mp1
mp1
மது பிரியன் 1
சிவகங்கை மாவட்ட பொதுப்பணித் துறையில், மிகவும் இளவயதில் டிஎன்பிஎஸ்சி தேர்வு வழியே உதவிப் பொறியாளராக பதவியேற்ற விஜயரூபன், தற்போது எட்டு ஆண்டுகள் பணி அனுபவத்தோடு, அதே மாவட்டத்தில், வெவ்வேறு அலுவலகங்களில் பணியாற்றி, தற்போது சருகுணியாறு வடிநிலக் கோட்டத்தில் பணியாற்றி வருகிறான்.
விஜயரூபன் பெயருக்கும், அவனுக்கும் சம்பந்தமில்லாமல் இருப்பான். ஆனால் ஒழுக்க, பழக்கவழக்கங்களில் நேர்த்தியானவனாய், அவனது ஊரில் உள்ளவர்களால் ஆரம்பம் முதல் இன்றுவரை அறியப்பட்டான்.
பார்த்ததும் பிடிக்கும்படியான வசீகரத் தோற்ற அமைப்பில்லாதவன். ஆனால், பார்க்கப் பார்க்க, பழகப் பழக, அமிர்தத்தைக் காட்டிலும் இனிமையானவன். நேர்மையானவனும்கூட.
பழகிய யாரும் எட்டிநில் என அவனைக் கூற மாட்டார்கள். ஐந்தடி ஒன்பதங்குலம் உயரத்தில், தலையில் அடங்காத முடியுடன், அடர்த்தியான மீசையுடன், சிரிக்க மறுக்கும் இறுகிய உதடுகளுடன், மாநிறத்தில், எப்போதும் ஏதோ யோசனையில், அடியாள் தோரணையில் இருப்பான்.
விவசாயக் குடும்பத்தில் பிறந்து, தங்களின் தீராத துயரை உணர்ந்து, நன்கு படித்து, நல்ல இந்நிலைக்கு வந்திருந்தான்.
பொறியியல் படிப்பை முடித்த இரண்டு ஆண்டிற்குள், தனது இருபத்து மூன்று வயதிலேயே அரசுப்பணியில் அமர்ந்தவனை, ஊரே மெச்சியது. ஆரவாரமில்லா அமைதிக்குச் சொந்தக்காரன். பிறந்தது வேறு மாவட்டம். ஆனாலும் பணி வாய்ப்பு காரைக்குடியில் கிட்டியதும், அங்கேயே தனது ஜாகையை மாற்றிக் கொண்டிருந்தான்.
தந்தை பூரணசந்திரன் தற்போது உயிரோடு இல்லை. தாய் இசக்கியம்மாள், அவர்களின் பூர்வீகத்தை விட்டுவிட்டு, மகனுடன் வந்து தங்க எப்போதுமே விரும்பாதவர். ஆகையினால், அவ்வப்போது தாயை தனது பூர்வீகமான திருப்புல்லாணியில் வந்து நேரில் சந்தித்துச் செல்வான் விஜய்.
தமக்கை ஒருத்தி. பாரிஜாதம். பெயருக்கு ஏற்றாற்போல மென்மையான நல்ல மனதும், இளகிய உள்ளமும் படைத்த குணவதி.
பாரிஜாதத்திற்கும், விஜயரூபனுக்கும் இடையே அதிக வயது வித்தியாசம். விஜயரூபனுக்கு பத்து வயதிருக்கும்போதே திருமணமாகிச் சென்றிருந்தார் பாரிஜாதம். அதுமுதலே அவருக்கு ஒரு ஆசை. தனக்குப் பிறக்கும் மகளை, தனது தம்பிக்கு திருமணம் செய்துவைக்க வேண்டும் என்பதே அது. ஆனால் அவரின் ஆசை நிறைவேறாததால், அடுத்தடுத்து ஆண் குழந்தைகளைப் பெற்று, அதிருப்தியோடிருந்தார்.
ஆம், ஐந்தும் ஆண்பிள்ளைகள். தற்போது அவரின் கடைக்குட்டி, வசீகரன் தனது ஒரே தாய்மாமனோடு, அவன் பணிபுரியும் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அவனோடு தங்கியிருந்து, பள்ளிக் கல்வியை மேற்கொண்டு வருகிறான்.
தனது தம்பியின் மீது கொண்ட பற்றின் காரணமாக, மூன்று ஆண்டுகளாகவே, இளைய மகனை அவனோடு தங்க வைத்திருந்தார். அதாவது தனது தம்பி வேளைக்கு ஆகாரம் உண்டு, திருப்தியாய் பணிக்குச் சென்று வருகிறானா? இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டியே மகனை இங்கு விட்டு வைத்திருக்கிறார்.
பட்ட காயங்களும், அவமானங்களும் இன்னும் பசுமரத்தாணிபோல நெஞ்சில் பதிந்திருக்க, அதிலிருந்து மீண்டும் அதன் வடுக்கள் இன்னமும் மறையாமல் இருப்பதால், எதிலும் விழிப்போடு இருக்கப் பழகியிருந்தார் பாரிஜாதம்.
தம்பி, மகன் இருவருக்கும் சமையல் மற்றும் வீட்டு வேலைகளைக் கவனிக்க, பராமரிக்க என பஞ்சவர்ணம் என்பாரை சில ஆண்டுகளாய் நியமித்திருந்தார், பாரிஜாதம்.
………………………………………………………………
சிவகங்கையில் கண்காணிப்பு பொறியாளரின் கீழ் நடைபெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு வெளிவந்த விஜயரூபனை, சந்திப்பு முடிந்து அழைத்த உயரதிகாரி, “நாளைக்குதான விஜய், மேரேஜ்னு சொன்னீங்க”
“ஆமா சார்”
“ஈவினிங் ஆச்சு. லீவ் அப்ளை பண்ணதாச் சொன்னாரே? இப்பவரை இங்க உக்காந்திட்டு இருக்கீங்க” சிரிப்போடு வினவினார்.
“ட்டூ டேஸ் லீவ் அப்ளை பண்ணிருக்கேன் சார். இனிமே கிளம்பினா போயிரலாம்” என பவ்வியமாய் தனது கையில் இருந்த திறன்பேசியை திறந்து, அதில் நேரம் பார்த்தபடியே பதில் கூறியவனிடம் “ரெண்டு நாள்தானா? உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா”, என்றவர், “பெர்சனலா உங்ககிட்ட ஒரே ஒரு விசயம் மட்டும் சொல்லணும்னு நினைச்சேன் விஜய். சொல்லலாமா?”
முதன்முதலாக விஜய் பணியில் சேர்ந்தபோது, அவன் பணிபுரிந்த இடத்தில், அவனுக்கு செயற்பொறியாளராய் இருந்து, தற்போது பதவி உயர்வில் மூன்று மாவட்டங்களுக்கும் கண்காணிப்பு பொறியாளராய் பதவியேற்றிருந்தார் அந்த அதிகாரி.
ஓரளவு விஜயரூபனின் கடந்த காலத்தைப் பற்றி, அவனது நேர்த்தியான பணியைப் பற்றி, அவனது குடும்ப சூழல் மற்றும் வாழ்க்கையைப் பற்றி அறிந்திருந்தமையால் ஒட்டுதலோடு அவனின் மீதான அக்கறையில் அவ்வாறு பேசத் துவங்கியிருந்தார்.
விஜய், “கண்டிப்பா சார்”
“எதையும் ரொம்ப மண்டைக்குள்ள ஏத்திக்காதிங்க. அது லைஃபா இருந்தாலும் சரி, வயிஃபா இருந்தாலும் சரி, வேலையா இருந்தாலும் சரி. வேற எதுவா இருந்தாலும் சரி.”
“…” அமைதியாகக் கேட்டுக் கொண்டான் விஜய்.
“…நம்மளால முடிஞ்சதை செய்யறோமுங்கிற திருப்தி வர அளவுக்கு நல்லா வேலை பாக்கணும். அதில திருப்தி நமக்கு இருந்தா, அதுக்குமேல எதையும்போட்டு வர்ரி பண்ணிக்கக் கூடாது”
“…” தன்மீது அக்கறை கொண்டிருந்த மனிதரின் வார்த்தைகளை, அசரீரிபோல மிகுந்த அனுஷ்டானத்தோடு கேட்டுக்கொண்டிருந்தான் விஜய்.
“..அதேமாதிரி, ஒத்து வந்தா, வாழ்க்கைய அதுபோக்குல வாழ வேண்டியது. ஒத்துவர மாதிரித் தெரியலைனா, அதுக்கும் எதாவது சொலுயூசன் இருக்கும். அதை கண்டுபிடிச்சு அப்ளை பண்ணிட்டுப் போயிட்டே இருக்கணும். ஆனா நம்மை நாமே எப்பவும் வதைச்சிக்கறதோ, கஷ்டப்படுத்திக்கிறதோ, சங்கடப்படுத்திக்கிறதோ கூடாது. இந்த உடம்பு நம்ம காலம் உள்ளவரை நல்லா இருக்கணும். அந்த நினைப்போட எந்த வேலைனாலும் செய்யணும். அதை யோசிக்காம எந்த சிக்கல்லயும் மாட்டிட்டு, அதில இருந்து மீளக் கஷ்டப்பட்டு, அப்டி, இப்டினு இடியாப்பச் சிக்கலாக்கிக்கக் கூடாது வாழ்க்கைய. நான் என்ன சொல்ல வரேன்னு விஜய்கு புரியும்னு நினைக்கிறேன்”
“புரியுது சார்”
“கடந்து போன விசயங்களை விட்டு, முழுமையா வெளியே வந்திட்டீங்கன்னு நம்பறேன். இனி எல்லாம் நல்லா இருக்கும்னு முழுமையா நம்புங்க. ஆல் தி பெஸ்ட்” என அவர் கூறியதும், விஜய் புன்முறுவலோடு விடைபெற்றான்.
அடுத்த நாள் அவனுக்கு திருமணம் என்பதே அவனோடு பணிபுரியும் பெரும்பாலானோருக்குத் தெரியாது. விடுப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டிய கட்டாயத்தின் பேரில் மட்டுமே சொந்த அலுவல் என போட்டிருந்ததை, அவனது உயரதிகாரி வினவ, அவரிடம் மட்டும் உண்மையைக் கூறியிருந்தான்.
அவருக்கும் அவனது கடந்த காலம் தெரிந்திருந்தமையால், அதுபற்றி விவாதிக்க விரும்பாது, ஆனால் அவருக்கும் உயரதிகாரியான இவரிடம் மட்டும் கூறியிருக்க, இவருக்கு விசயம் தெரிய வந்திருந்தது.
விசயம் தெரிந்த இருவருமே அங்கிருக்க, வாழ்த்துக் கூறிய இருவரிடமும் விடைபெற்றுக் கிளம்பியிருந்தான் விஜய்.
வேண்டாம் என விஜய் எவ்வளவோ மறுத்தும், இந்தத் திருமணத்தை ஏற்பாடு செய்திருந்தனர், தாயும், தமக்கையும்.
……………………………….
ஆறு மணிக்கு வீடு திரும்பியவன், தயாராக இருந்த தமக்கையின் மகன் வசீகரனுடன் திருப்புல்லாணி நோக்கிக் கிளம்பினான். அங்கிருந்து இரண்டரை மணி நேரப் பயணம்.
இடையில் பாரிஜாதம் மட்டும் விஜயிக்கு அழைத்துப் பேசினார்.
“என்ன விஜய், கிளம்பிட்டீங்களா?”
“ஆமாக்கா”
“சரி, நேருல வாங்க. பேசிக்கலாம்”
“வசீகிட்ட எதாவது பேசணுமாக்கா”
“அவங்கிட்ட என்னாத்தைப் பேசப் போறேன். இன்னும் ஒரு மணி நேரத்தில இங்க இருப்பீங்க. அப்ப பேசிக்கலாம். இப்ப வைக்கிறேன்” என வைத்திருந்தார்.
………………………………………
திருப்புல்லாணி அருகே உள்ள கிராமத்தில், அத்தையின் தயவில் இருந்த மதுராகிணிக்கு, ஒரு வாரத்திற்கு முன்புதான் அவளின் திருமண விசயம் பகிரப்பட்டிருந்தது.
‘உண்மையிலேயே, எனக்குக் கல்யாணமா? இல்லை இது என் கனவா?’ என அன்று முதல், இன்று வரை அவளுக்குள்ளாகவே கேள்வியாகக் கேட்டுக்கேட்டு அலுத்துப் போயிருந்தாள் மதுரா.
அதற்குக் காரணம் இருந்தது. அவளின் அத்தை சௌந்திரத்திற்கு, இரண்டு பெண் மக்கள். இருவருமே மதுராவைவிட இளையவர்கள்தான். அவர்களைக் காட்டிலும் வயதில் மூத்த மதுரா வீட்டில் இருக்க, அவர்கள் இருவருக்கும் ஜாம்ஜாம் என்று அடுத்தடுத்து திருமணம் முடித்து அனுப்பியதைப் பார்த்தவளுக்கு, ‘கடைசிவரை அத்தைக்கு சோறாக்கிப் போட்டுட்டுச் சாவு வந்ததும் போக வேண்டியதுதான்’ என அத்தனை உணர்வுகளும் வற்றிப் போயி வாழப் பழகியிருந்தாள்.
இருபத்தெட்டு வயதில் அத்தனை உணர்ச்சிகளையும் துடைத்து, கன்னியாஸ்திரியைப்போல வாழப் பழகியிருந்தவளை, உனக்குத் திருமணம் என்று கூறினால் எப்டி இருக்கும்.
சட்டெனக் கூறியதும், பதற்றமும், தனக்கு திருமண வாழ்வு செம்மையாக அமையுமா? தன்னால் அதில் ஒன்றி, சிறந்த குடும்பத் தலைவியாக பொறுப்பேற்று அதற்கேற்றாற்போல தன்னை மாற்றிக் கொள்ள முடியுமா? என குழப்பம் வேறு வந்திருந்தது மதுராவிற்கு.
மதுராகிணி சிறுவயதிலேயே பெற்றவர்களை இழந்திருக்க, அவளின் அத்தையின் பொறுப்பில் இருக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியிருந்தாள்.
அதுமுதலே சம்பளம் இல்லாத வேலைக்காரியாக, அத்தைக்கும், அவளின் மக்களுக்கும் தனது அர்ப்பணிப்பைக் காட்டியிருந்தவளுக்கு, அத்தை சமீபத்தில் வந்து கூறிய அவளின் திருமணச் செய்தி, உண்மைதானா என்பதையே முந்தைய நாள் வரை ஏற்றுக் கொள்ள முடியாத நிலை.
அதைவிட மாப்பிள்ளைபற்றி கேட்க எண்ணி வாயைத் திறந்தவளிடம், “திக்கு தெரியாத இடத்தில எங்கேயும் கொண்டுபோயி தள்ளிவிட்டுருவேனா? அப்டிப்பட்டவளா இருந்தா, உன்னைய இத்தனை வருசம் வச்சிப் பாத்திருப்பேனா? இவ்ளோ நாள் உன்னை வச்சிப் பாத்ததுக்கு என்னைய இப்டிக் கேட்டு அசிங்கப்படுத்திட்டியே!” எனக் கதறி, அதற்குமேல் மதுரா வாயைத் திறவாதபடி வாயை அடைத்திருந்தார் சௌந்திரம்.
அதன்பின் ஐந்து நாள்களும் அவளுக்கு வேண்டிய சேலை எடுத்து அதற்கேற்ப ரவிக்கைகள் எடுத்து தைக்கக் கொடுப்பது, என சென்றிருந்தது. மொத்தமே ஐந்து சேலைக்கே அவ்வளவு மெனக்கெடல்களைக் கொட்டியிருந்தார் சௌந்திரம். அதுவரை தீபாவளிக்கு மட்டுமே ஒரு சேலை என்றிருந்தது, ஒரே நேரத்தில் தனக்கு ஐந்து சேலை என்றதும் மதுராவிற்குமே மலைப்பாகிப் போனது.
நடப்பதை எல்லாம் கனவோ என அவ்வப்போது கேட்டு தன்னை நடப்பிற்கு கொண்டு வந்தாள். திடசித்தம் இன்றி, தடுமாறும் மனநிலையில் இருந்த மதுராவிடம் திருமணத்திற்கு முந்தைய தினம் வந்த சௌந்திரம், “உங்க ஆத்தாவோட ஃபிரண்ட்டு ஒருத்தி வருவாளே. அவளுக்குப் போனைப் போட்டுச் சொல்லிரு. இல்லைனா வீ வீனு வந்து நிப்பா” என தனது திறன்பேசியை மதுராவிடம் நீட்ட, பெற்றுக் கொண்டவள், “அத்தை, எனக்கு நாளைக்கு கல்யாணம்னு சௌந்திரம் அத்தை உங்ககிட்டச் சொல்லச் சொன்னாங்க”
“என்னம்மா சொல்ற? நாளைக்குக் கல்யாணமா? உங்க அத்தைக்கிட்ட போனைக் குடு” என்றவர், அடுத்தடுத்து சௌந்திரத்திடம், மாப்பிள்ளை பற்றி, இதர விசயங்கள் பற்றிக் கேட்க, அனைத்தையும் கூறியவர், ஒரே ஒரு செய்தியை மட்டும் மறைத்திருந்தார்.
எங்கு திருமணம், மாப்பிள்ளை யார்? என்ன வேலை? பத்திரிக்கை அடிக்கவில்லையா? எந்த மண்டபத்தில் திருமணம் இதுபோன்ற முக்கிய கேள்விகளைக் கேட்டதற்கே, “என்னமோ இவ குடுத்த காசுல, உன்னை வளத்து, நான் எல்லாம் பண்றமாதிரி, என்ன அதிகாரமாக் கேள்வி கேக்கறா? உன்னைப் பெத்தவகூட எங்கிட்ட இப்டிப் பேசப் பயப்படுவா? என் நேரம் இவளுக்கெல்லாம் பதில் சொல்லிக்கிட்டு இருக்க வேண்டியதா இருக்கு” எனப் பொறுமலோடு அமர்ந்திருந்தார் சௌந்திரம்.
முக்கிய விசயங்களையே மணப்பெண்ணிடமுமே மறைத்துத்தானே இந்தத் திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார் சௌந்திரம்.
எதையும் அறியாத மதுராகிணி, சௌந்திரத்தின் கணவர் மற்றும் மகள்களின் குடும்பத்தையும் அழைத்துக் கொண்டு, அடுத்த நாள் அதிகாலையில் உள்ள முகூர்த்தத்திற்கு முந்தைய நாளின் மாலையே திருப்புல்லாணியில் இருக்கும்படி கிளம்பி வந்திருந்தார் சௌந்திரம்.
விஜயின் வீட்டிலேயே மணமக்கள் வீட்டார் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விஜய் சம்பாத்தியத்திற்குப்பின் கட்டிய புது வீட்டில், அவனது குடும்பம் இருக்க, அவர்களின் பழைய வீட்டில் மதுராவும் அவளின் அத்தை வீட்டாரும் தங்கியிருந்தனர்.
விஜய் வந்தபின்பு, பழைய வீட்டிலிலேயே வைத்து நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெற்றது.
தரிசாகக் கிடந்த தனது மனதில், விஜயரூபனைக் கண்டதும் எந்த உணர்வுமே தோன்றவில்லை மதுராகிணிக்கு.
அன்றைய நிச்சயதார்த்த நிகழ்வே கனவு போலிருந்தது மதுராவிற்கு.
விடியல்வரை கனவிற்கும், நனவிற்கும் இடையே அல்லாடியவள், காலை முகூர்த்தத்திற்காக வந்திறங்கிய, தாயின் தோழியைக் கண்டதும், கட்டிக் கொண்டு கண் கலங்கினாள் மதுரா.
“அத்தை, எனக்குப் பயமாயிருக்குத்தை”
“உனக்கு கடவுள் எந்தக் குறையும் வைக்க மாட்டாரு மதுரா. நீ இனி நல்லா இருப்ப”
“யாரு, என்ன எதுவுமே எனக்குத் தெரியலையேத்தை”
“அப்டித்தான் நம்ம பக்கம் கட்டிக் குடுப்பாங்க. போயி வாழ்ந்துதான் பாரேன்”
“அதுதான் பயமாருக்கு”
“மாப்பிள்ளை என்ன புலியா, சிங்கமா? பாத்துப் பயப்பட. அவங்களும் நம்மளை மாதிரி மனுசங்கதான”
“போங்கத்தை, நீங்க ஈஸியா சொல்றீங்க”
“வேற என்னடீ சொல்ல. ஏதோ கடவுள் இந்த மட்டுக்கும் உம்மேல கருணை வச்சி, இந்தப் பாடாவதி பொம்பிளைகிட்ட இருந்து காப்பாத்துனாரேன்னு சந்தோசப்படாம, இப்ப வந்துகிட்டு பயமா இருக்கு. அது இதுன்னு புலம்பிகிட்டு இருக்க. நம்ம ரெண்டு பேரும் என்ன பேசறோம்னு அது காதுல விழுகலபோல. சுத்தி சுத்தி வரா. சரி சமத்தாப்போயி கல்யாணம் பண்ணிட்டு, சந்தோசமா வாழுவியாம். எதுனா எனக்கு போனைப் போடு” என மதுராவை அங்கிருந்து அனுப்பினார், அவள் தாயின் தோழி பிரேமா.
பிரேமாவிற்கு சந்தேகம். மிகவும் வசதியற்ற குடும்பத்தில் திருமணம் செய்து கொடுப்பதால் பத்திரிக்கையெல்லாம் பற்றி யோசிக்கவில்லையோ என நினைத்திருந்தவருக்கு, மணமகனின் குடும்பத்தைப் பார்த்ததும் சந்தேகம் வலுத்தது.
யாரிடம் சென்று மாப்பிள்ளையைப் பற்றி விசாரிக்கலாம் என சுற்றிலும் பார்வையை வீசினார் பிரேமா. ஆனால் திருமணம் முடியும்வரை அப்டி ஒரு வாய்ப்பு அவருக்கு அமையவே இல்லை.
திருப்புல்லாணி ஆதிஜெகனாத பெருமாள் கோவிலின் அம்மன் கல்யாணவல்லி / பத்மாசினித் தாயாரின் முன்னிலையில் வைத்து, விஜயரூபன், மதுராகிணியின் கழுத்தில் மங்கலநாண் சூட்ட, விஜயின் அக்கா பாரிஜாதம் இறைவனை நெக்குருகி, “பத்மாசினித் தாயே, எந்தம்பிக்கு இந்த வாழ்க்கையிலயாவது, ஏற்கனவே இழந்துபோன நிம்மதியையும், சந்தோசத்தையும் மீட்டுத் தந்து, அவன் குழந்தை குட்டின்னு, நீண்ட ஆயுளோட மட்டற்ற சந்தோசத்தோட வாழ அருளணும் தாயே” என வேண்டியவாறே இரண்டாவது மூன்றாவது முடிச்சுகளைப் போட்டார்.
திருமணம் முடிந்ததும், கோவிலைச் சுற்றி வந்தனர் தம்பதியர். மதுராவின் வலக்கையைப் பிடித்தபடியே விஜய் காலெட்டி நடக்க, அவனது பின்னே ஓட்டமும், நடையுமாய் சுற்றி வந்தாள் மதுரா.
மதுராவின் தடுமாற்ற நடையைக் கண்டு கொண்ட பாரிஜாதம், தம்பியின் அருகே வந்து, “மெதுவாப் போ விஜய். அவளும் உங்கூட ஈடுகுடுத்து வரணும்ல” என மெதுவாகக் கூற
தமக்கையின் பேச்சைக் கேட்டு, நடையை சற்றே மெதுவாக மாற்றினான்.
சம்பிரதாயங்கள் முடிந்து அனைவரும் மணமகனின் வீட்டிற்குச் செல்ல, சௌந்திரம் கோவிலோடு கிளம்பும் முயற்சியில் இருக்க, “என்ன பொண்ணைக் கொண்டு வந்து விட்டதோட, யாரோ மூனாவது மனுச கணக்கா இப்டியே கிளம்புறீங்க. வாங்க. பக்கத்திலதான் வீடாம். வீட்டுக்குப் போகாம இப்டியே கிளம்பிப் போனா நல்லாவா இருக்கும்” என பிரேமா அழைக்க, தவிர்க்க இயலாமல், முணுமுணுப்போடு கிளம்பினார் சௌந்திரம்.
மதிய உணவிற்கு வீட்டின் பின்புறத்திலேயே ஏற்பாடு செய்திருந்தனர். வந்த சொற்ப வெளியூர் நபர்களோடு, அவ்வூரின் முக்கியஸ்தர்கள் அனைவரும் நேரில் வந்து மணமக்களை வாழ்த்திச் சென்றனர்.
மதுராவிற்குமே மனதிற்குள் கேள்விகள் கொட்டிக் கிடந்தது. ஆனால் அதை யாரிடம் சென்று கேட்டு, பதிலறிவது என்பதுதான் புரியவில்லை.
பிரேமாவும் மாலை வரை இருந்துவிட்டு, சௌந்திரம் குடும்பம் கிளம்பியபின் மதுராவிடம் சொல்லிக்கொண்டு, மணமகனான விஜயை நேரில் சந்தித்து, “நான் மதுரா அம்மாவோட ஃபிரண்ட் பிரேமா. மதுரா ரொம்பச் சின்ன வயசிலேயே பெத்தவங்களை இழந்து ரொம்பக் கஷ்டப்பட்டுட்டா. இனியாவது அவளை நீங்க சந்தோசமா வச்சிக்கணும். அவ ரொம்ப நல்ல பொண்ணு” என
முதலில் மதுரா என்ற வார்த்தையில் யாரைப்பற்றித் தன்னிடம் பேசுகிறார் என்பதே புரியாமல் நின்றவன், அதன்பின் அன்றைய நாளின் முக்கிய நிகழ்வின் சாராம்சத்தை எண்ணி, தனது மனைவியாக வந்தவளின் பெயர்தான் அது எனப் புரிந்ததும், புன்முறுவல் தோன்ற, தலையை ஆட்டியே அவருக்கு தனது சம்மதத்தைத் தெரிவித்தவன், “நீங்க? எந்த ஊரு” எனக் கேட்டான்.
“நான் காளையார்கோவில்ல இருக்கேன்பா. என்னோட நம்பர் மதுராவுக்குத் தெரியும். எதுனாலும் எங்கிட்ட ஒரு வார்த்தை சொல்லுங்க. முடிஞ்சா அப்பப்போ வந்து நேருல பாக்கிறேன்” என அனைவரிடமும் கூறிக்கொண்டு, அவனது வேலை பற்றிய விசாரணையையும் அவனிடமே வைத்து, சற்று விபரங்களைச் சேகரித்து, நிம்மதியோடு விடைபெற்றிருந்தார் பிரேமா.
சௌந்திரம் கிளம்பும்போது அழுகை வராமல் திடமாய் நின்றிருந்தவள், பிரேமா கிளம்பியதும் சிறு குழந்தைபோல தேம்பித் தேம்பி அழத் துவங்கியிருந்தாள் மதுரா.
பாரிஜாதம் மதுராவை அறைக்குள் அழைத்துச் சென்று, முகத்தைக் கழுவி சீர் செய்து, “நல்ல நாளுமா அதுவுமா அழுகலாமா? நாங்கல்லாம் இருக்கோம்ல. இனி இப்டி அழக்கூடாது” எனும் கண்டிப்போடு ஹாலில் கொண்டு வந்து மீண்டும் நிறுத்தினார்.
அதேநேரம் மணமக்களைக் காண வந்த மூதாட்டி, “இவதான்பு இனி உனக்கு” என விஜயைப் பார்த்துக் கூறியவர், மதுராவின் புறம் திரும்பி, “ அந்த பெருமாளுக்கு ஏத்த அலமேலு இவதான்” என மதுராவின் முகம் வருடி கண்ணூறு கழித்தார்.
“அந்தக் கேடு கெட்டவளுக்கு உங்கூட வாழக் குடுத்து வைக்கலைப்பு. இவளுக்குத்தான்னு குடுத்து வச்சிருக்கும்போது, அந்த இடத்தில வேற எவளாவது வந்து அரசாட்சி பண்ண நினைச்சா, அது நடக்குமா? அதுதான் இம்புட்டுச் சோதனையும். இனி எந்தக் குறையும் வராது” என வீராவேசமாக பேசியபடியே திருநீற்றை விஜய்கும், குங்குமத்தை மதுராவிற்கும் பூசிவிட, அவரின் பேச்சில் இருந்த விசயம் கேட்டு, திகைப்போடு திணறி நின்றிருந்தாள் மதுராகிணி.
கேடு கெட்டவள் என யாரைக் குறிப்பிடுகிறார். யாராக இருக்கும்? அந்த அவளுக்கும், இவருக்கும் எப்படி, என்ன சம்பந்தம்? ஏன் இந்த மூதாட்டி ஏதோ ஒரு பெண்ணைப் பற்றி இங்கு வந்து தன்முன் பேச வேண்டும்? என யோசனையோடு நின்றிருந்த மதுராவிற்கு, அது யார் எனத் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற வேட்கை அதிகரித்தது.
மதுரா அது யார் எனத் தெரிந்து கொண்டாளா?
…………………………………………………………………………….