அழகியே 22

அழகியே 22

அழகு 22
 
அன்று முழுவதும் மயூரி ஒருவித குழப்பத்திலேயே இருந்தாள். வருண் தன் மாமி தன்னோடு பேசிய மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தான்.
 
முதலில் அவன் மயூரியின் விலகலைக் கவனிக்கவில்லை. அனு ரூமிற்குள் வந்தவுடன் பின்னாலேயே ஆர்யனும் வந்துவிட்டான்.
 
கொஞ்ச நேரம் யார் விஷாகாவின் மடியில் தூங்குவதென்ற சண்டைப் பயங்கரமாக நடந்து கொண்டிருந்தது.
வருண் வேண்டுமென்று அனுவோடு மல்லுக்கு நின்றான். அவன் விஷாகாவின் மடியில் தலை வைப்பதும் அனு அவன் தலை முடியைப் பிடித்து அப்பால் இழுப்பதுமாக ஒரு நாடகம் நடந்து கொண்டிருந்தது.
 
ஆர்யன் இந்த நாடகத்தைப் பார்த்தபடி விஷாகாவின் அருகில் நின்றிருந்தான். தன் தந்தையிடம் அத்தனை அன்னியோன்யம் இன்னும் அவனுக்கு வராததால்
குழந்தை லேசாகத் தயங்கியது.
 
அப்போதுதான் மயூரி அங்கு இல்லை என்பதை வருண் கவனித்தான். அவளது விலகல் மனதிற்குக் கொஞ்சம் வருத்தமாக இருந்தாலும் அதில் இருந்த நியாயத்தை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.
 
குழந்தைகள் இருவரையும் விஷாகாவிடம் ஒப்படைத்துவிட்டு வருண் மயூரியை தேடிக்கொண்டு வந்தான். அவர்களது ரூமில் எதையோ தேடிக் கொண்டிருந்தாள் பெண்.
 
கப்போர்ட் திறந்திருக்க அதனருகில் நின்றிருந்தாள். கை எதையோ தேடினாலும் அவள் முகத்தில் சிந்தனை மேகங்கள் குவிந்து கிடந்தன.
 
“என்னப் பண்ணுறே?” அவளருகில் வந்து நின்றவன் கேட்டான்.
 
“நாளைக்கு ஒரு முக்கியமான ப்ரசென்டேஷன் இருக்கு அத்தான், அதுக்கு என்ன உடுத்திக்கிட்டுப் போகலாம்னு யோசிக்கிறேன்.”
 
“நான் ஹெல்ப் பண்ணட்டுமா?” அவன் கேட்க அவள் கேலியாகச் சிரித்தாள்.
 
“உங்களுக்கு என்ன அத்தான் இதைப் பத்தியெல்லாம் தெரியும்? ஷிப்ல ரெண்டு செட் ட்ரெஸ் வாங்கி வெக்காத ஆளுதானே நீங்க!” அந்த கேலியில் அவன் அசௌகரியமாக உணர்ந்தான். முகம் சிவந்து விட்டது.
 
“பழகிக்கிறேனே, எத்தனை நாளைக்குத்தான் தெரியாதுன்னு சொல்ல முடியும்?”
 
“…………..” மயூரி பதில் சொல்லாமல் இப்போது புன்னகைத்தாள்.
 
“ஒரு பொண்டாட்டி, ஒரு பொண்ணுன்னு ஆகிப்போச்சு, இனியும் இதெல்லாம் தெரியாதுன்னு சொல்ல முடியுமா?” அவன் விளையாட்டாகச் சொல்ல அவள் முகம் சட்டென்று இறுகிப் போனது!
 
வருண் அவள் முகத்தை மெதுவாகத் தன்னை நோக்கி நிமிர்த்தினான். அதில் விரவிக் கிடந்த சஞ்சலங்களும் குழப்பங்களும் அவனுக்கு அத்தனை நல்லதாகப் படவில்லை.
 
“எதை நினைச்சும் உன்னை நீ வருத்திக்காதே, பிடிச்சிருக்குன்னு அன்னைக்கு எப்பிடித் தைரியமாச் சொன்னியோ அதே மாதிரி இப்போப் பிடிக்கலேங்கிறதையும் தைரியமாச் சொல்லு!” 
 
“அத்தான்…” அவள் திகைத்த குரலில் அழைத்தாள்.
 
“ரெண்டு வருஷம் நிறையவே கஷ்டப்பட்டிருக்கேன்னு தோணுது, விருப்பப்பட்டா அந்த பாரத்துல கொஞ்சத்தை என்னோட தோள்ல தூக்கி வை, இல்லை… என்னோட பாரத்தை என்னாலேயே தூக்க முடியும்னு நீ நினைச்சேன்னா… விட்டுடு…” அதற்கு மேல் வருண் பேசவில்லை.
 
“வாழ்க்கையில உங்கப்பாவைப் போல காதலிக்கணும்னு ஆசைப்பட்டீங்களே அத்தான்?”
 
“யாரு, அந்த கேப்டன் சொன்னாரா?”
 
“யாரு சொன்னா என்ன? உண்மை அதுதானே?”
 
“காதலிப்போமே… கல்யாணம் பண்ணிக்கிட்டுக் காதலிப்போமே! அப்போ மட்டும் என்ன குறைஞ்சு போகப் போகுது?”
 
“கையில ரெண்டு குழந்தைங்களை வெச்சுக்கிட்டா?”
 
“ஏன்? எங்கப்பா எங்கம்மாவைக் கடைசி வரைக் காதலிச்சாரே!” மயூரி இப்போது சிரித்தாள்.
அவன் தன்னை மடைமாற்ற இப்படியெல்லாம் பேசுகிறான் என்று புரிந்தது. 
 
“உன்னோட மனசுக்கு எம்மேல கோபம்.”
 
“அப்பிடியெல்லாம் இல்லை அத்தான்.”
 
“இல்லைன்னு சொன்னாலும் உள்ளுக்குள்ள அந்த நெருப்பு இருக்கு, இத்தனை நாளும் இல்லாத அக்கறை இப்ப என்ன திடீர்னு… அப்படின்னு!”
 
“……………”
 
“இந்தக் கேள்விக்கெல்லாம் நான் என்ன பதில் சொல்லி என்னை உனக்குப் புரிய வைக்கிறதுன்னு எனக்குத் தெரியலை, சத்தியமாத் தெரியலை.”
 
“…………..” 
 
“ஆனா இந்த நிமிஷத்தை நான் ரொம்பவே ரசிக்கிறேன், இனிமையா உணர்றேன், அதுக்குக் காரணம் நீயா, இல்லை உன்னோட குழந்தைங்களா… எதுன்னு எனக்குத் தெரியலை…” வருண் பேசிக் கொண்டிருக்கும் போதே அவன் ஃபோன் சிணுங்கியது.
 
சரவணன் அழைத்துக் கொண்டிருந்தான். எதற்காக இந்த மனிதர் இப்போது அழைக்கிறார் என்று சிந்தித்தபடி அழைப்பை ஏற்றான் வருண்.
 
“சொல்லுங்க சரவணன்.”
 
“சார், நான் கொஞ்சம் அவசரமா கொழும்பு வரைக்கும் போகணும்.”
 
“ஓ… என்னாச்சு சரவணன்?”
 
“வீட்டுல ஒரு சின்ன பிரச்சினை சார்.”
 
“ஓ… இப்போ எங்க இருக்கீங்க?”
 
“மேடமோட வீட்டு வாசல்லதான் சார்.”
 
“கொஞ்சம் இருங்க, இதோ வந்தர்றேன்.” சொல்லிவிட்டு வருண் நகர்ந்தான்.
 
“என்னாச்சு அத்தான்?”
 
“சரவணன் வீட்டுல ஏதோ பிரச்சினையாம், போகட்டுமான்னு கேட்கிறாரு.”
 
“உங்களுக்கு வெளியே போகணும்னா கார் இருக்குத்தானே அத்தான், அவரைப் போய்ட்டு வரச்சொல்லுங்க.”
 
“சரிம்மா.” 
வருண் வெளியே வந்த போது சரவணன் வீட்டு வாசலில் அவனுக்காகக் காத்திருந்தான்.
 
“பெரிய பிரச்சினை ஒன்னுமில்லையே சரவணன்?”
 
“இல்லை சார், சொந்தக்காரங்க ஒருத்தங்களுக்கு உடம்புக்கு முடியலையாம், போனா நல்லதுன்னு எனக்கும் பட்டுது.”
 
“வயசானவங்களா?”
 
“ஆமா சார்.”
 
“போய்ட்டு வாங்க சரவணன், பணம் ஏதாவது வேணுமா?”
 
“இல்லையில்லை… சார்…” சரவணன் எதையோ சொல்லத் தயங்கினான்.
 
“கேளுங்க சரவணன், எங்கிட்டக் கேட்க எதுக்கு இவ்வளவு தயக்கம்?” வருண் புன்னகைத்தான்.
 
“மேடம்…”
 
“ம்… மேடத்துக்கு என்ன சரவணன்?”
 
“உங்கக்கிட்ட நல்லாப் பேசுறாங்களா?” கேட்டே விட்டான்.
 
“ம்… பேசுறா…” மேலே பேசத் தெரியாமல் நிறுத்தினான் வருண்.
 
“கோபமா இல்லை ஆதங்கமான்னு எனக்குப் புரியலை சரவணன்.”
 
“வருத்தமா இருக்கும் சார்.” 
 
“ஓ…”
 
“ஆமா சார், இந்த ரெண்டு வருஷத்துல அவங்களை நீங்க தேடி வரலையேங்கிற வருத்தம் நிச்சயமா இருக்கும் சார்.”
 
“அப்போ என்னோட நிலைமையை அவ புரிஞ்சுக்கவே மாட்டாளா சரவணன்?”
 
“பொண்ணுங்கன்னாலே அப்பிடித்தானே சார், ரொம்பவே எதிர்பார்ப்பாங்க, அதுவும் புருஷன்னு வந்துட்டா அவங்க எதிர்பார்ப்போட லெவலே வேற சார்.”
 
“ம்…”
 
“அதுலயும் மேடமுக்கு சாரை ரொம்பப் பிடிக்கும்.” மீதியை சரவணன் சொல்லவில்லை. வருணே புரிந்து கொண்டான். 
 
அவளுக்கு அவனை எவ்வளவு பிடிக்கும் என்று ஊருக்குத் தெரியாவிட்டாலும் கொண்டவனுக்குத் தெரியும்தானே!
 
“தேடி வரலையே தவிர வேற யாரையும் நானும் தேடிக்கலையே சரவணன்!”
 
“அது இன்னும் கொஞ்ச நாள் போனாத் தானாப் புரியும் சார், பொறுமையா இருங்க, ஆரம்பகட்ட கோபதாபம் எல்லாம் வடியட்டும்.”
 
“ம்…” 
 
“பசங்க எப்பிடி இருக்காங்க சார்?” ஆவலாகக் கேட்டான் சரவணன். இப்போது வருணின் முகத்தைப் பார்க்க வேண்டுமே! மலர்ந்து போனது.
 
“சரவணன்… அதுங்க ரெண்டையும் என்னால இனி பிரிஞ்சு போக முடியும்னு தோணலை… அவ அவன் கல்யாணம், குழந்தைன்னு ஏன் பறக்கிறான்னு இப்போப் புரியுது சரவணன்.” வருணின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி சரவணனுக்கும் சந்தோஷத்தைக் கொடுத்தது.
 
“மேடமோட அம்மா?”
 
“இன்னைக்குப் பேசினாங்க.”
 
“ஓ… எப்பிடி சமாளிச்சீங்க சார்?”
 
“வேற வழி? கால்ல விழுந்துதான்!”
 
“ஹா… ஹா… அப்பிடியே இன்னொரு தடவை மேடமோட கால்லயும் விழுந்துடுங்க சார், எல்லாம் ஓகே ஆகிடும்.” சிரிப்போடு சொல்லிவிட்டு சரவணன் கிளம்பி விட்டான்.
 
வருணுக்கு மனது இப்போது லேசாக இருந்தது. மயூரி அன்றைக்கு முழுவதும் வருணோடு பெரிதாகப் பேசிவிடவில்லை.
 
அவள் அவனிடமிருந்து விலக விலக அவனுக்கு அவளை நெருங்கும் ஆவல் அதிகரித்தது! ஆனால் அவள் லேப்டாப்போடு ஐக்கியமாகி இருந்தாள்.
 
நன்றாக ஆட்டம் போட்டுவிட்டு இரண்டு குழந்தைகளும் தூங்கிப் போயின. மனது லேசான காரணமோ என்னவோ, விஷாகாவும் சீக்கிரமே படுக்கைக்குப் போய்விட்டார்.
 
வருண் இரவு உணவை முடித்துக்கொண்டு கொஞ்ச நேரம் நடந்துவிட்டு வந்தான். மயூரி உடம்பு கழுவிவிட்டு மீண்டும் லேப்டாப்போடு போராடிக் கொண்டிருந்தாள்.
 
‘இவள் உண்மையிலேயே வேலை செய்கிறாளா? இல்லை என்னைத் தவிர்ப்பதற்காக வேலை செய்வது போலப் பாசாங்கு செய்கிறாளா?’ வருணுக்கு ஒன்றுமே புரியவில்லை.
 
பாத்ரூமிலிருந்து அவன் வெளியே வந்த போது இப்போதும் அந்த கப்போர்டில் எதையோ குடைந்து கொண்டிருந்தாள் பெண். வருண் அவளைப் பின்னோடு அணைத்துக் கொண்டான்.
 
மயூரி திடுக்கிட்டுப் போய் முழுதாகத் திரும்பிப் பார்த்தாள். முகம் பயத்தில் வெலவெலத்துப் போனது.
 
“என்னாச்சு?” அவன் மிகவும் சாதாரணமாகக் கேட்டான்.
 
“அத்தான்…” அந்த ஒற்றை வார்த்தை நடுங்கியது! அவள் கழுத்தோரம் அவன் வாசம் பிடிக்க மயூரி சட்டென்று விலகினாள்.
 
“ஏன்?” அந்த இரண்டெழுத்தில் அவ்வளவு ஏமாற்றம்!
 
“இல்லை…” அவள் விலகுவதிலேயே குறியாக இருந்தாள்.
 
“அஞ்சு நாள் வாளணும்னு சொன்னே… ஆனா ஒரு நாள்தானே வாழ்ந்தோம் பொண்ணே!” அவன் குரலில் இப்போது சரசம் வழிந்தது. 
 
“அத்தான்… ப்ளீஸ்…” அவனுக்கு எதையும் நிறுத்தும் எண்ணம் இருக்கவில்லைப் போலும்.
 
“உனக்காக ஒரு நாள், எனக்காக நாலு நாள்… இப்போ இந்த அத்தான் கேட்குறேன், எனக்காக ஒரு நாலு நாள் குடு குட்டி.” வருணின் குரல் காதல் பேசியது. தன் அத்தானின் காதலில் பெண் மிரண்டு போனது.
 
“வருண்… ப்ளீஸ்… என்னைப் பலவீனப்படுத்தாதீங்க!”
 
“எப்பிடி இவ்வளவு பெரிய பொய்யை உன்னால சொல்ல முடியுது?! உன்னோட இருக்கிற ஒவ்வொரு பொழுதுலயும் பலவீனப்பட்டுப் போறது நான்தானே!” 
 
“அன்னைக்கு நீங்க ட்ரிங் பண்ணி இருந்தீங்க.”
 
“ஆனாலும் நிதானமாத்தானே இருந்தேன்? இன்னைக்கு அதுவும் இல்லையே!”
 
“இது… உங்க வயசு.”
 
“உன்னைப் பார்க்கும் போது மட்டுந்தான் எனக்கு என்னோட வயசு ஞாபகம் வருமா?” அவளை மேலே பேச விடாமல் பண்ண அவன் பெருமுயற்சி செய்தான். ஆனால் மயூரி முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
 
“இது கடமை… இதுல காதல் இல்லை வருண்!”
 
“கடமைக்காகவெல்லாம் யாராவது வாழுவாங்களா குட்டி?”
 
“ஏன்? என்னோட அம்மா வாழலை? எங்கப்பாக் கூட.” மயூரி சொல்ல வருணின் உணர்ச்சிகள் அனைத்தும் அந்த நொடி வடிந்து போனது.
 
அவள் உச்சரித்த ‘அப்பா’ என்கின்ற ஒரு வார்த்தை அவனை மொத்தமாக அசைத்தது. சட்டென்று விலகினான் வருண்.
 
‘இவள் என்றைக்கு என்னைப் புரிந்து கொள்ளப் போகிறாள்?’ நெற்றியைத் தடவியபடி படுக்கையில் வீழ்ந்தான் வருண், ஒற்றையாக!
 
***
 
காலையில் வருண் கண்விழித்த போது குழந்தைகள் இரண்டும் உறங்கிக் கொண்டிருந்தார்கள். மயூரி ஏற்கனவே புடவைக் கட்டி ரெடியாகி இருந்தாள்.
 
“குட் மார்னிங்.” அவன் குரலில் சட்டென்று திரும்பினாள் மயூரி.
 
“குட் மார்னிங் அத்தான்.” காலை நேரப் பரபரப்பு முழுதாக அவளிடம் தெரிந்தது.
 
“இன்னைக்குன்னு பார்த்து இது ரெண்டும் நல்லாத் தூங்குதுங்க அத்தான்.” அவள் குறைப்பட குழந்தைகளைத் திரும்பிப் பார்த்தான் வருண். 
பூக்கள் இரண்டு அவன் படுக்கையில் மலர்ந்து கிடந்தன! 
 
“முடிஞ்சா ரெண்டையும் நர்சரியில விட்டுருங்க அத்தான், அனு ஓகே, ஆர்யனை அம்மா சமாளிப்பாங்க.”
 
“நான் பார்த்துக்கிறேன்.”
 
“காரை வெச்சுட்டு நான் டாக்ஸியில போறேன் அத்தான்.”
 
“இல்லையில்லை… நான் ட்ராப் பண்ணுறேன்.” அவன் சட்டென்று கட்டிலில் இருந்து எழுந்து பாத்ரூமிற்குள் போய்விட்டான்.
 
விஷாகா நீட்டிய டீயை அவசர அவசரமாகக் குடித்துவிட்டு, குழந்தைகளை அவர் வசம் ஒப்படைத்துவிட்டு இருவரும் கிளம்பிப் போனார்கள். 
 
காரிற்குள் இரண்டு பேரும் எதுவுமே பேசிக் கொள்ளவில்லை. ஆனால் அவள் இறங்கும் போது வருண் அவள் கையைப் பிடித்து நிறுத்தினான். திரும்பிப் பார்த்தாள் மயூரி.
 
“ரொம்ப அழகா இருக்கே!” உண்மையான பாராட்டு. ஏனென்றால் அவன் கண்கள் அவளைத் தழுவிச் சென்ற விதம் அப்படி. விழுங்குவது போலப் பெண்ணைப் பார்த்தான்.
 
“குட் லக்!” அவன் மீண்டும் சொன்னான்.
 
“தான்க் யூ.” முகம் சிவக்கச் சொல்லிவிட்டு மயூரி இறங்கிப் போய் விட்டாள்.
 
அன்றைய பொழுது விஷாகாவிற்கும் வருணிற்கும் சரியாக இருந்தது. குழந்தைகள் இரண்டையும் தயார்படுத்தி நர்சரியில் கொண்டு போய் விட்டார்கள்.
 
நர்சரியிலிருந்து வரும்போது வீட்டுக்குத் தேவையானப் பொருட்களை வாங்கிக் கொண்டு வந்து சமையலில் இறங்கிவிட்டார் விஷாகா.
 
மயூரி ஏன் இவர்களை நர்சரியில் விடுகிறாள் என்று அப்போது வருணுக்கு புரிந்தது. விஷாகாவால் தனியாகக் குழந்தைகளைச் சமாளிக்க இயலவில்லை, அதுவும் ஆர்யன் சமர்த்தாக இருந்தான்.
 
ஆனால் அந்தப் பொடுசு!
குழந்தைகளை முதலில் நர்சரியிலிருந்து அழைத்து வந்தான் வருண். மயூரிக்கு இன்றைக்கு மூன்று மணிக்குத்தான் பணி நேரம் முடியுமென்பதால் முதலில் அவர்களை அழைத்து வந்திருந்தான்.
 
குழந்தைகளுக்கு உடைமாற்றி, உணவூட்டி என்று பொழுது கரைந்து போனது. மூன்று மணிக்கு மீண்டும் போய் மயூரியை அழைத்து வந்தான்.
களைத்துப் போயிருந்தாள்.
 
புடவையைக் கூட மாற்றாமல் நேராக டைனிங் டேபிளில் வந்து உட்கார்ந்து விட்டாள்.
 
“அம்மா, பசிக்குது.” மகள் பரபரக்கவும் சட்டென்று உணவைப் பரிமாறிக் கொடுத்தார் விஷாகா.
 
“இப்பிடிச் சாப்பிடாம வேலை பார்க்காதேன்னு எத்தனைத் தரம் உனக்குச் சொல்லி இருக்கேன் மயூரி.” தன்னைக் கோபிக்கும் அம்மாவைக் கவனத்தில் கொள்ளாமல் சாப்பாட்டிலேயே கவனமாக இருந்தாள் மயூரி. அவ்வளவு பசி.
 
சரியாக மயூரி உணவை முடிக்கும் நேரம் அந்த கார் இவர்கள் வீட்டிற்குள் நுழைந்தது.
 
“யாரது அத்தான்?” மயூரி கேட்க வருண் எட்டிப் பார்த்தான். சரவணனின் கார் போலத் தெரிந்தது.
 
“சரவணன்!” என்றான் ஆச்சரியமாக.
 
“சரவணனா?” இது மயூரி.
 
“ஆமா, நேத்துத்தானே போனாரு, இன்னைக்கு எதுக்கு இவ்வளவு அவசரமாத் திரும்பி வந்திருக்காரு?” வருணும் ஆச்சரியப்பட்ட படி எழுந்து வந்தான்.
 
“என்னாச்சு?” விஷாகாவும் அப்போதுதான் குழந்தைகள் உறங்குவதை உறுதிப் படுத்திக்கொண்டு அவருடைய ரூமிலிருந்து வெளியே வந்தார்.
 
ஹாலில் வந்து நின்ற மூன்று பேரும் காரிலிருந்து இறங்கிய ராகினியை பார்த்த போது ஸ்தம்பித்துப் போனார்கள்!
 
“அம்மா…” வருணின் குரல் தேய்ந்து போனது. மயூரி திருதிருவென விழித்தபடி நிற்க, விஷாகாவிற்கு உடல் வேர்த்தது!
 
காரிலிருந்து இறங்கிய ராகினி சுற்றும்முற்றும் ஒரு தரம் பார்த்தார். வீட்டிற்குள் பாய்ந்த அவர் பார்வைக் கண்டதெல்லாம் முதலில் அங்கே நடுநாயகமாக நின்றிருந்த அவர் மகனைத்தான்.
 
வருணை கண்ட மாத்திரத்தில் விடுவிடுவென உள்ளே வந்தவர் தான் பெற்றவனின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டார்!
 
“அக்கா!” விஷாகா பதற இன்னொரு அறை வருணின் அடுத்த கன்னத்தில் வீழ்ந்தது. 
 
“உன்ட அப்பா என்னை விட்டுட்டுப் போயிட்டாரே என்டு இன்டைக்கு வரைக்கும் நான் வேதனைப்பட்டுக் கொண்டு இருக்கிறன், ஆனா இன்டைக்குச் சொல்றேன்டா, அவர் போய் சேர்ந்தது எவ்வளவோ நல்லது! இதையெல்லாம் அந்த மனுஷன் பார்த்திருந்தார் என்டா நெஞ்சு வெடிச்சுச் செத்துப் போயிருப்பார்.”
 
“அக்கா!” விஷாகா மீண்டும் பதறி அழுதார்.
 
“நீ பேசாதே விஷாகா! உன்ட பொண்ணைப் பத்தி நான் கேட்ட நேரமெல்லாம் நீ என்னென்னமோ சொல்லி மழுப்பினது இதுக்குத்தானே?! உனக்கு எவ்வளவு தைரியம் இருக்க வேணும்?!” வார்த்தைகளில் நெருப்புப் பறந்தது.
 
“ஐயோ அக்கா! எங்கிட்ட எல்லாத்தையும் சொன்ன கையோட யாருக்கிட்டயும் இதைப்பத்தி மூச்சுவிடக் கூடாதுன்னு சத்தியமும் வாங்கினா நான் என்னதான் செய்வேன்?!” சொல்லிவிட்டு ஓவென்று கதறினார் விஷாகா. 
 
இப்போது வருணின் கண்கள் மயூரியை கேள்வியாக நோக்கின. ஆக… கொழும்பிற்கு வந்த விஷாகா மயூரியை பற்றி எதுவும் பேசாததன் ரகசியம் இதுதானா?
 
விஷாகாவை பற்றி, அவர் பத்திரங்களைத் திரும்பக் கொடுத்தது பற்றி அத்தனைப் பேசிய ராகினி மயூரி பற்றி எதுவுமே பேசவில்லையே என்று வருண் பலமுறை நினைத்ததுண்டு.
 
ஆனால் மயூரியே தன் அம்மாவின் வாயை அடைத்திருக்கிறாள் என்று அவனுக்குத் தெரியாது! இப்போது ராகினி மயூரியின் அருகில் வந்தார். முகத்தில் ரௌத்திரம் பொங்கியது.
 
“ஏன்டீ, நீயெல்லாம் ஒரு பொம்பளையே?!” முதல் வாக்கியமே இடி போல மயூரியின் தலையில் இறங்கியது. விஷாகா இப்போது வாய்பொத்தி அழ,
 
“அம்மா!” என்று வருண் தன் தாயை அதட்டினான். ஆனால் அதையெல்லாம் ராகினி கருத்தில் கொள்ளவில்லை.
 
“அவன் ஆம்பிளை, அப்பிடித்தான் கூப்பிடுவான், நீ என்ன செஞ்சிருக்க வேணும் என்டு தெரியுமே? உன்ட கால்ல கிடக்கிற செருப்பைக் கழட்டி அவனை நீ நாலு சாத்து சாத்தியிருக்க வேணும்… அப்பிடிச் செஞ்சிருந்தா நீ விஷாகாவின்ட மகள்!” இப்போது மயூரியின் கன்னத்திலும் ஒன்று வீழ்ந்தது.
 
மயூரி நிலைதடுமாறி விழப்போக வருண் சட்டென்று அவளைப் பிடித்துக் கொண்டான். பத்திரகாளி போல நின்றிருந்த தன் அன்னையைச் சற்று அப்பால் தள்ளியவன், 
 
“அம்மா! உங்களுக்கென்ன விசரே பிடிச்சிருக்கு? அவளை ஏன் அடிக்கிறியள்?” என்றான் ஆக்ரோஷமாக. 
 
“ஓ… அவங்களை நான் அடிச்சா உங்களுக்குக் கோபம் வேற வருதே?” ஏளனமாக வந்தது கேள்வி.
 
“பிழை முழுக்க என்ட மேலதான், நீங்க அடிக்கிறதா இருந்தா என்னைத்தானே அடிக்க வேணும்? என்னத்துக்கு அவளை அடிக்கிறியள்?” வருணின் வார்த்தைகளில் மயூரியும் விஷாகாவும் அதிர்ந்து போனார்கள்.
 
வருண் மேலும் நிறையத் தவறுகள் இருந்தன. ஆனால் அனைத்துக்கும் வருண் மட்டுமே காரணம் அல்லவே!
 
“அது…” மயூரி எதையோ பேச ஆரம்பிக்க வருண் இடைமறித்தான்.
 
“ப்ரதாயினி! நீ கொஞ்சம் சும்மா இருக்கியா!”
 
“ப்ரதாயினியா? அது யாரு? மயூரியின்னுதானே சரவணன் சொன்னவன்.” ராகினி குழம்பிப் போக… இப்போது அவர் எப்படி அங்கே வந்து சேர்ந்தார் என்ற உண்மை அனைவருக்கும் புரிந்தது.
 
வருண் சரவணனை திரும்பிப் பார்த்தான். கொஞ்சம் அவசரப்பட்டு விட்டாயே என்ற குற்றச்சாட்டு அந்தப் பார்வையில் தெரிந்தது. 
 
“சார், நான் எதுவுமே பண்ணலை சார், அவசரமா வீட்டுக்குப் போன என்னை அம்மாதான் கூப்பிட்டு உங்களைப் பத்தி விசாரிச்சாங்க, நான் எவ்வளவோ மறைக்கத்தான் முயற்சி செஞ்சேன், ஆனா அம்மா விடலை சார்.” சரவணன் கடகடவென ஒப்பித்தான்.
 
வருண் ஒரு பெருமூச்சோடு அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்து விட்டான். அம்மாவிடம் எதையும் மறைக்கும் எண்ணம் அவனுக்கு இருக்கவில்லை.
 
முதலில் விஷாகாவை மயூரியை என அனைவரையும் ஒரு நல்ல மனநிலைக்குக் கொண்டு வந்த பிற்பாடு அம்மாவை இங்கு அழைத்து வரலாம் என்று நினைத்திருந்தான்.
 
ஆனால் அனைத்தையும் ராகினி தவிடு பொடியாக்கி இருந்தார். என்ன பேசுவதென்று புரியாமல் அங்கிருந்த அரைவரும் அமைதியாக இருந்தார்கள்.
 
“அப்போ… அன்டைக்கு அந்த கேப்டன் சொன்ன மயூரி இவதானோ?” அம்மாவின் கேள்வியில் வருண் திகைத்துப் போனான்.
 
 
 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!