அன்பின் உறவே… 16

அன்பின் உறவே… 16

அன்பின் உறவே – 16

பிரஜேந்தரின் சிறிய வீட்டில் ரவீணாவிற்கு தாலி பிரித்து கோர்க்கும் (தாலி பெருக்கி போடுதல் – பேச்சு வழக்கு) சம்பிரதாயத்தை நடத்திட முடிவு செய்தார் சரஸ்வதி.

தலைகீழாய் நின்றாலும் மகன், மனைவியை விட்டு வரமாட்டான் என்பது தெளிவாகப் புரிந்து விட, அவனை எவ்வாறு வீட்டோடு அழைத்துக் கொள்வதென சிந்திக்கத் தொடங்கினார். தானாகச் சென்று அழைக்கவும் அவரின் தன்மானம் இடம் கொடுக்கவில்லை.

மகனை நினைத்து மனம் குழம்பிய நேரத்தில் இந்த சம்பிரதாயம் செய்யாதது நினைவிற்கு வர அதனையே கெட்டியாக பிடித்துக் கொண்டார். திருமணம் முடிந்து இன்னும் ஒருமாதம் முழுமையாகாத நிலையும் அவரின் முடிவிற்கு சாதகமாய் அமைந்து போனது.

வீட்டை விட்டு விலகி இருந்தாலும் தங்கள் குடும்பத்தில் வாழ வந்த பெண்ணிற்கு நடக்க வேண்டிய முறைமைகளை தவறாது நடத்தி முடித்திட வேண்டுமென்று கணவரிடம் சட்டமாய் கூறிவிட்டார் சரஸ்வதி.

“பெரியவங்களா முன்னாடி நின்னு கல்யாணம் நடத்தி வைச்சதோட உங்க பொறுப்பு முடியல, எப்படியிருந்தாலும் அவ இந்த வீட்டு மருமக… அவளுக்குரிய செய்முறைகளை முறையா செஞ்சு அப்படியே இங்கே கூட்டிட்டு வந்துடுங்க!” இரண்டு மருமகள்களிடமும் பொறுப்பினை ஒப்படைத்து விட்டு ஒதுங்கிக் கொண்டார். எப்படியாவது மகன் வீட்டோடு வந்து சேர்ந்தால் போதுமென்றே பெற்றவரின் மனம் கணக்கு போட்டுக் கொண்டது.

வீட்டுப் பெரியவராக, மூத்த சுமங்கலியான அம்பிகாவின் அம்மா சுந்தரி கிராமத்தில் இருந்து வரவழைக்கப்பட்டு, அவரின் கைகளால் அன்றைய சம்பிரதாயங்கள் செய்ய முடிவும் செய்யப்பட்டன.

அண்ணியாக இருந்தபொழுதே சரஸ்வதியிடம் மென்று முழுங்கிப் பேசும் சுந்தரி, பெண்ணைக் கட்டிக்கொடுத்த பிறகு சம்மந்தியிடம் தலையாட்டும் பொம்மையாகவே மாறியிருந்தார்.

சரஸ்வதியின் உத்தரவை அம்பிகாவும் பிரதீபாவும் வந்து பிரஜேந்தரிடம் கூற, முதலில் வேண்டாமென்று முறுக்கிக் கொண்டவன், ‘அனைத்தும் உனது நல்வாழ்விற்கே’ என்ற அண்ணிகளின் அடுத்தடுத்த அறிவுரையில் சரியென்று சம்மதித்துவிட்டு வெளியே சென்று விட்டான்.

சிறிது நேரத்தில் மனைவியை அலைபேசியில் அழைத்து, “ஜி-பே ல அமௌன்ட் ட்ரான்ஸ்ஃபர் பண்ணியிருக்கேன் பிங்கி! நாளைக்கு ஃபங்சனுக்கு என்னென்ன தேவையோ கேட்டு வாங்கி வை. உன் கார்டு யூஸ் பண்ண வேணாம். அவங்களையும் குடுக்க வைக்காதே” கறாராய் கூறிவிட, இதை எப்படி எடுத்துக் கொள்ளவதென அவளுக்கு புரியவில்லை.

“அவங்ககிட்ட எப்படி இதை சொல்றது ப்ரஜூ?” கேட்டவள் அதற்கு மேல் வார்த்தை வராமல் தடுமாற,

“நமக்கு யாரோட தயவும் வேண்டாம் பிங்கி, சொல்றதக் கேளு… வேலையிருக்கு, முடிஞ்சதும் நான் கூப்பிடுறேன்” பேச்சினை முடித்துக்கொண்டு தனது காரியங்களில் இறங்கி விட்டான். 

திருதிருவென முழித்த ரவீணாவிடம் என்னவென்று பிரதீபா சைகையால் கேட்க, கணவன் கூறியதை அப்படியே ஒப்பித்தாள் ரவீணா.

“இவர் அடங்க மாட்டாரு… அவங்கம்மா வாயில விழுந்து எழனும்னு விதியிருந்தா, அது மாறவா போகுது?” பிரதீபா அலுத்துக் கொள்ள,

“இந்த அழகுல எப்படி இவரை அவங்கம்மாகிட்ட கூட்டிட்டு போயி நிப்பாட்டுறது?” கவலையுடன் யோசித்தாள் அம்பிகா.

இந்த சந்தர்ப்பத்தில் ரவீணாவிற்கும் தனது தாயின் நினைவு வர, “நாளைக்கு விசேசத்துக்கு அம்மாவ கூப்பிடலாமாக்கா?” தயக்கத்துடன் கேட்டாள்.

“சம்மந்தக்காரங்களை நம்ம வீட்டுல ஏத்துக்க இன்னும் கொஞ்சநாள் ஆகும் ரவீணா. உன்னை வந்து பார்த்துட்டு மட்டும் போகச் சொல்லு” அம்பிகா கூற,

“மொதல்ல நீ, நம்ம வீட்டுல சகஜமாகிக்கோடா… அடுத்து அவங்களை முறையா கூப்பிட்டுக்கலாம்” பிரதீபாவும் அதையே வலியுறுத்தி சொல்ல, ரவீணாவே தன் அம்மாவிற்கு அலைபேசியில் அழைப்பு விடுத்தாள்.

சுகந்திக்கும் மகளை விட்டால் தனக்கு யார் இருக்கிறார்கள் என்ற சுய அலசலில் வருகிறேன் என்று பதிலளித்தவர், அன்றையநாளின் செலவினை முழுவதும் தானே ஏற்றுக் கொள்வதாகவும் கூறிவிட்டார்.

இதனை மறுத்த அம்பிகாவிடம் சம்மந்த முறை, சீர் வரிசையாக பார்க்காமல், பிரியத்துடன் கொடுக்கும் அன்பளிப்பாக ஏற்றுக்கொண்டே ஆக வேண்டுமென்று வலியுறுத்தி கூறி, தனது முடிவில் நிலையாக நின்றுவிட்டார் சுகந்தி.

இந்த விஷயத்தை பிரஜேந்தரிடம் கூற மூன்று பெண்களும் மறந்து போயினர். அடுத்தடுத்த ஏற்பாடுகளை துரிதமாக கவனிக்கும் மனநிலையில் மூவரும் வெளியில் சென்று, மறுநாளுக்கு வேண்டிய பொருட்களை வாங்கிவிட்டு மதிய விருந்திற்கான கேட்டரிங் ஏற்பாட்டினையும் முடித்துவிட்டு வந்தனர்.

இரவில் வீட்டிற்கு வந்தவனிடமும், மறுநாள் தாயின் வருகையைச் சொல்ல மறந்து போனாள் ரவீணா. அனைத்தும் தற்செயலாக நடந்துவிட, மறுநாளின் விடியலோ அதனை வேறு விதமாய் அரங்கேற்றி வைத்தது.

“மருமகள விட்டுக் கொடுக்காம பேசத் தெரியுற உன் மாமியாருக்கு, உரிமையா இங்கே வந்து எடுத்து செய்யத் தெரியலையா?” மறுநாள் காலையில் பிரஜேந்தரின் வீட்டில் வந்து நின்ற சுந்தரி மகளிடம் நொடித்து கொள்ள,

“இதுக்கு அவங்க பதில் எப்படி இருக்கும் தெரியுமா? என் வீட்டு மருமகளா இருந்தாலும் என் மரியாதையை விட்டுட்டு இறங்கி வர மாட்டேன்னு முடிப்பாங்க. இப்ப மச்சினர் தன் பொண்டாட்டியோட பெத்தவங்க கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கிட்டா போதும். அவங்களை வீட்டுக்குள்ள சேர்த்துக்கற முடிவுலதான், இத்தனை அவசரமா செய்ய வைக்கிறாங்க…” உடைத்து பேசினாள் அம்பிகா

“வேலையில்லாம கஷ்ட ஜீவனம் ஓட்டுற மகனை பார்க்க எந்த அம்மாவுக்குதான் மனசுல தைரியம் இருக்கும். கெத்து குறையாம, தான் நினைச்சதயும் சாதிக்கிறதுல நம்ம அயர்ன்லேடிய அடிச்சுக்க ஆளே இல்ல” நமட்டுச் சிரிப்பில் பிரதீபா கிசுகிசுத்த நேரத்தில் சுகந்தியும் வந்து சேர்ந்தார்.

முதல்முதலாய் மகளின் வீட்டிற்கு வருபவர், ஆசை மகளுக்கென்று அனைத்தையும் அள்ளிக் கொண்டு வந்திருந்தார்.

இனிப்பு, பழம், பூவில் தொடங்கி, ஒன்பது வகைகளை வரிசைத் தட்டுக்களில் அலங்கரித்து வைத்தார். மகளுக்கென பட்டு, சல்வார், சேலை என பல ரகங்களும் மருமகனுக்கு ஏற்றவாறு பல உடைகளும் டிராலிகளில் அடுக்கிக்கொண்டு வந்திருந்தார். தங்க நகைகளும் தனியாக மூன்று டப்பாக்களில் இருந்தன.

இவர்களின் திருமணம் நடந்த முறைக்கு இவையெல்லாம் செய்யவேண்டிய அவசியமில்லை என்றாலும் பெத்தமனம் மகளுக்கு செய்ய கணக்கு பார்க்குமா என்ன? ஆசையும் பாசமும் போட்டிபோட அனைத்தையும் கொண்டுவந்து நின்றவரை புருவமுடிச்சுடன் பார்த்தான் பிரஜேந்தர்.

ரவீணாவின் பெற்றோர்களின் பார்வையில் இதுநாள் வரை இகழ்ச்சியாக, எள்ளலாக பார்க்கபட்டவனின் மனம், சுகந்தியின் அமர்க்களமான வரவை எதார்த்தமாக எடுத்துக் கொள்ளவில்லை. மாமியாரின் வருகையை துளியும் விரும்பாமல் வெளிப்படையாகவே முகம் சுளித்துக் கொண்டான்.

அன்னை வந்ததும் துள்ளிச் சென்று அவரை அணைத்துக் கொண்ட மனைவியின் மலர்ந்த முகத்தை பார்த்து, தனது அதிருப்தியை தனக்குள் புதைத்துக் கொண்டான் பிஸ்தா. இன்று ஒருநாள் தானே இந்த அவஸ்தை என்று சமாதானம் செய்து கொண்டவனுக்கு, மாமியார் கொண்டு வந்து இறக்கிய வரிசைப் பொருட்களைப் பார்த்து வெறுப்பாகிப் போனது.

“இதெல்லாம் திருப்பி எடுத்துட்டுப் போகச் சொல்லு ரவீ! எனக்கு பிடிக்கல” மனைவியின் காதில் கிசுகிசுக்க, அது லேசுபாசாய் அம்பிகாவின் காதிலும் விழுந்தது.

“இப்படி சொல்றது ரொம்ப தப்பு தம்பி… அது அவங்களை மரியாதை குறைவா நடத்துற மாதிரி ஆகிடும்” எதிர்விளைவினை எடுத்துக் கூறி அமைதிப்படுத்தினாள் அம்பிகா.

“இந்த ஒருதடவை மட்டும் எதுவும் சொல்லாதே ப்ரஜூ! இனிமே கொண்டுவர வேணாம்னு அம்மாகிட்ட நானே சொல்லிடுறேன்” ரவீணா மெதுவாகக் கூறும்போதே அவளின் முகம் களையிழந்து போனது.

‘முகத்த சுருக்காதடீ’ என பார்வையில் கடுத்தவன், பல்லைக் கடித்துகொண்டு நடப்பதை அமைதியாக வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.

தான் வாங்கிக் கொடுத்த திருமணப் பட்டை உடுத்திக்கொண்டு மனனயில் அமர்ந்திருந்த மனையாளின் அழகினை ரசிக்கத் தொடங்கினான். திருமண நாளன்று இருவருக்குள்ளும் நடந்த போராட்டங்களும் விவாதங்களும் தான் எத்தனை எத்தனை… அதற்கு மனைவி வடித்த கண்ணீரை அத்தனை எளிதில் மறந்துவிட முடியுமா?

அவற்றை எல்லாம் தோற்கடிக்கும்படியாக இன்றைய நாளினை சிறப்பாக்கிக் கொள்ள வேண்டுமென்று முடிவெடுத்துக் கொண்டவன், வேறெதிலும் மனதை திசை திருப்பவில்லை. தொழில் சம்மந்தமான அழைப்புகளை கூட பாதிநாள் நிறுத்தி வைத்திருந்தான் பிரஜேந்தர்.  

“இன்னைக்கும் நான்தான் தாலிச்செயின் போடுவேன் பிங்கி… பெரியவங்க போடணும், சாஸ்திரம் சம்பிரதாயம்னு சொல்லி யாரும் என்னை தடுக்கக்கூடாது” ஆசை பொங்கச் சொன்னவனை வம்பிழுக்க ஆரம்பித்தாள் பிரதீபா.

“மச்சினரே! இது பொம்பளைங்க சமாச்சாரம். நலங்கு வைக்கிறப்போ உங்களை கூப்பிடுறோம். அதுவரைக்கும் ஓரமா நின்னு வேடிக்கைப் பாருங்க”

“முடியாது அண்ணி… என் பொண்டாட்டிக்கு நான்தான் எல்லாம் செய்வேன். இன்னைக்கு நாங்க இரண்டாவது தடவையா கல்யாணம் பண்ணிக்கப் போறோம், அப்படித்தானே ரவீ!” பொதுவில் கேட்டு மனைவியை முகம் சிவக்க வைத்தவன் அங்கேயே அமர்ந்து கொண்டான்.

“இந்த கிழவிக்கு செத்த(சிறிது) நேரம் உன் பொஞ்சாதி பக்கத்துல ஒக்கார இடங் குடு ராசா! அப்புறமா இருக்குறநாள் மூச்சூடுமா நீயே, அவ மடியில இருந்துக்கலாம்” சுந்தரி வகையாய் கிண்டலடித்து அவனை விரட்டி விட, அப்பொழுதும் எழுந்து நின்றானே தவிர வேறிடம் அசையவில்லை.

மஞ்சள் கயிறை கோர்க்க அமர்ந்த சுந்தரியின் முன், பதினைந்து பவுனில் தாலிச்செயின் சரஸ்வதியின் சார்பாக வைக்கப்பட, சுகந்தியும் தான்வாங்கி வந்திருந்த தங்கக்காசு, பவளம், குண்டு, குழாய், மாங்காபிஞ்சு போன்றவைகள எடுத்து வைத்தார்.

சிறுசிறு பொருட்களே ஆனாலும் கணிசமான எண்ணிக்கையில் அதிக எடையில் வாங்கியிருந்தார் சுகந்தி. அத்துடன் இரண்டு வகையான தங்கநகை செட்டையும், மருமகனுக்கு தங்ககாப்பும், மைனர் செயினையும் சபையில் எடுத்து வைக்க, வெளிப்படையாகவே தனது எதிர்ப்பினை காட்டிவிட்டான் பிரஜேந்தர்.

“என் பொண்டாட்டிக்கு செய்ய நான் இருக்கேன். அவ கழுத்துல தொங்கப்போற தாலி முழுக்க முழுக்க நான் வாங்கிப் போட்டதா இருக்கணும்” என்றவன் தனது சட்டைப்பையில் வைத்திருந்த சிறிய டப்பாவினை வெளியில் எடுத்தான்.

ஐந்து பவுனில் செயினும் அதோடு பொருந்தக்கூடிய வகையில் பொருத்தமான இதர பொருட்களும் அதில் அடங்கியிருந்தன.

‘இதற்கும் கடன் வாங்கினாயா’ என்றே பார்வையால் கேட்ட ரவீணா, இன்னும் எத்தனை சுமைகளைத்தான், தனக்காக தாங்கிக் கொள்ளப் போகிறான் என நினைத்து மனம் வெதும்பிப் போனாள்.

பிரஜேந்தரின் பேச்சை ரசிக்காத சுந்தரி அத்தையும்  “பெரியவங்க செய்யுறத தடுக்கக்கூடாது தம்பி, உங்க வாழ்க்கைக்கு அவங்களோட ஆசீர்வாதமா அதெல்லாம் உங்ககூடவே வரணும்” தன்மையாக எடுத்து கூற, பிடிவாதமாக மறுத்தான் பிரஜேந்தர்.

“இவங்க இதையெல்லாம் கொண்டு வந்து வைக்கும்போதே நான் வேண்டாம்னு சொல்லிட்டேன் அத்தை. ஆனாலும் அதை வெளிப்படையா சொன்னா மரியாதை இருக்காதுன்னுதான் அமைதியா இருந்தேன்” என்றவன்,

தான் வாங்கிய தாலிச்செயினை கைகளில் எடுத்துக் கொண்டு, “இது என் உரிமையா, என் பொண்டாட்டி கழுத்துல இருக்க வேண்டியது. இத வாங்கின ஒவ்வொரு பைசாவும் என்னுடையதா இருக்கணும்னு ஆசைப்படுறேன். வேற யாரோட பங்கும் இதுல இருக்க  விடமாட்டேன். அதுக்காகதான் எங்க வீட்டுல இருந்து குடுக்குற செயினைக் கூட நான் வேண்டாம்னு சொல்றேன். இதை ஏன் இவ்வளவு தப்பா பார்க்கறீங்க?” தனது நியாயத்தை கூறியபடியே மஞ்சள் கயிற்றில் தங்கக்காசினை கோர்க்க ஆரம்பித்தான்.

அவனது செயலை தனதாக்கிக் கொள்ள இடையிட்ட சுந்தரியிடம், “உங்க கையால எடுத்துக் கொடுங்க. அதுபோதும் அத்தை. நகைகடைக்காரனுக்கு அழகாவே கோர்க்க வரும்” புன்னைகை மாறாமல் ஒழுங்காய் கோர்த்து முடித்தவனை யாரும் எதுவும் சொல்ல முன்வரவில்லை.

வேண்டாமென்று சொன்னால் விட்டுவிடவா போகிறான் இந்த பிஸ்தா? இவனது அடாவடிகளும் பிடிவாதங்களும் ஊரறிந்த விசயமாதலால் நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டு அனைவரும் அமைதியாக நின்று விட்டனர்.

வீட்டு வேலையாட்களும், அருகில் தையலகத்தில் பணிபுரியும் பெண்களும் பிரஜேந்தரின் செயலை சிலாகிப்புடன் விழியகலாமல் பார்த்துக் கொண்டிருந்தனர். மனைவியின் மீது எத்தனை அன்பும் ஆசையும் இருந்தால் இப்படி பலரின் முன் அமர்ந்து தாலியில் காசுகளை கோர்ப்பான் என ரகசிய சிரிப்பில் கிசுகிசுக்கத் தொடங்கினர்.

சடங்கு முடிந்து நலங்கு ஆரம்பித்தும் வாய் ஓயாமல் குற்றமாய் சொல்லிக் காண்பித்தவர் சுந்தரி மட்டுமே. இருவீட்டு பெற்றோர் கொடுத்ததை மறுத்தது, அவர்களை அவமதித்ததற்கு சமானம் என்று புலம்பிக்கொண்டே விழாவினை சிறப்பாக நடத்திக்  முடித்தார்.

அதன் பிறகு வந்திருந்த அனைவருக்கும் ரவிக்கை துணியுடன் கூடிய தாம்பூலப் பை கொடுக்கப்பட்டு விருந்து உபசரிப்பும் சிறப்பாக நடைபெற்றது.

விழா நிறைவாக முடிந்தாலும் மருமகனின் நிராகரிப்பும், அவன் முகம் பார்த்தே மகளும் தன்னிடம் தயங்கித் தயங்கிப் பேசுவதும் சேர்ந்தே சுகந்திக்கு பெரும் மனத்தாங்கலை ஏற்படுத்தியது.

‘எனக்கிருக்கும் ஒரே பெண்ணிற்கு செய்யவும் இனிமேல் இவனது அனுமதி வாங்க வேண்டுமா’ என ஆதங்கப்பட்டுக் கொண்டவரின் மனதில் பல யோசனைகள் தோன்ற ஆரம்பித்தன. இறுதியில் அம்பிகாவிடம் சரஸ்வதியை, தான் சந்தித்து பேச விரும்புவதாகக் கூற, மருமகள்கள் தர்ம சங்கடத்தில் நெளிந்தனர்.

“அது… எல்லா சடங்கு முடிஞ்சதும் அத்தை(சரஸ்வதி) ரெண்டுபேரையும் வீட்டுக்கு கூட்டிட்டு வரச் சொல்லிட்டாங்க சித்தி. இப்ப நீங்க மட்டும் பார்த்து பேசணும்னா அது எப்படி நினைப்பாங்களோ தெரியலையே?” சமாளிப்பாய் அம்பிகா கூற,

“நீங்களும் ஃபங்சன் முடிஞ்ச பிறகு கொஞ்சநேரம் இங்கேயே ரெஸ்ட் எடுங்க. ஈவ்னிங் ரிலாக்ஸாகிட்டு பேசலாம்” பிரதீபாவும் தனது யோசனையை முன் வைத்தாள்.

“நான் வந்த கொஞ்ச நேரத்துக்கே உங்க மச்சினர் முகம் சுளிச்சுட்டு நிக்கிறாரு… சாயந்திரம் வரைக்கும் நான் இங்கேயே இருந்தா, என் பொண்ணை கண்ணால பார்த்தே பொசுக்கிடுவாரு என் மாப்பிள்ளை. இருக்கிற ஒத்த பொண்ணையும் இப்படி கஷ்டப்படுத்தி பார்க்கவா நான் இங்கே வந்தேன்?

பத்து நிமிஷம் உன் மாமியாரைப் பார்த்து பேசிட்டு போயிடுறேன் அம்பிகா. வீட்டுல தண்ணி கேட்டு வர்றவங்க கூட ரெண்டு வார்த்தை பேச மாட்டாங்களா… அப்படி என்கூட பேசட்டும்” எனக் கூறியவர், யாருடைய துணையுமின்றி சரஸ்வதியின் முன்னால் போய் நின்றார்.

“நான்தான் ரவீணாவோட அம்மா, சுகந்தி” தன்னைத்தானே அறிமுகப்படுத்தி கொண்ட சுகந்தியை கேள்வியாகப் பார்த்தார் சரஸ்வதி.

வீட்டின் ஹாலில் கருணாகரனுடன் அவர் அமர்ந்திருக்க, தடாலடியாக வந்து நின்றவரை என்னவென்று கேட்கும் முன்னமே, தன் பெயரைக் கூறி அறிமுகப்படுத்திக் கொண்டதில், கணவன் மனைவி இருவருக்குமே நொடிநேர அதிர்ச்சி வந்து விலகியது.

“வாங்க… உக்காருங்கம்மா” தணிவாகப் பேசிய கருணாகரன் சூழ்நிலையை இலகுவாக்கினார்.

“சரசு, பிரதீபாவை வரச் சொல்லி, இவங்களுக்கு காபி குடுக்க சொல்லு” என்றவரின் குரலில், வந்த விஷயமென்ன என்ற கேள்வி ஒளிந்திருந்தது.

“இன்னைக்கு இந்த பங்ஷன் எடுத்து நடத்த சொன்னதுக்கு நன்றி சொல்ல வந்தேன் சார்.  விலகி நின்னாலும் பெரியவங்க மேற்பார்வையில ஒரு நல்ல காரியம் நடக்குதுன்னா அதை விட சந்தோசம் வேற எதுவுமில்ல. எல்லாமே நிறைவா முடிஞ்சது.  உங்க மகனும் என் பொண்ணை விட்டுக் கொடுக்காமல் பேசினது இன்னும் சந்தோசமா இருக்கு” முகம் மலர்ந்து பேசிய சுகந்தி மறந்தும் பிரஜேந்தரின் மறுப்பையோ விலகலையோ கூறவில்லை. 

தனக்கான வருத்தங்களையும் சங்கடங்களையும் வெளியில் கூறிக்கொள்ள விரும்பாமல், உள்ளத்தில் பூட்டி வைத்து கொண்டார். இப்படி செய்வது இவருக்கொன்றும் புதிதல்லவே!

“எல்லாம் நல்லவிதமா நடந்தா சந்தோசம்தான்” பட்டும்படாமலும் பேசிய சரஸ்வதி மேற்கொண்டு என்னவென்று பார்த்த நேரத்தில் இரண்டு மருமகள்களும் உள்ளே வந்தனர்.

மகனும் மருமகளும் எங்கே என பார்வையால் கேட்ட மாமியாரிடம் அழைத்துவர முடியவில்லை என்று கையை விரித்து, உதட்டை பிதுக்கினாள் அம்பிகா.

சுகந்திக்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுத்த பிரதீபாவும் அப்படியே சைகை செய்ய, முகத்தில் கடுப்பினை ஏற்றிக் கொண்டார் சரஸ்வதி.

எத்தனையோ விதமாய் அண்ணிகள் அழைத்தும் பங்களாவிற்கு வர மறுத்திருந்தான் பிரஜேந்தர். அவன் அங்கே முரண்டுபிடிக்க இங்கே சுகந்தியும் அவனைப் பற்றிக் கூறவே அமர்ந்திருந்தார்.

“இத்தன நாள் எப்படியோ இருந்திருக்கலாம். ஆனா, இனிமேலாவது பெரியவங்க சொல்பேச்சு கேட்டு, நல்லவங்க  சகவாசத்தோட உங்க பையனை இருக்கச் சொல்லுங்க” திடீரென பேச ஆரம்பித்த சுகந்தியை திடுக்கிட்டு பார்த்தனர் அனைவரும்.

“நீங்க என்ன சொல்ல வர்றீங்க?” வெடுக்கென்று கேட்ட  அம்பிகாவின் பார்வை சுகந்தியை ஊடுருவிப் பார்த்தது.

“இன்னைக்கு போல என்னைக்கும் என் பொண்ணை உங்க பையன் தாங்கனும்னு பொண்ணை பெத்தவளா ஆசைபடுறேன்.  ஆனா, அது பொய்யாப் போயிடுமோன்னு எனக்கு பயமா இருக்கு” சுகந்தியின் குரல் வருத்தத்தில் ஒலிக்க, ‘இது வேறா” என சரசு முகம் சுளித்தார்.

“இப்படியெல்லாம் உத்திரவாதம் வேணும்னா, நீங்க உங்க மாப்பிள்ளைகிட்ட தான் நேரடியா பேசணும்” சரஸ்வதி வெட்டிவிட்டுப் பேச,

“அவர், என்கூட பேசியிருந்தா நானும் இதைப் பேச இங்கே வந்திருக்க மாட்டேன்” பதிலளித்த சுகந்தியின் பேச்சில் அனைவரும் அமைதியாக நின்றனர்.

“நான் வேலைக்கு போறவ… நான் வீட்டுல இல்லாத நேரம் தினமும் யார் யாரோ ஃபோன் பண்றாங்க. என் அம்மாகிட்ட பேசுறாங்க. உங்க பையன் பேரைச் சொல்லி, ரவீணாவுக்காக அவங்களை மோசம் பண்ணிட்டு போயிட்டதா இன்னும் என்னென்னமோ சொல்றாங்க… இப்ப எல்லாம் நான் வீட்டுல இருக்கற நேரமாப் பார்த்தும் பேசுறாங்க” சுகந்தி கூறிக்கொண்டே வர, சரசு வெகுண்டு விட்டார்.

“அன்னைக்கு உங்க புருஷன் போலீசோட வந்து என் பையனை தலைகுனிய வைச்சுட்டு போனாரு, இன்னைக்கு  வீண்பழி போட்டு என் மகனை அவமானப்படுத்த நீங்க வந்திருக்கீங்களா?” உஷ்ணக் குரலில் கேட்க,

“எனக்கு அந்த கீழ்த்தரமான ஆசையெல்லாம் இல்லங்கமா. உங்க பையனோட சுபாவம் என் பொண்ணோட வாழ்க்கையை காவு வாங்கிடுமோன்னு நிமிசத்துக்கு நிமிசம் பயந்து நடுங்கிட்டு இருக்கேன்” தழுதழுத்த குரலில் சற்றே உரக்கப் பேசினார் சுகந்தி.

பேச்சுவார்த்தைகள் சூழ்நிலையை விபரீதமாக்குவதை உணர்ந்த கருணாகரன் பிரஜேந்தரை அழைத்துவிட்டார்.

“உன் மாமியாரோட கேள்விக்கு, இங்கே வந்து பதில் சொல்லிட்டுப் போ!” அலைபேசியில் அழைத்த தந்தையின் அழைப்பில் அடுத்த நிமிடமே மனைவியுடன் அங்கே வந்து நின்றான் பிரஜேந்தர்.

என்ன ஏதென்று விஷயம் தெரியாமல் வந்து நின்றவன், தனது கோபத்தை எல்லாம் மனைவியின் கையை அழுத்திப் பிடித்ததில் காண்பிக்க, “வலிக்குதுடா, கையைக் கொஞ்சம் விடேன்!” முனுமுனுத்த ரவீணாவின் பேச்சு சரஸ்வதியின் காதிலும் விழ, பார்வையாலேயே மருமகளை பஸ்பமாக்கி விட்டார்.

“எங்க முன்னாடியே புருஷனை மரியாதையில்லாம பேசுவியா? உள்ளே வந்ததும் பெத்தவங்க கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கணும்ங்கிற சின்ன விஷயம் கூடத் தெரியல உனக்கு. இதுல உங்கம்மா என் பையனை குத்தம் சொல்ல வந்துட்டாங்க” தனது கோபத்தை எல்லாம் மருமகளின் மேல் கொட்டித் தீர்த்துக் கொண்டார் சரஸ்வதி.

“ம்மா… எதுக்கு கூப்பிட்டீங்களோ அதை மட்டும் பேசுங்க… வீணா அது தெரியல, இது செய்யலன்னு நிக்க வைச்சு கேள்வி கேக்காதீங்க… அதுக்கு நாங்க ஆளும் இல்ல, எங்களுக்கு நேரமும் இல்ல” கடுகடுத்த பிரஜேந்தர்,

“என்ன தப்பு கண்டுபிடிச்சீங்க என் மேல?” நேரடியாகவே சுகந்தியிடம் கறாராய் கேட்டான்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!