Rainbow kanavugal-24
Rainbow kanavugal-24
24
அஜய் அந்த பெரிய அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் காரை செலுத்தினான். வண்டியை நிறுத்திவிட்டு கடுகடுத்த முகத்தோடு மதுவை அவன் பார்க்க, “நீங்களும் உள்ளே வரீங்களா அஜய்?” என்று கேட்டு வைத்து மேலும் அவன் கோபத்தை தூண்டிவிட்டாள்.
அவன் இன்னும் ஆழமாக அவளை முறைக்கவும் உதட்டை சுழித்தவள், “வரலன்னா வரலன்னு சொல்லுங்க… அதுக்கு ஏன் இப்படி டெர்ரிபிக்கா பார்க்குறீங்க?” என்றபடி அவள் இறங்க,
“சீக்கிரம் போயிட்டு வா” என்றவன் முறைப்பாக சொல்லிவிட்டு முகத்தை திருப்பி கொண்டான்.
‘சரியான சிடுமூஞ்சி’ என்று முனகி கொண்டே அவள் இந்துவை பார்த்தாள்.
அவளோ கார் நின்றிருப்பதை கூட கவனிக்காமல் ஆழமான ஏதோ சிந்தனையில் மூழ்கியிருக்க, “இவ என்ன அசையாம இப்படியே உட்கார்ந்திருக்கா?” என்றபடி கார் கதவை திறந்து, “ஏ இறங்கு” என்று மிரட்டினாள்.
அப்போதே இந்துவிற்கு தான் வந்து சேர்ந்துவிட்டது புரிய, பரபரப்பு உணர்வு தொற்றி கொண்டது அவளுக்கு.
“வந்துட்டோமா… இங்கதான் மாமா இருக்காரா?” என்று ஆவல் ததும்ப கேட்டாள்.
“ஆமா… வா” என்றபடி மது முன்னேறி நடக்க இந்து அவளை பின்தொடர்ந்தாள். அவர்கள் உள்ளே சென்றதும் தாமு மகளை பார்த்து விசாரித்த அதேநேரம் இந்துவை பார்த்து வியப்போடு, “ஸ்டேஷன் போய் அழைச்சிட்டு வந்துட்டியா மது?” என்று வினவினார்.
“ஆமா” என்றவள் அங்கே வரிசையாக போட்டிருந்த படுக்கையை ஆராய்ந்து பார்த்தபடி, “சரோ எங்கே தாமு?” என்று வினவினாள்.
“அந்த கடைசி பெட்” என்று அவர் கை காட்ட,
அங்கே அடிப்பட்ட காயங்களோடு படுக்கையில் கிடந்த மகனை பார்த்து துர்கா கண்ணீர் விட்டு கதற, பாலா பின்னோடு நின்றபடி தன் தாயை தேற்றி ஆறுதலுரைத்து கொண்டிருந்தான்.
சரவணன் முகத்திலோ எந்தவித உணர்ச்சிகளும் இருக்கவில்லை. தன் அம்மாவின் அழுகைக்கு கூட அவன் பெரிதாக எந்த உணர்ச்சியும் காட்டி கொள்ளவில்லை.
எதையோ பறிகொடுத்தவன் போல சோர்ந்த நிலையில் அவன் அமர்ந்திருக்க, “சரோ” என்ற மதுவின் அழைப்புதான் அவனுக்கு அப்போதைக்கு உயிர் கொடுத்தது.
அவன் விழிகள் மதுவை காண்பதை விடவும் அவளுடன் தன் மனைவி வந்திருக்கிறாளா என்று சிரத்தையோடு தேடியது.
பின்னோடு வந்த இந்துவை பார்த்த பின்புதான் அவன் உதடுகள் விரிந்தன. அசைவின்றி கிடந்த கருமணிகள் உருள கண்ணீர் அவன் கன்னம் நனைக்க. ஆசுவாசமாக மூச்சை இழுத்துவிட்டு கொண்டான்.
அவள் வந்துவிட்டாள் என்பதே அவன் இழந்த பலம் மொத்தத்தையும் மீட்டு தந்தது போல உணர செய்தது.
ஆனால் அவன் முகத்திலிருந்த சந்தோஷத்தில் கால்வாசி கூட துர்கா முகத்தில் இல்லை.
‘இவள் ஏன் வந்தாள்?’ என்பது போல் இந்துவை ஒரு அலட்சிய பார்வை பார்த்தார். பாலா மட்டும் இந்துவை பார்த்து, “வாங்க அண்ணி” என்று அழைத்தான். ஆனால் அவன் குரலிலும் சுரத்தையே இல்லை. ஏதோ கடமைக்கு என்று கூப்பிட்டான். அவ்வளவுதான்.
ஆனால் இந்துமதி இது எதையும் கவனிக்கும் மனநிலையில் இல்லை. அவள் பார்வை சிந்தனையெல்லாம் தன் கணவனிடம் மட்டும்தான்.
அவன் படுத்திருக்கும் கோலத்தை பார்த்து உள்ளம் உருகி அவனுக்காக அவள் கண்ணீர் வடிக்க, அவனோ இரவு முழுக்க அவள் காவல் நிலையத்திலிருந்து எந்தளவு அவதியுற்று இருப்பாளோ என்று அவளுக்காக அவன் தவித்திருந்தான்.
அதேநேரம் மருமகளை கண்டும் காணாத துர்கா மதுவின் தோள் சாய்ந்து, “சரோ நிலைமையை பார்த்தியா மது ம்மா…?” என்று தன் மனபாரத்தை அவளிடம் புலம்பி அழுதார்.
“சரியாயிடும் ஆண்டி… அழாதீங்க” என்றவரை தேற்றிய போதும் அவளுமே நண்பனின் நிலையை எண்ணி வருந்தினாள்.
“என்னால தாங்கவே முடியல சரோ… உனக்கு போய் இப்படியெல்லாம் நடக்கணுமா?” என்று அவன் காயங்களை பார்த்து அவள் கண்கள் கலங்கிவிட,
தோழியின் கண்ணீரை பார்த்து பதறியவன் தனக்கு ஒன்றும் இல்லை என்று அவளுக்கு சாமதானம் கூறி செய்கை செய்து கண்களை துடைக்க செய்தான். அதநேரம் அவளிடம் இந்துவை வெளியே எடுத்ததற்கு நன்றி புன்னகை உதிர்க்க,
மது அவன் அருகாமையிலிருந்து இருக்கையில் அமர்ந்தபடி மெதுவாக, “உன்கிட்ட நான் கொஞ்சம் தனியா பேசணும் சரோ” என்றாள்.
சரவணன் அவளை குழப்பமாக பார்த்த அதேநேரம் பாலாவை பார்த்து அம்மாவையும் இந்துவையும் சாப்பிட அழைத்து போக சொல்லி ஜாடை செய்து அவர்களை அனுப்பி வைக்க எத்தனித்தான்.
துர்கா முதலில் மறுத்த போதும் பின் சரவணன் பார்வைக்கு அடிபணிந்து சென்றுவிட, இந்துவோ திட்டவட்டமாக போக மறுத்து அவன் அருகிலேயே நின்றுவிட்டாள். .
சரவணன் இந்துவை நிமிர்ந்து பார்க்க சோர்ந்து களைத்திருந்த அவளின் விழிகள் இமைக்காமல் அவனையே ஏக்கமாக பார்த்திருந்தது. அவனிடம் நிறைய பேச வேண்டுமென்று தவிக்கும் அவள் விழியின் மொழி அவனுக்கு புரியாதா என்ன?
ஆனால் எப்படி இப்போது அவளை விலகி நிற்க சொல்வது என்று மனைவி தோழி இருவரையும் மாறி மாறி தவிப்பாக பார்க்க மது சீற்றமாக திரும்பி, “நான் என் ப்ரெண்டு கிட்ட தனியா பேசணும்… நீ கொஞ்ச நேரம் அப்படி நிற்குறியா?” என்று வெடுக்கென சொல்லிவிட்டாள்.
இந்து முகம் சுருங்கி போனது. அவள் அவர்களை விட்டு ஒதுங்கி நின்று கொண்டாள்.
சரவணனுக்கு தோழியின் இந்த செய்கை மனதை வருத்த மனைவியை அவன் இயலாமையோடு பார்க்கவும்,
“இப்பயாச்சும் நீ கொஞ்சம் என் பக்கம் பாக்குறியா?” என்று அவள் கடுப்பானாள்.
அவன் பார்வை மதுவின் புறம் திரும்பிய போதும் அவன் மனம் முழுதாக அங்கு பதியவில்லை என்பதை அவன் முகபாவனை உணர்த்த, “எனக்கு உன் நிலைமை நல்லா புரியுது… ஆனா எனக்கு வேற வழியில்லை… உன்கிட்ட சில விஷயங்களை வெளிப்படையா சொல்லியே ஆகணும்… அதுவும் உன் மனைவியை பத்தி” என்ற பீடிகையோடு அவள் ஆரம்பிக்க, அவன் அந்த நொடி தன் தோழி என்ன சொல்ல போகிறாள் என்று ஆர்வமாக கவனிக்கலானான்.
சுரேஷ் இந்துவை பற்றி மது சொல்ல நினைத்த விஷயங்களை சொல்லி முடித்துவிட்டு பின் தயக்கத்தோடு,
“சாரி சரோ… உன்னை ஹார்ட் பண்ணனும்னு இதெல்லாம் நான் சொல்லல” என்க, அவனிடம் பெரிதாக அவள் எதிர்பார்த்த எந்தவித மாற்றமுமில்லை. அதற்கு பதிலாக அவன் முகத்தில் மெல்லிய கோடாக ஒரு மௌன புன்னகை உதிர்ந்தது.
“இந்த சிரிப்புக்கு என்ன அர்த்தம்… நான் சொன்னதை நீ நம்பலைன்னா?” என்று மது புரியாமல் கேட்க, அவன் பார்வை அந்த கணம் இந்துவை நோக்கியது.
“ஒ! உன் மனைவியை நம்புறேன்னு சொல்றியா?”
அவன் தலை அனிச்சையாக ஆடியது.
“நீ உன் மனைவையை சந்தேக பட வேண்டாம்… அதேநேரம் இந்த கொலையை” என்றவள் ஆரம்பிக்கும் போதே தன் தோழியின் விழிகளை அழுத்தமாக பார்த்து மறுப்பாக தலையசைத்தான்.
“அப்படி திட்டவட்டமா இந்து இந்த கொலையை செய்யலன்னு சொல்ல முடியாது சரோ” என்று அவள் திடமாக உரைத்தாள்.
அவள் இப்படி சொன்ன மறுகணம் அவன் முகம் இறுகியது. அதன் பின் தோழியின் புறம் பார்வையை திருப்பாமல் அவன் எங்கோ வெறிக்க,
“நான் சொல்றதை நீ அப்படியே நம்ப வேண்டாம்… ஆனா கொஞ்சம் யோசிச்சு பாரு” என்ற போதும் அவன் முகத்தில் எந்தவித மாற்றமுமில்லை.
அவளுக்கு பதில் சொல்லவும் விரும்பாமல் அவள் விழிகளையும் பார்க்காமல் அவன் தவிர்க்க, “அப்போ உனக்கு என் வார்த்தையில நம்பிக்கை இல்லையா சரோ?” என்று மீண்டும் தன் நண்பனிடம் அதே கேள்வியை ஏமாற்றமாக கேட்க, அவன் அவள் புறம் பார்த்தான். ஆனால் அப்போதும் அவன் பார்வையில் நம்பகத்தன்மை இல்லை.
“நம்ம நட்புல ஏதோ பெரிய விரிசல் உண்டான மாதிரி எனக்கு தோணுது சரோ” என்று மிகுந்த கலக்கத்தோடு சொன்னவள்,
“இனிமே நான் என்ன சொன்னாலும் உனக்கு புரியாது… நம்ம உறவு இப்போ பழைய மாதிரி இல்லை… எங்கேயோ நம்ம இரண்டு பேரோட அண்டர்ஸ்டாண்டிங் மிஸ்ஸாகுது” என்று படபடவென சொல்லிவிட்டு தாமதிக்காமல் அந்த நொடியே அங்கிருந்து சென்றுவிட்டாள்.
தன் நண்பன் தான் சொல்வதை ஏற்கவில்லை என்பதை எண்ணி வேதனையுற்ற அவள் விழிகளில் கண்ணீர் திரையிட்டது.
தன் கண்களை துடைத்து கொண்டே வாயிலை விட்டு வெளியே வர அப்போது வேகமாக ஒரு பைக் அவளை மோதுவது போல் வரவும் இந்த காட்சியை பார்த்த அஜய்,
“மதுதுஊஊஊஊஊஊஊ” என்று அலறிவிட்டான். அதற்குள் மகளின் கையை பின்னிருந்து இழுத்து பிடித்து கொண்டார் தாமு.
மது அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிட்டாள். அவளுக்கு என்ன நிகழ்ந்தது என்று கூட புரியவில்லை.
நடந்த விஷயத்தை கிரகித்து கொள்ள அவளுக்கு சில நொடிகள் பிடித்தது. அதற்குள் அஜய் அந்த பைக்காரனை போட்டு வெளுத்து வாங்கிவிட்டான்.
“ஐயோ! அஜய்… வேண்டாம்… தப்பு என் பேர்லதான்… நான்தான் கவனிக்காம வந்துட்டேன்” என்றவள் சொன்னதை அவன் கொஞ்சமும் காதில் வாங்கவில்லை.
அந்த பைக்காரன் நிலைமை பரிதாபத்திலும் பரிதாபமாக இருந்தது. அஜய் அவனை அடித்து துவைத்துவிட்டிருந்தான்.
“அஜய்ய்ய்ய்ய் விடு” என்றவள் சத்தமாக கத்தவும் அவன் சற்று அமைதியாகி அவனை விடுத்துவிட்டு அவளை நிமிர்ந்து பார்த்தான்.
அவன் முகத்தில் அந்தளவு படபடப்பு. நரம்புகள் புடைத்து விழிகள் சிவக்க அவன் நின்ற கோலத்தை பார்த்து அவளுக்கே நடுங்கிவிட்டது.
மிகுந்த பதட்டத்தோடு தன் மனைவியை நெருங்கியவன், “மது உனக்கு ஒன்னும் இல்லையே” என்று அவள் கன்னத்தை வருட, அவன் விழிகளில் அவளுக்கு ஏதோ ஆகிவிட்டதோ என்ற அச்சம் அப்பட்டமாக தெரிந்தது.
அந்த விபத்து தன்னை காட்டிலும் அவனை அதிகமாக பாதித்திருந்ததை உணர்ந்தவள், “எனக்கு ஒன்னும் இல்ல அஜய்… நான் நல்லா இருக்கேன்” என்றாள்.
ஆனால் அவன் பதட்டம் குறைந்தபாடில்லை.
“வா… நம்ம முதல இங்கிருந்து போகலாம்” என்று அவள் கை பற்றி அவசரமாக காரில் அமர வைத்தவன் மறுகணமே காரை கிளப்பியிருந்தான்.
“ஐயோ! அஜய் தாமுகிட்ட சொல்லவே இல்ல” என்ற அவள் சொன்னதை அவன் கவனிக்கவும் இல்லை. கார் மருத்துவமனை வளாகம் விட்டு வெகுதூரம் சென்றுவிட
அந்த பயண நேர இடைவெளியில் அவன் தவிப்பு மொத்தமும் மீண்டும் அவள் மீதான கோபமாக பரிணாமித்திருந்தது. அவன் முறைப்பான பார்வையும் மௌனமும் அவளுக்கு அதை சொல்லாமல் சொல்லிவிட, அவனோ காரை நேராக தன் வீட்டு வாயிலில் நிறுத்திவிட்டு இறங்கி சென்றுவிட்டான்.
அவள் காரிலிருந்து இறங்கும்வரை கூட காத்திருக்கவில்லை.
“ஏன்தான் இவனுக்கு இவ்வளவு கோபம் வருமோ? பாவம் அந்த பைக்காரன்! யார் முகத்தில முழிச்சு தொலைச்சானோ… இவன்கிட்ட வந்து சிக்கி தொலைச்சிட்டான்… என்மேல இருக்க கோபத்தை மொத்தமா அவன் மேல காட்டிட்டான்… ஷப்பா முடியல… இப்போ இந்த அஜயை எப்படி சமாதான படுத்தறது” என்று புலம்பி கொண்டே அவள் வீட்டிற்குள் நுழைய முகப்பறையில் அருண் சோபாவை பிடித்து மெல்ல நடந்து பழகி கொண்டிருந்தான்.
“அருண் கண்ணா என்ன பண்றீங்க?” என்று அவள் குரல் கேட்ட மாத்திரத்தில் அவன் நான்கு காலில் தவழ்ந்து அ வந்தவன்
அவள் புடவையை பிடித்து எழுந்து நின்றபடி,
“த்தே த் தே” என்று தத்தி தத்தி கொஞ்சும் மழலையில் பேச அவள் மனம் நெகிழ்ந்தது.
ஏனைய கவலைகள் அனைத்தையும் மறந்தவள் அவன் கன்னம் கில்லி முத்தம் தர, அவனோ விடாமல் அவள் புடவையை பிடித்து தொங்கி கொண்டு, “தூக்கு தூக்கு” என்று அடம்பிடித்தான்.
“அத்தையால தூக்க முடியாதுடா தங்கம்… அத்தை வயத்துல பாப்பா இருக்கு இல்ல… அதுவும் இரண்டு” என்றவள் அவனிடம் கெஞ்சி பார்க்க அந்த குட்டி வாண்டு அவளை விடுவதாக இல்லை.
“தூக்கு தூக்கு” என்று தான் பிடித்த பிடியில் நின்றவன் அவளை நகரவும் விடாமல் தவிக்கவிட,
“வாம்மா மது… நீ எப்போ வந்த” என்று மருமகளை விசாரித்தபடி வந்த பாஸ்கரன், அருணின் சேட்டையை பார்த்து,
“அத்தை பாவம்ல… வா தாத்தா தூக்கிக்கிறேன்” என்று பேரனை தூக்கி கொண்டார். அவனோ அவர் கையில் நிற்காமல் மதுவிடம் தாவ,
“அடம் பிடிக்கிறதுல அப்படியே அவங்க மாமா மாதிரி” என்றவள்,
“அவன் விட மாட்டான்… என்கிட்டே கொடுங்க மாமா… நான் உட்கார்ந்துட்டு அவனை மடில வைச்சுக்கிறேன்” என்று சோபாவில் அமர்ந்து அவனை வாங்கி மடியில் அமர்த்தினாள்.
அவன் அப்போதே கொஞ்சம் அமைதி நிலைக்கு வந்தான்.
“பாப் ப்பா” என்று கொஞ்சி கொண்டு அவள் வயிற்றை அணைத்து பிடித்தவன் அப்படியே தலையணை போல் சாய்ந்து படுத்து கொண்டான்.
அவனுக்கு இப்படி அவள் வயிற்றில் படுத்து கொள்வது வழக்கமான அதேநேரம் மிக பிடித்தமான ஒன்று.
“ஆமா மது… அடுத்த வாரம்தானே உன்னை கூட்டிட்டு போறதா அஜய் சொன்னான்” என்று வினவி கொண்டே அவரும் அமர, அவளுக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை.
நடந்த பிரச்சனைகளை கருத்தில் கொண்டுதான் அஜய் தன்னை இங்கே அவசரமாக அழைத்து வந்துவிட்டான் என்பதை சொல்ல மனமில்லாமல்,
“இல்ல மாமா… நான்தான் உங்களை எல்லாம் பார்க்கனும்னு கிளம்பி வந்தேன்” என்று சமாளித்தாள்.
“நீ வந்தது நல்லதா போச்சு மது” என்றவர் நீண்ட நெடிய பெருமூச்சொன்றை வெளிவிட்டார். சுரேஷின் மரணத்தால் ஏற்பட்ட பாதிப்பில் அவர் ரொம்பவும் தளர்ந்து காணப்பட அவரிடம் எப்படி பேசுவதென்று அவளுக்கு புரியவில்லை.
அருண் அவள் மடியில் படுத்த சில கணங்களில் உறங்கிவிட, “ராஜி மா” என்று வேலையாளை அழைத்து அருணை அறையில் படுக்க வைக்க சொல்லி பணித்தாள்.
ராஜி அருணை தூக்கி சென்றுவிடவும் “மாமா” என்று மெதுவாக அழைத்து ஆறுதல் வார்த்தைகள் கூறினாள்.
“நடந்த எதையும் நம்மால இனிமே மாத்த முடியாது… கொஞ்சம் கொஞ்சமா இதை ஏத்துக்க பழகுறதுதான் எல்லோருக்கும் நல்லது” என்றவள் பேச பாஸ்கரனிடம் எந்தவித பதிலுரையும் இல்லை.
அவர் கல்லாக சமைந்திருந்தார்.
“மாமா” என்றவள் அழைத்த நொடி அவர் விழிகளில் கண்ணீர் வடிய தொடங்கியது.
“என்ன மாமா நீங்க?” என்றவள் பதற,
“மனசு வலிக்குது மா… ஒரு பக்கம் உங்க அத்தை ஜடம் மாதிரி படுத்த படுக்கையா இருக்கா… இன்னொரு பக்கம் புருஷனோட இழப்பை தாங்க முடியாம அனு சோறு தண்ணி இல்லாம அவ ரூம்லயே அடைஞ்சு கிடக்குறா? குட்டி பையன் வேற அப்பா அப்பான்னு எந்நேரமும் அப்பாவை தேடுறான்” என்றவர் குரல் கம்மியது.
“இப்படி என் குடும்பம் என் கண் முன்னாடியே கொஞ்சம் கொஞ்சமா நிலைகுலைஞ்சு போகிறதை என்னால பார்க்க முடியல… வலிக்குது… இந்த நிமிஷமே என் உயிர் போயிட்டா கூட நல்லா இருக்கும்” என்றவரின் அழகையும் வேதனையும் நொடிக்கு நொடிக்கு அதிகரித்து உச்ச கட்டத்தை எட்ட, அந்த நொடி அவர் தன் முகத்தை மூடி குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்துவிட்டார்.
மது எதுவும் பேசவோ ஆறுதல் வார்த்தை சொல்லவோ… ஏன் அவர் அழுகையை நிறுத்தவும் கூட முற்படாமல் கனமான மௌனத்தை தாங்கியிருந்தாள்.
சில நிமிடங்கள் கடந்து அவர் தன் முகத்தை துடைத்து கொண்டு அவளை நிமிர்ந்து பார்க்க,
“உங்க மனசுல இருக்க வேதனையெல்லாம் மொத்தமா சொல்லி அழுதுட்டீங்களா மாமா?” என்று நிதானமாக கேட்டாள்.
இந்த கேள்வியில் அவர் திகைப்பானார். திடமாக அவர் விழிகளை எதிர்நோக்கியவள், “அழுது முடிசிட்டீங்கன்னா கொஞ்ச நேரம் நிம்மதியா போய் படுத்து தூங்குங்க மாமா… இனிமே எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்… இந்த இழப்பில இருந்து நம்ம குடும்பத்தை நான் மீட்டு கொண்டு வரேன்” என்று அழுத்தம் திருத்தமாக சொல்லிவிட்டு எழுந்து அவள் அறை நோக்கி நடந்தாள்.
கலங்கி இருந்த பாஸ்கரன் மதுவின் வார்த்தைகளால் ஓரளவு தெளிவு பெற்றார்.