அலைகடல்-34.2

IMG-20201101-WA0016-1e31c4ae

அலைகடல்-34.2

கிட்டதட்ட பத்து மாதம் கழித்து நிரந்தரமாக கடலைப் பிரிந்து சென்னை வந்தடைந்தாள் பூங்குழலி. ஆம்… நாட்டிற்கு சேவை செய்தது போதும் என்று விருப்ப ஓய்வு பெற்றுதான் வந்திருந்தாள்.

அம்முடிவை சாதாரணமாய் எல்லாம் அவள் எடுத்துவிடவில்லை. மிக மிக பொறுமையாய் நாட்கணக்காய் யோசித்தே எடுத்தாள். வருடத்தில் ரெண்டு மாதம் மற்றும் வந்து சென்றால் அமுதன் ஒன்றும் கூற மாட்டான்தான். ஆனால் உள்ளே கண்டிப்பாக புழுங்குவான்.

தான் மட்டும் என்னவாம்? அவனுடன் வாழ்ந்துவிட்டு தன்னால் பிரிய முடியுமா என்ன? அப்படியே பிரிந்தாலும் தங்களுகென்று ஒரு குழந்தை பிறந்துவிட்டால் அதை தவிக்கவிட்டு இங்கு வந்துவிடுவேனா? எதற்கு இத்தனை துன்பம்… தானும் ஏங்கி மற்றவர்களையும் ஏங்கவிட்டு?

போதுமே… முழுதாக எட்டு ஆண்டுகள் நாட்டிற்காக வாழ்ந்திருக்கிறேன் மீதம் இருக்கும் காலமேனும் கொஞ்சம் எனக்காகவும் வாழ்ந்து பார்க்கிறேனே! இந்தக் கடல், கப்பல், விமானம் அனைத்தையும் பிரிவது கஷ்டமாக இருந்தாலும் என்றோ ஒருநாள் இவற்றை பிரியவேண்டி வரும்தானே? திடமாய் முடிவெடுத்து விருப்ப ஓய்வும் பெற்றுவிட்டாள்.

சென்னை வருவதாக அமுதனிடமோ வேந்தனிடமோ கூறவில்லை. தானாக வந்துவிட்டாள். ஆனாலும் அவள் வெளிவந்ததும் ஓடிவந்து அவளை அணைத்தான் இளையவன். அதை எதிர்பார்த்தவள் போல் பதிலுக்கு அணைத்துச் சிரித்தாள் பூங்குழலி.

நலம் விசாரிப்புகளை பரஸ்பரம் பரிமாறிய பின்தான் கவனித்தாள், முன்பு தன் உயரம் இருந்தவன் இப்போது கூடுதலாக தன்னைவிட ஓரடி உயரம் வளர்ந்திருந்ததை,

“என்னடா அதுக்குள்ள என்னைவிட வளர்ந்துட்ட” என்றவாறு விழிகளை விரிக்க,

“வளர்ற பையன கண்ணு வைக்காத பூமா” என்றவன் “வா வா உனக்காக அரைமணி நேரமா நாங்க வெயிட்டிங்” என்றதும் அமுதனைத்தேட, அவளின் பையைப் பிடுங்கி காருக்கு அழைத்துச் சென்றவன் ஆரவ் அருகே அமர வைத்து அவனும் ஏறிக்கொண்டான்.

தூரத்தில் இருந்து அவளைப் பார்த்துக்கொண்டே இருந்ததால் அவள் அமர்ந்ததும் தன் உணர்ச்சிகளைக் கட்டுக்குள் கொண்டு வந்து காரைக் கிளப்ப, ஓரப் பார்வையால் கடைசியாகத் தான் செய்த வேலையைப் பற்றி எதாவது சொல்வானா? என அவனையே குறுகுறுவென பார்த்துக்கொண்டு வந்தாள் பூங்குழலி.

அவனிற்கோ அவளைத் தவிர அந்நொடி வேறெதுவும் நினைவு வரவில்லை. தன் மனைவி இனி தன்னுடன் இருப்பதற்காக வந்துவிட்டாள். அந்த எண்ணமே அடிமனதில் தேனாய் தித்தித்துக் கொண்டிருந்தது அமுதனுக்கு. அவன் தனக்காக வேலையை விட்டு வருவாள் என்று கனவிலும் எதிர்பார்க்கவில்லை.

இருவருக்கும் பேசவில்லை. அதைவிட என்ன பேசுவது என்று தெரியவில்லை என்றால் சரியாக இருக்கும்.

அவளின் குறுகுறு பார்வையில் சரியாக காரை ஓட்ட முடியாமல் தடுமாறியவன் அவளைத் திசைத்திருப்பும் பொருட்டு, “சொல்லிட்டு வர நல்ல பழக்கம் எல்லாம் இல்லையா? நீ பாட்டுக்கு ஹாயா வந்து நிக்குற” என்று ரோட்டிலேயே பார்வை பதித்துக் கேட்க,

“ஏன்… இப்போ சொல்லாம வந்ததால உங்களுக்கு தெரியாமலா போச்சு” என்றாள் வழக்கமான தொனியில்.

அது அவனிற்கு அலட்சியம் போல் தெரிய, அவளை ஒரு பார்வை பார்த்து, ‘அதே திமிரு அப்படியே இருக்கு’ என்று முணுமுணுத்தான் ஆரவ்.

அதன்பின் அத்தனை மாதக்கதைகளை பேசிக்கொண்டே வந்த வேந்தனும் பூங்குழலியும் அன்று என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று திட்டம் தீட்டிக்கொண்டிருந்தனர்.

முதலில் ஆடலரசன் திரைப்படத்தைப் பார்ப்பதாகவும் அதன் பின் வேந்தன் வெற்றி பெற்ற போட்டியின் நடனத்தை பார்ப்பதாகவும் முடிவு எடுக்கப்பட, “பச்… இன்னைக்குதானே வந்திருக்கா… ரெஸ்ட் எடுக்கட்டும்” என்று ஆரவ் ஆட்சேபிக்க,

“நான் ரெஸ்ட் எடுத்துட்டேதான் பார்க்க போறேன் என்கொன்னும் பிரச்சனை இல்லை. உங்களுக்கு வேலை இருக்கா?” என

“இல்ல… நான் இன்றைக்கு ப்ரீதான்” சொல்லிய பின்பே அவள் தன்னையும் அவர்களோடு பார்க்க அழைக்கிறாள் என்று மூளைக்குப் புரிய, மனம் வானத்திற்கும் பூமிக்குமாகத் துள்ளியது.

வீட்டிற்கு வந்ததும் பிரஷ் அப் செய்து வந்த பூங்குழலியின் கண்ணில் தனியாக அமர்ந்திருக்கும் ஆரவ் பட, சற்றுத் தயங்கினாலும் அவனிடம் சென்று, “என் மேல் கோபம் வரலையா?” என்று கேட்டுவிட்டாள் அவள்.

அவள் எதற்கு கேட்கிறாள் என்று புரிந்தவனோ, “என்னால முடியாததை நீ செஞ்சிருக்க. அதுக்கு தேங்க்ஸ்தான் சொல்லணும்” என்று கூறி புன்னகைக்க,

“என்ன என்னாச்சு…” அவன் தொனியில் சற்று பயந்துதான் போனாள் அவள். ஏடாகூடமாய் எதுவும் ஆகிவிட்டதோ என.

“என்ன ஏன் பயப்படுற… அவங்க குடும்பம், கட்சி எல்லாம் ரெண்டா பிரிஞ்சி கூடிய சீக்கிரம் அழிய போகுது” என்றவன் அவளை அருகில் அமர்த்தி அனைத்தையும் சொல்ல,

மௌனமாய் அனைத்தையும் கேட்டவள், “அப்போ மிஸ்டர் அருள்ஜோதியோட மனைவி அவரைப் பற்றிய உண்மை தெரியாமதான் கல்யாணம் பண்ணிருக்காங்க இல்லையா? நாம… நாம வேந்தனை அவங்க…” என்று சொல்ல வந்ததை சொல்ல முடியாமல் திணறினாள் அவள்.

“ஷ்… பூங்குழலி. அவன் உன் தம்பி ஆனதும் சரி என் தம்பி ஆனதும் சரி விதிப்படிதானே நடந்துச்சு. அதே விதி அவனை அவங்ககூட சேர்த்துவைக்க நினைச்சா வைக்கட்டும். என்கிட்ட இப்போ எந்த ஆதாரமும் இல்ல மொத்தமா அழிச்சிட்டேன். இனி இதைப் பத்தி பேசக்கூடாது சரியா?” என்று ஆறுதலாய் கையில் தட்டிக்கொடுக்க, எப்படியென்றே தெரியவில்லை சட்டென்று காலம் காலமாய் வாழ்ந்த நெருக்கத்தை இருவருக்கும் கொடுத்தது அந்த ஆறுதலான தொடுகை.

அதில் தயக்கம் விலகி, சிறிது வெட்கத்துடன் மெதுவே அவன் தோள் சாய்ந்தாள் பூங்குழலி. பரந்த அந்த தோளில் அவளின் தலை வாகாய் பொருந்த, அமுதனின் முகத்தில் அழகாய் பூத்தது இளமுறுவல். அதை பூங்குழலியும் உணர்ந்தாள் போலும் அவனிடமிருந்து அவளிடமும் இடம்மாறியது அம்முறுவல்.

அவர்களின் மோன நிலையை வேந்தன் வரும் சத்தம் கலைக்க, ஆவலாய் அவள் முகம் பார்த்த அமுதனின் முகம் காணாமல் சட்டென்று விலகி அமர்ந்தாள் பூங்குழலி.

அதன் பின் படம் பார்க்கையில் ஒவ்வொரு காட்சிக்கும் அதை நிறுத்தி நிறுத்தி கதை சொன்னான் வேந்தன். அதில் ஆரவ்வின் காதல் காட்சிகள் சில வர, வேந்தன் வேண்டுமென்றே, “பூமா மத்த எல்லா சீனும் ஒரே டேக்ல முடிச்ச அண்ணா. இந்த சீன் மட்டும் நாலு வாட்டி டேக் வாங்குனாங்க… என்னன்னு கேளேன்” என்று தமக்கையை தூண்டிவிட, “டேய்… அந்த பொண்ணு சொதப்புனா நான் என்னடா பண்ணுவேன்” என்றவாறு குஷனை அவன் மீது எறிந்தான் அமுதன்.

இப்போதுதான் ஏதோ மனம் வந்து தோள் சாய்ந்திருக்கிறாள் மனைவி. இவன் தூண்டிவிட்டு தனக்கு விவாகரத்தே வாங்கி கொடுத்துவிடுவான் போலவே!

இங்கு இருவரும் சண்டையிட, அவன் கூறிய காட்சியைப் பார்த்தாள் பூங்குழலி. பெரிதாக ஒன்றும் இல்லை… நாலு காதல் வசனமும், ஹீரோயின் அவனை லேசாக அணைப்பதும்தான் இருந்தது. கணவனின் நடிப்பும் கண்ணியமும் அப்பட்டமாய்த் தெரிய, அவர்கள் இருவரின் சண்டையில் சிரிப்புதான் வந்தது.

“டேய் ஒழுங்கா படத்தை பார்க்கவிடுடா” என்று தம்பியை அடக்கியவள் கணவனையும் ஒரு பார்வை பார்க்க, அதன்பின்புதான் இருவரும் அவளை சற்று ஒழுங்காய் படத்தைப் பார்க்கவிட்டனர். அதற்கே பல மணி நேரங்கள் சென்றுவிட்டது.

மீண்டும் உணவுண்டு வந்தவர்கள் அடுத்ததாக வேந்தன் போட்டி நடனத்தை பார்க்க, முன்பு பூங்குழலியை உறுத்திய வேந்தன் மற்றும் அவனின் பெண் தோழியின் நடனம் இப்போது உறுத்தவில்லை. இருவரின் கவனமும் நடனத்தில்தானே இருக்கிறது! மனம் தெளிவாக பார்வையும் அவளுக்கு தெளிவானது அழகாய்.

ஒருவழியாக இரவாகவும் தங்களின் அறையின் பால்கனி நின்றிருந்தவளை பின்னிருந்து அணைத்தவன், “thanks to coming back for me குழலி” என  

அவன் கைகளின் மேல் தன் கையை வைத்தவளோ, “ம்ம் என்ன…” என்றாள் அவன் அணைத்ததில் சரியாக கவனிக்காமல்.

“என்னுடன் வாழ வந்ததற்கும் என் வாழ்க்கையில் வந்ததற்கும் நன்றின்னு சொன்னேன்” என்றவன் அவள் பதிலை எதிர்பார்க்காமல்

“நீ என் கைக்குள்ள இருக்குறது உண்மையா பொய்யானே தெரியல… ஐ லவ் யூ பூங்குழலி… ஐ லவ் ஒன்லி யூ” என்றவாறு அவளை தன்னை நோக்கி திருப்பியவன் பூ முகமெங்கும் தன் இதழ்களால் வருடினான்.

சிறிது நேரம் அமைதியில் கழிந்த பின், “ஒருவேளை நான் வராமலே போயிருந்தா என்ன செஞ்சிருப்பீங்க அமுதன்” என்று கேட்டாள் பூங்குழலி.

அதில் விலகி அவள் முகம் பார்த்தவன், “நீ கடல்லயே குடியிருந்தாலும் ஒருநாள் கரை சேர்வன்னு உனக்காக கடற்கரையில் காத்திருப்பேன் குழலி. உன்னை முழுசா அறிந்து உனக்குள்ள ஒளிஞ்சிருந்த காதலையும் குழப்பத்தையும் கண்டுபிடிச்சவனுக்கு காத்திருப்பு கஷ்டம் தான் என்றாலும் அது இஷ்டமான கஷ்டம்டி” என்று கொஞ்சியவனை இமைக்காமல் பார்த்தவள்,

“என்னகிட்ட அப்படி என்ன இருக்கு அமுதன்…” என சந்தேகமாய் கேட்க,

“என்ன இல்லை உன்கிட்ட…” என்றான் பெருமித குரலில். 

“நான் சண்டை போட்டதும் திட்டுனதும் தவிர ஒன்னும் செய்யலையே” என்றவளின் பேச்சின் இடையில் நுழைந்து,

“அடிச்சியே மறந்துட்டியா…” என உற்று பார்த்தால் மட்டுமே தெரியும் தன் தழும்பை விளையாட்டாய் அவளின் கண்களின் அருகே கொண்டு வந்து காண்பிக்க, அதில் அவனை சிரிப்புடன் முறைத்தவள்,

“அதுவும்தான் போதுமா… இதுல உனக்கு காதலிக்க என்ன கிடைச்சதுன்னு இப்படி காதலிக்குற”  

“ம்ம்ம்… உன்னோட கண்ணீர்” என்றவாறு அவளின் இரு கண்களிலும் முத்தம் வைத்தவன்,

“உன்னோட வலி… என் மனசுக்கு வலிச்சது குழலி. எனக்கெல்லாம் எதுவுமே வலிக்கவே வலிக்காது. பழகிப்போச்சுன்னு நினைச்சேன். ஆனா உனக்குன்னு வரப்போ சின்னதா இருந்தாலும் மனசு பதறி போயிடுது. உனக்கு ஒரு கஷ்டமும் வராம எனக்குள்ள பொத்தி வச்சி பாதுகாக்கனும்ன்னு நினைச்சது. அப்புறம் உன்னையே மொத்தமா கொள்ளையடிக்க சொன்னது. இதை அப்போவே சொன்னா நீ சரின்னு பின்னாடி வருவியா என்ன? போடான்னு சொல்லிற மாட்ட… அதான் முதல உன்னை என் வீட்டுக்குள்ள கூப்பிட்டுப்போம் அப்புறம் மனசுக்குள்ள கூப்பிடுவோம்ன்னு நேரா கல்யாணம் பண்ணிட்டேன்” என்று சொன்னவனை

“மிரட்டி கல்யாணம் பண்ணுனீங்க…” என்று திருத்தியவாறு தள்ளிவிட்டாள் மனைவி.

“everything is fair in love and war” தள்ளியவளை மீண்டும் அணைத்து தன் கால்களின் மேல் நிற்க வைத்தவன்,

“எனக்கு இப்போவே நீ மொத்தமா வேணும்ன்னு மனசு சொல்லுது” என்று காதோரம் கிசுகிசுப்பாய் மொழிய, அதில் முழுதாய் சிவந்து அவனைப் பார்க்க முடியாமல் இமைகளை மூடினாள் பூங்குழலி. 

காதலின் தவிப்பு அவனிற்கு மட்டுமா என்ன… அவளிற்கும் தானே!

அப்படியே அவளைத் தன் மேல் தாங்கியவாறு தங்களின் அறைக்குள் நுழைந்தவன் விட்ட முத்தத்தை மீண்டும் தொடர, அமைதியாய் அவனின் செயல்களை கண்மூடியவாறே உள்வாங்கினாள் மனைவி.

பனியில் நனையும் பூவாய் அமுதன் என்ற பனியில் பூங்குழலி நனைய, பூவினை மொய்க்கும் வண்டை போல தனக்கே தனக்கென்று சொந்தமான பூங்கொத்தை ஆசையாய் மொய்த்தவன் அப்பூங்கொத்தின் வாசத்தில், ஸ்பரிசத்தில், மதி மயங்கி அவளை மயக்கவும் ஆரம்பித்தான் இனிமையாய்.

உள்ளங்கள் இடம்மாறிய அந்த இனிமையான சங்கமத்தில் அழகாய் கொஞ்சி பேசியது இருவரின் இதயங்கள்.

ஈரத்துல அணைச்சிக்க அனலா
பாரத்துல பிடிச்சிக்க நிழலா
காதல் இங்கு கடலென இருக்கு
உனக்கென விரிஞ்சு தான்

அலைகடல் ஆர்ப்பரிக்கும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!