ஆட்டம்-28
ஆட்டம்-28
ஆட்டம்-28
நொடியில் லட்சம்
கவிகள் பாடி..
காதல் மொழிகள் கூறி..
மிரட்டும் பாஷைகள் பேசி..
எனை நிரந்திரமாய்
உனதிரு தேன் விழிகள் இழுக்குதடி
அம்மாடி!
– விஜய்.
விஜயவர்தன் அருகே அமர்ந்தவுடன் விஜய்யின் விழிகள் நீரஜாவின் மீது ரசனையாய் பதிந்து மீள, வழக்கம் போல தன் இரு விழிகளை சுருக்கி தன்னவனை கவர்ந்திழுத்த நீரஜா, அமைதியாய் அமர,
“என்ன இவ்வளவு நேரம் வெடிச்சுட்டு இருந்த பட்டாசை காணோம்” என்று சுற்றியும் முற்றியும் தேடியபடி விஜயவர்தனை வம்பிழுக்க,
“ஆமா, அந்த ரொமான்ஸ் பட்டாசு தானே?” நீரஜா கேட்க, விஜய் அதில் வாய்விட்டுச் சத்தமாக சிரிக்க, நண்பனின் தோளில் கரம் போட்ட விஜயவர்தன்,
“விஜய்! நானே சொல்றேன்.. நல்லா யோசிச்சுக்க உனக்கு இந்த பொண்ணு வேணுமான்னு.. இதுகூட எல்லாம் பேசி ஜெயிக்க முடியாது பாத்துக்க.. அவ்வளவு தான் நான் சொல்வேன்” என்று அறிவுரையை வேறு கூறி நீரஜாவை வேண்டுமென்றே சீண்டத் துவங்க,
விஜய்யுக்கும் தன்னவளை சீண்டத் தோன்றியதோ என்னவோ, நீரஜாவை பார்த்தவரின் விழிகள் அவரின் வதனத்தில் ஜொலித்துக் கொண்டிருந்த அனலைக் கண்டு அந்த கோபத்தினை ரசித்தபடி, “ஹம் நல்ல ஐடியா தான்” என்று கூறியது தான் தாமதம், விளையாட்டுக்கு கூட அவர்கள் பேசியதை ஏற்க முடியாத நீரஜா, அங்கிருந்து எழுந்து செல்ல,
“அவ்வளவு தான்.. இவரு சொன்னாருன்னு நீங்களும் சொல்லி,, இப்ப பாருங்க” என்று விஜய்யிடம் தலையில் கை வைத்தபடி கூறிய ரஞ்சனி, “ஆல் தி பெஸ்ட்” என்று வரவிருக்கும் புயலுக்கு, அவர் முன்கூட்டியே தன் அனுதாபங்களைத் தலைப்புச் செய்தி வாசிப்பது போல தெரிவித்துவிட,
சிரிப்பு மாறாது எழுந்த விஜய், விஜயவர்தனின் தோளில் அடித்துவிட்டு தன்னவளின் பின்னேயே ஓட, இருவரும் சேர்ந்து கிளறிவிட்டிருந்த நீரஜாவின் கோபம் அவர் நடையிலேயே அப்பட்டமாகத் தெரிய, “நீரஜா!!!” என்று அழைத்தபடி ஓடியவர் தன்னவளின் கரம் பற்றி இழுக்க, வெடுக்கென்று கரத்தை உருவிக் கொள்ள முயன்றவரின் கரத்தை இறுகப் பிடித்தவர்,
“அம்மாடி” என்று ரோஜா இதழே தோற்றுவிடும் மென்மையில் அழைக்க, அவரை நிமிர்ந்து பார்த்த நீரஜாவின் விழிகள் அவரை முறைக்கத் தவறில்லை.
“விளையாட்டுக்கு தானே அம்..” அவர் நீரஜாவை அமைதியாக்க முயல, அவரின் ஆதீத காதலை தனது உண்மையான உள்ளத்தில் சுமந்திருக்கும் நீரஜாவின் சமாதானமற்ற மனமோ,
“அதுக்குன்னு? என்னால விளையாட்டுக்கு கூட இதையெல்லாம் ஏத்துக்க முடியல விஜய்” என்றவரின் விழிகள் கோபத்தையும், அழுகையையும் அடக்கியபடி சிவந்து போக, அவரையும் அவரின் முகத்தில் மாறி மாறி மறையும் உணர்வுகளையுமே பார்த்திருந்தவர், “அழுகப் போறியா?” என்றார் அழுத்தமான குரலில்.
“நான் எதுக்கு அழணும்?” என்றவர் விடுவிடுவென்று கேன்டினிற்குள் நுழைய, ‘சரி இன்னிக்கு வர்தன் நிலைமை தான் மோசம் போல’ என்று நினைத்தபடியே விஜய்யும் பின்னேயே செல்ல, அங்கு சென்று அமர்ந்த நீரஜா,
“ரஞ்சனி உனக்கு ஒண்ணு தெரியுமா? மாமா யூஜி படிக்கும் போது என் ஸ்கூல் ப்ரண்டை லவ் பண்ணாங்க.. சொன்னாங்களா?” என்று கேட்டு வைத்து ஒரு களேபரத்தை உண்டு பண்ணி குட்டையை குழப்ப நினைக்க, அவர் நினைத்தது போலவே ரஞ்சனி நெஞ்சுக் கூடு படபடக்க அதிர்ச்சியும், அச்சமுமாய் விஜயவர்தனை பார்த்தார்.
‘அப்படியா?’ என்று ரஞ்சனியின் விழிகளில் வழிந்த கேள்வியிலேயே, அதில் தெறித்த கோபத்திலேயே விஜயவர்தன் எச்சிலை கூட்டி விழுங்கினார்.
விஜயவர்தனோ திருட்டு முழி முழிக்க, நீரஜா, “எங்க அம்மாக்கு தெரிஞ்சு,, நீரஜா இருக்க நீ என்ன பண்றேன்னு இரண்டே சொட்டு கண்ணீர் தான்.. அவளுக்கும் கல்யாணம் ஆகிடுச்சு.. இவரும்.. ஹம்” என்று பெருமூச்சு விட,
ரஞ்சனி, “என்னங்க இது? உண்மையா? இத்தனை வருஷமா என்கிட்ட மறைச்சிட்டு இருந்தீங்களா?” என்று தனக்கு முன் ஒருவள் இருந்திருக்கிறாள் என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது சண்டையிட, விஜயவர்தன் பாவமாய் விஜய்யை பார்க்க, உதட்டை பிதுக்கி, ‘உன் விதி’ என்பது போல அவர் சிரிக்க,
“எம்மா தாயே.. கொஞ்சம் அமைதியா இரு” என்று தலைக்கு மேல் கரம் வைத்து அக்காள் மகளை கும்பிட்டவர், ரஞ்சனியிடம், “ரஞ்சனி அது சும்மாடி.. உன் மேல வந்த மாதிரி எல்லாம் எனக்கு அந்த பொண்ணுகிட்ட இல்ல.. சும்மா” என்றிட, வாயில் கை வைத்த நீரஜாவோ,
“பாத்தியா ரஞ்சனி.. ஃபாரின்ல இருக்கேன்னு நினைப்பு போல.. டேட்டிங் போனங்கிறதை அப்படியே மசாலா எல்லாம் தூவி எப்படி சமாளிக்கறாங்க” என்று மேலும் எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றி கொளுந்து விட்டு எரியச் செய்த நீரஜாவை முறைத்த விஜயவர்தன்,
“டேய் விஜய்! இவளை கூட்டிட்டு போடா” என்று அவரிடம் கோபமும் கெஞ்சலுமாய் கத்திவிட்டு, ரஞ்சனியின் கரம் மேல் கரம் வைக்கச் செல்ல, அவரின் கரத்தை தட்டிவிட்டவர் கோபமாய் எழுந்து செல்ல, நீரஜா இதழுக்கிடையில் சிரித்துக் கொண்டு அமர்ந்திருக்க, ரஞ்சனியின் பின்னேயே எழுந்து செல்ல எத்தனித்த விஜயவர்தன், விஜய்யிடம் வந்தவர்,
“சரியான பேயை லவ் பண்ணிட்டு இருக்கடா நீ” என்று நீரஜாவின் தலையை பின்னிருந்து தள்ளிவிட்டுச் செல்ல, நீரஜா திரும்பி அடிக்க முனைவதற்குள் அவர் தன் காதலியை சமாளிக்க ஓடத் தொடங்கியிருந்தார்.
நீரஜாவின் அருகே அமர்ந்து அவரின் கரத்தை பற்றியவர், “எதுக்கு அம்மாடி இவ்வளவு கோபம்?” என்று அமைதியாய் வினவ,
“பின்ன ஐடியா நல்லா இருக்கோ.. என்னை விட்டுட்டு இன்னொருத்தியை லவ் பண்றது என்ன.. பாத்தாலே கொன்னுடுவேன் சொல்லிட்டேன்” என்று ஆள்காட்டி விரலை ஆளுமையாய் ஆட்டி, பொறாமையின் உச்சத்தில் உஷ்ணத்துடன் கூறியவரின் நாசி தக்காளி பழமாய் சிவந்திருப்பதை, காதலனாய் மாறி ரசனை வழிய பார்த்தவரின் கரத்தில் கிள்ளி வைத்தவர்,
“என்ன?” என்றார் தாடையை சற்று உயர்த்தி இதழில் கோபமும், விழிகளில் காதலுமாக இணைந்து, மொத்த உருவமாய் திமிரெடுத்து கேட்க, அதில் சொக்கித் தான் நின்றது விஜய்யின் காதல் கொண்ட இதயம்.
மதிய உணவு இடைவேளை முடிந்ததால், அங்கு பயிலும் மாணவர்களுக்கு என்று இருந்த கேன்டினில் யாருமே இல்லை. அங்கு வேலை செய்யும் ஓரிருவரைத் தவிர. அவர்களும் சாப்பிடச் சென்றுவிட, நீரஜாவின் நாசியை பிடித்து இழுத்தவர்,
“ஷார்ப் நோஸ்.. விட்டா குத்தி கிழிச்சிடும் போல” கூறியவரிடம் அவர் முறுக்கிக் கொண்டே அமர்ந்திருக்க,
“அம்மாடி!!! விளையாட்டுக்கு சொன்னது போதுமா. நான் நமக்கு கல்யாணம் ஆகி இரண்டு பொண்ணுகளுக்கு ப்ளான் போட்டு எவ்வளவு கனவுல இருக்கேன்..” என்றவர் நன்றாக சாய்ந்து அமர்ந்து விரலால் அங்கிருந்த டம்ளரை உருட்டியபடியே கூற,
“ம்கூம்..” என்று உதட்டைச் சுளித்தவரின் நாணம் அதனுள் மறைய, “அவங்க இரண்டு பேரும் எவ்வளவு ரொமான்டிக்கா இருக்காங்க தெரியுமா? அவங்களை விடுங்க நம்ம காலேஜ்ல எத்தனையோ பேர் எப்படியோ இருக்காங்க.. நீங்க என்னடானா கன்னத்துல கூட கிஸ் பண்ணது இல்ல.. கேட்டாலும் தர்றது இல்ல.. கல்யாணத்துக்கு அப்புறம்னு சொல்லி மூட் ஆஃப் பண்ணிடறீங்க விஜய்.. பேசாம நான் பையனா பொறந்து நீங்க பொண்ணா பிறந்திருக்கலாம்.. எப்பபாரு என்னை படி படின்னு பாடமா எடுத்து கொல்றீங்க” என்று ஓர விழியால் பார்த்தபடியே கூறியவரை கன்னத்தில் கை கொடுத்தபடி பார்த்த நீரஜாவின் விஜய்,
“எனக்கு எதை தொடங்குனாலும் அப்பவே அதை முழுசா முடிக்கணும் அம்மாடி.. அது எந்த பள்ளியறை பாடமா இருந்தாலும் சரி” என்றவரின் விழிகள் முதன்முதலாக தாபமும் மோகமும் கலந்து நீரஜாவை குத்திக் கொய்து மேலிருந்து கீழ் பார்க்க, அவரின் பார்வையில் நெஞ்சில் இருந்த இதயம் தொண்டைக் குழிக்குள் வந்து சிக்கி நாணத்தில் தவிக்க, கன்னங்கள் அவரின் பார்வை வீச்சில் குறுகுறுக்க, கால்கள் விரல்களை இறுக்கி உணர்வுகளை கட்டுப்படுத்தியவர்,
“போதும் உங்க லுக்” என்றார் இதழ்கள் வெட்கத்தில் அதிர்ந்து துடிக்க.
சட்டென அவரின் கை முட்டிக்கு மேலே கரத்தை பிடித்து அருகே இழுத்தவர், “இதுக்கே இப்படி வெக்கப்பட்டா? நான் எவ்வளவோ நினைச்சிருக்கேன்” என்றவர் நீரஜாவின் காதில் சிலதை கூற,
“ச்சீ போங்க” என்று அவரின் நெஞ்சில் கரம் வைத்து தள்ளியவர், “இனிமேல் கல்யாணம் வரைக்கும் பக்கத்துல வந்திடாதீங்க நீங்க.. எப்படி எல்லாம் யோசிக்கறீங்க” பாதி வெட்கம் பாதி திகைப்பாய் முகத்தை சுளித்தவர்,
“இருங்க இருங்க.. கல்யாணத்துக்கு அப்புறம் எங்க அண்ணன் பசங்களை நான் ரூமுக்கு தூக்கிட்டு வந்து வச்சுக்கறேன்” என்று மிரட்ட,
“எது அந்த இரண்டு வில்லனுகளையா?” பொய்யாய் அதிர்ந்த முகத்துடன் விஜய் கேட்க, அவரின் தோளில் அடித்த நீரஜா,
“குழந்தைகள அப்படி சொல்லாதீங்க” என்று திட்டினார்.
“நீ எவ்வளவு அடிச்சாலும் அவனுக வில்லன்ஸ் தான்டி..” என்று கூற,
“வருங்கால மருமகனுக மேல ஒரு மரியாதை இருக்கா?” நீரஜா விஜய்யிடம் அதை சொன்னது தான் தாமதம், நெஞ்சம் வெடித்தது போன்று அதிர்ந்து இதயத்தின் மேல் கை வைத்தவர்,
“எது என் பொண்ணுகளுக்கு அவனுகளா? கிளிகளை வளத்து குரங்குககிட்ட தர சொல்றியா?” கேட்டேவிட்டார் விஜய்.
தன் இரு செல்வங்களை குரங்குகள் என்று கூறிய காதலனின் மீது சினம் கொண்டு பட்டு பட்டென்று விளாசியவர், “எது என் அண்ணன் பசங்க மட்டும் குரங்கு உங்க பொண்ணுக கிளியா? நீங்க வேணா பாருங்க உங்க இரண்டு பொண்ணுகளும் அவங்ககிட்ட மயங்கி விழல” என்று சொடக்கிட்டு தெனாவெட்டாய் அவர் வாய் வைக்க, தான் இன்று சொல்வது தான் நிஜத்தில் பலிக்கப் போகிறது என்று அன்று அறியவில்லை.
நீரஜாவின் அடித்துக் கொண்டிருந்த இரு கைகளையும் பிடித்தவர், “ஆமாடி, என் பொண்ணுக கிளிதான்.. ஆனா கண்டிப்பா அவனுக வில்லன்ஸ் தான்.. அதுவும் அந்த அபிமன்யு இருக்கான் பாரு, அவனுக்கு எல்லாம் சான்ஸே இல்ல என் பொண்ணு” என்றிட,
“இங்க பாருங்க.. அபி, விக்ரமை ஏதாவது சொன்னீங்க அப்புறம் அவ்வளவு தான்” என்று மிரட்ட,
“சரி சரி கூல்” என்று நீரஜாவின் கரத்தை விட்டவருக்கு முதலிலேயே தெரிந்து விட்டதுபோல இந்த இரு இளவரசர்கள் தான் தங்களின் இளவரசிகளுக்கு என்று எழுதி வைத்தது.
வருங்காலத்தில் சிலது நடக்கும் போது.தான் புரியும், சிலது ஏன் கடந்த காலத்தில் நமது வாயில் விழுந்தது என்று!
நீரஜாவின் காதலை விஜய் ஏற்ற அடுத்த வாரமே நீரஜாவை பார்க்கவென்று கல்லூரிக்கு குடும்பமே வந்திருக்க, அவர்களுடன் பேசிக் கொண்டிருந்த நீரஜா, மூன்று வயதான அபிமன்யுவை ஒரு கரத்திலும், அதைவிட சிறிவனாய் இருந்த விக்ரமை ஒரு கரத்திலும் எடுத்துக் கொண்டு, “நான் இவங்களுக்கு காலேஜை சுத்தி காட்டிட்டு வர்றேன்” என்று விஜய்யிடம் காட்ட இருவரையும் எடுத்துச் சென்றார்.
“விஜய்!!!” என்று தன்னை அழைத்த நீரஜாவின் குரலில் திரும்பிய விஜய் இனிமையாய் அதிர்ந்து போனார்.
நீரஜாவின் இரு பக்கங்களிலும் குட்டி அபிமன்யுவும், குட்டி விக்ரமும் அமர்ந்திருக்க, அந்த அழகை பார்த்த அன்றே முடிவு செய்துவிட்டார் விஜய், தனக்கு இரு குழந்தைகள் தான் என்று. அதுவும் பெண் குழந்தைகள் தான் வேண்டும் என்று.
நீரஜாவின் அருகே வந்த விஜய், “இதுதான் நீ பில்ட் அப் குடுத்த இரண்டு டைகர்ஸா?” என்று கேட்டு இருவரின் கன்னத்தையும் தட்டியவரை, விக்ரம் அமைதியாய் நீரஜாவின் தோள்களில் சாய்ந்தபடியே பார்த்துக் கொண்டிருக்க, அபிமன்யு அழுத்தமாய் பார்த்துக் கொண்டிருந்தான்.
“ஆமா.. இது அபி.. இது விக்ரம்” என்று அறிமுகம் செய்து வைத்தவர், “இதுதான் அத்தையோட பிரண்ட்.. மாமாக்கு ஹாய் சொல்லுங்க..” என்று கூறிய நீரஜாவை அபிமன்யு எதுவும் பேசாது பார்க்க, ‘பயபுள்ள எதுக்கு இப்படி பாக்குது’ என்று யோசித்த நீரஜா, ‘கூட்டிட்டு வந்தது டேன்ஜர் போலையே’ என்று நினைத்து,
மீண்டும், “ஹாய் சொல்லுங்க” என்றிட, விக்ரம், “ஹாய் மாமா” என்று கூற, அபிமன்யுவோ, “இவங்க எனக்கு மாமாவா?” என்று யோசனையாய் கேட்க, ‘போச்சு போச்சு’ மனதுக்குள் பதறிய நீரஜா,
“சரி, ஹாய் அங்கிள் சொல்லுங்க” என்றார் சிரித்துக் கொண்டே.
அபிமன்யுவின் தலையை வருடிய விஜய், “ரொம்ப கற்பூரம் போலையே” என்றிட அவரை பார்த்த அபிமன்யு,
“ஹாய்” என்று மட்டும் கூற, நீரஜாவை பார்த்த விஜய், “உங்கப்பா ட்ரெயினிங் தானே இரண்டு பேரும்?” என்று கேட்க, பெருமையாய் தலையாட்டிய நீரஜாவிடம்,
“அதுனால தான் இப்படி இருக்காங்க” என்று தந்தையை இழுத்து வம்பிழுந்த விஜய்யை நீரஜா முறைக்க, அபிமன்யுவும், விக்ரமும் எதிரில் இருப்பவர் ஏதோ சொல்வது புரிந்தும் புரியாமல் முறைத்து,
“தாத்தாகிட்ட சொல்லிடுவோம்” என்று ஒருசேர கூறி விஜய்யை மிரட்ட,
“நான் ஒண்ணு சொல்றேன்.. அதை சொல்லிடறீங்களா? எனக்கு இன்னும் கொஞ்ச வருசத்துல வந்து பேச தேவையில்ல.. ஈசியா இருக்கும்” என்று சிரித்துக் கொண்டே கூற, “விஜய்!!!” என்று சிணுங்கலாய் அதட்டினார் நீரஜா.
“பசங்களா மாமாவை பாத்து பேட் சொல்லுங்க.. நாம போகலாம்” நீரஜா கூற, இருவரும் கரத்தை உயர்த்தி, “பேட்! பேட்!” என்று உற்சாகமாய் கத்த,
“ஊசி போட்டிடுவேன்” என்று மிரட்டியவர், ஓபி(OP) வந்திருப்பதாக சக மாணவன் வந்தழைக்க கிளம்பிவிட்டார்.
திரும்பி வந்தவுடன் அபிமன்யு, “தாத்தா அங்க ஒருத்தங்களை பாத்தோம்” என்று கூற, விக்ரமும், “அவங்க பேட்” என்றிட, யோசனையாய் மகளை பார்த்த சிம்மவர்ம பூபதியிடம்,
“அது ஒண்ணும் இல்லப்பா.. எங்க சீனியர்தான்.. எதிர்ல வந்தவரு சும்மா பாத்து யாருன்னு கேட்டுட்டு போனாரு” என்று ஒருவாராக சமாளித்து வைத்து, அன்று தந்தையிடம் இருந்து தப்பித்தும் இருந்தார்.
தந்தையிடம் இருவரும் போட்டுக் கொடுத்ததை நீரஜா கூறியிருக்க, அப்போதிலிருந்து விஜய்யுக்கு இருவரும் வில்லன்ஸ் தான். மனதார குழந்தைகளை அப்படி சொல்லியது இல்லை. விளையாட்டுக்காகவும், நீரஜாவையும் சீண்டுவதற்காகவும் தான் கூறி அடி வாங்குவார்.
விஜயவர்தன் முதுகலை முடித்துவிட்டு ஊரில் தனது ப்ராக்டிசை தொடர, விஜய் இங்கேயே மற்றொரு துறையை மீண்டும் படித்தார். பெண்கள் இருவரும் ஐந்தாவது வருடமான ஹவுஸ் சர்ஜனை வந்துவிட, விஜய்யும் இரண்டாவது முதுகலையை முடிக்கும் நாளை எண்ணிக் கொண்டு இருந்தார்.
இப்படியே சண்டையும், அடியுமாக அன்றைய தினம் நகர, விஜயவர்தன் அன்று இரவு ஊருக்கு கிளம்பிவிட, ஐந்து மாதங்கள் கடந்த நிலையில், மூவருக்குமே அவரவர் படிப்பு முடிய இருந்தது.
இனி ஊருக்குச் சென்றுவிட்டால் விஜயவர்தனை அடிக்கடி சந்திக்க இயலாது என்று நினைத்த ரஞ்சனி, நீரஜாவின் அலைபேசியில் இருந்து ஒரு நாள் பேசும் பொழுது, “ப்ளீஸ்ங்க.. அப்புறம் நீங்க நினைச்சாலும் பாக்கவே முடியாது நம்மனால.. ஸோ ஓகே சொல்லுங்க.. இவங்களும் வருவாங்க இல்ல” என்று கேட்க,
“வேணாம் ரஞ்சனி.. நீரஜா வேற இருப்பா.. அதெல்லாம் வேணாம்..” என்று அவர் மறுக்க,
“அவ என்ன குழந்தையா?” ரஞ்சனியும் விடாமல் பேச,
“வேணாம் ரஞ்சனி. கல்யாணத்துக்கு முன்னாடி தங்கிறது எல்லாம் சரி இல்ல.. எங்க இருந்துடி வந்துச்சு உனக்கு இவ்வளவு தைரியம்” அவர் கடினமான குரலில் எரிச்சலாக எகிறிவிட, ரஞ்சனியின் மனம் அதில் அடிபட்டுத் தான் போனது.
“ஏங்க நான் என்ன தப்பா கேட்டேன்.. காலேஜ் முடியப் போகுது.. ஸோ எங்காவது போய் இரண்டு நாள் டைம் ஸ்பென்ட் பண்ணலாம்னு தானே கேட்டான்.. தப்பு பண்ணவா கூப்பிட்டேன்” கரகரத்த குரலில் கேட்டவர்,
“சரி விடுங்க.. ஸாரி.. தெரியாம கேட்டுட்டேன்” என்று ஃபோனை அணைத்துவிட்டு, நீரஜாவிடம் தந்தவர், குளியலறைக்குள் செல்லும் பொழுதே தோழியின் முதுகு குலுங்குவதை கண்ட நீரஜா, யோசனையுடன் விஜயவர்தனுக்கு அழைத்து, விஷயம் அறிந்தார்.
“மாமா உனக்கு அறிவு இருக்கா?” பட்டென்று கேட்டே விட்டார் நீரஜா.
“என்னமா?” விஜயவர்தன் பாவமாய் கேட்க,
“பின்ன என்ன? இப்படியா மூஞ்சில அடிச்சாப்புல பேசுவீங்க.. டைம் ஸ்பென்ட் பண்ணனும் தானே கேக்கறா.. நான் விஜய்கிட்ட பேசறேன். நாங்களும் வர்றோம்” என்றவரிடம் விஜயவர்தன் ஏதோ கூற வர,
“தயவு செஞ்சு எதுவும் பேசாத மாமா.. அப்படியே அக்கா மடியிலயே வளந்த குழந்தை இவரு.. உன்னோட பழைய காதலி கூட சினிமாக்கு போனதெல்லாம் எனக்கு தெரியாதுன்னு நினைச்சீங்களா?” என்று கிசுகிசுப்பான குரலில் கேட்க,
“ஆத்தாஆஅஅ! போதும் போதும்.. நீ எங்கள ஒண்ணு சேக்கிறதா நினைச்சு பிரிச்சு விட்றாதா அங்கிருந்து பேசிட்டு” என்றவர் ஒருவழியாய் சம்மதிக்க, அன்றைய தினத்தில், தன் வாயாலேயே தன் விதியை முடிவு செய்திருந்தார் நீரஜா.
மகாபலிபுரத்தில் இருந்த பீச் ஹவுசில் இரண்டு நாள் தங்கியிருந்தவர்கள் மீண்டும் சென்னை திரும்ப, ரஞ்சனி அவருடைய ஊருக்குக் கிளம்ப, விஜய் அவருடைய ஊருக்கு கிளம்ப, நீரஜாவும், விஜயவர்தனும் ஒன்றாய் பொள்ளாச்சிக்கு கிளம்பினர்.
விஜயவர்தனும், நீரஜாவும் தான் மகாபலிபுரம் சென்றதாக சிம்மவர்ம பூபதிக்கு தகவல் வந்தடைய, அவர்களின் திருமணத்தை விரைவாக நடத்தும் முடிவில் இருந்தார் சிம்மவர்ம பூபதி.
வீட்டிற்கு வந்தவர்களை அடுத்த நாளே தனியாக அழைத்த சிம்மவர்ம பூபதி இருவரிடமும் திருமணத்தைப் பற்றி பேச, நீரஜாவின் இதயம் அதைக் கேட்ட அதிர்ச்சியில் வெடித்துச் சிதற, விஜயவர்தனின் இதயமும் ஸ்தம்பித்து போய் உண்மையை சொல்ல முடியாமல் தடுமாறி நிற்க, சுனாமியாய் எழுந்த உணர்வுகள் இருவரையும் கடலாய் உள்ளிழுத்து அழுத்தி அமிழ்த்த, இருவரின் முக அதிர்ச்சியையும் வேறு மாதிரி எடுத்துக் கொண்ட சிம்மவர்ம பூபதி,
“நீ சென்னை அடிக்கடி போனப்பவே எனக்கு தெரியும் வர்தா.. நீயா இருக்கனால கம்முன்னு இருந்தேன்.. இரண்டு பேரும் எல்லை மீற மாட்டிங்கன்னு தெரியும்.. இதுவே வேற ஒருத்தனா இருந்திருந்தா சுட்டுத் தள்ளியிருப்பேன்” என்றவரின் பரம்பரை கௌரவ வெறியை நன்கு அறிந்தவர்கள் இருவருமே.
கௌரவம், மானம் இரண்டையும் காக்க எதையும் செய்யத் துணிவார் என்றும் தெரியும் விஜயவர்தனுக்கும், நீரஜாவிற்கும். இப்போது தன் காதலை கூறி பிடிவாதம் பிடித்து அழுதால் கூட, விஜய்யை தந்தை அடித்துப் போட்டு, அவர் கழுத்தில் கத்தியை வைத்து கூட தன் திருமணத்தை நடத்த வாய்ப்பிருக்கிறது என்பதை சர்வ நிச்சயமாய் உணர்ந்த நீரஜா, அதே தந்தையின் கௌரவத்தை வைத்தே விஜய்யின் கரம் பற்ற நினைத்தார்.
“என்ன இரண்டு பேரும் பேசவே மாட்டிறீங்க?” சிம்மவர்ம பூபதியின் குரலில் சட்டென தன் சிந்தனைகளில் இருந்து வெளிவந்த நீரஜாவின் இதயம் பரபரப்பாக அனைத்தையும் மனதிற்குள் திட்டங்களாய்த் தீட்ட, தந்தையை பார்த்தவர்,
“அப்பா! நீங்க கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க” என்றவரின் வார்த்தைகளில் விஜயவர்தன் அமைதியாகிப் போனார். ஏதோ முடிவோடுதான் நீரஜா கூறுகிறார் என்பதை உணர்ந்து கொண்டவர் வாயை மூடிக்கொள்ள, வெளியே வந்த நீரஜாவும், விஜயவர்தனும் அவரவர் அறைக்குள் குழப்பத்துடன் சென்றுவிட்டனர்.
சிறிது நேரம் கழித்து இருவரும் வெளியே வர சிம்மவர்ம பூபதி மில்லிற்கு சென்றிருக்க, அபிமன்யுவும், விக்ரமும் பள்ளிக்கு சென்றிருக்க, பெண்கள் சமையல் அறைக்குள் இருக்க, இருவரும் வீட்டின் பின்னால் சென்றனர்.
“என்ன நீரஜா என்ன முடிவு பண்ணியிருக்க?” விஜயவர்தன் பதைபதைப்புடன் வினவ,
“மாமா! சத்தியமா நான் சொல்றது முட்டாள் தனமா தான் உங்களுக்கு தோணும்.. ஆனா,, இதை விட்டா நமக்கு வேற வழியில்ல மாமா” என்றவர், தன் முழுத் திட்டத்தையும் அவரிடம் கூற, கேட்க கேட்க அவருக்கு இது சத்தியமாக சரி வராது என்றே தோன்றியது.
“லூசு மாதிரி பேசாத நீரஜா.. கொஞ்சம் பிசகினாலும் இல்ல யாராவது பாத்தாலும் அவ்வளவு தான்.. மொத்தமா முடிஞ்சிரும்.. நான் இல்லைனா ரஞ்சனி செத்திருவா” என்றவருக்கத் தெரியும் ரஞ்சனி அவரின் மீது எந்தளவிற்கு காதலும், நம்பிக்கையும் கொண்டிருக்கிறார் என்று. இத்தனைக்கும் அவர்கள் விஜய்-நீரஜா போன்று கண்களால் மட்டும் பேசிக் கொள்பவர்கள் அல்ல.
அவ்வப்போது அணைப்பது, முத்தமிடுவது, மற்றும் சில என்றிருந்த அசைவக் காதல் தான்! அதற்காக காதல் இல்லை என்று சொல்லிவிட முடியாதே!
விஜயவர்தனின் அதீத காதலாலும், அவர் தன்னை நிச்சயம் திருமணம் செய்வார் என்று நம்பித்தான் ரஞ்சனி அவரை அவ்வப்போது இதற்கெல்லாம் முழு சம்மதத்துடன் அனுமதித்தது.
அதுவும் எல்லையை கடக்கவிட்டதே இல்லை அவர். இவரும் மீற விட்டதில்லை. இப்படி ஒருவளுடன் இருந்துவிட்டு வேறொரு பெண்ணை தொட முடியுமா விஜயவர்தனால்?
பெண்களுக்கு மட்டும் தான் கற்பா?
தன்னவளை மட்டுமே நினைக்கும் ஆண்களுக்கு அவ்வுணர்வுகள் பெண்களை விட மிகவும் அதிகம்!!!
“மாமா இதைவிட நல்ல ஐடியா இருக்கா சொல்லுங்க? நமக்கு வேற வழி இல்லை.. அப்பா விஷயம் தெரிஞ்சு விஜய்யை ஏதாவது பண்ணிட்டாலும், அப்புறம் நான் என்ன மாதிரி முடிவெடுப்பேன்னு உங்களுக்குத் தெரியாது” என்று பிடிவாதமும் அழுத்தமுமாய் கூறி நீரஜா மிரட்ட, அவரால் அதற்கு தலையை மட்டும் தான் அசைக்க முடிந்தது.
ஏனெனில் இது ஒரு வழிதான் அவருக்குத் தெரிந்தது இருந்தது. சிம்மவர்ம பூபதியை கலப்பு திருமணத்திற்கு சம்மதிக்க வைப்பது கடினம், இல்லை இல்லை நிச்சியமாக அவர் சம்மதிக்கமாட்டார் என்று அவருக்கும் உறுதியாக தெரிந்திருந்ததால், நீரஜாவிற்கு தலையை ஆட்டி வைத்தார்.
அன்றிரவு நீரஜா ரஞ்சனியிடமும், விஜய்யிடமும் பேசிவிடலாம் என்று விஜயவர்தனை தன் அறைக்கு அழைத்திருக்க, பூனை போல பதுங்கி பதுங்கி அத்தையின் அறைக்குள் நுழைந்த விஜயவர்தனை, மேலே விளையாட்டு பொருட்கள் வைத்திருந்த அறைக்கு சென்று வந்த அபிமன்யு பார்த்துவிட்டான்.
அவனுக்கு இப்போது புரியவில்லை என்றாலும், இப்போது பார்த்ததை பெரியவனாகி நினைக்கும் பொழுது என்ன நினைப்பான்?
விதி வலியது!
Series of fate decision end up in disaster! (விதியின் தொடர் முடிவுகள் எப்போதும் பேரழிவில் முடிகிறது!)