அத்தியாயம் – 06

eiPONP961496-7bd6e0b9

அத்தியாயம் – 06

அன்றைய நாளுக்கான மதிய சமையலை முடித்து விட்டு சிறிது ஓய்வாக இருக்கலாம் என்ற எண்ணத்தோடு தங்கள் வீட்டு முற்றத்தில் ஆசுவாசமாக வள்ளி அமர்ந்திருக்க, எங்கிருந்தோ மின்னல் போல வந்த கிருஷ்ணா கோபத்தினால் சிவந்து போன முகத்துடன் அவர் முன்னால் வந்து நின்றான்.

வழக்கமாக அந்த நேரத்தில் அவன் வீட்டிற்கு வருவதில்லை என்பது வள்ளிக்கு தெரியுமாகையால் திடீரென வந்து நின்ற தன் மகனைப் பார்த்து பதட்டமும், தவிப்பும் ஒன்று சேர அவன் முன்னால் வந்து நின்றவர், “கிருஷ்ணா, என்னப்பா ஆச்சு? ஏதாவது பிரச்சினையா? இந்த நேரத்தில் வீட்டிற்கு வந்திருக்க, ஏதாவது முக்கியமான பொருளை மறந்து விட்டுட்டுப் போயிட்டியா?” என்று கேட்க,

அவரது கையைப் பிடித்துக் கொண்டு வீட்டிற்குள் அழைத்துச் சென்றவன், “அப்பா! அப்பா!” என்றவாறே சத்தமிட, வள்ளியோ குழப்பம் சூழ அவனைப் பார்த்துக் கொண்டு நின்றார்.

கிருஷ்ணாவின் சத்தம் கேட்டு தன்னறைக்குள் இருந்து அவசர அவசரமாக ஓடி வந்த மூர்த்தி, “என்னாச்சு கிருஷ்ணா? எதற்காக இப்படி கத்துற?” என்றவாறே தன் மனைவியின் புறம் திரும்பியவர்,

“என்னாச்சு வள்ளி? என்ன பிரச்சினை” என்று கேட்க,

அவரோ, ‘எனக்கு எதுவும் தெரியாது’ என்பது போல சைகை காட்டி விட்டு தன் மகனின் முகத்தை திரும்பிப் பார்த்தார்.

“கிருஷ்ணா, என்ன தான் பிரச்சினை, ஏதாவது சொல்லு ப்பா” வள்ளி கிருஷ்ணாவின் தலையை ஆதரவாக வருடிக் கொடுத்தபடி அவன் முகத்தை தன் புறமாக திருப்பப் பார்க்க,

அவரது கைகளை தன்னை விட்டும் விலக்கி விட்டவன், “அனுராதாவோட அம்மாவும், அப்பாவும் எப்படி இறந்தாங்க?” என்று கேட்க, அவனது அந்த நேரடிக் கேள்வியில் வள்ளி மட்டுமின்றி மூர்த்தி கூட அதிர்ச்சியடைந்துதான் போனார்.

“சொல்லுங்க, எப்படி இறந்தாங்க?” கிருஷ்ணாவின் அதட்டலில் தூக்கி வாரிப் போட தன் கணவரின் கையைப் பிடித்துக் கொண்ட வள்ளி,

“கிருஷ்ணா, நீ எங்களையே சந்தேகப்படுறியா?” என்று கேட்க,

அவரைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டவன், “இன்னும் எத்தனை நாளைக்கு ம்மா இதே கேள்வியை கேட்டு என் வாயை அடைக்கப் போறீங்க? இவ்வளவு நாளாக எனக்கு எதுவும் தெரியாதுன்னு நீங்க சொன்னதை எல்லாம் நம்பினேன், ஆனா இன்னைக்கு அனுராதா வீட்டில்…” தான் சொல்ல வந்த விடயத்தை முழுமையாக சொல்லி முடிக்காமல் தன் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு,

“இதற்கு மேலும் நீங்க உண்மையை மறைக்க முடியாது ம்மா, அவங்களை நீங்க என்ன பண்ணீங்க, சொல்லுங்க?” இன்னமும் தன் குரலை உயர்த்திப் பேச,

“ஆமா, அவங்களை ஆக்ஸிடென்ட் பண்ண வைத்தது நான்தான், இப்போ நீ என்ன பண்ணப்போற?” பதிலுக்கு வள்ளியும் அவனைப் பார்த்து அதட்டலாக பேசத் தொடங்கினார்.

“அம்மா! நீங்க…நீங்க போய் இப்படி பண்ணலாமா?” கிருஷ்ணா தன் அன்னை சொன்ன வார்த்தைகள் பொய்யாக இருந்து விடக் கூடாதா என்ற தவிப்போடு அவரை நிமிர்ந்து பார்க்க,

“நான் ஒண்ணும் இதெல்லாம் ஆசைப்பட்டு செய்யல கிருஷ்ணா, நான் பண்ணுற எல்லாமே உன் நன்மைக்காகத் தான், புரிஞ்சுக்கோப்பா” வள்ளி கண்கள் கலங்க அவனை நோக்கி அடியெடுத்து வைக்க,

‘வேண்டாம்’ என்பது போல சைகை காட்டியவன்,

“இத்தனை நாளாக நீங்க எனக்கு நல்லது மட்டும் தான் பண்ணுவீங்கன்னு நினைத்தேன், ஆனா இன்னைக்கு அது ஒண்ணுமே இல்லைன்னு ஆகிடுச்சு. ஏன் ம்மா? ஒரு குடும்பத்தை சுக்குநூறாக அழிச்சுத்தானா உங்க பையனுக்கு நல்ல வாழ்க்கையை நீங்க கொடுக்கணும்? அனுராதாவைக் காதலித்தது நான்தான், அவ பின்னாடியே சுற்றி சுற்றி வந்து என் காதலை ஏற்றுக் கொள்ள சொல்லி கெஞ்சிப் போராடி எல்லாம் பண்ணது நான்தானேம்மா, ஆனா தண்டனை அவளுக்கு மட்டும், இதெல்லாம் சரின்னு நினைக்குறீங்களா? ரொம்ப தப்பும்மா, ரொம்ப ரொம்ப தப்பு. நம்ம வீட்டிலும் ஒரு பொண்ணு இருக்கா என்கிற விடயத்தை மறந்துட்டு இப்படி ஒரு கெடுதலை அவளுக்குப் பண்ண உங்களுக்கு எப்படிம்மா மனசு வந்தது?
அப்பா! அம்மா இப்படி ஒரு காரியத்தை பண்ணும் போது நீங்களும் அவங்களுக்கு துணையாக இருந்தீங்களா? சத்தியமாக இப்போ கூட என்னால் நம்ப முடியல, இதெல்லாம் கனவாக இருக்கக் கூடாதான்னு என் மனசு கிடந்து அடிக்குது, ஆனா இதெல்லாம் கனவில்லையே, நிஜமாச்சே” தன் தலையில் கை வைத்தபடியே மண்டியிட்டு அமர்ந்து கொண்டு கண்கள் இரண்டும் கலங்கியவனாக தன் பெற்றோரை நிமிர்ந்து பார்த்தான்.

“அனுராதாவை உங்களுக்கு பிடிக்கலைன்னா நீங்க என் கிட்ட ஆரம்பித்திலேயே சொல்லி இருக்கலாமே, உங்களுக்கு எப்போ அவளைப் பிடிக்க ஆரம்பிக்கிறதோ அப்போ நானும், அவளும் எங்க வாழ்க்கையை ஆரம்பித்து இருப்போம். ஆனா நீங்க ஆரம்பத்திலிருந்து அவளைப் பிடித்த மாதிரியே என் கிட்ட பேசி என் முதுகுக்கு பின்னாடி இவ்வளவு பெரிய துரோகத்தை பண்ணி இருக்கீங்க, அதுவும் பெற்ற மகனோட வாழ்க்கையில் இவ்வளவு பெரிய துரோகத்தை பண்ணிட்டு எதுவுமே நடக்காதது போல இருந்திருக்கீங்க. இந்த மூணு வருஷமா நான் பட்ட கஷ்டங்களை எல்லாம் கண்கூடாக பார்த்தும் உங்களுக்கு என் கிட்ட உண்மையை சொல்லணும்னு ஒரு நாள் கூட தோணல இல்லையா?” கிருஷ்ணாவின் ஒவ்வொரு வார்த்தைக்கும், ஒவ்வொரு கேள்விக்கும் வள்ளி மற்றும் மூர்த்தி பதில் பேச முடியாமல் திணறிப் போக,

தன் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு அவர்கள் முன்னால் வந்து நின்றவன், “எதற்காக நீங்க இப்படி ஒரு பாவத்தை பண்ணீங்க, சொல்லுங்க? சொல்லுங்கன்னு சொல்லுறேன்லே?” தன் அன்னையின் தோளைப் பிடித்து உலுக்க,

சிறு கோபத்துடன் அவனது கையை தட்டி விட்டவர், “அவ இந்த வீட்டுக்கு மருமகளாக வர்றது எனக்குப் பிடிக்கல” எனவும்,

அவனோ, “அதுதான் ஏன்?” மறுபடியும் அவரது தோளைப் பிடித்து இன்னமும் அழுத்தமாக வினவினான்.

“கிருஷ்ணா இவ உன் அம்மாடா. இத்தனை வருஷமாக உன்னைப் பெற்று, வளர்த்த அம்மாவை விட நேற்று வந்த பொண்ணு உனக்கு முக்கியமாக போயிட்டாளா? யாரோ ஒரு பொண்ணுக்காக உங்க அம்மாவை நீ காயப்படுத்தி பார்ப்பது சரியா?” மூர்த்தி வள்ளியின் மீதிருந்த கிருஷ்ணாவின் கையை விலக்க முயன்றபடியே அவனைப் பார்த்து வினவ,

தன் முகத்தில் எந்தவொரு உணர்வையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவரைத் திரும்பிப் பார்த்தவன், “அதே நேற்று வந்த பொண்ணைப் பற்றி எதுவுமே தெரியாமல் அவ அம்மா, அப்பாவை அவ கண்ணு முன்னாடியே கொன்றது மட்டும் சரியா?” என்று வினவ, அவனது கேள்வியில் மூர்த்தி வாயடைத்துப் போனார்.

“அம்மா, சொல்லுங்க. ஏன் இப்படி பண்ணீங்க? சொல்லுங்க, ஏன்?” கிருஷ்ணா தன் அன்னையின் தோளிலிருந்த தன் பிடியை விலக்காமலேயே அவரைப் பார்த்து மீண்டும் மீண்டும் அதே கேள்வியைக் கேட்க,

ஒரு நிலைக்கு மேல் தன் பொறுமையை மொத்தமாக கை விட்ட வள்ளி, “ஏன்னா அவ அப்பா பேரு தெரியாத ஒரு பொண்ணு. என் வீட்டுக்கு அப்படி ஒரு பொண்ணு மருமகளாக வரவே முடியாது, வரவும் கூடாது” என சத்தமிட்ட படியே அவனைத் தன்னை விட்டும் கோபமாக தள்ளி விட்டிருந்தார்.

தன் அன்னை சொன்ன விடயத்தைப் புரிந்து கொள்ள முடியாமல் ஒரு சில நிமிடங்கள் தடுமாறிப் போனவன், “இல்லை, அப்படி எல்லாம் எதுவும் இருக்காது. அவ அம்மா, அப்பாவைதான் நான் பார்த்திருக்கேனே, அவங்க கூட பேசியிருக்கேன். அப்புறம் எப்படி? நீங்க பொய் சொல்லுறீங்க” என்றவாறே மீண்டும் அவரின் அருகில் வந்து,

“ஏன் நீங்க மறுபடியும் மறுபடியும் அனுராதாவைப் பற்றி தப்பாகவே பேசுறீங்க ம்மா? அவளைப் பற்றி ஏன் இப்படி எல்லாம் தப்பாக பேசுறீங்க, அவ ரொம்ப நல்ல பொண்ணு” எனவும்,

அவரோ, “ஓஹ்! அப்படியா? அப்போ இதற்கு என்ன அர்த்தம்ன்னு நீயே சொல்லு?” என்றவாறே அவனது கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு தங்கள் வீட்டின் பழைய பொருட்கள் இருக்கும் அறைக்குள் அழைத்துச் சென்றவர் அங்கே மூலையில் கிடந்த ஒரு பெட்டிக்குள் இருந்து ஒரு புகைப்படத்தை எடுத்து அவனது கையில் வைத்தார்.

அந்த புகைப்படத்தில் அனுராதாவின் அன்னை மேடிட்ட வயிற்றுடன் தன் அன்னை மற்றும் இன்னும் ஒரு சில பெண்களுடன் நின்று கொண்டிருந்தார்.

“இது, இது ராதாவோட அம்மா ஆச்சே? இவங்க கூட நீங்க எப்படி?” கிருஷ்ணா இன்னமும் தன் அன்னை சொன்ன விடயத்தை நம்பாதவனாக அவரைத் திரும்பிப் பார்க்க,

அவனது கையிலிருந்த புகைப்படத்தை வாங்கிக் கொண்டவர், “இவ என்னோட பிரண்ட் தேவி. நானும், இவளும் ஒரே காலேஜில் ஒண்ணாகத் தான் படிச்சோம், அந்த நேரம் எங்க கூடப் படிச்ச ஒரு பையனை அவ விரும்பிட்டு இருந்தா, அந்த விஷயம் காலேஜ் ஃபைனல் இயர் நேரம் அவங்க வீட்டுக்கு தெரிந்து பெரிய பிரச்சினையாகி அவ அந்த பையனோட வீட்டை விட்டு ஓடிப் போயிட்டா, அதற்கு அப்புறம் அவ எங்கே போனா, என்ன நடந்தது எதுவுமே எனக்குத் தெரியாது, நானும் அவளைப் பார்க்கவேயில்லை.
அதற்கு அப்புறம் கிட்டத்தட்ட இரண்டு வருஷம் கழிச்சு எங்க கூடப் படிச்ச ஒரு பொண்ணோட கல்யாணத்துக்கு நாங்க எல்லோரும் தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலுக்கு போனோம், அப்போ தான் நீ பிறந்து ஆறு மாதம் முடிந்திருந்தது. அங்கே தான் நான் மறுபடியும் தேவியைப் பார்த்தேன், அப்போ அவ எட்டு மாதம் கர்ப்பமாக இருந்தா. அவகிட்ட அவ வீட்டுக்காரர் பற்றிக் கேட்டபோது ஏதேதோ பேசி சமாளிச்சுட்டா, நானும் அதைப் பெரிதாக கணக்கில் எடுக்கல, ஆனா மறுபடியும் அந்த அனுராதா பொண்ணோட அம்மா, அப்பான்னு சொல்லி கோவிலில் வைத்து நீ அவங்களை காட்டும் போதுதான் அவ வேறொருத்தரை கல்யாணம் பண்ணியிருந்த விஷயமே தெரிந்தது.
அப்போ கூட எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை, என் ஃபிரண்டோட பொண்ணுதான்னு நினைத்தேன், ஆனா அன்னைக்கு கோவிலில் வைத்து தேவி கிட்ட பேசும் போதுதான் அது அவளுக்கும், அவ காலேஜில் லவ் பண்ண அந்த பையனுக்கும் பிறந்த பொண்ணுன்னு தெரிந்தது, இவ கர்ப்பமாக இருக்கும் போதே அவளை விட்டுட்டு அவன் ஓடிப் போயிட்டானாம், என் கிட்ட சொல்லி ரொம்ப நேரம் அழுதா, அதற்கு அப்புறம் கைக்குழந்தையோடு இவ கஷ்டப்படுவதைப் பார்த்து அதுதான் அனுராதாவோட அப்பான்னு சொல்லுறியே அந்த ராஜலிங்கம் அவளைக் கல்யாணம் பண்ணி வாழ்க்கை கொடுத்திருக்கிறாரு. இதெல்லாம் தெரிஞ்சதற்கு அப்புறம் என்னால எப்படி அந்தப் பொண்ணை மருமகளாக ஏத்துக்க முடியும்? என்னதான் அவளுக்கு பெயருக்கு சொல்லிக்க அப்பான்னு ஒருத்தன் இருந்தாலும் அது அவ சொந்த அப்பா இல்லையே, ஊர், பேர் தெரியாத யாருக்கோ பிறந்த ஒருத்தியை நான் என் வீட்டுக்கு வர்ற ஒரு நாளும் அனுமதிக்க மாட்டேன்.
அந்த விஷயம் எனக்குத் தெரிந்த நாளிலிருந்து அவங்க யார் கூடவும் நான் பேசவே விரும்பல, நீ தான் விடாமல் அவங்க பின்னாடியே சுற்றி சுற்றி வந்த, அதுதான் அவங்க எல்லோரையும் உன்னோட வாழ்க்கையை விட்டு தூரமாக்கணும்ன்னு நினைத்தேன், அவங்களோட அந்த கெட்ட நிழல் உன் மேல் படக்கூடாதுன்னு நினைத்தேன், நாளைக்கு அவ அப்பா பேரு தெரியாத பொண்ணுங்குற விஷயம் ஊரெல்லாம் தெரிந்தால் அது நமக்கு எவ்வளவு அவமானம் தெரியுமா? அதுதான் அவங்க எல்லோரையும் உன்னை விட்டு ரொம்ப தூரம் அனுப்ப முடிவெடுத்தேன், ஆனா என் கெட்ட நேரம் அந்த பொண்ணு மாத்திரம் தப்பிச்சு இப்படி நம்ம எல்லோரையும் கொடுமைப்படுத்துறா. ஆனாலும் நீ கவலைப்படாதே கிருஷ்ணா, அந்த பொண்ணை நான் உன் கிட்ட வர விடவே மாட்டேன், அவளோட கெட்ட புத்திதான் அவளை இப்படி எல்லாம் செய்ய வைக்கிறது, கூடிய சீக்கிரம் அவ கிட்ட இருந்து உனக்கு விடுதலை கிடைச்சுடும், நீ கவலைப்படாதே. இந்த உண்மையை ஆரம்பித்தில் சொல்லாமல் விட்டது என் தப்புதான், ஆனா இப்போ நீ புரிஞ்சுட்டிருப்ப, இல்லையா கிருஷ்ணா?” என்றவாறே கிருஷ்ணாவின் முகத்தை தன் புறமாக திருப்பப் பார்க்க, அவனோ கோபத்துடன் அவரது கையை தட்டி விட்டான்.

“கிருஷ்ணா, அதுதான் நடந்த எல்லா விடயத்தையும் நான் உன் கிட்ட சொல்லிட்டேனே ப்பா, இன்னமும் என் மேலே என்ன கோபம்? நான் பண்ணது தப்புன்னுதான் இன்னமும் நீ நினைச்சுட்டு இருக்கியா?”

“ஆமாம்மா, தப்புதான். உங்க மனதில் அது தப்புன்னு தெரிந்ததால் தானே இத்தனை நாளாக நீங்க என் கிட்ட இதைப் பற்றி எதுவுமே சொல்லாமல் இருந்திருக்கீங்க, நீங்க பண்ணது சரின்னு உங்களுக்கு தெரிந்திருந்தால் என் கிட்ட நீங்க அதை மறைத்திருக்க அவசியமே இல்லையே”

“கிருஷ்ணா!”

“போதும்மா, இதற்கு மேலும் ஒரு வார்த்தை நீங்க அனுராதாவைப் பற்றி தப்பாக பேசக்கூடாது. அவளோட வாழ்க்கையில் எப்போதோ நடந்த ஒரு விடயத்திற்காக அவளை உயிராகப் பார்த்து, வளர்த்த அவளோட அம்மா, அப்பாவைக் கொன்னுட்டீங்களேம்மா. யாரோ ஒருத்தன் பண்ண தப்புக்காக அவளை ஏன்ம்மா நீங்க தண்டிச்சீங்க? ஒரு பொண்ணோட நிலைமையை ஒரு பொண்ணாக இருந்து நீங்களே புரிஞ்சுக்க முயற்சி பண்ணலேன்னு நினைக்கும் போது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கும்மா. அனுராதாவோட அம்மா இந்த விடயத்தை அனுராதாகிட்ட கூட இதுவரைக்கும் சொன்னது இல்லை போல, அப்படி சொல்லியிருந்தால் ராதா என்கிட்ட இதை சொல்லாமல் விட்டிருக்க மாட்டா, ஆனா அவங்க இந்த விடயத்தை உங்களை நம்பி சொல்லியிருக்காங்க, ஏன் தெரியுமா? அவங்க உங்களை அந்தளவிற்கு நம்பியிருக்காங்கம்மா, அந்த நம்பிக்கையை போய் இப்படி கலங்கப்படுத்திட்டீங்களே ம்மா.
ஒரு பொண்ணு கைக்குழந்தையோடு தனியாக இந்த சமூகத்தில் எவ்வளவு பிரச்சினைகளை சந்திச்சு இந்த ஒரு நல்ல நிலைமைக்கு வந்திருப்பாங்கன்னு யோசிக்காமல் இப்படி எல்லாம் பண்ண உங்களுக்கு எப்படி தோணுதும்மா? யாரு தப்பு பண்ணாலும் பழியை பொண்ணுங்கதான் சுமக்கணும் என்கிற ஒரு தப்பான எண்ணம் உங்க மனதிற்குள்ளேயும் இருக்குன்னு நினைக்கும் போது எனக்கு ரொம்ப அதிர்ச்சியாக இருக்கும்மா, சின்ன வயதிலிருந்தே நல்லது எது, கெட்டது எதுன்னு ஒரு தடவைக்கு பல தடவை எங்களை யோசிக்க சொல்லுவீங்க, ஆனா நீங்க அனுராதா விடயத்தில் ஒரு தடவை கூட யோசிக்கல போல இருக்கேம்மா. இதே நம்ம வீட்டு பொண்ணுக்கு தேவி ஆன்ட்டியோட நிலைமை வந்திருந்தால் அப்போதும் இப்படித்தான் நீங்க நடந்திருப்பீங்களாம்மா?”

“கிருஷ்ணா! வார்த்தையைப் பார்த்து பேசு. நம்ம வீட்டுப் பொண்ணு அப்படி எல்லாம் பண்ண மாட்டா” வள்ளி சிறு அதட்டலுடன் கிருஷ்ணாவைப் பார்த்து எச்சரிப்பது போல கூறவும்,

சிறு புன்னகையுடன் அவரைப் பார்த்துக் கொண்டு நின்றவன், “உங்களுக்கு எல்லாம் ஒரு பிரச்சினை நம்ம வீட்டில் நடக்காத வரை வெறும் செய்திதான், ஆனா அதே விடயம் நம்ம வீட்டில் நடந்தால் அதோட தார்ப்பரியம் புரியும். நீங்க அனுராதாவை என் கிட்ட இருந்து பிரிக்க சொன்ன காரணம் இருக்கே, இதை நீங்க ஆரம்பத்தில் என் கிட்ட சொல்லியிருந்தாலும் சரி, இப்போ சொன்ன பிறகும் சரி என் முடிவு ஒன்றுதான். அனுராதாதான் என்னோட மனைவி, அவளை எந்தக் காரணத்தைக் கொண்டும் நான் பிரியவேமாட்டேன். ஆனாலும் நீங்க பண்ண தப்புக்கு தண்டனை கிடைக்கத் தானே வேணும்?” கேள்வியாக தன் பெற்றோரைப் பார்த்துக்கொண்டே அந்த அறையில் இருந்து வெளியேறி செல்ல, வள்ளி மற்றும் மூர்த்தி சிறு பதட்டத்துடன் அவனைப் பின் தொடர்ந்து சென்றனர்.

தனது பெற்றோர் தன் பின்னால் வருவதைக் கூடப் பொருட்படுத்தாமல் தனது அறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்ட கிருஷ்ணா சிறிது நேரம் கழித்து தனது முக்கியமான சில உடைமைகளுடன் வெளியே வந்து தன் பெற்றோரின் முன்னால் சென்று நின்று கொண்டான்.

“என்ன பார்க்குறீங்க? நான், அனுராதா கூட வாழக்கூடாதுன்னு தானே இவ்வளவும் பண்ணீங்க. நீங்க பண்ண தப்புக்கு சட்டத்திற்கு கிட்ட இருந்து வேணும்னா நீங்க தப்பியிருக்கலாம், ஆனா என் கிட்ட இருந்து உங்களுக்கு அவ்வளவு சீக்கிரத்தில் மன்னிப்பு கிடைக்காது. அதற்கு ஆரம்பம் இதுதான், இப்போ இந்த வீட்டை விட்டு மட்டுமில்ல, உங்க இரண்டு பேரையும் விட்டுப் பிரிந்து போறேன். அப்போதான் பாசமாக வளர்த்த ஒருத்தங்க நம்மை விட்டுப் பிரிந்து போற வலி எப்படி இருக்கும்ன்னு உங்களுக்குப் புரியும்” என்று விட்டு கிருஷ்ணா தன் பொருட்களை எல்லாம் எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிச் சென்று விட, வள்ளி மற்றும் மூர்த்தி அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றனர்……

Leave a Reply

error: Content is protected !!