Jeevan Neeyamma–EPI 12

171916099_840757923178210_3424615682123961255_n-4a4ed5df

அத்தியாயம் 12

 

தலையை ஒழுங்காய் துவட்டு, சளி பிடிக்கும்! என்னைத் தவிர வேறு யாருக்கும், எதற்கும் உன்னைப் பிடிக்கக் கூடாது என்பாள். யாரவள்? என் ஜீவனவள்!

 

விட்டத்தை வெறித்தப்படி அமர்ந்திருந்த தன் தோழியை கண்டும் காணாதது போல அமர்ந்திருந்தாள் ஹேமா. வழி நெடுக என்னப் பிரச்சனை என கேட்க போய், அவளிடம் நன்றாக வாங்கிக் கட்டியாகி விட்டது.

மேலும் அரை மணி நேரம் அதன் பாட்டிற்கு ஓடியிருக்க தவம் கலையாது அமர்ந்திருந்த மீனாட்சியை,

“அம்மன்!” என மெல்ல அழைத்தாள் ஹேமா.

“ஹ்ம்ம்!”

“பசிக்கல?”

“இல்ல!”

“என்ன கஸ்டம் கடுப்பு இருந்தாலும் அதை வயித்துக் கிட்ட காட்டக் கூடாது! மாதா, பிதா, வயிறு, தெய்வம்னு பெரியவங்க சொல்லிருக்காங்க”

தலையணையைத் தோழி மேல் விட்டடித்தாள் மீனாட்சி.

“அது வயிறு இல்ல, குரு! ரைமிங்கானா என்ன வேணா அடிச்சு விடுவியாடி ஜண்டா! ஆனா பாரு, நீ சொல்றதும் ஒரு வகையில நியாயம்தான். பசிச்ச வயிறும் நமக்கு ஒரு குரு மாதிரி. குரு நம்ம வாழ்க்கைய சரியான பாதையில போக கைட் பண்ணுவாரு. அதே மாதிரி பலருக்கு வாழ்க்கையில எந்தப் பாதையை நோக்கிப் போறதுன்னு முடிவு செய்ய கைட் பண்ணறது இந்த வயிறுதான். படிப்பை விட்டுட்டு வேலைக்குப் போறது, பத்தினியா இருந்தவ படி தாண்டறது, பெத்தப் புள்ளைய காசுக்கு விக்கறது எல்லாமே டான்னு கரெக்டான நேரத்துக்குப் பசிக்கற இந்த வயித்துக்காகத்தான்.”  

மீனாட்சியையே ஆழ்ந்துப் பார்த்தாள் ஹேமா. என்ன மேக் இவள் என ஆச்சரியமாக இருந்தது அவளுக்கு. சில சமயங்களில் சிறுபிள்ளைத்தனமாய் நடந்துக் கொள்பவள், பல சமயங்களில் பொறுப்பான பெண்ணாய் மிளிர்கிறாள். சிரிக்க சிரிக்க பேசுபவள், சில சமயங்களில் சீரியசான சிந்தனைகளை அசால்ட்டாய் எடுத்து விடுகிறாள். கணக்குப் பார்த்து செலவு செய்பவள், தனக்குப் பிடித்த நபர்களுக்கு செலவு செய்வதில் மட்டும் தயக்கம் காட்டுவதேயில்லை. தனக்கு நெருக்கமானவர்களைப் பட்டென அடிப்பது, கிள்ளுவது என கொஞ்சம் முரட்டுத்தனத்தைக் காட்டினாலும், தன் பாசம் வைத்த அதே நபருக்கு ஒன்றென்றால் துடித்துப் போவது மட்டுமில்லாமல், அவர்கள் துன்பம் போக்க முனைவதும் ஹேமாவே கண் கூடாக அனுபவித்து வரும் சுகமான இம்சை. பழக பழக மீனாட்சியை அளவுக்கதிகமாகப் பிடித்தது ஹேமாவுக்கு.

“வாடி டின்னர் சாப்பிட போகலாம்! எனக்கு செம்மையா பசிக்கிது”

கையில் இருந்த கடிகாரத்தில் மணியைப் பார்க்க, அது எட்டு என காட்டியது.

“அறிவில்ல உனக்கு! ஏழு மணிக்கே கூப்பிட தெரியாது. ஏற்கனவே கேட்ஸ்ரிக் இருக்கு உனக்கு. லேட்டா சாப்டு வயித்து வலியை வெத்தலை பாக்கு வச்சி அழைக்கப் பார்க்கறியா? கெளம்பு” என சத்தம் போட்ட மீனாட்சி தானும் எழுந்துக் கிளம்பினாள்.

இரவு உணவுக்கு லேடிஸ் ஹாஸ்டல் பக்கம் இருக்கும் கேண்டினுக்குத்தான் போவார்கள். அதனால் ரூமில் போட்டுக் கொள்ளும் அரைக்கால் பேண்ட், டீஷர்ட்டோடு ஹேமா வர, இவள் முழு நீள ஸ்லாக்கும் டிஷர்ட்டும் மாற்றிக் கொண்டு வந்தாள்.

“ஏன்டி, அங்க இருக்கப் போறது எல்லாம் பொம்பள புள்ளைங்கத்தான். ரூமுக்குள்ள போடற மாதிரி கட்டை சிலுவார்(பேன்ட்) போட்டுட்டு வந்தாத்தான் என்ன? உன் கெண்டை கால் அழக பார்த்து மயங்கிடுவாங்களா எல்லாம்?”

“ம்ப்ச்! வீட்டுல ஆம்பளப் பசங்க இருக்காங்க, அடக்க ஒடுக்கமா உடுத்தனும்னு எங்கம்மா பழக்கி விட்ட பழக்கம். என்னமோ மாத்திக்க முடியலடி ஜண்டா.”

வந்த புதிதில் ரூமினுள்ளே கூட உடம்பை மறைத்துத்தான் துணி உடுத்துவாள் மீனாட்சி. துணி மாற்ற வேண்டும் என்றால் கூட பாத்ரூமுக்குப் போய் தான் மாற்றி வருவாள். இப்பொழுது கொஞ்ச நாளாகத்தான் ஹேமாவோடு சகஜமாகி இருக்கிறாள்.

உணவை பேக் செய்து வாங்கிக் கொண்டவர்கள் ஹாஸ்டல் அருகே இருக்கும் போண்டோக்கில் போய் அமர்ந்தனர்.(உட்கார்ந்துப் பேச, சாப்பிட, படிக்க  அமைக்கப்பட்டிருக்கும் இடம்) இரவு நேரத்து குளிர் காற்றை அனுபவித்தப்படியே உணவருந்தினர் இருவரும்.

“அந்த சூர்ப்பனகையப் புடிக்கவே இல்ல எனக்கு” என சம்பந்தா சம்பந்தமில்லாமல் பேசினாள் மீனாட்சி.

“யாரு அது?”

“அவதான் அந்த சுராயா!”

“ஓ! நம்ம இசையோட குச்சி குச்சி ராக்கம்மாவா!”

“செருப்புப் பிஞ்சிடும்!” என சத்தம் போட்ட மீனாட்சி தோழியை அடி வெளுத்துவிட்டாள்.

“ஐயோ விடுடி அம்மன், வலிக்குது” என கெஞ்சி கதறி அடிகளில் இருந்து தப்பித்தாள் ஹேமா.

“ரஹ்மானுக்கு அவ மேல ஒரு மண்ணும் இல்ல! இந்த சூர்ப்பனகைத்தான் தேவையில்லாத வேலைப் பார்க்கறா! மான், மான்னு மானம் ஈனம் இல்லாம வழியறா!”

லெக்சர் முடிந்து சில சமயங்களில் தோழிகள் இருவரும் ரஹ்மானிடம் பாட சம்பந்தப் பட்ட சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளப் போவார்கள். ரஹ்மான், லோகாவோடும் சுராயாவோடும் ப்ராஜக்ட் சம்பந்தமாக டிஸ்கசன் செய்யும் இடத்தை மீனாட்சிக்கு காட்டிக் கொடுத்திருந்தான். எப்பொழுது வேண்டுமானாலும் தன்னை அங்கு வந்து சந்திக்கலாம் என அவன் சொல்லி இருக்க, வாரத்தில் இரண்டு முறையாவது அவனைப் போய் பார்ப்பார்கள் இவர்கள் இருவரும்.

முகம் பளிச்சென மின்ன, துணி காலையில் பொட்டிருந்த மாதிரியே கசங்காமல் இருக்க, வாசமாய் அமர்ந்திருக்கும் சுராயாவைப் பார்த்தாலே பற்றிக் கொண்டு வரும் மீனாட்சிக்கு. அவள் அருகில், முடி லேசாய் கலைந்துப் போயிருக்க, முகம் கொஞ்சமாய் எண்ணெய் வழிய, சட்டையில் அங்கிங்கே லேசாய் குழம்புத் தெறித்திருக்க, தான் பார்க்கவே கன்றாவியாய் இருப்பதைப் போல தோன்றும் இவளுக்கு. ஆரம்பத்தில் சுராயாவோடு மரியாதைக்காக சில வார்த்தைகள் பேசுவாள் மீனாட்சி. ஆனால் அவள் ரஹ்மானுக்கு ரூட் விடுவது பட்டவர்த்தனமாகத் தெரிய ஆரம்பித்ததில் இருந்து அவளோடு பேசுவதையே நிறுத்தி இருந்தாள்.

அன்றைய தின மாலையில் ரஹ்மானைப் பார்த்து விட்டு கிளம்பும் போது,

“ரஹ்மானு! உன் கிட்ட பேசனும்” என்றாள் மீனாட்சி.

“என்ன மீனாம்மா?”

“தனியா பேசனும்”

“ஹேய் சில்வண்டு! தனியா என்ன தங்கமலை ரகசியமா பேச போற! இங்கயே பேசு” என்றான் லோகா.

“மிஸ்டர் கருவண்டு, அவ சைல்ட்ஹூட் ப்ரேண்ட் கிட்ட பேச அவளுக்கு ஆயிரெத்தெட்டு விஷயம் இருக்கும்! அதெல்லாம் உங்களுக்குத் தேவையில்லாத மேட்டர்” என ஹேமா எகிற,

“யாருடி கருவண்டு? நீ தான் உருளைக்கிழங்க வண்டு, செவ்வண்டு, மரப்புழு வண்டு, நீர் வண்டு எல்லாமே” என அவனும் எகிற,

“அடடா! உன் சொந்தக்கார வண்டு பேரெல்லாம் புட்டு புட்டு வைக்கிற! சூப்பர், சூப்பர்” என இவள் கேலி செய்ய, என்ன பேசிக் கொள்கிறார்கள் என சுராயா தமிழ் தெரியாமல் முழிக்க, ரஹ்மானோடு நகர்ந்திருந்தாள் மீனாட்சி.

“என்ன மீனாம்மா? என்ன வேணும்?”

“என்ன, என்ன வேணும்? உன் கிட்ட பேசனும்னா எதாச்சும் வேணும்னா மட்டும்தான் பேசுவாங்களா?” என படபடத்தாள் மீனாட்சி.

“சரி, சரி, சாரி! கோபப்படாதே. ரிலேக்ஸ்!”

“அவ செய்யறது எதுவும் எனக்குப் புடிக்கல”

“எவ?”

“அவதான் அந்த சுராயா!”

“உனக்குப் பிடிக்காததா என்ன செஞ்சா?”

“உன் பென்சில் பேனாவ உனக்கு பேன்சில் பாக்ஸ்ல வச்சிக்கத் தெரியாதா? எதுக்கு அவ எடுத்து வைக்கனும்? உனக்கு தண்ணி தாகம் அடிக்குதுன்னு சொன்னியா? சொல்லாமலே எதுக்கு ஓடிப்போய் உனக்கு வாட்டர் பாட்டில் வாங்கிட்டு வந்து குடுக்கறா? நெத்தியில வேர்த்தா உனக்குத் தொடைச்சிக்கத் தெரியாதா? எதுக்கு டிஷூ பேப்பர் எடுத்துக் குடுக்கறா துடைக்க சொல்லி? சரி இதெல்லாம் நார்மலா எல்லாம் செய்யறதுதானேன்னு பேசாம இருந்தா, இன்னிக்கு உன் தாடையைப் புடிச்சுத் திருப்பறா! நீயும் பேசாம நிக்கற!” என மூச்சு வாங்க படபடத்தாள் மீனாட்சி.

“மீனாம்மா!” என்றவனின் தொனியில் லேசாய் கண்டிப்பு இருந்தது.

நிமிர்ந்துப் பார்த்து அவனை முறைத்தாள் இவள். அவனும் முறைக்க முயன்றான், ஆனால் அவளது பெரிய கண்களில் தெரிந்த கோபத்தைப் பார்த்து சிரிப்பு வந்து விட்டது.

அவனது சிரிப்பில் இன்னும் கோபம் மூக்குக்கு மேல் ஏற, முகத்தைத் திருப்பிக் கொண்டாள் இவள்.

“சுராயா, உன்னை மாதிரியே எனக்கு ஒரு ப்ரெண்ட் தான் மீனாம்மா!”

அவனது கூற்றில் கண்ணில் பொலபொலவென கண்ணீர் இறங்கியது இவளுக்கு.

“ஹேய் மீனாம்மா! எதுக்கு அழற இப்போ! அழாதே ப்ளீஸ்! சொன்னா கேளு மீனாம்மா” என்றவனுக்கு அவளது அழுகை எப்பொழுதும் போல பதட்டத்தைக் கொடுத்தது.

“என்னை மாதிரியே அவளும் ஒரு ப்ரெண்டுன்னு எப்படி நீ சொல்லலாம்? அப்போ உனக்கு நான் ஸ்பெஷல் இல்லையா? இந்த மீனாம்மா மூனாம் மனுஷியா ஆகிட்டேன்ல உனக்கு! நான் தான் ரஹ்மானு ரஹ்மானுன்னு உயிர விடறேன்! நீ என்னை யாரோ ஒருத்தியாத்தான் பார்க்கற! அந்த சூர்ப்பனகைக் கூடவே ப்ரெண்ட்ஷிப் வச்சிக்க, பார்ட்னர்ஷிப் வச்சிக்க, ஏன் லவ்ஷிப் கூட வச்சிக்க! எனக்கு என்ன வந்தது! இனி இந்த ரஹ்மானு எனக்கு வேணா! நான் போறேன்!” என கோபமாய் சொன்னவள், கண்களைத் துடைத்துக் கொண்டே வேகமாக நடந்துவிட்டாள்.

“மீனாம்மா! மீனாம்மா! நில்லு” என இவன் பின்னால் கத்தியபடி வந்ததைக் கூட கண்டுக் கொள்ளாமல் தோழியை இழுத்துக் கொண்டு நடந்தாள் மீனாட்சி.

அழுதபடி வந்த தன் தோழியைப் பார்த்த ஹேமா, அவளோடு நடந்துக் கொண்டே பின்னால் திரும்பிப் பார்ந்து,

“டேய் இசை, என் அம்மன அழுக வச்சிட்டல்ல! இருக்குடா உனக்கு” என மிரட்டியபடி போக,

“அவன, அவன் இவன்னு சொல்லாதேன்னு சொல்லிருக்கேன்தானே!” என தன் தோழியைக் கடிந்தப்படியே போனாள் மீனாட்சி.

அதற்கு பிறகு ரூமுக்கு வந்து விட்டத்தையே வெறித்தப்படி அமர்ந்திருந்தவள் இப்பொழுதுதான் வாயைத் திறந்திருந்தாள்.    

“உனக்கு ப்ரெண்டுனா அந்த இசையை யாரும் இசைக்கக் கூடாதா?”

“பொடி வச்சுப் பேசாம நேரா பேசித் தொலை”

“அவனுக்குன்னு லவ்வு, டாவுன்னு ஒன்னும் இருக்கக் கூடாதா அம்மன்? சுராயாவுக்கு அவனைப் புடிச்சிருக்கு, அதை அப்படி இப்படின்னு வெளிப்படுத்தறா! இசைக்கும் அவள புடிச்சா உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடுன்னு பாடட்டும், புடிக்கலைனா நெஞ்சே நெஞ்சே மறந்துவிடுனு பாடட்டும்! இதுல நீ ஏன் தலையிடற?”

“அவன் என் நண்பன்டி ஜண்டா! அந்த சூ, என்னை மாதிரி அவனுக்கு ஒரு ப்ரெண்டுன்னு சொல்றான். அப்படி எப்படி சொல்லலாம்? அவனுக்கு நான் மட்டும்தான் ப்ரெண்டா இருக்கனும். இருப்பேன்!”

“நட்புக்கும் லிமிட் இருக்கு அம்மன்! நீ அவன் மேல ஓவர் பொசெசிவா இருக்க! என் கூட நட்பா இருன்னு சொல்லலாம்! என் கூட மட்டும்தான் நட்பா இருன்னு சொல்ல முடியாது! சொல்லவும் கூடாது! நான், உன்னை அந்த ரஹ்மானு கூட ஷேர் செஞ்சிக்கல? அதே மாதிரி நீயும் அவன மத்தவங்க கூட ஷேர் செஞ்சிக்கனும். இசையா இருக்கவும் மீனாம்மா, மீனாம்மான்னு கெஞ்சிக்கிட்டு வரான்! வேற ஒருத்தனா இருந்தா உன்னோட அலப்பறைக்கு போடின்னு போயிடுவான்!”

ரஹ்மானுடைய மற்ற ஆண் நண்பர்களை ஏற்றுக் கொள்ள முடிந்த மீனாட்சியால் ஒரு பெண்ணை அவனது நட்பு வட்டத்தில் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்பது ஹேமாவுக்கு கலக்கமாக இருந்தது. ஆனால் அதை உடைத்து சொல்லி தோழியின் மனதில் எந்த வித எண்ணத்தையும் தோற்றுவிக்க விரும்பவில்லை இவள்.

அமைதியாக அமர்ந்திருந்தவளின் கைப்பற்றிக் கொண்டவள்,

“அவனுக்கு இருபத்து மூனு வயசு ஆகுது. அவங்க இனத்துல இருபத்து அஞ்சுலயே கல்யாணம் செஞ்சு புள்ள குட்டின்னு செட்டில் ஆக ஆரம்பிச்சிடுவாங்க. அந்த சூக்கு என்ன குறைச்சல்? அழகா இருக்கா, அவனோட இனம், இசையை நல்லா பார்த்துக்கறா, வேற என்ன வேணும் உனக்கு! ஆக்சுவலி நீ ரஹ்மானுக்காக சந்தோஷம்தான் படனும்! புரியுதா அம்மன்” என தெளிய வைத்தாள் ஹேமா.

“என்னமோ அவன யாருக்கும் விட்டுக் குடுக்க முடியல! மனசு முழுக்க என் ரஹ்மானுன்னு தான் ஓடுது! அவன பிரிஞ்சு வாழ்ந்த வருஷங்களில கூட அடிக்கடி ரஹ்மானு என்ன செஞ்சிட்டு இருப்பான், ரஹ்மானு அப்பா எப்படி இருக்காரோ, அம்மா எப்படி இருக்காங்களோன்னு நெனைச்சிட்டே இருப்பேன்! அவன் கிட்ட சொன்ன மாதிரி கணக்கு டீச்சரா ஆகனும்னு தான் விழுந்து விழுந்து படிச்சு யூனி வரைக்கும் வந்துருக்கேன்.” என்றவள் சற்று நேரம் அமைதியாக இருந்தாள்.

“நான் ரொம்ப செல்பிஷா இருக்கேன்ல ஜண்டா! அவன் மேலே நான் பொசெசிவா இருக்கேன்ல! ரஹ்மானு வாழ்க்கையில என்னோட லிமிட் எங்கன்னு எனக்கு இப்போ நல்லா புரிஞ்சிருச்சு! நீ சொன்ன மாதிரி இப்பவே அவன் பொண்ணு பார்க்க ஆரம்பிச்சாத்தான் இன்னும் ரெண்டு வருஷத்துல கல்யாணம் செஞ்சு குடும்பம் குட்டின்னு செட்டிலாக சரியா இருக்கும்.” என குரல் கரகரக்க சொன்னவள் தன் கை விரல்களை மடக்கி மடக்கி விரித்தாள்.

“மீனாட்சி! ரஹ்மான் வந்துருக்கான் உன்னைப் பார்க்க! ஹாஸ்டல் வெளிய நிக்கறான்” என ஒரு பெண் கத்தி சொல்ல, லிமிட்டாய் இருப்பேன் என சொன்னதை எல்லாம் காற்றில் பறக்க விட்டு, காற்றை விட வேகமாய் ஓடினாள் மீனாட்சி.

தன் தோழியின் ஓட்டத்தைப் பார்த்த ஹேமாவுக்கு மனதில் தானாகவே பாரம் ஏறிக் கொண்டது.

மூச்சு வாங்க தன் முன்னே வந்து நின்ற மீனாட்சியைக் கோபமாகப் பார்த்தான் ரஹ்மான்.

“உனக்கு எல்லாத்துலயும் அவசரம் மீனாம்மா! நான் கூப்பிட கூப்பிட திரும்பிக் கூட பார்க்காம அழுதுட்டே போய்ட்ட! உன் அழுமூஞ்சிய பார்த்ததுல இருந்து என்னால நிம்மதியா இருக்க முடியல ரூம்ல! படிக்க முடியல, சாப்பிட முடியல, தூங்கவும் முடியல!” என பொறிந்துத் தள்ளினான்.

“சாரி ரஹ்மானு! ரொம்ப சாரி! இனிமே அப்படிலாம் கோச்சிக்க மாட்டேன். என் லிமிட்ட க்ராஸ் பண்ண மாட்டேன். உன்னை இரிடேட் பண்ண மாட்டேன்! உனக்கு சுராயாவ பிடிச்சிருந்தா ஓகே பண்ணிடு ரஹ்மானு! அவ உனக்கு ரொம்ப பொருத்தமா இருப்பா!” என சொல்லி வாய் மூடுவதற்குள்,

“வாய மூடு மீனாம்மா!” என குரலை உயர்த்தாமல் சீறினான் ரஹ்மான்.

வாயைக் கப்பென மூடிக் கொண்டாள் மீனாட்சி.

“உன் கிட்ட லவ் அட்வைஸ் எதாச்சும் கேட்டேனா நானு? சொல்லு கேட்டேனா?” என கோபமாய் கேட்க,

இல்லை என்பது போல தலையை மெல்ல ஆட்டினாள் இவள்.

“கேக்கலல! சோ உன் திருவாய மூடிட்டு பேசாம இரு! எனக்கு எப்போ, யார லவ் பண்ணனும். கல்யாணம் பண்ணனும்னு தெரியும். உன்னோட அட்வைஸ் தேவையில்ல! புரிஞ்சுதா?”

ஆமென்பது போல மெல்ல தலையாடியது.

“படபடன்னு பட்டாசு மாதிரி பொரிவ! இப்போ வாய காக்கா தூக்கிட்டுப் போயிருச்சா? வாயத் தொறந்து பேசு”

“புரியுது ரஹ்மானு” என குரல் கிணற்றுக்குள் இருந்து வருவது போல மெலிதாக வந்தது.

அவளை ஒரு நொடி ஆழ்ந்துப் பார்த்தவன், பெரிய மூச்சை இழுத்து விட்டு தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான். சற்று நேரம் அவன் ஒன்றுமே பேசவில்லை. அவன் முகத்தை ஓரக்கண்ணால் பார்த்தவாறு இவளும் அமைதியாக இருந்தாள்.

சில பல நிமிடங்கள் கழித்து,

“சாரி மீனாம்மா! கோபத்துல நல்லா ஏசிட்டேன்” என மிக மென்மையான குரலில் மன்னிப்பு கேட்டான் ரஹ்மான்.

ஆணிடம் இருந்து மன்னிப்பு வந்தால், முறுக்கிக் கொள்ளாத பெண்ணும்தான் உண்டோ!

“உன் மன்னிப்பு ஒன்னும் தேவையில்ல! அதான் திட்டி முடிச்சாச்சுல்ல! கெளம்பு கெளம்பு, காத்து வரட்டும்”

அவளது முகத்திருப்பலில் மெல்லிய புன்னகை வந்தது இவனுக்கு.

“தேவையில்லாத விஷயத்துல மூக்கை நுழைச்சு, ஒன்னும் இல்லாததுக்கு எல்லாம் கண்ண கசக்குனா கோபம் வருமா வராதா, நீயே சொல்லு!”

அமைதியை ஆயுதமாய் கையில் எடுத்தாள் மீனாட்சி.

“பேசு மீனாம்மா!”

அதே அமைதி.

“ம்ப்ச்! சரி, சரி! இத வாங்கிட்டு மலை இறங்கு மீனாட்சி ஆத்தா!” என பாக்கேட்டில் இருந்து ஸ்நிக்கர் சாக்லேட்டை எடுத்து நீட்டினான் ரஹ்மான்.

பிகு பண்ணாமல் வாங்கிக் கொண்டவள், அதைப் பிரித்து அவனுக்கும் பிட்டுக் கொடுத்தாள். மறுக்காமல் வாங்கிக் கொண்டான் ரஹ்மான்.

“சமாதானம்?” என அவன் கேட்க.

“சமாதானம்!” என சிரித்தப்படி சொன்னாள் மீனாட்சி.

“ரஹ்மானு!”

“ஹ்ம்ம்!”

அவனை நிமிர்ந்துப் பார்த்தவள்,

“எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீதான் எனக்கு பெஸ்ட்டு ப்ரெண்டா வரனும்! வருவியா?” என கேட்டாள்.

அவளைக் குனிந்துப் பார்த்து,

“வருவேன், கண்டிப்பா வருவேன்” என்றவன்,

‘இந்த ஜென்மத்துக்கு மட்டும்தான் ப்ரெண்டா வருவேன்!’ என மனதில் சொல்லிக் கொண்டான். அவன் கண்களில் சொல்லொண்ணா துயரம் மண்டிக் கிடந்ததை இருள் மறைத்தது.

அந்த வாரத்தின் சனிக்கிழமையில், ரஹ்மானின் கட்டிலில் அவன் வாசம் சூழ ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள் மீனாட்சி அம்மன்.

 

(ஜீவன் துடிக்கும்..)

 

(போன எபிக்கு லைக், கமேண்ட் போட்ட அனைவருக்கும் நன்றி. லவ் யூ ஆல்)