகுறை ஆங்கில புலமையில் சுற்றியிருந்தவர்களுக்கு தான் ‘அய்யோ!’ என்றிருந்தது.

“கடவுளே! இவனுங்க மூனு பேரும் என்னடான்னா ஊருவிட்டு ஊரு போன என்னை அவளோட பேச்சைக்கேட்டு கடத்திட்டு வந்து கல்யாணம் பண்ண சொல்லி டோர்ச்சர் பண்றானுங்க. அவ என்னடான்னா சொந்த அத்தானையே கடத்த சொல்லியிருக்கா. ஒன்னு இரண்டு பைத்தியமா இருக்கலாம். சுத்தி இருக்குறதுங்க மொத்தமும் அப்படியே இருக்கே…” என்று பொறுமிக்கொண்ட ஆரன், “படவா! இன்னும் தயாராகலயா நீனு?” சட்டென்று கேட்ட தேவகியின் கத்தத்தில் மின்னல் வேகத்தில் தயாராகி நின்றான்.

மணமேடையில் அமர்ந்திருந்த ஆரனோ தன் பக்கத்தில் அமர்ந்திருந்த தாராவை முறைத்துப்பார்க்க, ஓரக்கண்ணால் அவனை பார்த்தவள், “என்ன அத்தான், வச்ச கண்ணு வாங்காம என்னையே பார்த்துக்கிட்டு இருக்கீங்க? அவ்வளவு அழகாவா இருக்கேன்? அச்சோ! வெட்கவெட்கமா வருதே…” என்று வெட்கப்பட்டுச் சிரிக்க, “ஆண்டவா!” என்று புலம்பியவன், “இது உனக்கே ஓவரா தெரியல?” என்று ஒற்றை புருவத்தை உயர்த்திக்கேட்டான்.

“ஏன் அத்தான் இப்படி பேசுறீங்க? என் மேல கொஞ்சமும் காதல் இல்லையா உங்களுக்கு?” வராத கண்ணீரை வரவழைத்து துடைத்தவாறு தாரா கேட்டதில், சலிப்பாக இருபக்கமும் தலையாட்டி, “குடும்பத்துக்குள்ள கல்யாணம் பண்ணா குழந்தை ஊனமா பிறக்குமாம்டி” என்று ஆரன் சொன்ன அடுத்தகணம் அவனை சற்றுநேரம் அதிர்ந்து நோக்கியவள், பின் வாயைப் பொத்திக்கொண்டு சிரிக்க ஆரம்பித்தாள்.

ஆரனோ அவளை முறைத்துப் பார்க்க, முயன்று சிரிப்பை அடக்கி, “யோவ்! இதெல்லாம் ஒரு காரணம்னு இதுக்காக தான் என்னை கட்டிக்க மாட்டேன்னு அடம்பிடிச்சியா? தத்தெடுத்தாவது குழந்தைய வளர்ப்போம். சோ, நோ ப்ரோப்ளம். இந்த ஜென்மத்துல நான்தான் உன் பொண்டாட்டி” என்று தாரா சொல்ல, இதற்குமேல் அவனாலும் தன் மாமா மகள் மீது இருக்கும் ஆசையை மறைக்க முடியவில்லை.

புன்னகையை இதழுக்குள் அடக்கியவன், “வாலு…” என்று திட்டி முகத்தை திருப்பி சிரித்துக்கொள்ள, சரியாக மங்களநாணை எடுத்து நீட்டி, “கெட்டிமேளம்… கெட்டிமேளம்…” என்று ஐயர் சொல்லவும், “காதல் இருக்கான்னு தெரியல. பட், பிடிச்சிருக்கு” சிரிப்புடன் சொன்னவாறு மங்களநாணை வாங்கி தாராவின் கழுத்தில் அணிவித்தான் ஆரன்.

தங்களின் ஒருவயது மகன் மித்ரனை தூக்கி வைத்தவாறு சந்திரனும் உத்ராவும் அட்சதை தூவி வாழ்த்த,  “இவன சமாளிச்சி மணமேடையில ஏத்துறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுச்சி” என்று தங்களின் புதல்வி வர்ஷாவை தூக்கி வைத்திருந்த தன் மனைவி வைஷ்ணவியிடம் புலம்பியவாறு அட்சதை தூவினான் அதிபன்.

இங்கு இந்திரனோ, “எலி, இந்த சாரியில ஹவ் ஸ்வீட் யூ ஆர்…”  என்று தன் புது மனைவியிடம் வழிந்து கொண்டிருக்க, “நாமளும் இன்னொருதடவை கல்யாணம் பண்ணிப்போமா சோடாபுட்டி?” ஒற்றை கண்ணை சிமிட்டி குறும்பாக கேட்டவாறு யாதவ் ரித்வியை காதலாக நோக்க, “ஒரு பொண்ண பெத்தாச்சி… ஆனாலும்,உன் அப்பாவுக்கு ரொம்ப தான் ஆசை” என்று தன் மகளிடம் நொடிந்துக்கொண்டவளுக்கு அவனின் குறும்புப் பேச்சால் உண்டான கன்னச் சிவப்பை மட்டும் மறைக்க முடியவில்லை.

இளசுகளின் கேலி சிரிப்பு சத்தங்களிலும் தேவர்களினதும் பெரியவர்களினதும் ஆசிர்வாதங்களினாலும் கல்யாணம் இனிதே நடைபெற்று முடிய, தேவகி, மஹாதேவன் குடும்பத்தினரின் முகத்தில் பூத்த உறைந்த புன்னகை அங்கிருந்த புகைப்பட கருவியில் பல புகைப்படங்களாக சிறைப்பிடிக்கப்பட்டது.

சுபம்…”  என்று வாய்விட்டே சொன்னவாறு தன் நாவலின் கடைசி அத்தியாயத்தின் கடைசி வார்த்தையை எழுதி முடித்த யாதவ், “பர்ஃபெக்ட்! அப்படி தான் நினைக்கிறேன்” என்று யோசனையாக பற்களுக்கிடையில் பேனையை வைத்துச் சொன்னவாறு  தன் மகள் அதிதியை நோக்க,

நாடியில் கைவைத்து தன் தந்தை எழுதியதையே பார்த்துக் கொண்டிருந்த அதிதி, “ப்பா, உங்களுக்கும் ம்மீக்கும் மறுபடியும் கல்யாணம் நடந்திச்சா?” என்று ஒரு கேள்வியை கேட்டு வைத்தாள் தீவிரமாக.

“க்கும்! அதான் ஒன்ன நினச்சிட்டாரே…  நடத்தாம விட்டுருவாரா என்ன? இரண்டாவது தடவையா என் கழுத்துல தாலி கட்டி ஊரையே என்னை பார்த்து சிரிக்க வச்சிட்டாரு. ரொம்ப தான் பிடிவாதம்டி உன் அப்பாவுக்கு” கையில் தேநீர், பிஸ்கட்டுடன் அறைக்குள் நுழைந்தவாறு ரித்வி சொல்ல, “ரியலி? சூப்பர்ப்பா நீங்க” என்று வாய்விட்டே சொல்லி சிரித்தாள் அதிதி.

“ஆனாலும், ம்மீ உனக்கு ஆசை இல்லையா என்ன? எப்போ பாரு அப்பாவை திட்டுற! ப்பா, ரித்விக்கு உன் மேல இருந்த பயம் விட்டு போச்சு. கொஞ்சம் அடக்கி வை” கேலியாக சொல்லி தன் தாய் சுற்றும் முற்றும் எதையோ தேடுவதை உணர்ந்து அதிதி அங்கிருந்து ஓடிவிட, “அவள…” என்று தன் மகளை துரத்தச் சென்ற தன் மனைவியை பிடித்து இழுத்தணைத்தான் யாதவ்.

“என்னங்க, அவ வந்துரப் போறா…” ரித்வி அவனிடமிருந்து விடுபட முயற்சித்தவாறு சிணுங்க, “என் பொண்ணு என்ன உன்னை மாதிரி ட்யூப்லைட்னு நினைச்சிட்டியா சோடாபுட்டி? ஆமா… இப்போ என்ன ரொம்ப அழகாகிகிட்டே போற?” என்று கேட்டவாறு அவளின் மூக்கு கண்ணாடியை சரி செய்தான் யாதவ்.

“ரொம்பத்தான்!” என்று கன்னங்கள் சிவக்க வெட்கப்பட்டவள், அங்கு தன்னவன் எழுதியிருந்த புத்தகத்தின் அட்டையிலிருந்த கதையின் தலைப்பை, “லவ் ஆர் ஹேட் மீ…” என்று புருவத்தை சுருக்கியவாறு வாசித்து யாதவ்வை கேள்வியாக நோக்க,

மென்மையாக புன்னகைத்தவன், “நோ ஹேட், ஒன்லி லவ் மீ சோடாபுட்டி” என்று சொன்னவாறு  இடைஞ்சலாக இருந்த அவளின் மூக்குக் கண்ணாடியை கழற்றி தன்னவளின் இதழில் அழுந்த முத்தமிட்டு அதிலேயே மூழ்கி விட, அவனிடமிருந்து விடுபட மனமின்றி அவனுள் தொலைந்துத் தான் போனாள் ரித்விகா.

ஒரு பார்வை… ஒரு வார்த்தை… ஒரு சந்திப்பு…
இதை இவனிடம் ஏங்கும் மீரா இவளோ…
அதை உணராது தான் போனான் கிருஷ்ணன் ஏனோ!

விதி தன் விளையாட்டை ஆடியது சளைக்காது…
அதில் கிருஷ்ணனுக்கு ராதையும் கிடைக்காது…
பாவப்பட்ட இரையானவளோ தென்பட்டாள் அவனுக்கு சிறைப்பிடித்த ராவணனாய்…

யாரோ செய்த பாவம் இருவருக்கும் வினையாக
காதல் கானல்நீரான காயம் இவளுக்கு…
அன்பு வெறுப்பான சாபம் இவனுக்கு…

மரித்த காதல் உயிர்பெற,
வேண்டி நின்றான் காதல் யாசகம்..

தயக்கங்கள் எல்லாம் தவிப்பாக மாற,
ஈருயிர் ஓருடலாக ஜனிக்க,
கானல் காதல் நிஜமானதே…
கிருஷ்ணமீரா காவியமானதே…

ஷேஹா ஸகி