அழகியே 25

அழகியே 25

அழகு 25
 
மயூரியின் கேள்வியில் சட்டென்று அண்ணார்ந்து பார்த்தான் வருண். ஊரையே நிறைத்திருந்த நிலவொளியில் ஜன்னலோர தேவதைப் போல இவனையே பார்த்திருந்தாள் பெண்!
 
அந்தப் பார்வை இவனை ஏதோ செய்ய இவனும் சளைக்காமல் அவளையே சிறிது நேரம் பார்த்திருந்தான்.
 
“என்ன சொன்னே?”
 
“ம்… சுரைக்காய்க்கு உப்பில்லைன்னு சொன்னேன்.” அவள் தன்னைக் கேலி பண்ணுகிறாள் என்று புரிய சட்டென்று வருண் கட்டிலிலிருந்து எழுந்து நின்றான்.
 
“அப்போ… அத்தனையும் நடிப்பா? நாந்தான் முட்டாள் மாதிரி மனசுல இருக்கிற அத்தனையையும் உங்கிட்டக் கொட்டிட்டேனா?” 
 
“அதென்ன எப்பப் பார்த்தாலும் எல்லாத்தையும் மனசுக்குள்ளேயே மறைச்சுக்கிறது? நாங்க மட்டுந்தான் உங்களைப் பிடிக்குதுன்னு சொல்லணுமா? ஏன்… நீங்க சொல்ல மாட்டீங்களா?”
 
“………………..” வருண் திகைத்துப்போய் நின்றிருந்தான்.
 
“என் அறிவுக் கொழுந்தே! எங்கேயாவது சண்டைப் போடுறவங்க பட்டுப்புடவைக் கட்டி தலைக்கு ஃப்ரெஷ்ஷா‌ பூ வெச்சுக்கிட்டு வருவாங்களா?” அவள் அவனைச் சீண்டச் சீண்ட அவன் உதட்டோரம் சிரிப்பில் துடித்தது. 
 
அவள் எதிர்பார்க்காத தருணத்தில் அவளைச் சட்டென்று எட்டிப் பிடித்தவன் அவளை இறுக அணைத்திருந்தான்.
 
“ஸ்… முரட்டு அத்தான்… வலிக்குது…” அவள் சிணுங்கினாள்.
 
“ராட்சசி! ராட்சசிடி நீ!” அவன் அவளை இன்னும் இறுக்கினான்.
 
“அத்தான் ப்ளீஸ்… வலிக்குது, விடுங்க.” அவள் கெஞ்சல் இப்போது வருணிடம் எடுபடவில்லை.
 
“என்னை ரெண்டு நாள் சுத்தல்ல விட்ட இல்லை… நல்லா வலிக்கட்டும், நல்லா வலிக்கட்டும்டி!” என்றவன் அவள் இதழ்களையும் முரட்டுத்தனமாக ஆக்கிரமித்திருந்தான்.
 
அவனை இனி தன்னால் கட்டுப்படுத்த முடியாது என்று தோன்றவே மயூரியும் கொஞ்ச நேரம் அவனை அனுமதித்தாள். அவள் முகத்தோடு முகம் மோதி நின்றான் வருண்.
 
“நாளைக்கும் கொஞ்சம் மிச்சம் வைங்க அத்தான்!” என்றாள் பெண் கிசுகிசுப்பாக.
 
“கவலைப்படாதே! ஸ்டாக் நிறையவே இருக்கு.” அவன் பதிலில் சிரித்தவள் அவன் கன்னத்தில் ஆசையாக முத்தம் வைத்தாள்.
 
“சத்தமாப் பேசாதீங்க அத்தான், என்னோட மாமியார் எந்திரிச்சிருவா?” மயூரியின் பேச்சில் வருண் ஆச்சரியப்பட்டான்.
 
“யாரைச் சொல்றே? எங்கம்மாவா?”
 
“ம்ஹூம்… இந்தா தூங்குதே, இதைச் சொன்னேன்.” கண்களால் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த அனுவை காட்டினாள் மயூரி.
 
வருண் குலுங்கிச் சிரித்தான்.
மனைவியின் முகத்தைத் தன்னை நோக்கி இழுத்தவன் அவள் கண்களைக் கூர்ந்து பார்த்தான்.
 
“உண்மையைச் சொல்லுடி…”
 
“என்னவாம்?”
 
“சரவணன் கிட்டப் பசங்களைப் பத்திச் சொன்னா அவன் எங்கிட்டச் சொல்லுவான்னு உனக்குத் தெரியும்தானே?” அவன் அவள் முகத்தைப் பற்றியிருந்த விதத்தில் அவளுக்கு வலித்தது. ஆனாலும் மர்மமாகப் புன்னகைத்தாள்.
 
“உண்மையைச் சொல்லலைன்னா உன்னைக் கொன்னுடுவேன்!” அவன் மிரட்டினான்.
 
 
“தெரியும்.” பற்கள் தெரியச் சிரித்தாள் பெண்.
 
“அப்போ… நான் இங்க வருவேன்னும் உனக்குத் தெரியும்!”
 
“தெரியும்.” அவள் சுலபமாக ஒப்புக் கொண்டாள். 
 
“அடிங்!” அதற்கு மேல் வருண் கொஞ்ச நேரம் அவளைப் பேச விடவில்லை. ஒரு கட்டத்தில் அவளே அவனைத் தள்ளி விட்டாள்.
 
“நான் ராட்சசியா? நீங்கதான் ராட்சசன்! எவ்வளவு காஸ்ட்லியான புடவை, அதைப் போய் கசக்கிக்கிட்டு!”
 
“இது இப்போ கசங்கட்டும், வேணும்னா நான் உனக்கு வேற, இதைவிட காஸ்ட்லியா வாங்கித் தர்றேன்.”
 
“ம்ஹூம்… காஸ்ட்லியா புடவை வாங்கிக்கலாம், ஆனா நான் இதைக் கட்டினப்போத்தானே அத்தான் எனக்குத் தாலி கட்டினாங்க.” அவள் மோகனப் புன்னகை அவனை மீண்டும் வசீகரித்தது. 
 
“இதுக்கு சரவணனும் கூட்டா? ரெண்டு பேரும் சேர்ந்துதான் சதி பண்ணினீங்களா?”
 
“இல்லை அத்தான், சரவணனுக்கு எதுவுமே தெரியாது.”
 
“ஏன்டா?” அவன் குரலில் இப்போது வலி தெரிய மயூரி அவனைக் கேள்வியாகப் பார்த்தாள்.
 
“என்ன அத்தான்?”
 
“கன்சீவ் ஆன உடனேயே இதைப் பண்ணி இருக்கலாம் இல்லை? உங்கிட்டத்தான் சரவணன் நம்பர் இருந்துதே? இல்லைன்னா எனக்கு ஒரு ஃபோனை போட்டிருக்கலாம் இல்லை!” அவன் குறைப்பட மயூரி அவனை முறைத்தாள்.
 
“உங்க கால்ல வந்து விழச் சொல்றீங்களா?”
 
“எங்கிட்ட என்னம்மா ஈகோ உனக்கு?”
 
“ஏன்? நீங்களுந்தான் என்னைத் தேடி வரலையே? அதுவும் ஈகோதானே?”
 
“சத்தியமா இல்லை குட்டி, அது ஈகோ இல்லை… உன்னோட குடும்பத்து மேல இருந்த கோபம், என்னை உதாசீனம் பண்ணிட்டாங்களேங்கிற வெறி.”
 
“……………..” அவள் சட்டென்று முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
 
“ஓகே ஓகே, அதுக்குள்ள முகத்தைத் திருப்பிக்கணுமா… தப்புத்தான், நான் உன்னைத் தேடி வராதது தப்புத்தான், சாரி… சாரிடா குட்டி… ரியலி ரியலி சாரி!” அவள் கைகள் இரண்டையும் பிடித்தபடி அவள் முன் மண்டியிட்டவன் அவளிடம் கெஞ்சினான்.
 
“ம்ஹூம்… உங்களுக்குக் கெஞ்ச வரலை அத்தான், விட்டுருங்க.”
 
“அப்போ அத்தானுக்கு எதுடி நல்லா வருது?”
 
“கொஞ்ச நல்லாவே வருது.” சொல்லிவிட்டு அவள் இப்போது விழுந்து விழுந்து சிரித்தாள்.
 
“ஏய், அனு எந்திரிக்கப் போறா.” அவன் மயூரியை எச்சரித்தான்.
 
“அவ உங்க சத்தத்துக்கு மட்டுந்தான் எந்திரிப்பா, என்னையெல்லாம் கண்டுக்கவே மாட்டா.” அவள் அசிரத்தையாகச் சொல்ல வருண் புன்னகைத்தான்.
 
“ரொம்பத்தான் உங்க பொண்ணைப் பத்திப் பெருமைப் பட்டுக்காதீங்க அத்தான், எனக்கு எம் பையன் இருக்கான்!” அவள் முறுக்கிக் கொள்ள அவளின் கரம் பிடித்து இழுத்தவன் அவளோடு தரையில் ஒன்றாகச் சரிந்தான்.
 
வானத்து நிலா இவர்களையே பார்த்திருந்தது. தரையில் இருவரும் அருகருகே கிடந்தபடி அந்த நிலாவைச் சிறிது நேரம் ரசித்திருந்தார்கள்.
 
“ஏன் அத்தான்?”
 
“ம்…” 
 
“உங்களுக்கு அவ்வளவு வயசாகிடுச்சா?”
 
“டௌட்டா இருந்தாச் சொல்லு, இப்பவே டெஸ்ட் பண்ணிப் பார்த்திடலாம்.” மயூரி இப்போது வருணை முறைத்தாள்.
 
“நீயா எதையாவது கேட்கிறே, அதுக்கு நான் பதில் சொன்னா முறைக்கிறே!”
 
“இல்லை… மண்டியிட்டு என்னால லவ்வெல்லாம் சொல்ல முடியாது, நான் அந்த வயசைக் கடந்துட்டேன்னு சொன்னீங்களே, அதான் கேட்டேன்.” இப்போது வருண் அவள் புறமாகத் திரும்பிப் படுத்தான்.
 
முழங்கையை நிலத்தில் ஊன்றி உள்ளங்கையில் முகத்தை வைத்தவன் அவளைப் பார்த்துச் சிரித்தான். 
 
“என்ன வேணும் இப்போ உனக்கு?” 
 
“பெருசா ஒன்னுமில்லை…”
 
“ம்…”
 
“அத்தான் எங்கிட்ட அவங்க லவ்வை சொன்னா… எப்பிடி இருக்கும்னு தோணிச்சு…” புடவைக் கரையை நீவி விட்டபடி சொன்னாள் மயூரி.
 
“என்ன சொல்லணும்?” அவன் முகம் முழுவதும் புன்னகையே நிறைந்திருந்தது.
 
“இந்த… சினிமாவுல எல்லாம் சொல்லுவாங்களே…”
 
“என்னடி சொல்லுவாங்க?” அவன் இப்போது உண்மையாகவே சிரித்தான். 
 
“என்னல்லாமோ சொல்லுவாங்க…” குழந்தைத்தனமான அவள் பேச்சிலும் செயலிலும் வருணுக்கு காதல் பொங்கியது. 
 
அவளுக்கு இரு புறமாகவும் கைகளை ஊன்றி அவளருகே வந்தான். அந்தக் கண்களை சில நொடிகள் இமைக்காமல் பார்த்தான். மயூரிக்கு முதுகுத்தண்டு சிலிர்த்தது!
 
“ஐ லவ் யூ டி ராட்சசி! லவ் யூ… லவ் யூ ஸோ மச்! லவ் யூ டி! இது நடந்திடக் கூடாதுன்னுதான் நான் அன்னைக்குப் பயந்தேன், உன்னை விட்டு ஒதுங்கினேன்! ஆனா அதையே என் வாயால சொல்ல வெச்சுட்டே.” 
மயூரி எதுவும் பேசாமல் இப்போது அவனையே பார்த்திருந்தாள். உதட்டில் புன்னகை உறைந்திருந்தது.
 
“நீ சொல்ல மாட்டியா?” அவன் கேட்ட அடுத்த நொடி அவன் கழுத்தை வளைத்து அவனை நிலத்தில் தள்ளினாள் மயூரி. 
 
என்ன தோன்றியதோ… அவன் மார்பில் முகம் புதைத்து சில நொடிகள் கண்ணீர் விட்டாள். வருணும் அவள் உள்ளத்து உணர்வுகளைப் புரிந்து கொண்டவன் போல கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தான்.
 
அவள் தலை, முதுகு என்று தடவிக் கொடுத்தான். நிலவும் இரவும் நகர்ந்து கொண்டிருந்தது. உறவு மட்டும் ஏன் அதே இடத்திலேயே நிற்க வேண்டும் என்று வருண் நினைத்திருப்பான் போலும்.
 
“ஒரே ஒரு நாள்தானா எனக்கு ப்ரதாயினி?”
 
“இல்லையே… இன்னும் நாலு நாள் இருந்துதே அத்தான்… நீங்கதான்…” அவள் பேச்சை முழுதாக முடிக்கவில்லை.
 
“ஓ… அப்போ நாந்தான் தப்புப் பண்ணிட்டேனா?”
 
“…………….”
 
“அப்போப் பண்ணின தப்பை இப்போ கரெக்ட் பண்ணிக்கலாமா?”
 
“இது நியாயமில்லை அத்தான்.” என்றாள் அவள் சட்டென்று.
 
“எதுடா?” 
 
“ஒவ்வொரு முறையும் எல்லாத்தையும் நாந்தான் ஆரம்பிச்சு வெக்கணுமா?” சில நொடிகள் அங்கே நிசப்தம் நிலவியது. தாமதம் செய்வது நீதான் என்பது போல இருந்தது அவள் பேச்சு.
 
இன்றைக்கு ஆரம்ப எழுத்தும் அவனே! வார்த்தையும் அவனே! வாக்கியமும் அவனே! 
கடைசியில் கவிதையானது அவர்கள் இல்லறம்!
 
***
 
அடுத்த நாள் அந்த வீட்டில் பொழுது கலகலப்பாகப் புலர்ந்தது. நேற்றைய விசேஷத்தின் மீதங்கள் அனைவரது உள்ளத்தையும் இன்னும் மகிழ்வித்துக் கொண்டிருந்தது.
 
வருண் சுகமான உறக்கத்தில் இருந்தான். தலையணையை இறுகக் கட்டிக்கொண்டு கட்டாந்தரையில் உறங்கிக் கொண்டிருந்தான். 
 
முகத்தில் இனம்புரியாத திருப்தி ஒன்று தெரிந்தது. ஆழ்ந்த மூச்சுக்களோடு நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தவனை குழந்தைகள் இரண்டும் ஓடி வந்து கலைத்தார்கள்.
 
ஆர்யன் ஓரளவிற்கு இப்போதெல்லாம் தன் அப்பாவை நெருங்குகிறான். ஆனால் எப்போதும் போல இப்போதும் அந்தப் பொடுசு தன் தந்தையின் முதுகில் ஏறி உட்கார்ந்து கொண்டது.
 
சட்டென்று விழித்த வருண் குழந்தைகளை அணைத்துக் கொண்டான். குழந்தைகளைத் தொடர்ந்தாற் போல மயூரியும் கையில் டீயோடு ரூமிற்குள் வந்தாள்.
 
தலைக்குக் குளித்துப் புடவைக் கட்டி இருந்தாள். பார்க்க அவ்வளவு அழகாக இருந்தது. விஷாகா வீட்டில் புடவை உடுத்த மாட்டார்.
 
ஆனால் ராகினி எப்போதும் புடவைதான். அதைக் கவனித்திருந்த மயூரி இன்றைக்குத் தானும் வீட்டில் புடவைக் கட்டிக் கொண்டாள்.
 
அத்தோடு… அவள் அத்தானுக்கு அவள் புடவைக் கட்டுவது ரொம்பவும் பிடிக்கின்றது என்பது அனுபவ வாயிலாக அவள் அறிந்த உண்மை.
 
கையிலிருந்த டீயை அவள் அவனிடம் நீட்ட படுத்துக் கிடந்தபடியே அதை வாங்கினான் வருண். முகம் பார்க்க மறுத்த மனைவியை அவன் கண்கள் விழுங்குவது போலப் பார்த்தன.
 
“பசங்க தட்டி விட்டுடுவாங்க அத்தான்.” சுவரைப் பார்த்தபடி சொல்லிவிட்டு அப்பால் போகும் மனைவியையே பார்த்திருந்தான் வருண்.
 
அந்த இரண்டு நாள் உறவில் கணவனை அவள் முழுதாக இன்னும் அறிந்து கொள்ளவில்லை. அவன் தேவைகளை… சிந்தனைகளை என்று எதையும் அவளால் முழுமையாக அனுமானிக்க முடியாது. 
 
இன்றைக்கும் தலையிரவு முடிந்த புதுப்பெண் போல அவனைப் பார்த்து வெட்கப்படுகிறாள். முகம் பார்க்க மறுக்கிறாள். ஆனால்… அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்!
 
இந்த விந்தையை என்னவென்று சொல்வது?! இரவெல்லாம் அவன் ஆட்டிவைத்த படி ஆடியிருந்தாள் மயூரி. ஒரு கட்டத்தில்,
 
“அத்தான்… இன்னையோட இரவு வர்றது முடிஞ்சு போகப் போகுதுன்னு யாராவது உங்கக்கிட்டச் சொன்னாங்களா என்ன?” என்று கேலி போல கேட்டாள் பெண்.
களைத்துப் போன பெண்ணின் கஷ்டம் அப்போதுதான் கணவனுக்குப் புரிந்தது.
 
“இதுக்குத்தான் வறட்டுப் பிடிவாதம் பிடிக்கக் கூடாதுன்னு சொல்லுறது அத்தான், தானும் கஷ்டப்பட்டு, மத்தவங்களையும் கஷ்டப்படுத்துறது.” என்றிருந்தாள். 
 
குழந்தைகள் கொஞ்ச நேரம் அப்பாவோடு விளையாடி விட்டு வெளியே போய்விட்டார்கள். தரையிலிருந்து எழுந்து வந்த வருண் மனைவியை அணைத்துக் கொண்டான்.
 
“இப்பிடிப் புடவைக் கட்டிக்கிட்டு வந்து நின்னா அத்தானுக்கு டெய்லி விருந்து கேட்கும், பரவாயில்லையா?” 
 
“உங்கம்மா கட்டி இருந்தாங்க அத்தான், எனக்கு அது புடிச்சிருந்தது.” இப்போதும் தன் முகத்தைப் பார்க்காமலேயே பதில் சொன்ன மனைவியை விசித்திரமாகப் பார்த்தான் வருண்.
 
“அதை என்னைப் பார்த்துச் சொல்ல மாட்டீங்களா?” மயூரியின் முகத்தைத் தன் புறமாக வருண் திருப்ப அவன் கையைத் தட்டி விட்டவள் அவன் மார்புக்குள் முகம் புதைத்துக் கொண்டாள்.
 
“ஹா… ஹா…” வருணின் அட்டகாசமான சிரிப்புச் சத்தம் அந்த வீட்டையே நிறைத்தது.
 
“குட்டி… நம்ம ரெண்டு பேருக்கும் ஒரு வயசுல ரெண்டு குழந்தைங்க இருக்காங்க.” என்றான் குறும்பாக.
 
“ஆனா… ரெண்டே ரெண்டு நாள்தான்…” மயூரி மேலே பேசவில்லை. 
 
“ரெண்டு நாள்…” வருண் ஏதோ பேச ஆரம்பிக்கும் போதே அவன் ஃபோன் சிணுங்கியது. காலை வேளையில் யார் அவனை அழைப்பது?!
 
மனைவியை விட்டு விலகிப் போய் ஃபோனை எடுத்துப் பார்த்தான். கேப்டன் அழைத்துக் கொண்டிருந்தான்.
 
“ஹலோ கேப்டன்.” வருண் பேச்சை ஆரம்பிக்க மயூரி வேலையில் கவனமானாள். இனி இரண்டு பேரும் உருண்டு புரண்டு சிரிப்பார்கள்.
 
வெட்கமே இல்லாமல் இந்த அத்தானும் நடந்தவை எல்லாவற்றையும் சொல்வார். அந்த மனிதனும் அதை வெட்கமே இல்லாமல் கேட்டுக் கொள்வார்!
 
சிந்தனை செய்தபடியே வேலையைக் கவனித்தவள் வருணின் குரல் வித்தியாசமாக இருக்கவும் திரும்பிப் பார்த்தாள். முகம் இறுகிப் போயிருந்தது. பேசி முடித்தவன் ஃபோனை கட்டிலில் எறிந்துவிட்டு பாத்ரூமிற்குள் போனான்.
 
மயூரி திகைத்துப் போனாள். அழைத்தது கேப்டன்தானே? அப்படியிருக்க அத்தானுக்கு எதற்காக இவ்வளவு கோபம் வருகின்றதென்று அவளுக்குப் புரியவில்லை.
 
வருண் பாத்ரூமிலிருந்து வரும் வரை பொறுமையற்றுக் காத்திருந்தாள் மயூரி. வருண் வெளியே வந்த போது முகம் பொலிவிழந்து கிடந்தது.
 
“என்னாச்சு அத்தான்?” அவன் பதில் சொல்லாமல் கட்டிலில் போய் அமர்ந்து கொண்டான்.
 
“என்னாச்சு அத்தான்? ஏன் திடீர்னு டல்லாகிட்டீங்க?”
 
“எனக்கு எல்லாமே ஒரு நாள்னுதான் விதிச்சிருக்கா?” அவன் சம்பந்தமே இல்லாமல் அவள் மேல் கோபப்பட மயூரி திகைத்தாள்.
 
“என்னாச்சு?”
 
“ஒன்னுமில்லை… வெளியே போ!” மீண்டும் இப்போது சீறினான் வருண். மயூரிக்கு எதுவுமே புரியவில்லை.
 
“அத்தான்…” அவள் பரிவோடு அழைக்க சட்டென்று அவளை அருகமர்த்தி மடியில் படுத்துக்கொண்டு வெற்றிடையில் முகம் புதைத்தான் வருண். 
 
அவனுக்கு ஏதோ ஒரு சங்கடம் என்று புரிந்து கொண்ட பெண் சற்று நேரம் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள். தலையை வருடிக் கொடுத்தாள்.
 
“போலன்ட் ல இருந்து வர்ற வெசல்லதான் கேப்டன் இப்போ இருக்காரு… கூட வந்த சீஃப் ஆஃபிசருக்கு ஏதோவொரு ஃபேமிலி ப்ராப்ளம் போல…”
 
“ஓ…”
 
“அடுத்த போர்ட் சௌத்தாம்ப்டன்தான், அங்க அவர் இறங்கிடுவாரு… கேப்டன் பர்மிஷன் குடுத்திருக்காரு.”
 
“ம்…”
 
“என்னை அங்க கேப்டன் ஜாயின் பண்ணச் சொல்றாரு.”
 
“எப்போ?”
 
“என்னை எதுவுமே கேட்காம அவர் பாட்டுக்கு எல்லாம் பண்ணி இருக்காரு, இன்னைக்கு நைட் ஃப்ளைட் வேற புக் பண்ணி இருக்காரு.” வருண் இப்போது இரைந்தான். மயூரி புன்னகைத்தாள்.
 
இது கப்பலில் அடிக்கடி நடப்பதுதான். பல நாட்கள் கப்பலில் பிரயாணம் செய்யும் ஊழியர்களும் சாதாரண மனிதர்கள்தானே! அவர்களுக்கும் குடும்பம், சிக்கல் என்று பலதும் இருக்குமல்லவா?
 
அப்படியான சந்தர்ப்பங்களில் கேப்டனின் அனுமதி கிடைக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட ஊழியர் கப்பலுக்கு அண்மையில் இருக்கும் அடுத்த துறைமுகத்தில் இறங்கிக் கொள்ளலாம்.
 
அவரது இடத்தை இட்டு நிரப்ப இன்னுமொரு ஊழியர் அதே துறைமுகத்தில் ஏறிக்கொள்வார்.
 
வருணிடம் இதுவரை எதற்கும் கேப்டன் அனுமதி கேட்டதில்லை.
ஏன்… இதே போல தனக்கொரு தேவை வந்தபோது வருண் கூட கேப்டனிடம் அனுமதி கேட்கவில்லையே! எல்லாவற்றையும் ப்ளான் பண்ணிவிட்டு இதை இதை இப்படிப் பண்ணிக்கொடு என்றுதானே கேட்டான்! இன்று குடும்பஸ்தனாக மாறிப்போன வருணுக்கு எல்லாம் மறந்து போயிருந்தது.
 
மயூரி உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாள். இதற்குத்தான் இத்தனை ஆர்ப்பாட்டமா? ஆனால் அதை வெளியே சொல்லவில்லைப் பெண்.
 
“எத்தனை நாள் அத்தான்?” என்றாள் அமைதியாக.
 
“ஹூஸ்டன் போகணும், ரெண்டு வாரம் எடுக்கும் எல்லாம் முடிய.”
 
“ஓ…” இரண்டு வாரம்தானா?!
 
“என்னால போக முடியாதுடி.” அவள் இடையைக் கட்டிக்கொண்டு சின்னக் குழந்தைப் போல அடம் பிடித்தான் வருண். மயூரி எதுவுமே பேசவில்லை.
 
“ஏதாவது பேசேன்.” அவளை அண்ணார்ந்து பார்த்தான் வருண்.
 
“ரெண்டு வாரந்தானே அத்தான், போய்ட்டு சீக்கிரமா வந்திடுங்க.”
 
“நினைச்சேன், நீ இப்பிடித்தான் சொல்வேன்னு நான் சத்தியமா நினைச்சேன், உனக்கு என்னை விட்டு ஓடிப்போறதுதான் அவ்வளவு புடிக்குமே.” நியாயமே இல்லாமல் அவள் மேல் குற்றம் சாட்டினான் வருண். 
 
மயூரி பொறுமையாக அவன் தலையை வருடிக் கொடுத்தாள். அவள் கையைச் சட்டென்று தட்டி விட்டவன் கோபமாக எழுந்து வெளியே போய்விட்டான்.
 
மயூரிக்கு இப்போது கவலையாக இருந்தது. பாவம், எத்தனை ஆசையாக நேற்றைய இரவைக் கழித்தான். இன்றைக்கு கிளம்பிப் போ என்று சொன்னால் அவனுக்கு வருத்தமாகத்தானே இருக்கும். 
 
அதுவும் குழந்தைகள் இரண்டும் அவனோடு இப்போது நன்றாக ஐக்கியமாகிப் போனார்கள். அவர்களும் இவனைப் பார்க்காமல் கஷ்டப்படுவார்கள்.
 
ஏதேதோ சிந்தித்தபடி மயூரி கீழே இறங்கிப் போனாள். வருண் தன் தாயிடமும் ஏதோ சத்தம் போடுவது கேட்டது.
 
“இதென்ன பிள்ளை இவன் புதுசா இந்த நாட்டியம் ஆடுறான்?!” மருமகளின் தலையைக் கண்டதும் ஆரம்பித்தார் ராகினி.
 
“இது வழமையா நடக்கிற விஷயந்தானே! என்னமோ நாங்க இவரை இவர்ற பிள்ளைக் குட்டிக்கிட்ட இருந்து பிரிச்ச மாதிரியல்லோ இவர் ஸீனை போடுறார்!” மாமியாரின் புலம்பலில் மயூரி புன்னகைத்தாள்.
 
“சின்னதுங்களை விட்டுட்டுப் போறதுன்னா வருணுக்கு கஷ்டமாத்தானே அக்கா இருக்கும்?” விஷாகாவும் மருமகனுக்குப் பரிந்து கொண்டு வந்தார். 
 
ராகினி இப்போது புன்னகைத்துக் கொண்டார். இந்தத் தொழிலை தன் மகன் எவ்வளவு தூரம் காதலித்தான் என்பதை அவர் நன்கு அறிவார். 
இன்றைக்கு அவனுக்கு அந்தத் தொழிலே கசக்கிறதா?!
 
அத்தனைக்கா அவன் குடும்பம் அவனை ஈர்த்திருக்கிறது?!
 
“எத்தனை நாள் இந்த அம்மாவைத் தனியா விட்டுட்டு கப்பல் கப்பல் என்டு ஓடியிருப்பான் தெரியுமே விஷாகா?” ராகினி இப்போது வேண்டுமென்றே மகனைச் சீண்டினார். 
 
“அப்பவெல்லாம் இவருக்கு இந்த அம்மா தெரியேயில்லை, இப்பப் பார்த்தியோ கூத்தை?” ராகினியின் பேச்சில் விஷாகா சிரித்தார். மயூரிக்கும் என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
 
இரவு எட்டு மணிக்கு ஃப்ளைட். மாலை நான்கு மணிக்கே வீட்டிலிருந்து கிளம்பி விட்டது அந்த ப்ளாக் ஆடி. மயூரியும் குழந்தைகளும் மாத்திரமே காரில் இருந்தார்கள். வருண் காரை ஓட்டிக் கொண்டிருந்தான்.
 
அன்றைக்கு முழுவதும் யாரோடும் அவன் சரியாகப் பேசவில்லை. முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு அத்தனை வேலைகளையும் கவனித்தான். 
 
மயூரியும் இரண்டு மூன்று முறை அவனைச் சமாதானம் செய்ய முயற்சித்தாள். அவன் அசைந்து கொடுக்கவில்லை. அமைதியாகி விட்டாள்.
 
அவளுக்குமே அத்தனைக் கவலையாக இருந்தது. ஆனால் என்ன செய்ய முடியும்?
ஏர்போர்ட் கார் பார்க்கிங்கில் காரை நிறுத்திவிட்டு நால்வரும் உள்ளே வந்தார்கள். சம்பிரதாயங்கள் அனைத்தையும் முடித்து விட்டு அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்திருந்தார்கள்.
 
“பசங்களுக்குக் கூடிய சீக்கிரமே பாஸ்போர்ட் எடுக்கணும்னு நினைச்சிருந்தேன், அடுத்த ட்ரிப் போகும் போது எல்லாரும் சேர்ந்து ஒன்னாப் போகணும்னுதான் முடிவெடுத்தேன்… அதுக்குள்ள இப்பிடி…” வருணுக்கு தொண்டை அடைத்தது. 
 
“அத்தான்…”
 
“எனக்குக் கஷ்டமா இருக்கு குட்டி… முடியலைடி…” பேசிய படியே சட்டென்று கண் கலங்கிய வருணை பார்த்து மயூரி திடுக்கிட்டுப் போனாள்.
 
“அத்தான்! என்ன இது?! எல்லாரும் பார்க்கிறாங்க!”
 
“யாரு பார்த்தா எனக்கென்ன? என்னோட கஷ்டம் எனக்குத்தான் தெரியும்.” கண்களைத் துடைத்துக் கொண்டான் வருண்.
 
“உங்களையெல்லாம் விட்டுட்டு நான் எப்பிடி இருப்பேன்!” வருத்தப்பட்டவன் குழந்தைகளை முத்தமிட்டான். 
 
உள்ளே போவதற்குரிய நேரம் நெருங்கவும் குழந்தைகள் வருணுக்கு அழகாக கையசைத்து பிரியாவிடை வழங்கினார்கள்.
 
ஏதோ தாங்கள் நர்சரிக்கு போகும் எண்ணம் அவர்களுக்கு. நிச்சயமாக குழந்தைகள் அவன் பிரிவைத் தாங்கிக் கொள்ள மாட்டார்கள். அது மயூரிக்கு உறுதி!
 
குழந்தைகளை இன்னுமொரு முறை முத்தமிட்டவன் மனைவியை அணைத்து அவள் இதழிலும் லேசாக முத்தமிட்டான். மயூரிக்கு இப்போது கண்கள் கலங்கிப் போனது. 
 
அவன் இடையை அணைத்துக் கொண்டாள். வருண் தன் இரு கைகளாலும் முகத்தை மூடிக்கொண்டான். அவன் உடல் அழுகையில் குலுங்குவதை அவளால் உணர முடிந்தது.
 
“அத்தான்! என்ன இது?!” 
அதன் பிறகு வருண் தாமதிக்கவில்லை. சட்டென்று அவர்களை விட்டு விலகிப் போய்விட்டான். திரும்பியும் பார்க்கவில்லை.
 
மயூரிக்கும் அவன் வேதனைப் புரிந்தது. அங்கேயே தாங்கள் இன்னும் நின்றால் அவன் வேதனைப் படுவான் என்று புரிய சட்டென்று குழந்தைகளைப் அழைத்துக்கொண்டு காரிற்கு வந்து விட்டாள். 
 
அந்த ப்ளாக் ஆடி வீடு நோக்கிப் புறப்பட்டது!
 
 
 

Leave a Reply

error: Content is protected !!