அலை ஓசை – 6

sea2-76dec9f1

அலை ஓசை – 6

அலை ஓசை – 6

அரும்பாக தோன்றிய மொட்டு,  மெதுவாக மலர்ந்தால் போல் படிப்படியாக வளர்ந்து இன்று பூரண மலராக முழுமதி தோன்றுகிறது, அழகிய ஒளி வீசும் பௌர்ணமியாக!  இவ்வழகை காண ,  மலர்ந்த தோட்டத்து மல்லிகையாக மின்னிடும் மின்மினியாக, வானத்து விண்மீன்கள் கொத்து கொத்தாக பூத்திருக்க, உலகத்தை ரசிக்கவே நிலவரசி வலம் வருகிறாள் மெதுவாக, மேகத்தினூடே அரண்மனைக் காவலர்களாய் விண்மீன்களின் துணை கொண்டு! 

நிலவரசியை வரவேற்கவே தென்றலும் பனி காற்றும் போட்டி போட்டு கொண்டு சாமரம் வீசின, நிலவரசி யின் அழகிலோ அல்லது குளிர்ந்த காற்றாலோ மக்கள் நிம்மதியான தூக்கத்தில் ஆழ்ந்து இருந்தனர்.

தன் முழு அழகையும்
காட்டி சிரித்த நிலவின் 
ஒளி கிரணங்களை
தாங்கிய கடல் அலைகள்
என்னிடம் வந்து 
விடாமல் கேட்கிறது, 
“எங்கே உன் நிலவென்று?”
கடற்கரை மணலில் என்
முகத்தை புதைத்து 
கொள்கிறேன் என் 
வாழ்வில் எப்போதோ 
அமாவாசை வந்து 
விட்டதென்று கூற 
வெட்கி கொண்டு!

விண்ணில் நடக்கும் ஜாலங்களில் மனம் லயிக்காது, கடல் கரையில் முட்டி காலிட்டு கண்ணீரில் கரைந்து கொண்டு இருந்தது அந்த நிழல் உருவம். அந்த தாய் கிளம்பும் தருணத்தில் தான் தன்னை மீட்டு கொண்டு, அவளுக்கு காவலாக அவள் வீடு வரை சென்று, பின் தன் அடுத்த வேட்டையை தேடி ஆக்ரோஷமாக சென்றது. 

# # # # #

மண்ணுலகு நிலவரசியோ தன் தூக்கத்தை தொலைத்திருந்தாள், நிழல் உருவத்தின் நடவடிக்கையை நினைத்து கொண்டு! ஆம்,  சந்திரா மனம் அமைதி இல்லாமல்,   கரையை அடைய துடிக்கும் அலைகளை போலவே,மீண்டும் மீண்டும் நிழல் உருவத்தின் நோக்கத்தை பற்றியே அலசி கொண்டு இருந்தாள். 

அந்த நிழல் உருவத்தின் அடுத்த செயல் என்னவாக இருக்கும்?  ஏன் இந்த கடத்தல்கள்?  ஏன்?  எதற்கு?  எப்படி?  அடுத்து என்ன?  மண்டைக்குள் வண்டாய் குடையும் கேள்விகளுக்கு பதில் கிடைக்காமல் தவித்தாள் அவள்! 

அவள் மனதில்  நிழல் உருவம் தனக்கு அனுப்பிய கிப்ட் பாக்ஸும் அதில் இருந்த வீடியோவுமே வந்து வந்து போனது. உதவி புரிகிறதா?  இல்லை தங்களை குழப்பி தன் காரியத்தை சாதிக்க நினைக்கிறதா?  

அடுத்த கட்ட நடவடிக்கை இல்லாமல் தேங்கிய குட்டையாக மகேஷின் கேஸ் இருப்பதை அவளால் ஏற்று கொள்ளவே முடியவில்லை. அவள் தன் கண்களை மூடி,  இரண்டு நாட்களாக நடந்த அனைத்தையும் அலச ஆரம்பித்தாள். கடத்தல் நடந்த பிறகு ஒரு முறையேனும் ரெட்டிக்கு கடத்தியவனிடம் இருந்து எந்த தொடர்பும் ஏற்படவில்லை.  பணத்திற்காக கடத்தல் நிகழவில்லை.  

மாறாக போலீஸ் அதிகாரிகளுடன் கிப்ட் பாக்ஸ்கள் கொடுக்கிறான். கடத்தப்பட்டவனை எந்தவொரு அடியோ இல்லை. என்னடா இது?  தீவிரமாக அலசிய மூளையில்  இரு நிகழ்வுகள் மட்டுமே மீண்டும் மீண்டும் வந்தது.

ருத்ரா தன்னிடம் அன்று கூறியவற்றில் இருந்து ஒரு வரி சிக்கி கொண்டது. ‘நமக்கு இது ஒரு ஓபன் சேலன்ஜ்’.

ஆதி தன்னிடம் கூறியவற்றை யோசித்தாள். 

“மேடம்,  ஹோட்டல் பெயர் பார்த்தீங்களா ஓபன் ஹார்ட்ஸ் ஹோட்டலாம்.  பண்ணுவது பிராட் தனம் இதுல பெயருக்கு ஒன்னும் குறைச்சல் இல்லாமல் வைச்சி இருக்குறத. “

சந்திரா கிப்ட்யில் வந்த பேப்பரையும் ஆதி கூறியவற்றையும் சேர்த்து பார்த்தாள்.பின்,  ஏதோ மனம் அந்த ஹோட்டலுக்கு தான் அந்த பேப்பரின் வாயிலாக கிடைத்த இன்னொரு லீட் என்று சந்தேகம் வர, ஆதிக்கு உடனே கால் செய்து அந்த ஹோட்டலுக்கு வர சொல்லி,  தானும் அங்கு விரைந்தாள்.  

அவள் வருவதற்கு முன்பாக வந்த ஆதியை மெச்சுதலாக பார்த்த சந்திரா,  அவனிடம் சென்றாள். 

“மேம், என்ன பண்ண வேண்டும் என்று சொல்லுங்க,  நான் பண்ணிவிட்டு சொல்லுறேன்.  நீங்க வீட்டுக்கு போங்க மேம். இந்த ராத்திரி நேரம் அதுவும் இந்த இடம் அவ்வளவு சேவ்ட்டி இல்லை மேம்.” என்று ஆதி  சந்திராவின்  பாதுகாப்பை மனதில் வைத்து பேச, 

“சேவ்ட்டியை மட்டுமே நினைத்து பார்த்து  நான் போலீஸ் அதிகாரியா ஆகி இருக்க முடியாது ஆதி.  நமக்கு இங்கு ரொம்ப முக்கியமான வேலை இருக்கு. நீங்க ஹோட்டல் மேனேஜரைக் கூப்பிட்டு பிராத்தல் பண்ணுற எல்லா பெண்களையும் கூப்பிட்டதாக சொல்லுங்க. அப்படி அவன் ஒத்துகலனா, அரெஸ்ட்  பண்ண வேண்டியதிருக்கும் என்று மிரட்டுங்க. “

“எஸ் மேம்,  நீங்கள் அந்த பொண்ணுங்க மூலமா ஏதோவொரு லீட் கிடைக்கும் என்று நினைக்கறீங்க. ஐவில் அரேன்ஜ் இன் மினிட்ஸ் மேம்” என்று உன் மனதில் இருப்பதை நான் அறிவேன் என்பதாக ஆதி கூற, 

“சேடன்லி, டோன்ட் வேஸ்ட் டைம்.சீக்கிரமா வர சொல்லுங்க ஆதி” என்று சந்திரா ஆதியை துரிதப்படுத்தினாள். பத்து நிமிடங்களில்,  அந்த பெண்கள் அனைவரும் ஒன்று திரள, 

” நான் இங்க உங்களை கைது பண்ண வரல.  எனக்கு ஒரு தகவல் மட்டும் வேண்டும்,  நீங்க சொல்லிடா நான் கிளம்பிடுவேன்”   என்று முதலில் அவர்கள் மனதில் பயத்தை நீக்க பேசியது வேலை செய்தது.

 சந்திராவிற்கு ஆதரவாக ஒரு பெண்,”என்ன என்று முதலில் சொல்லுங்க  மேம் ” என்று வினவினாள்.

“இங்கே ரெகுலரா வர கஸ்டமர்  யாராவது வராம இருக்காங்கலா இல்லை யாராவது கால் வந்து பதட்டமாக காண பட்டாங்காலா அப்படியும் இல்லாம இப்போ வரேன் என்று சொல்லி விட்டு வராமல் போய் இருக்காங்கலா?  கொஞ்சம் யோசித்து சொல்லுங்க. கடந்த இரண்டு நாளில், உங்களுக்கு யாராவது நடவடிக்கையில் வித்தியாசம் தெரிந்து இருக்கா?” என்று தன் கேள்விகளை சந்திரா அடுக்க, 

 எந்த பெண் முகத்திலும் தன் கேள்விக்கான பதில் இல்லை என்று ஊகித்து இருக்கின்ற தருணத்தில், “மேம், இங்க ரக்ஷன் என்று ஒருத்தர் வருவாங்க. இன்னிக்கு கால் வந்து ரொம்ப பதட்டமா தெரிந்தாங்க.இப்போ வரேன் என்று சொல்லிட்டு போனாங்க.இன்னும் வரல, பே கூட பண்ணல.இந்த மாதிரி எப்பவும் நடந்தது இல்ல மேம்”  தயங்கிய வாறு கூறியவள்,

“எனக்கு அவங்க முழு விவரமும் கொடுக்க முடியுமா?  உங்களுக்கு தெரிந்த அளவுக்கு சொன்னால் போதும்” என்று சந்திரா அவனை பற்றிய தகவலை சேகரிக்க நினைக்க, 

“மன்னித்து விடுங்கள் மேம், யாரோட தகவலையும் சொல்ல முடியாத நிலையில் நாங்க இருக்கோம்.”  என்று தணிந்த குரலில் தன் மேனேஜரை கண்காட்டி கூற,  அதை உணர்ந்த சந்திரா ஆதியிடம் கண் ஜாடை காட்ட,  சில நொடிகளில் மேனேஜர் அந்த இடத்தில் இருந்து அப்புற படுத்த பட்டான்.

“இப்போது சொல்லலாம் என்று நினைக்கிறேன்” என்று சந்திரா ஊக்குவிக்க, “அவர் பெயர் ரக்ஷன். மருத்துவ கல்லூரி மாணவன். பைனல் இயர்னால கூடவே ஒரு பார்மசி ல பகுதி நேர வேலை பார்க்குறாங்க. அப்பா அம்மா யாரும் இல்லை. திருச்சியில ஒரு அனாதை இல்லத்தில் தான் வளந்தாங்க. உறவு என்று சொல்லிக்க தனுஷ் என்று ஒரு நண்பர் மட்டுமே தான். இங்கே பக்கத்தில் மான்ஷன் தங்கி இருக்காங்க.  வாரத்திற்கு ஒரு தடவை வருவாங்க.  என்னிக்கு இல்லாமல் இன்னிக்கு வரும் போதே பதட்டமா இருந்தாங்க. அப்புறம் ஒரு  ஒரு மணிக்கு கால் வந்துச்சு. இப்போ வரேன் என்று சொல்லிட்டு போனாங்க. இன்னும் வரல ”   என்று தான் அறிந்த அனைத்தையும் கூறி முடிக்க.. 

“போன் நம்பர் கொடுங்க” என்று சந்திரா வினவ,  “போனை மாத்த போறதா சொன்னாங்க மேம், கடைசியாக என்கிட்ட கொடுத்த நம்பர் ********** ” “எல்லாமே சொல்லீட்டீங்க.எங்களுக்கு வேலை மிச்சம். தாங்க்ஸ் ” என்று சந்திரா  கிளம்ப எத்தனிக்க, “கேட்க கூடாது தான், இருந்தாலும் ஏதாவது பிரச்சனையா மேம்?  “என்று தயங்கிய யடி கேட்க,  ” எந்த பிரச்சனையும் வர கூடாது என்று தான் கேட்கிறேன் ” என்று சந்திரா கிளம்ப, 

ஆதியிடம்,  “நீங்க அந்த ரக்ஷன் இருக்குற இடத்துக்கு போங்க. அங்கே அவன் இருக்கானா இல்லையா என்று பாருங்க, எதனாலும் எனக்கு இன்பார்ம் பண்ணுங்க ”   என்று கூறி கொண்டே ருத்ராவிற்கு டையல் செய்தாள், அங்கு இந்நேரம் ரக்ஷன் காணாமல் போகியிருப்பான் என்ற யுகத்தில். 

“ருத்ரா,  ஸ்டேஷனுக்கு உடனே வா அர்ஜன்ட்” என்று கூறி அவளும் ஸ்டேஷனுக்கு செல்ல தன் வண்டியில் ஏறினார். அவள் மனதில் எப்போதும் தோன்றும் அதே கவிதையும் தோன்றியது. 

எவர் வந்தாலும் 
திறந்து விடும், 
சிவப்பு வேலியிட்ட 
வயலில் நான், 
அன்று பூத்த 
பூவாக வேஷமிட்டு, 
இருள் சூழும் 
நல்லிரவிற்காக 
காத்திருந்தேன், 
இன்று வரும்
காளையாவது காயம் 
தராது செல்வானா 
என்ற நப்பாசையில்! 

சந்திரா வேதனை சிரிப்போடு அந்த இடத்தையும், தோன்றிய எண்ணத்தையும் கடந்து வந்தாள், ஸ்டேஷன் வந்து விட்டதாய் தன் டிரைவர் கூறியவுடன். 

# # # # #

தன் பெரியப்பாவின் நடவடிக்கைகளை கவனிக்க ஏற்பாடு செய்த அந்த ஜிம் பாய், தன் அலுவலக வேலைகளை பார்க்க, தன் அறைக்கு வந்தான். கண்ணெதிரே தோன்றிய ஆள் அளவு கொண்ட போட்டோவை பார்த்த அந்தக் கண்கள் துரோகத்தாலும் கவலையாலும் ரத்தம் என சிவந்தது. 

“குழந்தைத்தனம் மாறாத என் தம்பியோட இந்த முகத்த பார்த்து, வஞ்சம் தீர்க்கரத்துக்கு உனக்கு எப்படிடா  மனசு வந்தது. பாவி சொல்லியிருந்தால் என் உசுர தந்திருப்பேனே” 

மனதோடு அவன் பேசிய போதும், மறக்க வேண்டும் என்று நினைத்த அந்த நிகழ்வு படமாகவே அவனுக்கு விரிந்தது. 

“மச்சான் உனக்கு ஒரு விஷயம் சொல்லவா? 

கடலில் விளையாடி கொண்டிருந்த  சிறுவனின் செருப்பு ஒன்று காணாமல் போனது. அவனுடனே கடற்கரையில் எழுதினான். “இந்த கடல் மாபெரும் திருடனாக இருக்கிறது. அனைவரும் விழிப்புடன் இருங்கள் “.

கொஞ்ச தூரத்தில் ஒருவர் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அவர் நினைத்ததை விடவும் அதிக மீன்கள் வலையில் சிக்கின. அவர் “இக்கடல் கொடையாளி அப்பா ” என கடற்கரையில் எழுதிவைத்தார் .

அந்த கடலில் நண்பர்களுடன் குளிக்க வந்தான் மாணவன் ஒருவன். அலையில் சிக்கி மூழ்கி இறந்தான். அதிகம் பிரியம் கொண்ட அவனது தாய் ” இந்த கடல் இப்படி மக்களை அநியாயமாக கொன்று குவிக்கிறது” என அழுது புலம்பினாள். 

வயதில் மூத்த மீனவர் ஒருவர் மூச்சடக்கி முத்து எடுக்க ஆழ்கடலில் மூழ்கினார். அவருக்கு கிடைத்த அத்தனையும் நல்முத்துக்கள். அமோக லாபம் கிடைக்கும் என்பதால் “இந்த கடல் ஒன்றே போதும் என் வருங்கால சந்ததியை மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு” என மகிழ்ச்சியில் குதித்தார். 

இவர்களுக்கு கிடைத்த அனுபவம் எல்லாம் ஒன்றுக்கொன்று முரண்பட்டாலும் அத்தனையும் உண்மை. எனவே ஒருவரது வாழ்க்கை முறை, அணுகுமுறை இன்னொருவருக்கு பொருந்தாது . ஒன்றோடு ஒன்று ஒப்பிடக்கூடாது. மனிதர்கள் ஒவ்வொருவரின் வாழ்வுக்கும் தனித்தன்மை உண்டு. 

“யார் எது சொன்னாலும் கேளு, உனக்கு சரி என்று தோன்றுவதை செய்”. இப்படி தான் டா நான் அவனுக்கு சொல்லித் தந்திருக்கேன். அவன் உன் கூட இருந்ததைவிட , என் கூட இருந்து தான் ஜாஸ்தி. 

இப்ப புரியுதா மச்சான் , நீ அவன கம்பார் பண்றத முதல்ல விடுடா. உன்ன மாதிரி இல்லனாலும், அவன் அவனுக்கு தெரிஞ்ச வழியில நேர்மையா, மனசாட்சிக்கு எதிரா போகாம , உன்ன விட ஒசந்த இடத்துல இருப்பான் பாரு. அன்னைக்கு நான் சொல்றது உனக்கு கண்டிப்பா புரியும் டா. அப்ப நீ என்ன நெனச்சிப்ப. “

” ரொம்ப உசந்த இடத்துல என் தம்பியை வைச்சிட்டடா பாவி” இகழ்ச்சியில் உதடுகள் வளைந்தாலும், அவன் மனம் ஏனோ தன் நண்பனுக்கு, தன் துரோகிக்கு துரோகம் செய்ய மட்டும் தயங்கியது. 

விதி யாரை விட்டது ? சத்தியம் யாரை விட்டது? சதியும் தான் யாரை விட்டது? தர்மம் தலை தூக்குமோ? இவன் புரியாத புதிராகவே விளங்கிவிடுவானோ? காலமே பதில் கூறும். 

# # # # # 

தோழன் என்று சொல்லி சிரித்தேன் 
தேளாய் என்னை கொட்டி விட்டாய் ! 
துரோகம் துரோகம் துரோகம் துரோகம் 

வேண்டிய வரமென்று மகிழ்ந்தால் 
வேரோடு என்னை பிடுங்கி விட்டாய் ! 
துரோகம் துரோகம் துரோகம் துரோகம் 

ஏக்கத்திலே மனம் வருந்தயிலே 
வேஷம் களைவது முறையுமில்லை! 
துரோகம் துரோகம் துரோகம் துரோகம் 

கத்தியில்லா யுக்திகளுக்கு நானும் 
இன்னும் பயிலவில்லை! 
துரோகம் துரோகம் துரோகம் துரோகம் 

சதி வளைக்கும் மாட்டி வைத்த 
விதி ஆடும் கோர ஆட்டம் ! 
துரோகம் துரோகம் துரோகம் துரோகம் 

முகம் காண பயந்து நின்று 
முதுகில் குத்தும் சூதாட்டம் !
துரோகம் துரோகம் துரோகம் துரோகம்

# # # # # 

வெயிட் அண்ட் வாட்ச்…

அலைகளின் ஓசை அடங்குவதில்லை…

# # # # # 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!