அத்தியாயம்-15
புதுக் கணவனின் இமாலய எதிர்பார்ப்புகளை இயன்றவரை நிறைவேற்றி, அறையை விட்டு வெளிவருமுன் மகிழ்ச்சி மனதை நிறைத்திருந்தாலும், வெட்கம் மிச்சமிருந்தால், சற்றே தயக்கம் நடையில் உண்டாகியிருந்தது.
விசாலினியை ஹாலில் அமர்ந்திருந்த நீரஜா கண்டவுடன், பழைய பழக்கத்தின் காரணமாக
“ஹாய் ஆண்ட்டி”, என்றது.
“நீரு கண்ணா என்ன பண்றீங்க, நான் உங்களுக்கு ஆண்ட்டி இல்ல, இனி தங்கம் என்னை பெரியம்மா சொல்ல சொன்னேன்ல…”, என்றபடி நீரஜாவின் அருகே போய் அவளின் தலை முடி கலைத்து, நெற்றியில் முத்தம் வைத்தாள்.
“சாரி பெரியம்மா, இனி சரியா கூப்ட ட்ரை பண்றேன்”, என பெரியன்னையின் சொல்லுக்கு மரியாதை செய்திருந்தது, குழந்தை.
“நீரு, பிரேக் ஃபாஸ்ட் எடுத்தாச்சா?”
“இல்ல, இனி தான் சாப்பிடணும்”
“அப்ப வா, எல்லாரும் சேந்து சாப்டலாம்”
“இல்ல ஆ… பெ..ரி..யம்மா, அம்மா வரட்டும் அப்றம் சாப்டறேன்”
“ஏண்டா… அம்மா காணோமே. நீ சாப்ட ஆரம்பிச்சா… நீ முடிக்கும் முன்ன அம்மாவும் வந்து உன்னோட ஜாயிண்ட் பண்ணிக்குவாங்க…”, என ஐடியா கொடுத்தாள் விசாலினி.
“இல்ல… நீங்க போங்க, நான் அம்மா வந்த பின்ன வரேன்”, என குழந்தை பிடிவாதமாக வர மறுத்திருந்தாள்.
திருமணம் பேசும் முன்பு இலகுவாகப் பழகிய குழந்தை, தற்போது தயக்கம் மேலிட கண்களில் அலைப்புறுதலோடு, தன்னோடு பேசுவது புரிந்தாலும், ஏன் என்று யூகிக்க இடம் கொடாமல் வருத்தத்தோடு,
“சரிடா தங்கம், நான், உன் ரவி டேட் ரெண்டு பேரும் சாப்டுட்டு வெளிய கிளம்புறோம். ஈவினிங் பாப்போண்டா”, என்று டைனிங் ஹாலை நோக்கி நடந்திருந்தாள், விசாலினி.
அனைவரும் விசாலினியோடு இணக்கமாக, இயல்பாக அக்குடும்பத்தில் உறவை பேணியிருக்க, திருமணப் பேச்சு ஆரம்பித்த நாள் முதல் மிருணா சற்று ஒதுங்கியே இருப்பதாக மனம் சொன்னது.
ஆயினும் அதை ஒரு பொருட்டாக எண்ணவில்லை விசாலினி.
ஆனால் ஒரு வீட்டிற்குள், ஓரகத்தியை பார்க்கும் போதெல்லாம் வித்தியாசமான பார்வையுடன் வலம் வரும் மிருணா, விசாலினியை நேரடியாக எந்தத் தொந்தரவும் இது வரை செய்யவில்லை.
பேச்சு, சிரிப்பு என எதையும் பகிராதவள், பார்வையாலேயே வன்மம் வளர்த்திருந்தாள்.
நீரஜா எனும் பிஞ்சுக் குழந்தை தன்னுடன் பேச, சிரிக்க, உடன் வெளியே செல்ல என அனைத்திலும் தடை விதித்தது, விசாலினியின் மனதை வருத்தியிருந்தது.
எதனால் இந்த ஒதுக்கம் என்பது விசாலினிக்குப் புரியவில்லை.
அரவிந்தன், விசாலினியின் இது சார்ந்த மன விசமங்களை ஒரு பொருட்டாக எண்ணி கேட்க மறுத்திருந்தான்.
“லீவ் இட் ஷாலுமா”, எனும் ஒரே வார்த்தையில் விசாலினியை வேறு பேச்சில் கவனம் செலுத்துமாறு செய்வதை, விசாலினியும் உணர்ந்தே இருந்தாள்.
——————————
அன்றும் வழமை போலவே மிருணா நடந்து கொண்டாள்.
டைனிங்கில் அரவிந்தனுடன் விசாலினி அமர்ந்திருப்பதைப் பார்த்தவள், நேராக கிச்சன் சென்று அங்கேயே குழந்தையுடன் நின்ற நிலையிலேயே உண்டுவிட்டு கிளம்ப நீரஜாவிடம் வலியுறுத்தியபடி அங்கிருந்து அகன்றிருந்தாள். குழந்தை பிடிவாதமாக மறுக்கவே, அவளை அதட்டி தங்களது அறைக்குள் அழைத்துச் சென்றிருந்தாள், மிருணா.
சஞ்சய் பெரும்பாலும் வியாபாரம் சார்ந்த பணிகளில் இருப்பதால் நேரங்காலம் பார்க்காமல் வேலை வேலை என்று கிளம்பிவிடுவான்.
வீட்டில் அவன் இருக்கும் நேரங்கள் பெரும்பாலும், தனது மனைவியுடன் விவாதங்களில் கழிவதால் இயன்றவரை அலுவலகங்களில் தான் அவனுடைய நேரங்கள் இனிமையாகக் கழியும்.
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட காலங்கள் போய்விட்டது. தற்போதைய திருமணங்கள் ரொக்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது.
ஆம், சஞ்சய் போஸின் வியாபாரம், தொழில், பணப்புழக்கம் அனைத்தையும் கண்டு, அவனை தனது காதல் வலையில் விழச் செய்ததோடு, அவனைத் திருமணமும் செய்த திறமையான அழகி, மிருணா.
சஞ்சய் வேண்டுமா, பணம் வேண்டுமா என்ற கேள்வி வந்தால், மிருணாவின் பதில் பணம் என்பதாகத் தான் இருந்தது.
பகட்டுடன் வாழ தன்னை பழக்கியிருந்தாள். தொழிலை திறமையாக நடத்துவதிலோ, பணத்தை இரட்டிப்பாக்குவதிலோ ஆர்வம் காட்டாதவள், பணத்தை செலவளிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டினாள்.
திருமணத்திற்கு பிறகான அவளுடைய ஸ்டேட்டஸ் சார்ந்த மனோபாவம் மிகவும் மாறியிருந்தது.
பரம்பரை பணம் தந்த குணம் மற்றவர்களை மிருணாவிடம் நிதானிக்கச் செய்தது. வீட்டில் உள்ள அனைவருக்கும் மிருணாவின் மனோபாவம் அறிந்திருந்தமையால் எதையும் பொருட்டாக எண்ணவில்லை.
மாமியார் மற்றும் மாமனார் இருவரின் மீது உண்மையான மரியாதை என்பது இல்லாத போதும், பெரும்பணத்திற்கு அதிபதிகளாக இருந்த இருவரையும் எந்த நேரத்திலும், என்ன பேசினாலும் சகித்துக் கொண்டாள், மிருணா.
போலி மரியாதையை கொடுத்து, திறமையாக, இருவரிடமும் நடந்து கொள்வாள், மிருணா.
மிருணாவைப் பற்றி தெரிந்தாலும், யாரும் அவளை இதுவரை எதற்காகவும் எல்லைகட்டி நிறுத்தவில்லை. ஏனோ அப்டி நடத்த யாரும் எண்ணியதில்லை.
சமூக அமைப்புகள் சார்ந்த பல நிறுவனங்களில் உறுப்பினராக இருக்கிறாள். தொண்டுகள் செய்வதாக, நன்கொடை வழங்குவதாக, சமூக சேவைக்காக தன்னை அர்ப்பணித்ததாக பெயர் செய்து வலம் வருவதே மிருணாவின் பகல் நேர முக்கிய பணி.
திருமணம் முடிந்து வந்தவுடனே, மாமியிடம் தனக்கெனத் தனியாக கார் வேண்டும் என கேட்டிருந்தாள். நீலாவும் மறுக்காமல் மருமகளுக்கு வாங்கிக் கொடுத்திருந்தார்.
இது தவிர ஏனைய நேரங்களில் அவளை அலங்கரிக்கவும், ஆடைகள் எடுக்கவும் நேரத்தை செலவிடுவாள்.
மருமகள், எதிலும் வரம்பு மீறாமல், வரம்பிற்குள் வைத்திருக்கும் சூட்சுமம் அறிந்தவர் நீலவேணி மட்டுமே.
மிருணாவிற்கு, வீட்டின் பெரிய மனிதர்கள் மீது மரியாதை இருக்கிறதா இல்லையா எனும் ஆய்வினை மேற்கொண்டால், பதில் என்னவோ பூஜ்ஜியமாகத்தான் இருக்கும்.
சஞ்சய், தனது திருமணம் முடிந்த ஒரு வார காலத்திற்குள் மிருணாவைப் பற்றி ஓரளவு புரிந்து கொண்டான்.
நீலா, ஓரளவு தனது மகனின் நிலையறிந்ததால் நேரடியாக அழைத்து சஞ்சயிடம் பேசியிருந்தார்.
அது முதல் எந்தவொரு முடிவானாலும், பெரியவர்களின் துணையோடு முடிவெடுக்கும் பழக்கத்திற்கு வந்திருந்தான், சஞ்சய்.
அரவிந்த், எப்போதாவது வீட்டிற்கு வந்து சென்றாலும் ஓரளவிற்கு அனைத்தையும் உள்வாங்கும் திறமைசாலியாக இருந்தான்.
ஆகையால் இதுவரை எந்தப் பிரச்சனையும் இன்றி இனிதாக இருந்த குடும்ப அமைதி சற்று தினங்களுக்கு முன்பிருந்தே ஆட்டம் காண ஆரம்பித்து இருந்தது.
அந்த நாளையும் அக்குடும்பத்து உறுப்பினர்கள் யாரும் மறக்கவே மாட்டார்கள்.
அரவிந்த் திருமணப் பேச்சை பெரியவர்கள் எடுத்தவுடன், தனது மேற்பார்வையில் இயங்கும் தங்களது பள்ளி நிர்வாகம், திருமணத்திற்குப் பிறகு விசாலினியிடம் தரும் எண்ணம் தனக்கிருப்பதாகவும், தான் இதர வியாபார நிறுவனங்களை கவனித்துக் கொள்வதாகவும், டைனிங்கில் அனைவரும் இருக்கும் போது பகிர்ந்திருந்தான்.
அது முதலே தினசரி, எதிர்பாரா சில அதிருப்தியான நிகழ்வுகள், மிருணாவிடமிருந்து வரத் துவங்கியிருந்ததை, குடும்பத்தில் அனைவரும் யூகித்தே இருந்தனர்.
————————————-
நீலா பெரும்பாலும் அவரது அறையிலேயே உண்டு விடுவார். தனது அறையிலிருந்து டைனிங் ஹாலின் பக்கமாக வந்தவர், உண்டு கொண்டு இருந்த விசாலினியை அழைத்து,
“விசா, நீ வெளிய கிளம்பு முன்னே… என்னை ரூம்ல வந்து பாத்துட்டு கிளம்பும்மா”, என்றபடி அவரது அறை நோக்கிச் சென்றிருந்தார்.
“என்ன ஷாலு, எங்கம்மா கூட தனியா பேசற அளவுக்கு, அப்படி என்ன ரகசியம்!”, என்று சிரித்தபடியே உணவை உண்டு முடித்து எழுந்தவன் கேலி செய்திருந்தான், அரவிந்தன்.
“அத்தம்மாகிட்ட பேசிட்டு உங்கட்ட வந்து சொல்லட்டா, இல்லனா நீங்களும் கூடவே அத்தம்மா ரூம்கே வந்து நேரடியா கேட்டுக்கறீங்களா?”, என விசாலினியும் விடாமல் பேசியிருந்தாள்.
“நீ போயி இப்ப ரகசியம் பேசிட்டு வா. அப்புறம் நாம வெளிய போகும்போது எங்கிட்ட சொல்லுவியாம்”
“ஒருத்தவங்களுக்கு மட்டும் தெரிஞ்சா தான், அது இரகசியம். இது இரண்டு பேருக்கு தெரிஞ்சதா இருக்கும்னா, அது இரகசியம் இல்ல… அவசியம்னு அர்த்தம்”, என்று விசாலினி சிரிக்க
“நீங்க பேசறத எங்கூட ஷேர் பண்ணமாட்டேனு சொல்ல வரீயா?”, அரவிந்த்.
“நா எங்க அப்டி சொன்னேன்”
“நல்லா சமாளிக்கிற!”
“இல்லனா! உங்க வயிஃப்பா… நான் எப்டி இருக்க முடியும்?”
“நீ முதல்ல எங்கம்மாட்ட பேசிட்டு வா!”, என்றபடி தனது லேப்பை எடுத்துக் கொண்டு ஹாலில் அமர்ந்துவிட்டான், அரவிந்த்.
அரவிந்த், விசாலினி கிளம்பிய பிறகே அங்கு நீரஜாவுடன் வந்த மிருணா காலை ஆகாரத்தை உண்டதாக பெயர் செய்துவிட்டு கிளம்பியிருந்தாள்.
அதுவரை நீலாவின் அறையை விட்டு வெளியே வராமல் விசாலினி மாமியுடன் இருக்க, நீலாவின் அறையை பார்த்தவாறே… அங்கிருந்து நீரஜாவுடன் கிளம்பியிருந்தாள், மிருணா.
—————-
கிருபாகரன், சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விடயத்தை காவல்துறையிடம் பகிர்ந்து கொண்டிருந்தார்.
விசாலினி, தன்னுடைய முதுகலை கல்விக்குப் பின், அப்போது கல்வியியல் (B.Ed.,) கல்லூரியில் சேர்க்கப்பட்டிருந்தாள்.
கிருபாகரன், தனது பணி ஓய்விற்குப் பிறகும், சென்னையில் உள்ள பள்ளியில் விளையாட்டு ஆசிரியராக தனது பணியை மேற்கொண்டிருந்த சமயம் அது.
விசாலினியின் வீடு இருந்த இடத்திலிருந்து, கல்லூரிக்கு இரண்டு பேருந்து மாறிச் செல்ல வேண்டிய நிலை. அவசர காலத்திற்கு தொடர்பு கொள்ள கல்லூரியின் அனுமதியோடு விசாலினி ஆண்ட்ராய்டு அலைபேசியை பயன்படுத்த துவங்கிய தருணமது.
இருபாலர் பயிலும் கல்வியியல் கல்லூரியில், சிலர் தங்களின் இளங்கலைக்குப் பின் கல்வியியலைத் தேர்ந்தெடுத்திருந்தனர். சிலர் முதுகலைக்குப் பின் கல்வியியலைத் தேர்ந்தெடுத்து இருந்தனர்.
விசாலினி தங்கியிருக்கும் இடத்திலிருந்து பஸ் நிறுத்தத்திற்கு நிற்கும் இடத்தில், பேருந்திற்காக காத்திருக்கும் போது அறிமுகமான வனிதா எனும் பெண் விசாலினி பயிலும் கல்வியியல் கல்லூரி வளாகத்தினுள் அதே நிர்வாகத்தின் கீழ் இயங்கும் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயின்று வந்தாள்.
இரண்டு மாதங்கள் பேருந்து நிலையத்தில் சந்தித்து, பத்து நாட்களுக்குப்பின் சிரிக்கப் பழகி, அதன்பின் பேசத் துவங்கி நல்ல பழக்கமாகியிருந்த வனிதாவுடன் பெரும்பாலும், காலையில் இணைந்தே கல்லூரிக்குச் செல்வது விசாலினியின் வழக்கமாகியிருந்தது.
ஆறு மாதங்கள் இருவரும் இணைந்து கல்லூரிக்கு ஒரே பேருந்தில் காலை வேளையில் பயணித்தனர்.
அனைத்தையும் தந்தையுடன் பகிர்ந்து கொள்ளும் விசாலினி எதையும் மறைக்காமல் தினசரி நடவடிக்கைகளை, கல்லூரியின் நிகழ்வுகளை வழமை போல பகிர்ந்து கொண்டிருந்தாள்.
நாட்கள் அதன் போக்கில், கல்லூரியில் கலகலப்பாக நிறைவான கற்றலுடன் நகர்ந்தது. விசாலினியின் அலைபேசியை பேருந்து நிலையத்தில் வைத்து, தனது நெருக்கடியான நேரங்களில் பயன்படுத்திக் கொள்வது வனிதாவின் இயல்பு.
வனிதா வீட்டிலிருந்து கிளம்பும் முன்பு, பெரும்பாலும் விசாலினிக்கு டெக்ஸ்ட் செய்துவிட்டே தினமும் கிளம்புவாள்.
இந்நிலையில் திடீரென வனிதா , விசாலினிக்கு காலையிலேயே அழைத்திருந்தாள்.
“விசா அக்கா, நான் இன்னிக்கு காலேஜ்கு வரல… அதனால நீங்க கிளம்பிருங்க”, என வனிதா கூற
“சரி வனிதா, உடம்புக்கு முடியலயா?”
“ஆமாக்கா, இன்னிக்கு டாக்டர்கிட்ட போயி காமிக்கணும்”
“உடம்ப பாத்துக்கோ, எனக்கு பஸ் வந்திட்டு, நாளைக்கு பாக்கலாம்”, என்றவாறு விசா தனது அலைபேசியை அணைத்து விட்டு, கல்லூரிக்கு கிளம்பியிருந்தாள்.
அடுத்தடுத்த வந்த நாட்களிலும், ஏதேனும் ஒரு காரணத்தைக் கூறி விசாலினியுடன் வருவதைத் தவிர்த்திருந்தாள், வனிதா.
ஒரு வாரத்திற்குப் பின் வந்த வனிதா, உடல்நலக் குறைபாட்டால் மெலிந்திடாமல், அதீத மெனக்கெடல்களுடன், பார்வைக்கு சட்டென புலப்படும் அலங்காரத்துடன் பேருந்து நிறுத்தத்திற்கு வந்திருந்தாள்.
வனிதாவைக் கவனித்த விசாலினி, “என்ன வனிதா, இன்னிக்கு உனக்கு பர்த்டே வா, ரொம்ப கிராண்டா வந்திருக்க?”, எனக் கேட்டாள்.
“பர்த்டேலாம் இல்லக்கா, இன்னிக்கு என் காலேஜ்மேட்ஸ்ஸோட வெளிய போறேன். அதான்”, என்றாள்.
அதற்கு மேல் எதுவும் துருவாமல், பொதுவான விடயங்கள் பேசி, கல்லூரிக்கு வந்தடைந்திருந்தனர்.
இடைப்பட்ட நேரங்களில் தங்களைச் சுற்றியிருப்பவர்களை பார்வையால் அலசுவதும், தனக்குள் பிறர் அறியாமல் விவாதிப்பதுமாக வந்த வனிதாவை அன்று வித்தியாசமாகப் பார்த்திருந்தாள், விசாலினி.
ஏதோ ஒன்று சரியில்லை என்று புரிந்தாலும், அமைதியாகவே கல்லூரிக்கு வந்திருந்தார்கள்.
இந்நிலையில் அன்று மதியத்திற்கு மேல், கல்வியியல் கல்லூரி வகுப்புகள் நடைபெறும் இடத்திற்கு விசாலினியைத் தேடி வந்த வனிதா, “அக்கா, எங்க அம்மாகிட்ட முக்கியமான ஒரு விசயம் பேசணும், உங்க போனத் தரீங்களாக்கா?”, என விசாலினியிடம் அலைபேசியைக் கேட்டாள்.
அங்கு வனிதாவை முற்றிலும் எதிர்பாராதவள், “போன் இப்ப நான் எங்க இன்சார்ஜ் மேடத்திட்ட குடுத்து வச்சிருக்கேன். நான் கிளம்பும் போது தான் வாங்கிட்டு போவேன். உனக்கு எதுவும் எமர்ஜென்சினா சொல்லு, மேடத்திட்ட சொல்லி… போன வாங்கித் தாரேன் வனிதா”, எனக் கூறினாள் விசாலினி.
கண்டிப்பாக பேசியே ஆகவேண்டும் என்று வனிதா கூற, முடிவாக விசாலினியின் இன்சார்ஜிடம் விடயத்தைக் கூறி போனை வாங்கி வனிதாவிடம் கொடுத்திருந்தாள், விசாலினி.
சற்று தொலைவில் சென்று பேசிவிட்டு வந்த வனிதா,
“ரொம்ப தாங்க்ஸ் கா, நான் கிளம்பறேன்”, என விசாலினியிடம் விடைபெற்றிருந்தாள்.
வனிதாவின் செயலில் இருந்த பதற்றம், ஏனோ விசாலினியை அவள் அழைத்த எண்ணை எடுத்துப் பார்க்கச் சொன்னது.
இயல்பைத் தொலைத்தவள், உண்மையைத் தொலைத்து தூரம் போயிருந்தாள்.
வனிதாவின் பதற்றம், விசாலினியை துணுக்குற செய்தது. அதனால் உண்மை விளங்கியது.
உண்மை காண… விரைந்து… அடுத்த பதிவோடு வருகிறேன்.