விழிகள் 25

eiGJ81L16854-7b29555f

கதவைத் திறந்த அகஸ்டின் எதிரே நின்றிருந்தவனைப் பார்த்ததும் வேகமாக கதவை சாத்தப் போக, அதைத் தடுத்து வேகமாக உள்ளே நுழைந்த மஹி, அவனுடைய முகத்திலேயே ஓங்கி குத்தியிருந்தான்.

அவன் அடித்த கன்னத்தை, “ஆங்…” என்ற கத்தலோடு பொத்திக்கொண்ட அகஸ்டின், “ஹவ் டேர் யூ?” பதிலுக்கு கத்தியவாறு போதையில் தள்ளாடியபடி அவனுக்கு அடிக்கச் சென்று தடுமாறி விழப்போக, அவன் சட்டைக் கோலரைப் பிடித்திழுத்தவன், “வீட்டுல உன்னை நினைச்சி புலம்பிக்கிட்டு இருக்காங்க. நீ என்னடான்னா குடிச்சிட்டு இருக்க பாவி! சரியா பேசவும் மாட்டேங்குற. என்னடா நினைச்சிக்கிட்டு இருக்க?” கோபமாக கத்தியவாறு அகஸ்டினின் முகத்தில் மீண்டும் குத்தினான்.

“அதுக்காக அடிப்பியாடா இடியட்! உன்னை…” வாங்கிய அடியில் சற்று போதை தெளியவும் பற்களைக் கடித்துக்கொண்டு அகஸ்டின் அடிக்க, இவ்வாறு இருவரும் சட்டைக்கோலரைப் பற்றி மாறி மாறி சண்டைப் பிடித்துக்கொண்டனர். சரியாக, இவர்கள் இடித்ததில் மேசை மீதிருந்த கண்ணாடிப்பொருளொன்று நிலத்தில் விழுந்து சிதற, சட்டென்று சண்டையை நிறுத்திவிட்டு ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர் இருவரும்.

அப்படியே அதே இடத்தில் சம்மணமிட்டு அமர்ந்து இருவரும் மூச்சு வாங்க, கன்னத்தை தடவி விட்டவாறு “ரொம்ப ஸ்ட்ரோங்கா இருக்க. போதையே இறங்கிருச்சு.” என்றான் அகஸ்டின். ஆனால், மஹியோ பதிலெதுவும் பேசாது அவனை மேலிருந்து கீழ் பார்த்தான்.

எப்போதும் ஸ்டைலாக வெட்டிய மீசை, தாடியுடன் நிறம் தீட்டப்பட்ட அடர்ந்து வளர்ந்த தலைமுடி என விழிகளில் குறும்போடு திரிபவன், இன்று கடமைக்கென வெட்டப்பட்ட தலைமுடி, மீசை, தாடியுடன் உணர்ச்சியற்ற விழிகளோடு இருக்க, அகஸ்டினையே பார்த்திருந்த மஹி, “ரொம்ப வித்தியாசமா இருக்க.” என்றான் பட்டென்று.

அதில் சிரித்தவன், “ம்ம்… இது நானான்னு எனக்கே சந்தேகமாதான் இருக்கு.” விரக்தியாகச் சொல்ல, வேகமாக அவனருகில் வந்து, “அகி, உனக்கு இது பிடிக்கலையா? அதனாலதான் நீ இப்படி இருக்கியா? ஒருவேள, நான் பொறுப்பை ஏத்திருந்தா உன்னை மாம் ஃபோர்ஸ் பண்ணிருக்க மாட்டாங்கல்ல!” மஹி வருத்தத்தோடுச் சொல்ல, “போடாங்கு…” திட்டியவாறு கட்டிலில் சென்று அமர்ந்துக்கொண்டான் அகஸ்டின்.

“நமக்கு இப்படி ஒரு வாழ்க்கை கிடைக்காதான்னு எல்லாரும் ஏங்குற லைஃப்தான் எனக்கு கிடைச்சிருக்கு. இது பிடிக்கலன்னு இல்லை சைத்து. முழுசா ஏத்துக்க முடியல. அன்னைக்கு மாயா அத்தை இந்த பொறுப்பை முழுசா ஏத்துக்கும் போது மாமா கூட இருந்தாரு, அவங்களோட காயத்துக்கு மருந்தா. ஆனா எனக்கு…” சட்டென்று நிறுத்திய அகஸ்டினின் குரல் தழுதழுக்க, விழிகள் கலங்க, அதில் “அகஸ்த்து…” என திகைத்து அழைத்தான் மஹி.

விழியிலிருந்து கண்ணீர் தரையை தொட, தன் தோழனை நிமிர்ந்துப் பார்த்தவன், “நான் என் சந்தோஷத்தை தொலைச்சிட்டேன் சைத்து.” என்றுவிட்டு கதறியழ, அவனை அதிர்ந்து பார்த்தான் மஹி. அவனுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து இதுவரை அகஸ்டினை இப்படியொரு நிலையில் பார்த்ததேயில்லை. விழியில் விழிநீரோடு அமர்ந்திருக்கும் இவன் மஹிக்கு புதிதுதான்.

வேகமாகச் சென்று அவனருகில் அமர்ந்தவன், “என்னாச்சுடா? நீ எப்போவும் இப்படி இருந்ததில்லை. எனக்..எனக்கு பயமா இருக்கு. என்னாச்சுன்னு சொல்லுடா!” பதட்டமாகக் கேட்க, உதடுகள் துடிக்க, “அலீஷா.” என்றான் அகஸ்டின் தழுதழுத்த குரலில். ஒருநிமிடம் மஹிக்கு எதுவும் புரியவில்லை.

பின் சுதாகரித்து, “அலீஷாவா?” அதிர்ந்துக் கேட்டவன், “டேய் அகஸ்த்து, அலீய பத்தி நானே உன்கிட்ட கேக்கணும்னு நினைச்சேன். கடைசியா அன்னைக்கு மும்பையில அவள பார்த்தேன். அப்றம், அவ எங்க போனா, என்ன ஆனான்னு ஒன்னுமே தெரியல. இப்போ நீ என்னடான்னா அவ பெயர சொல்லி சந்தோஷத்தை தொலைச்சிட்டேன்னு சொல்ற. என்னடா நடக்குது இங்க? தெளிவாதான் சொல்லேன்.” கோபமாகக் கத்த, பக்கத்திலிருந்த பொருளை சுவற்றில் விசிறியடித்து எழுந்து நின்றான் அகஸ்டின்.

“என்னடா சொல்ல? ஒரு மண்ணும் கிடையாது. இதுக்கு மேல அவள பத்தி ஏதாச்சும் பேசின… அவ்வளவுதான். என்னடா நினைச்சிக்கிட்டு இருக்கா அவ? எல்லாமே பொய்யு. என்னை பத்தி தெரிஞ்சிருந்தா என்னை விட்டுட்டு போயிருப்பாளா? எனக்காக காத்திருக்க கூட இல்லைடா அந்த இடியட். பின்னாடியே திரிஞ்சி, அவள நினைக்க வச்சு, இப்போ அவ பாட்டுக்கு விட்டுட்டு போயிட்டா. அவ என்னடா என்னை விட்டு போக, இனி அவளே வந்தாலும் எனக்கு அவ வேணாம்.” தாறுமாறாக கத்திவிட்டு புறங்கையால் விழிநீரை அழுந்தத் துடைத்தவன், விறுவிறுவெனச் சென்று மேசையின் மீதிருந்த பெரிய மதுப்போத்தலை கையிலெடுத்தான்.

அவன் பேவதையே இத்தனைநேரம் திகைத்துப்போய் கேட்டுக்கொண்டிருந்த மஹி, அவன் மதுபோத்தலை கையிலெடுத்ததும், “அடக் கடவுளே!” பயந்தபடி ஓடிச் சென்று அவன் கையிலிருந்ததை பிடுங்க முயற்சித்தான்.

“அகஸ்த்து, போதும்டா. சாகப்போறியா என்ன? என்ட், இது மட்டும் வெளியில தெரிஞ்சா, உன்னை டீவி நியூஸ்ல வச்சி செஞ்சிடுவாங்க.” மஹி பதறியபடிச் சொல்ல, “அப்போ எனக்கு நிம்மதியா குடிக்க கூட உரிமை இல்லையா?” உதட்டை பிதுக்கிக்கொண்டு கேட்டவன், அதே இடத்தில் சம்மணமிட்டு அமர்ந்துக்கொண்டான்.

“எனக்கு என் எலிக்கிட்ட பிடிச்ச விஷயமே இதான் மஹி. அவளுக்கு பிடிச்சதை யாருக்காவும் விட்டுக்கொடுக்க மாட்ட. நீ மட்டும் இல்லை, நான் கூட மாயா அத்தைய அவளோட இயல்புல பார்த்திருக்கேன். அப்றம் எப்படி எனக்கு அவள பிடிக்காம இருக்கும்?” அகஸ்டின் வேதனையோடுச் சொல்ல, அவனெதிரே முட்டியை கைகளால் கட்டியவாறு அமர்ந்துக்கொண்ட மஹி தன் தோழனையே ஆழ்ந்து நோக்கினான்.

“எனக்கு நிஜமாவே ரொம்ப குழப்பமா இருக்கு அகஸ்த்து. ஆரம்பத்துலயிருந்து இப்போ வரைக்கும் ஒன்னு மட்டும் எனக்கு புரியல. நீதான் அவள வேணாம்னு சொன்ன. இப்போ என்னடான்னா அவ விட்டுப் போயிட்டான்னு சொல்ற. என்னதான் நினைச்சிட்டு இருக்க நீ?” அமைதியாக கேட்டாலும் அடக்கப்பட்ட கோபத்தோடு கேட்ட மஹிக்கு, அடுத்து அகஸ்டின் சொன்ன காரணத்தில் அத்தனை அதிர்ச்சி!

அகஸ்டினும் தன் மனதிலிருப்பதைக் கொட்டிவிட்டு அரைகுறை போதைமயக்கம், அழுத சோகம் காரணமாக மஹியின் மடியிலேயே உறங்கிவிட, “அலீய நீ இவ்வளவு காதலிச்சியாடா?” மயக்கத்திலிருந்தவனிடம் திகைத்துப்போப் கேட்டான் அவன்.

மஹியின் அதிர்ச்சியோடு அன்றைய நாளும் முடிந்து அடுத்தநாளும் விடிந்தது. அடுத்தநாள் காலை, முகத்தில் விசிறியடிக்கப்பட்ட நீரில் பதறியடித்துக்கொண்டு எழுந்தமர்ந்த அகஸ்டின், தலைவலியில் நெற்றியை பிடித்துக்கொண்டான்.

ஒரு கரத்திலிருந்த தண்ணீர் குவளையை அவன் முகத்தில் ஊற்றிய மஹி, மற்றை கரத்திலிருந்த தேசிக்காய் குளிர்பானத்தை அகஸ்டின் வலியில் முணங்கியதும் அவன் முன் நீட்ட, விழிகளை மட்டும் உயர்த்தி தன் தோழனைப் பார்த்தவன், எதுவும் பேசாது மஹி நீட்டியிருந்த குளிர்பானத்தை வாங்கிக் குடித்தான்.

அவன் முழுதாகக் குடித்துக் கூட முடித்திருக்க மாட்டான். அதற்குள், “சீக்கிரம் ரெடியாகு! நமக்காக கார் வெயிட்டிங்.” மஹி சொல்ல, திடுக்கிட்டு அவனை நோக்கிய அகஸ்டினுக்கு புரிந்துப் போனது.

“நான் வரல.” பட்டென்று ஒருவித அழுத்தத்தோடு சொல்லிவிட்டு மீண்டும் போர்வையை உடலோடு போற்றியவாறு அவன் உறங்கப் போக, “ஆஹான்!” நீட்டி முழக்கி கேலியாக இழுத்த மஹி, அலைப்பேசியை எடுத்து ஏதோ ஒரு எண்ணிற்கு அழைப்பை எடுப்பது போல் பாவனை செய்தவாறு, “ஹெலோ மாம், இவன் வர மாதிரி தெரியல. நீங்க ஒன்னு பண்ணுங்க. மூட்டை முடிச்சி கட்டிட்டு மொத்தப்பேரையும் கூட்டிட்டு இங்க வந்துருங்க.” என்று சொல்ல, அகஸ்டினுக்கு தூக்கி வாரிப்போட்டது.

“ஏன் என்னை டோர்ச்சர் பண்றீங்க? ச்சே! நானே வந்து தொலைக்கிறேன்.” கோபமாக கத்திவிட்டு குளியலறைக்குள் விறுவிறுவென அவன் நுழைய, ‘யாருக்கிட்ட!’ கெத்தாக கோலரைத் தூக்கி விட்டுக்கொண்டான் அவன் தோழன்.

அடுத்த பத்து நிமிடங்களில் தயாராகி முறைத்துக்கொண்டு நின்றிருந்தவனை இழுத்துக்கொண்டு மஹி வீட்டுக்குச் செல்ல, போர்டிகாவில் கார் நின்றதுமே ஹோலிலிருந்த பெரியவர்கள் வீட்டிற்குள் நுழைந்த அகஸ்டினை விழி விரித்து நோக்கினர். ஆனால், அவர்களுடைய விழிகளில் அவனுடைய செயலை எண்ணி கொஞ்சமும் கோபம் இல்லை. ஏனோ அவனுக்கு பிடிக்காத ஒன்றை அவனுக்கு திணித்துவிட்டோமோ? என்ற வேதனைதான் விழிகளில் தெரிந்தது.

அவர்களை கவனித்த அகஸ்டினும் அதை உணரத்தான் செய்தான். இதழை நாவால் ஈரமாக்கி ஒருவித தயக்கத்தோடு சற்றுநேரம் நின்றிருந்தவன், “சோரி எவ்ரிவன்.” என்று மட்டும் சொல்லிவிட்டு வேகமாக தனதறைக்குச் சென்றிருக்க, இப்போது பெரியவர்களின் பார்வை மஹியின் மீதுதான் அதிர்ச்சியோடு படிந்தது.

அதில் உதட்டைப் பிதுக்கி தோளை குலுக்கிச் சிரித்துக்கொண்டான் அவன்.

அடுத்து வந்த நாட்கள் வேகமாக நகர, அகஸ்டினோ ஒவ்வொருநாளும் அலீஷாவின் பூட்டிய வீட்டின் முன் சென்று நிற்க ஆரம்பித்தான். முகத்தை மறைக்குமளவு தொப்பியும் கண்ணாடியும் அணிந்திருந்தவனை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. ஆனாலும், ‘இன்றாவது தன்னவள் இருக்க மாட்டாளா?’ என்ற ஏக்கத்தோடு அவளுடனான நினைவுகளை மீட்டியவாறு அங்கு நிற்கும் அகஸ்டினை சிலபேர் நோட்டமிட்டுக்கொண்டுதான் இருந்தனர்.

“ஏன்டி, இந்தப் பையன் எப்பப்பாரு அந்த திருட்டுப்பொண்ண தேடி வர்றானே! என்னவா இருக்கும்?” ஒருத்தி கேட்க, “வேற என்ன இருக்க போகுதுக்கா? ஏதாச்சும் இவன்கிட்ட பணத்தை ஆட்டைய போட்டிருப்பா. அதான்…” நீட்டி முழக்கிச் சொன்னாள் இன்னொருத்தி.

ஆனால், இந்த பார்வைகளையும் வார்த்தைகளையும் அகஸ்டின் கண்டுக்கொள்ளவேயில்லை. அதேநேரம் மஹியின் திருமணத்திற்கான ஏற்பாடுகளும் வேகவேகமாக நடந்துக்கொண்டிருந்தன.

அன்று, கடையிலிருக்கும் எல்லா வகையான புடவைகளும் வீட்டிற்கே வரவழைக்கப்பட்டு ஹோலில் பரப்பி வைக்கப்பட்டிருக்க, பெண்கள் சூழயிருந்து தமக்கு பிடித்ததை அள்ளிக்கொண்டிருந்தனர். அதுவும், முகூர்த்தப்புடவை தெரிவு செய்வதற்காக நடாஷாவையும் அழைத்திருந்தார் மாயா.

இவர்கள் இவ்வாறு சிரித்துப் பேசியவாறு தெரிவு செய்துக்கொண்டிருக்க, “மாம், இப்போ எதுக்காக என்னை அவசரமா வர சொன்னீங்க?” கத்தியவாறு வேகமாக உள்ளே வந்தான் மஹி. எல்லோரினதும் பார்வை அவன் புறம் திரும்ப, உள்ளே வந்தவனுக்கு வீட்டு நிலவரத்தை பார்த்ததுமே காரணம் புரிந்துப் போனது.

கொடுப்புக்குள் சிரித்த மாயா, “மணப்பொண்ணுக்கு முகூர்த்தப்புடவை செலக்ட் பண்ணும் போது நீ இல்லாம எப்படி ராஜா?” என்று சொல்ல, “மாம்…” கடுப்பாக பற்களைக் கடித்துக்கொண்டவன், வேறு வழியின்றி நடாஷாவினெதிரே அமர்ந்துக்கொண்டான். அவளுக்கோ மஹியை பார்த்ததிலிருந்து வெட்கம் கலந்த சந்தோஷம்!

“மஹி, இந்த கலர் ரொம்ப பொருத்தமா இருக்குல்ல? இல்லைன்னா, இந்த டிஸைன் நல்லா இருக்கா?” நடாஷாவின் மீது புடவையை வைத்து கீர்த்தி கேட்க, எரிச்சலாக நிமிர்ந்தவனின் விழிகளில் சிக்கினாள் அவனவள். நடாஷாவின் பின்னால் நின்று தன்னவனையே முறைத்துக்கொண்டு நின்றிருந்தாள் ஆத்வி.

பெரியவர்கள் ஏதேதோ பேச, மஹியின் பார்வையோ ஆத்வியின் மீதுதான் படிந்திருந்தது. நடாஷாவின் மீது வைத்து காட்டும் ஒவ்வொரு புடவைகளையும் தன்னவளுக்கு பொருத்தமாக இருக்கிறதா? என்றே அவனுடைய மனம் தீவிர ஆராய்ச்சியில் இறங்கியது.

ஆத்வியின் விழிகளில் தெரிந்த ஏக்கம் அவனின் மனதை லேசாக பிசைந்தது. அவளும் ‘வேணாம் தீரா!’ எனும் விதமாக விழிகள் கலங்க தலையாட்ட, கீழுதட்டைக் கடித்து உணர்வுகளை அடக்கிக்கொண்டவன், தான் பார்ப்பதாக நினைத்து வெட்கப்பட்டுச் சிரித்துக்கொண்டிருக்கும் நடாஷாவைப் பார்த்து லேசாக புன்னகைத்தான்.

அங்கு பரப்பி வைக்கப்பட்டிருந்த பல புடவைகளில் மயில் கழுத்து வண்ண புடவையொன்றை சட்டென்று எடுத்த மஹி, அதை நடாஷாவின் தோளில் வைத்துப் பார்த்து, “பர்ஃபெக்ட்!” என்றுவிட்டு ஆத்வியை நோக்க, அவளுக்கோ அழுகையை அடக்கவே முடியவில்லை. உதடுகள் துடிக்க அவள், அவனையே பார்த்திருக்க, அங்கிருந்து விறுவிறுவென வெளியேறியிருந்தான் மஹி.

ஏதேதோ சிந்தனைகள் மனதில் ஓட, வீட்டிலிருந்து வெளியேறி தோட்டத்தில்தான் நின்றிருந்தான் அவன். சரியாக, “தீரா…” என்ற ஆத்வியின் தழுதழுத்த குரலில், உள்ளுக்குள் திடுக்கிட்டாலும் முகத்தில் காட்டாது நிதானமாக திரும்பி அவளை நோக்கியவன், “வாட்?” என்றான் அலட்சியமாக.

“என்னை ரொம்ப ஹர்ட் பண்ற தீரா. நீ இப்படி கிடையாது. என்னடா ஆச்சு உனக்கு? ஏன் என் லவ்வ புரிஞ்சிக்க மாட்டேங்குற?” கன்னத்தினூடே விழிநீர் வழிய, அழுகையோடு கேட்ட தன்னவளைப் பார்த்தவனுக்கு மனம் வலிக்க, இருந்தும் முகத்தை விறைப்பாக வைத்து, “உளறாம இங்கிருந்து கிளம்பு!” என்றான் அழுத்தமாக.

வேகமாக அவனுடைய சட்டைக் கோலரைப் பற்றிக்கொண்டவள், “நான் என் லவ்வ புரிய வைக்குறது உனக்கு உளறுற மாதிரி தெரியுதா? ஏன் என்னை இப்படி தவிக்க விடுற?” கிட்டதட்ட கத்த, அதில் கோபம் உச்சத்தைத் தொட, அவளுடைய கையை உதறிவிட்டு, “எனக்கு உன் பரிதாபக்காதல் தேவையேயில்லை. அதெப்படி இத்தனைநாள் வராத காதல் நான் காதலிச்சதை சொன்னதும் வந்திச்சு? இது வெறும் என் மேல உண்டான பரிதாபம்தான். காதல் ஒரு மண்ணும் கிடையாது.” பேசிக்கொண்டேச் சென்றவனின் வார்த்தைகள், “ஷட் அப்!” என்ற ஆத்வியின் கத்தலில் அப்படியே நின்றது.

மீண்டும் கோபத்தோடு அவனுடைய கோலரை பிடித்து உலுக்கியவள், “என் லவ்வ நீ எப்படி இப்படி சொல்லலாம் தீரா? பரிதாபத்துலதான் உன்னை காதலிக்கிறேன்னு எப்படி நீ நினைக்கலாம்? ச்சே! என் லவ்வ நீ புரிஞ்சிக்கவே இல்லல்ல!” கண்ணீர் ஓட காட்டுக்கத்து கத்த, சரியாக “ஹ்ர்ம் ஹ்ர்ம்…” என்ற செறுமல்.

அதில் திடுக்கிட்ட ஆத்வி, மஹியை விட்டு வேகமாக விலகி நிற்க, மஹியும் அவள் பேசியதில் உண்டான அதிர்ச்சியோடு சேர்த்து சத்தம் வந்த திசையையும் திகைத்து நோக்கினான். அங்கு இருவரையும் மாறி மாறி கூர்ந்துப் பார்த்துக்கொண்டிருந்தார் தருண்.

அவரைப் பார்த்ததும் இருவரும் விழி விரிக்க, வேகமாக தன்னை சுதாகரித்த ஆத்வி, “ப்பா, எப்போ வந்தீங்க? என் சார்பா நீங்களே இவன கேளுங்கப்பா! ரொம்பநாளா நானும் என்னை வரைஞ்சி கேக்குறேன். ஆனா, வெட்டிப்பையன் டைம்மே இல்லைன்னு பொய்யா சொல்லிக்கிட்டு இருக்கான்.” என்றுவிட்டு வராத சிரிப்பை வரவழைத்து புன்னகைக்க, அதிலிருந்த வலியை மஹி உணரத்தான் செய்தான்.

தன் மகள் பேசியதில் புன்னகைத்த தருண், “சீக்கிரம் உனக்கு பிடிச்ச புடவைய செலக்ட் பண்ணுடா! மொத்தப் புடவையையும் உன் அம்மா, அத்தைங்களே எடுத்துருவாங்க போல!” சிரித்தவாறு சொல்லிவிட்டு அங்கிருந்து நகர, சட்டென்று புன்னகை மறைய, தன்னவனை முறைத்தவள், அதற்குமேல் அங்கு நிற்காது வெளியேறியிருக்க, போகும் தன்னவளையே விழிகள் கலங்க பார்த்திருந்தான் மஹி.

இவ்வாறு  இரண்டுநாட்கள் கழிய,

எப்போதும் போல் தூரமாக தன் காரை நிறுத்திவிட்டு, முகத்தை மறைக்குமளவு தொப்பியையும் கண்ணாடியையும் அணிந்துக்கொண்டு அலீஷாவின் வீட்டின் முன் சென்று நின்ற அகஸ்டின் அடுத்தகணம் அதிர்ந்து விழித்தான்.

அங்கு, இத்தனைநாள் பூட்டியிருந்த கதவு திறந்திருந்திருக்க, ‘இது கனவா? நினைவா?’ உள்ளுக்குள் தனக்குத்தானே கேட்டவாறு வேகமாக வீட்டை நோக்கிச் சென்றவன், கொஞ்சமும் யோசிக்காது வீட்டிற்குள் நுழைந்து விழிகளை சுழலவிட்டான்.

இத்தனை நாளிருந்த அவனுடைய தேடல் மாதவியின் புகைப்படத்திற்கு முன் விழிகளை மூடி கைக்கூப்பி நின்றிருந்தது.