விழிகள் 15

eiM75GQ43642-75cc51a9

கதவைத் திறந்த அகஸ்டினுக்கு எதிரில் நின்றிருந்தவரைப் பார்த்ததும் அதிர்ச்சி.

இரு புருவங்களையும் உயர்த்தி திகைத்துப் பார்த்தவன், அடுத்த சில நொடிகளில் தன்னை சுதாகரித்து, “என்ன திடீர் விஜயம். வீட்டோட மாப்பிள்ளையான உங்களை புகுந்த வீட்டுல துரத்தி விட்டுட்டாங்களா என்ன?” அடக்கப்பட்டச் சிரிப்போடு கேட்க, எதிரிலிருந்த ரோஹனோ தன்னை அகஸ்டினுடன் வற்புறுத்தி பேச அனுப்பிய தன் மனைவியைத்தான் முறைத்தார்.

அவரின் பார்வை சென்ற திசையை எட்டிப் பார்த்த அகஸ்டின், அடுத்தகணம் “அம்மு…” கத்திக்கொண்டே ஓடிச் சென்று புன்னகையோடு நின்றிருந்த மாயாவை அணைத்து, “மிஸ் யூ அம்மு.” என்றுவிட்டு கன்னத்தில் முத்தம் வைக்க, “மீ டூ அகி.” அவனின் தலை முடியை செல்லமாக கலைத்துவிட்டார் அவர்.

அதேநேரம், வெளியில் சத்தம் கேட்டு மஹியும் ஆத்வியும் கூட தத்தமது அறைகளிலிருந்து வெளியே வர, தன் பெற்றோரைப் பார்த்த மஹிக்கு அத்தனை சந்தோஷம். “அப்பா…” ஓடிச் சென்று ரோஹனை அவன் அணைத்துக்கொள்ள, “இவன் அப்படியே அவன் அப்பா செல்லம். அகிதான் என் செல்லம்.” தன் மகனை வெறுப்பேற்றினார் மாயா.

அதில் தன் தாயை முறைத்தவன், “உங்களுக்கு அவன்தான் சரி. இரண்டும் சரியான கேடிங்க.” சற்று கடுப்பாகச் சொல்லிவிட்டு, “ஒரு வார்த்தை சொல்லிட்டு வந்தா என்னம்மா?” என்று கேட்க, “உன் அத்தைங்க, மாமாவுக்கெல்லாம் முன்னாடியே தெரியும். நாங்கதான் சப்ரைஸ்ஸா இருக்கட்டுமேன்னு உங்க மூனு பேருக்கும் சொல்ல வேணாம்னு…” என்று பேசிக்கொண்டே திரும்பிய ரோஹன், தங்களை வாயைப் பிளந்து பார்த்துக்கொண்டிருந்த ஆத்வியை ஆச்சரியமாகப் பார்த்தார்.

அவளைப் பார்த்ததும், “வாவ்! ஆத்வி…” மாயாவும் ஆச்சரியமாக அழைக்க, அவரின் அழைப்பில் நடப்புக்கு வந்தவள், “அத்தை…” என்று உற்சாகமாக அழைத்தவாறு ஓடிச்சென்று மாயாவை அணைத்துக்கொண்டு, “அங்கிள், ஸ்டில் யூ லுக் ஸ்மார்ட். தீராவுக்கு அண்ணா மாதிரி இருக்கீங்க.” என்றுச் சொல்லிச் சிரித்தாள்.

அதில் தன் கோலரை தூக்கி விட்டுக்கொண்டு தன்னவளை ரோஹன் கெத்தாக ஒரு பார்வைப் பார்க்க, “க்கும்!” என்று நொடிந்துக்கொண்ட மாயா, “இது உனக்காக.” என்று தன் கையில் வைத்திருந்த குட்டி பையிலிருந்து ஒரு உதட்டுச்சாயத்தை எடுத்துக் கொடுக்க, அதைப் பார்த்தவளுக்கு விழிகள் மின்ன ஆரம்பித்தது.

“வாவ்! இது புதுசா ப்ரொடியூஸாக போற ஐரா காஸ்மெடிக்ஸ்ஸோட லிப்ஸ்டிக்தானே? இதோட ஃபர்ஸ்ட் யூசரே நான்தானா அத்தை?” ஆச்சரியமாகக் கேட்டு, “சின்னவயசுல கூட இப்படிதான் என்னை பார்க்க வரும் போது ஏதாச்சும் ப்ரோடெக் கொண்டு வருவீங்க. இப்போவும்…”  விழிகள் கலங்கச் சொல்ல, “அதை எப்படி நான் மறப்பேன்?” அவளுடைய தலையை வாஞ்சையோடு வருடினார் மாயா.

“அப்போ எனக்கு என்ன வாங்கிட்டு வந்த அம்மு?” அகஸ்டின் சற்று பொறாமை கலந்த ஆர்வத்தோடு கேட்க, “அது…” என்று மாயா சொல்ல வருவதற்கு முன்னமே, “டேய், எதுக்குடா அவள அம்முன்னு கூப்பிடுற? அப்படி நான் மட்டும்தான் கூப்பிடுவேன்.” சிறுகுழந்தைப் போல் அகஸ்டினுடன் சண்டைக்கு நின்றார் ரோஹன்.

அதில், “அய்ய…” என்று ஒரு மார்கமாக மேலிருந்து கீழ் அவரை ஒரு பார்வைப் பார்த்தவன், “அம்மு, இந்த மனுஷன் கூட எப்படி நீ குடும்பம் நடத்துற? சரியான டென்ஷன் பார்ட்டி! பேசாம டைவர்ஸ் வாங்கிரு.” என்று குடும்பத்திற்குள் கேலியாக குழப்பத்தை உண்டு பண்ண, “அடிங்க…” என்று ரோஹன் பொங்கி எழுவதற்குள், “காலங் கடந்திருச்சுடா மகனே!” இல்லாத கண்ணீரை பதிலுக்கு கேலியாக துடைத்து விட்டுக்கொண்டார் மாயா.

ரோஹன் தன் மனைவியை முறைக்க,  வாயைப் பொத்திச் சிரித்தவர், “அகி, உனக்கு எதுவும் கொண்டு வரலன்னு யாரு சொன்னா? உனக்கும் மஹிக்கும்  சூப்பரா, மாஸ்ஸா, அழகா இரண்டு வரன் கொண்டு வந்திருக்கேன்.” என்று சொல்லி குறும்பாகச் சிரிக்க, “வாட்! மாம்…” மஹி பற்களைக் கடித்துக்கொண்டான் என்றால், நாடியை நீவி விட்டவாறு யோசித்தான் அகஸ்டின்.

“அதெல்லாம் ஒன்னும் பிரச்சினை இல்லை. பண்ணிடலாம். ஆனா என்னன்னா, கல்யாணமெல்லாம் ஆல்ட் ஸ்டைல். எதுக்கு வீணா செலவு பண்ணிக்கிட்டு… என்ட், பொண்ணு உங்க போலிஸ் ஃப்ரென்ட் மாதிரி இல்லாம அடக்க ஒடுக்கமா இருப்பாளா? இல்லை… உன்னை மாதிரி சின்னபுத்தியா?” மாயாவையே கலாய்த்து அகஸ்டின் சிரிக்க, அலைஸ்ஸும் மாயாவும் இடுப்பில் கைக்குற்றி அவனை முறைக்க, “மகனே, என்ன இது? இதெல்லாம் ரொம்ப தப்பு. சோரி கேளு! என்னதான் இருந்தாலும் உண்மைகள இப்படி வெளிப்படையா சொல்லிட்டேன்னா, பின்னாடி பிரச்சினை ஆகிரும்.” பதிலுக்கு தன் மனைவியையும் தங்கையையும் வாரினார் சஞ்சய்.

சம்மந்தப்பட்ட இருவரும் முந்தானையை இடுப்பில் சொருகி தந்தையையும் மகனையும் அடிக்க சுற்றிமுற்றி எதையோ தேட, சுற்றியிருந்த மற்றவர்களோ இவர்களின் கூத்தில் சிரிக்க ஆரம்பித்துவிட்டனர்.

இங்கு இவ்வாறு சந்தோஷம் நிறைந்திருக்க, அதேநேரம் அலீஷாவின் வீட்டில், தன் முன் இரத்த வாந்தியெடுக்கும் தன் தாயை விழிகள் கலங்க பார்த்தவாறு நின்றிருந்தாள் அவள்.

“அம்…மா…” கஷ்டப்பட்டு அவள் திக்கித்திணறி அழைக்க, உள்ளுக்குள் உருவாகும் வலியை தாங்க முடியாது அழுகை வந்தாலும், தன் மகளின் கலங்கிய விழிகளைப் பார்த்து அழுகையை கஷ்டப்பட்டு அடக்கி வலியை பொறுத்துக்கொண்டார் மாதவி.

“எனக்கு ஒன்னும் இல்லைடா.” வலி நிறைந்த புன்னகையோடுச் சொன்னவாறு, களைப்பில் தரையில் அமர்ந்து சுவற்றில் அவர் சாய்ந்துக்கொள்ள, அலீஷாவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

“அம்மா, ப்ளீஸ்ம்மா டாக்டெர்கிட்ட போகலாம். எனக்கு ரொம்ப பயமா இருக்கு. எனக்குன்னு இருக்குறது நீதான். உனக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா… வாம்மா ப்ளீஸ்.” மெல்ல நடந்துச் சென்று தன் அம்மாவின் பக்கத்திலமர்ந்து அலீஷா கெஞ்ச, தன்  மகளிள் தோளில் சாய்ந்துக்கொண்ட மாதவியோ, இல்லை’ எனும் விதமாக தலையசைத்தார்.

“ட்ரீட்மென்டுக்கும் மருந்துக்கும் நிறைய செலவாகும் கண்ணு. அதுவும் அந்த டாக்டெர் சொன்னாருல்ல, நிலைமை கை மீறி போயிருச்சுன்னு. ட்ரீட்மென்டுக்கு செலவு பண்ற காசை வச்சி உனக்கு ஒரு நல்ல வாழ்க்கையே அமைச்சி தந்துருவேன்.”  மாதவி சொல்ல, அலீஷாவின் விழிகளிலிருந்து விடாது கண்ணீர் வழிந்துக்கொண்டிருந்தது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தன் அம்மாவை காப்பாற்ற கூட முடியாத தன் கையாலாகாத தனத்தை எண்ணி அவளுக்கே அவள் மேல் வெறுப்பு!

அதேசமயம் அலீஷாவின் தோளில் சாய்ந்திருந்த மாதவியின் விழிகளுக்கு சரியாகச் சிக்கியது அவள் கழுத்திலிருந்த செயின். அதை மெல்ல எடுத்துப் பார்த்தவர், “பல வருஷமா இந்த செயின் உன் கூடதான் இருக்கு. இது யாரோடதுன்னு தெரியல. ஆனா, உன் அப்பாக்கிட்ட கூட காட்டாம நீ மறைச்சி வச்சிக்கிறதும், தினமும் ராத்திரி இதையே நீ பார்த்துக்கிட்டு இருக்குறதையும் நான் பார்த்திருக்கேன். என்னம்மா இது?” இத்தனை நாட்கள் மனதை குடைந்துக்கொண்டிருந்த சந்தேகத்தை கேட்டுவிட்டார் மாதவி.

முதலில் மாதவி கேட்டதில் சொல்லத் தயங்கியவள், அந்த செயினை ஆடைக்குள் மீண்டும் மறைத்து, “அது…” என்று தயக்கமாக இழுத்தவாறு நடந்ததை சொல்லி முடிக்க, விழி விரித்தார் அவர். “அலீஷா…” அதிர்ச்சியாக வந்தது அவருடைய அழைப்பு.

“அந்த பையனா, நீ தெரிஞ்சிதான் பேசுறியா? அந்த பையனோட குடும்பத்துக்கும் நம்ம குடும்பத்துக்கும் எப்படி பொருந்தும்? நாம அவங்களுக்கு கொஞ்சமும் பொருத்தம் இல்லை. இது ஏதோ பகல் கனவா எனக்கு தோனுது.” மாதவி பதறியபடி பேச, சட்டென அலீஷாவின் விழிகள் கலங்கிவிட்டது. “அம்மா…” தழுதழுத்த குரலில் அழைத்தவளுக்கு, அன்று அகஸ்டின் தகுதியைப் பற்றி பேசியதும் கூடவே நியாபகத்திற்கு வந்தது.

“இந்த பணம், காசெல்லம் மனசுக்கு புரியுமா, என்ன? எனக்கு அவரை பிடிச்சிருக்கு, அவ்வளவுதான். அவருக்கும் கூடிய சீக்கிரம் என்னை பிடிக்கும். அதுவும், நீயும் அப்பாவும் காதலிச்சிதானே கல்யாணம் பண்ணீங்க!” அவள் சற்று விடாப்பிடியாகச் பேச, ஏனோ மாதவிக்கு அவளைப் பார்க்க பாவமாக இருந்தது. விரக்தியாகச் சிரித்துக்கொண்டார் அவர்

“அந்த காதல் நீ பொறந்த கொஞ்சநாள் வரைக்கும்தான் பாப்பா. உனக்கொன்னு தெரியுமா, நான் பொறந்த வீடு அவ்வளவு பெரிய வசதி வாய்ப்பு கிடையாது. ஆனா, உழைச்சி சாப்பிட்டு நிம்மதியாதான் இருந்தோம். அப்போதான் உன் அப்பாவை காதலிச்சி, ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். ஆரம்பத்துல நல்லா இருந்தாலும் போக போக வேலைக்கே போகல அவரு. தினமும் சண்டைதான். சட்டுன்னு ஒருநாள் ஒரு பெரிய தொகையோட வீட்டுக்கு வந்தாரு. இவ்வளவு பணம் எப்படி வந்துச்சுன்னு கேட்டதுக்கு கொஞ்சம் கூட கூசாம திருடினேன்னு சொன்னாரு. ரொம்ப பயந்துப் போய்ட்டேன். ஆனா, எதுவும் பண்ண முடியல. அப்படியே விட்டுட்டேன். எனக்கும் பழகிப் போச்சு. அதே தொழில அவரு உனக்கும் கத்து தரும் போதும் என்னால தடுக்க முடியல.”

மாதவி பேசப் பேச அலீஷா உறைந்துப் போய் அமர்ந்திருந்தாள். அவளால் கொஞ்சமும் நம்ப முடியவில்லை. மீண்டும் மாதவியே தொடர்ந்தார்.

“அந்த பையன் உன்னை காதலிக்க கூட இல்லை. உன்னைப் பார்க்கும் போது நீ அவனோட பணத்துக்காக காதலிக்கிறதா கூட தோனலாம். இந்த காதலெல்லாம் வேணாம் கண்ணு. கூடவே, இந்த தொழிலும். அப்பா இறந்ததும் இரண்டு இடத்துல வேலைப் பார்த்த. அந்த முதலாளிங்க இரண்டு பேரும் தப்பா நடந்துக்க முயற்சி பண்ணதும், எனக்காக திருடுற வேலைய மறுபடியும் ஆரம்பிச்ச. இனி விட்டுரு. எச்சி பாத்திரத்தை கழுவி அம்மா இருக்குற வரைக்கும் உன்னை பார்த்துக்குறேன்.  புது இடத்துல போய் தங்கிக்கலாம். என் பொண்ண புரிஞ்சிக்கிட்டு ஒருத்தன் வருவான். அவன்கிட்ட உன்னை ஒப்படைச்சிடுவேன்.”

மாதவி சொல்ல, அலீஷாவால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இப்போதெல்லாம் திருடுவதை குறைத்துக்கொண்டாள். ஆனால், அகஸ்டினை மறப்பதென்பது அவளுக்கு முடியாத காரியம்.

சட்டென்று எழுந்து நின்றவள், “எனக்கு என் தினுதான்ம்மா வேணும்.” என்றுவிட்டு அழுதவாறே அங்கிருந்த ஒரு அறையில் நுழைந்து கதவடைத்துக்கொள்ள, போகும் தன் மகளை பரிதாபமாகப் பார்த்திருந்தார் மாதவி.

அடுத்தநாள்,

“எந்த கார்ட்ஸ்ஸும் இல்லாம உன்னை கூட்டிட்டு வெளிய வந்தேன்னு மட்டும் உன் ரூஹிக்கு தெரிஞ்சது நான் சட்டினிதான் அம்மு.” அந்த மாலில் சுற்றும் முற்றும் பார்த்து மாயாவிற்கு அணிவித்திருந்த தொப்பியையும் பெரிய கண்ணாடியையும் சரி செய்தவாறு அகஸ்டின் சொல்ல, “இதென்ன நமக்கு புதுசா அகி? இத்தாலில எத்தனை தடவை ரூஹிய ஏமாத்திட்டு தனியா வெளியில போயிருப்போம்.” பெருமையாகச் சொன்னார் மாயா.

“ஆஹான்!” என்றவாறு அவரை முறைத்துப் பார்த்தவன், “ஆமா ஆமா, அந்த ஹிட்லர ஏமாத்திட்டு உன்னை வெளியில கூட்டிட்டு போனது ஒன்னும் புதுசு இல்லை. அதே மாதிரி மாட்டிக்கிட்டதும் என்னை தனியா கோர்த்துவிட்டு அவர்கிட்ட அடி வாங்கவிட்டுட்டு நீ எஸ்கேப் ஆகுறதும் புதுசு இல்லை.” என்று பற்களைக் கடிக்க, “ஹிஹிஹி… சும்மா எதுக்கு பழசை எல்லாம் நியாபகப்படுத்திக்கிட்டு… வா, ஐஸ்கிரீம் சாப்பிடலாம்.” அசடுவழிந்தவாறு ஃபுட் கோர்ட்டிற்கு அகஸ்டினை இழுத்துச் சென்றார் மாயா.

அங்கு ஒரு மேசையில் மாயா அமர்ந்திருக்க, கையில் இரண்டு ஐஸ்கிரீம் கோனுடன் வந்தவன், ஒன்றை அவரிடம் கொடுத்துவிட்டு மற்றதை சாப்பிட ஆரம்பித்தான். ஆனால், அடுத்தகணம் இதுவரை ஐஸ்கிரீமே சாப்பிட்டிராதது போல் வேகவேகமாக சாப்பிடும் தன் அத்தையை பார்த்தவனுக்கு சிரிப்புதான் வந்தது.

“மிஸஸ்.மாயா மஹேஷ்வரி நினைச்சா, இந்த செகன்ட் கூட ஐரான்னு பேருல ஐஸ்கிரீம் ப்ரொடக்ஷன் கம்பனியே ஆரம்பிக்கலாம். இதெல்லாம் ரொம்ப ஓவர்.” அகஸ்டின் பொறுமிக்கொள்ள, அவனை முறைத்துப் பார்த்த மாயா, “பணம் இருந்தா சந்தோஷமும் சுதந்திரமும் இருக்கும்னு எவன் சொன்னான்? என் கஷ்டம் எனக்கு. கொஞ்சநாள்ல உனக்கே புரியும். ஆனா, எனக்கொரு சந்தேகம்.” மாயா சொல்ல, அவரை கேள்வியாக நோக்கினான்.

“மஹி ஏன் ஒரு மாதிரி இருக்கான் அகி? ஏதோ ஒன்னு அவன்கிட்ட இல்லாத மாதிரி எனக்கு தோனுது.” மாயா சற்று வேதனையுடன் சொல்ல, “தெரியல.” ஒரே வார்த்தையில் சொல்லி யோசனையில் புருவத்தை நெறித்தவனுக்கு சரியாக ஒரு அழைப்பு வந்தது.

திரையில் தெரிந்த எண்ணை புருவத்தை சுருக்கிப் பார்த்தவன், அழைப்பை ஏற்று காதில் வைத்து “ஹெலோ…” என்று சொன்னதும்தான் தாமதம், “ஏய் ரசகுல்லா, என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு வந்தா என்னடா? ஆமா… யார் அந்த பாட்டி?” என்ற அலீஷாவின் வார்த்தைகளில் திடுக்கிட்டு நிமிர்ந்தான்.

சுற்றிமுற்றி விழிகளை சுழலவிட்டு அகஸ்டின் தேட, சரியாக அங்கிருந்த மேசையில் இரு ஐஸ்கிரீம் கோன்களை கையில் வைத்து சாப்பிட்டவாறு அமர்ந்திருந்தாள் அலீஷா.

அவளை முறைத்துப் பார்த்து, “வைடி ஃபோன!” என்று கத்திவிட்டு அகஸ்டின் அழைப்பைத் துண்டிக்கப் போக, “வெயிட் வெயிட்! அது மிஸஸ்.மாயா மஹேஷ்வரிதானே? இந்தியாவுக்கு வந்ததா நியூஸ் பார்த்தேன். ஆனா, மாறுவேஷத்துல  இங்க என்ன பண்றாங்க?” அலீஷா புரியாதுக் கேட்க, “ஷட் அப்! உனக்கெதுக்குடி ஊர்க்கதை? அவங்க பேரை சொல்ல கூட உனக்கு தகுதியில்லை.” பற்களைக் கடித்தான் அவன்.

“மென்டல் மாதிரி பேசாதடா மென்டல்! கூப்பிடதானே பேரு வச்சிருக்காங்க!” புத்திசாலித்தனமாக பேசிவிட்டதாக நினைத்து அலீஷா கோலரை தூக்கி விட்டுக்கொள்ள, “இடியட்!” மாயாவுக்கு கேட்காதவாறு திட்டிவிட்டு அழைப்பை பட்டென்றுத் துண்டித்தான். ஆனால், அவள்தான் விட்ட பாடில்லை.

அன்று அலுவலகத்தில் வைத்து அகஸ்டின் செய்தது போல் அவனைப் பார்த்தவாறு அலீஷா ஒற்றை கண்ணைச் சிமிட்ட, விழி விரித்தவன், அவளிடமிருந்து பார்வையைப் பட்டென்று திருப்பிக் கொண்டு அலைப்பேசியை நோண்டுவது போல் குனிந்துக்கொண்டான். ஆனால், மீண்டும் அவளைப் பார்க்கும் ஆர்வம் அவனுக்குள்.

விழிகளை மட்டும் உயர்த்தி தலையை சரித்து மெதுவாக அவளை அவன் நோக்க, அடுத்தகணம் பறக்கும் முத்தத்தோடு ஒற்றை கண்ணை சிமிட்டவும் பதறிவிட்டான் அவன்.  ‘என்ன பொண்ணுடா இவ?’ உள்ளுக்குள் நினைத்துக்கொண்டு அலீஷாவையே பார்த்திருந்த அகஸ்டின், “ஆமா, இந்த பொண்ணு ஒன்னும் நீ எதிர்ப்பார்க்குற மாதிரி அடக்க ஒடுக்கமா தெரியல்லையே… பேரென்ன?” பக்கத்தில் கேட்ட மாயாவின் குரலில் திடுக்கிட்டுத் திரும்பினான்.

“அது… அது வந்து…” அவன் தடுமாற, தான் அமர்ந்திருந்த மேசையில் கைகளை அடித்து எழுந்த அலீஷா, கொஞ்சமும் யோசிக்காது விறுவிறுவெனச் சென்று அகஸ்டினின் பக்கத்தில் அமர்ந்துக்கொள்ள, அவளை மேலிருந்து கீழ் பார்த்த மாயாவிற்கு ஏனோ சற்று ஆச்சரியமாகத்தான் இருந்தது. கையிலிருந்த ஐஸ்கிரீமை சப்பியவாறு அலீஷாவையே  பார்த்திருந்தார் அவர்.

“ஏய் திருட்டெலி, எழுந்திருச்சி போடி! யாரைக் கேட்டு இங்க உட்கார்ந்த? இப்போ மட்டும் நீ போகல…” அகஸ்டின் விடாது கத்த, காதில் சிறுவிரலை விட்டு குடைந்தவாறு, “அட ச்சீ! வாய மூடு. எப்போ பாரு நொய்யு நொய்யுன்னுக்கிட்டு… இந்த ஜந்துவ வீட்டுல எப்படி வச்சிருக்கீங்க?” புதிதாக பழகுவது போல் இல்லாமல் அதுவும் அத்தனைப் பெரிய தொழிலதிபரிடம் அலீஷா சாதாரணமாக பேச, மாயாவுக்கோ மேலும் ஆச்சரியம்.

“வாவ் அகி! யாரிந்த பொண்ணு?” அவர் ஆர்வமாகக் கேட்க, கைகளை பேன்ட்டில் துடைத்து, “நான் அலீஷா மேடம்.” என்று இழித்தவாறு கைகளை அவள் நீட்டவும், நீட்டிய கரத்தை தட்டி விட்டவன், “தொடாம பேசு!” சற்று மிரட்டலோடுச் சொன்னான்.

அவனுடைய செய்கையில், “அகி…” என்று மாயா கண்டிக்க, ஆனால் அவளோ, அவனுடைய பேச்சை கொஞ்சமும் காதில் வாங்காது சாதாரணமாக அமர்ந்திருந்தாள். “ரசகுல்லா திட்டுறது ஒன்னும் எனக்கு புதுசில்ல மேடம்.” அவள் அசால்ட்டாகச் சொல்லிச் சிரிக்க, ஏதோ சந்தேகத்தில் அவளுடைய கழுத்தை கூர்ந்து கவனித்தான் அகஸ்டின்.

“அலீஷா, செயின் எங்க?” அவன் சட்டென்று கேட்க, “அது இங்கதான்…” என்றவாறு கழுத்தை தடவியவளுக்கு தூக்கி வாரிப்போட்டது. “தினு செயி..செயின காணோம்.” கழுத்தை தடவியவாறு அவள் பதற, அடுத்தகணம் தரதரவென ஆட்களின் நடமாட்டம் குறைவான இடத்திற்கு அவளை இழுத்துச் சென்றவன், அவள் கன்னத்தில் அறைந்த அறையில் அதிர்ந்துவிட்டாள் அவள்.