birunthavanam-14

Birunthaavanam-efb7e926
akila kannan

பிருந்தாவனம் – 14

கிருஷ், மாதங்கி இருவரிடமும் மௌனமே சூழ்ந்திருக்க, “பட்… பட்…” என்று கதவை தட்டும் சத்தம் கேட்க, கிருஷ் பதட்டமாக கதவை பார்த்தான். அவன் முகத்தில் ரௌத்திரம். மாதங்கியின் முகத்தில் நமட்டு சிரிப்பு.

‘யார் என் திட்டத்திற்கு இடைஞ்சலாக?’ என்று அவன் வேகமாக கதவை திறக்க, அங்கு பிருந்தா நின்று கொண்டிருந்தாள்.

“மாதங்கி” அவள் தன் தோழியை தேடி உள்ளே நுழைய, “நீ இன்னும் வீட்டுக்கு போகலையா? இந்த நேரம் உனக்கு இங்க என்ன வேலை?” என்று கர்ஜித்தான் கிருஷ்.

“மாதங்கி, ஒன்னும் சொல்லாம ஓடி வந்துட்டா. அவ எங்க போனான்னு தெரியாம, அவளை இவ்வளவு நேரமா தேடுறேன். கடைசியா இங்க வந்தேன்.” என்று மூச்சு வாங்கியபடியே விளக்கம் கொடுத்தவள், “நீ இங்க என்ன பண்ற?” என்று தன் கண்களை சுருக்கி தன் சகோதரனை பார்த்தாள் பிருந்தா.

‘அப்படி கேளு டீ என் ராசாத்தி’ என்று தன் தோழியை மாதங்கி பார்க்க, அவள் பார்வையில் கடுப்பான கிருஷ், “நீ இந்த நேரத்தில் வீட்டுக்கு போகாம இங்க சுத்தாத? நீ கிளம்பு” அவன் எகிறினான்.

“அது தானே, உன் தங்கச்சின்னா தங்க கட்டி. ஊரான் வீட்டு பிள்ளைன்னா தொக்கா?” மாதங்கி நறுக்கென்று கேட்டாள்.

“உளறாத…” அவன் மாதங்கியிடம் எகிறி, “பிருந்தா நீ கிளம்பு. நான் மாதங்கி கிட்ட பேசிட்டு அவளை அனுப்பறேன்.” அவன் தன் தங்கையை கிளப்பினான்.

“நான் மாதங்கி இல்லாமல் போக மாட்டேன்” பிருந்தா உறுதியாக நிற்க, “எனக்கு உங்களை பிடிக்கலை. எத்தனை முறை நீங்க எப்படி காதலை சொன்னாலும், என் பதில் நோ.” மாதங்கி உறுதியாக நின்றாள்.

“நீ பொய் சொல்ற மாதங்கி.” அவன் சத்தமிட, “உண்மை.. உண்மை…” அவள் கத்தினாள்.

“பிடிக்கலைன்னு சொல்றதுக்கு ஒரு உருப்படியான காரணம் சொல்லு” அவன் கடுப்பாக கேட்க, “ஒண்ணு என்ன ஓராயிரம் காரணம் சொல்லுவேன். என் அண்ணனுக்கு உன்னை பிடிக்கலை. முகுந்தனுக்கு உன்னை பிடிக்கலை” அவள் கூற, அவன் முகத்தில் நமட்டு சிரிப்பு ஒன்று தோன்றியது.

“எனக்கு என் குடும்பம் முக்கியம். என் கல்யாணத்துக்கு அப்புறம், என் அண்ணணும், முகுந்தனும் வந்து போற இடத்தில தான் நான் வாக்கப்படணும். உன்னை கல்யாணம் பண்ணினா, என் குடும்பத்தோடு சுமுகமான உறவு இருக்காது. இப்படி இருக்கும் பொழுது எனக்கு எப்படி உன்னை பிடிக்கும்?” அவள் கேள்வியாக நிறுத்தினாள்.

இவர்கள் பேசி ஒரு முடிவுக்கு வரட்டும் என்று எண்ணியவளாக பிருந்தா இருவரையும் பார்த்து கொண்டிருந்தாள்.

‘இவள் அறிவு விழித்து கொண்டு நிற்கிறது? ஆனால் மனம்?’ அவன் அவளை யோசனையாக பார்க்க, அவன் சிந்தனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மாதங்கி தொடர்ந்தாள்.

“உன் அரசியல்வாதி பின்புலம் பிடிக்கலை. அதனால் வந்த உன் திமிர் பிடிக்கலை. அரசியல்வாதின்னு தானே, நீ இந்த ஆட்டம் போடுற? மாதங்கி இல்லைனா சங்கீன்னு போய்கிட்டே இருக்காம, என் உயிரை எடுக்கற பாரு, அது எனக்கு சுத்தமா பிடிக்கலை.வேற பொண்ணை பார்த்து லவ் பண்ணு… இல்லைனா வேற பொண்ணை கல்யாணம் பண்ணு…” அவள் பேசி கொண்டே போக, “ஏய்” அவன் அவளை நோக்கி கைகளை உயர்த்தினான்.

“அண்ணா…” பிருந்தா குறுக்கே புகுந்தாள். “என் அண்ணன் இப்படி கிடையாது” அவள் கண்களில் நீர் கோர்த்து கொண்டது.

“வேண்டாமுன்னு சொல்ற பொண்ணை கட்டாயப்படுத்துறது தப்பு அண்ணா.” அவள் குரல் அவனிடம் கெஞ்சியது.

“அவ பொய் சொல்றா பிருந்தா” அவன் குரல் தன் தங்கைக்கு புரிய வைக்க முயன்றது.

அண்ணனும், தங்கையும் என்னவும் பேசிக்கொள்ளட்டும், என்று மாதங்கி இவர்களை அசட்டையாக பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள்.

“உன்னை பிடிச்சிருந்தா, அவ ஏன் அண்ணா பொய் சொல்ல போறா?” பிருந்தா தன் சகோதரனிடம் கேள்வியை தொடுக்க, “அவ அண்ணனுக்காக. அப்படி என்ன அவன் உசத்தி?” கிருஷ் மாதங்கியை முறைத்து பார்த்தான்.

“இப்படி ஒருத்தன் என் கிட்ட நடந்துக்கிட்டா, நீ என்னை அவனுக்கு கல்யாணம் செய்து கொடுப்பியா?” பிருந்தா கிருஷிடம் கேட்க, “இப்படி ஒருத்தன் உன்கிட்ட நடந்துக்குற அளவுக்கே விட்டிருக்கவே மாட்டேன் பிருந்தா. உன்னை, இப்படி ஒருத்தன் உயிரா நேசிச்சா, நான் அவன் கிட்டயும் பேசி, உன் கிட்டயும் பேசி இந்நேரம் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிருப்பேன். உன் மேல ஒருத்தன் இந்த அளவு அன்பு வச்சிருந்தா, அதை விட வாழ்க்கையில் வேற என்ன என் தங்கைக்கு வேணும்ன்னு நினைச்சிருப்பேன்” கிருஷின் குரல் பிசிறு தட்டியது.

அவன் குரலில் மாதங்கியின் உடலில் ஒரு நொடி மின்சாரம் பாய்ந்து மீண்டது.

கிருஷ் தன்னை சுதாரித்து கொண்டான். “ஆனால், இவ அண்ணன் திமிர் பிடித்தவன். என் காதல் அவனுக்கு தெரியும். நான் அவன் கிட்ட தானே முதலில் சொன்னேன். எல்லாம் கணிச்சிருப்பான். தெரிஞ்சும், தெரியாத மாதிரி நாடகம் ஆடுறான். நேரடியா இவ கிட்ட கேட்டிருந்தா, இவ ஆமான்னு சொல்லிருப்பா. அவன் போலீஸ் புத்தி. நாடகம் ஆடுறான். இவ குடும்பத்துக்கே…” என்று அவன் ஏற, பிருந்தாவை தள்ளிவிட்டு, அவன் சட்டையை கொத்தாக பிடித்திருந்தாள் மாதங்கி.

“என் அண்ணன், என் குடும்பத்தை பத்தி பேசுற யோக்கியதை உனக்கு கிடையாது. நீ உன் தங்கை கிட்ட நடந்துக்குற லட்சணம் எனக்கு தெரியும்.” மாதங்கி எகிற, “மாதங்கி…” பிருந்தாவின் குரலில் மனசுணக்கம் தெரிய, “இப்படிப்பட்ட அண்ணனை குறை சொன்னாலே உனக்கு வலிக்குதே. என் அண்ணனை குறை சொன்னா எனக்கு எப்படி வலிக்கும்?” மாதங்கி பிருந்தாவிடம் வருத்தமாக நிறுத்தினாள்.

கிருஷ் அவளை சலிப்பாக பார்க்க, “எங்க அண்ணன் கேட்டிருந்தாலும், நான் உன் மேல் காதல் இல்லைனு தான் சொல்லிருப்பேன்” அவள் கூற, “உங்க அண்ணன், நீ சொல்றதுன்னு பொய்ன்னு கண்டுபிடிச்சிருப்பான். அதுக்கு பயந்துகிட்டு தான் உன்னிடம் அவன் கேட்கலை” அவன் முகத்தில் ஏளன புன்னகை.

“உன்கிட்டலாம்….” மேலே பேசாமல், தன் தலையில் அடித்து கொண்டு கிளம்பினாள் மாதங்கி.

தன் தங்கை இருப்பதால், மாதங்கியை பிடித்து வைக்க முடியாமல், அவனிடமிருந்து விலகி சென்று கொண்டிருந்த அவளை வெறித்து பார்த்தான் கிருஷ்.

பிருந்தா அவளை தொடர்ந்து வேகமாக ஓடினாள். அதன் பின் இருவரும் பெரிதாக பேசிக்கொள்ளவில்லை.

 ‘கழுத்தை பிடித்தாலும் சரி, காலை பிடித்தலும் சரி முடியாதுன்னா சொல்ற?’ கிருஷிற்கு கோபம் கனன்றது.

“உன் அண்ணனும், முகுந்தனும் தான் உன் பலவீனம். அவர்களை வைத்து உன்னை என் காலடியில் விழ வைக்குறேன். உன்னை என் கழுத்தையும், காலையும் பிடிக்க வைக்கிறேன்.” அவன் குரல் உறுமியது.

அதே நேரம் மாதங்கி வீட்டில்….

 மாதங்கியின் பாட்டி முகுந்தனின் தாயிடம், “கல்யாணி, முகுத்தனுக்கு பொண்ணு பார்க்க ஆரம்பிக்கலாமே?” என்று கேட்டார்.

“முகுந்தன், அதுக்குள்ளே என்ன அவசரமுன்னு சொல்லிட்டான் அம்மா.” என்று கூறினார் நித்யகல்யாணி. அவர் மாதங்கியின் பாட்டியை, சிறுவயது முதல் பழக்கம் என்பதால், அம்மா அப்பா என்றே அழைத்து பழகி இருந்தார்.

“அப்புறம்…” நித்யகல்யாணி இழுக்க, “மாதங்கி படிப்பும் முடியட்டுமே” என்று கூற, “ஹா… ஹா… அப்படியா செய்தி” என்று வந்து அமர்ந்தார் மாதங்கியின் தாத்தா.

“நல்ல விஷயம்” என்று பாட்டி ஆமோதிக்க, “மரகதவல்லி என்ன சொல்லுறா?” என்று பாட்டி கேட்டார்.

“நான் சொல்றதுக்கு என்ன இருக்கு அத்தை. எல்லாரும் சம்மதம்னா எனக்கு முழு சம்மதம். நாம, மாதங்கிக்கு ரொம்ப செல்லம் கொடுத்துட்டோம். சுத்தமா சமைக்க தெரியாது. பட்பட்டுன்னு பேசுவா… அவளை வெளிய யார் வீட்டுக்காவது அனுப்பறதை விட, நம்ம கூட இருக்கிறது ரொம்ப நல்லது.” என்றார் பரமத்திருப்தியாக.

“அப்ப, மாதங்கி படிப்பு முடியட்டும். அவ படிப்பு முடிய இன்னும் ஒரு வருஷம் இருக்கு. அப்புறம் பேசுவோம்.” என்றார் பாட்டி வீட்டின் பெரிய மனுஷியாக. அவர் கூற்றை பெரியவர்கள் ஆமோத்தித்தனர். சிறுவர்கள் இல்லாத அவர்கள் பேச்சு இனிதாக அமைந்தது.

அதே நேரம் சந்தியாவின் வீட்டில்!

“உங்க நண்பர் வேணுகோபாலன் வீட்டில் பேசினீங்களா? நம்ம பொண்ணுக்கு வயசு ஏறிக்கிட்டே போகுது” சந்தியாவின் தாய் வேணியம்மாள் அக்கறையோடு தன் கணவனிடம் கேட்டார்.

“எல்லாம் பேசியாச்சு. தன் மகன் கிருஷ் படிப்பு முடிஞ்சி, கம்பெனியை கையில் எடுத்து செட்டில் ஆனதும் கல்யாணம் தான்னு சொல்லிருக்கான் வேணுகோபாலன். ” என்று உறுதியாக கூறினார் நாகராஜன்.

“அப்படின்னா, நாம்ம ஒரு நிச்சயத்தை பண்ணிக்கலாமே” சந்தியாவின் தாயார் ஆர்வமாக கேட்டார்.

“நானும் அதை தான் கேட்டேன். அவன் இன்னும் மகன் கிட்ட பேசலியாம். சீக்கிரம் சொல்றேன்னு சொல்லிருக்கான்” நாகராஜன் கூற, “என்னவோ உங்க அரசியல் ஆதாயத்தை மட்டும் பார்க்காதீங்க. நம்ம பொண்ணு வாழ்க்கையும் பாருங்க. இந்த இடம் இல்லைனா வேற இடம்.” வேணியம்மாளின் குரலில் அதிருப்தி இருந்தது.

“இல்லையில்லை, இந்த இடத்தை பேசி முடிச்சே ஆகணும். அப்ப தான், வேணுகோபாலின் பிடி நம்ம கையில் இருக்கும்.” நாகராஜனின் குரலில் உறுதி இருந்தது.

மாதங்கள் அதன் போக்கில் நகர்ந்தது.

 கிருஷின் முகத்தில் புன்னகை மண்டி கிடந்தது. அவன் கையில் எடுத்திருக்கும் வியாபாரத்தில் அவன் கண்ட வெற்றிக்கான புன்னகை அது. அப்பொழுது தான் தொழில் ரீதியான சந்திப்பை முடித்திருந்தான்.

படிப்பு முடித்து நிர்வாகம் இப்பொழுது அவன் கையில். படிக்கும் பொழுதே, இரண்டு வருடங்களாக அதற்கு தேவையான பயிற்சிகளை மேற்கொண்டிருந்தான். இந்த சில மாதங்களில் நன்கு தேர்ச்சி பெற்றிருந்தான்.

 படிப்பில் எத்தகைய கெட்டிக்காரனோ, அது போல் வேலையிலும் படு கெட்டியாக இருந்தான்.

காதல்! அது மட்டுந்தான் எட்டாக்கனியாக அவனை குடைந்து கொண்டிருந்தது.

 மாதங்கியோடு சில மாதங்கள் பேச கூடாது என்பதில் மிக கவனமாக இருந்தான். சிறிய, இடைவெளி அவள் மனதை மாற்றலாம் என்ற கணிப்பு அவனுள்.

 அவளறியாமல் அவளை கண்காணித்து கொண்டிருந்தான். அவளிடம் மாற்றம் ஏற்பட்டது போல் அவனுக்கு தெரியவில்லை. அவன் அவள் தன்னிடம் நெருங்குவதற்கான முதல் அடியை எடுத்து வைக்க எண்ணினான்.

 ‘இந்த செயலை செய்ய வேண்டுமா வேண்டாமா?’ என்ற தடுமாற்றம் அவனுள் இருக்கத்தான் செய்தது. அவனோடு இருக்கும் பையில் அவள் வளையல்கள் என்றும் அவனோடு இருக்கும்.

 அவன் வளையல்களை அசைத்தான். அந்த வளையோசை அவன் செவிகளை தீண்டியது. அந்த வளையோசையின் சம்பாஷணை அவனுக்கு மட்டும் தான் புரியும்.

 அந்த வளையோசை காதல் பேசும். அந்த வளையோசை அவள் சுவாசம் பேசும். அவள் வாசம் பேசும்.

அதை தீண்டுகையில், அவள் தேகம் அவனை தீண்டும். அந்த வளையல் அவன் அதரங்களை நெருங்கினால், அவள் கொழுகொழு கன்னங்கள் அவனை உரசும். அவனுக்கு மட்டுமே சுகம் தரும் அவளின் அவனின் வளையோசை!

 உடைந்து ஒட்டி வைக்கப்பட்ட வளையல் சில நேரம் அபசுவரமாக ஒலித்து அவள் கோபமும் பேசும்.

 எப்படி பேசினாலும், அந்த வளையோசை அவனுக்கு இனிய கானம் தான். அது காதல் மொழி தான். அவன் வளையல்களை மெல்ல தீண்டினான்.

 ‘மாது, நீ எதிர்த்து பேசும் பொழுது எனக்கு கோபம் வரும். ஆனால், உன் நினைப்பே என் கோபத்தை முழுசா சரி செய்திரும். மாது… மாது… மாது…’ அவன் மனம் அவளை தான் கொஞ்சி கொண்டது.

 “மாது, உனக்கு நான் இதை பண்ணனுமா? உன்னை நான் கொஞ்சம் கூட வருத்தப்படவைக்க கூடாதுன்னு தான் நினச்சேன். ஆனால்?” அவன் மனதின் ஏக்கத்தை அவன் உதடுகள் முணுமுணுத்து கொண்டிருந்தது. மனம் விரும்பவில்லை என்றாலும், அதை செய்ய வேண்டிய கட்டாயத்தை காலம் அவனுக்கு கொடுத்து விடும் என்று அறிவு உணர்த்த அவன் கண்கள் கலங்கியது அவளுக்கு வருத்தம் கொடுக்க போவதை எண்ணி!

அதே நேரம் கல்லூரியில் பிருந்தா மாதங்கியின் முகத்தை மீண்டும் மீண்டும் பார்த்தாள். ஆனால், எதுவும் பேசவில்லை. “என்ன பிருந்தா எதுவும் கேட்கணுமா?” மாதங்கி தன் தோழியிடம் கேட்டாள்.

“கேட்பேன், நீ கோபப்பட கூடாது” பிருந்தா பீடிகை வைத்தாள்.

“அப்ப நான் கோபப்பட போற மாதிரி எதுவோ கேட்க போற?” மாதங்கி சிரிக்க, பிருந்தா புன்னகைக்கவில்லை.

தன் தோழியின் தீவிரத்தை பார்த்து, “கேளு…” என்றாள் மாதங்கி.

“உனக்கு உண்மையிலே என் அண்ணனை பிடிக்கலையா?” பிருந்தா யோசனையாக கேட்டாள்.

“இது என்ன அண்ணனுக்காக தங்கை விடும் தூதா?” மாதங்கி தன் தோழியை கேட்க, அவளிடம் மௌனம்.

“உங்க அண்ணன் கேட்க சொன்னாரா?” மாதங்கி கேட்க, பிருந்தா அவசரமாக மறுப்பு தெரிவித்தாள்.

“அது தானே, உன் அண்ணன் உன் கிட்ட பேசினா தானே. பேசாத அண்ணனுக்கே இப்படி உருகறியே?” மாதங்கி கேலி பேச, “பேசினாலும், பேசலைனாலும் அண்ணன் அண்ணன் தானே? எங்க விஷயத்தை விடு. நான் கேட்கும் கேள்விக்கு பதில்” பிருந்தா பிடிவாதமாக நின்றாள்.

“உன் அண்ணனை பிடிக்காமல் போகுமா? பார்க்க செம்ம ஸ்மார்ட். படிப்பில் செம்ம கெட்டி. காலேஜில் செம்ம மாஸ். ஸ்போர்ட்ஸ்லயும் கிங். ஜாலி டைப். ஆனால், எல்லை மீற மாட்டார். உன் அண்ணனை பிடிக்காமல் போகுமா? அதை எல்லாம் தாண்டி, என் ஃபிரெண்டுக்கு அண்ணன். எனக்கு பிடிக்காமல் போகுமா?” மாதங்கி பெரிதாக புன்னகைத்தாள்.

“அப்புறம் ஏன் மாதங்கி என் அண்ணனை வேண்டாமுன்னு சொல்ற? அண்ணன் கிட்ட நான் பேசலை. ஆனால், அண்ணன் முகத்தில் நான் உண்மையான காதலை பார்த்தேன்” பிருந்தா தன்மையாக கூறினாள்.

“உன் அண்ணனை எனக்கு மட்டுமில்லை இந்த காலேஜில் நிறைய பொண்ணுகளுக்கு பிடிக்கும் பிருந்தா. சீனியர் பலருக்கு ட்ரீம் ஹீரோ. எல்லாரும் உங்க அண்ணன் கிட்ட உண்மை காதலன்னு சொன்னா என்ன பண்ணுவாரு உங்க அண்ணன்?” அவள் நிறுத்த,பிருந்தா அவளை முறைத்தாள்.

“எனக்கும் சீனியரை பிடிக்கும். எனக்கு முகுந்தனை பிடிக்கும். அவன் எனக்கு ஃபிரெண்டு. எங்க அண்ணன் எனக்கு ஹீரோ. அந்த மாதிரி தான். எனக்கு புரியலை பிருந்தா. காதல்ன்னா என்ன?” என்று அப்பாவியாக கேட்டாள் மாதங்கி.

“நமக்கு, எல்லாத்தையும் கொடுக்குற அம்மா அப்பா நமக்கு மாப்பிள்ளை பார்த்து கொடுக்க மாட்டாங்களா?” மாதங்கி கேட்க, பிருந்தா அவளை யோசனையாக பார்த்தாள்.

“எப்ப காதல் வரும்? சினிமாவில் வர்ற மாதிரி பெல் அடிக்குமா? லைட் எரியுமா? இல்லை இந்த சென்னை வெயிலில் ஊட்டி மாதிரி குளிருமா?”

“காதல் வந்தா பூம்னு சத்தம் வருமா?” தன் கைகளை விரித்து, கண்களை பெரிதாக்கி சந்தேகத்தோடு மலங்க விழித்தாள் மாதங்கி.

“இப்படி ஏதாவது இருக்குதா? அப்படி ஏதாவது இருந்தா, எனக்கு அப்படி எதுவுமே இது வரைக்கும் தோணவே இல்லையே?” மாதங்கி உதட்டை பிதுக்க, ‘இவ என்ன கிளாசில் மேடம் கிட்ட டவுட் கேட்டு அவங்களை கொல்லுற மாதிரி இப்ப என் கிட்ட டவுட் கேட்குறா?’ இப்பொழுது பிருந்தா தன் தோழியை பரிதாபமாக பார்த்தாள்.

“எனக்கு லவ் பண்ணறவங்களை பார்க்கும் பொழுதெல்லாம் ஒரு விஷயம் கேட்க தோணும். ஸ்கூல் செலக்ட் பண்ண, காலேஜ் செலக்ட் பண்ண அம்மா அப்பா உதவி வேணும். அத்தனை உலக அனுபவம் இல்லாத நீங்க, எப்படி வாழ்க்கை துணையை இவ்வளவு ஈஸியா தேர்ந்தெடுத்தீங்கன்னு?”

“ஆனால், லவ்வரை செலக்ட் பண்ண யார் உதவியும் வேண்டாமா? எப்படி தெரியும் இவர் தான் உங்க லவ்வர்ன்னு?” என்று மாதங்கி கேள்விகளை அடுக்கி கொண்டே போக, “அம்மா தாயே தெரியாமல் கேட்டுட்டேன். என்னை விட்டுரு” பிருந்தா தன் தோழியை கை எடுத்து கும்பிட்டு வகுப்பறை நோக்கி சென்றாள்.

“ஏன் இவள் என் கேள்விகளுக்கு பதில் சொல்லாம போறா? நான் என்ன தப்பா கேட்டேன்? பிருந்தாவுக்கும் பதில் தெரியலை போல பாவம். அவளுக்கும் லவ் எஸ்பியரியன்ஸ் இல்லை போல” தனக்கு தானே கேட்டு கொண்டாள்.

“சரி விடு, யாராவது லவ் பண்ணி கல்யாணம் பண்ணவங்க கிட்ட கேட்டு கண்டிப்பா தெரிஞ்சிக்கிட்டு என் அறிவை வளர்த்தே ஆகணும்” மாதங்கி உறுதி மொழி எடுத்து கொண்டாள்.

வாசகர்களே,

 மாதங்கியை போல் அறிவை வளர்த்து கொள்ள எனக்கும் ஆசை தான்!  பதில் இருந்தால் சொல்லுங்களேன்.

 பிருந்தாவனத்தில் வலம் வருவோம்…