வஞ்சம் வைத்து கொ(வெ)ல்வேனடா…!

வஞ்சம் வைத்து கொ(வெ)ல்வேனடா…!

வஞ்சம் – 2

அன்று (சேலம் சோளகாடு கிராமம் )

சோளகாடு பசுமையான வயல் நிலம். எங்கும் பசுமை… பசுமை… மட்டுமே. கண்ணைக் குளிர்விக்கும் அழகு. வரைபடத்தில் இதுவரை இடம் பெறாத கிராமம். அப்படி வரைபடத்தில் இடம் பெற்றிருந்தால் என்றோ இந்தப் பசுமை மறைந்து போயிருக்கும். பல கயவர்களின் கண்ணில் பட்டு அழிந்தே போயிருக்கும். அத்தனை பசுமையான கிராமம்.

எங்கும் கண்ணைப் பறிக்கும் பசுமை. கூடவே சலசலத்து ஓடும் ஆறு. இந்த ஊரில் இருக்கும் ஒவ்வொரு நொடியும் சொர்க்கம் தான். வீட்டை விட்டு வயல் வெளியில் காலை வைத்தால் சொர்க்க வாசலில் கால் வைத்த உணர்வை தருமாம். இது அந்த ஊர் விவசாய மக்கள் கூறுவது.

கிராமத்து மக்கள் எல்லாம் வெள்ளை மனது காரர்கள் இல்லை. ஆனால் இந்த ஊர் மக்கள் மிகவும் வெள்ளை மனம் படைத்தவர்கள். அங்குக் குடி இருக்கும் குடும்பம் எல்லாம் ஒன்றை ஓன்று சொந்தகாரர்கள்.

அங்கிருக்கும் மக்களின் தொழில் விவசாயம். காலையில் எழுந்ததும் அவர்கள் கண் விழிப்பது இந்தப் பசுமை தாய் முகத்தில் தான். அதனால் தான் என்னவோ அவள் இவர்களை நன்றாக வைத்திருக்கிறாள்.

நெல், சோளம் என மாறி மாறி பயிரிட்டு நிலத்தைச் செழுமையாக வைத்திருகிறார்கள் மக்கள். இயற்கையும் அவர்களுக்கு நன்மைகளை வாரி வாரி வழங்கினாள். ஊரை சுற்றி காவலாகத் தென்னை மரங்கள் வானளவு உயர்ந்து அவர்களை அரணாய்க் காக்கிறது. ஒரு பக்கம் வயல் வெளியும், இன்னொரு பக்கம் வாழை மரங்களும், அதன் இடையில் கொடியாய் தர்பூசணியும் நிலங்களை அலங்கரித்துக் கொண்டிருக்கிறது.

இன்றில் இருந்து ஊர் களை கட்ட ஆரம்பித்து விட்டது. அங்கிருக்கும் கோவிலில் திருவிழா நடந்து கொண்டிருப்பதால் ஊரே கொண்டாட்டமாய்க் காணப்பட்டது.

“ஏய்…பாண்டி எப்படியாவது தூக்கிருடா“ எனச் சுற்றி நின்ற இளவட்டம் கூச்சலிட.

அந்தப் பாண்டி என்பவனோ. நடுவில் சுற்றி மண் போடப்பட்டிருக்க. நடுவில் மிகப் பெரிய கல் போடபட்டிருந்தது. அதைத் தூக்க முயற்ச்சி செய்து கொண்டு இருந்தான். எங்கே அது அவன் கையில் அடங்கவே மாட்டேன் என்று அடம் செய்து கொண்டு இருந்தது.

“எனக்குத் தெரியும்டா. நீ எல்லாம் இதுக்குச் சரிவரமாட்டாடீங்கடா“ என அவனைப் பார்த்து ஏளனமாகக் கூறிக் கொண்டே கையில் வைத்திருந்த வெற்றிலையைக் குதப்பிக் கொண்டே மூக்கப்பன் குரல் கொடுத்தார்.

அவரின் முன் துண்டு விரிக்கப்பட்டு இதுவரை தோற்றவர்கள் அவரைத் திட்டிக் கொண்டே தூக்கி போட்ட பணத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

அவரின் கண்கள் தூண் முன் நிற்கும் பாண்டியை பார்த்துக் கொண்டு இருந்தது. எப்படியும் துண்டில் பணம் விழும் என்ற நோக்கத்தில் பாண்டியையே பார்த்திருந்தார்.

பாண்டியோ அந்தக் கல்லை தூக்க முடியாமல் தூக்கி காலில் போட்டு விட்டான். காலை தூக்கி பிடித்து நொண்டிக் கொண்டே தோல்வியைத் தழுவி வெளியில் வந்தான்.

சுற்றி நின்ற பொடிசுகளோ மூக்கை பொத்தி… பின்னால் திரும்பி நின்று, “பக்.பக்“ எனச் சத்தம் எழுப்பிச் சுற்றி நின்ற இளம் சிட்டுகளின் முன் அவனைக் கேலி செய்தனர்.

“மூக்கா“ என அந்தப் பெரியவரை திட்டிக் கொண்டே அவர் முன் வந்த பாண்டி அவரைப் பார்த்து முறைத்து விட்டு ரூபாய் நோட்டை அவரின் துண்டில் போட்டுவிட்டு கூட்டத்தோடு கூட்டமாய் நின்று கொண்டான்.

“எனக்குத் தெரியும்டா. உங்களை மாதிரி உள்ள இளசுகளுக்கு எல்லாம் பொட்ட புள்ள பின்னாடி சுத்ததான் தெரியும்“ என அவனைப் பார்த்து ஏளனமாகக் கூறியவர் கூட்டத்தை நோக்கி,

“ஏய் பயலுகளா… மீசை வச்சுருக்க எவனாச்சும் இனி இருக்கியளாடா“ எனக் கூட்டத்தைப் பார்த்து குரல் கொடுத்தார் மூக்கன்.

அதே நேரம் ஊர் பஸ்ஸில் வந்து இறங்கினான் “பட்டாளம் மருதுபாண்டி“ அவனுக்காகக் காத்திருந்த அவனின் நண்பன் ராஜா ஓடி வந்து “டேய் மாப்ள. எப்படிடா இருக்க“ எனப் பாசத்துடன் வந்து கட்டியணைத்துக் கொண்டான்.

“அதெல்லாம் நான் நல்லா இருக்கேன்டா“ எனக் கூறி அவனுடன் பைக்கில் ஏறி  ஊரை நோக்கி வந்தனர் இருவரும்.

“டேய் ராஜா. ஊர் ரொம்பவே மாறிட்டுடா“ ராஜாவிடம் பேசிக் கொண்டே வந்தான் மருது.

மருதுபாண்டியன் பட்டாளத்தில் வேலை பார்ப்பவன். அவன் பெயர் மருதுபாண்டி… ஆனால் ஊருக்கு அவன் பட்டாளம். அவனின் அப்பத்தாவுக்கு மட்டும் அவன் பாண்டி. நண்பர்களுக்கு மச்சான்.

27 வயதேயான ஆண் அழகன். இதுவரை எந்தப் பெண் பின்னாலும் அவன் மனது சென்றதில்லை. ஆண்களுக்கே உரிய அழகுடன். செதுக்கி வைத்த அய்யனார் சிலை. மிலிட்டரி மிடுக்கு என எப்பொழுதும் கம்பீரமாக இருப்பவன்.

மிலிட்டரியில் வேலை செய்பவன். இரவு பகல் பாராமல் நாட்டைக் காப்பவன். தவறு செய்தால் அடியோடு வெறுப்பவன். மனதில் தோன்றியதை அப்படியே செய்யும் நல்லவன். மனதில் ஒன்றை முடிவெடுத்து விட்டால் அதைச் செய்து முடிக்காமல் ஓயமாட்டான். மீசையை முறுக்கி ஓர பார்வைப் பார்த்தாலே அந்தக் காரியம் முடிந்து விடும் என மற்றவர்களுக்கு உணரவைப்பவன்.

5 வருடங்களுக்குப் பிறகு கோவில் திருவிழாவுக்கென்று அவனின் மேஜருடன் கெஞ்சி கூத்தாடி ஐந்து மாதம் விடுமுறை எடுத்து ஊரை நோக்கி வந்திருக்கிறான்.

இந்த விடுமுறையிலாவது அவனுக்கு எப்படியும் திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என்று அவனின் அப்பத்தா அவனுக்காக அந்த ஊர் பெரிய வீட்டு ( பஞ்சாயத்து ) பெண்ணைப் பார்த்து வைத்துக் காத்திருக்கிறார்.

“எடே. ராசு காலு பத்திரம்டே“ இப்பொழுது கல்லை தூக்க வந்து நின்ற ராசுவை பார்த்து மூக்கன் குரல் கொடுத்துக் கொண்டே வெற்றிலையை எடுத்து வாயில் வைக்க.

“மாப்ள இங்க என்னல இப்படிக் கூட்டமா இருக்கு“ அங்குக் கூடி இருந்த கூட்டத்தைப் பார்த்து மருது கேட்க,

“இந்த மூக்கு வேலையா இருக்கும். அது தான் காசுக்கு இப்படி ஏதாவது வித்தை காட்டும். இன்னைக்கு என்னத்தைச் செய்து வச்சிருக்கோதெரியல“

“மூக்கு இன்னும் திருந்தலியா மாப்ள. வா என்னன்னு நாமளும் எட்டி பார்ப்போமே“ அவனிடம் கூறிய மருது பைக் விட்டு இறங்கி கூட்டத்தை நோக்கி சென்றான்.

அதே நேரம் இப்பொழுது கல்லை தூக்க வந்தவனும் நொண்டிக் கொண்டே வந்து துண்டில் ரூபாய் நோட்டை போட்டு செல்ல.

“மூக்கா வயசான காலத்துல வீட்டுல இருக்காம என்ன வேலை இது“ என்றபடி அவர் முன் வந்து நின்று ராஜா குரல் கொடுத்தான்.

“உன் வீரத்தை இளவட்டம் கல் தூக்குவதில் காட்டுடே. இங்க வந்து சும்மா வாய் ஜாலம் காட்டாத“ இந்தக் காலப் பசங்க யாராலும் அதைச் செய்ய முடியாது என்ற தைரியத்தில் மூக்கன் கூற.

அவரை முறைத ராஜா “நான் ஏன்ய்யா செய்யணும். என் மாப்பிள்ளை செய்வான்“ என்று மருதை காட்டினான்.

சுற்றி நின்றவர்களோ “பட்டாளம்… பட்டாளம்“ என ஆராவாரம் செய்தனர்.

இளவட்டங்களோ, “அண்ணே காப்பாத்துண்ணே“ என்று குரல் கொடுத்தனர். பின்னே இத்தனை நேரம் மூக்கன் ஆடிய ஆட்டத்துக்குப் பதில் வேண்டும் தானே?

“மூக்கா. என் மாப்ள கல்லை தூக்கினா என்ன தருவ?“ என்றான் ராஜா.

எல்லாம் பட்டாளம் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையில் தைரியமாகக் காரியத்தில் குத்தித்தான் ராஜா.

“என்ன நீ இப்படிக் கேட்டுட்ட. நான் ஜெய்ச்ச காசை எடுக்கச் சொல்லுடா உன் மாப்ளையை“ என வீராப்பாகப் பதில் கொடுத்தார் மூக்கன். யாராலும் அதைத் தூக்க முடியாத என்ற திண்ணக்கத்தில்.

“மாப்ள போ நீ“ எனக் கூறிய ராஜா துண்டில் இருந்த காசை எடுக்கச் செல்ல.

அவன் முன் அரிவாளை மூக்கன் நீட்ட.

“யோவ். என்னய்யா“

“முதல்ல தூக்க சொல்லுய்யா. அப்புறம் துண்டுல கையை வை“ என்றபடி மூக்கன் அவனை முறைத்தார்.

எல்லாரையும் ஒரு பார்வை பார்த்த மருது. அந்தக் கல் அருகில் வந்து நின்று கையில் அணிந்திருந்த வெள்ளி காப்பை கையில் இறுக்கியவன். மீசையை முறுக்கிக் கொண்டே அடி கண்ணால் எல்லாரையும் ஒரு முறை சுற்றி பார்த்தவன்,

அந்தக் கல்லை ஒரு முறை சுற்றி வந்து அதன் அருகில் வந்து குனிந்து நின்று கையில் சிறிது மண்ணை அள்ளியவன் இருக்கையிலும் பரபரவெனத் தேய்த்துக் கொண்டு. கல்லை தூக்க முற்பட.

“ஏப்பா பட்டாளம் நில்லுய்யா“ என்ற மூக்கன் குரல் அவன் பின்னால் கேட்க.

குனிந்து நின்றவன் மெதுவாக அவர்களைப் பார்த்து நிமிர்ந்தவன் ‘என்ன?’ என்னும் விதமாகப் பார்க்க.

“சட்டையைக் கழட்டிட்டு தூக்குய்யா“ எனக் கூற.

‘ஏன்’ எனப் பார்வையால் மருது கேட்க.

‘வாயை திறந்து கேட்டா என்னவாம்?’ என எண்ணிய மூக்கன் “சட்டையைக் கழட்டிட்டு தான் தூக்கணும்“ எனக் கூறி முகத்தைத் திருப்பிக் கொண்டு வந்து ஆலமரத்தின் கீழ் இருந்த கல்லில் அமர்ந்து விட்டார்.

அவரை முறைத்து பார்த்தவன். வேண்டா வெறுப்பாகச் சட்டையைக் கழட்டி ராஜாவிடம் கொடுத்து விட்டு. கொஞ்சம் மண்ணை எடுத்துக் கையில் தேய்த்துக் கொண்டு மெதுவாகத் தம் கட்டி கல்லை கையில் தூக்கி. வயிற்றில் இருந்து மேலே தூக்கி தோள் வழியாகப் பின்னால் எறிந்தான்..

நின்ற எல்லார் கண்களும் ஆச்சரியத்தை வெளிபடுத்தியது. பின்ன இங்கிருக்கும் எல்லா இளவட்டமும் காலை உடைக்க இவன் தூக்கினால் ஆச்சரியபடாமல் என்ன செய்வார்கள்.

எல்லாரையும் பார்த்து மீண்டும் ஒரு முறை மீசையை முறுக்கி விட்டுக் கொண்ட அவன், “நான் பட்டாள காரண்டா“ என வீராப்பாகச் சொல்லி கொண்டான்.

சுற்றி இருந்தவர்கள் கைதட்டவும். மூக்கன் அருகில் சென்ற ராஜா, “யோவ் தாயா துட்டை“ என அவர் கையில் இருந்து காசு அடங்கிய துண்டைப் பறித்துக் கொண்டான்.

அவனை அழைத்துக் கொண்டு ராஜா வீட்டுக்கு செல்ல. வாசலிலையே நிற்க வைத்த மருதுவின் அப்பத்தா வீட்டின் உள் சென்று கையில் மிளகுவத்தலையும். உப்பையும் கொண்டு வந்தார்.

அவனின் முகத்துக்கு நேராக நீட்டி, “ஊர் கண்ணு. உலகம் கண்ணு. களவாணி பய கண்ணு. எல்லாம் கண்ணும் பட்டு போக“ எனக் கூறி அவனுக்கு மூன்று முறை சுற்றியவர்

ராஜாவை பார்த்து, “ஊருக்கு வந்தவனை நேரா வீட்டுக்கு கூட்டிட்டு வராம எங்க சுத்த கூட்டிட்டு போன“ என்றபடி அவனை முறைத்தவர் மருதுக்குச் சுற்றிய வற்றலை அடுப்பில் போட்டு. முட்டில் கைவைத்து அடுப்பை பார்த்து குனிந்து நின்றவர், “ஊர் கண்ணு எல்லாம் என் பேரன் மேல தான்“ என நெட்டி முறித்துக் கொண்டார்.

“ராசா குளிச்சுட்டு வாய்யா“ எனக் கூறியவர் ராஜாவை முறைத்து பார்க்க.

அதே நேரம், “மாப்ள இளம் சேவலை பிடிச்சு உனக்குக் குழம்பு வச்சு கொண்டு வந்திருக்கேன்“ எனக் குரல் கொடுத்துக் கொண்டே தலையில் டவலை கட்டிக் கொண்டு வேலு என்பவன் வந்தான்.

ராஜா பக்கம் இருந்த பார்வையை வேலு பக்கமாக டக்கென்று திருப்பிய அப்பத்தா, “எடுபட்ட பயலே உனக்கு அறிவிருக்கா. வீட்டுக்கு வந்த முதல் நாளே இப்படிக் கறி சாப்டுவானா.போ அங்கிட்டு” அவனைத் துரத்தியவர் மறுபடியும் ராஜாவை முறைக்கத் தவறவில்லை.

அப்பத்தா அந்தப் பக்கமாகச் செல்லவும். ராஜா. வேலுவை முறைக்க. அந்த நேரம் வீட்டுக்கு வெளியில், “அப்பத்தா. அப்பத்தா“ என்ற குரல் கேட்க.

“எந்தச் சீமசிறுக்கி இப்படிக் கத்துறது“ என முணுமுணுத்துக் கொண்டே வெளியில் வந்தவர். வெளியில் நின்ற எதித்த வீட்டு பெண்மணியைக் கண்டு, “என்னடி“ எனக் கேட்க.

“அது வந்து அப்பத்தா. அய்யனார்க்கு நேர்ந்து விட்ட சேவலை காணும். அது தான் உங்க வீட்டுக்கு வந்துச்சான்னு கேட்க வந்தேன்“ என அப்பத்தாவின் கடுகடுத்த முகத்தைப் பார்த்து மெதுவாகக் கூறினாள் அவள்.

மீண்டும் ராஜாவை பார்த்து முறைத்தவர், “தெரிலட்டி வந்தா. சொல்லுறேன்“ எனக் கூற, அந்தப் பெண் கிளம்பவும் கதவை படார் எனச் சாத்தியவர்.

“களவாணி பயலுவ வீட்டுல ஒரு சேவலையும் விட்டு வைக்குறது இல்லை“ என ராஜாவைப் பார்த்து முறைத்து சென்றார்.

அவர் செல்லவும் வேலுவை முறைத்த ராஜா, “இங்க தான் உன்னை இந்தக் கறியை நான் கொண்டு வர சொன்னேனா? பாரு கிழவிக்குக் கரெக்ட்டா மூக்கு வேத்து ஜாடையா சொல்லிட்டு போகுது. போ தோப்புக்கு நான் மருதுவை அழைச்சுட்டு வாறேன்“ என்றபடி அவனை விரட்டியடித்தான் ராஜா.

மருது குளித்துத் தலையைத் துவட்டிக் கொண்டே வெளியில் வந்தவன் ராஜாவை பார்த்து, “இதோ வந்துடுறேண்டா“ எனக் கூறி அறைக்குச் செல்லவும்.

அவன் பின்னோடு. ராஜாவை பார்த்துக் கொண்டே அவனின் அப்பத்தா அவன் பின்னே சென்றார். அவரை யோசனையாகப் பார்த்தவன். அவரைப் பற்றி நன்கு தெரிந்தவனாய் மெதுவாக எழுந்தவன். மருது அறை கதவில் காதை வைத்துக் கொண்டு நின்றான்.

“டேய் ராசா. இந்தக் களவாணி பய கூடச் சேராத. கோவிலுக்கு விடுற ஆடு. கோழி எல்லாம் திருடி தோப்புக்குள்ள வச்சுத் திங்குறான். இவன் கூட சேராத ராசா. அப்புறம் சாமி குத்தமாகிடும்“ என ராஜாவின் செயலை மெதுவாகக் கூறினார் அப்பத்தா.

அவரைப் பார்த்து சிரித்த மருது, “விடு அப்பத்தா. சாமி சாப்டவா போகுது. நாம தான அதைத் தின்போம். அதை இப்போவே என் மாப்ள சாப்டுறான். சாப்பிட்டு போகட்டும்“

அவனை முறைத்தவர், “அவன் கூடச் சேர்ந்து நீயும் கெட்டு போற. ஊருக்கு வந்து அரை நொடி கூட ஆகல அதுக்குள்ள. உன்னை மயக்கிட்டானா? அந்த திருட்டுப்பய“ என்றவர் அவனைப் பார்த்து, “அப்பத்தா சொன்னா சரின்னு கேட்க பழகு ராசா. சும்மா பதிலுக்கு பதில் பேசிக்கிட்டு“ அவனிடம் கூறிக் கதவை திறந்து கொண்டு வெளியில் வந்தார்.

கதவின் அருகில் நின்ற ராஜாவை கண்டு ஒரு நிமிடம் அதிர்ந்து திருதிருவென முழித்தவர். சுதாரித்துப் பின் தோளை குலுக்கி கொண்டு அவனைக் கடந்து செல்ல. அவரைத் தடுத்தவன், “என்ன ஓத வேண்டியது எல்லாம் ஓதியாச்சா“ கடுப்புடன் கேட்டான்.

“என்ன ராஜா? அப்பத்தாவை இப்படிக் கேட்டுட்ட? உன்னைப் பத்தி பெருமையா பேசிட்டு இருந்தேண்டா“ என அவனிடம் நீட்டி முழக்கி அவனின் கன்னம் கிள்ள வர.

அவரைக் கை நீட்டித் தடுத்தவன், “எனக்குக் கேட்டுச்சி கிழவி“ எனக் கடுப்புடன் கூறினான்.

“அதான் கேட்டுச்சு தான தூர விலகு“ அவனை அசால்ட்டாகத் தள்ளி விட்டு சென்றார் அப்பத்தா.

“கிழவிக்கு வயசானாலும் குசும்பு இன்னும் போகலை“ முணுமுணுத்தவன் கிளம்பி வந்த மருதுவை அழைத்துக் கொண்டு ஆற்றங்கரைக்குச் சென்றான்.

அப்பத்தாவோ ராஜாவை திட்டிக் கொண்டு இருந்தார். “மருதுவுக்குப் பார்த்திருக்கும் பெண்ணை அவனுக்குக் காட்ட அவர் காத்திருந்தால். அந்த எடுபட்ட பய எங்கையோ கூட்டிட்டு போய்ட்டான். வரட்டும் அவன்” என்று துடைப்ப கட்டையோடு காத்திருந்தார்.

அங்குச் செல்லும் வழியில் அவளைக் கண்டு அப்படியே அசையாமல் நின்றான் மருது பாண்டியன்.

அப்பொழுது தான் அந்த ஊரில் இருந்த சில வண்ணசிட்டுகள் ஆற்றில் குளித்து வந்து கொண்டிருந்தனர்.

அவர்களில் ஒரு சிட்டை பார்த்து தான் மருது அசையாமல் நின்றான். அவனின் பார்வையைக் கண்டு அவள் கை அவளின் அண்ணன் பையனை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு இருந்தது.

இவனின் அசையாத பார்வையைக் கண்ட அந்தச் சிறுவனோ, “அத்தை அந்த மாமா உன்னை முறைச்சு முறைச்சு பாக்கிறார்“ அவளிடம் மெதுவாகக் கிசுக்கிசுத்தான்.

“டேய் தேவ். பேசாம வாடா“அவனைப் பிடித்து இழுக்காத குறையாகத் தள்ளிக் கொண்டு வந்தாள் துரைச்சி. அந்த ஊர் பெரிய வீட்டுப் பெண் ( பஞ்சாயத்து மகள் )

மனம் படபடவென அடித்துக் கொண்டது. அவனின் வரவுக்காகத் தான் இத்தனை நாளாகக் காத்திருந்தாள். “அவளுக்குப் பார்த்திருக்கும் மன்னவன் தான் மருது பாண்டியன்“ அதனால் தான் அவனைப் பார்த்தும் ஓடி வந்துவிட்டாள்.

அவள் வீட்டுக்கு வந்ததும் வாசலிலையே வழிமறித்தார் அவளின் தாய் காமாட்சி.

“நில்லுடி” அவர்களை நிற்க கூறவும். அவரைத் தாண்டி தேவ்வை அழைத்துக் கொண்டு செல்ல முற்பட்டவளின் கையை உதறிய ஆறு வயது தேவ்.

“அப்பத்தா அங்க ஒரு புது மாமா அத்தையை முறைச்சு. முறைச்சு பார்த்தாங்க“ என மருது அவளை அசையாமல் பார்த்ததை வந்ததும் முதல் வேலையாகப் போட்டுக் கொடுத்தான்.

அவனை முறைத்த துரைச்சி, “டேய் சோட்டு. நாளைக்கு அத்தை. சொத்தைன்னு கூப்டுட்டுப் பக்கத்தில் வா அப்போ இருக்கு உனக்கு“ அவனைப் பார்த்துக் கருவி கொண்டே வீட்டின் உள் செல்ல முற்பட,

அவளை முறைத்தவர், “ஏய் நில்லுடி“ என்றவர் தொடர்ந்து, “உன் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்க. வயசு பொண்ணு லட்சணமா வீட்டுல இருக்காம. எங்க ஊரை சுத்திட்டு வர.

மாப்பிள்ளை வீட்டுகாரங்க வருவாங்களே அடக்கமா வீட்டுல இருப்போம்னு இருக்கியா நீ. உன்னை வெளிய எங்கையாவது அவங்க பார்த்தா என்ன நினைப்பாங்க. கொஞ்சமாவது அறிவு இருக்காடி. ஏண்டி இப்படி இருக்க நீ. ஒருத்தன் கையில பிடிச்சு குடுக்கிறவரை ஊரை சுத்தமா இருடி உனக்குப் புண்ணியமா போகும்“ என அவளிடம் கோபமாக ஆரம்பித்துக் கெஞ்சலாக முடித்தவர். தலையில் கை வைத்துக் கொண்டு அப்படியே திண்ணையில் அமர்ந்துவிட்டார்.

சத்யமூர்த்தி – காமாட்சி தம்பதிகளுக்குச் செந்தூர் பாண்டி, தங்க துரைச்சி என இரு மக்கள். செந்தூர்பாண்டிக்குத் திருமணம் முடிந்துவிட்டது. செந்தூர்பாண்டி – தங்கம் தம்பதிகளுக்குத் தேவேந்தரன் என ஒரு மகன்.

அவர் அருகில் அமர்ந்த துரைச்சி. அவள் தோளில் கையைப் போட்டுக் கொண்டு, “கோமு இன்னைக்கு உன்னோட கோட்டா முடிஞ்சதா. இல்ல இன்னும் இருக்கா“

“ஏண்டி. உனக்கு எவ்வளவு திட்டினாலும் உறைக்குமா? உறைக்காதா? எருமைமாடு மேல மழை பெய்ஞ்சது போல ஏண்டி இப்படி இருக்க. உன்னைப் போலத் தான உன் அண்ணனையும் வளர்த்தேன். அவன் ஒரு நாளும் ஒரு வம்பையும் இழுத்து வந்தது இல்லையேடி.

ஆனா, நீ ஊர் வம்பு எல்லாம் இழுத்துட்டு வரியேடி. அங்கு இங்குன்னு வம்பிழுத்திட்டு வரியாம் உன் அண்ணனால வெளிய தலை காட்ட முடியலியாம். நீ திருந்தவே மாட்டியாடி.“ என வருத்ததுடன் கூறி. கோபத்துடன் அவள் தலையில் ஒரு கொட்டு வைக்க.

“சரி.சரி. விடு காமு! இது நமக்குப் புதுசா என்ன“ எனத் தூசு தட்டுவது போல் காமாட்சியின் தோளில் தட்டிவிட.

“ஏண்டி. இனி இப்படிக் காமு. கோமுன்னு சொன்னே வாயை பிச்சுருவேன் பாத்துக்க. அம்மாங்கிற மரியாதை கொஞ்சம் கூட இல்லாம! என்ன நினைச்சுட்டு இருக்க உன் மனசுல. எல்லாம் உன் அப்பாகாரு குடுக்க இடம்டி“ எனப் பல்லைகடிக்க.

“ஆஹா! அஹஹஹா! என்னம்மா எதுகை. மோனை துள்ளி விளையாடுகிறது தங்கள் வாயில்! தாங்கள் புலவியாக இருக்க வேண்டியவர் தாயே!“ என நாடக பாணியில் அவரைக் கேலி செய்ய.

“நிறுத்துடி. நான் என்ன சொல்லிட்டு இருக்கேன் நீ என்ன பேசுற. உனக்குப் பொறுப்பே வராதாடி. கல்யாணம் ஆகப் போகுதே கொஞ்சமாச்சும் பொறுப்பா இருக்க வேண்டாமா?“ அவளைக் கடிய.

“பொறுப்பா. அப்படின்னா என்னாது! நான் பருப்பு தானே கேள்விப்பட்டிருக்கேன் அது என்ன பொறுப்பு. கல்யாணம் முடிஞ்சதும் முதல்ல பொறுப்புக் குழம்பு தான் வைக்கணுமோ ? அது எப்படி வைக்குறது“ என ஓர கண்ணால் தாயின் கோபமுகத்தைப் பார்த்துக் கொண்டே. நாடியில் கை வைத்து வானத்தைப் பார்த்து அண்ணாந்து யோசிக்க.

கடுப்புடன் அவளை நோக்கி திரும்பியவர், “ஏண்டி நீ என் வயித்துல தான் பிறந்தியா?“ எனக் கடுப்பின் உச்சத்தில் எகிறிய காமாட்சி சந்தேகத்துடன் கேட்க.

“அட! ஆமா காமு! எனக்கும் இதே டவுட் இருக்கு. நான் உன் வயதில தான் பிறந்தேனா? இல்லை நான் அழகா இருந்ததும் எங்கையாவது இருந்து சுட்டுட்டு வந்துட்டியா? நீ என்ன நினைக்குற காமு. நான் சொன்னது கரெக்ட் தான?“ என அவரைப் பார்த்து கேட்க.

“அடியே. உன்னை“ எனப் பல்லை கடித்தவர். கோபத்தின் உச்சிக்கு சென்று அருகில் கிடந்த துடைப்பத்தை எடுக்கும் முன் சிட்டாகப் பறந்தாள் துரைச்சி.

அவளின் பின் ஓட முடியாமல். திண்ணையில் இருந்து இறங்கிய காமாட்சி அவள் ஓடிய திசையில் துடைப்பத்தைத் தூக்கி வீச. அது சரியாக அப்பொழுது தான் வீட்டை நோக்கி வந்த பஞ்சாயத்து முன் விழுந்தது. (அது தானப்பா காமு. சாரி. காமாட்சி வூட்டுக்கார்.)

அதுவரை மகள் மேல் இருந்த கோபம் போய் முழுக் கோபமும் கணவர் மேல் திரும்பியது. மகள் வம்பு செய்ய முக்கியக் காரணம் இவரல்லவா. ஊரில் வம்பிழுத்துக் கொண்டு வரும்பொழுதெல்லாம், “சின்னப் பெண் தானே விடு காமு” எனக் கூறியே அவளை வளர்த்து விட்டவர் சத்தியமூர்த்தி.

அவரைப் பார்த்து முறைத்தவர், “வர. வர உங்க பொண்ணுக்கு துடுக்கு பேச்சு ஜாஸ்தியாகிட்டே போகுது. காலையில் சோட்டுவை கூட்டிட்டு போனவ. இப்போ தான் வீட்டுக்கு வார. இவ்வளவு நேரம் எங்கடி போனேன்னு கேட்டதுக்கு அந்த வாய் பேசுறா. மாப்பிள்ளை வேற ஊர்ல இருந்து வந்துட்டார்.

எப்போ வீட்டுக்கு வருவாங்க என்று தெரியாது இவா இப்படிப் போனா அவங்க என்ன நினைப்பாங்க. கோவில் திருவிழா வேற நடக்குது. புது ஆள் நடமாட்டம் இருக்கும் வீட்டுல அடங்கி இருக்கமாட்டேன்னு பயணம் போறா. இன்னைக்கு எவனோ இவளை வெறிச்சு வேற பார்த்திருக்கான். சோட்டுச் சொல்லுறான்“ என்றபடி சிறு பயத்துடன் அவரிடம் பாய,

“அதுக்கு இப்படித் தான் வயசு பிள்ளையைத் துடைப்பத்தை எடுத்து வீசுவியா? இன்னும் ஒரு மாசம் தான் இங்க இருப்பா அதுவரை அவளை உனக்குச் சமாளிக்க முடியாதா?“

“சோட்டுவை கூடச் சமாளிக்கலாம். உம் பொண்ணைத் தான் சமாளிக்க முடியாது“ என மெதுவாக முனுமுனுத்தவர், “சரிங்க சாமி. உம்பொண்ணைப் பேசுனது தப்புதானுங்க. ஆளை விடுங்க“ என அவருக்கு ஒரு கும்மிடை போட்டவர். வீட்டின் உள் செல்ல முற்பட,

“சரி. சரி விடு. போ போய் அவளுக்குச் சுக்குக் கொஞ்சம் தட்டி போட்டுக் காப்பிப் போட்டு குடு. எம்பொண்ணு ஆத்துல குளிச்சுட்டு வந்திருக்கா. சளி பிடிச்சிக்கப் போகுது. கல்யாண நேரம். புள்ளையை நாம தான் பாத்துக்கணும்“ எனக் கூறியவர் அங்கு வந்த மகளின் தலையை வருட,

அவரின் தோளில் சாய்ந்தவள் காமாட்சியைப் பார்த்து, “யம்மோ. அப்படியே முறுக்கும் கொண்டு வா“ என,

அவளைப் பார்த்து முறைத்தவர், “நீ எல்லாம் திருந்தாத கேஸ் டி“ என முறைத்து வீட்டின் உள் சென்றார் காமாட்சி.

கொ(வெ)ல்வாள்.

காணி நிலம் வேண்டும்பராசக்தி

காணி நிலம் வேண்டும். – அங்கு

தூணில் அழகியதாய்நன்மாடங்கள்

துய்ய நிறத்தினதாய்அந்தக்

காணி நிலத்தினிடையேஓர்மாளிகை

கட்டித் தரவேண்டும்அங்கு

கேணியருகினிலேதென்னைமரம்

கீற்று மிளநீரும்.

Leave a Reply

error: Content is protected !!