pm8

 

ஃபீனிக்ஸ் – 8

 

பெண் கேட்டு வீட்டிற்கு வந்திருந்தவர்களிடம் நேரில் சாதாரணமாகப் பேசும் தைரியம்கூட எனக்கில்லை.

அப்படியிருக்க, அதன்பின் மாப்பிள்ளையைப் பற்றி யாரிடம், என்ன பேச முடியும்?

பேசினால் அதற்கு, பல அலங்காரம் செய்து காலம் முழுமைக்கும் அல்லவா அதைப்பற்றிப் பேசியே இம்சிப்பார்கள்.

அதனால் அன்று வாயைத் திறக்காமல் இருந்துவிட்டேன்.  மேலும் எனக்குள் எல்லாம் மாறிவிட்டதான உணர்வில் சந்தோசம் மிகுந்திருந்ததே.

இறந்து போனதாக ஷ்யாமை நான் எண்ணியிருந்தது, முற்றிலும் மாறிப் போனது, மகிழ்ச்சியாக இருந்தது.

இல்லாமல் போனவன் இருக்கிறான் என்று அறிந்தும் உண்டான சந்தோசத்திற்கு அளவேயில்லை.

எத்தனை நாள்களை, எத்துணை துயரத்தோடு கடந்தேன் என நினைத்தாலே மலைப்பாக இருந்தது.

அவனது தாய் பெண் கேட்டு வந்ததாக அறிந்ததும், முதலில் அவனது அரைவேக்காடு தம்பிக்கு என்னைப் பெண் கேட்டு வந்தார்கள் என்று பதறிய நான், தற்போது ஷ்யாம் என்னை ஏன் இந்த இடைப்பட்ட நாள்களில் வந்து பார்க்கவில்லை என உண்டான சந்தேகத்தில் அன்று முதலே மூழ்கியிருந்தேன்!

நானும் ஷ்யாமின் தம்பியை அறிவேன்! 

ஷ்யாம், ஷ்ரவந்த் இருவரும் இரட்டைப் பிள்ளைகள் என்பதை அறிந்திருந்தாலும், ஷ்ரவந்த் அச்சில் வார்த்தாற்போல ஷ்யாமைப் போல இருந்தாலும் இருவரின் நடைமுறை, செயல்கள் வேறுவேறு!

ஆரம்பத்தில் குழம்பியிருக்கிறேன்!

‘எப்படா  போயி செக்டு ஷர்ட் மாத்திட்டு வந்த! டிக்கெட் எடுத்துட்டு திரும்பறதுக்குள்ள எப்டி லைட் கலர் ஷர்ட்டை மாத்தினான்னு’, யோசித்திருந்த என்னுடைய தீவிர குழப்பமான முகத்தைக் கண்டு கொண்டு, கேளாமலேயே குழப்பம் தீர்த்திருந்தான் ஒருநாள்.

ஷ்ரவந்த் சற்று மாடர்னாக இருப்பான். ஷ்யாம் நார்மலாக இருப்பான்.

அதற்குமேலும் அவன் கூறினாலும், அதில் நான் ஆர்வம் காட்டியதில்லை.

ஆனால் தற்போது எந்த வித்தியாசமுமின்றி அசலாய் இருப்பவனை, சட்டென்று ஏற்றுக் கொள்ளவும் முடியாமல், இல்லை என ஒதுக்கவும் முடியாமல் சிரமத்திற்கு அல்லவா ஆட்பட்டிருக்கிறேன்.

அதிகம் பேசுவதற்கான சூழல் இல்லாததால், கிடைக்கும் சொற்ப நேரத்தில் குடும்ப உறுப்பினர்களைப் பற்றியெல்லாம் அதிகம் பேசிக் கொண்டதில்லை.

பேசிக் கொண்டிருந்திருந்தாலும், ஒரே சாயலில் இருப்பவர்களுக்கான பிரத்யேகமான வித்தியாத்தை அறிந்து கொள்ளத் தவறியிருந்த எனது முட்டாள்தனம் இப்போது உரைக்கிறது. அதனால் ஒரு பயனும் இல்லையே.

ஆனால், பங்கஜம் அத்தை வந்து கேட்ட விசயத்தைவிட, அவர் கூறிய செய்தி, அன்றைய தினத்தை மகிழ்ச்சிக்குரியதாகவும், சிறப்பானதாகவும் மாற்றியிருந்தது.

இறைவன் எனை கைவிடாமல் காபந்து பண்ணியதாக உள்ளம் குழைந்திருந்தேன்.

இப்டியும் நடக்குமா?

சிரிக்க மறந்திருந்த எனக்கு சிரிப்பு வந்தது.

எனக்குள் வைத்து அனைத்தையும், மருகி, மருகி இறுகிக் கிடந்திருக்க வேண்டிய எதிர்காலத்தை எண்ணி எனக்குள் நானறியாமலேயே பயமும் இருந்தது.

யாரை நோக?

ஷ்யாமின் மரணச் செய்தி விசயம் அறிந்ததுமுதல் யாரோடும் அளவளாவுதல் என்பதைவிட, ரெண்டு வார்த்தைகள் பேசுவதைக்கூட குறைத்து, ஆமைபோல எனை ஒடுக்கிக் கொண்டதால் வந்த வினையோ?

வெளியில், சுற்றத்தில் உள்ளவர்களோடு முன்பைப்போல அளவளாவும் அளவிற்கு எனது மனநிலை இல்லையே.

ஓரிரு வார்த்தைகள் பரிமாறிக் கொண்டாலும், பிற வீட்டு ஆண்பிள்ளைகளைப் பற்றிப் பேசுமளவிற்கு தைரியமும் இருந்ததில்லை.

அதனால்தான் கடந்த ஓராண்டு மிகவும் கொடுமையாக நரக வேதனையோடு செல்லும்படியானதோ?

கேள்விகள் எனக்குள்!

‘என்னிறைவா!  எனக்கு வேண்டியதை எடுத்துக் கொண்டாய்!  நான் கேளாததை வற்புறுத்தித் தர முயற்சிக்கிறாய் என நினைத்து கோபம் கொண்ட என்னை மன்னிப்பாயா?  என்ன உன் விளையாட்டு? என் மனம் உனக்கு விளையாட்டுத் திடலா?  மனதைத் திறக்க பயந்திருந்தவளை சாகடித்த பிறகும் என்னிடம் இன்னும் என்ன எதிர்பார்க்கிறாய்’, என உள்ளத்தோடு சண்டையிட்டு அறைக்குள் ஒடுங்கிப் போனேன்.

மரணித்த மனதிற்கு மறுமணம் எதற்கு? என வந்த வரன்கைளைத் தவித்திருந்தேன்.

தனிமையே எனக்கு என அனைத்தையும் தவிர்த்திருந்தேன்.

யாருக்காகவும் வாழ பிரியப்படாத மனம், அவன் நினைவுகளை எண்ணி மட்டுமே கடந்த வருடங்களில் வாழப் பழகியிருந்தது!

வீட்டினரின், மிரட்டல், உருட்டல், அதட்டல் அனைத்தும் செல்லாக் காசாகிப் போயிருந்தது!

தினந்தோறும் விடியல் அவனது நினைவுகளோடு!

காபி அருந்தி, குளித்து, கிளம்பி அலுவலகம் சென்று பணியில் மூழ்கும்வரை, ஒவ்வொரு நிலையிலும் அவனைச் சிந்திக்காத நேரமில்லை.

வீடு திரும்பும் வேளையில் மட்டுமன்றி, உறக்கத்திலும் அவனை மட்டுமே சிந்தித்திருந்தேன்.

அப்படிப்பட்ட எனக்கேன் இத்தனை துன்பங்கள்?

ஷ்யாமை என்னோடு சேர்க்கவா?

காலம்தான் அதற்கான சிறந்த பதிலைத் தர வேண்டும்.

தாயிடம் மெல்ல, ‘என்னை அவங்களுக்கே கல்யாணம் பண்ணப் போறீங்களா?’, லைட்டா நூல்விட்டு பங்கஜம் அத்தை வந்ததும் பேசிப் பார்த்தேன்.

“ஆமா எதுக்குக் கேக்குற? வேற என்ன புதுசா வந்து இடக்கா சொல்லப் போற,  பேசாம இந்தப் பையனையாவது வந்து உங்கப்பாகிட்ட சரினு சொல்லு”, என திடமான முடிவை எடுத்து, அதையே பேசுமாறு கூறிவிட்டு அகன்றிருந்தார்.

அதற்குமேல், நானும் மறுக்க முயற்சி செய்யாமல், திருமணத்திற்குப் பிறகு ஷ்யாமிடமே கேட்டுக் கொள்ளலாம் என விட்டுவிட்டேன்.

பத்திரிக்கை வரும்வரை ஒரு போராட்டம்.

அதில் ஷ்யாம் என்றிருந்ததில் பெரிய ஆறுதல். ஆனால் ஏன் அவன் கண்டு கொள்ளாமல் இருக்கிறான்?

புத்தகம் போடும் அளவிற்கு சந்தேகங்கள், புதிது புதிதாக அவதரித்தது.

அவற்றையெல்லாம் குறித்து வைத்துக் கொண்டேன்.

அரசுப்பணிக்கு முயற்சி செய்தபோது வந்த பழக்கம், இன்னும் தொடர்ந்தது.

மாப்பிள்ளை வந்து என்னைப் பார்க்கவேயில்லை.

கடந்து போன நாள்களில் நடந்தது முழுமையும் அறிந்து கொள்ளும் ஆர்வம் எனை ஆட்டிப் படைத்தது.

எதற்கும் இடங்கொடுக்காமலேயே திருமணம் நிச்சயமானது.

பூ வைக்கும் நாளை எதிர்நோக்கிக் காத்திருந்தேன்.

அந்நாளும் வந்தது.  வசந்தம் வீசவில்லை. இன்னும் சுனாமிப் பேரலை எனக்குள்.

வாரம் ஒன்று கடக்கும்வரை, எதையும் இலகுவாகக் கடந்திட முடியாத சோதனைகள்.

மறு நாளும் வந்தது.

திருமணத்திற்கு மேடையேறிய எனைக் கண்டதும் துள்ளலில்லை என்பதைவிட முகத்தில் முறுவல்கூட இல்லாமல் இருந்தான்.

ஏன்?

‘என்னைப் பாத்தா ஆஹ்னு வாயைத் திறந்து பாப்பானே… இப்ப என்ன ஆச்சு’

புரியவில்லை.

ஓரக்கண்ணில் அவனைக் கவனிப்பதையே முழுநேரப் பணியாக்கியிருந்தேன்.

ஒரே மகனின் திருமணத்தை விமரிசையாகவே நடத்தினர்.

அனைத்திலும், ஷ்யாம் வெட்ஸ் ஜனனி.

பார்க்கப் பார்க்க பரவசம்!

திருமணமும் நடந்து முடிந்தது.

பெரிசுகள் அனைவரும் நான், நீ என போட்டி போட்டுக் கொண்டு, திருநீறு பூசி ஆசிர்வதித்தார்கள்.

அடுத்தடுத்து பால் பழம், மறுவீடு என நேரம் சென்றது.

எதிலும் மனம் லயிக்கவில்லை.

எனக்குள் இருந்த சந்தேகம் வேறு எதிலும் எனை லயிக்கவிடாமல், மூக்கணாங்கயிறாக இருந்தது.

ஐந்து ஆண்டுகள் பேருந்தில் சற்று நேரமேயானாலும், அவனை அளந்தெடுத்து அனைத்தையும் நினைவுப் பெட்டகத்தில் வைத்திருந்த எனக்குள் முதல் பார்வையிலேயே ஏமாற்றம்.

நிறைய மாறுதல்கள்!

அதையும் கிடைத்த நேரத்தில் தாயிடம் கேட்டுவிட்டேன்.

‘அப்டியே உன்னை மாதிரியேவா எல்லாரும் இருப்பாங்க.  வருசம் போகப்போக மாறாம என்ன செய்யும் உடம்பு, கேள்வியா கேட்காம முதல்ல குடுத்த சேலையக் கட்டிக்கிட்டு விரசா வா’, என அடுத்த கட்டத்திற்கு உந்தியிருந்தார்.

சிந்தனைக் கயிறு அறுந்தது.  அடுத்தடுத்த தொடர் கட்டளைகளை நிறைவேற்ற, எனை மறந்து செயல்பட்டிருந்தேன்.

எனக்குள் உள்ள அவனது நினைவுகள் சிதம்பர ரகசியம்போல உள்ளது.

ஷ்யாமின், நடை, உடை பாவனைகள் சொல்லும் சேதி ஏனோ வேறாக இருந்தது.

ஷ்ரவந்திற்கு என் மீது எந்த அபிப்ராயமும் இல்லை என்பதை ஆரம்பம் முதலே நானறிவேன்.

நுனி நாக்கு ஆங்கிலம், நவீன உடையலங்காரம்,  சிகையலங்காரம் என இன்றைய தலைமுறையின் எடுத்துக்காட்டாக, அடிக்கும் பேரழகு மேல்தட்டு பெண்களை மட்டுமே தனது  தோழமை வட்டத்திற்குள் வைத்திருப்பான் என்பதையும் சிலர் கூற அறிந்திருக்கிறேன்.

என்னதான் ஒரே சாயலில் இருந்தாலும், மனம் ஷ்யாமின் இடத்தில் மற்றொருவனை, குறிப்பாக அவனது தம்பியே ஆனாலும் இருத்திக் கொள்ள பிடிவாதமாக மறுத்தது.

திருமணம் முடிந்தும், ஷ்யாம் ஒரு வார்த்தைகூட என்னிடம் பேச முயலவில்லை.

ஏமாற்றமே மிஞ்சியது.

பால் பழம் கொடுத்தபோதும் சரி, அடுத்து வந்த தனிமையான நேரங்களிலும் எனைத் தவிர்த்து வெளியில் வந்த நண்பர்களை வரவேற்பதும், இதர பணிகளுக்குள் சாதாரணமாகச் சென்று நின்றிருந்தவனை எப்படி அழைப்பது?  என் சந்தேகம் என்று தீர்ப்பது? எப்படித் தீர்ப்பது?

புரியாமல் ஷ்யாமிற்காக காத்திருந்தேன்.

அன்றைய தினமே சென்றிருந்தது.

முதலிரவு அறையில்தான் அடுத்து ஷ்யாமைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது.

ஏற்பாடுகள் அனைத்தும் எங்களது வீட்டிலேயே நடந்ததால், மனம் ஆசுவாசமாக இருந்தது.

‘இன்னும் தாலி கட்டினவனே யாருனு கண்டுபிடிக்கல.  அதுக்குள்ள முதலிரவாம்.  யாருடா இதையெல்லாம் கண்டுபிடிச்சா.  லூசைங்க!’, இப்டித்தான் என் மனம் யோசித்தது.

அறைக்குள் நுழைந்ததும், அலங்காரங்கள் கண்ணில்படவில்லை.  யாருமில்லா அறையோ என தயங்கி வர, உள்ளே எனக்குமுன் எதையே மிகவும் சிரத்தையோடு எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தவனைக் கண்டதும், ‘ஹப்பாடா… இப்பவும் எதாவது டிமிக்கி குடுத்துட்டு ஓடிருவானோனு பயந்திட்டே வந்தேன்.  ரொம்ப நல்லவனா முன்னாடி வந்திட்டான் போலயே’, என அப்போதும் அதே நோக்கோடு டிடெக்டிவ் போல ஷ்யாமின் மாறுதல்களை கூர்ந்து கவனித்தேன்.

அவனிடம் ஆவலில்லை.

அதுவே எனக்கு உயிர்பில்லாது போனது.

பார்வையில் புது மணமகனுக்குரிய எந்த ஆர்வமில்லை!

அதுவே என்னை ஏமாற்றக் கடலில் தள்ளியிருந்தது.

சந்தோசமில்லை!

அதுவே எனை சங்கடத்தில் ஆழ்த்தியது.

எனது யோசனையைக் கண்டு, புருவத்தை உயர்த்தி என்னவெனக் கேட்டான்.

‘இது புதிது, அவன் பேச நான் கேட்டிருந்த காலம் போயி, நான் பேசறேன்.  அவன் மூடியா புருவத்தை உயர்த்திக் கேட்டாஆஅஅ’

பேசவில்லை.

தோற்ற உணர்வு எனக்குள்!

ஆனாலும், “நீங்க, ஏன் என்னைப் பாக்கவே வரலை!”, வாய்ப்பு கிட்டியதும் கேட்டுவிட்டேன்.

பார்வையின் அலட்சியம் சொன்ன சேதியை விட, “எங்க?”, என்கிற அவனது கேள்வி எனை துவம்சம் செய்தது.

‘என்னடா இது கேள்வி?’

“உங்கிட்டத்தான கேக்கறேன்’, மிகவும் திடமாய் வார்த்தைகள்

“பொண்ணு பாக்க வரலை.  அப்புறம் பூ வைக்கும் போது வந்ததும் கிளம்பிட்டீங்க”, என ஒருவாராக கேட்டுவிட்டேன்.

“என்ன அசட்டுத்தனமான கேள்வி?”

“எது அசட்டுத்தனம்?”, ‘யாரு நான் பேசறது அசட்டுத்தனமா?’, என மனம் அரற்றியது.

“இல்ல பொண்ணு வந்து பாக்கறது நம்மல்ல முறைதான?”, இதமாக என்னை மாற்றிக் கேட்டேன்.

“உன்னைத்தான் ஏற்கனவே எனக்குத் தெரியுமே!”, எனும் பதில் கூறிய குரலின் ரிதம் கேட்டு இதயம் சுக்கு நூறாகி இருந்தது.

“தெரிஞ்சா பாக்க வரக்கூடாதா? இல்லை பேசக் கூடாதா?”

“என்னத்தப் பேச?  எல்லாம் இனி ஒன்னாதான இருப்போம்.  அப்போ பேசிக்க வேண்டியதுதான?”, என்றவனது தோளைக் குலுக்கிக் கூறிய பதிலில் அதே இடத்தில் மடிந்தமர்ந்து விட்டேன்!

உண்மையில் ஷ்யாம்தானா?  அப்டியென்றால் மாறிவிட்டானா?

மனம் விட்டுப் போயிருந்தது.

————————