அன்பின் உறவே…3

அன்பின் உறவே…3

அன்பின் உறவே – 3

‘பிஸ்தா பேலஸ்’ பளபளப்பான பெயர்ப் பலகையைத் தாங்கியிருந்த அந்த பிரம்மாண்டமான மாளிகையின் சுறுசுறுப்பான காலைப்பொழுது வழக்கமாக ஆரம்பமாகி இருந்தது.

வீட்டின் பின்புறமும், காம்பவுண்டை சுற்றியும் வளர்க்கப்பட்டிருந்த பப்பாளி, மாதுளை, கொய்யா, மாமரங்களும் இதர காய்கறி, பூ செடி கொடிகளும் தங்களின் பசுமை வனப்பை காலை வணக்கமாய் தெரிவித்துக் கொண்டிருந்தன. வாசலை அடைத்துப் போடப்பட்டிருந்த பெரிய கோலம், அந்த பங்களாவின் அழகை மேலும் மெருகூட்டிக் காட்டியது.

அன்றைய காலை நேரத்தில் ஹிந்தி டியுசனுக்கு தன் இரு மகன்களையும் அனுப்பி விட்ட அம்பிகா, ரசனையுடன் கோலத்தைப் பார்த்தபடியே கேட்டில் சொருகியிருந்த செய்தித்தாளை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றாள். அந்த வீட்டின் பெரிய மருமகள்

சமையலறையில் சாம்பாருக்கு தாளித்து விட்டு, கொத்தமல்லி சட்னி அரைப்பதற்கான வேலைகளை கவனிக்கத் தொடங்கினாள் பிரதீபா, அந்த வீட்டின் இரண்டாம் மருமகள்.

இவர்கள் இருவருக்கும் மாமியாரான சரஸ்வதி, தனது தினப்படி வேலையான விஷ்ணு சகஸ்ரநாமத்தை  பாராயணம் செய்துகொண்டு பூஜையறையில் அமர்ந்திருந்தார். இறை வழிபாடும் வீட்டு நிர்வாகமும் சேர்ந்து இவரை சுறுசுறுப்பாக இயங்க வைத்துக் கொண்டிருக்கிறது. மிகவும் கண்டிப்பான பேர்வழி.

வசதி வாய்ப்பென பல சௌகரியங்கள் இருந்தாலும் சமையலறை சாம்ராஜ்ஜியத்தை வீட்டுப் பெண்கள் மட்டுமே கையாள வேண்டுமென்பது அந்தப் பெரிய வீட்டின் பரம்பரை வழக்கம்.

குடும்பத் தலைவரான கருணாகரன் தனது வழமையை மறக்காதவராய் டி-சர்ட், ஷார்ட்ஸ் அணிந்து நடைப்பயிற்சிக்கு புறப்படும் நேரத்தில், வீட்டிலேயே அரைத்துத் தாயாரித்த அருகம்புல் சாறைக் கொண்டு வந்து கொடுத்தாள் அம்பிகா.

“பிள்ளைங்க டியூசன் போயிட்டாங்களா மா? உன் புருஷன் எந்திரிச்சுட்டானா?” டம்ளரை வாங்கியபடியே மாமனார் கேள்விகள் கேட்க,

“பசங்க கிளம்பியாச்சு மாமா… அவருக்கு இன்னும் சேவல் கூவல…” மெதுவாகச் சொல்ல, முகத்தில் அதிருப்தி காட்டினார் கருணாகரன். மிகக் கறாரான பேர்வழி, சிறந்த வியாபாரி,

“இதென்ன பழக்கம்? சொந்தத் தொழில் பண்றவன் விடிஞ்சதும் வியாபாரத்தை பாக்க போக வேணாமா? இவனே பொறுப்பில்லாம இருந்தா, இவனுக்கடுத்து இருக்கறவங்களுக்கு எப்படி பொறுப்பை எடுத்துச் சொல்லிப் புரிய வைக்கிறது?” தன் மூத்த மகனான ரவீந்திரனை சாடிக்கொண்டே, நடைபயிற்சிக்கு சென்றார்.   

வழக்கமான மாமனாரின் பேச்சில் மனம் நொந்த அம்பிகா, கணவனைத் எழுப்ப தங்களின் அறைக்குச் செல்ல, அவனோ கண்களைத் திறவாமல் மனைவியின் மடியில் தலைவைத்து தூக்கத்தை தொடர்ந்தான்.  

முப்பத்தைந்தை முழுங்கிய காதல் மன்னன் இந்த ரவீந்தர். மனைவியிடம் இவன் செய்த காதல் அலும்புகளில் இரண்டு சிங்கக்குட்டிகளை திருமணமான அடுத்தடுத்த வருடங்களில் தொடர் பரிசுமழையாக அளித்திருந்தான். அவனுக்கேற்ற  மனைவியாக அம்பிகாவும் கணவனுடன் நன்றாகவே இழைந்து கொள்வாள்.

“உங்கப்பா எவ்வளவு சுறுசுறுப்பா எழுந்து வாக்கிங் போறார். நீங்க என்னடான்னா இன்னும் பாதி தூக்கம்னு சொல்லி, சோம்பேறிக் கழுதையாட்டமா இருக்கீங்க!” கேட்டுக்கொண்டே அவன் கன்னத்தில் முழங்கையால் இடித்தாள் அம்பிகா.

“டெய்லி அக்கவுண்ட்ஸ் வீட்டுக்கு கொண்டு வரச் சொல்லி பார்க்கறதோட அப்பாவோட வேலை முடிஞ்சிடுது. பிள்ளைங்கள வியாபாரத்த பார்க்கச் சொல்லிட்டு இவர் ஹாயா வீட்டுல இருக்கார். ராத்திரி ஒன்பது மணிக்கே படுத்துத் தூங்கறவருக்கு காலையில சீக்கிரம் எழுந்து வாக்கிங் போறது கஷ்டமா அம்பி?” கண்ணைத் திறக்காமலே பேசிக் கொண்டிருந்தான் ரவீந்தர்.

“நேத்து நைட் எத்தனை மணிக்கு நான் வந்தேன்னு தெரியுமா அம்மணி? நான் வரும்போது நீயும் உன் பிள்ளைகளும் நல்லா குறட்டை விட்டு தூங்கிட்டு இருந்தீங்க!” என்றவாறே மனைவியின் இடையை அணைத்துக் கொள்ள,

“சின்னவனை தூங்க வைக்க பக்கத்துல இருந்ததுல அப்டியே நானும் தூங்கிட்டேன் மாமா! நீங்க எத்தனை மணிக்கு வந்தீங்க?” விசாரிப்புடனே இடையை அளந்து கொண்டிருந்தவனின் நெற்றியில் முத்தமிட்டாள் அம்பிகா.

“ஆமா… இப்ப வந்து மெதுவா கேளு! வியாபாரம் முடிச்சு கணக்கு வழக்கெல்லாம் நேர்பண்ணி அர்த்த ராத்திரியில வர்ற புருசனுக்கு ஒருடம்ளர் பால் சூடு பண்ணிக் கொடுக்க கூட இவளுக்கு முடியலையாம். இதுல நான் சோம்பேறின்னு அட்வைஸ் வேற…” என்றவன் தனது அத்துமீறலை ஆரம்பிக்க, சுதாரித்து கணவனை தள்ளி விட்டாள்.

“ஐயோ விடுங்களேன்… டியூசன் போன புள்ளைங்க இப்ப வந்துடுவாங்க… அடுப்படியில நான் இல்லைன்னா அத்தை ஏலம் விட்டுடுவாங்க என்னைய…” என்றவாறே கணவனின் மீசையை ஆசையுடன் திருகினாள் அம்பிகா.

“அதுக்கு நீ அடுப்படியிலேயே இருந்திருக்கணும் பொண்டாட்டி… என் தூக்கத்தை டிஸ்டர்ப் பண்றவ, என்னோட டிஸ்ரபன்சையும் சகிச்சுக்கோ…” சீண்டலுடன் அவளை  இழுத்து வைத்து மீண்டும் மடியில் தலை வைத்துக் கொண்ட நேரம், “அம்பிகா!” என்று கீழே மாமியார் அழைக்கும் குரல் கேட்டது.

“ஐயோ அத்தை கூப்பிடுறாங்க, விடுங்க மாமா!” அவனைப் பிடித்து தள்ளிவிட்டு வேகமாக அறையை விட்டு வெளியே சென்ற மனைவியை புன்னகை மாறாமல் பார்த்துக் கொண்டிருந்தான் ரவீந்தர்.

சிறுவயதிலிருந்தே அம்பிகாவின் மேல் உண்டான பிடித்தம் திருமணத்தில் சுபமாக முடிந்தது. சொந்த மாமன் மகளை வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொள்ள குடும்பத்தார் அவனிடம் கேட்டபோது, மாற்று யோசனையை அவன் செய்யவே இல்லை.

சொந்த பந்தத்தோடு சொத்துபத்தும் விட்டுப் போகாமல் இருக்க, அம்பிகாவை இவனுக்குக் கட்டி வைத்தார்கள். மருமகளாக இவள் வந்த நேரத்தில், வணிகவளாகத்தின் கட்டிட ஆரம்பமும் கைகூடி விரைந்து நடைபெற, குடும்பத்திற்கு ராசியான மருமகளாகிப் போனாள் அம்பிகா. 

அன்றைக்குத் தொடங்கிய ஓட்டத்தில், நிதானமாக வியாபாரத்தில் தெளிவு பெற்ற ரவீந்தரின் நிர்வாகமும் மெருகேற ஆரம்பிக்க, இன்று நகருக்குள் பிரதானமான வணிகவளாகமாக பிஸ்தா பாரடைஸ் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.

வளர்சிதை மாற்றங்களாக பொருளாதார வசதிகளும், அதையொட்டிய குடும்ப வளர்ச்சிக்கும் தகுந்தாற் போல சகலமும் மாறிப் போனாலும் இருவருக்குமான நேசம் மட்டும் அப்பழுக்கில்லாமல் அப்படியே இருக்கின்றது.

கணவனின் மீசையை பிடித்து ‘மாமோய்’ என்றழைக்கும் அம்பிகாவின் கொஞ்சலும், ரவீந்தரின் ‘அம்மணி’ என்ற கிறக்கமும் தினமும் ஒருமுறையேனும் பரிமாறிக் கொள்ளப்படா விட்டால் அவர்களுக்கு ஜென்ம சாபல்யம் கிடைப்பதே இல்லை.

ஏழாம் வகுப்பிலும் ஆறாம் வகுப்பிலும் படிக்கும் பிள்ளைகள் இருந்தாலும், இன்றும் புதிதாய் இணைசேர்ந்த உல்லாசப்பறவைகளாகத் தான் தங்களை நினைத்துக் கொள்வார்கள். அவ்வப்போது மாமியாரின் அதிரடி அதிகாரங்களுக்கு சுமைதாங்கியாக நிற்பதைத் தவிர அம்பிகாவிற்கும் வேறெந்த குறையும் இல்லை.

அவளின் பிள்ளைகள் தாத்தா பாட்டியை ஆட்டுவித்து, நயமாகப் பேசி, அந்த அதட்டலையும் வெகுவாகக் குறைத்தும் வருகின்றனர். மொத்தத்தில் அந்த வீடு பேரப்பிள்ளைகள் மற்றும் கடைக்குட்டி பிஸ்தாவின் அடாவடிகளினால் தினந்தோறும் களைகட்டிக் கொண்டு இருக்கிறது.

ரவீந்தரின் அமைதியான குடும்பத்திற்கு நேர் எதிர்பதமாய் இரண்டாமவன் ராஜேந்தரின் வாழ்க்கை, பெரும்பாலான நேரங்களில் அல்லோலப்படும். ஒரெடியாக அமைதியாகவும் இருக்கும், திடீரென்று சுனாமியாக பொங்கிக் கணவனும் மனைவியும் அடித்துக் கொள்ளுமளவு சண்டையும் நடக்கும். இவர்களின் சண்டைக்கு பிள்ளையார் சுழி போடுவது ராஜேந்தரின் மனைவி பிரதீபாவாக இருப்பாள்.

பெரிய இடத்தில் செல்லமாக வளர்ந்த பெண்களுக்குப் பிடிவாதத்தில் குறைச்சல் இருப்பதில்லை. அந்த வீம்பு பல நேரங்களில் கணவனிடத்தில் செல்லுபடியாகாத போது சீற்றங்கள் வாடிக்கையாகின்றன. காதலோ, கசப்போ இருவரும் அளவுக்கு மீறியே கொட்டிக் கொள்வார்கள்

இன்றைக்கு இரண்டும் சேர்ந்த கலவையாக மனைவியை எதிர்கொண்டான் ராஜேந்தர்.

“காஸ்ட்லி பெர்ஃபியூம் போட்டுட்டு நீ பக்கத்துல வர்றத விட, இப்படி மசாலா, சட்னி வாசனையோட வந்து என்னை எழுப்புறதுல இருக்குற சுகமே தனிதான் தீபீ!” மனைவியின் கையில் வாசனை பிடித்துக் கொண்டே எண்ணற்ற முத்தங்களை நிமிட நேரத்தில் பரிசளித்தான் ராஜேந்தர்.

“ம்க்கும்… நீங்க ஏன் சொல்ல மாட்டீங்க? ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியா சட்னி, மசாலா, சாம்பார்னு அரைச்சு என் கை புண்ணாப் போறது எனக்குத் தானே தெரியும். மிக்சி கூடாது, அம்மியில தான் அரைக்கணும்னு அத்தையோட ஆர்டர். அதுக்கு நான்தான் பலியாடு” அழுகாத குறையாக நொடித்துக் கொண்டாள் பிரதீபா.

கண்களில் தூக்கம் மிச்சமிருந்தாலும், சிணுங்கிக் கொள்ளும் மனைவியின் முகத்தை ஆசையுடன் பார்த்தான் ராஜேந்தர்.  அண்ணன் தம்பி இருவருமே அர்த்தராத்திரியில் தான் வீடு வந்து சேர்ந்திருந்தார்கள்.

ஆடிமாதச் சலுகையாக செய்கூலி இல்லையென்று விளம்பரம் செய்ததை அடுத்து நகைக்கடையில் வியாபாரம் ஜரூராக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நகைப்பட்டறைக்கும் ஆர்டர்கள் பறந்த வண்ணமாய் இருக்கின்றன. இதை எல்லாம் பார்க்கும் போது உழைத்த களைப்பு பறந்து போய், மீண்டும் உற்சாகத்துடன் வேளையில் இறங்கி விடுகின்றனர் சகோதரர்கள் .

இரவு தாமதமாகப் படுத்ததில் ராஜேந்தரின் கண்கள் இன்னமும் தூக்கத்தை யாசித்துக் கொண்டிருந்தது. ஆனாலும் தன்மீது மாலையாகக் கிடப்பவளின் முகத்தை அருகில் பார்த்த பிறகும் தூங்குவது நல்ல கணவனின் லட்சணமாகுமோ?

பிரதீபாவின் அழகில் தன்னைத் தொலைத்தே, அவளைத் திருமணம் செய்து கொண்டான் ராஜேந்தர். கல்லூரியில் ராக்கிங் சமயத்தில் சீனியராக இவளைக் காப்பற்ற, அன்றிலிருந்து இருவரின் சுவாரசியமான பார்வைகளும் ரசனையுடன் சந்தித்துக் கொண்டன.

இனம், பணம், அந்தஸ்து என அனைத்தும் இருவரின் குடும்பங்களுக்கும் இடையே ஒத்துப்போக, சுபயோக சுபதினத்தில் காதலியை திருமதியாக்கிக் கொண்டான்.

******************

நடுநிசி தாண்டி வந்து உறங்கினாலும் காலை சரியாக ஒன்பது மணிக்கு உணவு மேஜையில் அனைவரும் ஆஜராக வேண்டுமென்பது அந்த வீட்டு எஜமானியின் வாய் வழியாக சாஸ்வதமான சட்டம். அன்றைக்கும் அனைவரும் வந்து அமர்ந்திருக்க, வீட்டின் கடைக்குட்டியை மட்டும் காணவில்லை.

“வேர் இஸ் பிஸ்தா?” பெரியபேரன் நிதின் கேட்க,

“ரூல்ஸ் எல்லாம் எங்களுக்கு மட்டுந்தானா? பெரியவங்களுக்கு இல்லையா?” சின்னபேரன் சுதீஷ் பின்பாட்டு பாடினான்.

“டேய் வாண்டுகளா… ஸ்கூலுக்கு நேரமாச்சு. சீக்கிரம் சாப்பிட்டு கெளம்புற வழியப் பாருங்க” சொல்லிக்கொண்டே பூரியைக் கொண்டு வந்து தட்டில் வைத்தாள் அம்பிகா.

தங்கள் தங்கக்கம்பி பிஸ்தாவின் இன்றைய நகர்வலத்தை அறிந்தவர்களாக ரவீந்தரும் ராஜேந்தரும் நமட்டுச் சிரிப்பில் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

“இவன் எத்தன மணிக்கு போனான்னு யாருக்குமே தெரியாதா? வீட்டுல உள்ளவங்க கேட்டா, என்ன பதில சொல்லப் போறான்? வழக்கம் போல பிரச்சனை அது இதுன்னு கதை விடுவானா அண்ணே?” ரகசியமாய் மூத்தவனின் காதினைக் கடித்தான் ராஜேந்தர்.

“நிஜமான அடிதடி, கை கலப்பு நடந்தாலே நம்ம பார்லிமெண்ட்ல சொல்லாம மூடி மறைக்கிற ஆளு… பொய்யா இதை சொல்வானா? இன்னைக்கு ஒருநாள் அடக்க ஒடுக்கமா நல்ல பிள்ளையா இருக்கறதுன்னு துரை முடிவு பண்ணியிருக்காரு!” தம்பியின் முடிவை மெல்லச் சொல்லிச் சிரித்தான் ரவீந்தர்.

“இதைப் பாருடா… இந்த மசோதாவ எப்ப தாக்கல் பண்னான் நம்ம பய? ஒருவேள சபாநாயகர்(அப்பா) ஓவரா கேள்வி கேட்டுட்டாரோ? என்னே பிஸ்தாவுக்கு வந்த சோதனை!?” தம்பியை பற்றி அறிந்தவனாக கிண்டலடித்தான் ராஜேந்தர்.

“அவன் ஆளோட பொறந்த நாளுன்னு நேரமே எந்திருச்சு, கோவிலை சுத்தப் போறேன்னு நேத்தே என்கிட்டே சொல்லிட்டான். பயலுக்கு இப்படியாவது நல்ல புத்தி வரட்டும்னு நானும் தலையாட்டிட்டேன்…”

“இந்த சிறப்பான சம்பவம் நம்ம வீட்டு அயர்ன் லேடிக்கு தெரியுமா உடன்பிறப்பே!?” கிசுகிசுப்புடன் தாயை குறிப்பால் சுட்டிக்காட்டி கண்சிமிட்டினான் ராஜேந்தர்.

“நீயா எதையும் அம்மாகிட்ட போட்டுக் கொடுக்காதே! காதல் சாகரத்தை அவனாவே நீந்திக் கடக்கட்டும். பயலுக்கு தோணி தேவைப்படும் போது கை கொடுப்போம்” ரவீந்தர் சொல்லி கொண்டிருந்த போதே அம்மா சரஸ்வதி அங்கே வந்து சேர்ந்தார்.

“சாப்பாட்டு மேசையில உட்கார்ந்து ரகசியம் என்ன வேண்டிக்கிடக்கு? சின்னவன் எங்கடா?” அம்மாவின் கேள்விக்கு ஏற்கனவே தயாராக வைத்திருந்த பொய்களை சராமாரியாக எடுத்துவிட்டான் பெரியவன்.

அண்ணனின் வண்ணமயமான பொய்களை நம்பமுடியாமல் பார்த்துக் கொண்டிருந்த ராஜேந்தர்,

“அண்ணனோட பாசத்தை நினைச்சு எனக்கு கண்ணு கலங்குது அண்ணி…” நக்கலாக அம்பிகாவிடம் சொன்னபோது அங்கிருந்த எல்லோருமே புரியாமல் பார்த்தார்கள்

“டேய் அவனை காட்டிக் கொடுக்காதே!” பற்களுக்குள் வார்த்தைகளை மென்றுகொண்டே, பெரியதம்பியின் தொடையைக் கிள்ளினான் ரவீந்தர்.

“ஆ… ஆ! யம்மா… பார்த்தீங்களா, உடம்பெல்லாம் புல்லரிக்குது எனக்கு” சிலிர்த்துக்கொண்டே ராஜேந்தரும் ஓவர் ரியாக்சன் கொடுக்க,

“காரமா இருந்தா தண்ணியை குடிச்சுத் தொலைங்களேன்! எதுக்கு இப்படி உளறிக் கொட்டிட்டு இருக்கீங்க?” கவலையும் கோபமுமாய் பிரதீபா சொல்ல, அண்ணனும் தம்பியும் ஹைஃபை கொடுத்து சிரித்துக் கொண்டார்கள்.  

‘எனக்கிது தேவைதான்’ மனதிற்குள் நொந்தபடி கோபத்துடன் பிரதீபா இருவரையும் முறைத்துவிட்டுச் செல்ல, இவர்களின் கலகலப்புக்கு காரணமான பிஸ்தா கோவிலில் தரிசனத்தை முடித்துவிட்டு, பிங்கியை பைக் பில்லியனில் அமர்த்திக் கொண்டு வண்டியை முழுவேகத்தில் முடுக்கினான்.

அவனது முரட்டு வேகத்தில் முதுகோடு வந்து ஒட்டிக்கொண்டாள் ரவீணா. விடிந்தும் விடியாத பொழுதான நேரத்தில் அவளின் வீட்டிற்கு அருகில் சரியாக இவன் வந்து நிற்க, ரவீணாவின் பிறந்தநாள் கொண்டாட்டம் ஆரம்பமாகியது.

ஆண்மையோடு கலந்த பெர்ஃப்யூம் வாசனையும், அழகான முகவெட்டும், ட்ரீம் செய்த தாடியில் புதையுண்ட கன்னக்குழியும் பிரஜனின் மீதான ஆசையை உள்ளுக்குள் அதிகமாக் கிளறிவிட, சாலை என்பதையும் மறந்து அவனது தோளில் முகத்தை புதைத்துக் கொண்டாள் ரவீணா.

பஞ்சுமிட்டாய் தேகம் மேலே வந்து மோதிய சுகத்தில், “நீ உண்மைக்குமே சாஃப்ட் நேச்சர் தான் டீ…” பிரஜேந்தர் கிறுகிறுத்துச் சொல்ல, என்னவென்று விளங்காத பார்வையை ரியர்வியூ மிரரில் பதித்தாள் ரவீணா.

“வாட் டூ யூ சே? கம் அகைன் ப்ரஜூ!”

“நத்திங் டாலி… இன்னைக்கு உன்னோட ஏ டூ இஜட் பஞ்சுமிட்டாய் ஸ்கொயர்டாவே மாறிடுச்சு…” அவளின் வரிவடிவை அளந்தவனாய் கண்சிமிட்டலுடன் வர்ணித்தவனின் வார்த்தைகளுக்கு தப்பாமல் முழுக்க நனைந்த பன்னீர் ரோஜாவாய் மலர்ந்திருந்தாள் ரவீணா.

பேபி பிங்க் குர்தியின் மீது, அடர் பிங்க் நிற ஜாக்கெட் அணிந்துகொண்டு வெளிர் நீலநிற ஜீன்சில் பாந்தாமாய் பொருந்தியிருந்தாள். அழகை மெருகேற்றவென அவள் பூசிக்கொண்ட லிப்ஸ்டிக்கும் ஐசாடோவும் அதே ரோஜா நிறத்தில் இருக்க, அவளின் பால்நிற மேனி வாசம் பிரஜனை சோதித்துக் கொண்டிருந்தது.

“என்னடா சொல்ற?” என்றவளின் பேச்சினை கவனத்தில் கொள்ளாமல் பிரஜேந்தரின் பஜாஜ் டொமினார் காற்றை கிழித்துக் கொண்டு பறந்தது.

“இனி எங்கேயும் நிறுத்தாம என்னை வீட்டுல விட்டுடு ப்ரஜூ… ஃப்ரண்டுகிட்ட அசைன்மெண்ட் குடுத்துட்டு வந்துடுறேன்னு அம்மாட்ட சொல்லிட்டு வந்துருக்கேன்!” தனது பொய்க் கதையை கட்டவிழ்த்த போது அவன் காதோடு உரசிய அவளின் உதடுகள், பிரஜனின் இளமைக்கு சவால் விட்டன.

“மனுஷனுக்கு சூட்டைப் கிளப்புற ரேஞ்சுல, உரசி  உட்கார்ந்துட்டு ஏண்டி வீட்டை ஞாபகப்படுத்துற? வண்டி எங்கேயுமே நிக்கப் போறதில்ல… அப்படியே போயிட்டே இருக்க வேண்டியது தான்” விசிலடித்தபடியே ரவீணாவின் வயிற்றில் புளியைக் கரைத்தான் பிரஜேந்தர்.  

“இன்னைக்கு எந்த கலாட்டாவும் பண்ணாதே மை பாய்! என்னால வீட்டுல பதில் சொல்ல முடியாது. காலேஜ் லீவுன்னு எல்லாருக்கும் தெரியும்”

“சரிடீ! ஒரேடியா அறுக்காதே… டிபன் சாப்பிட்டு போவோம் வா!” என்றவன் உயர்தர ஹோட்டலில் ஃபாமிலி அறைக்கு அழைத்துச் சென்றான்.

“இன்னைக்கு ஈவ்னிங் மூவிக்கு டிக்கெட் ரிசர்வ் பண்ணியிருக்கேன் பிங்கி! ரெடியா இரு… வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்” டிபனுக்கு அமர்ந்திருந்த நேரத்தில் அடுத்த சந்திப்பிற்கு அடிபோட்டான் பிரஜன்.

“சான்சே இல்ல… இன்னைக்கு நான் ரொம்ப பிஸி! ஈவ்னிங் செலிபிரஷனுக்கு அம்மா வீடு முழுக்க டெக்கரேட் பண்ணி வச்சுருக்காங்க. மார்னிங், அர்ச்சனை அன்னதானம்னு அப்பா பெருசா ஏற்பாடு பண்ணியிருக்காரு. என்னால அவாய்ட் பண்ண முடியாதுடா! சோ…” காரணத்தை கூறி இவள் மறுக்க, 

“உன் அம்மாவும் அப்பாவும் சேர்ந்து, உன்னை நல்லாவே குத்தகைக்கு எடுத்துக்கிறாங்க டீ! ஷப்பா என்ன குடும்பமோ?”

“இப்படி பேசினா எனக்கு கெட்ட கோபம் வரும் டா! என் மூடை ஸ்பாயில் பண்ணாதே!” கோபத்தோடு ஸ்ட்ராபெரி க்ரீம் ஸ்லைசோடு, கீவி பிரெஷ் ஜூசையும் முழுங்கிக் கொண்டிருந்தாள்.

“நல்ல இங்கிலீஷ் படம். உன் கூட சேர்ந்து பார்த்தா நமக்குள்ள குறைவா இருக்குற கெமிஸ்ட்ரி இன்னும் கூடும்னு நினைச்சேன். போச்சா ரவீணா!” இருபொருள் பட கேலிபேசியவனின் காதினை பிடித்துத் திருகினாள் காதலி.

“ரொம்ப நல்லவனாட்டம் கோவிலுக்கு கூட்டிட்டுப் போனவன், பேசுற பேச்சைப் பார்த்தியா? அநியாயத்துக்கு கெட்ட பையானாகிட்டு வர்ற…”

“இதெல்லாம் வாலிப வயசுல சகஜம் பிங்கி! இப்படியெல்லாம் ப்ளான் பண்ணலன்னா கேஜீ படிக்கிற கேடி பசங்க கூட என்னை யூத்துன்னு நம்ப மாட்டாங்க. ஆக மொத்தம் இன்னைக்கு மூவி ப்ளான் பணாலா?” சோர்ந்து பேசியவனைப் பார்க்கும் போது ஐயோ என்றானது பெண்ணிற்கு.

“கூல்டவுன் ப்ரஜூ! இன்னொரு நாள் படத்துக்கு போவோம். இன்னைக்கு நெய்பர்ஸ், ஃப்ரண்ட்ஸ்னு நிறைய பேரை அம்மா இன்வைட் பண்ணியிருக்காங்க!”

“ஓ… ஊரெல்லாம் கூப்பிட்டு இருக்க… என்னை கூப்பிடல, அவ்வளவுதானா நம்ம ரிலேஷன்?”

“ம்ப்ச்… உன்னை இன்வைட் பண்ண எனக்கு கசக்குமா? நீ வந்தா, உன்னை யாருன்னு எங்க வீட்டுல இன்ட்ரடியூஸ் பண்றது? பாய் ஃப்ரண்ட்ச எங்க வீட்டுல அலவ் பண்ண மாட்டாங்க… நீ இப்படிக் கேக்கறது எனக்கு கஷ்டமா இருக்குடா பேபி” இறங்கிய குரலில் தன் நிலையைக் கூறிக்கொண்டே அவனது உள்ளங்கையில் கோலம் வரைந்தாள் ரவீணா.  

“ஒரேடியா ஃபீல் பண்ணி மூக்க சிந்தாதே! உன் பர்த்டே கிஃப்டா எனக்கு என்ன வாங்கி வைச்சுருக்க?”

“நீ ஃபர்ஸ்ட் உன் கிஃப்டை குடுடா!”

“அதான் கோவில், ஹோட்டல்னு ஊர் சுத்தி காமிக்கிறேனே! இது போதாதா?”

“அட அல்பமே! உனக்கு ஏண்டா இந்த புத்தி? உனக்கு கிஃப்ட் கொடுக்கனும்னு நான் எந்த பிளானும் பண்ணலடா ப்ரஜூபையா!”

“கைவசம் இருக்குறதை கொடுத்துட்டு போ!” என்றவன் அவளின் கைகளை எடுத்து முத்தமிட,

“அதானே பார்த்தேன்… இதுக்கு தான் ஃபாமிலி ரூமுக்கு கூட்டிட்டு வந்தியா?”

“ஒரு பார்மல் கிஸ் கூட எனக்கு தரமாட்டியா? போடீ பஞ்சுமிட்டாய்!” சினத்துடன் பிரஜன் முகம் திருப்பிக் கொள்ள, அதை காணச் சகிக்காமல்,

“என்னதான் பிரைவசி இருந்தாலும் சிசிடிவி கேமரா இருக்கும் டா மடையா! அதையெல்லாம் யோசிக்க மாட்டியா? இப்போதைக்கு இவ்ளோதான்” என்றவள் அவனது கைகளில் தனது பவழ உதடுகளை பதித்தாள்.

“ம்க்கும்… இந்த உப்பு சப்பில்லாத ஊறுகாய்க்கு தான் இத்தன  பில்டப்பா? எனக்கும் ஒரு நேரம் வரும்டி, அப்ப இருக்கு உனக்கு…” கெஞ்சலும் மிஞ்சலும் போட்டிபோட, உணவை முடித்துக்கொண்டு, தன் பைக்கை உருமிட மீண்டும் பில்லியனில் தொற்றிக் கொண்டாள் ரவீணா.

காலைநேர அவசரத்தில் அவளுக்கென வாங்கிய பரிசை எடுத்துக் கொள்ள மறந்தே போயிருந்தான் பிரஜேந்தர். தனது மடத்தனத்தை நினைத்து நொந்தவன், இன்றே பிறந்தநாள் பரிசை கொடுத்து அசத்திவிடும் உபாயத்தை யோசித்துக் கொண்டே, ரவீணாவின் வீட்டிற்கு சற்றுத் தொலைவிலேயே அவளை இறக்கி விட்டான்.

‘ஈவ்னிங் பார்டிக்கு போயி பிங்கிக்கு ஸ்வீட் சர்பிரைஸ் கொடுப்போமா?’ மனதின் ஆசைக்கு மூளையும் சரியென்று ஒத்துக்கொள்ள,

‘போய்தான் பார்ப்போமே! அப்படி என்னதான் மாமானார் வீட்டுல சொல்றாங்கன்னு கேட்டுட்டுதான் வருவோமே’ மெத்தனத்துடன் அதிரடி விருந்தாளியாக காதலியின் வீட்டிற்கு செல்ல முடிவெடுத்தான் பிஸ்தா.

 

 

 

Leave a Reply

error: Content is protected !!