அனல் பார்வை 12🔥

அனல் பார்வை 12🔥

“ஆகு, அந்த அருவி பொண்ணு இருக்குல்ல… அவளோட அம்மா தான் மோகனான்னு என்னால நம்பவே முடியல. அவங்க ரொம்ப பெரிய பிஸ்னஸ் வுமன் டா. அவங்களோட மகளா இருந்துக்கிட்டு அவ இப்படி நடந்துக்குறது எனக்கே சரியா தோணல. அது அவங்களுக்கு தானே ரொம்ப அவமானமா இருக்கும். ஆனாலும், அந்த ராங்கிக்கு ரொம்ப தான் திமிரு! அம்மான்னு சொன்னதுக்கு உன்னையே திட்டுறா. இனிமேலாச்சும் அவ கூட பேசுறதை நிறுத்து!”

என்று தன்னை சற்றும் கண்டுக்கொள்ளாத தன் நண்பனிடம் தொடர்ந்து புலம்பியவாறு ராகவ் மதிய உணவை தயாரிக்க, சரியாக அவனுடைய அலைப்பேசி அலறியது.

அதிலிருந்த எண்ணை புருவத்தை நெறித்து பார்த்தவன், அழைப்பை ஏற்று காதில் வைத்ததும் தான் தாமதம், “ஏய் சாகு! உன் பேரு சாகு தானே? ஃபோன மஹிக்கிட்ட கொடு!” என்று மறுமுனையில் ஒலித்த அருவியின் குரலில் உச்சக்கட்ட கடுப்பாகிவிட்டான் ராகவ்.

“ராகவ்… என்னோட பேரு ராகவ்…” என்று பல்லைக்கடித்துக் கொண்டு அவன் சொல்ல, “ஏதோ ஒரு இழவு! மொதல்ல அவன்கிட்ட ஃபோன கொடு டா!” என்று எரிச்சலாக ஒலித்தது அருவியின் குரல்.

“வயசுல மூத்தவன்னு கொஞ்சமாச்சும் மரியாதை இருக்கா? இதுக்கு தான் நம்ம ஊரு பொண்ணுங்க வேணுங்குறது!” என்று பொறுமியவாறு அக்னியின் தோளை அவன் தட்ட, தீவிரமாக தொலைக்காட்சி சீரியல் பார்த்துக் கொண்டிருந்த அக்னி அவனுடைய கையை உதறிவிட்டு, “ராகு, தொல்லை பண்ணாத என்னை…” என்று சலித்துக்கொள்ள, அவனோ கொதித்து விட்டான்.

“ஏம்மா! அவனுக்கு உன்கூட பேச பிடிக்கல. இனிமேல் என் ஃப்ரென்ட் அ கூப்பிடுற வேலை எல்லாம் வச்சிக்காத!” என்று ராகவ் பேசிக்கொண்டே போக, பதறியபடி அவனிடமிருந்து தொலைப்பேசியை பிடுங்கிய அக்னி, “தீ… தீ நீயா?” என்று ஒருவித பரவசமாக கேட்டான்.

மறுமுனையிலிருந்த அருவியோ, “வெளில தான் வெயிட் பண்றேன். சீக்கிரம் வா!” என்றுவிட்டு அழைப்பை துண்டிக்க, நெளிந்துக்கொண்டு அலைப்பேசியை ராகவ்விடம் நீட்டியவன், “தீ வெளில எனக்காக காத்திருக்கா. நான் அவ கூட வெளில போயிட்டு வர்றேன்.” என்றுவிட்டு வாசலை நோக்கி ஓட எத்தனித்து, சற்று திரும்பி சுவரில் மாட்டியிருந்த முகம் பார்க்கும் கண்ணாடியை பார்த்தான்.

தன் அடர்ந்த கேசத்தை கலைத்து கோதிக்கொண்டவன், வாசல்கதவை திறந்துக் கொண்டு வேகமாக ஓட, ‘அடப்பாவி!’ என்று கண்களை அகல விரித்து இரு கைகளாலும் வாயை பொத்திக் கொண்டான் ராகவ்.

வீட்டிலிருந்து வெளியே வந்தவன், அங்கு தலைக்கவசத்துடன் பைக்கில் அமர்ந்திருந்த அருவியை பார்த்து அவளை வேகமாக நெருங்க, தன்னை நோக்கி புன்னகை முகமாக வந்துக்கொண்டிருந்தவனை கண்டவள் அவனிடம் ஒரு தலைக்கவசத்தை நீட்டியவாறு, “இதை போட்டுட்டு வண்டியில ஏறு! நாம ஒரு முக்கியமான இடத்துக்கு போக போறோம்.” என்றவாறு வண்டியை உயிர்ப்பித்தாள்.

‘எங்கே?’ என்று கூட கேட்காமல் அவள் சொன்னதை அப்படியே செய்தவனின் இதழில் மட்டும் அந்த புன்னகை உறைந்தே விட்டது போலும்! அவன் ஒன்றும் பெண்களுடன் பழகாதவன் இல்லை. ஆனால், அருவியின் அருகாமை அவனை வெகுவாய் ஈர்த்தது என்னவோ உண்மை தான்!

ஆனால், அவனின் உணர்வுகளை உணரும் நிலையில் தற்போது அருவி இல்லை. தனக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பை நினைத்து ஒருவித பதட்டத்தில் இருந்தவள், அடுத்த பத்துநிமிடத்தில் ஒரு கட்டிடத்தின் முன் வண்டியை நிறுத்தினாள்.

அக்னியோ அந்த இடத்தை சுற்றி முற்றி புரியாது பார்த்தவாறு இறங்க, தன் தலைக்கவசத்தை அவனிடம் நீட்டியவள், “ஒரு ஸ்பானிஷ் மூவீல ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ஆ நடிக்க எனக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு. அந்த ஆடிஷன்க்காக தான் வந்திருக்கேன். என் ஃப்ரென்ட் இங்க தான் வர்க் பண்றான். அவன் தான் எனக்காக பேசி இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்திருக்கான்.இந்த வாய்ப்பு சரியா அமைஞ்சாலே போதும். அந்த மோகனாவோட முகத்துல கரிய பூசிரலாம். என்னை விஷ் பண்ணு மஹி…”

என்று கேட்டவாறு அவனை தாவி அணைத்து, “இங்கேயே வெயிட் பண்ணு!” என்றுவிட்டு அந்த கட்டிடத்திற்குள் நுழைந்துக் கொண்டாள்.

அவள் தன்னை அணைத்ததில் அதிர்ந்தவனுக்கு, அவள் பேசியது எல்லாம் காற்றில் கரைந்த கற்பூரம் தான். அவளின் ஸ்பரிசம் கொடுத்த இதத்தில் மௌனமாக பைக்கில் சாய்ந்து நின்றவனுக்கு அடுத்த ஒருமணி நேரம் எப்படி கழிந்தது என்றே தெரியவில்லை.

சட்டென கேட்ட கத்தலில் நிமிர்ந்த அக்னி, அங்கு கட்டிடத்திலிருந்து கோபமாக கத்திக்கொண்டே வெளியே வந்த அருவியை புரியாமல் பார்த்தான்.

“டேய், இனிமே அந்த மோகனா பெயர என் முன்னாடி சொன்னீங்க… தொலைச்சிருவேன்!” என்று ஸ்பானியன் மொழியில் கத்திக் கொண்டிருந்தவளின் அருகில் ஓடியவன், “என்னாச்சு தீ?” என்று பதட்டமாக கேட்டான்.

எதுவும் பேசாது தன் வண்டியை நோக்கிச் சென்றவள் வண்டியை உயிர்ப்பித்து மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க தரையை வெறித்துக்கொண்டு  அமர்ந்திருக்க,  அவளின் காத்திருப்பு புரிந்து ஓடிச்சென்று அவள் பின்னால் அமர்ந்துக் கொண்டான் அக்னி.

தன் கோபம் மொத்தத்தையும் அவள் வண்டியின் வேகத்தில் காட்ட, அவனே ஒருநிமிடம் பதறிவிட்டான். அந்த பட்ட பகலில் வண்டியை பாருக்கு முன் நிறுத்தியவள் விறுவிறுவென உள்ளே நுழைய, ‘அய்யய்யோ! இங்கேயா?’ என்று உள்ளுக்குள் அலறியவாறு அவள் பின்னாலே ஓடினான் அவன்.

எப்போதும் போல் தான் அமரும் இருக்கையில் அமர்ந்தவள், அந்த ஸ்பானியன் பேரரை ஒரு பார்வை பார்க்க, அவள் பகலில் திடுதிப்பென வந்ததில் அதிர்ந்தாலும் தன் வேலையை செவ்வென செய்தான் அவன். ஒரே மூச்சில் மதுக்குவளையை வாயில் சரித்தவளின் கண்கள் கோபத்தில் சிவந்து போயிருந்தன.

அருவிக்கு எதிரில் நின்றவாறு அதிர்ச்சி கலந்த குழப்பத்துடன் அக்னி அவளை பார்த்துக்கொண்டிருக்க, “டேய்! அவ யாரு டா எனக்கு? நான் கேட்டேனா?  எனக்கு வாய்ப்பு கொடுன்னு நான் கேட்டேனா?  இப்போ வரைக்கும் சாப்பிட்டியான்னு ஒரு வார்த்தை கேட்டிருப்பாளா? அப்போ எதுக்கு இதெல்லாம்?” என்று எப்போதும் போல் போதையில் கத்த ஆரம்பித்துவிட்டாள் அவள்.

அந்த ஸ்பானியன் பேரர் வழக்கம் போல் அவள் புலம்பலை மொழி தெரியாது புரியாமல் பார்க்க, அக்னியோ நடந்தது தெரியாது அவளை புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

“எங்க என் ஃபோன்? எங்க என் ஃபோன்?” என்று தள்ளாடியபடி தன் பேன்ட் பாக்கெட்டில் தொலைப்பேசியை தேடி எடுத்தவள், மங்கலாக தெரிந்த திரையை கஷ்டப்பட்டு கண்களை கசக்கி பார்த்தவாறு ஒரு எண்ணிற்கு அழைப்பை எடுத்தாள்.

மறுமுனையில் அழைப்பை ஏற்றதும் தான் தாமதம், “டேய் வெள்ளை சாத்தான்! எவ்வளவு தைரியம் இருந்தா அந்த மோகனா பேச்சை கேட்டு ஏதோ நீயா எனக்கு வாய்ப்பை கொடுக்குற மாதிரி சீன் போட்டிருப்ப… உன்னையெல்லாம்…” என்று ஆரம்பித்து ஆங்கிலம், தமிழ், ஸ்பானிஷ் என்று மூன்று மொழிகளாலும் மாற்றி மாற்றி தன் அம்மாவின் பேச்சை கேட்டு தன்னை ஏமாற்றிய அந்த நண்பனை கெட்ட வார்த்தைகளால் திட்ட ஆரம்பிக்க, அந்த பேரரோ காதுகளை இரு கைகளாலும் மூடிக்கொண்டான்.

அவளின் கத்தலில் அருகிலிருந்தவர்கள் கூட அஷ்டகோணலாக முகத்தை வைத்து அவளை பார்க்க, அக்னி தான் அவளின் அரைகுறை ஸ்பானியன் மொழியில் திட்டும் கெட்ட வார்த்தைகளால் அதிர்ந்து கண்களை அகல விரித்துக் கொண்டான்.

கோபம் தீரும் அளவிற்கு திட்டி முடித்து, மூச்சு வாங்கியவாறு அக்னியை நிமிர்ந்து பார்த்தவள், “மஹி…” என்று உதட்டை பிதுக்கியவாறு ஒரு அடி எடுத்து வைத்து அப்படியே போதையின் பிடியில் தரையில் கவிழ்ந்து விட்டாள்.

“அச்சோ! தீ…” என்று பதறியவாறு அக்னி அவளை எழுப்ப, இருபக்கமும் சலிப்பாக தலையாட்டிய அந்த பேரர் எப்போதும் போல் தாரக்கிற்கு அழைத்து விடயத்தை சொன்னான். “தீ… தீ எழுந்திரு. இதுல இந்த மது வாடை வேற… அய்ய… ராகுக்கு மட்டும் தெரிஞ்சது என்னை தொலைச்சிருவான்!” என்று வாய்விட்டே புலம்பியவாறு அக்னி இருக்க, அடுத்த பத்து நிமிடத்தில் பதறியபடி உள்ளே வந்தான் தாரக்.

தன் தமக்கையை எழுப்ப முயற்சித்தவாறு புலம்பிக்கொண்டிருந்த அக்னியை சந்தேகமாக பார்த்தவன், அருவியை நெருங்கி அவளை தூக்க போக, தாரக் அருவியை நெருங்கியதில் திடுக்கிட்ட அக்னி, அவன் கையை தட்டிவிட்டு ஒற்றை கையால் அவன் கழுத்துவளைவை பிடித்துக் கொண்டான்.

“டேய்! யாருடா நீ? என்னை விடு!” என்று  பேச முடியாது திக்கித்திணறி தாரக் பேச, சற்று கண்விழித்தவள் இரண்டு இரண்டாக தெரிந்த தாரக்கின் உருவத்தை பார்த்து, “தம்பிப்பயலே! உன் பெரியம்மாவ நான் சும்மா விட மாட்டேன் டா. ஏன்டா என்னை டோர்ச்சர் பண்றா?” என்று புலம்பியவாறு மீண்டும் கண்ணை மூடிக்கொள்ள, அப்போது தான் ஏதோ புரிந்து அவனின் கழுத்திலிருந்து கையை எடுத்தான் அக்னி.

இருமியவாறு கழுத்தை நீவி விட்டுக்கொண்ட தாரக், “ப்ரோ, நீங்க தான் இவ சொன்ன மஹியா? என்ன ஒரு பிடி? உடும்புப் பிடியால இருக்கு.” என்றுவிட்டு அருவியை தன் தோளில் சாய்த்து காரை நோக்கி அழைத்துச் செல்ல, மூச்சை இழுத்துவிட்டு தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்ட அக்னி தாரக்கின் பின்னாலே அமைதியாக சென்றான்.

காரின் பின்சீட்டில் அவளை சரியாக படுக்க வைத்தவன், தன் தமக்கையையே இமைக்காது பார்த்திருந்த அக்னியை பார்த்து, “ஹாய் ப்ரோ, என் பேரு தாரக். அருவோட தம்பி தான். உங்களுக்கு தமிழ் நல்லாவே தெரியும்னு அரு சொன்னா.” என்றவாறு தன்னை அறிமுகப்படுத்தினான். அவனை அலட்சியமாக ஒரு பார்வை பார்த்த அக்னி, அவனை சற்று தள்ளி நிறுத்திவிட்டு, அருவியின் அருகில் அமர்ந்துக்கொண்டான்.

தன்னவளை நெருங்கி அவள் நெற்றியில் அழுந்த முத்தத்தை பதித்துவிட்டு அவன் விலக, அக்னியின் செயலில் தாரக் தான், ‘என்னடா நடக்குது இங்க?’ என்ற ரீதியில் விழிவிரித்து அந்த காட்சியை பார்த்தான். காரிலிருந்து இறங்கிய அக்னி தாரக்கை பார்த்து மென்மையாக புன்னகைத்துவிட்டு அங்கிருந்து தன் வீட்டை நோக்கி நடந்துச் செல்ல,

‘யார்ரா இவன்?’ என்று நினைத்தவாறு அவன் முதுகை வெறித்த தாரக் அப்போது தான் அக்னியின் பின்கழுத்தில் தெரிந்த டாட்டூவை கவனித்தான். பார்த்ததும் அவன் கண்கள் அதிர்ச்சியில் விரிய, இதழ்களோ ‘எல் டேரேடோ’ என்று முணுமுணுத்தது.

இரண்டு நாட்கள் கழித்து,

தொலைக்காட்சியில் அந்த தமிழ் சீரியல் தானாக ஓடிக் கொண்டிருக்க, அருவியின் நினைவில் யோசனையுடன் சோஃபாவில் சாய்ந்திருந்தான் அக்னி. தன் நண்பனின் சிந்தனை எங்கேயோ மிதப்பதை கவனித்த ராகவ், எதுவும் கேட்காது அலைப்பேசியை நோண்டியவாறு ஓரக்கண்ணால் அவனை தான் நோட்டமிட்டுக் கொண்டிருந்தான்.

சட்டென ஒரு அழைப்பு வர, திரையை பார்த்த ராகவ் சலிப்பாக தலையாட்டிவிட்டு அக்னிக்கு நேராக அலைப்பேசியை நீட்ட, தனக்கு அழைக்கும் ஒரே ஜீவன் யாரென்று புரிந்துக் கொண்டவன் போல் டீபாயை பாய்ந்து தாண்டி அலைப்பேசியை பிடுங்காத குறையாக வாங்கினான் அக்னி.

“தீ, எப்படி இருக்க? ஏன் என்னை பார்க்க வரல?” என்று அவன் பாட்டிற்கு தன் ஏக்கங்களை கேள்விகளாக அடுக்கிக்கொண்டு போக, மறுமுனையில் சொன்ன விடயத்தில் அலைப்பேசியை தூக்கி தூர வீசியவன், வீட்டு வாசற்கதவை உடைக்காத குறையாக திறந்துக்கொண்டு வெளியே ஓடினான்.

இதில் ராகவ் தான் ஓடும் தன் நண்பனை பார்த்து, ‘டேய் சைக்கோ! அங்க சுத்தி இங்க சுத்தி வீட்டுக்கு தானே வருவ… அப்போ கவனிச்சிக்கிறேன் உன்னை!’ என்று காட்டு கத்து கத்தினான்.

தன் வீட்டிற்கு பக்கத்திலிருக்கும் பூங்காவிற்கு சென்ற அக்னி, இடுப்பில் கைகுற்றி மூச்சு வாங்கியவாறு அங்குமிங்கும் கண்களை சுழலவிட்டு தேட, அவனின் பார்வை வட்டத்தில் சிக்கினாள் அவள். ஒரு பெரிய மரத்தை ஒட்டி போடப்பட்டுள்ள பென்ச்சில் கண்களை மூடி தலையை பின்னால் சாய்த்து அமர்ந்திருந்தவள் ஏதோ ஊசி துளைக்கும் பார்வையில் பட்டென கண்களை திறந்து பார்த்தாள்.

அவளின் பக்கத்திலே அமர்ந்தவாறு அக்னி தன்னவளையே இமைக்காது பார்த்திருக்க, அவனை ஒருவித தயக்கத்துடன் ஏறிட்டவள், “அன்னைக்கு… நான்… ஐ அம் சோரி…” என்று அன்று தான் நடந்துக்கொண்டதை நினைத்து தடுமாற, அவனுக்கோ அவளின் திணறல் ஆச்சரியம் தான்!

இதழ் பிரித்து மென்மையாக சிரித்தவன், “உனக்கு என்ன பிரச்சினைன்னு எனக்கு தெரியல. ஆனா, உனக்கும் உன் அம்மாவுக்கும்…” என்று ஏதோ சொல்ல வந்து அன்று அவள் திட்டியதை நினைத்து நிறுத்தி, “உன்னை பெத்தவங்களுக்கும் ஏதோ தவறான புரிதல் இருக்குன்னு புரியுது. உன் மன ஆதங்கத்தை குறைக்க இந்த போதை உனக்கு தேவையா இருக்கு. நான் உன்னை தப்பா நினைக்கல தீ.” என்று சொல்ல, அவன் பேசிய விதத்தில் அருவிக்கு அப்போது தான் மனதிலிருந்த பாரம் குறைந்தது.

ஏனோ அக்னியுடனான நட்பிற்கு பிறகு அவள் மதுவை நாடுவது என்னவோ குறைவு தான். அதுவும் சில நாட்களாக அவளுக்கு போதையின் நினைப்பே வரவில்லை. நேற்று உண்டான கோபத்தை அடக்கவே மதுவை நாடிவிட்டாள்.

எவரையும் கண்டுக்காது தனக்கு தோன்றியதை செய்யும் அருவி, முதல் தடவை ‘தான் நடந்துக்கொண்ட விதத்தில் அக்னி தன்னை வெறுத்துருவானோ?’ என்று பயந்ததே இத்தனை தயக்கத்திற்கு காரணம்.

அவனின் பேச்சில் நிம்மதியாக உணர்ந்தவள், “நீ அதிகமா பேசுறது கிடையாது. பட், பேசுற ஒருசில வார்த்தையை அத்தனை அர்த்தத்தோட பேசுற.” என்று சிரிப்புடன் சொல்லி, “அன்னைக்கு நான் ஏன் அப்படி கோபப்பட்டேன்னு நீ கேக்க மாட்டியா?” என்று ஒருவித ஏக்கத்துடன் கேட்டாள்.

‘அவள் தன்னிடம் ஏதோ ஒரு உரிமையை எதிர்ப்பார்க்கிறாள்’ என்று உணர்ந்துக்கொண்ட அக்னியும் மெல்லிய சிரிப்புடன், “சொல்லு தீ…” என்று கேட்டான்.

“எனக்கு சினிமால நடிக்கனும்னு ரொம்ப பெரிய கனவு. வாய்ப்பும் கிடைக்குது. ஆனா, அது என்னோட திறமைக்கு கிடைச்சது கிடையாது. என்னை பெத்தவங்களோட பணத்தால கிடைச்சது. அன்னைக்கு கூட அவங்க நேரடியா சொன்னா ஏத்துக்க மாட்டேன்னு என் ஃப்ரென்ட் மூலமா சொல்லி என்னை போக வச்சாங்க.

ஆடிஷன்க்கு நான் மட்டும் தான் போயிருந்தேன். அப்போவே எனக்கு சந்தேகமா இருந்துச்சி. ஆடிஷன் முடிஞ்சதும் ப்ரொடியூசர் என் அம்மாவ பத்தி பேசினதும் தான் எனக்கு எல்லாமே புரிஞ்சது. ச்சே… அதான் நல்லா திட்டிட்டு வந்துட்டேன். எனக்கான வாய்ப்பு என் திறமைக்கு கிடைச்சாலே போதும்.” என்று தீர்க்கமாக சொன்னாள் அருவி.

அவளை ஆழ்ந்து நோக்கிய அக்னி, “அம்மா தான் நமக்கு எல்லாமே… நமக்கு பிடிச்ச முதல் மூனு பேரு யாருன்னு கேட்டா அந்த மூனு இடத்தையும் நம்ம அம்மா தான் பிடிச்சிருப்பாங்க. அப்றம் தான் அப்பாவா இருக்கும். அம்மாவோட பாசத்துக்கு ஈடா எதுவும் இல்லை. ஆனா நீ…” என்று தயக்கமாக நிறுத்த, விரக்தியாக சிரித்தாள் அவள்.

“என் அப்பா அமெரிக்கன். அம்மா தமிழ்நாடு. கிராமத்துல பிறந்து வளர்ந்தவங்க. அப்பா அவரோட தமிழ்நாட்டுல இருக்குற தாத்தா பாட்டிய பார்க்க போனப்போ தான் அம்மாவ பார்த்திருக்காரு. பார்த்ததும் ரொம்ப பிடிச்சி போச்சு. உடனே அம்மாவ கல்யாணம் பண்ணி அமெரிக்காவுக்கு கூட்டிட்டு வந்துட்டாரு.

யூ க்னோ வட்? அம்மாவோட டிஸைனிங் திறமைய பார்த்து அப்பா அம்மாவுக்காக உருவாக்கிக் கொடுத்த கம்பனி தான் இப்போ இவ்வளவு உயரத்துல இருக்கு. ரொம்ப நல்லவரு. ஆனா, நான் பிறக்குறதுக்கு ஒரு மாசத்துக்கு முன்னாடி வேலை விஷயமா போனவரு அதுக்கப்றம் வரவே இல்லை. நான் பிறந்த அன்னைக்கு அவர் இறந்ததா தகவல் மட்டும் வந்திச்சி.

அம்மா மொத்தமா உடைஞ்சி போயிட்டாங்க. அப்போ அம்மாவுக்கு துணையா இருந்தது என் மஹிமா தான். என்னை வளர்த்த அம்மா. என் அம்மா என்னை அவங்க பக்கத்துல கொண்டு போன கூட பிரம்மை பிடிச்ச மாதிரி இருந்திருக்காங்க. புருஷன் இறந்த சோகத்துல இருக்காங்க போக போக சரியாகிரும்னு மஹிமாவும் நினைச்சிக்கிட்டாங்க. ஆனா, அவங்க என் பக்கத்துல கூட வரல.

அதுக்கப்றம் என்னை அவங்க பக்கத்துல கொண்டு போனாலே ரொம்ப கத்த ஆரம்பிச்சிருக்காங்க. கிராமத்துல வளர்ந்ததாலோ, என்னவோ? அப்பா இறந்ததுக்கு நான் தான் காரணம் என்கிற மூடநம்பிக்கை ஆழமா பதிஞ்சி போச்சு அவங்களுக்குள்ள!

ஆரம்பத்துல அம்மாவோட ஒதுக்கம் ஏன்னு புரியல. ஆனா, எனக்கு ஒன்பது வயசா இருக்கும் போது…” என்று நிறுத்தியவளுக்கு தன் ஆழ்மனதில் பதிந்து போன அந்த சம்பவம் தான் நியாபகத்துக்கு வந்தது.

மோகனாவின் அலுவலக அறையில் தன் அம்மாவுக்கு தெரியாது தன் ஏழு வயது தம்பி தாரக்குடன் விளையாடிக் கொண்டிருந்த ஒன்பது வயது அருவிக்கு மோகனா வரைந்திருந்த ஆடை வடிவமைப்புக்களை பார்த்து தனக்கும் வரைய  ஆசை மேலிட்டது.

அதை எடுத்தவள் அங்கு தரையிலேயே அமர்ந்து அதன் மேல் கிறுக்கி விளையாட, தாரக்கோ காகிதங்களை கிழித்து போட்டு அந்த அறையையே அலங்கோலமாக்கி விட்டான். சிறுபிள்ளையான அருவியும் அதை கவனிக்காது தன் விளையாட்டிலே குறியாக இருந்தாள். தான் செய்வது சரியா? தவறா? என்று உணரும் வயது கூட அவளுக்கில்லை.

வரைந்துக்கொண்டிருந்தவள் அடுத்த சில நொடிகளில் தன் முதுகில் விழுந்த அடியில் அலறியே விட்டாள். தான் கிறுக்கி வைத்திருந்த காகிதங்களின் மேல் விழுந்தவள், “ம்மீ…” என்று அழுதவாறு திரும்பி பார்க்க, மோகனா தான் எரிக்கும் பார்வைக் கொண்டு பார்த்தவாறு நின்றிருந்தார்.

“ம்மீ… வலிக்குது ம்மீ…” என்று அவள் கஷ்டப்பட்டு எழுந்து மோகனாவுக்கு அருகில் கையை நீட்டியவாறு செல்ல, “ச்சீ… என் பக்கத்துல வராத! பெத்த அப்பாவை கொன்னுட்டு பிறந்தவ தானே நீ…” என்ற நாக்கில் நரம்பே இல்லாமல் பேசி அந்த குழந்தையின் கன்னத்தில் அவர் அறைய,

அந்த வார்த்தைகள் மனதில் ஆழமாக பதிய, அடி பலமாக கன்னத்தில் விழுந்ததில் மயங்கியே இருந்தாள் அருவி.

அன்று நடந்ததை சொல்லி முடித்தவள், “சத்தம் கேட்டு மஹிமா தான் வந்து என்னை அம்மாக்கிட்டயிருந்து காப்பாத்தினாங்க. அதுக்கப்றம் நான் அவங்க முன்னாடி கூட போக மாட்டேன். அவங்களும் என்னை கண்டுக்க மாட்டாங்க.

அப்பா இல்லை. அம்மா இருந்தும் இல்லாத மாதிரி தான். சந்தோஷத்தை, கவலைய ஷெயார் பண்ண சுயநலமில்லாத ஃப்ரென்ட்ஸ் இல்லை. எனக்காக எல்லாமுமா மஹிமா இருந்தாங்க. இப்போ, அவங்களும் உயிரோட இல்லை. எனக்கு நிஜமாவே உன் பெயர் கூட தெரியாது.

நான் ஏன் உன்னை மஹின்னு கூப்பிடுறேன்னு தெரியுமா? என் மஹிக்கு அப்றம் என்கிட்ட ‘சாப்பிட்டியா’ன்னு கேட்ட ஒரே ஆள் நீ தான். உன் பாசத்துல நான் அவங்கள பார்க்குறேன். அவங்க இறந்த போது எனக்குள்ள இருந்த இழப்பு இப்போ கிடையாது. ஏன்னா, நீ என் பக்கத்துல இருக்க மஹி…”

என்று அவன் கண்களுடன் கண்களை கலக்கவிட்டவாறு சொல்லிக் கொண்டிருந்தவளின் வலதுபக்க விழியிலிருந்து ஒரு சொட்டு கண்ணீர்துளி கன்னத்தினூடே உருண்டோட, அதை மறைக்க எண்ணி முகத்தை திருப்பிக் கொண்டாள் அவள்.

அவளின் ஒவ்வொரு வார்த்தைகளிலும் தன் வசம் இழந்தவன், தன்னவளை மேலும் நெருங்கி, அவள் தாடையை பிடித்து தன்னை நோக்கி திருப்பினான். அவள் விழிகளை ஊடுருவியவாறு, “உனக்காக நான் இருப்பேன் ஜானு…” என்று அக்னி சொல்ல, கண்களில் குறும்புடன் அவனை ஏறிட்ட அருவி, “ஜானுவா?” என்று கேட்டு வாய்விட்டு சிரித்தாள்.

அப்போது தான் அக்னிக்கும் தான் அவளை அழைத்த வார்த்தை நினைவுக்கு வந்தது. கூடவே அதை தான் கேட்டு தெரிந்துக்கொண்ட நாளும்…

தான் பார்த்துக் கொண்டிருந்த ஹிந்தி சீரியலில் கதாநாயகன் தன் காதலியை ‘ஜானு’ என்றழைப்பதை கூர்ந்து கவனித்த அக்னி தன் பக்கத்திலிருந்த ராகவ்விடம், “ராகு, ஜானுன்னா என்ன?” என்று கேட்க,

“அது நோர்த் இந்தியன் மொழி ஆகு. நமக்கு பிடிச்சவங்கள, நாம ரொம்ப நேசிக்கிறவங்கள ஜானுன்னு சொல்வோம்.” என்று ராகவ் என்றோ ஒருநாள் சொன்னதை வைத்து இன்று தன்னையும் மீறி தன்னவளை ‘ஜானு’ என்று அழைத்து விட்டான் அக்னி.

அன்று தன்னவன் தன்னை அழைத்த அந்த அழைப்பை நினைத்தவளது கண்களிலிருந்து கண்ணீர் ஆறாக ஓட, “ஏன்டா என்னை ஏமாத்தின? துரோகி…” என்று வாய்விட்டே கேட்டு கதறியழுதாள் தீ அருவி.

ஷேஹா ஸகி

Leave a Reply

error: Content is protected !!