ஆட்டம்-15

ஆட்டம்-15

ஆட்டம்-15

அறைக்குள் உத்ராவுடன் நுழைந்த திலோத்தமை, “உப்ப்ப்ப்ப்” என்று ஊதிக் கொண்டு உத்ராவின் மேலிருந்த தன் கரத்தை எடுத்துக் கொள்ள, அப்போது தான் உத்ராவிற்கும் உயிர்ப்பே வந்தது போல இருந்தது.

முகம் பதட்டத்தில் இருந்து இளக, உடல் இறுக்கத்தில் இருந்து தளர ஆழ்ந்த மூச்சை இழுத்து, சுவாசப் பையை நிரப்பி, மீண்டும் ரிலாக்ஸாக மூச்சை விட்டவள், தொப்பென்று ஷோபாவில் அமர்ந்து கொள்ள, அவளையும் அவளின் அசைவுகளையும் மட்டுமே விடாது பார்த்துக் கொண்டிருந்த திலோத்தமை,

“ட்ரெஸ் எப்படி கிழிஞ்சுது?” என்றாள் அவளருகே கூலாக அமர்ந்து கொண்டு.

அவளை பக்கவாட்டாக திரும்பி முறைத்த உத்ரா, தனது ஷ்ரக்கை கழற்றியபடியே, “இதுக்கு தான் போகாதன்னு சொன்னேன் திலோ” என்றாள் சூடாக.

ஆனால், கோபமோ அவனின் தங்கை மேல் அல்ல. அவனின் மீதே.

தனது ஷ்ரக்கை கரத்தில் விரித்துப் பார்த்தவளுக்கு, அது கிழிந்த இடத்தைப் பார்க்க, அபிமன்யுவின் வலுவான கரங்களின் முரட்டு பிடியே ஞாபகம் வர, அவளின் மென் உள்ளத்தில், அவளுடைய ஆடவணின் அதி வன்மையான பிடியே மீண்டும் மீண்டும் கண்முன் வர, தனது ஷ்ரக்கையே வெறித்துக் கொண்டிருந்தாள்.

எதற்கு அவ்வாறு அச்சம் கொண்டோம் என்று அவளுக்குத் தெரியவில்லை. அதனை நினைக்கும் போதே அவளுடைய இளம் தளிர் மேனி தூக்கிவாரிப் போட்டது.

உத்ராவின் முக மாற்றங்களையும், இடையில் தோன்றிய சிறு சிறு உணர்வுகளையும் அவளையே பார்த்துக் கொண்டிருந்த திலோத்தமை உன்னிப்பாக கவனிக்க, அவளை திரும்பிப் பார்த்த உத்ரா, “உன் அண்ணன் தான்டி” என்றாள் கடுப்பாக.

அதில் திலோத்தமைக்கு சிரிப்பு வர, உதடுகளை குவிப்பது போல சுருக்கி, தன் அழகிய விழிகளை இடுங்க வைத்துக் கொண்டு பொத்துக் கொண்டு வரும் சிரிப்பை அடக்கிக் கொள்ள, உத்ராவோ அதை கவனிக்கும் மனநிலையில் இல்லை.

எழுந்து சென்று உடையை மாற்றிக் கொண்டு டி ஷர்ட்டும் நைட் பாண்ட்டும் அணிந்துகொண்டு வந்தவள், மீண்டும் அதே இடத்தில் கால்கள் இரண்டையும் மடக்கி, கரங்களால் சுற்றிப் பிடித்துக் கொண்டு யோசனையுடன் அமர, “இப்ப எதுக்கு இவ்வளவு யோசிக்கற உத்ரா?” என்று கேட்டாள்.

அவளின் கேள்வியில் அவளைத் திரும்பிப் பார்த்த உத்ரா அழுத்தமாக ஒவ்வொரு வார்த்தைகளையும் உச்சரித்தாள்.

“உன் அண்ணா ரொம்ப அர்ரோகென்ட்!”

இவ்வரியை கூறும் போதே அவளின் குரலிலும் சரி, வார்த்தகைளிலும் சரி தன்னை மீறிய கோபமும், ஏன் என புரியாத ஆதங்கமும் அடிக் குரலில் இருந்து எதிரொலிக்க, “அண்ணா ஒண்ணும் அப்படி இல்ல உத்ரா” என்றாள் திலோத்தமை தன்மையாக.

“ப்ச் உனக்கு தெரியாது விடு” என்றாள் உத்ரா பழைய ஞாபகங்கள் அவளின் ஆழ் மனதில் அலைமோதத் துவங்க.

முதல்முறை அவனை பொள்ளாச்சியில் வைத்து சந்தித்தது நினைவு வந்தது பெண்ணவளுக்கு. வேஷ்டி சட்டையில் அதீத ராஜகரிகமான கம்பீரத்தில் இருந்திருந்தான். அப்போதே அப்படி இருந்தவன் இப்போது நளின வார்த்தகைளாலும், அழகிய இலக்கியத்தாலும் வர்ணிக்க இயலாத நிலையில், இடத்தில் இருந்திருந்தான்!

ஆனால், முதல் சந்திப்பிலேயே அவளை வருத்தமடைய வைத்திருந்தான், தன்னுடைய திமிர் மிகுந்த புறக்கணிப்பால். தங்கையிடம் மட்டும் அழகாய் சிரித்துப் பேசி அவளை அவமானப்படுத்தியது போலவே அன்று அவளுக்கு பதிந்து போனது.

அன்று சிறிய வயதில் பதிந்ததை மாற்ற முடியாது அல்லவா!

சில உணர்வுகள் எவ்வாறு பதிந்ததோ அவ்வாறே தான் நிரந்தரமாய் இருந்துவிடும். சிறிய வயதில் மறக்க முடியாத அளவிற்கு நடந்தது சிலதை நினைத்தால், அந்த வயதில் எவ்வாறு உணர்ந்தோமோ அவ்வாறே உணர வைக்கும். ஏதோ அந்த வயதில் இப்போது இருப்பதை போலவே, நிகழ்காலத்திலும் உணர வைத்துவிடும்.

பலர் அதை தூசு போல் தட்டிவிடுவர். சிலர் மட்டுமே அதை மனதில் வைத்து அலட்டிக் கொண்டிருப்பர். அதில் இரண்டாவது ரகத்தில், கோபத்தில் தத்தளித்துக் கொண்டிருந்தாள் உத்ரா விஜயவர்தன்.

சித்தார்த் அபிமன்யுவின் வருங்கால மணவாட்டி!

“ஏன் இவ்வளவு காம்ப்ளிக்கேட் பண்ணிக்கறே?” உத்ராவின் நாடியை பிடித்துத் திருப்பி, திலோ வினவ, விழிகள் அலைபாய யோசித்தவள்,

“உனக்கு நான் முதல் தடவை இங்க வந்தது ஞாபகம் இருக்கா?” என்று கேட்டாள்.

“ம்ம்” திலோ யோசனையுடன் தலையாட்டி வைக்க,

“அப்பவே உங்க அண்ணா என்கிட்ட சரியா பிஹேவ் பண்ணலடி” என்றாள் பெண்ணவள் சின்னக் குரலில்.

அது திலோத்தமைக்கும் நினைவிருந்தது. ‘ஆனால் அண்ணா நேரடியாக இவளிடம் எதுவும் நடந்து கொள்ளவில்லையே’ நினைத்துக் கொண்டாள்.

“நான் ஏஜ் அட்டெனட் பண்ணது எப்ப தெரியுமா?” என்றவள், அனைத்தையும் சொல்லி முடித்து, “உன் அண்ணாக்கு நான் என்ன பண்ணன்னு தெரியலடி. என் தங்கச்சிகிட்ட பேசுவாராம். நான் ஆகாத மாதிரி இருப்பாராம். சின்ன வயசுல இருந்தே இப்படித்தான். எப்ப பாரு முறைச்சு முறைச்சு பயமுறுத்திட்டு. நல்லா பாண்ட்டுக்குள்ள நண்டு நுழைஞ்சிட்ட மாதிரி மூஞ்சிய வச்சிட்டு. ஒவ்வொரு வருஷமும் மித்ரா பர்த்டேக்கு விஷ் பண்ணுவாரு தெரியுமா?”

“இவளும் விஷ் பண்ணுவா. அதை வச்சு சீன் வேற போடுவா அந்த குரங்கு. நறுமுகைகிட்டேயும் நல்லாதானே பேசறாரு.. பர்ஸ்ட் டைம் பாத்தப்ப இருந்தே ஒண்ணு இன்சல்ட் பண்றாரு இல்ல முறைச்சு பயப்படுத்தறாரு. என்னை கண்டாவே வெறுப்பா பாக்கறாருடி. இப்ப பாரு இழுத்த இழுப்புல ட்ரெஸை கிழிச்சு.. ச்ச.. சில டைம் இதெல்லாம் கனவா வந்திருக்கு தெரியுமா.. அதே மாதிரி நறுமுகையோட அம்மா என்கிட்ட பேசவே மாட்டாங்க. யாரோ வெளி ஆளு வந்த மாதிரி போவாங்க. வொய் திஸ் மச் ஹேட் ஆன் மீ (Why this much hate on me?)” கூர் நாசி கோபத்தில் சிவக்க, விழிகளில் தெரியாத தேடல் தத்தளிக்க, இத்தனை வருடங்களாக மனதிற்குள் வைத்திருந்த அனைத்தையும் அடக்கமாட்டாமல் கேட்டேவிட்டாள்.

பெண்ணவளின் மனதில் அது அழுத்தங்களாக அழுத்திக் கொண்டிருந்தது. அதுதான் இன்று வெடித்துவிட்டாள். எரிமலையாய் அல்ல. பூவாய். மென் பெண்ணவளின் கோபங்கள் அவ்வளவு தான்.

அவளின் ஒவ்வொரு வார்த்தைகளையும் கவனித்துக் கொண்டே வந்த திலோத்தமைக்கு உள்ளத்தில் உதித்தது இரண்டே இரண்டு கேள்விகளே. அக்கேள்விகளுக்கு அருகில் அமர்ந்திருப்பவளுக்கு விடை தெரியாது என்று தெரிந்தும் அக்கேள்வியை கேட்டாள். அக்கேள்விகள் அவளின் அடி மனதை பதம் பார்த்து, அவளை குழப்பிவிடப் போவதை அறியாது பேதைப் பெண்ணவளும் கேட்டாள்.

“உத்ரா நான் உன்னை இரண்டு கேள்வி கேக்கட்டா?” எதிரில் இருந்த சுவரை யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தவளிடம் திலோ வினவ, “ம்ம்” அதரங்களை தன் அதீத யோசனைகளில் சுழற்றியபடி.

“உனக்கு ஏன் அபி அண்ணா மத்த பொண்ணுங்க கிட்ட பேசறது பொசசிவ் ஆகுது?” அவள் உத்ராவின் முகத்தை கூர்ந்து துளைத்தபடி கேட்க, அவளின் கேள்வியில் உதட்டை வளைத்து கேலியாய் புன்னகைத்தவள்,

“அப்படி எல்லாம் இல்ல” என்றாள்.

“அப்புறம் ஏன் அதையே சொல்லி சொல்லி பேசற? சின்ன வயசுல நடந்ததை ஏன் இவ்வளவு சீரியஸா எடுத்துக்கிற?” திலோத்தமை சரியான இடம் பார்த்து கேள்விகளை வெடுக்கென்று பிடிக்க, உத்ராவுக்கு என்ன பதில் கூறுவது என்று புரியவில்லை. தடுமாறிப் போனாள்.

தலைக்குள் இருக்கும் அனைத்தும் அவளுக்கு அங்கு இங்கு என்று இடிக்க, அவளையே விழி அகலாது பார்த்துக் கொண்டிருந்த திலோத்தமை, “நீரஜா அத்தை ஏன் கல்யாணம் பண்ணிக்கலனு உனக்கு தெரியாதா?” என்று வினவ, ‘இல்லை’ என்பது போல தலையாட்டினாள் உத்ரா.

எதுவோ அவளுக்கு சரியில்லை என்று சொல்ல, அவளுக்கு மூளையில் ஒரு பளிச்சிடல். ‘வேண்டாம் நான் நினைத்ததாக மட்டும் இருக்கக் கூடாது’ என்று அவள் பதட்டத்துடன் கடவுடளிடம் வேண்ட, உண்மையையும் நடந்ததையும் எப்படி அவரால் மாற்ற இயலும்.

கடவுளே நினைத்தாலும் நடந்த விஷயங்களை மாற்ற இயலாது அல்லவா!

திலோத்தமை அனைத்தையும் கூற, கால்களை மடக்கி பிடித்து அமர்ந்திருந்தவளின் கைகள் தளர, கால்கள் கீழே இறங்கியது. நெஞ்சை யாரோ உயிருடன் பிளந்து தனது உதிரத்தை வெறியுடன் குடிப்பது போன்ற வலியை உணர்ந்தாள் அவள்.

அஞ்சனமிட்ட விழிகளில் ஈரம் கோர்த்து கலங்கியது. தொண்டை பேரதிர்ச்சியில் அடைக்க அவளால் தனது உணர்வுகளை உதிர்க்க கூட இயலவில்லை.

“உத்ரா நீ அழணும்னு சொல்லல.. நான் உனக்கு தெரிஞ்சிருக்கும்னு நினைச்சேன்.. இரண்டு அண்ணாவுக்கு அத்தை மேல ரொம்ப பாசம்.. சின்ன வயசுல இரண்டு பேருக்குமே, அத்தை தனக்கு தான்னு அங்க ஆரம்பிச்ச சண்டை.. இரண்டு பேரும் அத்தை வந்தா அவங்க கூடவே தான் படுத்து தூங்குவாங்களாம்.. அத்தை இப்படி எல்லாம் முதல்ல கிடையாதாம் உத்ரா.. ரொம்ப ஜாலியா உன்னை மாதிரி சிரிச்சுட்டே சுத்தீட்டு இருந்தவங்களாம்.. அவங்க லைஃப்ல அன்னைக்கு நடந்தது அப்படியே அவங்களை மாத்திடுச்சு.. நறுமுகையும் அத்தையோட சொந்த பொண்ணு கிடையாது” திலோத்தமை கூற, அடுத்தடுத்து திலோத்தமை கூறும் செய்திகளை மலர்போன்று மென்மையான மனம் கொண்டவளால் ஏற்கவே முடியவில்லை.

“என்ன சொல்ற? அப்ப அவங்க அடுத்து கல்யாணமே பண்ணிக்கலையா?” அவளின் இதழ்கள் அதிர்ச்சியில் ஒட்டாது கேட்க,

“பண்ணவே இல்லைடி.. நறுமுகை அவங்க தத்தெடுத்த பொண்ணு” என்றாள் திலோத்தமை அவளின் கரத்தை தன் கரத்திற்குள் வைத்தபடி.

“அப்ப இரண்டு பேரோட கண்ணும் ஒரே கலர்ல இருக்கு?”

“அதுதான் நறுமுகையை தத்தெடுக்க காரணமோ என்னமோ.. நாங்க யாரும் அதை பெருசா எடுத்துக்கல.. ஏன்னா இப்ப வரைக்கும் நாங்க நறுமுகையை அப்படி பாத்ததே இல்ல உத்ரா..” என்று தனக்கு தெரிந்தது அனைத்தையும் உத்ராவிடம் ஒப்பித்துவிட்டாள் திலோத்தமை.

ஒன்றை தவிர!!!

சொத்து விஷயம். அது அவளுக்கும் தெரியாது. யாரும் அவளுக்கு சொல்லவும் இல்லை. இதையே அவள் துருவி துருவி கேட்டதால், கோதை மகளுக்கு கூறியிருந்தார்.

“எங்க அம்மானால தான் எல்லாரும் பிரிஞ்சாங்களா?” என்று கேட்டவளுக்கு மனம் பாரமாய் கனத்தது. மிகுந்த அவமானமாகவும் இருந்தது. குற்ற உணர்வு பேரலையாய் தலைதூக்கியது.

இப்போது அபிமன்யுவின் கோபமும், வெறுப்பும், ஆங்காரமும் ஏன் என்று புரிந்தது. அவனின் ஆங்காரம் தெறிக்கும் உணர்வுகள் தவறில்லை என்று தோன்றியது.

“இருந்தாலும் விக்ரம் மாமா அளவுக்கு..” அவள் கூற, கையெடுத்தே கும்பிட்டுவிட்டாள் திலோத்தமை. அவளும் எத்தனை முறைதான் ஒன்றையே கேட்டு காதைக் கருக்கிக் கொள்வாள்.

கையை தலைக்கு மேல் வைத்தவள், “அம்மா தாயே விட்ரு” என்று கூற, இருவருக்குமே சிரிப்பு வந்துவிட்டது.

“இங்க பாரு உத்ரா.. அபிமன்யு அண்ணா அங்கங்க ரியாக்ட் பண்ணுவாங்க. அதிகமா பேசலனாலும், பாத்து பாத்து கவனிச்சுட்டு இருப்பாங்க.. அதிகமா இப்ப பேசலனாலும் என்னோட ஒவ்வொரு டீடெயில்ஸும் அண்ணாக்கு தெரியும். என் ப்ரண்ட்ஸ், யாருகூட பேசறேன் பழகறேன்னு தெரியும். ஆனா, விக்ரம் அண்ணா நீ நினைக்கற மாதிரி இல்ல.. பாக்க தான் சிரிச்சுட்டு இருப்பாரு.. ஆனா கோபம் வந்துச்சு, அவ்வளவு தான் எல்லாரும். அபி அண்ணாவோட கோபம் அவங்கவங்கள மட்டும்தான் பாதிக்கும்.. அவங்க வாழ்க்கைல மறக்க முடியாத மாதிரி பண்ணிடுவாரு.. ஆனா விக்ரம் அண்ணாவோட கோபம் சுத்தி இருக்கிற எல்லாரையும் பாதிக்கும்..” என்றவள் பின் இதழ்தள் விரிய அழகாய் சிரித்து,

“ஆனா அவங்களை தாண்டி தான் எதுவா இருந்தாலும் நம்ம ஃபேமிலியை டச் பண்ண முடியும்” என்றாள் கர்வமாக. இப்படி இரண்டு சகோதரர்கள் ஒருவருக்கு ஒருவர் சளைக்காது இருந்தால் யாருக்குத் தான் இருக்காது, தலைக்கு மேல் கர்வமும், பெருமையும்.

அதில் புன்னகை புரிந்த உத்ரா, “அப்புறம் எப்படி உன் லவ் மேட்டர் மட்டும் தெரியல” என்றாள் கேலியாக.

“அதுக்கு மட்டும் அந்த கடவுள் எனக்கு ஹெல்ப் பண்றான் போல” என்றவள், “அதுவும் இல்லாம இரண்டு பேருக்கும் ரொம்ப க்ளோஸான ஆளுங்கறனால நான் இன்னும் மாட்டல போல” என்றாள் அமைதியாக இருக்கும் அறைக்குள்ளேயே கிசுகிசுப்புடன்.

அவ்வளவு பயம் பெண்ணவளுக்கு, இந்த விஷயத்தில் தன்னுடைய சகோதரர்களின் மீது!

“ஹம்” என்று பெருமூச்சுவிட்ட உத்ரா, அப்படியே படுக்கையில் சாய்ந்து விட்டத்தை வெறித்தாள். அவளுக்கு மேலே பகட்டான சீலிங்கில் இருந்து வந்த சான்டலியர் லைட்டின் ஒலி, அவளின் விழிகளை மயக்கியது. பனிப் பந்தைப் போன்று வடிவமைக்கப்பட்டிருந்த சான்டலியர் லைட்டை பார்த்துக் கொண்டே இருந்தவள், “எல்லாரும் ஒண்ணா இருந்திருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும்?” கேட்க,

“இப்ப கூட நாம எல்லாம் ஒண்ணா இருக்கலாம்” என்றாள் திலோத்தமை அவளுக்கு அருகே ஒருக்களித்து படுத்தபடி.

அவளைப் பக்கவாட்டாக திரும்பிப் பார்த்து முறைத்தவள், “ஆமா உன் அண்ணாக்கு அப்படியே மனசு வரும் பாரு” நொடித்துக் கொள்ள,

“நீ அண்ணாவை கல்யாணம் பண்ணிக்கிட்டா ப்ராப்ளம் க்ளியர்” என்று திலோத்தமை கூறியது தான் தாமதம், இதயத்தில் ஓடும் உதிரங்களின் வேகங்கள் சிறுத்தையின் ஓட்டமெடுக்க, ஒவ்வொரு துடிப்பும் ஏவுகணையின் வேகத்தில் பதறி அடிக்க, உடலில் உள்ள அனைத்து பாகங்களிலும் ஆயிரம் சுனாமிகள் எழுந்து தன்னை உள்ளே இழுப்பதை போல ஒரு நொடி உணர்ந்தவள், திலோத்தமையின் வார்த்தைகள் கொடுத்த அதிரடியான அதிர்ச்சியில் படாரென எழுந்துகொள்ள, அவளைப் பார்த்துக் கொண்டு சிரித்தபடியே படிந்திருந்தாள்.

“கம்முனு இருடி.. நினைச்சாலே பயமா இருக்கு” என்று அடிக் குரலில் இருந்து வராத குரலில் கூறியவள், அவளைத் திரும்பி பார்த்தாள்.

“என்ன?” திலோத்தமை புருவத்தை உயர்த்தி கேட்க, இடமும் வலமும், ‘ஒன்றுமில்லை’ என்பது போல் தலையாட்டியவள் கீழே ஓடிவிட்டாள்.

சதுரங்க ஆட்டத்தில் ராணி தனது உயர் மதிப்பின் காரணமாக தந்திரோபாய சேர்க்கைகளில் பாதிக்கப்படக்கூடிய இலக்காக உள்ளார். ராணியை தாக்குவதன் மூலம் சிறிய துண்டுகள் கூட, ப்ரீ மூவீஸ் (free moves) பெறலாம்.

“Queen is a weak defender in chess” என்பது விதி. அங்கேயும் சரி அபிமன்யுவின் சந்திரஞ்சா ஆட்டத்திலும் சரி.

***

ஏ.என்.ஏ நிறுவனம். அரிமா பூபதி, அதியரன் பூபதி, நீரஜா சிம்மவர்ம பூபதியின் பெயர்களின் ஆங்கில முதல் எழுத்தை வைத்து தொடங்கிய நிறுவனம்.

உலக நாடுகளில் உள்ள அனைத்து நிறுவனத்தோடும் ஒப்பந்தமிட்டு, எதிரிகளை எழ விடாது, ஏன் யோசிக்கவும் விடாது அடக்கி வைத்திருக்கும் இரட்டை சர்வாதிகாரிகளின் கைகளில் இப்போது இருக்கும் நிறுவனம்.

நாலு லட்சம் ஊழியர்களை கொண்டு, வருடம் பதினைந்தாயிரம் கோடி டர்ன் ஓவர் செய்யும் நிறுவனம். இது போக ஷாப்பிங் மால்ஸ், சினிமா தியேட்டர்ஸ், எஸ்டேட்டுகள், ஸ்டார் ஹோட்டல்ஸ், தனியார் விமானம், மருத்துவமனைகள், கல்லூரிகள், முக்கியமாக பெட்ரோலியம்.

நிறுவனத்திற்கு பிறகு அவர்களுக்கு அதிக வருமானம் வருவது பெட்ரோலியம்.

கணக்கில் அடங்காத கோடிகள்!

இன்றும் அது சம்மந்தமாகத் தான் கூடியிருந்தனர் அனைவரும்.

சிறிது நேரத்தில் சிம்மவர்ம பூபதி வீடியோ காலில் வந்துவிட, சித்தார்த் அபிமன்யு தனது புதிய திட்டத்தை செயல்படுத்த எழ, அனைவரின் முன் ஆட்டிட்யூடுடன் நின்றவன், ஆண்மை நிரம்பிய கம்பீரத்தோடும், என்றும் எனக்கு குறையாது என்ற நம்பிக்கையோடும் தொடங்கியவன், தனது திட்டத்தை முடிக்கும் வரை, இறகு விழுந்தால் கூட சத்தம் கேட்கும் அளவிற்கு அங்கு நிசப்தம்.

புதிதாக மருத்துவக் கல்லூரி அமைக்கும் திட்டம். அதுவும நீரஜாவின் மருத்துவமனையோடு இணைத்து. மருத்துவக் கல்லூரி வேண்டும் எனறால், மருத்துவமனையும் வேண்டும் அல்லவா!

சரியாகத் திட்டங்களை வகுத்திருந்தான்!

“எம்பிபிஎஸ் மட்டுமா?” சிம்மவர்ம பூபதி கேட்க,

“எஸ். தென் இப்போதைக்கு பிடிஎஸ் படிச்சவங்க நம்ம ஹாஸ்பிடல்ல ப்ராக்டிஸ் பண்றதுக்கு மினிஸ்டர்.ஈஸ்வர மூர்த்தி காலேஜை டையப் பண்ண போறேன். ஆனா கொஞ்ச நாள்ல அதுவும் நம்ம டேக் ஓவர் பண்ணிடுவோம்” என்று சர்வ சாதாரணமாக கூறினான் அந்த பிசினஸ் டைகூன்.

அவனைப் பொறுத்தவரை இது வெறும் சாதாரண விஷயம் தான்.

அனைவரும் அபிமன்யுவின் ஐடியாவை எதிர்க்க, “ஈஸ்வர மூர்த்தியோட ஷேர்ஸ் பாதி என் கையில இருக்கு.. ஸோ அவரு தந்துதான் ஆகணும்” என்று கணீரென்று தீவிரமும், உறுதியும் குரலில் வெடிக்க, அதீத சாணக்கியத் தனம் கர்வமாய் வதனத்தில் திமிராய் அமர்ந்திருக்க கூறினான்.

இருவரும் தான் இத்திட்டத்தை வகுத்தது. திட்டத்தை தொடங்கியது விக்ரம். கச்சிதமாக முடித்திருந்தது அபிமன்யு.

ஆனால், பேசிக்கொள்ள மாட்டார்கள். இருவருக்கும் இடையே இருவரின் பிஏ தான் தலைகளை இடித்துக் கொள்ள வேண்டும்.

“பிடிஎஸ் எதுக்கு?” சாதரணமாக கேட்டாலும், சிம்மவர்ம பூபதி அபிமன்யுவிடம் கேட்டது அவனுக்கு மட்டுமே புரியும். மற்றும் விக்ரமிற்கும்.

விக்ரமின் விழிகளை ஒரு கணம் கண்ட அபிமன்யுவின் விழிகள், புன்னகைக்க, அப்புன்னகையின் பின்னிருந்த வஞ்சகமும், வன்மமும் விக்ரமின் விழிகளிலும் இருந்தும் சரி, சிம்மவர்ம பூபதியின் விழிகளிலும் இருந்தும் சரி தவறவில்லை.

“ஏதாவது ஒரு இடத்துல தொடங்கணும் இல்லியா?” இரட்டை பொருள்பட கூறியவன் தனது உரையை முடித்துக் கொண்டு அமர, அமரும் போது சகோதரர்கள் இருவரின் விழிகளும் சந்தித்துக் கொள்ள, விக்ரமின் விழிகள் நறுமுகையிடம் அழுத்தமாய் செல்ல, அபிமன்யுவிற்கு புரியாது போகுமா?

அப்போதும் ஒரு இளம் மென் நகை அவனிடம்.

மீட்டிங்கை முடித்துவிட்டு நீரஜாவுடன் அபிமன்யு உரையாட செல்ல, அபிமன்யுவின் சொல்லியிருந்த அனைத்தையும் மீண்டும் கண் முன் ஓட விட்டுக் கொண்டிருந்த நறுமுகை, அந்த ப்ரொஜக்டரை மறுபடியும் ஓடவிட்டு கைகளை கட்டியபடி மீண்டும் அதை தனக்குள் பார்த்துக் கொண்டாள்.

‘ஓஹ்.. இதுதான் ப்ளானா.. பக்காவா போட்டிருக்காங்க மாமா’ என்று பின்னே நகர்ந்தவள் இடித்து நின்றது என்னவோ விக்ரமின் கின்னென்ற திடமான முதுகில் தான்.

திரும்பிப் பார்த்தவளின் இதழ்களில் ஆடவணின் விழிகள் பதிய, அவனை முறைத்தவள் மேசையில் இருந்த தனது ஐ ஃபோனை எடுத்துக் கொண்டு அங்கிருந்து நகர முயல,

‘முன்னழகில் தஞ்சாவூரு
பின்னழகில் தாஜூமகால்
கட்டழகில் மைசூர் மகால்
காலலழதில் குதூப்மினார்
மச்ச மேனி பார்க்கும் போது கச்ச தீவுதான்
நீ மாநகரம் இல்லை தலைநகரம்
அந்த காஷ்மீர் முதல் கன்னியாகுமரி
எல்லாம் உன்னோட’

விக்ரமின் இதழ்கள் யாருமில்லாத அந்த மீட்டிங் அறையில் பாடலை பாட, கனலைக் கக்கிக் கொண்டு பெண்ணவள் திரும்ப, அவனோ இரு பாக்கெட்டிலும் கரத்தை நுழைத்தபடி அவளை குறும்பாய் பார்த்துக் கொண்டிருந்தான்.

அடுத்த விநாடி அவளைத் தன் கரங்களுக்குள் வைத்து சுவற்றில் சாய்த்திருந்தான் விக்ரம் அபிநந்தன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!