emv7

எனை மீட்க வருவாயா! – 7

 

“நாணத்தை அறியும், ஞானத்தைப் பெற்றேன்!

மாரனை மிஞ்சிய கந்தர்வன் உன்னாலே!

 

கவர்ந்து செல்ல எண்ணி, கைதியானேனே!

மலைமகளை மிஞ்சிய வீரமங்கையாலே!”

 

காலையில் எழுந்தது முதலே சுப்ரபாதத்திற்கு பதிலாக, காளியம்மாளின் சத்தம் கேட்டவண்ணமிருந்தது.

சற்று இடைவெளி விட்டே வீடுகள் இருந்தது.  அதனால் காளியின் பேச்சிலிருந்து, மற்ற வீடுகள் தப்பியிருந்தது.  வீட்டைச் சுற்றிலும் மட்டை வேலி கொண்டு அடைக்கப்பட்டிருந்தது. வீட்டையொட்டிய, சின்ன தாழ்வாரத்தில், அடுக்களை இருந்தது.

சற்று தூரத்தில் பாத்திரங்களை சுத்தம் செய்ய வேண்டி வைக்கப்பட்டிருக்க, இருந்த நீரில் ஓரளவு பாத்திரங்களை சுத்தம் செய்து, திண்ணைப்பகுதியோடு போடப்பட்டிருந்த திண்டில் கவிழ்த்து வைத்தபடி பேசிக் கொண்டிருந்தார் காளியம்மாள்.

ஜெகன் வெளிநாடு சென்று எட்டு மாதங்கள் கடந்திருந்தது.

இடைப்பட்ட நாள்களில், மகனுக்கு சளைக்காது பெண் தேடிக் களைத்தாலும், களையான பெண் அமையவில்லை என்கிற வருத்தத்தில் இருந்தவர், தனக்கு தோன்றிய புது யோசனையை, கணவரிடம் கூற, அதற்கு ஏறுக்கு மாறான கணவரின் பேச்சால் வந்த புலம்பல்கள்தான், அன்றைய விடியலை மார்கழியாய் மாற்றியிருந்தது.

மார்கழி மாதம் முழுக்க, அதிகாலையில் கூம்புவடிவ குழாயின் வழியே ஆன்மிக பாடல்கள் ஒலிக்கத் துவங்கியதும், சத்தத்தில் உறங்க இயலாமல் அனைவரும் எழுவதுபோல, அன்று மனைவியில் பேச்சில் எழுந்திருந்தார் வீரம்.

“நம்ம ஆளுக வீட்டுப் புள்ளைகள்ல, கலராப் போயி பொண்ணைத் தேடச் சொன்னா, எப்டி கிடைக்குங்கறேன்!”

“…”

“கருத்தப் புள்ளைக்கு பெயிண்டடிச்சுத்தான் கூட்டியாரணும்”

“…” மனைவியின் பேச்சிற்கு பதில் பேசினால், இன்னும் வாக்குவாதம் அதிகமாகக்கூடும் என,  பதில் பேசாதிருந்தார் வீரம்.

புழக்கத்திற்கு நீர் இல்லாமல்போக, வெளியில் தண்ணீர் எடுத்து வர காளியம்மாள் சென்றிருக்க, அவ்விடம் மழை பெய்து ஓய்ந்ததுபோல, அமைதியாகக் காட்சியளித்தது.

விறகு அடுப்பு பயன்படுத்துவதால், பாத்திரம் கழுவுமிடமெங்கும் கருமையாய் மண்ணில் படிந்திருந்தது.  அப்பகுதியில் சிதறிக் கிடந்த உணவை கொத்தியபடி, கோழியும், வாத்தும் கூட்டமாய் நின்றிருந்தன.

“இப்பதான் ஊருக்குப் போன மாதிரி இருந்தது.  அதுக்குள்ள எட்டு மாசம் போனதே தெரியலை”

“…” ‘இன்னிக்கு முச்சூடும் இந்தப் பேச்சை விடமாட்டா’ வீரம்

“..இன்னும் இருக்கற நாளும் இப்டியே போயிட்டா, அவன் வரதுக்குள்ள எப்டிப் போயி, பொண்ணைத் தேட” காளியம்மாளின் பேச்சு சத்தத்தில், அங்கு தாமதிப்பது தனது தலையில் வில்லங்கமாக விடியும் என உணர்ந்தவர், வெளியில் கிளம்ப உத்தேசித்தார்.

“களையெடுக்க இரண்டு நாளுல ஆளு விடணும்னு சொன்னல்ல.  போயி ஆளு பாத்திட்டு வரேன்” துண்டை உதறி தோளில் போட்டபடியே கிளம்பிவிட்டார்.

இதற்குமேல் அங்கிருந்தால் முந்தைய இரவின் தொடர்ச்சி அரங்கேறும் வாய்ப்பிருந்ததால், அதைத் தடுக்க எண்ணி,  வெளியே சென்றிருந்தார்.

“இன்னும் கடனே கட்டி முடியலை”

“…” 

“இந்த மனுசன், வீடு வேற எடுக்கணும்னு ஒத்தக் கால்ல நிக்கிறாரு.  அவன் வீடு கட்ட பணம் அனுப்புவானா, இல்லை கல்யாணத்துக்கு பணங்காசு சேப்பானா?”

“…”

“நகை, நட்டு சீரு, செனத்தினு வகையா குடுக்கறவளுக இப்ப பஞ்சமாத்தான் போயிட்டாளுக”

பெண் களையாக இருந்தால், காளியம்மாளின் எதிர்பார்ப்புபோல வரதட்சணை தர இயலாத வீடாக இருந்தது. வரதட்சணை ஓரளவிற்கு தரக்கூடிய வீட்டில் உள்ள பெண்களை, காளியம்மாளுக்கே மருமகளாக எடுக்கும் எண்ணமில்லை.

இப்படித் தன் மனதிற்குள் உள்ளதை வெளியில் கொட்டி, தனது ஆற்றாமையைத் தணித்துக் கொண்டிருந்தார்.

கடந்த வாரத்தில், மகன் அனுப்பிய பணத்தை கட்டச் சென்றபோது, பளிச்சென மின்னல்போல தோன்றிய எண்ணத்தைச் செயலாக்க எண்ணினார்.

முதலில் ஜெகனிடம் பேசிவிட்டு, பிறகு பெண்ணது பெற்றோரிடம் பேசலாம் என நினைத்திருந்தார்.

அதுபோல மகனிடம் பேசியபிறகு, கணவரிடம் முந்தைய தினம் விசயத்தைக் கூறப்போக,

“யாரு? நம்ம ஆறுமுகம் வகையறா, மயம்புள்ள பேத்தியச் சொல்றியா?”

“ஆமா”

“அது இவனுக்கு முறையில்லயே!”

“உங்க வகையில முறையில்ல! என் வகையில, மச்சியில்லனா… மச்சி வயித்துப் புள்ளைனு, செகனுக்கு கட்டலாம்ல!”

“அப்டிச் சொல்றியோ!” சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்தவர், “நம்மள்ல அப்டிக் கட்டறது பழக்கந்தான்! தாராளமாக் கட்டலாம். ஆனா..” என இழுத்தார்.,

“நம்ம செகன் சொன்னமாதிரி, அந்தப் புள்ளை மட்டுந்தான் இப்ப கலரா இருக்கு.  இன்னொன்னு அந்தப் புள்ளைக்கு அவ ஆத்தா, சித்தி, மாமானு, எல்லாரும் சீரு, செனத்தினு, நல்லாச் செய்வாக!”

“அந்தப் புள்ளயெல்லாம் இந்தக் பட்டிக்காட்டுல ஒரு நாளுகூட தங்காது.  வீணாவுல எதுக்கு பிரயாசப்படற?”

“எடுத்தவுடனே இப்டிச் சொன்னா, என்னா அர்த்தங்குறேன்”

“அது டவுன்லயே பிறந்து வளந்தது. அதேன் சொன்னேன்”

“அது தெரியாமயா இருக்கேன்.  நானென்ன முட்டாச் சிறுக்கியா?”

“அப்ப அந்தப் பேச்சை, அத்தோட விட்டுத்தள்ளு!”

“மயனுக்கு கல்யாணம் பண்ணிப் பாக்கற எண்ணமே இல்லாதவருகிட்ட கேட்டது எந்தப்புதான்!” இடக்காய் கூற

“நல்லதுக்குச் சொன்னா, என்னையே நொட்டை சொல்லுவியாடீ”

“நல்லதுன்னு இதுவரை நீ என்னத்தையா பண்ணியிருக்க?”

இப்டி இருவருக்கும் சண்டைபோல வாக்குவாதம் வந்திருந்தது.

“கிராமத்துல பிறந்து வளந்ததுக சுளுவா, டவுன்ல போயி இருந்துக்குங்க.  ஆனா டவுன்ல பிறந்தது, இங்ஙன வந்து இருக்காதுன்னு சொன்னா, என்னையே குறை சொல்லிட்டுருக்க.  போடீ போக்கத்தவளே! உங்கிட்ட மனுசப்பய பேசி, செவிக்க(ஜெயிக்க) முடியுமா!” என அந்நேரத்தில், கோபந் தணிக்க எண்ணி, வீட்டிலிருந்து வெளியே கிளம்பியிருந்தார்.

கணவர் சென்றபின்பும், “ஏன் அவ அப்டி என்ன பெரிய சீமை சித்தராங்கி.  இங்ஙன வந்து இருக்க முடியாத அளவுக்கு மைசூரு மகாராணியாக்கும்” தனக்குத் தெரிந்த வகையில், பெரிய இடத்தோடு ஒப்பீடு செய்து, பெண்ணது குடும்பத்தையும், அவளின் அந்தஸ்தையும் பேசியபடி, அன்றைய இரவுப் பொழுது சென்றது.

இன்னும் பெண் வீட்டாரிடம் பேசி ஒரு முடிவுக்கு வராமலேயே, இங்கு சண்டையை அரங்கேற்றி ஓய்ந்திருந்தது அக்குடும்பம்.

காளியம்மாளின் எண்ணமே, பெரும்பாலும் அக்குடும்பத்தில் செயலாக்கம் பெரும். அதனால் தற்போது நினைத்ததையும் கண்டிப்பாக செய்து முடிப்பார் என்பது திண்ணம். அப்படியிருக்க, வரப்போகும் முரண்களை எதிர்கொண்டேயாக வேண்டியது புரிந்தாலும், இவளிடம் எதற்காக வீண் தர்க்கம் என அதன்பின் அமைதியை குத்தகைக்கு எடுத்திருந்தார் வீரம்.

காளியம்மாளும் ஜெகனிடம் பேச, அவன் தயங்கவே, காளியம்மாள் விடாது அவனுக்கு ஏற்ற சாதகங்களைக் கூறியதும், சரியென்றதோடு, பெண்ணின் வீட்டில் மேற்கொண்டு பேசுமாறு கூறிவிட்டான்.

ஜெகனைப் பொருத்தவரையில், தானாய் புத்திசாலித்தனமும், விவேகமும் இன்றி இருந்தாலும், அருகில் உள்ளவர்களைப் பார்த்து, பிறர் பேசக் கேட்டு, தன்னை, தன்னிலையை அதற்கேற்ப மாற்றிக் கொள்வதில் கைதேர்ந்தவன்.

அதனால் சூழ்நிலைக்கேற்ற வகையில் மாறிக்கொள்ள, தன்னை மாற்றிக்கொள்ள முடிவெடுத்துவிட்டான்.

காளியம்மாள் அடுத்த முறை டவுனுக்குச் செல்லும்போது, எப்படிப் பேசினால் தனது மகனுக்கு அந்தப் பெண்ணைக் கொடுக்க அவர்கள் வீட்டில் சம்மதிப்பார்கள் என உருப்போடத் துவங்கியிருந்தார்.

அதற்கிடையே உண்டான கணவரின் மறுதலிப்பில்தான் கொந்தளித்தபடி இருந்தார்.

……………………………………….

மழலையின் தெளிவற்ற பேச்சில், விசயம் இல்லாதபோதும், அதன் இனிமை, மனதை விட்டு அகலாது, அனைவரையும் ஆகர்ஷிக்கக் கூடியது.

காதலை தவறென்று கூறினாலும், அது வந்து போனவர்களின் வாழ்வில், தனித்த சுகந்தமான இனிமையை, அவர்கள் ஆகர்ஷித்த தருணங்கள் இல்லையென்றாகாது.

கிருபாவுடனான பைக் பயணத்திற்குப்பின், அனைத்தும் சுமுகமானதாகவே திவ்யா நம்பினாள். இனிமையாய் சென்றன நாள்கள்.

அவனது தவிர்த்தல்களை, வாண்டடான அவளின் பேச்சு மற்றும் அணுகுமுறையால், தவிர்க்கும்படி செய்தாள். அதற்காக முற்றிலும் அவளோடே தனது நேரத்தைச் செலவிட்டான் என்பது இல்லை. 

ரைட்டிங் பெஞ்சின்மீது அமர்ந்து, வலக்காலை தரையில் ஊன்றியபடி, இடப் பாதத்தை அவள் அமர்ந்த பெஞ்சில் வைத்து, இடக்கையை அதில் தாங்கி அமர்ந்தபடியே, திவ்யாவைப் பார்த்து பேசிக் கொண்டிருந்தான் கிருபா. காலை ஆகாரத்தை உண்டவாறு, அவனது பேச்சில் கவனமாகயிருந்தாள்.

தனிமையை எளிமையாய் உருவாக்கித் தந்திருந்த, கல்லூரி நிர்வாகத்தைப் பற்றிய சிந்தனை எதுவுமின்றி, இருவரும் ஒருவரது  அண்மையில் மற்றவர் என குதூகலமாகப் பேசியவாறு இருந்தனர்.

காலையில் தாமதமாக எழுந்தவளுக்கு, பேருந்திற்கு நேரமாகிவிட்ட காரணத்தால், காலையில் செய்த இட்லி, தேங்காய் சட்டினியை எடுத்து வைத்த தாயிடம், “ம்மா அப்டியே மதியத்துக்கு வச்ச சாம்பாரையும் ஒரு பாக்ஸுல தனியா ஊத்திக் குடுத்திரும்மா” என்றிட

அனைத்தையும் வைத்துக் கொடுத்தவர், “படிக்கப் போற புள்ளை மாதிரி இல்லைடீ.  வக்கனையா கேக்கறதப் பாத்தா, திங்கறதுக்குன்னே காலேசுக்கு போற மாதிரி இருக்கு” எனும் சொல்லோடு மகளை அனுப்பியிருந்தார் ஈஸ்வரி.

“ரெண்டு இட்லி சாப்பிடுனா, ரொம்பத்தான் பிகு பண்ற!” ஸ்பூனால் வாயில் எடுத்து வைத்தபடியே அவள் கூற

“சாப்பிட்டுத்தான் வந்தேன்.  இல்லைனா வாங்கிச் சாப்பிட்டுருக்க மாட்டேனா!”

“எச்சில் பண்ணிட்டேனு யோசிக்கிறியா?”

அவள் கையில் இருந்த டிபன் பாக்சை எதிர்பாரா தருணத்தில், சட்டெனப் பிடுங்கி, அதிலிருந்து ஸ்பூனால் இரண்டு துண்டுகள் எடுத்தவன், சாம்பாரிலும், அதன்பின் தேங்காய் சட்டினியிலும் துவட்டி, சிறு தயக்கமும் இல்லாது விழுங்கினான்.

‘ஆஹ்’ என ஆச்சர்யமாக கிருபாவின் செயலைப் பார்த்திருந்தாள் திவ்யா.

திவ்யாவிற்கு இப்படி யார் உண்டதிலிருந்தும், உண்ணக் கொடுத்தால், உண்ணத் தயங்குவாள்.

பாக்சை அவளிடம் நீட்டியபடியே, “இப்ப ஓகேவா!”

வாங்கிக் கொண்டவள்,  “சரி சரி கோபப்படாத!” என தயங்காது உண்ணத் துவங்கினாள்.

திவ்யாவிற்கு ஆச்சர்யம். கிருபா உண்டதை, தயங்காது உண்ணத் துவங்கிய தனது செயலை எண்ணி.

“யானைப் பசிக்கு சோளப்பொறி மாதிரி! நீ எடுத்துட்டு வர இந்த நாலு இட்லி, இது என் ஒரு ஆளுக்கே பத்தாது! DD”

“அய்யோ! அப்ப நீ சாப்பிடலையா? இந்தா இந்த ஒரு இட்லிய நீயே சாப்பிடு” என பாக்சை நீட்டினாள்.

“ஆச்சு. ஆச்சு.  சீக்கிரமாச் சாப்பிடு!”, என்றவன், “அந்த விக்கி, என்னையே ஏன் முறைச்சி பாக்கறான்!”

“நான் அன்னைக்கு உங்கூட வந்து வண்டியில இறங்குனதைப் பாத்ததுல இருந்து, அப்டித்தான் என்னையும் பாக்கறான்!” சிரித்தாள்.

“என்னவாம்!”

“உண்மையச் சொல்லுன்னான்.  இருந்தாச் சொல்ல மாட்டேனாடானு கேட்டேன்.  அதுக்குத்தான் மூ..வி முறைச்சு, முறைச்சு, இப்டிப் பாக்குது!” சிரித்தபடியே உரைத்தாள்

“அதுக்கு ஏன் முறைக்கணும்!”

“துப்பறியறானாம்.  அதுதான் அந்த லட்சணத்துல பாக்குது”

“உங்கம்மாகிட்ட போயி எதுவும் சொல்லலையா?”

“சொல்ல மாட்டான்!”

“..” 

“எங்கம்மாவுக்கு விசயம் தெரிஞ்சா, அது உண்மையா, பொய்யானு எதுவுமே கேக்காம, என்னைய படிக்க அனுப்பாதுனு அவனுக்குத் தெரியும்!”

“….” 

“சோ! ரெண்டு நாளைக்கு முன்ன, வீட்லவந்து ஒரே அட்வைஸ் மழை!”

“அந்தளவுக்கு டார்ச்சர் பண்றானா!” கோபமாய் கேட்டான்

“சேச்சே!  அவனெல்லாம் அந்தளவு வர்த் இல்லை கிருபா.  நெவர் மைண்ட்-டா” இப்டியான பேச்சுககளில் தங்களை மூழ்கடித்துக் கொண்டிருந்தனர்.

வருத்தங்கள் மாறி, வசந்தங்கள் குடி வந்திருந்தது. மனமெங்கும் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தது. நேரங்கள் வெகு வேகமாகச் சென்றது. ஆனாலும், முன்பைப்போல முரட்டுத்தனமோ, அடாவடியோ இல்லாமல் இருந்தவனை எண்ணி, தயக்கம் இருந்தாலும், தற்போதைய அவனது மாற்றமே திவ்யாவை மகிழ்விக்கப் போதுமாய் இருந்தது.

அவரவர் மனம் உணர்ந்ததை, பரிமாறிக்கொள்ள எண்ணவில்லை. பரஸ்பர நம்பிக்கையில், கைகோர்த்திருந்தது உறவு.

மலர்ந்தே இருப்பதால், முகவாடல்கள் இல்லை.  தொலைந்து போகாததால், தேடல்கள் இல்லை.

கருத்துரு வகுப்பு முதல், ஆய்வக வகுப்பு வரை மதிப்பெண்கள் எடுப்பதில் இருவருக்கும் கடுமையான போட்டிகள் இருந்தது.

பருவத் தேர்வு முடிவுகள் வெளியாகியிருந்தது.  பாயிண்ட்டில் திவ்யா முதல் இடத்தில் இருந்தாள்.

“ஃபர்ஸ்ட் பிளேஸ்னால எனக்கு ஸ்பெசல் ட்ரீட் குடுத்துறணும்” கிருபா

“குடுத்துட்டாப் போச்சு!”

தாய் அவளுக்குத் தரும் பாக்கெட் மணியை சேமித்து வைத்திருந்தாள்.  அதில் அடுத்த நாளே, கேட்டவர்களுக்கு வேண்டியதை வாங்கிக் கொடுக்க உத்தேசித்திருந்தாள்.

வெளியே செல்ல துணைக்கு சித்தி பெண்ணை அழைக்க, “வந்தா எனக்கு எவ்வளவு தருவ?” பேரம் பேசினாள் பெண்.

“எவ்வளவு கேக்குறியோ தரேன்.  ஆனா நான் என்ன வாங்கினேனு யாருகிட்டயும் சொல்லக்கூடாது”

“எல்லாருக்கிட்டயும்னா…” என யோசித்தவள், “அப்ப, காசு கூட ஆகுமே! பரவாயில்லையா?”

“பொடுசு, இப்பவே இவ்ளோ விவரமா இருக்க” என்றவள், “தரேன்.  வந்து தொலை”

“தொலைன்னு சொன்னா.. இன்னும் காசு கூட ஆகும்” என்றவளை தலையில் செல்லமாகத் தட்டுவதுபோல, வலிக்கத் தட்டி ஒருவாராக அழைத்துச் சென்றிருந்தாள்.

லஞ்ச லாவண்யமெல்லாம் கொடுத்து, கிருபாவிற்கு வாங்கி வந்ததை, உடன் வந்தவளுக்குத் தெரியாமல் மறைத்து வைத்திருந்தாள்.

அவள் விடாமல் கேட்டதற்கு, “ஃபிரண்ட்ஸ்ஸுக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் தந்தா எக்சைட்டடா இருக்கும்ல அதான்” சமாளித்திருந்தாள்.

அடுத்த நாள், தான் வாங்கி வந்த வாலட்டை அவனிடம் கொடுத்தாள். “நீ ஸ்பெசல்னதும், வேற எதாவது தருவேன்னு எதிர்பாத்தேன்” ஏமாற்றப்பட்ட நெஞ்சு, வாடலோடு உரைத்தது.

“அப்டி என்ன எதிர்பார்த்த?” விளங்காமல் கேட்டாள்.

“என்னத்தை எதிர்பாப்பாங்கனு கூடவா தெரியாது?” என முறைத்தவன், தன்னை நோக்கியவளைக் கண்டு, உதட்டைக் குவித்து பெண்ணிடம் சைகையில் காட்ட

குப்பென குங்குமமாய் சிவந்த வதனத்தோடு, கையில் இருந்ததை அவன் மீது வீசியபடியே, “பிச்சு.. பிச்சு..”

“பிச்சு பிச்சு தந்தா, இது நல்லாவே இருக்காது டீடீ”

“டேய் கொன்னுறுவேன்.. இப்டியே பேசிட்டுப் போனா” அவனது தோளில் அடிக்க

அவளது கைபிடித்து தடுத்தவன், “அப்ப தரமாட்ட”

தர்மசங்கடமாய், “அதல்லாம் இப்ப சரிவராதுடா” என்றதோடு சற்று நேரம் மௌனியானாள்.

காதலர்களுக்கான தனியுரிமைப் பேச்சுகள் தொடர்ந்தது.

கிருபாவிற்கு திறன்பேசி தனியாக இருந்தது.  ஆனால் கல்லூரியில் பயன்படுத்தமாட்டான்.  கல்லூரியில் பயன்படுத்த, பெற்றோர் அனுமதி வாங்கித் தந்திருந்தமையால், கையில் வைத்திருந்தான் அவ்வளவே.

திவ்யாவிற்கு, இன்னும் தாயின் திறன்பேசி வழியேதான், கிருபாவோடு செய்திப் பரிமாற்றங்கள்.  தாய் வீட்டிற்கு வந்தபின் சற்றுநேரம், தோழிகளிடம் சந்தேகம் கேட்கிறேன், அது, இது என எதையாவது கூறி அவனோடு செய்தி பரிமாற்றம் செய்துவிட்டு, உடனுக்குடன் அழித்து விடுவாள்.

திருமணம் போன்ற வைபவங்களுக்கு வேண்டிய மாலைகள் ஆர்டர் குடுத்தவர்களுக்கு அனுப்புவது போன்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே திறன்பேசியை ஈஸ்வரி பயன்படுத்தினார்.  அவருக்கு அதில் என்ன இருக்கிறது என தோண்டித் துருவிப் பார்க்க நேரமில்லை.  அதனால் நுணுக்கங்களை அறிந்து கொள்ளாமல் இருந்தார்.

பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் இருவருக்கிடையே கைமாறியது.

“நிஜத்துலதான் எல்லாத்துக்கும் பஞ்சமா இருக்கு.  இதிலயாவது ஒன்னு குடுத்துக்கலாமா?” உதடு குவித்துக் கேட்டவனிடம், பட்டென கையிலிருந்ததைப் பிடுங்கியவள், “அப்டினா தரமாட்டேன், போ”

‘போடீ லூசே.. எடுத்துட்டுப் போயி வீட்ல வச்சி, கம்முனு உம்மா குடுத்திருந்தா உனக்குத் தெரியவா போகுது’ என நினைத்தபடியே அவளையே சிரிப்போடு பார்த்திருந்தான்.

இருவருக்கும் நிஜம் உணர்ந்தாலும், அது தெரியாததுபோல ஒருவருக்கொருவர் காட்டிக் கொள்வதில் இன்பமடைந்து, தன்னை குருடர்கள்போல ஏமாற்றிச் சந்தோசமடைகிறது, காதலர் சமூகம்.  அதற்கு இவர்களும் விதிவிலக்காய் இல்லை.

அதன்பின் சத்தியம் எல்லாம் செய்து அதை தன்னகப்படுத்திக் கொள்வதற்குள் போதும் போதும் என்றாகியிருந்தது கிருபாவிற்கு. புகைப்படத்தை பத்திரப்படுத்திய இருவரின் முறைமைகள் பரிமாறிக் கொள்ளப்பட்டது. சிலாகிக்கப்பட்டது.  நினைவலைகளில் சேமிக்கப்பட்டது. சிரிப்பின் அளவு வழமையைவிட கூடிப் போனது. இனிமையெங்கும் வியாபித்திருந்தது.

பெண் பழையபடி பொலிவாகியிருந்தாள்.  கிருபா இன்னும் இருவருக்கிடையேயான தொலைவை அடாவடியாகத் தனது செயலால் சுருக்க எண்ணவில்லை. அதுவே திவ்யாவிற்கும் இதமாய் இருந்தது.

அன்று வீட்டிற்கு வந்திருந்த விக்கி, “முன்ன மாதிரி, இப்பல்லாம் ஏன் எங்கூட பேச மாட்டீங்கற”

“நேரமே இல்லை விக்கி”

“பஸ்ல வந்து ஏறுறதுக்கு, ஏன் தினமும் லேட்டாகுது”

“இந்த செம் ஃபுல்லா லாஸ்ட் ஹார் எல்லாம லேப்டா(Lab-da).  அதான் மேம்கிட்ட ப்ரோகிராம் ரன் பண்ணிக் காமிச்சி, அவுட்புட் நோட்டுல எழுதி, சைன் வாங்கறதுக்கு நேரமாகிருது.  வேணா நாளைக்கு வந்து என்னை லேப்ல பாரேன்” என முகத்தை களைப்பாய் வைத்தபடி கூறியவளைக் கண்டவனுக்கு, அதற்குமேல் சந்தேகம் கொள்ளத் தோன்றவில்லை.

“ஈஸ்வரி அத்தை என்னை நம்பித்தாண்டி காலேஜ்கு உன்னை விட்ருக்கு.  தேவையில்லாம ஏழ்ரை எதையாவது இழுத்து விட்றாத.  ஆமா சொல்லிப்புட்டேன்” கண்டிப்புடன் கூற

“அப்டி எதுனா, உங்கிட்ட சொல்லாம, நான் பண்ணுவேனாடா விக்கி” என உருகிய குரலில் கேட்டவளை நம்பி விடைபெற்றிருந்தான்.

இனிமையான தருணங்களை, தடைசெய்திடும் நாளும் விரைந்து வந்தது.

தடையை இலகுவாகத் தகர்த்தனரா…

……………………………………….