ஆட்டம்-10
ஆட்டம்-10
ஆட்டம்-10
செங்கதிரவன் இருள் என்னும் போர்வையை, எட்டி எட்டிப் பார்த்து விலக்கிக்கொண்டு, பூமியை, தூக்கம் கலைந்து சற்றுத் தெளிவுடன் பார்க்கத் துவங்கியிருந்த அந்தக் காலைப் பொழுதில், கதிரவனுக்கு வந்த சோம்பல் மூச்சில் பறவைகள் பறக்கத் துவங்கியிருந்த பேரழகிய காலை வேலை.
நேரம் சரியாக 5:30.
சூரியக் கதிர்கள் தங்கத்தை உருக்கிவிட்ட தகடைப் போல ஆங்காங்கே பட்டையாய், முகில்களுக்கு இடையே பூமித்தாயை அன்புனுடன் ஆக்கிரமித்துக் கொண்டிருக்க, செங்கதிர்கள் பட்டத்தில் அமெரிக்க கண்டத்தில் உருவாக்கப்பட்ட அந்த ஒன்றரை கோடி மதிப்புள்ள வெள்ளை நிற டெஸ்லா மாடல் எஸ் (Tesla model S) கார், சக்கரைகட்டி போல பிரகாசித்து, தன் முன்னே நடந்து செல்லும் தன் உரிமையாளினியை போலவே மினுமினுத்தது.
இடை வரை இருந்த வெள்ளை நிற க்ராப் டாப்பும், கீழே கால்களை இறுக்கி கவ்வியிருந்த ஜீன்ஸும் அணிருந்திருந்தவள், பார்னை (barn) நோக்கி தனது ஷூவின் சத்தம், ‘டக்’, ‘டக்’ என்று கொட்ட நடந்து செல்ல, அவளுக்காக காத்திருந்தவர் உள்ளிருந்து ஓடிவந்து, “வாங்கம்மா” என்றழைக்க, தனது நிமிர்வு மாறாது சிறிது புன்னகையுடன் தலையை ஆட்டியவள், “மேக்ஸிமஸ் (maximus) எங்க?” என்று குரலில் தோரணை தெறிக்கக் கேட்டாள்.
“உள்ள இருக்குங்க ம்மா” என்றவரிடம்,
“நான் ரிங்குக்கு (ring) போறேன்.. அழைச்சிட்டு வாங்க” என்றவள் அவளுக்கென்று அங்கிருந்த அறைக்குள் சென்றாள். உள்ளே சென்றவள் தனது ஷூவைக் கழட்டிவிட்டு ஹார்ஸ் ரைடிங் (Horse riding) செல்வதற்காகவே வைத்திருந்த, முட்டி வரை நீலம் இருந்த கருப்பு நிற பூட்ஸை அணிந்தவள், தலைக்கு ஹெல்மெட்டையும் அணிந்து, கைகளுக்கு க்ளவுஸை மாட்டியபடி வெளியே வர, அவளுடைய கருப்பு நிற மேக்ஸிமஸ் கம்பீரமாக அவளுக்காக நின்றிருந்தான்.
சிரிப்பு மாறாமல் அவனிடம் நடந்து சென்றாள்!
அவளின் மேக்ஸிமஸ்!
அவளின் பதினாறு வயதில் இருந்து அவளுடன் ஆசையாக இருப்பவன். ஒருநாள் தெரிந்தவரை பார்க்க சிம்மவர்ம பூபதி செல்ல, அவருடன் ஒரு அரங்கத்திற்கு சென்ற நறுமுகை, அங்கு நடக்கும் ஹார்ஸ் ரைடிங்கிற்கான ப்ராக்டிஸை கண்டு வாயடைத்துப் போனாள்.
ஆண்பிள்ளைகள் அதில் அதிவேகத்துடன் சென்று கொண்டிருக்க, குதிரையின் கால்கள் செல்லும் வேகத்தையும், மேலே இருப்பவர்களின் முகத்தில் தெரிந்த சந்தோஷங்களையும் பார்த்தவளுக்கு ஆர்வம் வழியத் துவங்கியது. கிளம்பும் போது சிம்மவர்ம பூபதியிடம், “தாத்தா நானும் ஹார்ஸ் ரைட் பழகறேன். எனக்கு ஒரு குதிரை வாங்கி தாங்க” என்று கூற, அடுத்த ஒரு வாரத்தில் அவளுக்கு பிறந்தநாள் பரிசு தருவதாக சொல்லி வெளியே அழைத்துச் சென்ற சிம்மவர்ம பூபதி, அவளை அழைத்து வந்தது இந்த பார்னுக்குத் தான்.
குதிரையை மட்டுமல்லாது, பேத்திக்காக ஒரு பெரிய க்ரவுன்ட்டையே வாங்கி, ஹார்ஸ் ரைட்டிங்கிற்காக ஒரு ரிங்கையே அமைத்துவிட்டார்.
“வாவ்! தாத்தா” என்றவள் அவரை அணைத்துக்கொள்ள, நீரஜாவோ, “அப்பா உங்களுக்கே ஓவரா இல்லியா? ஹார்ஸ் ரைடிங் நம்ம அபி, விக்ரம் கூடதான் போறாங்க. அதென்ன இவளுக்கு மட்டும் தனியா இப்படி” தந்தை மகளுக்கு செய்தது பெருமையைக் கொடுத்தாலும், மருமகன்களுக்கு நியாயம் வேண்டி தந்தையை சீண்டினார் நீரஜா.
“அவங்க பசங்க.. எங்க வேணாலும் போவாங்க. ஆனா இது என் பேத்தி. எங்கேயும் போகணும்னு அவளுக்கு அவசியம் இல்ல. அதே மாதிரி கத்துத் தர்ற பெர்சனல் ரைடிங் இன்ஸ்ட்ரக்டர் இருக்காரு. அவரு பாத்துப்பாரு” என்றவர் தன் கைக்குள் இருக்கும் பேத்தியை பார்க்க,
“டபுள் ஓகே” தாத்தா என்றாள் அன்னையிடம் பழிப்பு காட்டியபடி.
அன்று அவளுக்கு பயிற்சிக்காக ஒரு குதிரையை ஏற்பாடு செய்திருக்க, அதனுடைய குட்டியைக் கண்ட நறுமுகை, “ஹையோ தாத்தா!!! எவ்வளவு க்யூட்!!! ஃபுல் ப்ளாக்கா ரொம்ப பாக்கவே கம்பீரமாவும் இருக்கும் போல வளந்தா” என்று அதனை தொட்டுப் பார்த்தபடி கூறியவள், “ஏதாவது பேர் வைக்கலாம் தாத்தா” என்றாள்.
“உனக்கு என்ன புடிக்குதோ அதை வைடா” அவர் கூறிவிட, இரண்டு நாட்களாக, கூகுளுடன் போராட்டம் நடத்தியவள் அந்த கருப்பு குட்டிக்கு மேக்ஸிமஸ் என்று பெயர் சூட்டினாள்.
மேக்ஸிமஸ் என்பதின் பொருள் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் வலுவான என்று பொருள். அதைப் பார்த்தே அவள் இந்தப் பெயரை தன் மனம் கவர்ந்த குட்டிக்கு சூட்டியது.
அதன் மற்றொரு பொருள் மிகப்பெரியது.
அதைப் பார்க்கத் தவறிவிட்டாள் போல. அவள் எந்த எண்ணத்தில் பெயர் சூட்டினாளோ, ஆனால் மிக உயரத்துடன், வளர்ந்து மற்ற குதிரைகளே இப்போது தன்னைப் பார்த்து மிரண்டு போய் ஒதுங்கும் அளவிற்கு நின்றிருந்தான் மேக்ஸிமஸ்.
“மேக்ஸிமஸ்!!!” என்று அவளின் அணைப்பில் கனைத்தவன், அவளைச் செல்லமாக முட்ட, “அவுச்” என்று தடுமாறியவள் அவனைப் பிடித்தபடியே நின்றாள். அவனின் முன் நெற்றியை நீவியவள், அவனின் முன் முகத்துடனே சாய்ந்து நிற்க, அதுவோ தலையை இடமும் வலமும் பிடிவாதமாக அசைத்தது.
“ஓகே ஓகே போலாம்டா” என்று தட்டிக் கொடுத்தவள், இரண்டடி பின்னே சென்றவள் மீண்டும் ஓடி வந்து அவனின் மேல் ஒரே தாவில் ஏறிவிட, அவனுக்கோ தன் எஜமானியை தன் மேல் ஏற்றிக்கொண்ட குஷி.
இரு கால்களையும் மேலே தூக்கி, தன் சந்தோஷத்தை அவன் வெளிப்படுத்த, அவனின் மேலே அமர்ந்திருந்தவள், பயமோ, நடுக்கமோ, பெண்ணிற்குரிய படபடப்பு எதுவும் இல்லாது, “ஹூஹூஉஉ” என்று அவனுக்கு இணையாக கத்த, அவன் ஓடும் முன்பே நறுமுகை இட்டிருந்த குதிரை வால், அவனின் அதிவேகத்தில் பறக்கத் துவங்கியது.
ஹார்ஸ் ரைடிங்கில் மூன்று வகை உண்டு. வெஸ்டர்ன் (Western), இங்கிலீஷ் (English), க்ரூப் (Group) என்ற மூன்று பாணி.
இங்கிலீஷ் ரைடிங் வகையில், சவாரி செய்பவர் இரண்டு கைகளிலும் கடிவாளத்தை எடுத்து, வாய் வழியாக குதிரையின் வேகத்தையும் திசையையும் கட்டுப்படுத்த பயன்படுத்துர். மறுபுறம், வெஸ்டர்ன் ரைடிங்கில், ரைடர் குதிரையை ஒரு கையால் கட்டுப்படுத்தி, மறு கையால் லாரியாட்டைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தின் காரணமாக, மேற்கத்திய குதிரைகளுக்கு கழுத்து கடிவாளத்திற்கு பயிற்சி அளிக்கப்படும்.
மற்ற அனைத்திலும் விட வெஸ்ட்டரன் வகை கடினமும் கூட!
அதுவும் மேக்ஸிமஸ் அரேபிய க்ராஸான மார்வாரி குதிரை வகை. அந்தக் காலத்தில் போர்களிலும், தற்போது காவல் அதிகாரிகளாலும், ஏன் ராணுவத்தினால் கூட பயன்படுத்தப்படும் குதிரை இனம்.
அதுவும் பிடிவாதக்காரியின் கைகளில் இப்போது! சொல்லவா வேண்டும்!
ரெய்னை (கடிவாளம்) பிடித்துக் கொண்ட நறுமுகை, “மேக்ஸிமஸ்” என்று அழைத்து தனது காலால் சமிக்ஞை செய்து, “கோ” என்று சொல்ல, பறக்கத் துவங்கினான் தனது பெயரிலேயே மிக சக்தியையும் வலுவையும் கொண்டவன் அந்த கருப்பு வீரன்.
பெயருக்கு ஏற்றாற் போல அவன் பறக்க, ஒரு கரத்தால் கடிவாளத்தை பிடித்துக் கொண்டு, மறு கரத்தை காற்றில் பறக்கவிட்டவள், ஒரு வாரத்திற்கு பிறகு கண்ட தனது பிரானியிடம், இன்னும் வேகத்தை கூட்ட சிக்னல் கொடுக்க, மேக்ஸிமஸின் வேகம் அவனின் கால்கள் எழுப்பிய ஒலியிலேயே தெரிந்தது.
‘தடக்’, ‘தடக்’ என்று மேக்ஸிமஸின் கால்கள் தரையில் படும் போதெல்லாம், தரை அதிர்ந்து அதனால் எழுந்த சத்தம் புழுதியோடு கலந்து பறக்க, இருவரையும் பார்த்துக் கொண்டிருந்த அங்கிருந்த காவலருக்கோ, “எப்படி இந்த பொண்ணு பயமே இல்லாம இப்படி போகுது” என்று மனதுக்குள் வழக்கம் போல அசந்து போனார்.
அசூர வேகத்தில் சென்றவனுக்கு இணையாக தன் உடலை வைத்துக் கொண்டவள், நீரஜாவின் கம்பீரத்தை பெற்றிருந்தாள். அதே கம்பீரமும், தோரணையும். அந்த வளர்ப்பு இல்லமலா போகும். அதுவும் பெண்ணவளின் விழிகள் சூரியக் கதிர்கள் பட்டு தேனை ஊற்றி வைத்தது போன்று தேங்கி பளபளத்துக் கொண்டிருந்தது.
அரைமணி நேரத்திற்கு மேல் அவனுடன் விளையாடித் தீர்த்தவள், ரெயினை (கடிவாளம்) இழுத்துப் பிடித்து அவனை நிற்கச் சொல்ல, அவன் கேட்காமல் இன்னொரு சுற்று முடிந்த பிறகே நிறுத்தினான்.
அவனின் மேலிருந்து ஒரே குதியில் குதித்து ஸ்டைலாக இறங்கியவள், தனது ஹெல்மெட்டை கழற்றியபடி, “வர்ற வர்ற குறும்பு அதிகமாயிடுச்சு” என்று செல்லமாக அடிக்க, அவனோ அதே போல வலிப்பது போல கனைத்தான்.
அவனின் உடம்பில் சாய்ந்து தட்டிக் கொடுத்தவள், அவன் முன்னே நின்று, “நெக்ஸ்ட் வீக் வர்றேன்” என்று அவனின் தலையை தட்டியவள், “இந்தாங்க” என்று இரண்டாயிரம் ரூபாயை அவனைப் பார்த்துக் கொள்பவரிடம் நீட்டினாள்.
“ஐயோ எதுக்குமா.. ஐயா நிறையவே தர்றார்” என்றிட,
“வாங்கிக்கோங்க. இவனை ரொம்பவே நல்லா பாத்துக்கறீங்க” என்றவள் புன்னகையுடன் கொடுக்க, அவரும் மறுக்காது வாங்கிக் கொண்டார்.
“அம்மா வர்ற வர்ற மேக்ஸிமஸ் விக்ரம் சாரோட, “ஆங்கஸ்” கூட ரொம்ப முட்டுது” என்றார் விக்ரமின் அரேபிய குதிரையான ஆங்கஸை சுட்டிக்காட்டி.
‘ஏன் அவன்கூட முட்டலையா?’ என்று உள்ளுக்குள் கடுப்புடன் நினைத்துக் கொண்டவள், “மேக்ஸிமஸ்” என்று வேண்டுமென்றே திட்டுவது போல் இருபக்க இடுப்பிலும் கரம் கொடுத்து மிரட்ட, அதுவோ மூக்கில் கத்தியபடி தன் கோபத்தைக் காட்ட, அவளோ அடிவயிற்றில் இருந்து வந்த சிரிப்பை கட்டுப்படுத்திக் கொண்டு நின்றாள்.
நாசியில் ஒற்றை விரலால் ஸ்டைலாக கரத்தை அசைத்தவள், “அண்ணா அதுதான் ஏதாவது பண்ணியிருக்கும். மேக்ஸிமஸ் வெளிய இருக்கும் போது அவனை வெளிய விடாதீங்க” என்று கூற, ஒரு கனைப்புக் குரல் பயங்கரமாகக் கேட்டது.
ஆங்கஸ் உடைய கனைப்பு!
அவன் எஜமானனைப் போன்றே ஆக்ரோஷமான கனைப்பு!
“அதே திமிர்” என்று முணுமுணுத்த நறுமுகை, மேக்ஸிமஸை தடவிக் கொடுத்துவிட்டு வெளியே வர, ஆங்கஸின் கனைப்பு அதிகமானது.
எஜமானன் வருவதை முன்னமே உணர்ந்து கொண்டான் போல!
பையரின்ஸ் மெட்டாலிக் சிவப்பு நிற ஸ்போர்ட்ஸ் ரேன்ஜ் ரோவர், சீறிப் பாய்ந்து கொண்டு வந்து, கீறிச்சிடலுடன் நிற்க, அது யாருடைய கார் என்றும், உள்ளே இருப்பவன் யார் என்றும் பார்க்காமலேயே அறிந்து கொண்ட நறுமுகை, வேங்கைக்கு எதிரே பெண் சிங்கமாய் அஞ்சாது நிற்க, அந்த ரேன்ஞ் ரோவரோ அங்கிருந்து பறவைகள் பறந்தோடும் அளவிற்கு உறுமத் துவங்கியது.
அந்த ரேன்ஜ் ரோவரை பார்த்தபடியே வந்தவளின் விழிகளை உள்ளே அமர்ந்திருந்தபடியே பார்த்தவனின் வசீகர விழிகளில் எப்போதும் போல பளபளப்பு. பருவ வயதிலேயே அவனை சித்தம் கலங்க வைத்தவள், இப்போது அனைவரையும் ஒரே நொடியில் தங்களையே மறக்கச் செய்துவிடும் அசூர அழகில், மற்றொரு முறை பெண்களையே திரும்பிப் பார்க்க வைக்கும் தோரணையிலும், கம்பீரத்திலும், கர்வத்திலும் இருந்த ஓவியக் கடல் போன்ற பிரதிபலிப்பிலும் அவனை வீழ்த்தாமலா இருப்பாள்?
ஒவ்வொரு நாளும் அவனின் எண்ண அலைகள் அவள்!
ஆனால், அதை வெளிப்படையாக காட்டிவிட்டாலா அது விக்ரம் அபிநந்தன் அல்லவே!
காரிலிருந்து இறங்கியவன் பார்னிற்குள் செல்ல, அவனை பார்த்தும் பார்க்காமல் நடந்தவளோ, நேராக தனது காரை நோக்கி கம்பீரமாக நடந்தாள். ஆனால், அவனின் பார்வை தன்னை ஊசி போல துளைப்பதை மீறி தன்னை அவன் முன் வெளிப்படுத்தி விடக்கூடாது என்று வீராப்புடன் நினைத்தவள், காரில் சென்று ஏறியமர்ந்து கொண்டு, அவனின் தலை மறையும் வரை அவனையே பார்த்துக் கொண்டிருக்க, அதை திரும்பாமலேயே அறிந்தவனோ, இதழுக்கிடையில் புன்னகைத்தபடி, அவளை எவ்வளவு பார்க்க வைக்க முடியுமோ அவ்வளவு நேரம் பார்க்க வைத்துவிட்டு, மறைந்திருந்தான் அவளின் விக்ரம்.
“திமிர்” அவள் பற்களுக்கிடையில் ஆத்திரத்தோடு கடிக்க, துளிதுளி ஊசி பொட்டுக்களாய், பெண்ணவளின் ஆத்திரம் பொருக்காத முகில்கள் அவளைத் தணிக்க, நீர்மணிகளை பூமிக்கு அனுப்ப, அது அவளைத் தணிக்க வந்ததோ இல்லை தவிக்க வைக்க வந்ததோ!
முத்தாய் விழும் மழைத்துளிகளை ரசிக்கத் துவங்கியவள், காரினுள் ஏசியை போட்டுவிட்டு, பாடலையும் போட, நா முத்துகுமாரின் மயக்கும் வரிகள் மந்தகாசப் புன்னகையோடு பெண்ணவளின் செவி வழியே நுழைந்து இதயத்தைத் தட்ட, அவளின் இமைகள் தாமாக மூடியது.
‘ஆழியிலே முக்குளிக்கும் அழகே ஆவியிலே தத்தளிக்கும் அழகே உன் குழலோடு விளையாடும் காற்றாக உருமாறி முந்தானை படியேறவா மூச்சோடு குடியேறவா உன் இடையோடு நடமாடும் உடையாக நான் மாறி எந்நாளும் சூடேறவா என் ஜென்மம் ஈடேறவா!!!’
என்ற வரிகளில் பெண்ணவளின் மார்பு ஏறியிறங்க, அவளின் தொண்டைக் குழிகளும் நடனமாடியது. மீண்டும் மீண்டும் வெளியே பெய்து கொண்டிருந்த மழைக்கு பாடலை ரிப்பீட் மோடில் போட்டுவிட்டு சீட்டில் நன்றாக கண்மூடி சாய்ந்து கொண்டாள்.
அவனின் நினைப்பு!
மனம் மொத்தமும் தீரா காதலும் திகட்டாத ஆசைகளும்!
தடையாய் அவனின் விடாத திமிரும் இவளின் குறையாத ஈகோவும்!
திடீரென கார் திறக்கும் சத்தம் கேட்க, திடுக்கிட்டு முழித்தவள், என்னவென்று யோசிப்பதற்குள் காரில் அவளருகே அமர்ந்திருந்தான், அவளிடம் தனது ஆங்காரத்தால் காதலை வாய்விட்டுச் சொல்லாமலே, அந்த இளவரசியின் மென்மனதை வென்றிருந்த யாருக்கும் அடங்கிடாத, எவருக்கும் படியாத சாணக்கியன்.
காரை லாக் போடாததை நினைத்து தன்னையே திட்டிக்கொண்டாள்!
அவளது கைகள் பாடலை அணைக்கப் போக, அவளது கைகளை பற்றித் தடுத்தவனின் கரங்கள் தந்த குளுமையில் சட்டென்று கரத்தை பின்னெடுத்துக் கொண்டாள் அவனின் மனதை ஆக்கிரமித்திருந்தவள்.
மழையில் நனைந்திருந்தான்!
அச்சூழலில் பார்னில் நின்றிருந்தவனின் உடல் குளுமை ஏறியிருந்தது!
கரங்களை அவள் விடுவித்தவுடன், நக்கலாக புன்னகைத்தவன், அவளைத் துளைத்தெடுக்கும் பார்வை பார்த்தபடியே பாடலின் சத்தத்தை அவன் அதிகரிக்க, அவனை முதலில் முறைத்தவள், அவனின் குத்தும் பார்வை தாங்க இயலாது, அவனின் விழிகளில் வழிந்த குறும்பை பொறுக்க இயலாது வெடுக்கென்று தலையை திரும்பிக் கொண்டாள்.
அவளின் செயலில், அவளின் பின்னங்கழுத்தைப் பிடித்தவன் வெடுக்கென்று தன்னை நோக்கித் திருப்பினான். அனைவராலும் மென்மையானவன், பொறுமையாவன் என்று பெயர் வாங்கும் விக்ரம் அபிநந்தன் அவனவளிடம் வன்மையானவன், முரடன்.
“ஷ்ஷ்” அவள் தன் வலியை வெளிப்படுத்த, அதில் மனம் இளகியவன், அவளது கன்னத்தைப் பற்ற, அவனின் கரங்கள் அவளின் வெண் கன்னங்களில் கொடுத்த குளுமையில் அவளின் விழிகளோ தானாக மூடிக் கொண்டது. வயிற்றினுள் தடதடக்கும் உணர்வுகள்.
வெளியே மழை! உள்ளே புயல்!
அவனின் தொடுகை அவளுக்கு உள்ளுக்குள் பூகம்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்க, பெருவிரலால் அவளின் கன்னத்தை வருடிவன், அவளையே, அவளின் உணர்வுகளையே தனக்குள் உள்வாங்கிக் கொண்டிருக்க, அவளோ அதரங்கள் கடித்து, விரல்களை இறுக்கி தன்னை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தாள்.
சீராக சுவாசிக்க கூட அவனருக்கே சிரமப்பட்டுப் போனது பெண்ணவளின் மூச்சுக்குழாய். திணறிப் போனது அவளின் நெஞ்சுக்கூடு.
உன் திம்மென்ற கன்னத்தில் திம்மென்ற நெஞ்சத்தில் இச்சென்று இதழ் வைக்கவா இச்சைக்கோர் விலை வைக்கவா உன் உம் என்ற சொல்லுக்கும் இம்மென்ற சொல்லுக்கும் இப்போதே தடை வைக்கவா மௌனத்தில் குடி வைக்கவா
என்ற வரிகளின் முடிவில் பெண்வளின் இதழ்கள் தன்னால் பிரிந்துகொண்டது. பிரிந்துகொள்ள வைத்திருந்தான் அவளின் கழுத்தில் வன்மையாய் முகம் புதைத்திருந்தவன்.
அவனின் மேல் இருந்த குளுமையிலும், அவனின் வன்மையிலும் பெண்ணவள் தடுமாறித் திண்டாடிக் கொண்டிருக்க, அவளின் மேல் இருந்து வந்த சூடான மூச்சுக்காற்றும், அவளின் மேனியில் அவனால் பறக்கத் துவங்கியிருந்த அனலும், அவனை போதை கொள்ளச் செய்ய, அவளின் சங்குக் கழுத்தில் இருந்து செவிகளுக்கு வந்தவன், அங்கு தனது சின்னச் சின்ன முத்தங்களை சீண்டலுடன் வைக்க, ‘உம்’ என்று வாய்விட்டு விட்டாள் பெண்ணவள்.
அதில் அவளது கழுத்திற்குள் இருந்தபடி கர்வமாய் புன்னகைத்தவன், அடுத்து அவளது கன்னத்திற்கு வர, அவனைத் தள்ளிவிட முயற்சித்தவளுக்கு அதற்கு சக்தியே வடிந்தாற் போன்று ஆகியது, அவனது கைகள் அவளது டாப்பைத் தாண்டி அவளின் இடையில் பதிந்ததை உணர்ந்து.
இருபத்தி மூன்றின் முடிவில் இருக்கும் மங்கையவள்! முப்பதைத் தொட்டிருக்கும் ஆண்மகன் அவன்!
சுற்றியும் அவர்களின் இடம்!
யாருமற்ற தனிமை!
அவளின் இதழுக்கருக்கில் வந்தவன், இயற்கையிலேயே சிவந்திருந்த அவளின் அதரங்களை தன் பெருவிரலால் அழுத்தமாய் தீண்ட, அவளோ உணர்ச்சிகளை காட்டும் விதமாக அவளின் புஜத்தைப் பற்றிக்கொள்ள அவளை இன்னமும் சீண்ட நினைத்தவன், அவளின் நெற்றியில் இருந்து தன் பெருவிரலால் வருடத் துவங்க, அவளுக்கு அவனின் தொடுகை தந்த உணர்விலும், குளுரிலும் நடுங்கத் துவங்கியது.
விழிகளாலேயே கர்வம் கொண்டு சிரித்தவன், ஏசியை மற்றொரு கையால் குறைக்க, குறைக்க, அவனின் விரல்களும் கீழே இறங்கிக் கொண்டே வர, கழுத்தின் முடிவில் வந்து நின்றவன், அப்படியே நிற்க, அவளின் இதயத் துடிப்பை அவளால் உணர முடிந்தது.
அவனின் கழுத்தின் முடிவில் இருந்த விரல் உணர்ந்தது!
ராஜ தோரணையும், தன் சகோதரன் கற்றுக் கொடுத்த ஆணவமும் அவளிடம் தாண்டவம் ஆடிய போதிலும் தன் முன் குழந்தையாகவும், பெண்மையாகவும் அமர்ந்திருந்தவளைப் பார்த்தவன், அவள் கன்னம் தாங்கி அவளை அருகில் இழுக்க, அவளும் தன்னவனின் இழுப்புக்கு மயங்கிச் சரிந்தாள்.
முதல் முத்தம்!!!
அவனுக்கும் சரி அவளுக்கும் சரி!!!
நாபிக்கும் அடிவயிற்றுக்கும் இடையே சில்லென்ற பனிப்போர்!!!
அவளின் கரங்கள் தன்னவனின் கேசத்தை தன்னுடன் சேர்த்தி அழுத்திக்கொள்ள, அவனின் கரங்களோ எங்கெங்கோ செல்லத் துணிய, முயன்று தன்னைக் கட்டுப்படுத்தியவன், அவளின் இடையை தன்னுடன் மேலும் இறுக்கிக்கொள்ள, இருவருக்கும் அதரங்களை விடுதலை செய்யும் எண்ணமே இல்லாது போக, அடங்காது திமிறிக் கொண்டிருந்த தங்கள் காதலை காட்டிக் கொண்டிருந்த சமயம், இருவரையும் சத்தமிட்டு கலைத்தது மேன்னோவார்.
மேன்னோவார்!
அபிமன்புயின் அரேபியக் குதிரை!
அவனைத் தவிர யார் தன் மீது ஏறினாலும் கீழே தள்ளிவிடும் அடங்காத ஆங்காரமும், தெவிட்டாத திமிரும், அச்சுறுத்தும் ஆக்ரோஷமும் கொண்ட அபிமன்யுவின் மேன்னோவார்.
அது எவராக இருந்தாலும் சரி!
மேன்னோவாரின் சப்தத்தில் மிரண்டு போன நறுமுகை அவனிடமிருந்து பதறிப் போய் விலக முனைய, மேன்னோவரின் குரல் தன்னை கலைத்தாலும் விலக நினைப்பவனா அவன்!
அவனின் நெஞ்சில் கை வைத்து தள்ளியவள், விலகி அமர்ந்து கொண்டு உடையை சரி செய்ய, “ம்ம் நாட் பேட். நைஸ் மார்னிங்” என்று தன் இதழ்களை சுவைத்தபடி கூறியவனை அவள் முறைக்கக் கூடப் பிடிக்காது, நேரே வெறித்துக் கொண்டு அமரந்திருக்க, கேலியாய் புன்னகைத்தவன், காரிலிருந்த கண்ணாடியில் தலையை அழுந்தக் கோதியபடி, காரிலிருந்து இறங்க, நறுமுகையின் மனம் மீண்டும் பற்றி எரிய, ஸ்டியரீங்கை இறுக்கி பிடித்து, நரம்புகள் கைகளில் வரியாய் தெரிய அமர்ந்திருந்தாள் அவள்.
அவளைத் தணிக்க இனி முடியாவே முடியாது என்று நினைத்த முகில்களுமே ஓடி ஒளிந்து கொண்டது.
வீட்டிற்கு வந்தவள், தனது காரை ஷெட்டில் கூட விடத் தோன்றாது, அப்படியே நிறுத்திவிட்டு, டிரைவரிடம் கார் கீயைத் தூக்கி போட்டவள், வீட்டிற்குள் வர, வரவேற்பறையில் அமர்ந்து செய்தித்தாளை படித்துக் கொண்டிருக்கும் அன்னையை பார்த்தும், அவர் தன்னை பார்ப்பதை உணர்ந்தும் கண்டும் காணாது அறைக்குள் விரைவாகவே நுழையும் பொருட்டு, மாடிப்படிகள் ஏறியவளின் கால்கள், அபிமன்யுவின் அழைப்பில் சட்டென நின்றது.
“நறுமுகை” என்ற அபிமன்யுவின் அழைப்பிலும், கணீரென்று கர்ஜிக்கும் குரலிலும், மன அதிர்ச்சியில், அதிபயங்கரமான சூழ்நிலையில் மாட்டியது போல் உணர்ந்து, இதயத் துடிப்பு நிற்பதைப் போல இருந்ததது நீரஜாவின் மகளுக்கே!