வஞ்சம் வைத்து கொ(வெ)ல்வேனடா..!
வஞ்சம் வைத்து கொ(வெ)ல்வேனடா..!
வஞ்சம் – 14
அன்று
‘பாப்பா. இன்னைக்கு ஒரு குடும்பத்தையே வம்புக்கு இழுக்குதே’ அதிர்ந்தபடி நின்றார் ராமண்ணா.
அவரை நமட்டுச் சிரிப்புடன் பார்த்து, “ராமண்ணா என்ன மசமசன்னு நிற்கிறீங்க சீக்கிரம் மாமியாரையும், மருமகளையும் பார்சல் பண்ணுங்க”
“பாப்பா”
“என்னண்ணா”
“அந்த மாமியார், மருமகள் யாரு பாப்பா”
“அட! இத்தனை நாள் கடைவச்சு ஒண்ணுமே தெரியாம இருக்கீங்களே, உங்களை என்ன செய்வது?” இடுப்பில் கைவைத்து முறைத்தவள்,
“வத்தல் தூள், மிளகு தூள், உப்பு, எண்ணெய். இதோட கோர்ட்வேர்ட் தான் அது”
தன்னைத் தானே மானசீகமாகத் தலையில் அடித்துக் கொண்டவர், அவர்களுக்குத் தேவையானதும், அதற்கு மேலும் கொடுத்துச் சீக்கிரமே இடத்தைக் காலிச் செய்ய வைத்தார்.
“அக்கா ராமண்ணா இன்னைக்கு எதுக்கு நம்மளை இப்படி விரட்டுனார்”
“யாருக்கு தெரியும்டா, மிட்டாயை தின்னுவியா? அதை விட்டுட்டு எதுக்குத் தேவையில்லாத பேச்சு” சிடுசிடுத்தவள் முன்னே நடந்தாள்.
ஆற்றங்கரைக்குச் சென்று, இரண்டு நாட்களுக்கு முன் தண்ணீர் எடுக்க வந்தவர் பானையை ஒருவன் தெரியாமல் உடைத்துப் போட்டிருந்தான், அதை அடுப்பில் வைத்து மீனை பொரித்துச் சண்டைகளுடன் பங்குப் போட்டுத் தின்னவர்கள் மேலும் சுற்றி மாலை போல் தங்கள் வீடு நோக்கி கிளம்பினார்கள்.
“மனோ, தேவ் தோட்டத்தில் நிற்கிறான் கொஞ்சம் இந்தச் சாப்பாட்டைக் கொடுத்துட்டு வாம்மா, மதியம் சாப்டவே இல்லை. கொண்டு போன சாப்பாட்டைத் தாத்தா இப்போ தான் திருப்பி எடுத்துட்டு வந்தாங்க” அவளின் அத்தை தங்கம், வீட்டுக்கு வந்தவளை தடுத்துக் கூறினார்.
“சரித்தை” என்றபடி அவரிடம் சாப்பாட்டை வாங்கித் தோட்டத்தை நோக்கி சென்றாள்.
தோட்டத்தில் வேலையை முடித்த தேவ், ஆற்றில் இறங்கி கை, கால்களை அலம்ப வந்தவன், தண்ணீர் சில்லென்ன இருப்பதைக் கண்டு குளிக்க எண்ணி, ஷர்ட்டை கழட்டி ஆலமரத்தில் தொங்கபோட்டு இடுப்பில் கட்டியிருந்த வேஷ்டியுடன் ஆற்றில் இறங்கினான்.
ஒரு பாடலை மெதுவாக முணுமுணுத்து வந்தாள் கீர்த்தி. ஆற்றைக் கடந்து தான் அவர்களின் வயலுக்குச் செல்லமுடியும்.
தூரத்தில் வரும் பொழுதே ஆலமரத்தில் தொங்கிய தேவ் ஷர்ட் கண்ணில் பட, அதை நோக்கி ஓடி வந்தவள் அதை மெதுவாக வருட, தேவ்வையே வருடியதைப் போல் உணர்ந்தாள்.
இதுவரை அவனைக் கண்டு சலனபடாத மனம் கடந்த மூன்று மாதங்களாக அவனைப் பார்க்கும் நேரம் பல கற்பனைகள் மனதில் வளர ஆரம்பித்தது. அவனைப் பார்க்கும் பொழுது மனம் படபடவென அடித்துக் கொண்டது.
அவன் முன் நின்று பேசினாலே வயிற்றில் ஆயிரம் பட்டாம் பூச்சி பறக்கும் உணர்வு, ‘அவன் உனக்குத் தாயுமானவன், தாயை போன்றவன். உன்னைத் தோளிலும், மார்பிலும் போட்டு வளர்த்தவன், அவன் மேல் சலனம் கொள்ளாதே மனமே’ அவளின் புத்தி எடுத்துரைத்தது.
ஆனால் அவள் மனமோ அதைக் கேட்கும் நிலையில் இல்லை. ‘இவன் எனக்கானவன். நான் அவனுக்கானவள்’ மனதில் அவளுக்கும், அவனுக்குமான முடிச்சை இட்டுக் கொண்டாள்.
இப்பொழுதெல்லாம் அவளை மேலே படிக்கக் கூறினாலே, “தேவ்வை தான் கட்டிக் கொள்ளப் போகிறேன், ஏன் படிக்க வேண்டும்” என்று எதிர் கேள்வி கேட்க ஆரம்பித்தாள். அவன் அத்தனை ஆழமாய் அவளுள்ளே புகுந்தான்.
இப்பொழுது அவன் ஷர்டை பார்க்கவும் அதைத் திருட மனம் ஆசைக் கொண்டது. அது அவன் அடிக்கடி அணியும் ஷர்ட் அது. கையில் எடுத்தவள் அதை நுகர்ந்துப் பார்த்தாள், அவனின் பர்ப்யூம் வாசனை வர நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள், அவனே அவள் கையில் அடங்கிய உணர்வு!
தூரத்தில் தேவ் வருவதைக் கண்டவள், தாவணியோடு சேர்த்து ஷர்ட்டையும் மடித்து இடுப்பில் சொருகிக் கொள்ள, அதன் மெல்லிய தீண்டல் கூட அவளை வெட்கம் கொள்ள வைத்தது. முதல் காதல் அவளைப் பித்தாகியது!
சேற்றில் இறங்கி உழைத்த கட்டுமஸ்தான தேகம், ஓட்ட வெட்டிய முடி, முறுக்கு மீசை என ஆளே அசத்தலாக இருந்தான் தேவேந்திரன். இப்பொழுதெல்லாம் அவனைத் தூரத்தில் இருந்து இப்படித் தான் ரசித்துப் பார்க்கிறாள் கீர்த்தி.
அவன் அருகில் வரவும், “என்ன பொம்மு இங்க நிற்கிற” என வலது புருவத்தை வருடிக் கொண்டே கேட்க,
“இல்ல மச்சான் அத்தைச் சாப்பாடு கொண்டு வரச் சொன்னாங்க”
அவளையே யோசனையாகப் பார்த்தான் தேவ். ’கொஞ்ச நாளுக்கு முன்னாடி வரை சரிக்குச் சமமாகப் போட்டியிட்டவள் இப்பொழுது பேசவே தயங்குகிறாள்’ நிதானமாக அவளைப் பார்த்து யோசித்தவன் அவளிடம் சாப்பாட்டுக் கூடையை வங்கிக் கொண்டு, “நீ வீட்டுக்கு போ பொம்மு” என அவன் கிளம்பினான்.
ஓட்டமும், நடையுமாக வீட்டை நோக்கி பறந்தாள்… அறைக்குச் சென்றவள் அவன் சட்டையை நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள். அதற்கு மேல் முடியாமல் ஷர்ட்டை மடித்துத் தன் அலமாரியின் உள்ளே மறைத்து வைத்தாள். அவன் ஷர்ட்டில் இருந்து வந்த அவனின் வாசனை அவள் நாசியைத் துளைக்க, அவளால் புரிந்து கொள்ள முடியாத பரவசம் உள்ளே பரவியது.
அவனே அருகில் இருப்பது போல் ஒரு மாயை அவளுள் தோன்றியது! அதன் தாக்கம் முடியாதவளாய் அலமாரியை வேகமாக அடைத்தவள் ஓடி வந்து கட்டிலில் அமர்ந்துக் கொண்டாள். ஒரு வித அவஸ்தையை அனுபவித்தாள்.
“மச்சான் பாவம், குளிர் நேரம் வேற, ஷர்ட்டை வேற நான் தூக்கிட்டு வந்துட்டேன். சாப்ட்டாங்களா இல்லையா” அவளுக்கு மனதே கேட்கவில்லை.
எப்பொழுதும் அவள் சாப்பிட்ட பிறகு தான் அவன் சாப்பிடுவான். அது அவள் சிறு வயதாக இருக்கும் பொழுதே அவன் கடைப்பிடிக்கும் வழக்கம்.
ஒருமுறை இப்படித் தான் காலையில் தேஷிக்கும், கீர்த்திக்கும் சண்டை வர, கோபத்தில் கீர்த்திச் சாப்பிடாமல் பள்ளி சென்றுவிட்டாள். வீட்டில் யார் அழைத்தும் கேட்காமல் செல்ல, தேவ்வுக்குத் தான் மனதே கேட்கவில்லை. அவளின் பள்ளிக்கு சென்று, அவளின் கிளாஸ் பையனை பிடித்து அவனிடம் உதவி கேட்டான் தேவ்.
“டேய் எனக்கு ஒரு ஹெல்ப்டா”
“சொல்லுண்ணா”
“உனக்குப் பிறந்த நாள் என்று உன் கிளாஸ் பிள்ளைகள் எல்லாருக்கும் இந்தச் சமோஸா பொட்டலத்தைக் கொடு”
“எதுக்குண்ணா, எனக்கு இன்னைக்குப் பிறந்தநாள் இல்லையே”
“கீர்த்திச் சாப்பிடாம வந்துட்டாடா”
“ஓஹோ! காதல் தூதா” சிரித்தவன் அவன் கொடுத்ததை வாங்கிக் கிளாஸ்ரூம் நோக்கி விரைந்தான்.
பதினோரு மணி பெல் அடிக்கவே எல்லாரும் கிளாஸ் செல்ல, வகுப்பாசிரியரும் உள்ளே நுழைந்தார்.
“சார்”
“என்னடா?”
“எனக்கு இன்னைக்குப் பிறந்த நாள் சார்”
“அதுக்கென்னடா?” அவனை முறைத்துக் கேட்டார் ஆசிரியர்.
“இந்தச் சமோஸா எல்லாருக்கும் கொடுக்கவா?”
“ஏன் காலையில் வந்து கொடுக்கவேண்டியது தானே?” முறைப்புடனே கேட்டார் சார்.
‘என் பிறந்த நாள் எனக்கு இன்னைக்கு, இப்போ தான் தெரிக்கின்றது’ மனதில் எண்ணியவன், “இப்போ தான் கடையில் சூடா சமோஸா போட்டாங்க”
“சரி. சரி. சீக்கிரம் கொடு”
அவனின் சாருக்கும் கொடுத்தவன், கீர்த்திக்கும் கொடுத்துச் செல்ல,
“எல்லாரும் சாப்பிடுங்க” ஆசிரியர் கட்டளையிட எல்லார் கூடவே அவளும் சாப்பிட்டாள்.
சாப்பிட்டுக் கொண்டே அப்படியே வெளியில் பார்க்க, தேவ் இன்னொரு ஆசிரியரிடம் பேசிக் கொண்டிருப்பது கண்ணில் தெரிய, வேகமாக உண்டாள் அவள்.
தற்செயலாகக் கீர்த்தி வகுப்பை தேவ் பார்க்க, அவள் சாப்பிடுவது கண்ணில் தெரிய மனநிறைவுடன் தன் காலை சாப்பாடு சாப்பிட வீட்டை நோக்கி சென்றான் தேவேந்திரன்.
அவள் ஒரு நேரம் சாப்பிடவில்லை என்றதும், ஒரு வகுப்புக்கே சமோஸா வாங்கிக் கொடுத்தான். அவன் அன்பை கண்டு எப்பொழுதும் போல் மெய்சிலிர்த்துப் போனாள்.
‘இப்படி எல்லாம் தனக்காகப் பார்த்து பார்த்து செய்யும் அவன், இன்று சாப்பிட்டானா தெரியலியே’ எண்ணியவள் மெதுவாக அறையை விட்டு வெளியில் வந்தவள் தன் அறையில் இருந்த சிறு டார்ச் லைட்டை எடுத்துத் தோட்டத்தை நோக்கி நடந்தாள்.
அதே நேரம் வயலில் இருந்த தேவ்வும் இவளைப் பற்றித் தான் எண்ணிக் கொண்டிருந்தான். அவனின் அத்தை சிறு வயதிலையே அவள் கையில் கீர்த்தியைக் கொடுத்து விட்டு சென்று விட்டாள்.
கீர்த்தியின் மூன்று வயது வரை, அவள் அந்த வயதுக்கே உரிய எந்த ஒரு செயலையும் செய்யாமல் ஒரு வித அசமந்தமாகவே இருந்தாள்.
ஒரு வயதில் குழந்தைகள் நடக்கப் பழகும் என்றால், கீர்த்தியோ மூன்று வயது வரை நடக்கவே இல்லை. எங்குச் சென்றாலும் தேவ் தான் அவளைத் தோளில் சுமப்பான்.
இந்தக் கவலையில் மருதுவின் அப்பத்தா தன் உயிரை விட, ராஜா திருமணமே செய்யாமல் கீர்த்தியை வளர்க்கும் பொறுப்பை எடுத்துக் கொண்டான் ராஜா.
துரைச்சியின் வீட்டில் யாரிடமும் அவன் கீர்த்தியை வளர்க்கும் பொறுப்பைக் கொடுக்கவில்லை. தானே வளர்ப்பதாகக் கூறி அவனே அந்த பொறுப்பை எடுத்துக் கொண்டு அவளை வளர்த்தான்.
ஆனால், கீர்த்தியின் வளர்ச்சியில்லா நிலை அவனை மிகவும் கவலைக்குள்ளாகியது, ‘தன்னால் அவளை வளர்க்க முடியாதோ?’ என்ற கவலை அவனை அரிக்க ஆரம்பித்தது.
மருத்துவரிடம் அவளைக் காட்ட, “அவள் கூடவே இதே வயது சிறு குழந்தை வளர்ந்தால் நன்றாக இருக்கும்” எனக் கூற உடனே ஒரு ஆஸ்ரமத்திற்குச் சென்று தேஷியை தத்தெடுத்துக் கொண்டான்.
இருகுழந்தையையும் அவனே வளர்த்தான். வயலுக்குச் செல்லும் நேரம் அங்குத் தோட்டத்தில் உள்ள மரத்தில் தொட்டில் கட்டி இருவரையும் அங்குத் தூங்க வைப்பான்.
காமாட்சி, தங்கம், செந்தூர் என்று யார் கேட்டாலும் இருவரையும் அவர்களிடம் அவன் கொடுக்கவேமாட்டான்.
‘வீரன் மருதுவின் குழந்தை யார் தயவிலும் வாழ வேண்டாம்’ என்பது அவன் எண்ணம். அதனால் அவனே குழந்தையை வளர்த்தான்.
நாளடைவில் தேவ்வின் அடம் அதிகரிக்க, இங்கு, தேவ் வீட்டில் வந்து தங்கிக் கொண்டான் ராஜா. தேஷியின் ஒவ்வொரு செயலையும் பார்த்து கீர்த்தி அதன் படி நடந்தாள்.
ராஜாவை, தேஷிகா, “அப்பா” என அழைக்க, அவள் வாயையே பார்த்திருந்த கீர்த்தி, தேவ் பள்ளியை விட்டு வரவும் “அப்பா” என அழைத்துத் தேவ்வை கட்டிக் கொண்டாள். இப்படி அவளின் உறவு எல்லாமே தேவ் தான்.
சிறுவயதிலிருந்தே தேவ் கட்டிக் கொள்ளப் போவது கீர்த்தியை தான் என அவன் மனதில் ராஜா விதைத்திருந்தான்.
ஒரு முறை மருதுவிடம், ராஜா பேசிக் கொண்டிருக்கும் பொழுது, “மாப்ள, எனக்கு எப்போ என்ன ஆகும் என்று தெரியாது, ஒருவேளை எனக்குப் பொண்ணு பிறந்தா அவளைத் தேவ்வுக்குத் திருமணத்தைச் செய்து வைக்க வேண்டும், இதைத் தான் துரைச்சியும் விரும்புவாள்” என்று கூறியிருந்தான், அதனால் தான் தேவ் வளர வளர உனக்கு எல்லாமே கீர்த்தித் தான் என்று சொல்லிச் சொல்லி வளர்த்தான்.
தேவ் மனம் முழுவதும் கீர்த்தி நிறைந்திருக்க, கீர்த்தி மனதிலோ ஒரு சதவிகிதம் கூடத் தேவ் மேல் காதல் வரவில்லை. அதைத் தேவ் உணர்ந்த நொடி மிகவும் உடைந்து போனான்.
“கீர்த்தி வாசல் தெளித்துக் கோலம் போடு” எனக் காமாட்சி அவளை விரட்ட,
“கிழவி எப்போ பார்த்தாலும் என்னை விரட்டிட்டே இருக்க, ஒரு நாளாவது தேஷியை நீ வேலை செய்யச் சொல்லுறியா, எப்போ பாரு என்னையே சொல்லு”
“அடியே உன் அம்மா போலவே வளராதே, ஒழுங்கா பொம்பளை பிள்ளை மாதிரி இரு”
அவர் முன் வந்து நின்றவள், தன்னை அங்கேயும், இங்கேயும் திருப்பியவள், “என்னைப் பார்த்தா பொண்ணு மாதிரி தெரிலையா? அது தான் நான் வெளிய போனாலே, எல்லாரும் என்னைப் பார்த்து பயந்து ஓடுறாங்களா?” காமாட்சியைப் பார்த்துக் கேட்க,
அருகில் இருந்த துடைப்பத்தை எடுத்து, “ஒழுங்கா கூட்டி, சாணி தொளிச்சு, கோலம் போட்டுட்டு வீட்டுக்குள்ள வா” முறைத்து செல்ல,
அவரை முறைத்தவள், கூட்ட ஆரம்பித்தாள். அது ஒரு மார்கழி நேரம், ‘கடவுளே என் பேத்திக்கு நல்ல புத்தியை கொடு’ என வேண்டுதல் வைத்த காமாட்சி, இந்த ஒரு மாத காலமாக அவளைக் கோலம் போட கூறியிருக்கிறார்.
கோலம் போட்டு முடித்தவள், அதன் நடுவே பூசணி பூவை வைத்தாள்.
இத்தனை நேரம் அவள் கோலம் போடும் அழகை தூரத்தில் இருந்து ரசித்தவன், அவள் பூசணி பூவை வைக்கவும், அவளை நோக்கி ஓடி வந்தவன், “பொம்மு உன்னை எத்தனை நாள் இந்தப் பூ வைக்காதேன்னு சொல்லிருக்கேன்”
“ஏன் வைக்கக் கூடாது” பல முறை இதே கேள்வியை அவனிடம் கேட்டுவிட்டாள், பதில் தான் கூறவில்லை. ‘இன்றைக்கு எப்படியாவது கேட்டு அறிந்து கொள்ள வேண்டும்’ என்று முடிவெடுத்துக் கொண்டாள்.
“வைக்கக் கூடாதுன்னா வைக்காத” கோபமாகக் கூறினான்.
“அதான் ஏன்”
“அ… அது”
“சொல்லுங்க”
அவள் முகத்தையே ஊன்றிப் பார்த்தான் தேவ், காலையில் குளித்து ஈரம் சொட்டிய முடியை கீழே முடிச்சிட்டிருந்தாள். நெற்றியில் சிறு பொட்டும் அதற்கு மேலே திருநீர் கீற்றும் இடம் பெற்றிருந்தது. அரக்கு நிற தாவணி உடலை தழுவியிருக்க, மொத்தமாக எடுத்து இடுப்பில் சொருகியிருந்தாள்.
“இப்படி மார்கழி மாசம், கோலம் நடுவில் இந்தப் பூவை வைத்தால், திருமணத்திற்குப் பொண்ணு ரெடியா இருக்குன்னு நினைத்து வீட்டுக்கு வருவாங்க. எனக்கு அது பிடிக்கலை பொம்மு”
“ஏன்… ஏன்… பிடிக்கலை”
“அ… அது. உன்னை யாரு. யாருக்கும் விட்டு கொடுக்க மாட்டேன் பொம்மு” அவளின் கன்னத்தைப் பிடித்துக் கண்களுக்குள் ஊன்றி பார்த்துக் கூறினான் தேவ்.
“நான் உங்களை அப்படிப் பார்க்கவே இல்லை மச்சான், எனக்கு எல்லாமே நீங்க தான் ஆனா நீங்க நினைக்கிறது அந்த எல்லாமேவில் இல்லை” அவனிடம் புதிராகக் கூறியவள் வீட்டுக்குள் சென்று மறைந்தாள்.
அவன் கண்ணில் தெரிந்த காதலும், மெல்லிய கலக்கமும் அவளை ஆட்கொண்டது. மனமோ ‘மச்சானை ஏமாற்றுகிறோமோ’ என்ற எண்ணம் வர, இன்னைக்கு ஒரு நாள் தானே விளையாடி தான் பார்போமே மனம் ஆசைக் கொள்ள அவனைப் பார்த்துக் கொண்டே வீட்டின் உள்ளே சென்றாள்.
அவனுக்கு நன்கு தெரியும் ‘அவள் மனதில் தான் இருக்கிறோம்’ என்று, ‘ஆனால், எதுக்கு இப்படிச் சொல்லிட்டு போறா?’ எண்ணியவன் அவளை விட்டு விலக ஆரம்பித்தான்.
ஆனால் அவளுக்கு வேண்டியதை அவன் தான் செய்வான். இரவு வீட்டில் சாப்பிட வந்தால், அவள் சாப்பிட்டு முடிக்கும் வரை அப்படியே இருப்பவன் அவள் எழுந்த பிறகு தான் அவன் சாப்பாட்டில் தன் கையை வைப்பான். அதற்கு மேல் அவள் பரிமாறுவாள். வீட்டில் தேஷி எத்தனை கிண்டல் செய்தாலும் இருவரும் தூசியைத் தட்டுவது போல் தட்டிச்செல்வர். ராஜா புன்னகை முகத்துடன் இவர்களையே பார்த்திருப்பான்.
இப்பொழுதெல்லாம் அவளை அவன் அதிகம் பார்ப்பதே இல்லை. வீட்டில் இருந்தால் தன் கண்கள் அவளையே தேடும் என்பதால் எப்பொழுதும் தோட்டமே கதி என்று அங்கேயே தங்கிக் கொண்டான்.
தான் அவள் கண் முன் இருப்பதால் தான் அவளுக்குத் தன் மேல் காதல் வரவில்லையோ என்று எண்ணிய தேவ் அவளை விட்டு விலக ஆரம்பித்தான்.
அதே போல் இன்றும் தேவ் ஷர்ட்டை அவனுக்குத் தெரியாமல் அவள் எடுத்தது, அவன் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கொஞ்ச நாட்களாக அவளின் பார்வையில் தெரிந்த நேசத்தைக் கண்டு கொண்டான்.
அவளைப் பற்றி நன்கு அறிந்தவன் அவன் ‘அவள் தன்னைத் தேடி எந்த இரவானாலும் வருவாள்’ என வலது புருவத்தை வருடியபடியே அவளுக்காகக் காத்திருந்தான் தேவ்.
அவன் எண்ணியதைப் போல் தூரத்தில் சிறு டார்ச்லைட்டை கையில் ஏந்தி அவனைத் தேடி வந்தாள் அவனின் பொம்மு.
@@@@@
பல முறை மூர்த்தி, காரிகையையும், தன் மகனையும் காண வர அவள் அவரைப் பார்க்கவே விரும்பவில்லை. தன் மகனையும் அவரிடம் பேச அனுமதிக்கவும் இல்லை.
இப்படியாக ஒவ்வொரு நாளும் கனத்த மனதுடன் திரும்புவார் மூர்த்தி. ஒரு நாள் அவர் உருவாக்கிய தொழில் சாம்ராஜ்யத்தையும். காரிகை பவனத்தையும். இருவர் பெயருக்கும் மாற்றி எழுதிய பத்திரத்தை கையில் கொடுத்து சென்றார்.
அதன் பிறகு அவர் அவர்களைப் பார்க்க வரவே இல்லை. இவர்களும் அவரைத் தேடிச் செல்லவில்லை.
மூர்த்தி அவர் தொழிலை விட்டு சென்றதால், தொழில் சாம்ராஜ்யம் சரிய ஆரம்பிக்க, காரிகையை, மேனேஜர் வந்து தொடர்பு கொள்ளக் காரிகை மீண்டும் அவள் கையில் தொழிலை எடுத்துக் கொண்டாள்.
காரிகை என்ற பெயருக்காகவே அவர்களின் தொழில் வளர்ந்தது. நம்பிக்கையான மேனேஜர், ஏற்ற இறக்கத்தை அவளுக்குப் புரியவைத்து மீண்டும் நல்ல இடத்தை அடைந்தது காரிகை கார்மெண்ட்ஸ்.
மூர்த்தி என்ன ஆனார் என்று யாருக்கும் தெரியவில்லை. ஸ்வேதா எங்கும் தேடியும் மூர்த்தியை காணவில்லை. இருமுறை காரிகையைத் தொடர்பு கொள்ள மனம் நொந்து வெளியில் வந்தார் ஸ்வேதா.
‘தான் அவள் வாழ்கையில் தன்னை அறியாமலே மிகவும் விளையாடி இருக்கிறோம்’ என்று அந்த ஒரு நாளில் அறிந்துக் கொண்டாள்.
இருவர் வாழ்கையும் அதன் போக்கில் செல்ல, விஷ்ணு கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பித்தான்.
விஷ்ணு பள்ளி படிப்பை முடிக்கவும் மேல் படிப்புக்காக லண்டன் கிளம்பினான். காரிகை எத்தனை கூறியும் அவன் கேட்கவே இல்லை.
ஏதோ ஒரு வெறுப்பு, காரிகையைத் தவிர யாரையும் அவன் மதிக்கவில்லை. இப்பொழுது காரிகையையும் அவன் மதிக்காமல் தன் போக்கில் சென்றான்.
பணக்காரன் என்ற கர்வம் அவனைப் பெரிதும் ஆட்டிப்படைத்தது. பணம் என்ற மாயை பின்னே சென்று பலதை கற்க ஆரம்பித்தான். ‘தன் மகன் தன்னை விட்டு எங்கும் செல்லக் கூடாது’ என எண்ணிய காரிகை, அவனை என்றும் எதற்காகவும் காத்திருக்க வைக்கவில்லை.
அவன் எது கேட்டாலும் அது அவன் முன்னே அடுத்த நிமிடம் இருக்கும். எப்பொழுதும் அவனைச் சுற்றி ஒரு நட்பு கூட்டமே இருக்கும். ‘அவனின் நட்பை பெற கூட்டம் இல்லை, அவனின் பணத்தைச் சுற்றி தான் கூட்டம் இருக்கிறது’ என வளர வளர அறிந்து கொண்டான். அதிலிருந்து அவனின் ஆண் நட்பு வட்டம் குறைந்தது.
எப்படி நாளடைவில் ஆண் வட்டம் குறைந்ததோ, அதற்கு நேர்மறையாகப் பெண்களின் நட்பு வட்டம் அதிகரித்தது.
அதற்குக் காரணம் கையில் இருக்கும் பணத்தையும் தாண்டி, அவன் பார்ப்பவரை வசியம் செய்யும் அழகனும் கூட,
அளவான உயரத்தில் பணத்தின் செழுமையிலும் மெருகேறி, உடற்பயிற்சிகளால் திடகாத்திரமாகவும், முகத்தை மறைத்து விழும் முடியை அவன் கோதும் அழகிலேயும், நவநாகரீக மங்கைகள் அவனை அணைத்துக் கொள்ள அதில் சுகமாய்ச் சிக்குண்டான்.
பணத்தை அள்ளி வீசினாலே தன் பின்னால் வரும் பெண்களைத் தான் அவன் அதிகம் சந்தித்திருக்கிறான். காரிகையும், மூர்த்தியை பற்றிக் கூறியதால் அவன் எண்ணம் முழுவதும் பெண் என்பவள் மாயை என்று அழுந்த பதிந்து போனது.
எந்த அளவு வெறுக்கத்தக்கவைகளை அவன் கற்றுக் கொண்டாலும், லண்டன் விட்டு அவன் தாய் மண்ணிற்கு வரும் பொழுது எல்லாப் பழக்கத்தையும் விட்டு பெரும் வீரனாகவே வந்தான்.
விஷ்ணுவின் பழக்க வழக்கம் காரிகையை முகம் சுழிக்க வைத்தாலும், அவன் லண்டனின் வந்த அன்றே தொழிலை கையில் எடுத்தது அவளை மகிழ்ச்சிகுள்ளாக்கியது.
கார்மெண்ட்சை வளர்ப்பதில் தான் அவன் முழுக் கவனமும் இருந்தது. அப்பொழுது அவனுக்கு இருபத்தி ஐந்து வயது.
‘தொழிலில் வந்த பிறகு செய்வதற்கும், யோசிப்பதற்கும் மட்டுமே நேரம் சரியாக இருக்கும்’ என்று காரிகை எண்ணிக் கொண்டாள்.
அவன் ஆபிஸ்க்குள் நுழைந்த பின் நிறைய மாற்றங்களைக் கொண்டு வந்தான். மூர்த்தியை அடியோடு வெறுக்கும் விதமாய் எங்கும் தன்னை “விஷ்ணு காரிகை” என்று அறிமுகமானான்.
யாரு, யாரை எப்படி வைக்க வேண்டுமோ அந்த இடத்தில் வைத்தான். இளம் வயதில் இருக்கும் பெண்களை அவன் ஆபிஸ் வாசலில் கால் கூட எடுத்து வைக்க விடவில்லை அவன்.
காரிகை இத்தனை நாள் காத்த அவளின் ராஜ்யத்தை ஆறே மாதங்களில் அவன் கைக்குள் கொண்டுவந்தான் அத்தனை திறமைகளையும் தன்னுள் அடக்கி இறுக்கமாகவே சுற்றி வந்தான்.
யார் என்ன கேள்வி கேட்டாலும், “எஸ், நோ” என்ற பதில் மட்டுமே அவன் வாயில் இருந்து வரும்.
சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், “அவனைத் தவிர அவன் யாரையும் நம்ம தயாராகவில்லை”
அவன் தொழிலில் கால் வைத்த குறுகிய நேரத்தில் எங்கும் “விஷ்ணு காரிகை” என்று ஒலிக்க வைத்தான், அந்தக் கர்வத்தில் சுற்றினான்.
“யாரும் அழிக்க முடியாத தொழில் பிரம்மா” என்ற பெயரை தொழில் வட்டாரத்தில் பிடித்தான்.
அப்பொழுது தான் அவர்களை நோக்கி புதிதாக ஒரு எதிரி முளைத்து வந்தான். அது மூர்த்தி என்று அறிந்ததும், விஷ்ணு முழு அவதாரம் எடுத்தான்.
கொ(வெ)ல்வாள்.
சூதாய் இருந்தால் என்ன? அது தீதாய் இருந்தால் என்ன?
யாதாய் இருந்தாலும் எனக்கு, தோதாய் அமைந்திடுமே.
பூலோகம் அதை வென்று அதளப் பாதாளம்வரை சென்று
கோலாகலமாக எந்தன் ஆட்சி புரிந்திடுவேன்.