அழகியே 8

அழகியே 8

அழகு 08
 
எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் தன் முன்னே பரந்து விரிந்து கிடந்த நீலக்கடலைப் பார்த்த போது மயூரி திடுக்கிட்டுப் போனாள்.
 
‘நான் எங்கே இருக்கிறேன்? பார்க்கும் இடமெல்லாம் கடலே தெரிகின்றதென்றால்… நான் இருப்பது நடுக்கடலிலா?!’ மனதில் தோன்றிய கேள்வியின் பதில் வியப்பாக இருக்கவே அந்த அறையில் தன்னோடு இருந்தவனைத் திரும்பிப் பார்த்தாள் பெண்.
 
எந்த உணர்ச்சியையும் முகத்தில் காட்டாது பாறை போல் நின்றிருந்தான் வருண். அவனைக் கேள்வியாக சில நொடிகள் பார்த்திருந்தாள் பெண்.
 
அவனிடமிருந்து எந்த பதிலும் வராமல் போகவே அந்த ஜன்னலருகில் போய் பார்த்தாள்.
 
இவர்கள் இருந்த அறையிலிருந்து அந்த ராட்சத கப்பலின் தோற்றத்தைப் பெருமட்டுக்குப் பார்க்க முடிந்தது. 
 
பெரிய பெரிய எண்ணிலடங்கா கொள்கலன்கள் அந்தக் கப்பலை நிரப்பி இருந்தன. அசைவதே தெரியாது தனது இலக்கை நோக்கி ஓடிக்கொண்டிருந்தது அந்த ராட்சத இரும்பு உருவம்.
 
கொஞ்ச நேரம் கப்பலையும் ஆங்காங்கே தளங்களில் நடமாடிக் கொண்டிருந்த ஊழியர்களையும் பார்த்தபடி நின்றிருந்தாள் மயூரி.
 
மனதுக்குள் எண்ணற்ற கேள்விகள் முட்டி மோதின. அவை அனைத்துக்கும் பதில் சொல்லத் தெரிந்த ஒருவனை நோக்கித் திரும்பினாள் மயூரி.
 
இரண்டு நாளும் ஒரு வரி விடாமல் அவள் படித்து முடித்திருந்த நாளிதழை அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தபடி இப்போது அவன் புரட்டிக் கொண்டிருந்தான்.
 
மயூரிக்கு தன் மனதை நினைத்தே இப்போது பெரு விந்தையாக இருந்தது. இத்தனை நேரமும் மனதுக்குள் கனத்துக் கொண்டிருந்த பாரமொன்று அவனைப் பார்த்த மாத்திரத்தில் துகள் துகளாக சிதறிப் போனது!
 
‘அம்மா தன்னைக் காணாமல் தவித்துப் போவார்களே’ என்ற எண்ணத்தைத் தவிர, தனக்கு எந்தக் கஷ்டமும் இனி இருக்காது என்று நினைத்துக் கொண்டாள்.
 
மாற்றாத ஆடை கூட இப்போது மறந்தே போனது. இரண்டு நாட்களாக குளிக்கவில்லை என்பது ஒரு குறையாகவே தெரியவில்லை.
 
மனதுக்கும் ஒருவித மத்தாப்பு பறக்க லேசாக குரலைச் செருமினாள். இதுவரை அவனோடு ஒற்றை வார்த்தைப் பேசியதில்லையே அவள்!
 
“ம்க்கும்…” அவள் செருமலில் அவன் சட்டென்று நிமிர்ந்து பார்த்தான்.
 
“அம்மா… அம்மா தேடுவாங்க…” இது என்ன, இப்படித் தடுமாறுகிறது பெண்?! அவன் பதிலேதும் சொல்லவில்லை. மேகஸினை புரட்டியபடி இருந்தான்.
 
“அம்மா பாவம், அவங்க இதைத் தாங்க மாட்டாங்க, நீங்க யாரையோ தண்டிக்கிறதா நினைச்சு…” அவள் கோர்வையாக சொல்லி முடித்த போது மீண்டும் அவளை விழி உயர்த்திப் பார்த்தான்.
 
“உங்கம்மாக்கு எதை, எப்போ சொல்லணும்னு எனக்குத் தெரியும்.” ஆழ்ந்த குரலில் அவன் அழுத்தமாகச் சொன்ன போது மயூரிக்கு லேசாக கோபம் வந்தது.
 
“என்ன தெரியும் உங்களுக்கு? இல்லை என்ன தெரியும்னு கேட்குறேன்?” அவள் கோபத்தில் அவன் கண்கள் இடுங்கின.
 
“ஒரு பொண்ணைக் கொண்டு வந்து அடைச்சு வச்சிருக்கோமே… அவளுக்கு என்னெல்லாம் தேவை இருக்கும்னு கொஞ்சமாவது தெரியுமா உங்களுக்கு?”
 
“ஏன்… நீங்க பிக்னிக் வந்திருக்கீங்களோ?” அவன் கேலியில் அவள் கோபம் இன்னும் அதிகமானது.
 
“ரெண்டு நாளா நான் குளிக்கலைத் தெரியுமா?” 
 
“ஓ…” அவன் இழுத்த ராகம் அவளுக்கு அத்தனை நல்லதாக தோன்றவில்லை.
 
“முன்னப்பின்ன பொண்ணுங்களைத் தூக்கிப் பழக்கமில்லையா… அடுத்த வாட்டி உன்னைத் தூக்கும் போது பக்காவா எல்லாத்தையும் ரெடி பண்ணி வெக்கிறேன்.”
 
“என்ன… கிண்டலா?” அவள் ஒரு தினுசாக கேட்க லேசாக முறைத்து விட்டு மீண்டும் அந்த மேகஸினை புரட்ட ஆரம்பித்தான் வருண்.
 
“எனக்கு… எனக்கு ஒரு கப் டீ வேணும்.” எப்படிச் சொல்வது என்று தெரியாமல் தவித்தவள் சொல்லியே விட்டாள். இப்போது மட்டும் அவன் கண்கள் அவளைச் சாதாரணமாக பார்த்தது.
 
“இல்லை… எனக்கு மார்னிங் டீ குடிக்கலைன்னா தலைவலிக்கும், ரெண்டு நாளாச்சு… பாரசிடமோல் இருந்தா…”
சட்டென்று மேகஸினை தூக்கி அங்கிருந்த கட்டிலில் போட்டவன் எழுந்து கதவைத் திறந்து கொண்டு வெளியே போய்விட்டான். மயூரி போகும் அவனையே பார்த்திருந்தாள். 
 
“அடேங்கப்பா! துரை ரொம்பப் பேச மாட்டோரோ?! என்னமோ இவர் பேசுற ஒவ்வொரு வார்த்தைக்கும் நாங்க பவுன்ட்ஸ் கேட்ட மாதிரியில்லை எண்ணி எண்ணிப் பேசுறாரு!” அவன் அங்கே இல்லாத தைரியத்தில் சற்று உரக்கவே புலம்பினாள் பெண்.
 
“அதுசரி… இந்த ஷிப் ல ஐயா என்னப் பண்ணுறாரு? பொது அறிவை வளர்த்துக்கணும்னு இதுக்குத்தான் சொல்லுறாங்க போல! அவனவன் கப்பல்லை நம்மைத் தூக்கிப் போடுவான்னு நாம என்ன கனவா கண்டோம்!” 
 
கப்பலில் வேலை செய்பவர்கள்
அணிந்திருக்கும் ‘எப்பொலெட்’ டின் நிறத்தை வைத்து அவர்கள் எந்தப் பிரிவு என்பதை அறிந்து கொள்ளலாம் என்பது வரை மயூரிக்கு தெரியும்.
 
“ஆஹா! இப்பப் பார்த்து ஃபோன் கைல இல்லையே! இல்லைன்னா சாரோட ஜாதகத்தையே ஆராய்ஞ்சுடலாமே!” அவள் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கும் போதே கதவு திறந்தது. 
 
கையில் ஆவி பறக்கும் டீயோடு வந்தவன் அதை அங்கிருந்த சிறிய மேசை மேல் வைத்தான். மயூரி காணாததைக் கண்டது போல அந்த டீயை கைப்பற்றிப் பருக ஆரம்பித்தாள்.
 
அவளை விசித்திரமாக ஒரு பார்வைப் பார்த்தவன் சற்று முன் கப்போர்டில் அவன் வைத்த சூட்கேஸை எடுத்து அதிலிருந்து ஒரு மாத்திரைப் பட்டையை நீட்டினான்.
 
“தேன்க் யூ.” நன்றி கலந்த புன்னகையோடு அதை வாங்கியவள் மடமடவென இரண்டு மாத்திரைகளைப் பிரித்து வாயில் போட்டுக்கொண்டு டீயை தொடர்ந்து குடித்தாள்.
 
வயிற்றுக்குள் சூடான பானம் சென்றவுடன் இயற்கை அவளை இயல்பாகவே அழைத்தது. பாத்ரூம் சின்க் கில் கப்பை கழுவி வைத்தவள் மீண்டும் பாத்ரூமிற்குள் புகுந்து கொண்டாள்.
 
அவள் தலை மறைந்தவுடன் ஒரு புன்னகையோடு எழுந்த வருண் அவன் ஆடைகளை அங்கிருந்த கப்போர்டில் ஒழுங்கு படுத்தினான். 
 
‘பெண்’ என்று தான் இதுவரை அறிந்தது அம்மா மாத்திரம்தான். முதல்முறையாக ஒரு பெண்ணோடு தனித்திருக்கிறான், அதுவும் ஒரே அறையில்! 
 
கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது. ஆனாலும் என்ன செய்வது? காரியம் ஆகவேண்டும் என்றால் இதையெல்லாம் பார்க்க முடியுமா?!
 
‘காரியம்’ என்ற வார்த்தை ஞாபகம் வந்த போது அவன் தாடை இறுகியது! என்ன மாதிரியான மனிதர்கள்! அவர்களுக்கு வலியின் உச்சத்தைக் காட்ட வேண்டும் என்ற வெறி தோன்றியது.
 
சட்டென்று விஷாகாவின் முகம் மனக்கண்ணில் தோன்ற தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான் வருண். அந்த மட்டில் இந்தப் பெண் பிழைத்தாள்.
 
தன் ஆடைகளைப் பார்த்த போது அவளுக்கு உடுத்த மாற்றுடை எதுவுமே இல்லையே என்ற எண்ணம் தோன்றியது.
 
அவனுக்கு அது சுத்தமாகத் தோன்றவில்லை. தோன்றி இருந்தாலும் அவனால் என்ன செய்திருக்க முடியும்? பெண்களின் உடை பற்றி அவனுக்கு ஒன்றும் தெரியாதே!
 
வயிறு வாடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று ஞாபகம் இருந்ததே ஒழிய அவனுக்கு வேறு எதுவும் நினைவிருக்கவில்லை.
 
அவன் வேலை முடியும் தறுவாயில் அவள் பாத்ரூமை விட்டு வெளியே வந்தாள். இவன் திரும்பிப் பார்த்த போது கைகள் இரண்டையும் இடுப்பில் வைத்துக்கொண்டு,
 
“ஷப்பா…” என்று ஒரு பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தாள். அவள் உடல் அசௌகரியம் தீர்ந்த ஆறுதலில் இருந்ததால் இவன் சிரித்ததை அவள் கவனித்திருக்கவில்லை.
 
“எனக்குக் குளிக்கணும்.” என்றாள்.
 
“குளி.”
 
“ட்ரெஸ்?”
 
“இதுதான் இப்போதைக்கு இருக்கு.” அவன் கப்போர்டை சுட்டிக் காட்டினான். அங்கே அவன் ஆடைகள் மாத்திரமே இருந்தது.
 
“என்ன விளையாடுறீங்களா?”
 
“இங்கப்பாரு… ஆமா, உம் பெயர் என்ன?” அவன் கேள்வியில் அவள் விக்கித்துப் போனாள்.
 
“என்ன?!”
 
“உங்கம்மா ஏதோ சொல்லிக் கூப்பிட்டாங்களே…”
 
“ஏதோ சொல்லிக் கூப்பிட்டாங்களா?!”
 
“எனக்கு அந்தப் பெயர் புடிக்கலை, அதால மறந்து போச்சு, எனக்குத் தோணும் போது உனக்கு வேற நல்ல பெயரா வெச்சுக் கூப்பிடுறேன்.”
 
“………………” மயூரிக்கு பேச்சென்ற ஒன்றே மறந்து போனது!
 
“இங்கப்பாரு பொண்ணே… எனக்கு, உனக்கு டரெஸ் வாங்கணும்னு தோணலை, தோணியிருந்தாலும் என்னால அதெல்லாம் வாங்க முடியாது, உனக்கு என்ன வாங்கணும்னு கூட எனக்குத் தெரியாது.”
 
“ஆனா காருக்குள்ள ஸ்ப்ரே அடிச்சுத் தூக்க மட்டும் தெரியும், ஏன்… உங்கம்மாக்கு ஒரு ஃபோனை போட்டுக் கேட்டிருக்கலாமே!” 
இப்போது அவன் முகம் ரௌத்திரத்தை முழுதாக தத்தெடுத்திருந்தது. மயூரி கூட அவன் முகபாவம் பார்த்துப் பயந்து போனாள்.
 
“உனக்கு ஒன்னு மட்டும் சொல்றேன் நல்லா ஞாபகம் வச்சுக்கோ, எங்கம்மாவைப் பத்தி ஏதாவது தப்பா உன்னோட வாயிலிருந்து வந்திச்சு… உங்கழுத்தை நெரிச்சு இந்தக் கடல்ல போட்டுட்டு அப்பிடியே போய்கிட்டே இருப்பேன்!”வார்த்தைகளைக் கடித்துத் துப்பினான் வருண். பேச்சில் அனல் தெறித்தது.
 
“என்ன? உங்க குடும்பமே பிரிச்சு மேயத்தான் எங்கம்மாவைப் பெத்து வளர்த்தாங்களா?” அவன் பேசி முடித்த போதுதான் மயூரிக்கு அவன் கோபத்தின் காரணம் புரிந்தது.
 
“இல்லை… நான் அந்த அர்த்தத்துல சொல்லலை, நீங்க தப்பா புரிஞ்சு…” அவள் பதிலைக் கேட்க அவன் அங்கே இல்லை. டவலையும் மாற்றுடையையும் எடுத்துக்கொண்டு பாத்ரூமிற்குள் போய்விட்டான்.
 
“நான் சாதாரணமாத்தான் சொன்னேன், நீங்க அதைத் தப்பா புரிஞ்சுக்கிட்டா நான் என்ன பண்ண?” நீ கேட்டால் என்ன, கேட்காவிட்டால் எனக்கென்ன என்று மயூரி சத்தமாகப் பேசினாள்.
 
ஒரு சின்ன அறை. அதை ஒட்டினால் போல குட்டி பாத்ரூம். அவனுக்கு நிச்சயமாக கேட்டிருக்கும். 
ஐந்து நிமிடங்கள் கடந்திருக்கும்.
 
குளியலை முடித்துக்கொண்டு வெளியே வந்தவனைப் பார்த்த போது மயூரிக்கு உடம்பெல்லாம் எரிந்தது. குளித்திருக்கிறான்!
 
கறுப்பு நிறத்தில் டீ ஷர்ட்டும் பேன்ட்டும் அணிந்திருந்தான். அவன் அணிந்திருந்த யூனிஃபார்ம்மை ஒரு ஹேங்கரில் மாட்டி அதை கப்போர்டில் தொங்க விட்டான்.
 
அவள் ஒருத்தி இருப்பதையே கவனிக்காதவன் போல ரூமின் கதவை மூடிக்கொண்டு வெளியே போய்விட்டான். மயூரிக்கு எதையோ இழந்து விட்டது போல தோன்றியது!
 
***
 
“ஹேய் விபி! வா வா, என்ன சொல்லுறா உன்னோட வைஃப்?” 
 
“கேப்டன் ப்ளீஸ்…” டாமினிக்கின் கேள்வியில் அசௌகரியமாக உணர்ந்தான் வருண். ஆனால் கேப்டன் அத்தனை சீக்கிரத்தில் விடுபவனா? கடகடவென சிரித்தான்.
 
“சாப்பிட்டீங்களா கேப்டன்?”
 
“இன்னும் இல்லை, உனக்காகத்தான் வெயிட்டிங், நீ என்னப் பண்ணப்போறே மேன்? எங்கூட சாப்பிடப் போறியா… இல்லை ஜாலியா… ரூம்ல…” கேப்டன் கண்ணடிக்க, வருண் தலையில் அடித்துக் கொண்டான்.
 
“உங்களுக்கும் சேர்த்து ஆர்டர் பண்ணவா கேப்டன்?”
 
“ம்… பண்ணு பண்ணு.” டாமினிக்கின் சீண்டும் குரலைக் கண்டு கொள்ளாமல் மூன்று ப்ளேட் ஆர்டர் பண்ணியவன் உணவு தயாரானதும் ஒன்றை எடுத்துக்கொண்டு அவன் ரூமிற்கு வந்தான்.
 
கட்டிலில் அமர்ந்த படி இலக்கில்லாமல் தூரத்தில் தெரிந்த கடலை வெறித்தபடி இருந்தாள் மயூரி. எதுவும் பேசாமல் அங்கிருந்த டேபிளில் ப்ளேட்டை வைத்தவன் மீண்டும் வெளியேறிவிட்டான்.
 
மீண்டும் வருண் கேன்டீன் வந்தபோது கேப்டன் இவன் வருகைக்காக வழிமேல் விழி வைத்துக் காத்திருந்தார்.
 
“அப்புறம் விபி…”
 
“கேப்டன்… நீங்க நினைக்கிற மாதிரி எதுவுமேயில்லை… புரிஞ்சுக்கோங்க.”
 
“அடப்போய்யா! உன்னை மாதிரி எத்தனைப் பேரை என்னோட லைஃப்ல நான் பார்த்திருப்பேன்.”
 
“நீங்க பார்த்திருப்பீங்க, ஆனா எனக்கு அதெல்லாம் செட் ஆகாது கேப்டன்.”
 
“எது… அந்த பார்த்த உடனே பிடிக்கணும்… மயங்கணும்… பின்னாடி பீத்தோவன் பியானோ வாசிக்கணும், முன்னாடி மொசாட் கீபோர்ட் வாசிக்கணும்… அதானே?!”
 
“நீங்க என்னைக் கேலி பண்ணுறீங்க!”
 
“அப்பாடா! இப்போவாவது அது உனக்குப் புரிஞ்சுதா விபி?”
 
“இப்போ என்னை என்னப் பண்ணச் சொல்றீங்க?”
 
“ஆ… அப்பிடிக் கேளு… பொண்ணு பார்க்கச் சும்மா அட்டகாசமா இருக்கா… சரி சரி முறைக்காதே, பொண்ணு பார்க்க அழகா இருக்கா, ஒரே ரூம்ல வேற இருக்கா… யோவ்! இதுக்கு மேல என்னய்யா வேணும் உனக்கு?”
 
“கேப்டன்… அந்தப் பொண்ணுக்கு ட்ரெஸ் எதுவும் நான் வாங்கலை.” தவறு செய்துவிட்டேன் என்பது போல இருந்தது வருணின் பேச்சு.
 
“ஓ ஷிட்… விபி… இது உனக்கே நியாயமா இருக்கா?”
 
“கேப்டன்… நான் யோசிக்கலை…”
 
“பெனாங் போய் சேர இன்னும் மூனு நாள் ஆகுமே மேன்… அதுவரை என்னப் பண்ணும் அந்தப் பொண்ணு?”
 
“தெரியலை… என்னோட ட்ரெஸ்தான் இருக்கு…”
 
“ஹா… ஹா… பார்த்தியா, ஒன்னும் தெரியாத பாப்பா மாதிரி முகத்தை வெச்சுக்கிட்டு ஆரம்பத்துலயே சும்மா அசத்துறயே விபி!” டாமினிக் அந்த இடமே அதிர சிரித்தான்.
 
பேசியபடியே உண்டு முடித்திருக்க வருண் எழுந்து விட்டான். இதற்கு மேலும் இங்கிருந்தால் கேப்டன் அவனை ஒரு வழி பண்ணி விடுவார்.
ஆனாலும் அவர் செய்திருக்கும் உதவியை அத்தனைச் சுலபத்தில் மறக்க முடியாது. அவன் நினைத்ததை டாமினிக் நடத்தி முடித்திருக்கிறான் என்றுதான் சொல்ல வேண்டும்.
 
“கேப்டன்… தான்க் யூ!” உணர்ச்சி வசப்பட்டுச் சொன்ன வருணை எழுந்து இறுக அணைத்துக் கொண்டான் டாமினிக்.
 
“டோன்ட் பி ஸில்லி விபி… ஃப்ரெண்ட்ஸ் ன்னு எதுக்கு இருக்கோம்!”
 
“இருந்தாலும்… இந்தளவுக்கு யாரும் உதவி பண்ணி இருக்க மாட்டாங்க.”
 
“அதெல்லாம் ஒன்னும் இல்லை, ஒழுங்கு மரியாதையா சூப்பர் ரொமான்ஸ் பண்ணி என்னோட பேரைக் காப்பாத்து, புரியுதா?” 
 
“மேக்ஸிமம் முயற்சி பண்ணுறேன் கேப்டன்.” குறும்புச் சிரிப்போடு வருண் சொல்ல அங்கிருந்த மேசையில் அடித்தபடி மீண்டும் வெடித்துச் சிரித்தான் டாமினிக்.
 
***
 
தனக்கு முன்னால் இருந்த ஆவி பறக்கும் உணவை வாயில் எச்சில் ஊற பார்த்தாள் மயூரி. ப்ரோன் பிரியாணி, சால்ட் அண்ட் பெப்பர் கட்ல் ஃபிஷ், பேக்ட் சல்மன்(ஃபிஷ்) என நீந்துவன ப்ளேட்டில் நாட்டியம் ஆடின.
 
மளமளவென அனைத்தையும் ருசி பார்த்தவள் அடுத்த ஐந்தாவது நிமிடம் ப்ளேட்டை காலி பண்ணி இருந்தாள். காய்ந்து போயிருந்த நாவிற்குக் காரசாரமான உணவு.
 
“சோத்தைப் போட்ட மகராசன் வெள்ளைக்காரப் பயலுங்களுக்குப் போடுற மாதிரி கொஞ்சமாப் போட்டுட்டானே!” வாய்விட்டே தன் கருத்தைச் சொன்னவள் உணவின் ருசியில் சொக்கிப் போனாள்.
 
“அடேயப்பா! என்ன ருசி! வீட்டுக்குப் போனதும் அம்மாக்கு முதல்ல இந்த ஃபூட் ரெசிப்பியெல்லாம் தேடிக்குடுத்துக் கத்துக்கச் சொல்லணும்.” அம்மாவைப் பற்றிய நினைவு வந்ததும் மயூரி கலங்கிப் போனாள்.
 
தான் இங்கே நலமாக இருப்பது அம்மாவிற்குத் தெரியுமா? அதைக் கேட்டாலும் முறைப்பையே பதிலாக தருபவனிடம் என்ன கேட்பது!
 
ஒரு வருத்தத்தோடு ஏழுந்து போய் பாத்ரூம் சின்க்கில் ப்ளேட்டை வாஷ் பண்ணினாள். அப்போதுதான் அவன் தன் யூனிஃபார்மை அங்கிருந்த கப்போர்டில் தொங்க விட்டது ஞாபகம் வந்தது.
 
மேசை மேல் குழுவிய ப்ளேட்டை வைத்தவள் கப்போர்டை நோக்கி வந்தாள்.
 
கப்போர்ட் திறந்து இருக்கிறதா என்று மெதுவாக கதவை இழுத்துப் பார்த்தாள். திறந்துதான் இருந்தது. அங்கே தொங்கிய அவன் யூனிஃபார்மின் தோள்பட்டையை ஆராய்ந்தாள் மயூரி. 
 
எப்பொலெட்டில் நான்கு கோடுகள் இருந்தன(3கோடுகள்+1லூப்). நான்கு தங்க நிறக் கோடுகள் யூனிஃபார்மில் இருந்தால் அவர் பெரிய ஆஃபீஸர் என்று மயூரிக்கு தெரியும்.
 
‘பாதி சூரியன் போல ஏதோ அடையாளம் இருந்தால்தானே கேப்டன்…’
 
“இங்க என்னப் பண்ணுறே?” அருகில் கேட்ட குரலில் மயூரி திடுக்கிட்டுத் திரும்பினாள். இந்த ஷிப்பில் அவன் ராங்க் என்னவாக இருக்கும் என்று ஆராய்ச்சி பண்ணியவள் அவன் உள்ளே வந்ததைக் கவனிக்கவில்லை.
 
“இங்க என்னப் பண்ணுறேன்னு கேட்டேன்.”
 
“அது… அது உங்க யூனிஃபார்ம்…”
 
“குளிச்சிட்டு அதையா உடுத்தப்போறே?” சீரியஸாக கேட்டான் அவன்.
 
“இல்லை… ஷிப்ல உங்க ராங்க் என்னன்னு தெரிஞ்சிக்கலாமேன்னு எப்பொலெட்டை பார்த்தேன்.” இப்போது ஒரு கணம் அவன் கண்கள் மெச்சுதல் போல ஒரு பாவத்தைக் காட்டியது. 
 
அதைச் சட்டென்று துடைத்துத் தூரப் போட்டவன் கட்டிலில் போய் கால் நீட்டி அமர்ந்து கொண்டான். அவன் அம்மாவை அப்படிப் பேசியதுதான் அவன் கோபத்திற்குக் காரணம் என்று புரிந்த மயூரி சமாதான கொடியைப் பறக்கவிட்டாள்.
 
“நான் உங்கம்மாவைத் தப்பாப் பேசணும்னு அப்பிடிச் சொல்லலை, ஏதோ பேச்சு வாக்குல அப்பிடி வந்திடுச்சு, சாரி.” அவள் இறங்கி தன்மையாக பேசவும் அவன் என்ன நினைத்தானோ! இப்போது பதில் சொன்னான்.
 
“அதுதான் உங்கக் குடும்பத்துக்கே பழக்கமாப் போச்சே.”
 
“இல்லையில்லை… தப்பு, அம்மா எப்பவுமே உங்கம்மாவைத் தப்பாப் பேசினதே இல்லை.”
 
“நான் உங்கம்மாவைச் சொல்லலை.”
 
“ஆச்சியும் அப்பாவும் பண்ணுறது சரின்னு நானும் சொல்லலையே!”
 
“ஆனா சும்மா கையைக் கட்டிக்கிட்டு வேடிக்கைப் பார்த்தே.”
 
“வேற என்னப் பண்ண முடியும் என்னால?”
 
“நீ எதுவும் பண்ணாத, நான் பண்ணிக்கிறேன்.” கறாராக சொல்லிவிட்டு அந்த மேகஸினை மீண்டும் கையிலெடுத்தான் வருண்.
 
“உங்கம்மா… ரொம்ப அழகாமே!” இப்போது விழிகளை மட்டும் உயர்த்தி அவளைப் பார்த்தவன் பார்வையைத் தாழ்த்திக் கொண்டான்.
 
“அம்மா அடிக்கடி சொல்லுவாங்க, உங்கப்பா எப்பவுமே ஆச்சி பேச்சைத் தட்ட மாட்டாங்களாம், உங்கம்மாவோட அழகுதான் அவங்களுக்கு இவ்வளவு துணிச்சலைக் குடுத்துச்சாம்.” இப்போது அவன் முகத்தில் கீற்றாக ஒரு புன்னகை முளைத்தது. அந்தப் புன்னகையில் பார்க்க அத்தனை வசீகரமாக இருந்தான் வருண்.
 
“அம்மா இன்னும் என்னென்னமோ கதைகதையா சொல்லுவாங்க, உங்கப்பா அவங்களோட லவ் வை சொன்னது, பாட்டி அதுக்குச் சம்மதிக்காதது, யாருக்கும் தெரியாம அங்கேயே உங்கப்பா கல்யாணம் பண்ணிக்கிட்டது…”
 
“இதெல்லாம் சொன்ன அம்மா வீட்டைப் பத்தி ஒன்னுமே சொல்லலையா?” இப்போது மயூரியின் முகம் கன்றிச் சிவந்து போனது. சட்டென்று தலையைக் குனிந்து கொண்டாள்.
 
“உங்க லெட்டர் வரும் வரைக்கும் சத்தியமா அது உங்க வீடுன்னு எனக்குத் தெரியாது, இதை… இதை நீங்க நம்பணும்.”
 
“………………”
 
“அம்மா ஏன் எங்கிட்ட அதைச் சொல்லலைன்னு எனக்குத் தெரியாது, ஆனா எந்த நொடி அந்த உண்மைத் தெரிஞ்சிச்சோ அந்த நொடியில இருந்து அந்த வீட்டை விட்டு வெளியே போக நான் ரெடி.”
 
“ஓஹோ!” அந்த வார்த்தையில் தொக்கி நின்ற உணர்ச்சிகளை மயூரி ஆராயவில்லை. மேலே பேசினாள்.
 
“அன்னைக்கு நீங்க வந்தப்ப கூட ஆச்சி நடந்துக்கிட்டது ரொம்ப ரொம்பத் தப்பு, என்னால அவங்களைத் தட்டிக் கேட்க முடியாது, பெரியவங்கக் கிட்ட மரியாதை இல்லாம பேசக்கூடாதுன்னு எங்கம்மாவே என்னை அடக்கிடுவாங்க, ஆனா நான் என்னால முடிஞ்ச வரைக்கும் ஆச்சியை வெறுப்பேத்தினேன்.”
 
“என்னப் பண்ணினே?”
 
“டெய்லி வீட்டுக்கு லேட்டாப் போனேன்.”
 
“ஓ…” அவன் இதழ்கடையோரம் சிரிப்பால் துடித்தது.
 
“ஆமா… ஆச்சிக்கு லேட்டா வீட்டுக்கு வந்தாப் பிடிக்காது, சில நேரம் அப்பிடியானா திட்டுவாங்க, கொஞ்ச நாளா நான் அடிக்கடி திட்டு வாங்குறேன்.”
 
“……………”
 
“உங்கப்பா எதுக்கு ப்ரோப்பர்ட்டியை ஆச்சி பேர்ல  வாங்கினாங்க? அதனாலதான் இப்போ எல்லாமே வினையாகிப் போச்சு.”
 
“அப்பா அப்போ லண்டன் ல இருந்தாங்க, ஒவ்வொன்னுக்கும் அவங்களால இங்க வந்துக்கிட்டு இருக்க முடியாதில்லையா, அதாலதான் இப்பிடிப் பண்ணி இருக்காங்க.”
 
“ஓ… நீங்க லீகலா எந்த ஆக்ஷனும் எடுக்கலையா?”
 
“எதுவுமே பண்ண முடியாதாம்.”
 
“ம்… ஆச்சிக்கு அப்புறம் அந்த வீடு அம்மாக்குன்னுதான் எழுதி இருக்கு, அம்மா அதை அப்பிடியே உங்கக்கிட்டத் தூக்கிக் குடுத்துடுவாங்க.” இதை மயூரி சொன்ன போது அவன் கண்கள் ஆங்காரமாக அவளைப் பார்த்தது.
 
“இப்போ என்னோட பிரச்சினை அந்தச் சொத்து இல்லை.”
 
“வேற என்ன?”
 
“சம்பந்தமே இல்லாத ரெண்டு பேர் அந்த வீட்டை எனக்கு இல்லைன்னு சொன்னாங்க, அவமானப்படுத்தினாங்க!”
 
“ஓ…” மயூரியின் குரல் தேய்ந்து போனது.
 
“அவங்களுக்கு இந்த வருண் யாருன்னு நான் காட்டணும்!” வெறித்தனமான பதில்.
 
“அதுக்காக… இது தப்பில்லையா?” தயங்கிய படி கேட்டாள் மயூரி.
 
“எனக்கு இதுதான் சரி!”
 
“என்னைப் பத்தி நீங்க யோசிக்கவே இல்லையே…”
 
“அழககோனோட மகளைப் பத்தி நான் எதுக்கு யோசிக்கணும்?” மயூரி இப்போது மனதுக்குள் பலமாக அடி வாங்கினாள்.
 
‘அப்படியென்றால்… உனக்கு நான் யாருமே இல்லையா?!’ மனது ஓலமிட்டது.
 
“ஒரு பொண்ணோட வாழ்க்கை இதால எவ்வளவு தூரம் பாதிக்கப்படும்னு கூடவா நீங்க யோசிக்கலை?”
 
“மாதா, பிதா செய்தது மக்கட்கே…” இதுதான் என் கோர்ட்டில் உனக்கான தீர்ப்பு என்பது போல பேசிவிட்டு பேச்சை முடித்துக் கொண்டான் வருண்.
 
அதன்பிறகு அவன் எதுவுமே பேசவில்லை. அவள் கேட்ட ஒன்றிரண்டு கேள்விக்கும் மௌனத்தையே பதிலாக தந்தான். 
 
அந்தி வேளையில் டீயும் ஸ்நாக்ஸும் கொண்டு வந்து கொடுத்தான். டீவியை உயிர்ப்பித்து நியூஸ் சேனல் பார்த்தான். கொஞ்ச நேரம் ஃபுட்பால் பார்த்தான்.
 
மயூரி நீலக்கடலோடு ஐக்கியமாகி விட்டாள். அமைதியாக இருக்கும் அந்தக் கடல் கூட அவனைப் போலத்தான் இருந்தது. வெளியே அமைதி, உள்ளே ஆர்ப்பரிப்பு!
 
இரவு ஏற ஏற கடல் இன்னும் அழகாக மின்னியது. இரவு உணவும் நேரத்துக்கு வந்து சேர்ந்தது. உணவின் சுவை அற்புதமாக இருந்தது.
 
“எனக்குக் குளிக்கணும்… இதுக்கு மேல தாங்காது.” சன்னமான குரலில் அவள் சொல்ல எழுந்து போய் கப்போர்டை திறந்தான் வருண்.
 
“இதுதான் இருக்கு, புதுசு… நான் இன்னும் யூஸ் பண்ணலை.” அவன் நீட்டிய இரவு ஆடையைக் கைகளில் வாங்கியவளின் விழி அதை விடுத்து எதேயோ நோக்கியது.
 
“அது யோரோட ஃபோட்டோ?” பகல் அவள் அந்த கப்போர்டை ஆராய்ந்த போது இது கண்ணில் சிக்கவில்லையே!
 
ஃபோட்டோவை எடுத்து அவளிடம் நீட்டினான் வருண். ஒரு தம்பதி… ஆணும் பெண்ணுமாக அழகாக சிரித்தபடி இருந்தனர்.
 
“என்னோட அம்மா… அப்பா.” அவன் குரல் கரகரத்தது.
 
“ஓ…” ஆசையோடு அதைக் கையில் வாங்கியவள் தன் சொந்த பந்தங்களை முதன்முதலாக பார்த்தாள்.
 
இயல்பாக அவள் கை அந்தப் படத்தில் இருந்தவர்களை வருடிக் கொடுத்தது. அம்மாவின் அண்ணா, அவர் மனைவி என்பதையும் தாண்டி… வருணின் பெற்றோர்கள் இவர்கள் என்பது மயூரிக்கு அதிக சந்தோஷத்தைக் கொடுத்தது.
 
“ஏங்க… என்னங்க உங்கம்மா இவ்வளவு அழகா இருக்காங்க?!” இயல்பாக ஒரு சிரிப்போடு பேசியது பெண்.
 
“இதைப் பார்த்துட்டு உனக்கு வேறெதுவுமே கேட்கத் தோணலையா?”
 
“இல்லையே… பாவம் உங்கப்பா, இவ்வளவு அழகா பொண்ணு இருந்தா அந்த மனுஷனுந்தான் என்னப் பண்ணுவாரு? அதான் அம்மா சம்மதிச்சா என்ன ஆட்டுக்குட்டி சம்மதிச்சா என்னன்னு கல்யாணம் பண்ணக்கிட்டாரு போல…” தனக்குத்தானே பேசிய படி டவலை எடுத்துக்கொண்டு அவள் பாத்ரூமிற்குள் போக அவளை முதல்முதலாக நின்று நிதானமாக பார்த்தான் வருண்.
 
தன் அம்மாவை அழகு அழகு என்று புகழும் அவளும் அழகாகவே இருந்தாள். கிட்டத்தட்ட அவன் உயரம் இருந்தாள். அடர்ந்த கூந்தல், அழகான நிறம்.
எல்லாவற்றையும் தாண்டி… நியாயமாக பேசும் அந்த மனம்! இவ்வளவு இக்கட்டிலும் அழுது புலம்பாத கலகலப்பு!
 
கப்பல் கொழும்பு துறைமுகத்திலிருந்து கிளம்பிய பின்னும் இரண்டு நாட்கள் அவன் அவள் இருந்த அறைக்கு வராமல் போனதற்குப் பல காரணங்கள் இருந்தன.
 
பல அசௌகரியங்களையும் தாங்கிக் கொண்டு கட்டுப்பாட்டு அறையிலேயே தங்கி இருந்தான் வருண். அதற்காக பல விதிமுறைகளை அவன் மீற வேண்டி இருந்தது.
 
கேப்டன் துணை இருந்ததால் அவனுக்குப் பிரச்சனைகள் எதுவும் எழவில்லை. முதலில் மனதளவில் அவளைப் பலவீனப்படுத்த வேண்டும் என்று நினைத்திருந்தான் வருண்.
 
அடுத்கு… அவள் கத்தி ஆர்ப்பாட்டம் எதுவும் செய்தால் அங்கே அவன் புனைந்திருக்கும் கதைக் கந்தலாகி போகும்.
 
ஆனால் அவள்தான் அப்படியேதும் நடந்து கொள்ளவில்லையே! கூட இருப்பது அவன் என்பதால்தான் மயூரி அத்தனைச் சாந்த சொரூபியாக இருக்கிறாள் என்று பாவம், வருணுக்கு தெரியவில்லை!
 
ஒன்றாக இருந்த இரண்டு கட்டிலையும் பிரித்துப் போட்டான் வருண். அவளுக்கொரு தலையணையையும் போர்வையையும் வைத்துவிட்டு விளக்கை அணைத்தான்.
 
இன்றைக்குத் தூக்கம் வருமா? விடிவிளக்கை எரிய விட்டுவிட்டு சற்று நேரம் சிந்தித்தபடி இருந்தான் வருண். 
 
‘இத்தனை நேரம் என்ன செய்கிறாள் பாத்ரூமில்?’ சட்டென்று மனது படபடக்க எழுந்து போய் பாத்ரூம் கதவைத் தட்டினான்.
 
“என்ன வேணும்?” உள்ளிருந்த படியே கேட்டாள் மயூரி.
 
“நீ இவ்வளவு நேரம் அங்க என்னப் பண்ணுறே?”
 
“போட்டிருந்த ட்ரெஸ்ஸை வாஷ் பண்ணுறேன், பாத்ரூம் ஹீட்டர்ல போட்டாக் காய்ஞ்சிடும் இல்லை, நாளைக்கு யூஸ் பண்ணலாம்.” 
அவள் பதிலில் அவனுக்கு ‘ஐயோ’ என்றிருந்தது. முன்பு தான் கஷ்டப்படுத்த நினைத்த அழககோனின் மகள் இப்போது கஷ்டப்படுவது அவனுக்கு வருத்தமாக இருந்தது.
 
எதுவும் பேசாமல் கட்டிலில் படுத்துக்கொண்டான். நித்திரை வரவில்லை. சற்றுக் கழித்து அவள் வெளியே வந்தபோது இவன் கண்களை மூடிக் கொண்டான்.
 
தலையை நன்றாக துவட்டியவள் அங்கிருந்த ட்ரையரால் கூந்தலை உலர்த்தினாள். ஆடை அவள் உயரத்திற்குச் சரியாகவே இருந்தது. 
 
அவன் தூங்குகின்றான் என்ற எண்ணத்தில் மயூரி தன்னைப் போர்த்தி இருந்த அந்தப் பெரிய டவலை விலக்கினாள். 
 
உடம்பில் இரண்டு நாட்களுக்குப் பிறகு நீர் பட்டது பரம சுகமாக இருந்தது. ஒரு நிம்மதியோடு கட்டிலில் சரிந்தவள் இரண்டு நாட்கள் தவறவிட்ட தூக்கத்தைச் சட்டென்று பிடித்தாள்.
 
அவன் கூட இருக்கின்றானே என்ற தயக்கம் பெண்ணுக்குச் சிறிதும் இருக்கவில்லை.
 
ஆனால் வருண்… ஒரு பெண்ணோடு தனித்திருக்கிறோம் என்ற எண்ணத்தில் தூக்கத்தைத் தொலைத்து விழித்திருந்தான்!

Leave a Reply

error: Content is protected !!