அழகியே 11

அழகியே 11

அழகு 11
 
அன்றைய பொழுது முழுவதும் மயூரி நல்ல தூக்கத்திலேயே இருந்தாள். நான்கு முறை வாந்தி எடுத்தது, எதுவும் உண்ணாதது என களைப்பு அவளைச் சூழ்ந்து கொண்டது.
 
வருண் அமைதியாக கொஞ்ச நேரம் அங்கிருந்த அவனது கட்டிலில் அமர்ந்த படி யோசித்துக் கொண்டிருந்தான். விழிகள் அடிக்கடி அடுத்த கட்டிலில் படுத்திருந்த பெண்ணைத் தொட்டு மீண்டது. 
 
பிடுங்கி வெயிலில் போட்ட பீர்க்கங்காய் கொடி போல வாடிப்போய் கிடந்தாள் மயூரி. அவள் மனதுக்குள் இத்தனை எண்ணங்கள் இருக்கும் என்று அவன் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை.
 
எப்போதிருந்து அவள் மனதுக்குள் இப்படியொரு ஆசை வேர்விட்டிருக்கும்?! யார் போட்ட விதை இது?! 
பார்த்தவுடன் உருகிக் காதலிக்க வேண்டும் என்று நினைப்பவன்தான் அவன். ஆனால் இவள் பார்க்காமலேயே நான் காதலிப்பேன் என்று சொல்கிறாளே! இது சாத்தியமா?!
 
சத்தம் செய்யாமல் குளித்து முடித்துவிட்டு போய் சாப்பிட்டான். செஃப் அவள் எங்கே என்று கேட்டதற்கு அவள் உடல் நிலைமையை விளக்கிவிட்டு ரூமிற்கு வந்துவிட்டான்.
 
டீவியை போடவும் முடியவில்லை. அந்தச் சத்தத்தில் அவள் எழுந்து கொள்ள வாய்ப்புகள் இருந்ததால் லேப்டாப்போடு அமர்ந்து விட்டான். 
கண்கள் திரையைப் பார்த்திருந்தாலும் மனதென்னவோ இன்றைய நிகழ்வுகளையே அசைபோட்டது. 
 
இந்த ரூமிற்கு வந்த நாளிலிருந்தே அவள் காத்த அமைதி, வாய்ப்புக் கிடைத்த போதும் தன்னை அவள் காட்டிக்கொடுக்க நினைக்காமல் காத்த மௌனம்… எல்லாவற்றிற்கும் இப்போது பொருள் புரிந்தது.
அவள் மனதின் நிலையை அவள் சொல்லிவிட்டாள், ஆனால் அவன்?!
 
அந்தப் பெண்ணை வெறுத்து ஒதுக்கும் அளவிற்கு அவனிடம் எந்தக் காரணமும் இல்லை, அழககோனின் மகள் என்பதைத் தவிர.
 
ஆனால் அது மட்டுமே அவனது வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க அவனுக்குப் போதாது. காதலிக்க வேண்டும்! உருகி, கரைந்து, உருக்குலைந்து என அவன் காதலை அனுபவிக்க வேண்டும்.
 
அவன் அப்பா… அம்மாவை உருகி உருகி, விரட்டி விரட்டிக் காதலித்தாரே… அப்படியொரு அனுபவம் அவனுக்கும் வேண்டும்.
 
இதோ… நிம்மதியாகப் படுத்திருக்கும் இவள் கூட இன்று சொன்னாளே… என் வாழ்க்கையில் இனி எல்லாமே நீதான் என்று! அது போல அவனும் ஒரு பெண்ணைப் பார்த்துச் சொல்ல வேண்டும்.
 
அவளோடு ஆசையாசையாய் குடும்பம் நடத்த வேண்டும். குழந்தைகள் பெற வேண்டும். இதையெல்லாம் விட்டு விட்டு இவள் ஆசைப்பட்டாள் என்று என்னால் கல்யாணம் பண்ண முடியுமா? 
 
மாமியின் மகள் என்பதற்காகவெல்லாம் திருமணம் செய்து கொள்ள முடியுமா?
 
‘உனக்கு இந்தப் பெண்ணைப் பிடிக்கவில்லையா வருண்?’ அவன் மனசாட்சி அவனைக் கேள்வி கேட்டது. 
 
‘நீதான் இனி அவள் உலகம் என்று சொல்கிறாளே?’ வருண் இப்போது தலையைப் பிடித்துக் கொண்டான். 
பிடிக்கும், பிடிக்காது இதுவெல்லாம் அவனுக்கு இரண்டாம் பட்சம்.
 
அவனுக்கு அவன் ஆசைப்பட்ட வாழ்க்கை வேண்டும். காதலோடு ஒரு பெண் வேண்டும்.
 
‘ஏன்… இவளிடம் நீ தேடும் காதல் இல்லையா?’ மீண்டும் அவன் மனசாட்சி அவளுக்காக வாதிட்டது.
 
‘அவளிடம் எனக்கான, எனக்கு மாத்திரமேயான காதல் இருக்கிறது! ஆனால் என்னிடம் அவளுக்கான காதல் இருக்கிறதா?’
 
‘அது இல்லாமல்தானா இன்று அந்தப் பெண் உன்னை அணைத்த போது உனக்குச் சிலிர்த்தது?!’ இப்போது வருண் திடுக்கிட்டான். 
 
அந்தக் கேள்வியில் ஓர் நியாயம் இருப்பது புரிந்தது. ஏதோ ஒரு உள்ளுணர்வு தோன்ற அவளைத் திரும்பிப் பார்த்தான்.
 
கண்விழித்திருந்தவள் இவனையே பார்த்தபடி கட்டிலில் படுத்துக் கிடந்தாள். இவன் சட்டென்று பார்க்கவும் அதை எதிர்பார்க்காதது போல அந்த விழிகள் தன் இலக்கை மாற்றிக் கொண்டன.
 
“இப்போ எப்பிடி இருக்கு?” இது வருண்.
 
“ம்… பரவாயில்லை…” அவள் பேச்சில் சின்னதாக ஒரு தடுமாற்றம்.
 
கட்டிலை விட்டு எழுந்தவள் சுவரைப் பிடித்துக்கொண்டு மெதுவாக நடந்தாள். மடியிலிருந்த லேப்டாப்பை கட்டிலில் வைத்துவிட்டு எழுந்து வந்தான் வருண்.
 
“ஏதாவது ஹெல்ப் வேணுமா?”
 
“இல்லை… குளிக்கணும்…” அவள் சொன்னதும் அவளுக்கு முன்பாக பாத்ரூமிற்குள் போனவன் அங்கு எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டு வந்தான்.
 
“தனியா மானேஜ் பண்ணுவியா?”
 
‘இல்லாட்டி மட்டும் நீ என்னப் பண்ணப் போறே?’ மனதுக்குள் எழுந்த கேள்வியை விழுங்கிக் கொண்டு மெதுவாக நடந்தாள் மயூரி.
 
“முடியுமா உன்னால?” மீண்டும் அக்கறையான விசாரிப்பு.
 
“ம்…”
 
“எதுக்கும் டோரை லாக் பண்ணாதே.” அவன் கண்களில் தெரிந்த பதட்டம் மயூரிக்கு இதமாக இருந்தது. தலையை உருட்டிவிட்டு உள்ளே போய் விட்டாள்.
 
“கதவைப் பூட்டாம குளிக்கிறதாம்! இந்த அக்கறைக்கொன்னும் குறைச்சல் இல்லை.” வாய்க்குள் முணுமுணுத்தபடி குளித்து முடித்தாள் பெண். உடம்பில் நீர் பட்டதும் புத்துணர்ச்சியாக இருந்தது.
 
அரை மயக்கமாக இருந்த போதும் தான் பேசியது அனைத்தும் மயூரிக்கு நன்றாக ஞாபகம் இருந்தது. தன் மனதில் உள்ளதை எல்லாம் அவனிடம் சொல்ல வேண்டும் என்று அவளும் நினைத்திருக்கவில்லை.
 
ஆனால்… அவளையும் அறியாமல் வார்த்தைகள் வந்து வீழ்ந்து விட்டன. கொட்டியதை இனி அள்ளவா முடியும்?! 
 
இதற்கெல்லாம் அவனது பிரதிபலிப்பு என்னவாக இருக்கும்?! தான் மட்டும் இப்படித் தந்தி அடிக்க அவன் எந்தத் தயக்கமும் இல்லாமல் நேராக முகம் பார்த்துப் பேசுகிறானே?!
 
தலையைத் துவட்டியவள் காய்ந்த ஆடைகளை உடுத்திக் கொண்டாள். இவள் வெளியே வந்ததுதான் தாமதம்,
 
“பசிக்குதா?” என்றான் வருண்.
 
“ம்…” என்றாள் தயக்கத்தோடு.
 
“வா, போய் சாப்பிட்டுட்டு வந்திரலாம்.” தலையை ஆட்டியவள் அவனோடு கூட நடந்தாள். தன் வேகத்துக்கு அவள் நடக்கச் சிரமப்படவும் மெதுவாக நடந்தான் வருண். 
 
இவள் தலையைக் கண்டதும் செஃப் அவசரமாக கிச்சனை விட்டு வெளியே வந்தார். இரவு உணவுக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன.
 
“மயூரி, இப்போ எப்பிடி இருக்கும்மா?”
 
“ஓகே அங்கிள்.” சோர்வாகச் சிரித்தாள் மயூரி.
 
“முகமே வாடிப்போச்சு! உனக்காக ரசம் செஞ்சு வச்சிருக்கேன், வந்து சாப்பிடும்மா.”
 
“ம்…” அவள் சம்மதிக்கவும் ஹாட்பாக்ஸில் போட்டு வைத்திருந்த சாதத்தில் ரசம் விட்டு கொடுத்தார் செஃப்.
 
“தான்க் யூ அங்கிள்.”
 
“என்னோட பாவனைக்குன்னு தனியா ஊறுகாய் வெச்சிருக்கேன், அதுவும் கொஞ்சம் குடுக்கட்டுமா மயூரி.”
 
“குடுங்க அங்கிள்.”
 
“மாங்காய் ஊறுகாய், வாய்க்கு நல்லா இருக்கும்.” ஷெல்ஃபில் இருந்த ஊறுகாயை எடுத்துக் கொடுத்தார் செஃப். 
அன்று முழுவதும் எதுவும் உண்ணாமல் செத்துப் போய் கிடந்த நாக்கிற்கு ரசமும் ஊறுகாயும் அமிர்தமாக இருந்தது.
 
வருண் நடப்பதைக் கண்டும் காணாதவன் போல கவனித்துக் கொண்டிருந்தான்.
 
அதன் பிறகு வந்த அன்றைய இரவுப் பொழுதாகட்டும் அடுத்த நாளாகட்டும்… ஒரு வித அமைதியிலேயே கழிந்தது.
 
இரவுப் பொழுது இருவரும் பேசிக்கொள்ளாமலேயே நகர்ந்தது.
 
என்னப் பேசுவது என்று இருவருக்குமே தெரியவில்லை.
 
அடுத்தநாள் காலை எப்போதும் போல வருண் தன் பணிக்குக்
கிளம்பிவிட்டான்.
 
“இன்னைக்கு ஷிப் பெனாங் போய் சேர்ந்திடும், எனக்கு நிறைய வேலை இருக்கும், வர கொஞ்சம் லேட் ஆகும்.” அவன் விளக்கம் போல சொல்ல மயூரி தலையை ஆட்டினாள்.
 
“ஷிப் இன்னைக்கு நைட் மட்டுந்தான் இங்க நிக்கும், காலையில திரும்பவும் ஸ்ரீ லங்கா கிளம்பிடும், அதுக்குள்ள நாம போய் கொஞ்சம் ஷாப்பிங் பண்ணிட்டு வந்திரலாம்.”
 
“ம்…”
 
“லன்ச்சை முடிச்சிட்டு ரெடியா இரு.”
 
“ம்…”
 
“இப்போ ஓகேதானே? வாமிட் வர்ற மாதிரி இருக்கா?”
 
“இல்லை.”
அத்தோடு பேச்சு முடிந்தது என்பது போல வருண் கிளம்பிவிட்டான்.
 
மயூரிக்கு குதூகலமாக இருந்தது. அவன் இவ்வளவு பேசியதே மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.
 
நேற்று முழுவதும் அவன் அவளோடு பேசாமல் கடைப்பிடித்த அமைதி பெண்ணுக்குக் கிலியை உண்டு பண்ணி இருந்தது.
 
வாழ்க்கை முழுவதிற்கும் இனி அவன்தான் என்று முடிவெடுத்தாகி விட்டது. அதை அவனிடம் சொல்லியும் ஆகிவிட்டது. வருணின் இடத்தில் இன்னொருவர் என்பது இனி இந்த ஜென்மத்தில் முடியாத காரியம்.
 
வீடு போய் சேர்ந்ததும் நடக்க இருக்கும் கூத்துக்களை அறியாதவள் அல்ல மயூரி. ஆச்சியும் அப்பாவும் காதும் காதும் வைத்த மாதிரி அந்த டாக்டரை தன் தலையில் கட்டப் பார்ப்பார்கள்.
 
அது அவள் உயிருடன் இருக்கும் வரை இனி நடக்காது. வாழ்வு, சாவு… இனி எதுவானாலும் அவன் கூடத்தான். அவனுக்கு அவளைப் பிடிக்கிறதா இல்லையா என்பதைப் பற்றிக்கூட அவளுக்கு இனி அக்கறை இல்லை.
 
இன்றைய நாள், இங்கிருந்து திரும்பித் தாய்நாடு போக எடுக்கும் ஐந்து நாட்கள். மொத்தமாக ஆறு நாட்கள். அவனோடான ஆறு அற்புதமான நாட்கள்.
 
நினைத்துப் பார்க்கப் பார்க்க மயூரிக்கு ஏதோ தான் சொர்க்க வாசலில் நிற்பது போல இருந்தது. தன் அத்தான் அந்த சொர்க்கத்தின் வாசலைத் தனக்காக திறந்து வைப்பானா?!
 
காலை உணவு, மதிய உணவு எல்லாவற்றையும் ஒரு பரவசத்தோடு உண்டு முடித்தாள் மயூரி. அவளை ஏமாற்றாமல் சொன்ன நேரத்தை விட சற்று முன்பாகவே வந்து சேர்ந்தான் வருண்.
 
அவளோடு ஷாப்பிங் போக வேண்டும் என்று இவன் சொன்னவுடனேயே… என்னவோ அதுதான் இப்போது மிகவும் முக்கியம் என்பது போல டாமினிக் இவன் வேலைகளிலிருந்து இவனை அவசரமாக விடுவித்தது மயூரிக்கு தெரியாது.
 
***
 
பெனாங் (பீனாங்) என்பது மலேஷியாவின் வடமேற்கில் அமைந்திருக்கும் ஒரு மாநிலமாகும்.
 
ஜார்ஜ் டவுனை தலைநகரமாக கொண்ட இந்த மாநிலத்தில் அதிகமாக விளையும் பொருள் வெற்றிலை.
 
மலேஷிய மொழியில் ‘பெனாங்’ என்றாலே வெற்றிலை என்றுதான் பொருள். தமிழர்கள் இங்கு முதன் முதலாக வெற்றிலை பாக்கு வியாபாரம் செய்யவே வந்ததாகச் சரித்திரம் சொல்கிறது.
 
நானூற்று ஐந்து சதுர மைல் பரப்பளவைக் கொண்ட அழகிய தீவு இந்த பெனாங். செஃப் இங்கு பலமுறை வந்திருப்பதால் அவரின் அறிவுரையோடு அந்தப் பெண்ணை தமிழர்கள் அதிகம் வசிக்கும் இடத்திற்குக் கூட்டிச் செல்லலாம் என்று முடிவு செய்திருந்தான் வருண்.
 
கப்பலில் வேலை செய்பவர்கள் தங்களிடம் அதிக பணம் எப்போதும் வைத்திருப்பதில்லை. எந்த நாட்டிற்குச் செல்கிறார்களோ அந்த நாட்டின் கரன்சிக்கு ஏற்ப தங்களுக்குத் தேவையான பணத்தை கேப்டனிடம் வாங்கிக் கொள்வார்கள்.
 
அந்த மாதத்திற்கான சம்பளப் பணம் வரும்போது கம்பெனி அதைப் பிடித்துக்கொண்டு மீதத்தைக் கொடுக்கும்.
 
வருண் மயூரியோடு ஷாப்பிங் போகப் போகிறான் என்று தெரிந்தவுடனேயே டாமினிக் அவன் கேளாமலேயே
 
‘ரிங்கிட்’ களை அள்ளி வீசினார்.
 
“இப்ப எதுக்கு இந்தக் கப்பல்ல இருக்கிற மொத்தப் பேருக்கும் குடுக்கிற அமௌன்ட்டை என் ஒருந்தங்கிட்டக் குடுக்குறீங்க?” வருண் சிரித்துக்கொண்டே கேட்க டாமினிக் கண்ணடித்தான்.
 
“விபி… அஞ்சு நாளா அந்தப் பொண்ணு ஒரே ட்ரெஸ்ல இருக்கு.”
 
“இல்லை… ரெண்டு.” வருண் திருத்தினான்.
 
“இது இப்போ ரொம்ப முக்கியம்.” கேப்டன் கடுகடுக்க அதற்கு மேல் அவரைப் பேச விடாமல் கிளம்பி வந்துவிட்டான் வருண்.
 
“என்ன… ரெடி ஆகலையா?”
 
“நான் ரெடிதான்.” எப்போதும் அவளை அந்த உடையிலேயே பார்ப்பதால் வருணுக்கு வித்தியாசம் தெரியவில்லை. 
 
தலைமுடி கூட சீராக இல்லாமல் கலைந்து கிடந்தது. கையால் கோதி இருப்பாள் போலும். நல்ல வேளையாக அவள் காலில் அணிந்திருந்தது எங்கேயும் தொலையாமல் அவள் கூடவே வந்திருந்தது!
 
வருண் குளித்துவிட்டு உணவையும் முடித்துக்கொண்டு சீக்கிரமாகவே வந்துவிட்டான். அங்கிருந்த கப்போர்டில் வைத்திருந்த பணத்தையும் இன்னும் எதையோ அவன் எடுக்கவும் மயூரி அதைக் கூர்ந்து கவனித்தாள்.
 
அது பாஸ்போர்ட்! அப்படியென்றால்… அவளை அழைத்து வர அவன் பாஸ்போர்ட் எடுத்தானா? ஏனென்றால் இதுவரை அவள் பாஸ்போர்ட் எடுத்ததில்லை, அதற்கான தேவையும் அவளுக்கு வரவில்லை.
 
எதுவோ தோன்ற அவன் கையிலிருந்த பாஸ்போர்ட்டை அவன் எதிர்பார்க்காத நேரம் சட்டென்று பறித்தாள் மயூரி.
 
“ஏய்! என்னப் பண்ணுற நீ?” வருண் திடுக்கிட்டுப் போய் சீறினான்.
 
“அத்தான்! வெயிட்… பக்கத்துல வராதீங்க… பார்த்துட்டு நானே திருப்பிக் குடுத்திடுவேன்.” கட்டிலுக்கு அப்பால் போய் நின்றவள் அவனை எச்சரித்தாள்.
 
“இங்கப்பாரு… நீ பார்க்கிறதுக்கு அங்க ஒன்னுமே இல்லை, பாஸ்போர்ட்டுக்கு ஏதாவது ஆச்சு… நீயும் நானும் இந்தக் கடல்லதான் குதிக்கணும்.”
 
“ஜஸ்ட் பார்த்துட்டு திரும்பக் குடுத்திடுவேன்…” பேசியபடியே அவள் கையிலிருந்ததை ஆராய்ந்தாள். 
 
“தேவையில்லை…” அவளிடமிருந்து அதைக் கைப்பற்றுவதிலேயே குறியாக இருந்தான் வருண்.
ஒன்று ப்ரிட்டிஷ் பாஸ்போர்ட், அடுத்தது ஸ்ரீ லங்கன். அவசரமாக அதைப் புரட்டினாள் பெண்.
 
“ஏய்!” அவன் மீண்டும் அவளை அதட்ட மயூரி அவனைக் கண்டு கொள்ளவில்லை. சட்டென்று பக்கங்களைப் புரட்டினாள்.
 
சாட்சாத் அவளேதான்! பணிபுரியும் இடத்தில் அவள் சமர்ப்பித்திருந்த பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோ.
 
“மிஸஸ் மயூர ப்ரதாயினி வருண்!” அதில் அச்சிடப்பட்டிருந்த தனது பெயரை அழுத்தம் திருத்தமாக உச்சரித்தாள் பெண்.
 
அதற்கு மேல் அவளிடம் மறைக்க எதுவுமே இல்லை என்பதால் ஜன்னலோரம் போய் நின்று கொண்டான் வருண். எதுவுமே பேசவில்லை. 
 
இனி அவள்தான் இந்தப் பயணம் முடியும் வரைப் பேசப் போகிறாள் என்று அவன் அறியவும் இல்லை!
மயூரி மெதுவாக அவனிடம் வந்தாள்.
 
கையிலிருந்ததைக் கட்டிலில் போட்டுவிட்டாள். இனி அது எதற்கு அவளுக்கு?! கொஞ்சம் நெருக்கமாகத் தன்னிடம் வந்த பெண்ணை வருண் சட்டென்று திரும்பிப் பார்த்தான்.
 
“சொல்லவேயில்லை… நம்ம ரெண்டு பேருக்கும் எப்போ அத்தான் கல்யாணம் ஆச்சு?!”
 
“ஏய்…” அவன் உறுமினான்.
 
“ஆமா ஆமா… உங்களுக்கு என்னோட பெயர் கூடத் தெரியாதில்லை… அடேயப்பா! என்னா நடிப்பு?!” அவனைப் பேச விடாமல் அவள் குறுக்கிட்டாள்.
 
“கல்யாணம் பண்ணி பொண்டாட்டி பேர்ல பாஸ்போர்ட் எடுத்து, வீஸா எடுத்து, ஷிப்புக்கு கொண்டு வந்து… ஆனா பெயர் மட்டும் தெரியாதில்லை அத்தான்?!” அந்தக் கேலிக் குரல் அவனைச் சீண்டிப் பார்த்தது.
 
கண்களை ஒரு முறை அழுந்த மூடித் திறந்தவன் அவளை நோக்கி இப்போது நிதானமாகத் திரும்பினான்.
 
“சொன்னாப் புரிஞ்சுக்கோ பொண்ணே! இந்த ஷிப்ல என்னோட ஃபேமிலி மெம்பர்ஸ் தவிர யாரும் வரமுடியாது, உன்னை என்னோட பொண்ணுன்னு சொன்னா யாராவது நம்புவாங்களா?”
 
“அதுக்கு? நீங்க பொண்டாட்டின்னு சொல்லுவீங்களா?”
 
“எனக்கு வேற வழியில்லை.”
 
“என்னோட வாழ்க்கையைப் பத்தி ஒரு நிமிஷம் நினைச்சுப் பார்த்தீங்களா?”
 
“எனக்கு அதைப்பத்திக் கவலையில்லை…” ஆணித்தரமாகச் சொன்னான் வருண்.
 
“ஓ…”
 
“அந்த வீடு என்னோட கைக்கு வரணும், அதுக்காக நான் என்ன வேணும்னாலும் செய்வேன், இதை உங்கம்மாக்கிட்டக் கூடச் சொல்லிட்டேன், அவங்களும் எதுவும் சொல்லலை.”
 
“என்ன வேணாப் பண்ணுவேன்னு சொல்லி இருப்பீங்க, என்ன பண்ணப் போறீங்கன்னு சொல்லி இருக்க மாட்டீங்க.”
 
“கண்டிப்பா, ஆனா நான் பண்ணப் போற விஷயத்தால நீங்க காயப்படுவீங்கன்னு சொல்லி இருந்தேன்.”
 
“அதுக்கு எதுக்கு ஷிப்? ஸ்ரீ லங்கால உங்களுக்கு இடமே கிடைக்கலையா அத்தான்?” அவள் குரலில் ஒரு இனம்புரியாத வலி தெரிந்தது.
 
“ஒரு காரியத்துல இறங்கினா பர்ஃபெக்ட்டா பண்ணணும், இதுல சம்பந்தப்பட்டிருக்கிறது நான்னு தெரிஞ்சா உங்கப்பா சிட்டியை சல்லடைப் போட்டிருக்க மாட்டாரு?”
 
“இப்பக்கூட உங்க மேல புகார் பண்ணலாமே?”
 
“என்னன்னு? என்னோட மைனர் பொண்ணை இவன் கூட்டிக்கிட்டுப் போயிட்டான்னா?”
 
“…………..” 
 
“டாக்குமெண்ட்ஸ் எல்லாம் பக்காவா… லீகலா இருக்கு.”
 
“ஒருவேளை… நான் மறுத்தா?”
 
“என்னன்னு?” அவன் உதடுகள் சிரிப்பில் துடித்தன.
 
“உங்களை எனக்குப் புடிக்… தெரியாது, என்னோட சம்மதமில்லா…” வார்த்தைகள் அதற்கு மேல் வரவில்லை மயூரிக்கு. 
 
தன் இரு பாக்கெட்டிலும் கையை நுழைத்த வருண் தன் முழு உயரத்துக்குமாக நிமிர்ந்து அவளைப் பார்த்து முறுவலித்தான். 
 
‘அடேயப்பா! சிரிப்பா அது! சும்மா சுண்டி இழுக்குதே!’ மயூரி மயங்கியது ஒரு கணம்தான். தன்னை மீட்டுக் கொண்டாள்.
 
“எங்கிட்ட இதைச் சொல்லவே இவ்வளவு கஷ்டப்படுறே…” மீதியை அவன் சொல்லவில்லை. தொக்கி நின்ற வார்த்தைகளின் அர்த்தம் புரிந்தது அவளுக்கு.
 
“இந்த விஷயத்தை உங்கம்மா காதுக்கு நான் கொண்டு போனா…” இப்போது அவளும் முடிக்கவில்லை.
 
“இனி யாருக்கிட்ட என்ன சொன்னாலும், எதைச் சொன்னாலும் எனக்கு அதைப்பத்திக் கவலையே இல்லை… ஏன்னா, இன்னைக்குக் காலையில என்னோட அப்பா ஆசையாசையா எங்களுக்குன்னு கட்டின எங்க வீடு என்னோட பேருக்கு மாறியாச்சு!”
 
அழுத்தம் திருத்தமாக அவன் சொல்ல மயூரியின் மனது லேசாக வாடியது. அவனுக்கு நியாயமாகச் சேர வேண்டிய சொத்துதான். அதில் அவளுக்கு மாற்றுக்கருத்து இல்லை.
ஆனால் எல்லாவற்றையும் அவன்
 
‘என்னுடையது, தன்னுடையது’ என்று பிரித்துப் பேசிய போது அவளுக்கு வலித்தது.
 
“போலாமா?” அதற்கு மேல் பேச்சை வளர்க்க மயூரி விரும்பவில்லை. அவன் எண்ணமும் அதுதான் என்பது போல வருணும் சட்டென்று கிளம்பி விட்டான்.
 
கடைத்தெருவெல்லாம் சுற்றினார்கள். மயூரிக்கு அவள் என்ன வாங்கினாள், என்ன ஏது என்று எதுவுமே தெரியாது. கண்ணில் பட்ட அழகான பொருட்களையெல்லாம் வாங்கிக் குவித்தாள். 
 
அவளுக்கு அவனோடான அந்தப் பொழுதை அனுபவிக்க வேண்டும். மற்றையது எதையும் அவள் கண்டு கொள்ளவும் இல்லை.
 
“இவ்வளவு பெரிய செலவுக்காரியா நீ?” ஒரு கட்டத்தில் வருணே அதிசயித்தான்.
 
“ஏன் அத்தான்? என்னோட கனத்தை உங்க பர்ஸ் தாங்காதா?” பெண்ணின் குறும்பான கேள்விக்குப் புன்னகை மட்டுமே பதிலாக வந்தது. 
 
தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிக்கு அவர்கள் வந்திருந்ததால் சாதாரணமாக மயூரி உடுத்தும் ஆடைகள் விதவிதமாகக் கிடைத்தன.
 
ஒரு ஐஸ்கிரீம் பார்லரில் போய் கடைசியாக உட்கார்ந்து கொண்டார்கள். மிகவும் களைப்பாக உணர்ந்தாள் பெண்.
 
“வாங்குற சம்பளத்தையெல்லாம் இப்பிடித்தான் செலவு பண்ணுவியா?” 
 
“ம்ஹூம்…” ஐஸ்கிரீமை சுவைத்தபடி தலையை ஆட்டி மறுத்தாள் மயூரி.
 
“நான் வேலைக்குப் போறது ஆச்சிக்குப் பிடிக்காது, அப்பாவைத்தான் உங்களுக்குத் தெரியுமே.” ஜால்ரா தட்டுவது போல அவள் அபிநயம் பிடிக்க வருண் வெடித்துச் சிரித்தான்.
 
“அதால சம்பாரிக்கிறதை என்னப் பண்ணுறேன்னு யாரும் கேட்க மாட்டாங்க.”
 
“ம்…”
 
“காருக்கு மாசா மாசம் பணம் கட்டணும்.”
 
“நைஸ் கார், நல்ல செலக்ஷன்.”
 
“…………….” 
 
“கவலைப்படாதே… உன்னோட காரை உங்கம்மா கைல சேஃபா சேர்த்துட்டேன்.”
 
“ஓ… தான்க் யூ.” அவள் இப்போது அமைதியாக ஐஸ்கிரீமை உண்டாள்.
 
“எவ்வளவு சம்பாதிப்ப? ஒரு… ஒன் லாக்?”
 
“கொஞ்சம் மேல போகலாம்.”
 
“ம்… வெரி குட்!”
 
“நீங்க எப்பிடி? ஓ… பசங்கக்கிட்டக் கேட்கக் கூடாத கேள்வியோ இது?” அவன் இப்போது சிரித்தான்.
 
“என்னை விட ரெண்டு மடங்கு?” அவள் அனுமானித்தாள். அவன் சிரித்தான்.
 
“நாலு மடங்கு…” இப்போதும் சிரிப்பே பதிலாக வந்தது.
 
“ஆறு மடங்கு?!” மயூரி கண்களை
விரித்தாள்.
 
“இன்னும் கொஞ்சம் மேல போகலாம்.” அவள் பாணியிலேயே அவனும் பதில் சொன்னான்.
 
“அடேயப்பா!” மயூரி வாயைப் பிளந்தாள். 
 
“கார்கோ ஷிப் எங்கிறதாலதான் இந்த அமௌண்ட், இதுவே ஆயில் டேன்க்கர் இல்லைன்னா கேஸ் டான்க்கரா இருந்தா இன்னும் மேல போகலாம்.”
 
“அவ்வளவு சம்பாதிக்கலாமா ஷிப்ல?”
 
“எடுத்த எடுப்பிலேயே அவ்வளவு வராது, ரான்க் கூடக்கூட சேலரி ஜாஸ்தியாகும்.”
 
“ஓ…”
 
“இயூரோப்பியன் பாஸ்போர்ட் இருந்தா இன்னும் பெட்டர்.”
 
“அப்போ உங்க கேப்டனுக்கு உங்களைவிட இன்னும் சம்பளம் ஜாஸ்தியா?” இந்தக் கேள்வி எனக்குப் பிடிக்கவில்லை என்பதை அவன் முகமே காட்டியது. வாயை அத்தோடு இறுக மூடிக்கொண்டாள் பெண்.
 
வாங்கியவற்றை எல்லாம் அள்ளிக்கொண்டு மீண்டும் கப்பலை வந்து சேர்ந்த போது இரவாகி இருந்தது. கிச்சனை மூடும் முன்பாக இருவரும் போய் உண்டுவிட்டு வந்தார்கள்.
 
குளியலை முடித்த வருண் அமைதியாக ஜன்னலின் அருகில் போய் நின்று கொண்டான். கடலும் துறைமுகமும் அமைதியாக இருந்தன.
 
அவன் உள்ளமும் அப்போது அப்படித்தான் அமைதியாக இருந்தது. நினைத்தது நடந்துவிட்டது! அவன் சாதித்து விட்டான்!
 
சாதிக்க அவன் தேடிய வழி தவறாக இருக்கலாம். ஆனால் அதைப்பற்றி அவன் கவலைப்படவில்லை. பாத்ரூம் கதவு சட்டென்று திறக்க தன்னை அறியாமல் திரும்பிப் பார்த்தான் வருண்.
 
இளமஞ்சள் நிற சாட்டின் நைட்டியில் வந்து கொண்டிருந்தாள் மயூரி. இந்த ஐந்து நாட்களில் முதல்முறையாக அவளை வேறு உடையில் பார்க்கிறான்.
 
சட்டென்று கண்களைத் திருப்பிக் கொண்டான் வருண். நேற்றும் கூட அவள் இரவு ஆடை அணிந்திருந்தாள். ஆனால் அது ஆண்கள் அணிவது. வெறும் பான்ட், ஷர்ட். 
 
ஆனால் இது… அவள் வளைவு நெளிவுகளை அழகாகக் காட்டியது. வருண் சட்டென்று ரூமை விட்டு வெளியே போகப் போனான்.
 
“அத்தான்!” அவள் குரல் அவனைத் தடுத்தது.
 
“என்னை அப்பிடிக் கூப்பிடாதே.”
 
“ஏன்?”
 
“…………..” பதிலில்லை.
 
“உங்க இஷ்டத்துக்கே எல்லாம் நடக்கணும்னு எதிர்பார்க்காதீங்க அத்தான்.”
 
“இப்போ என்ன வேணும் உனக்கு?” அவன் குரல் கடுகடுத்தது.
 
“உங்கக் கூட பேசணும்.”
 
“என்னப் பேசணும்?”
 
“என்னைப் பத்திப் பேசணும்.” நிதானமாகச் சொன்னாள் பெண்.
 
“உன்னைப் பத்தியா? உன்னைப் பத்திப் பேச என்ன இருக்கு? அதுவும் எங்கிட்ட?”
 
“நிறைய இருக்கு.”
 
“…………….” இப்போது அவன் கேள்வியாக அவளைப் பார்த்தான்.
 
“எனக்கு நியாயம் வேணும்.”
 
“நியாயமா? என்ன நியாயம்?!”
 
“வீடு கட்டினது யாரோ… அதை தங்களுக்குன்னு சுருட்டிக்கிட்டது யாரோ… ஆனா தண்டனை எனக்கா?”
 
“…………….”
 
“நான் என்னப் பாவம் செஞ்சேன்?” மயூரியின் குரலில் கோபம் தெரிந்தது.
 
“இதுக்குப் பதில் நான் ஏற்கனவே சொல்லிட்டேன்.”
 
“எது? அந்த… பெத்தவங்க செஞ்சது புள்ளைங்களுக்குத்தான் எங்கிறதா?”
 
“…………….” அவன் கண்கள் இடுங்க அவளைப் பார்த்தான்.
 
“சரி ஒத்துக்கிறேன்… நீங்க ஆள் வெச்சுக் கடத்துனீங்க ஓகே… அதோட நிறுத்தி இருக்கலாம் இல்லை? எதுக்கு இவ்வளவு விஷயம் பண்ணி, அத்தனையையும் லீகலா ரெஜிஸ்டர் பண்ணி… என்ன இதெல்லாம்?”
 
“…………..”
 
“இதால என்னோட வாழ்க்கை எவ்வளவு ஸ்பாயில் ஆகும்னு நீங்க நினைச்சுப் பார்த்தீங்களா?”
 
“எனக்கு அதைப்பத்திக் கவலையில்லை.” அசிரத்தையான பதில்.
 
“அப்பிடிச் சொல்லி நீங்க தப்பிச்சுக்கலாம், ஆனா நான் விடமாட்டேன்.” 
 
“என்னப் பண்ண முடியும் உன்னால?” கோணல் சிரிப்புச் சிரித்தான் வருண்.
 
“எதுவும் பண்ண முடியும், ஏற்கனவே சட்டப்படி எனக்குச் சொந்தமான இந்த வருணை… எனக்கே எனக்குன்னு ஒரு அஞ்சு நாளைக்குச் சொந்தமாக்கிக்க என்னால முடியும்!” அவள் பேசி முடித்தபோது வருண் அண்ணார்ந்து சிரித்தான். 
 
கம்பீரமான அந்தச் சிரிப்பை அவள் ரசித்தாலும் அவன் பதிலுக்காகக் காத்திருந்தாள். 
 
“இந்த வருண் ஒன்னும் நீ கடையில இன்னைக்கு வாங்கின பொருள் இல்லைப் பொண்ணே!”
 
“ரத்தமும் சதையும் ஆசைகளும் உணர்ச்சிகளும் இருக்கிற மனுஷன் இல்லை அத்தான்?!” அந்தக் குரலில் வருண் சற்றே நிதானித்தான்.
 
“இப்போ நான் பாத்ரூம்ல இருந்து வெளியே வந்தப்போ, இந்தக் கண்ணுல ஒரு சலனம் தெரிஞ்சுச்சே… தன்னைக் காப்பாத்திக்க யாரோ வெளியே ஓடப்பார்த்தாங்களே!” இப்போது அவளும் சிரித்தாள்.
 
வருணின் முகம் சிவந்து போனது! அவள் தன்னைக் கண்டு கொண்டு விட்டாள் என்று புரிந்த போது தலை லேசாகக் கவிழ்ந்தது.
 
“கேப்டன் என்னைத் தொட்டா உங்களுக்கென்ன அத்தான்?” அவள் பாயிண்ட்டை சரியாகப் பிடித்தாள்.
 
“நான் யாருக்கிட்ட எதைத் தேடிப் போனா உங்களுக்கென்ன அத்தான்? எதுக்கு அவங்கிட்டக் கேட்கிறே, எங்கிட்டக் கேளேன்னு சொன்னீங்களே… இப்போ நீங்க அன்னைக்கு உங்கக்கிட்ட கேட்க சொன்னதை இன்னைக்கு நான் கேட்கட்டுமா அத்தான்?”
 
“ப்ரதாயினி!” அவன் குரல் ஓங்கி ஒலித்தது. அந்தச் சத்தத்தில் மயூரி லேசாக நடுங்கினாள்.
 
முதன்முறையாக அவனும் அவளைப் பெயர் சொல்லி அழைத்தான்.
மயூரி கண்கள் கலங்க சட்டென்று முகத்தைத் திருப்பிக் கொண்டாள். கண்களில் நீர் வடிந்தது.
 
“என்னோட முடிவுல எந்த மாற்றமும் இல்லை அத்தான்!” உறுதியாகச் சொன்னது பெண்.
 
“பைத்தியமாடீ நீ? என்னப் பேசுறோம்னு புரிஞ்சுதான் பேசுறியா?” அவன் இப்போது கத்தினான்.
 
“பாஸ்போர்ட்ல இருக்கிறதை எங்கூட நீங்க இருக்கிற வரைக்கும் உண்மையாக்கலாம்னு சொல்றேன்.”
 
“என்னைக் கொலைப் பண்ண வெக்காதே!” அவன் பல்லைக் கடித்தான்.
 
“நீங்க எது பண்ணினாலும் எனக்குச் சம்மதந்தான் அத்தான்.”
 
“அறைஞ்சுப் பல்லைக் கழட்டிடுவேன்!”
 
“இந்த ஷிப் ஸ்ரீ லங்கா போக இன்னும் அஞ்சு நாளாகும், அதுவரைக்கும்… இந்த ரூம்ல நாம ரெண்டு பேரும் மிஸ்டர் அன்ட் மிஸஸ் வருண்!”
இப்போது அவள் கழுத்தை மீண்டும் நெரித்தான் வருண்.
 
“அதுக்கு நீ வேற ஆளைத்தான் பார்க்கணும்… இதுக்கெல்லாம் நான் சம்மதிப்பேன்னு நீ நினைச்சியா?” அவன் பிடி இறுகியது.
 
“உங்கச் சம்மதத்தை இங்க யாரும் கேட்கலை அத்தான், இது என்னோட முடிவு, இதுக்கு நீங்க கட்டுப்பட்டுத்தான் ஆகணும்!”
 
“இவளை ஏன்டா தூக்கினோம்னு ஃபீல் பண்ண வெச்சுடாதே!” பல்லைக் கடித்தபடி வார்த்தைகளைக் கடித்துத் துப்பியவன் அவளைக் கட்டிலில் தள்ளிவிட்டு வெளியே போய்விட்டான்.
 
அன்று நள்ளிரவு தாண்டிய பிறகும் வருண் அறைக்குத் திரும்பவில்லை!
 

Leave a Reply

error: Content is protected !!