அனல் பார்வை 17🔥
அனல் பார்வை 17🔥
எப்போதும் போல் அருவி தயாராகி தன்னவனை காண செல்வதற்காக அவசர அவசரமாக சாப்பிட்டுவிட்டு கிளம்ப எத்தனிக்க, “அரு…” என்ற மோகனாவின் குரலில் அப்படியே நின்றவள், தயக்கமாக அவரை பார்த்தாள்.
“உன்கிட்ட பேசலாமா?” என்று ஒருவித தயக்கத்துடனே கேட்க, அவளோ பதிலேதும் சொல்லாது அங்கிருந்து சோஃபாவில் சென்று அமர்ந்துக்கொள்ள, அவரும் அவளெதிரே அமர்ந்துக் கொண்டார்.
“அரு, அந்த பையன் யாரு?” என்று மோகனா கேட்க, அவர் யாரை கேட்கிறார் என்று உணர்ந்தவள், “ஃப்ரென்ட்.” என்று மட்டும் சொல்ல, “ஓஹோ! ஃப்ரென்டா? பட், அந்த பையன அன்னைக்கு பார்க்கும் போது எனக்கு அப்படி தோணல. உன் மேல ரொம்ப பாசம் அந்த பையனுக்கு…” என்று இதழின் ஓரத்தில் மெல்லிய புன்னகையுடன் அவர் செல்ல, அவளின் இதழ்கள் தானாக விரிந்தன.
“ஆமா, மஹிமாவுக்கு அப்றம் என்னை சாப்பிட்டியான்னு கேட்ட ஒரே ஜீவன் அவன் தான்.” என்று அவள் தன்னவனின் நினைவில் புன்னகையுடன் சொல்ல, ஒருபக்கம் அவளின் வார்த்தைகள் சந்தோஷத்தை கொடுத்தாலும் மறுபக்கம், ‘நான் தகுதியான அம்மா இல்லை’ என்ற நினைப்பே வேதனையை கொடுத்தது மோகனாவிற்கு…
தன்னை கட்டுப்படுத்தியவர், “ஆமா அரு, இங்க இருந்து நாம போறதுக்குள்ள அந்த பையன வீட்டுக்கு டின்னர்க்கு இன்வைட் பண்ணிடலாம்.” என்று சொல்ல, அருவியோ அதிர்ந்து போய் அவரை நிமிர்ந்துப் பார்த்தாள்.
“புரியல.” என்று அவள் அதிர்ச்சியாக சொல்ல, “ஆமா மா, நாம மறுபடியும் லோஸ் ஏன்ஜல்ஸ் கிளம்ப போறோம்.” என்று அவர் சொன்னதில் அதிர்ந்துவிட்டாள் அவள்.
“பிஸ்னஸ்ஸோட புது ப்ரான்ச் இங்க ஸ்டார்ட் பண்ணலாம்னு தான் வந்தேன். ஒரு வருஷத்துக்கு மேலாகிருச்சி. ரொம்ப நம்பிக்கையானவங்கள இங்க இருக்குற ப்ரான்ச் அ பார்த்துக்க அஸ்ஸைன் பண்ணிட்டேன். இனி அமெரிக்கா போறது மட்டும் தான்.” என்று மோகனா சொல்ல, “இல்லை.. அது.. நான்.. நான் இங்க ரொம்ப இன்டிமேட் ஆகிட்டான். என்னால வர முடியாது.” என்று தயக்கமாக இழுத்தாள் அருவி.
“எனக்கு புரியுது. ஆனா, இனி என்னால உன்னை தனியா விட முடியாது. இதுக்கு முன்னாடி நான் ஒரு நல்ல அம்மாவா இல்லாம இருக்கலாம். இதுக்கப்றம் முயற்சி செய்றேன் மா.” என்றுவிட்டு அவர் எழுந்து செல்ல, அருவிக்கு தான் தலை சுற்றவே ஆரம்பித்துவிட்டது.
‘எதற்காக இங்கே வந்தோம்?’ அந்த வேலையை நிறைவேற்றவில்லை. இதுவரை தன் அப்பா பற்றி ஒரு தகவல் கூட கண்டுபிடிக்க முடியவில்லை அவளால். இதையெல்லாம் நினைக்கும் போதே அவளுக்கு தலைவலிக்க ஆரம்பிக்க, அப்போது தான் அவளுக்கு ஒன்று உரைத்தது. அது தான் அவளின் மஹி.
‘அய்யோ மஹி! மஹிய விட்டு போகனுமா? என்னால முடியாது. சத்தியமா முடியாது. நான் போயிட்டா என்னால எப்படி அவன பார்க்க முடியும்? இல்லை… இல்லை… அய்யோ கடவுளே!’ என்று மானசீகமாக தலையை கைகளால் தாங்கிய வண்ணம் புலம்பியவளுக்கு அப்போது தான் தன் மனமே உரைத்தது.
அடுத்தநொடி முடிவு எடுத்தவளாக விறுவிறுவென வெளியேறியவள், நேரே சென்றது வேறு எங்குமில்லை. அவளின் மஹியின் வீட்டிற்கு தான். எப்போதும் போல் ‘படார்’ என்ற சத்தத்துடன் கதவை திறந்துக் கொண்டு உள்ளே சென்றவள், “மஹி… மஹி…” என்று கத்தி கத்தி அவளை தேட, அக்னி இருந்தால் தானே!
‘இது எப்போதும் நடப்பது தான்’ என்ற ரீதியில் இவள் வந்ததை கண்டும் காணாதது போல் ராகவ் அமர்ந்திருக்க, அவளை உறுத்து விழித்த அருவி, “டேய் சாகு! மஹி எங்க?” என்று காட்டமாக கேட்க, அவளோ நிமிர்ந்து அவளை கேள்வியாக பார்த்தவள், “மரியாதை… மரியாதை…” என்று அழுத்தமாக சொன்னான்.
ஒரு மூச்சை இழுத்து விட்டவள், “சாகுண்ணா, மஹி எங்க?” என்று கடுப்பாக கேட்க, “அவன் இல்லை.” என்று பட்டென்று சொன்னான் ராகவ். “இல்லையா? எங்க போனான்?” என்று அவளும் குழப்பமாக கேட்க, “அவன் செத்துட்டான்.” என்று சொன்னதும் அதிர்ந்தவள், “என்ன டா சொல்ற?” என்று அதிர்ந்து கேட்டாள்.
“ஆமா செத்துட்டான். நான் தான் அவனை கொன்னுட்டேன். உன் தொல்லை தாங்க முடியாம இப்போ தான் அவனுக்கு சமாதி கட்டிட்டு வந்து உட்கார்ந்திருக்கேன்.” என்று ராகவ் பேச, அடுத்தநொடி அவனை நெருங்கி அவனின் சட்டை கோலரை பிடித்து தூக்கியவள், “எவ்வளவு தைரியம் இருந்தா என் மஹிய நீ இப்படி சொல்லுவ?” என்று கத்த ஆரம்பிக்க, “ஜானு…” என்ற மஹியின் குரலில் ஆர்வமாக திரும்பினாள்.
அங்கு வாசலில் அக்னி நின்றிருக்க, வேகமாக அவனை நெருங்கிய அருவி அவனை தாவி அணைத்திருக்க, அவனோ ஒருநொடி அதிர்ந்துவிட்டான்.
“ஜானு, என்னாச்சுமா?” என்று அவன் முடிக்கவில்லை, அவனிடமிருந்து விலகியவள், ராகவ் தங்களை பார்த்துக் கொண்டிருப்பதை கூட கண்டுக்காது பெருவிரலை நிலத்தில் ஊன்றி எம்பி நின்று, அவனின் பின்னந்தலை முடியை இறுகப்பற்றியவாறு தன்னவனின் இதழை இதழ்சிறைப் பிடிக்க, உறைந்தேவிட்டான் அவன்.
“அட ச்சீ… என்ன கருமம் டா இது?” என்று புலம்பியவாறு ராகவ் திரும்பி நின்றுக் கொள்ள, இருக்கும் அதிர்ச்சியில் அக்னியால் அவளுக்கு இசைந்து கொடுக்கவும் முடியவில்லை, அவளை தன்னிடமிருந்து தள்ளி நிறுத்தவும் முடியவில்லை.
அவனிடமிருந்து விலக மனமில்லாது அவனின் இதழ் தேனை பருகியவள், பின் மெல்ல விலகி அவனின் காதுமடலில் தன் இதழ் உரச, “ஐ லவ் யூ மஹி…” என்று சொல்ல, அந்த காதல் சொல்லும் ஆங்கில வார்த்தைகளின் அர்த்தம் புரிந்தவனுக்கு ‘என்ன உணர்கிறோம்?’ என்றே தெரியவில்லை.
ஆனால், அடுத்தநொடி ஒன்று மட்டும் உணர்ந்துக் கொண்டான். இனி தன்னுடைய மொத்த வாழ்க்கையின் அர்த்தமும் அவள் தான் என்று…
ராகவ்வோ அருவி காதலை சொன்னதில், ‘இது வேறயா?’ என்று சலித்துக்கொள்ள, தன்னவனின் ஷர்ட் கோலரை பிடித்து தன்னை நோக்கி இழுத்தவள், “லுக், நான் உன்னை லவ் பண்றேன். நீ என்னை லவ் பண்றியோ, இல்லையோ? வேற ஏதாச்சும் பொண்ண நீ பார்த்தாலும், இல்லை அந்த பொண்ணுங்க உன்கிட்ட பேசினாலும் உன்னை தான் கொல்லுவேன். நீ என்னோட மஹி… புரியுதா?” என்று மிரட்டிவிட்டு, மீண்டும் அவனிதழில் அழுந்த முத்தமிட்டு வெளியேறினாள்.
அக்னியோ அவளது அதிரடியால் உண்டான அதிர்ச்சியில் வாயை பிளந்த வண்ணம் நின்றிருக்க, ராகவ் தான், “அடி ஆத்தீஈஈ… என்ன ஒரு மிரட்டல்? ஆகு, நீ செத்த டா” என்றவாறு மிரண்டு போய் அவனைப் பார்த்திருந்தான்.
அவள் அவனிடம் காதலை சொன்ன தருணத்தை நினைத்துப் பார்த்தவனுக்கு இப்போதும் இதழில் அழகான வெட்கப்புன்னகை! கண்களை மூடி சாய்ந்திருந்தவள் முயன்றவரை தன் உணர்வுகளை அவனுக்கு காட்டாது விறைப்பாக இருந்தாலும் ஏனோ அவளையும் மீறி அவள் உணர்வுகள் வெளிப்பட, அக்னியாலும் அவளின் கண்களில் தெரியும் ஏகத்தையும், முகத்தில் படர்ந்திருக்கும் சோகத்தையும் உணர்ந்துக் கொள்ளத் தான் முடிந்தது.
நாம் பார்த்து ரசிக்கும் முண்ணனி நடிகர்கள் உணர்வுகளை மறைத்து கேமராவின் முன் நடித்தாலும், நிஜ வாழ்க்கையில் நடிக்க முடியாது அல்லவா! அருவி மட்டும் விதிவிலக்கா என்ன?
கொலம்பியாவில்,
பல முண்ணனி நடிகர்கள், தொழிலதிபர்கள் குடியிருக்கும் அந்த பகுதியில், தன் வீட்டிற்குள் நுழைந்த அருவி விறுவிறுவென தன் அறைக்குள் நுழைந்து கதவடைத்துக்கொள்ள, அக்னியும் எதுவும் பேசாது தனக்கான அறைக்குள் புகுந்துக் கொண்டான்.
அடுத்த மூன்று நாட்கள் அருவியின் முன்னால் மேலாளர் அக்னிக்கு வேலை தொடர்பான பயிற்சி கொடுக்க, அக்னியும் தட்டுத்தடுமாறி ஒவ்வொன்றையும் கத்துக்கொண்டான். அதிலும் மொழிப் பிரச்சினை தான் அவனின் பெரும் பிரச்சினையாக இருந்தது.
இப்படியே நாட்கள் நகர,
அன்று சோஃபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தவள், தன் முன் நின்றிருந்தவனை குறுகுறுவென பார்த்தவாறு இருக்க, அக்னிக்கு தான் அவளின் பார்வையில் ஒரே சங்கடமாக இருந்தது.
“ம்ம்…” என்றவாறு அருவி அவளின் அடுத்த இரண்டு நாளைக்கான படப்பிடிப்புக்களையும், வேலைகளையும் பட்டியலிடச் சொல்ல, அவனும் தன் காகிதங்களை பார்த்து அடுத்தடுத்தென இருக்கும் வேலைகளை சொல்ல ஆரம்பித்தான்.
“இன்னைக்கு ராத்திரி நாம பொகோட்டா கிளம்புறோம். ஒரு ஃபோட்டோ ஷூட் இருக்கு. அதுக்கப்றம் கம்பனி மீடிங்…” என்று கஷ்டப்பட்டு தான் குறிப்பெடுத்துக் கொண்டதை அக்னி சொல்லிக்கொண்டே போக, அவனை ஏளனமாக ஒரு பார்வை பார்த்தவள், எழுந்து அவன் முன் மார்புக்கு குறுக்கே கைகளை கட்டியவாறு நின்றாள்.
அவனோ நிமிர்ந்து அவளை கேள்வியாக நோக்க, “அதை கொடு!” என்று அவன் கையிலிருந்த காகிதங்களை கண்களால் காட்டி அவள் கேட்கவும், அவளின் நோக்கம் புரியாது அவனும் காகிதங்களை அவளிடம் கொடுத்த அடுத்த சிலநொடிகளில் மொத்த காகிதங்களும் கிழிந்து தரையில் கிடந்தன.
அக்னியோ, “அய்யய்யோ!” என்றவாறு வாயை இரு கைகளாலும் பொத்தி அவளை அதிர்ந்து நோக்க, இப்போது அவனை கேலிப் புன்னகையுடன் நோக்கியவள், “இப்போ சொல்லு!” என்றவாறு சோஃபாவில் அமர, அவனுக்கோ அவளை முறைக்க கூட முடியவில்லை. தன் நிலையை நினைத்து அவனுக்கே பாவமாக இருந்தது.
திருதிருவென விழித்தவாறு அவன் நிற்க, “அப்போ உன் வேலைய நீ சரியா பண்ணல. அப்படி தானே? இதுக்கு பனிஷ்மென்ட் இருக்கு.” என்று அவள் சொல்ல, அவனோ உதட்டை பிதுக்கி அவளை பாவமாக பார்த்தான்.
அடுத்த சில நிமிடங்களில் ஏசி குளிர் உயர் அளவில் வைக்கப்பட்ட அந்த அறையில் அக்னி மேல் சட்டையின்றி நின்றிருக்க, அவனைப் பார்த்தபடியே கதவை அறைந்து சாத்தி பூட்டினாள் அருவி.
‘அவனுக்கு காயத்தை கொடுத்துவிட்டேன்.’ என்று வெற்றிப் புன்னகை புரிந்தவளால் மனம் ரணமாக வலிப்பதை தடுக்க முடியவில்லை. அந்த அறை இருக்கும் திசையையே அடிக்கடி பார்த்தவள், தன் மனநிலையை மாற்றும் பொருட்டு தொலைப்பேசியில் கவனத்தை செலுத்த முயற்சிக்க, அப்போதும் ஏதோ மனதில் பாரம் ஏற்றி வைத்த உணர்வு அவளுக்கு!
“இந்த இடத்தை விட்டு நீ நகரவே கூடாது. இரண்டு மணி நேரத்துக்கு இங்கேயே நின்னுகிட்டு இருக்கனும். உன் ஜானுவோட பேச்சை மீற மாட்டேன்னு நினைக்கிறேன்.” என்று கடைசி வசனத்தை மட்டும் அழுத்தி சொல்லி அவனின் பலவீனத்தில் சரியாக குறி வைத்தவள், அந்த அறையில் அவனை விட்டு வந்து ஒரு மணி நேரம் ஆகிவிட்டது.
பல வழிகளில் தன்னை திசைதிருப்ப முயற்சித்தவளின் கண் முன்னே தன்னவனின் பல பாவனைகளுடன் கூடிய முகம் மட்டுமே வந்து போக, அவளால் நிலைக்கொள்ளவே முடியவில்லை. அவளின் காதல் மனம் வேறு, ‘என் மஹி கஷ்டப்படுவான். அவன் தாங்கிப்பானா?’ என்று அவளிடமே கேள்வி கேட்க, ‘ச்சே!’ என்று சலித்தவாறு ஒரு மணிநேரம் கழித்து அந்த கதவை திறந்தாள் அருவி.
தன்னவன் இருந்த கோலத்தை பார்த்ததும் அதிர்ந்துவிட்டாள் அவள். ஆரம்பத்தில் அந்த குளிரை தாங்கிக் கொண்டவனால் ஒருகட்டத்தில் முடியாது, உடல் ஒத்துழைக்காது நடுங்க ஆரம்பித்துவிட்டது. ஆனாலும், தன்னவளின் வார்த்தையை மீறாது அதே இடத்தில் கைகளை மார்புக்கு குறுக்கே கட்டியவாறு தலை குனிந்து உடல் நடுங்க நின்றிருந்தான் அவன்.
தன்னை மீறி, “மஹி…” என்று அவள் அழைக்க, நிமிர்ந்த அக்னி, “ஜானு…” என்று அழைத்தவாறு அப்படியே அதே இடத்தில் சுயநினைவின்றி விழவும், அதிர்ந்த அருவி ஓடிச்சென்று தரையில் கிடைந்த தன்னவனை மடியில் தாங்கிக் கொண்டாள்.
அவனின் உடல் குளிரில் விறைத்துப் போய் இருக்க, ஏசி குளிரை அணைத்து அறையின் வெப்பத்தை அதிகரித்தவள் அவசர அவசரமாக வைத்தியருக்கு அழைத்திருந்தாள். அக்னி கட்டிலில் பாதி மயக்கத்தில் ஏதேதோ முணங்கியவாறு இருக்க, அவனை வெறித்துப் பார்த்த அருவி அடுத்தகணம் அவனருகில் படுத்து அவனை இறுக அணைத்திருந்தாள்.
அவனுடைய கழுத்து வளைவில் முகத்தை புதைத்து அவனை அவள் இறுக அணைத்திருக்க, தன்னவளின் ஸ்பரிசம் உணர்ந்து அவனும் தன்னை மீறி அவளை அணைத்துக் கொண்டான். தானே தன்னவனை காயப்படுத்தியதை நினைத்து அவளிள் விழிகளிலிருந்து கண்ணீர் வெளியேறி அது அவனுடைய மார்பை நனைக்க, அந்த கண்ணீரின் சூட்டை உணர்ந்தவனின் இதழ்கள், “ஜானு… ஜானு…” என்று தான் முணுமுணுத்தது.
இருவருமே அந்த கட்டிலில் பிணைந்து இருக்க, கதவு தட்டப்படும் சத்தத்தில் அவனைவிட்டு சட்டென விலகியவள், தான் செய்யும் காரியம் உணர்ந்து மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டாள். ‘மானங்கெட்ட மனசு’ என்று தனக்குத்தானே திட்டியவள், அவனின் முகம் பார்க்காது விறுவிறுவென கதவை சென்று திறக்க, உள்ளே வந்த வைத்தியரும் அக்னியை பரிசோதித்து விட்டு வெளியேறினார்.
வைத்தியர் சென்றதும் தயக்கமாக அவனை அருவி பார்க்க, அவனோ மெதுவாக கண்களை திறந்து ‘சிரிக்கிறானோ?’ என்று நினைக்குமளவிற்கு சிரிக்க துடித்த இதழ்களுடன் அவளையே பார்த்திருந்தான்.
தான் செய்த செயலில் உண்டான மொத்த கோபத்தையும் அவனின் மேல் காட்டி அவனை உக்கிரமாக முறைத்தவள், “நாளைக்கே சரியாகி வர்ற! இல்லைன்னா, இதை விட மோசமா பனிஷ் பண்ணுவேன்.” என்றுவிட்டு வெளியேற, இதழ்களை பெரிதாக விரித்து சிரித்துக் கொண்டான் அக்னி.
அன்று,
அன்றைக்கான முக்கிய செய்திகளை அலைப்பேசியை பார்த்தவாறு அக்னி சொல்லிக் கொண்டிருக்க, தன் கைவிரல் நகங்களை சுத்தம் செய்து அலங்கரித்துக் கொண்டிருந்த தன் ஒப்பனையாளரை பார்த்தவாறு அக்னி சொல்லும் செய்திகளை கேட்டுக் கொண்டிருந்தாள் அருவி.
ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டு வந்தவன், சட்டென பேச்சை நிறுத்திவிட, அவனின் பேச்சு தடைப்பட்டதில் நிமிர்ந்து அவனை கேள்வியாக பார்த்தாள் அவள். அவனோ பற்களை நரநரவென கடித்தவண்ணம் அடக்கப்பட்ட கோபத்துடன் ஒரு செய்தியை பார்த்திருக்க, அவனின் முன் சொடக்கிட்டவள், “வாட்?” என்று புரியாமல் கேட்டாள்.
அலைப்பேசியில் இருந்த செய்தியை அவளிடம் காட்டியவன், “நாட்டுல இருக்குற கனிமங்களை அளவுக்கு மீறி எடுத்து காசுக்காக வெளிநாட்டுகளுக்கு விக்கிறாங்க. அளவுக்கு மீறி நடக்குற சுரண்டல்கள இயற்கையால கூட ஏத்துக்க முடியல.” என்று கோபமாக சொல்ல,
அதை பார்த்துவிட்டு புருவத்தை நெறித்து சற்று நேரம் யோசித்தவள், “ஓகே, அப்போ நான் அதை எதிர்த்து பேசின மாதிரி சோஷியல் மீடியால ஒரு போஸ்ட் போட்டுரு.” என்றுவிட்டு மீண்டும் தன் நக அலங்காரத்தை கவனிக்க ஆரம்பித்தாள்.
அவள் முகத்தை கூர்ந்து கவனித்தவனுக்கு அன்று கூட்டத்திற்கு நடுவில் கத்தி போராட்டம் செய்த அவளவன் தான் நியாபகத்திற்கு வந்தாள். மென்மையாக சிரித்தவன், “இந்த மாதிரி பண்றதால எதுவும் மாற போறதில்ல. களத்துல இறங்கி நாம போராடுனா மட்டும் தான் விடிவு காலம் உண்டு.” என்று அன்று அவள் சொன்ன வசனத்தையே இன்று இவன் சொல்லிவிட்டு எழுந்து செல்ல,
சட்டென நிமிர்ந்து பார்த்த அருவிக்கு தன்னை மீறி கண்கள் கலங்கிப் போனது என்னவோ உண்மை தான்.
-ஷேஹா ஸகி