அனல் 11
அனல் 11
அனல் 11
விபத்து ஏற்பட்டு முழுதாக ஆறு மணி நேரம் ஆகிவிட்டது. விவேகனின் குடும்பமே பல்வேறு வேண்டுதல்களுடன் அவனுக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஆம்! அவன் குடும்பம் தான் தென்றல் என்ற ஒருத்தியால் மட்டுமே அவனுக்கு கிடைத்த வரம் அவனின் இந்த குடும்பம்…
அந்த தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்களும் செவிலியர்களும் அத்தனைப் பதட்டத்துடன் இயங்கி கொண்டிருந்தனர்.
விவேகன் ஓங்கி தள்ளியதில் நிதானிக்க முடியாமல் மித்ரனும் கீழே விழுந்ததில் சிறு காயம் ஏற்பட்டிருந்தது. எப்பொழுதுமே தென்றலுக்கு இணையாக சேட்டை செய்பவன் உடன் பிறந்தவன் போல் உடனிருந்த நண்பனுக்கு ஒன்று என்றானதும்.
அத்தனை சாதூரியமாக செயல்பட்டு நண்பனையும் மருத்துவமனையில் அனுமதித்து, வீட்டிற்கும் தகவல் சொல்லியிருந்தான். அவன் காயங்களுக்கும் மருந்திடபட்டு, மருந்துகளின் பலனால் உறக்கத்தில் இருக்கிறான் மித்ரன். அவனுடன் மித்துமா இருக்கிறார்.
ஆற்றுவார் தேற்றுவார் இன்றி கதறிக் கொண்டிருந்தார் தேவகி அவரின் உயிருக்கு உயிரான மகன்,
அன்பையும் அரவணைப்பையும் எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி வழங்கும் அவரின் தகப்பன் ஸ்தானத்தில் இருந்தவன், துக்கமாக இருக்கும் வேளையில் தோள் கொடுக்கும் தோழன். இப்படி அனைத்திலும் அவருக்கு அவன் வேண்டும் ஆனால் இப்பொழுது மீண்டு அவரிடமே வந்து மடி சேர்ந்திட மாட்டானா?
அவருக்கு தெரியவில்லை.
ஏன் அங்கு இருக்கும் யாருக்கும் தெரியவில்லை. அக்ஷா மற்றும் லக்ஷ்மியை தேற்றுவதற்கு வழி தெரியாமல் தோற்றுப் போயிருந்தார் தர்மராஜ்.
அவருக்கே இந்த விபத்து அத்தனை பெரிய வலி வேதனை ஆனால் அவரின் வேதனையைக் கூட வெளிக்காட்ட விடாமல் செய்து கொண்டிருந்தனர் அவரின் மகள்கள்.
அனைவரும் விபத்து நடந்த செய்தி கேட்டதும் முதலில் பயந்தது என்னமோ தென்றலை நினைத்துதான்.
அவள் தூக்கத்திலிருந்து கண்ணா என்ற அலரளுடன் எழுந்த பிறகு லக்ஷ்மியும் அக்ஷாவும் அவளை சமாதானம் செய்து கொண்டிருக்கும் பொழுது தான் தர்மராஜிற்கு அழைத்து விபத்து பற்றி கூறியிருந்தான் மித்ரன்.
விபத்து குறித்து கேட்டதும் மனிதனுக்கு மாரடைப்பே ஏற்பட்டது போன்றதோர் வலி பரவி அடங்கியது.
வீட்டில் இருந்த அனைத்து பெண்களிடமும் பெரிதாக ஏதும் இல்லை என்று கூறியே மருத்துவமனை வரை சமாளித்து அழைத்து வந்து விட்டார் மனிதர்.
ஆனால் அதன் பிறகு அவரால் ஒன்றுமே செய்ய இயலாத நிலை தேவகி ஒரு பக்கம் கதற லக்ஷ்மியும் அக்ஷாவும் மறுபுறம் கதற யாரை பார்ப்பது யாரைத் தேற்றுவது என அல்லாடிக் கொண்டிருந்தார் அவர்.
இதில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியவள் தென்றல். வீட்டில் இருந்து கிளம்பும் போது எப்படி இருந்தாளோ அதே முக பாவனை அதில் எந்த வித மாற்றங்களும் இல்லை. மனதளவில் அவளுக்கு பெரிதாக ஏதும் ஆகி விட்டதோ என அஞ்சும் அளவுக்கு இருந்தாள். அனால் அவளே தனக்கு ஒன்றும் இல்லை தனியாக விடுங்கள் என்ற பிறகு தான் அனைவரும் அவரவர் கவலைகளில் ஆழ்ந்து போயிருந்தனர்.
மேலும் இரண்டு மணி நேரம் சென்ற பிறகு வெளியே வந்த மருத்துவர் இடதுபுற தலையில் ஏற்பட்டிருந்த பெரிய காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்திருப்பதாதவும், இதற்கு பிறகு அனைத்தும் அந்த கடவுளிடம் இருப்பதாகவும் கூறிவிட்டு பில் செட்டில் செய்து விடும் படியும் கூறி சென்றிந்தார்.
அதன் பிறகு அங்கு யாரையும் தேற்றும் படியாக இல்லை. அனைவரும் கதறி அழுத படியே இருக்க இப்பொழுதும் தென்றலிடம் மாற்றம் இல்லை. அனைவரையும் அவள் விசித்திரமாக பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு பைத்தியம் தான் பிடித்து விட்டது என்று நினைக்கும் படியாக இருந்தது அவளின் நடவடிக்கை.
தமிழும் ஒரு வேளைக்காக வெளியிடம் சென்றிருந்தவன். விபத்து குறித்து கேள்விபட்டு மருத்துவமனைக்கு அடித்துப்பிடித்து ஓடிவந்திருந்தான்.
அதே நேரம் மித்ரனும் அங்கு வந்து சேர அனைவரும் அவனை அணைத்து கொண்டு அத்தனை அழுகை ஆனால் அவனோ தென்றலையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனுக்கு விசித்திரமாக எதும் படவில்லை அவன் அறிந்திருந்தான் விவேகனின் வார்த்தைக்கும் அவனுக்கு இவள் கொடுத்த வாக்கிற்கும் இணங்கி அவள் இப்படி இருக்கிறாள் என.
அனைவரையும் அணைத்து ஆறுதல் கூறி அவர்களுக்கு தைரியம் சொல்லி அமைதி படுத்தியவன்,
தென்றலிடம் சென்று அவளுக்கு அருகில் அமைதியாக அமர்ந்து கொண்டான். அவளின் கையை பற்றியவன் அதற்கு மேல் தன் கையை வைத்து ஒரு அழுத்தம் கொடுத்து விட்டு கண் மூடி சாய்ந்து கொண்டான்.
அவளின் கையை பிடித்து கொண்டே, “அழுதுடு தென்றல் தயவு செய்து அழுதுடு இத்தனை வலியும் உனக்குள்ள தேக்கி வெச்சுக்காத உனக்கு நல்லது இல்லடா.” என வேதனையை விழுங்கிக்கொண்டு பேசியவன் அவள் முகத்தை பார்க்க,
முடியாது என அழுத்தமாக தலை அசைத்தாள் அவள். அதே நேரம் சரியாக தமிழும் வந்து சேர்ந்திருந்த்தான்.
இருக்கையில் இருந்து எழுந்த மித்ரன், “ஏன் முடியாது? ஏன்டி முடியாது? சொல்லு எனக்கு இப்போவே உண்மைத் தெரிஞ்சாகணும் சொல்லு சொல்லு…” என மித்ரன் அவளைப் போட்டு உளுக்க.
“ஏன் ஏன்னா? நான் அழ மாட்டேன்னு கண்ணாக்கு அவன் மேல சத்தியம் பண்ணி கொடுத்து இருக்கேன்டா மித்ரா. நான் இப்போ அழுதா சத்தியத்தை மீறிட்டா அவன் என்னை விட்டு பொய்டுவான் மித்ரா.” குரலை உயர்த்திக் கத்தவில்லை அவள் ஆனால் குரலில் அத்தனை அழுத்தம் அதனை விட அதிகமாக ஒரு நடுக்கம் இருந்தது.
“அதுக்காக அத்தனை அழுத்தத்தையும் உனக்குள்ளயே வெச்சுக்குவியா நீ? அழு உனக்குள்ள இருக்க எல்லாத்தையும் வெளியக் கொட்டு தென்றல் நீ இப்படியே இருந்து உனக்கு எதுனா ஆச்சுன்னா உன் கண்ணாகிட்ட யார் பதில் சொல்ல முடியும் அழுடி தயவு செய்து.” என மித்ரன் தென்றலின் காலில் விழாதக் குறையாக கெஞ்சிக் கொண்டிருந்தான்.
இத்தனை கலவரத்திலும் தமிழுக்கும் லக்ஷ்மிக்கும் நீண்ட நாட்களாக இருந்த அவர்களின் கேள்விக்கு விடைக் கிடைத்திருந்தது. ‘விவேகன் ஏன் தென்றலைக் கண்ணம்மா என்று அழைக்கிறான்? அது காதலில் காதலிகளுக்கே உரித்தான பெயராக மட்டுமே தோன்றியது இருவருக்கும்.
ஆனால் உண்மை என்னவோ தென்றலின் கண்ணன் விவேகன்.
கண்ணனுக்கு அம்மாவாகிய இவள் கண்ணம்மா…
கேள்விக்கான விடை கிடைத்த உடன் இருவரின் கவனமும் மித்ரனிடம் திரும்பியது.
அவன் எத்தனை கெஞ்சியும் தென்றல் சிறிது கூட அசைவேனா என்று அமர்ந்திருந்தாள். அவளைக் காண காண இவனுக்கு தான் பிபி ஏறியது. இத்தனை வேதனையையும் இவள் உள்ளடக்கினால் அது அவளுக்கு நல்லதில்லை என அவன் அறிந்திருந்தான்.
பொருத்து பொருத்து பார்த்து அவன் பளார் என்று அறையவும் ஐசியுவில் இருந்த செவிலி ஒருவர் ஓடி வந்து, “டாக்டர் பேஷண்ட்க்கு பல்ஸ் கம்மி ஆகிட்டே இருக்கு சீக்கிரம் வாங்க…” என கத்திக் கொண்டே போகவும் அத்தனை நேரம் நடப்பது அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அக்ஷா,
தென்றல் அருகில் சென்றவள் அத்தனை வேகமாக அவளை அடித்து விட்டு, “போதுமாடீ உனக்கு இப்போ சந்தோஷமா சுயநினைவே இல்லாம இருக்கும் போது கூட உனக்கு ஒரு வலினு சொன்னதும் அவன் துடிக்குறான் பார்த்தியா,
உனக்கு ஏன்டி துடிக்கல? உன் கண்ணு முன்னாடி அவன் உயிருக்கு போராடிட்டு இருக்கான். கொஞ்சமாச்சும் உன் கண்ணு கலங்குதா? கதறி துடிக்க வேண்டாம், ஒரு சொட்டு கண்ணீருக்கு கூடவா அவன் தகுதி இல்லாம பொய்ட்டான்.
ரொம்பவே மோசமான சுயநலவாதிடி நீ. உனக்காகவே ஒருத்தன் அவனுக்கான வாழ்க்கைய வாழாம உன் சந்தோஷம், உன் கஷ்டம், உன் இஷ்டம், உன் கோபம், உன் கண்ணீர் கடைசியா ஒன்னுக்குமே உதவாத உன் பயம். உனக்காக உனக்காகனு வாழ்ந்துட்டு இப்போ கடைசியா அவனுக்கான வாழ்க்கைய வாழமலே அவன் சாகப் போறான் ஆனா நீ அவனுக்காக அழ மாட்ட, அழு அழுனு நாளு பேரு உன்னைப் புடிச்சிட்டு தொங்கனுமா என்ன ஜென்மம்டி நீயெல்லாம். நீ உயிரோட இருக்குறதுக்கு செத்து போகலாம்.” என அத்தனை ஆவேசமாக அழுகையுடன் அக்ஷா பேசி முடிக்க.
‘உனக்காக அவன் வாழ்க்கைய வாழமலே சாகப் போறான்.’ என்ற அக்ஷாவின் வார்த்தையிலேயே தென்றலின் மனம் நின்று விட்டிருந்தது. பாலாவின் வார்த்தைகளும் எங்கோ கிணற்றுக் கடியில் இருந்துக் கேட்பது போல் இருக்க,
விவேகன் இருக்கும் அறையில் இருந்து வெளியே வந்த மருத்துவர் இல்லை என்பது போல தலை அசைக்க…
அசைவே இல்லாமல் இருக்கையில் இருந்து சரிந்து விழுந்தாள் தென்றல்.
அவள் கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிந்துக் கொண்டே இருந்தது.
இவள் சரிந்து விழவும் முதலில் வெளிய வந்த மருத்துவரைத் தொடர்ந்து வெளிய வந்த மருத்துவர், “சார் அந்த பேஷண்ட்க்கு மறுபடியும் பல்ஸ் வந்துடுச்சு.” என ஆச்சரியம் நிறைந்த குரலில் அவரையும் அழைத்துக் கொண்டு ஐசியுவில் நுழையவும்.
ஒரு பெரும் அதிர்ச்சியில் இருந்து வெளியே வந்த அனைவரும் அப்பொழுது தான் தென்றலை கவனித்தனர்.
“அய்யோ தென்றல்…” என மித்ரன் அவளை மடித் தாங்க தமிழ் தண்ணீர் கொண்டு வருவதற்கென விரைந்தான்.
அவளை சூழ்ந்து நின்று அனைவரும் தென்றல்… தென்றல்… என எத்தனை சத்தமாக அழைத்தும் அவளுக்கு கேட்கவில்லை. கேட்க முடியாத தொலைவிற்கு அவள் சென்றுக் கொண்டிருந்தாள்.
தமிழ் தண்ணீர் கொண்டு வந்து தெளித்தும் அவளிடம் அசைவே இல்லை. கண்ணீர் மட்டும் நிற்காமல் வழிந்து கொண்டே இருந்தது.
‘அழு அழு’ என அவளை அத்தனை தொல்லை செய்தவன், “அழாதடி உன் விவுக்கு ஒன்னும் ஆகல.” என சொல்லி அவள் கண்ணீரைத் துடைத்து துடைத்து ஓய்ந்து போனான்.
சிறிது நேரத்தில் தென்றலும் அதே தளத்தில் வேறொரு அறையில் அனுமதிக்க பட அவளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு கொண்டிருந்தது.
அந்த குடும்பமே இப்பொழுது யாரைப் பார்ப்பது? யார் யாரைத் தேற்றுவது என்றுத் தெரியாமல் மூலைக்கு ஒருவராய் முடங்கிப் போய் இருந்தனர்.
சிறிது நேரத்தில் விவேகன் இருந்த அறையில் இருந்து வெளியே வந்த மருத்துவர்கள். “இனி பயபடும் படியா ஒன்னும் இல்ல ஹீ இஸ் பர்ஃபெக்ட்லி ஆல்ரைட் இது ரொம்ப பெரிய அதிசயம் நீங்க வேண்டுன கடவுள் உங்கள கைவிடல தைரியமா இருங்க. அவருக்கு மயக்கம் தெளிஞ்சதும் ஒரு செக்கப் பண்ணிட்டு நார்மல் வார்டுக்கு மாத்திடுவோம் அப்புறம் நீங்க எல்லாரும் அவரைப் போய் பார்க்கலாம் அது வரைக்கும் பேஷண்ட டிஸ்டர்ப் பண்ண வேண்டாம் ப்ளீஸ்.” என்ற மருத்துவர்கள் இவர்களின் நன்றியைப் பெற்றுக் கொண்டு நகர்ந்து விட,
இப்பொழுது அனைவருக்கும் பயம் பிடித்துக் கொண்டது. கண் விழித்தவுடன் தென்றலை தான் விவேகன் முதலில் தேடுவான் அவனுக்கு என்ன பதில் சொல்வது என்பதனை நினைத்து.
இங்கு தென்றலை பரிசோதித்த மருத்துவர்கள், வெளியே வந்து “ரூம்க்கு வாங்க” என்ற அழைப்புடன் நடந்து விட்டார்.
அவரைத் தொடர்ந்து தர்மராஜ், மித்ரன், தமிழ் மூவரும் செல்ல.
அறைக்குள் வந்த அவர்களை அமர சொன்ன மருத்துவர்.
ஏதேதோ சொன்னார் பேசினார். அவள் நீண்ட நாட்களாக மன அழுத்தத்தில் இருந்திருக்கிறாள் என்றும் இன்று அந்த அழுத்தம் அதீத அளவிற்கு சென்றதால், இதற்கு மேல் அழுத்தத்தை தாங்க முடியாது என்ற நிலையில் ஒரு மாதிரியான ஆழ்ந்த தூக்கத்தில் அவள் இருப்பதாகவும் ஆனால் இது கோமா இல்லை எனவும் கூறியவர் எத்தனை நாட்களில் இது சரியாகும் என்று சொல்ல முடியாது என்றும் கூறியிருந்தார். அவர்கள் இருந்த குழப்பத்தில் இந்த அளவுக்குதான் புரிந்தது அவர்களுக்கு.
ஒரு மாதிரி மந்திரித்து விட்ட நிலையில் வெளியே வந்த மூவரும் அவள் மயக்க நிலையில் இருக்கிறாள் என்று மட்டும் சொல்லி விட்டனர், மற்ற பெண்களிடம்.
விவேகனுக்கு இப்பொழுது மயக்கம் தெளியும் அப்பொழுது தெளியும் என காத்திருக்க இரவு வரையிலுமே விவேகனுக்கும் மயக்கம் தெளியவில்லை. தென்றலும் சுயநினைவுக்கு வரவில்லை.
நேரம் நள்ளிரவையும் தாண்டி சென்றுக் கொண்டிருந்தது. தண்ணீர் கூட அருந்தாமல் அனைவரும் அதிதீவிர வேண்டுதலில் இருந்தனர். மறுநாள் விடிந்தும் இருவருக்கும் நினைவு திரும்பாத நிலையில் பெண்களை வற்புறுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
முழுதாக இரண்டு நாள் போராட்டத்தின் முடிவில் கண் விழித்திருந்தான் விவேகன். மருத்துவர்கள் சொன்ன படியே ஒரு செக்கப் செய்த பின்னர் நார்மல் வார்டுக்கு மாற்ற பட்டான் விவேகன்.
அனைவரும் அவன் இருந்த அறைக்குள் நுழைய அவனின் இடது புறம் முழுவதும் சேதமடைந்திருந்தது.
பெரிய பெரிய கட்டுகளுடன் கண் மூடி படுத்திருந்தான் விவேகன்.
அவன் அருகில் சென்று தேவகி அவன் தலையைத் தொடவும், “கண்ணம்மா” என்ற அழைப்புடன் கண் விழித்தவன் அங்கே தேவகியைக் கண்டதும் புருவ மத்தியில் சுழிப்புடன் அவரைப் பார்த்தவன்.
“டார்லிங் எப்படி இருக்க.” என்றான் சிரித்த முகத்துடன் ஆனால் அவன் மனதில் தென்றல் தான்சுற்றிக் கொண்டிருந்தாள்.
“எல்லாரையும் பயமூர்த்திடியேடா.” என தேவகி கண் கலங்கவும், அவரை அமைதி படுத்தியவன் மற்றவர்களை பார்த்து சிரிக்க அவர்களும் அவனின் நலம் விசாரித்தனர்.
மித்ரன் மட்டுமே அதிகமாக கதறிவிட்டான். அவன் ஒருவனைத் தேற்றவே போதும் என்றாகி விட்டது விவேகனுக்கு.
அனைவரிடமும் பேசிவிட்டு, “தென்றல் எங்க டார்லிங்?” எனவும் அனைவருக்கும் தூக்கி வாரி போட்டது.
சற்றே நிதானித்த தேவகி உடனே அவரின் கோபத்தை ஆயுதமாக்கி, “அவளைப் பத்தி பேசாதடா சின்ன ஆக்ஸிடண்ட் தான் ஒன்னும் ஆகலனு சொன்னத கேட்காம அழுது அழுது மயங்கி விழுந்துட்டா பக்கத்து ரூம்ல தான் படுக்க வெச்சு இருக்கு கொஞ்ச நேரத்துல எழுந்து வந்துடுவா நீ கம்முனு ரெஸ்ட் எடு நாங்க வெளிய வெய்ட் பண்றோம் டாக்டர் உன்ன தொல்ல பண்ண கூடாதுனு சொல்லி இருக்கார்.” என மடமடவென பேசியவர் அவன் பேச இடமே கொடுக்காமல் அனைவரையும் வெளியேத் தள்ளிக் கொண்டு வந்துவிட்டார்.
இப்படி எத்தனை நாட்களுக்கு சமாளிக்க முடியும் என்று அவருக்கு தெரியவில்லை. பிள்ளை நலமாக வந்து விட்டான் என்று சந்தோசமாக இருக்கவும் முடியாமல், பிணம் போல அசைவின்றி இருக்கும் மகளை நினைத்து கதறவும் முடியாமல், தொண்டைக்குள் முள் சிக்கிக் கொண்ட நிலையில் அவர் மட்டுமின்றி அங்கிருந்த அனைவரும் தவித்துக் கொண்டிருந்தனர்.
தென்றல் பேசும்…